ஸ்டார் லிங்க்கை அல்ல, எலான் மஸ்க்கைத் தான் மதிப்பீடு செய்ய வேண்டும்!

-செமு பட்

அமெரிக்காவைச் சார்ந்த ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், செயற்கைக்கொள் அலைவரிசை உரிமத்திற்காக இந்தியாவில் காத்திருக்கிறார். ஆனால், அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய மறுக்கிறார். மாறாக, இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, தொழில் விவகாரத்தை வேறு எல்லைக்குக் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார். அவருக்கு  'ஃபியூச்சர் ஈஸ் இந்தியா’ அமைப்பின் நிறுவனர் திரு செமு பட் பொருத்தமான பதிலடி அளித்திருக்கிறார்...

எலான் மஸ்க் இந்திய ஒழுங்கு முறைமை உடனான பிரச்சினையை அனல் பறக்கும் அரசியல் மோதலாக மாற்றி உள்ளார். ஆட்சியில் இருக்கும் சிலர் (பெயர் சொல்லாமல்) ஸ்டார் லிங்க் இந்தியாவில் நுழைவதைத் தடுப்பதாகவும் அதன்மூலம் ‘இந்திய மக்கள் மீது தங்களுக்குள்ள ஏகபோக அதிகாரத்தை’ தக்க வைத்துக் கொள்ள முயல்வதாகவும் அக்டோபர் ஏழாம் தேதி குற்றம் சாட்டினார். ‘இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றச் செயல்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். பிறகு முகேஷ் அம்பானியின் பெயரை குறிப்பிட்டு பிரச்சினையை பெரிதாக்கினார். ‘அம்பானிதான் இந்தியாவின் உண்மையான அதிபரா?’ என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு ‘அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே’ என்று பதிவிட்டதன் மூலம் அவர் சிவப்புக் கோட்டை கடந்து விட்டார். ராகுல் காந்தி அதற்கு வரவேற்புத் தெரிவித்த போது மஸ்க் அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் ‘நிலைமை வேதனை அளிப்பதாக உள்ளது’ என்று பதிவிட்டார்.

தாமதமாகிறது என்று மஸ்க் புகார் கூறவில்லை. மாறாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு (ரிலையன்ஸ்) ஆதரவாகச் செயல்படுவதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதையே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. இதன்மூலம் இந்தியப் பிரதமரை தாழ்த்தி எதிர்க்கட்சித் தலைவரை உயர்த்தி உள்ளார் மஸ்க்.

பலரும் ஸ்டார்லிங்க் இந்தியாவில் நுழைவது மற்றும் எலான் மஸ்கின் பதிவுகளைப் பற்றி பேசி வரும் நிலையில், இந்தக் கட்டுரை மஸ்க் மீது கவனத்தைச் செலுத்தி, நான்கு அடிப்படைகளில் அவரது செயல்கள் இந்தியா மட்டுமல்ல மற்ற தேசங்களின் இறையாண்மைக்கும் எதிராக இருந்தது என்பதை அம்பலப்படுத்த முனைகிறது.

அதிகாரம்

மஸ்க் சாதாரணமான முதலீட்டாளர் இல்லை. அரசியல், நிதி, உட்கட்டமைப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய செல்வாக்கு மிக்கவர். உலகில் ட்ரில்லியன் டாலர் செல்வம் படைத்த முதல் பணக்காரர். அமெரிக்க அரசில் பெரும் செல்வாக்கு கொண்டவர். அவரிடம் இருக்கும் செல்வம், முக்கியமாக உள்கட்டமைப்பில் அவருக்கு இருக்கும் பிடி, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு எல்லாம் அனைவருக்கும் தெரியும். இவை ஒரே மனிதரிடம் குவிந்திருக்கிறது. எந்த அரசை விடவும் மேலான நிலையில் இந்த தனி மனிதர் இருப்பதை இறையாண்மை உள்ள எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாது;  அசௌகரியமாகவே கருதும்.

ரஷ்யா- உக்ரைன் போரில் ஸ்டார் லிங்க் பயன்படுத்தப்பட்டது. அவரது முடிவு அரசியலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. போரின் தொடக்கத்தில் அவர் ஆயிரக்கணக்கான ஸ்டார் லிங்க் இணைப்புகளை உக்ரைனுக்கு பரிசாக வழங்கினார். செலவை அவரது ஸ்பேஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டது.

அதேபோல ஈரானிய அரசு தனக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தபோது ஈரானிய அரசின் கண்காணிப்புக்கு உட்படாமல் ஈரானியர்கள் ஸ்டார் லிங்கைப் பயன்படுத்த அனுமதித்தார். இது பலராலும் பாராட்டப்பட்டது என்ற போதிலும், தேச தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் இதுபோல தலையிட்டு அந்த நாட்டை பலவீனப்படுத்த இவரால் முடியும். அல்லது அமெரிக்க தேச நலனுக்கு ஆதரவாக இது போல இவரால் செயல்பட முடியும் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2022 இல் அணு ஆயுத அச்சத்தினால் செவஸ்டாபோல் பகுதியை ஸ்டார் லிங்க் கண்காணித்துச் சொல்ல வேண்டுமென உக்ரைன் அரசு வேண்டுகோள் வைத்தது . ஆனால் மஸ்ட் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்பதை  இங்கு உறுதியாகப் பதிவு செய்கிறேன். ஒரு நாட்டின் ராணுவ முடிவை அவரது சொந்த முடிவால் புறம் தள்ள முடிந்துள்ளது. பின்னர் அதே ஆண்டில் மஸ்க் ஓர் அமைதி உடன்படிக்கையை தன் பதிவில் முன் வைத்தார். உக்ரைன் ராணுவ அதிகாரி ‘சரிதான் போய்யா’ என்று சொன்னார். அதற்கு பதிலடியாக மஸ்க் நிதி உதவியை வெட்டினார்.

அவர் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முடிவு செய்தாரா, அவரது அமைதிக்கான திட்டம் சரியா தவறா என்பதும் இங்கு விவாத விஷயம் அல்ல. போர் பற்றியும் அமைதி பற்றியும் அதற்குப் பிறகான நிலை பற்றியும் தனி ஒரு நபர் ஆணையிட முடியுமா என்பதுதான் பேசு பொருள்.

ஸ்டார் லிங்க் மிகச்சிறந்த தொழில் நுட்பமாக இருக்கலாம். ஆனால் அது கிடைக்குமா இல்லையா என்பது அதன் உரிமையாளரின் முடிவில் இருக்கிறது. அவர் அரசின் அதிகாரப் படிநிலைக்கு உட்படாமல் அப்பால் இருக்கிறார். அவரை சட்டப்படி கட்டுப்படுத்துவது முடியுமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதற்குப் பொருள், இந்திய அரசோ அல்லது வேற எந்த நாட்டு அரசோ எலான் மஸ்கிடம் அவநம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளை தனியொரு மனிதனாக, முடிவுகளை எடுக்கவும், அதை நடைமுறைப்படுத்தவும் அவருக்கு சக்தி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது பொறுப்பற்ற தனமாகும்.

அரசியல்

அமெரிக்காவில் வாக்காளர் பதிவு தொடங்கி எல்லா வகையிலும் தேவையான நிதி உதவியை ட்ரம்புக்கு எலான் செய்தார். அதற்கு பிரதிபலனாக அரசு நிர்வாகத்தில் அரசின் செயல் திறன் துறையில் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டார். அவர் தனது அரசியல் சார்பை வெறுமனே தெரிவிக்கவில்லை. மாறாக தேர்தலில் செல்வாக்கைச் செலுத்தினார். அதன் மூலம் நேரடியாக அதிகாரத்தை கைப்பிடியில் கொண்டு வந்தார்.

மஸ்க் மற்ற நாடுகளிலும் அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்துள்ளார் . ஜெர்மனியில் பல வேட்பாளர்களை அவர் நேரடியாக ஆதரித்தார். இங்கிலாந்தில் தலையிட்டு அந்த நாட்டு அரசை வெளிப்படையாக விமர்சித்தார். கனடாவில் இருந்து கியூபெக் பிரிக்கப்படுவதை அவர் ஆதரித்தார். அல்பெர்டாவிலும் சஸ்காட்செவலிலும் அதையே செய்தார்.

வெளிநாடுகளில், இந்திய எதிர்ப்பு இனவெறியைத் தூண்டிய பல நாடுகளில் பிரிவினை வாதத்தை ஊக்குவித்த, முக்கியமான தொலைத் தொடர்பு நிறுவனம் இங்கு கால் பதிப்பது வெறும் வர்த்தகம் என்பதையும் தாண்டி முக்கியத்துவம் பெறுகிறது. நாளை அவர் காலிஸ்தான் பிரிவினை இயக்கத்தை ஆதரிக்கலாம், அல்லது காஷ்மீர் விஷயத்தில் கூட தலையிடலாம்.

அதே வேளையில் சீனா விஷயத்தில் அவர் எதையும் சொல்லாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முரண்பாடு. அவர் அதிகாரத்துக்கு எதிரான உண்மையை உரக்கப் பேசும் அறப்போராளி அல்ல என்பதை இது காட்டுகிறது.

அந்த மனிதர்

மஸ்கின் பதிவில் வெளிப்படும் மொழி குறிப்பிடப்பட்டது. அவரது நிறுவனத்திற்கும் இந்திய ஒழுங்குமுறை விதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை, இந்தியர்களின் நலமுடன் இணைத்து, ஆளும் கட்சியின் ஆதரவாளர்களால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க வந்த இறை தூதராக தன்னை முன்னிறுத்துகிறார்.

இந்தியாவுக்கு எதிரான மஸ்கின் வெடிப்பு ஒரு முன்மாதிரியைக் கொண்டுள்ளது. 2018 இல் தாய்லாந்தில் நடந்த விபத்தில் தனது சிறிய நீர்மூழ்கி கப்பலைப் பயன்படுத்துமாறு மஸ்க் சொன்னார். அதை மறுத்த ஒரு நீர்மூழ்கி வீரரை அவர் ‘அலி’ என்று தாக்கினார். பிரேசில் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டுமென எக்ஸ் தளத்திற்கு ஆணையிட்ட அந்த நாட்டு நீதிபதியை ‘சர்வாதிகாரி’ என்று சாடினார். தன்னுடைய நலனுடன் முரண்படும்போது சட்டபூர்வமான அமைப்புகளின் பொறுப்புணர்வை சர்வாதிகாரம் என்று மட்டம் தட்டத் தயங்காதவர். இந்தியாவில் ஒழுங்கு முறைமையுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசி அழுத்தம் கொடுக்க முனைகிறார்.

இந்தியாவிலும் ஸ்டார் லிங்க்கின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டத் தகுந்தது. 2021 இல் அந்த நிறுவனம் உரிமம் பெறாமல், அதற்கு முன்பே தேவைப்படும் பயனாளிகளிடம் முன் பணம் பெற்றது. அரசு முன் பணத்தைத் திருப்பி தருமாறு உத்தரவிட்டது. உடனே ஸ்டார் லிங்க்கிற்கு உரிமம் மறுக்கப்படுகிறது என்று கூறுவதன் மூலம் இந்தியா அதற்கு எந்த அனுமதியும் அளிக்கவில்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் பிரச்சினை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எந்த அலைக்கற்றை என்ற ஒதுக்கீட்டில் தான் ஏற்படுள்ளது. முழுமையாக தெளிவு பெறாத சூழ்நிலையில் இந்தியா உரிமம் வழங்க மறுக்கிறது என்று கூறுவது ஒழுங்குமுறை நெறிகளைப் பற்றிய உண்மைகளைச் சிதைப்பதாகும்.

உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்கு முறைமையை ஏற்றுக் கொள்வதற்கு மாறாக இந்தியத் தலைமையுடன் மோத அவர் திடீரென முடிவெடுத்துள்ளார். இதற்கு எடுத்துக்காட்டு டிரம்ப் உடனான அவருடைய மோதல். 2025 ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் அரசு நிதியை செலவழிப்பது தொடர்பான கொள்கை முடிவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. உடனே மஸ்க் தனது தளத்தைப் பயன்படுத்தி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் ஜனாதிபதி டிரம்ப்பின் பெயரும் இருப்பதாக பொது வெளியில் வெடித்து பரவச் செய்தார்.

புரிந்து கொள்வது

மஸ்கிடம் குவிந்துள்ள அதிகாரம், அரசியல் தலையீடுகள் , அவரது நடத்தை ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது. ஸ்டார் லிங்க் குறித்து இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஏற்படும் உற்சாகத்தினால் இந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தக் கூடாது. அது மட்டுமல்ல, மஸ்க் தன்னை இன்றைய சோரோஸாக கூறிக் கொள்கிறார். சோரோஸ் பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட நபர். பல நாடுகளில் அமெரிக்கா ஆதரவுச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பெயர்.

பொது நலன் பற்றிய பேச்சுக்கள் அவரது வர்த்தக நலனைப் பாதுகாப்பதற்காகவே சொல்லப்படுகின்றன. இதுவரை தொலைத்தொடர்பு வசதி பெறாத இந்திய கிராமங்களுக்கு விடுதலையைத் தர வந்திருப்பதாக மஸ்க் கூறுகிறார். ஆனால் அரசின் புள்ளிவிவரங்களின்படி 98 சதவீதமான கிராமங்கள் 4 ஜி அலைவரிசையைப் பெற்றுள்ளன. அது மட்டுமல்ல, ஸ்டார் லிங்க்கின் கட்டணம் பல இந்திய குடும்பங்களின் சக்திக்கு மீறியதாக உள்ளது. ஆனால் அந்த ஏழை கிராம மக்களின் காப்பாளனாகத் தான் மஸ்க் தன்னை முன்னிறுத்துகிறார்.

அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டு ஸ்டார் லிங்க்கின் உள்ளூர் முகவர்களாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த நிலையில் கூட்டணி சேர்த்துக் கொண்ட அதே நிறுவனங்களைத் தான்,  அரசின் ஆதரவு பெற்றவை என்று எலான் மஸ்க் தாக்குகிறார்.

மஸ்க் தன் நிறுவனத்துக்கு உரிமம் பெற ஏற்படுத்தியுள்ள அரசியல் அழுத்தம் அந்த நிறுவனத்தால் நுகர்வோருக்குக் கிடைக்கும் லாபத்தை விட மிக அதிகமாகும் . இந்த சிவப்புக் கொடி அசைவை இந்திய அரசு புறந்தள்ள முடியாது. குறிப்பாக மஸ்கிற்கு ஆதரவான இந்திய அரசை அவரொரு நெருக்கடியான இடத்திற்கு தள்ளியுள்ளார்.

அரசு ஒழுங்கு விதிமுறைகளை வலியுறுத்தி அதனால் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது அதை புறந்தள்ளி விரைவாக உரிமம் வழங்கினாலோ இரண்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான ஆயுதம் ஆகிவிடும். ஒழுங்கு விதிமுறைகளை காட்டி உரிமத்தை மறுத்தாலோ, அது தரகு முதலாளித்துவமாகிவிடும். விரைவாக உரிமத்தைக் கொடுத்தாலோ அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆட்பட்டதாகக் கருதப்படும். இந்த இரண்டில் எதை செய்தாலும் நரேந்திர மோடியின் பிம்பம் உடைபடும்; மதிப்பு கீழே இறங்கும்.

இறையாண்மை மீது இருள்

அமெரிக்க முதலீடுகளை வரவேற்பது, அமெரிக்காவுடன் நல்லுறவு என்ற வகையில் ஸ்டார் லிங்க்கை இந்தியா வரவேற்கலாம் . ஆனால் அமெரிக்கா நட்பு நாடு என்ற நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எதிர் நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறது.

“வாஷிங்டன் சீனாவிடம் செய்த அதே தவறை மீண்டும் செய்யாது” என்று அமெரிக்க துணை அமைச்சர் கிறிஸ்டோபர் லான்டாவ் கூறியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கது. இந்தியா பொருளாதார ரீதியாகவும் ராஜிய ரீதியாகவும் வளர விடாமல் தடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க அரசுக்கு ஆதரவான நிலையும் கட்டமைப்பும் கொண்ட நிறுவனத்தை மிக முக்கியமான தொலைத்தொடர்பு கட்டமைப்பில் நுழைய அனுமதிப்பது பின்னடைவை ஏற்படுத்தலாம். குறைந்தபட்சம் பாதுகாப்பு விஷயத்தில் அந்த தொழில்நுட்பத்திற்குப் பின்னால் இருக்கும் மனிதரை மதிப்பீடு செய்வது தேவையாகிறது.

ஸ்டார் லிங்க் இந்தியாவுக்கு என்ன கொடுக்கும் அல்லது அது பாதுகாப்பானதா என்பதல்ல கேள்வி. எலான் மஸ்கின் நலனும் அமெரிக்காவின் நலனும் இந்தியாவின் நலனுடன் வேறுபட்டால் என்ன விதமான ஆபத்துக்கள் ஏற்படும் என்பதே சிந்திக்க வைக்கும் கேள்வி.

பயங்கரவாதிகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் காரர்களிடம் இருந்து இந்திய பாதுகாப்புப் படையினர் ஸ்டார் லிங்க் கருவிகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவங்கள் செயற்கைக் கோள்  மூலம் தொலைத்தொடர்பு என்ற விஷயத்தை இந்தியா சாதாரணமான வர்த்தக செயலாகப் பார்க்க முடியாது என்று சுட்டிக் காட்டுகின்றன.

தவறானவர்கள் கையில் உயர் தொழில்நுட்பம் கிடைப்பது மட்டுமே அச்சுறுத்தல் அல்ல. அந்தத் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துபவரின் கை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதிகாரம், தொழில்நுட்பம், நிலையற்று அடிக்கடி மாறக்கூடிய மனநிலை, தன்னை தேவதூதனாகக் கருதும் மனப்போக்கு இவையெல்லாம் சேர்ந்திருப்பது ஆபத்தான கலவை. தெற்காசியாவில் அமெரிக்கா ஒரு முக்கியமான அரசியல் சக்திகளாகக் களமாடுகிறது. பல நேரங்களில் தெற்காசியாவில் இந்தியாவின் நலன்களை அதில் குறைக்க, தாழ்த்த முனைகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

ஒழுங்குமுறை சட்டங்கள் ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டு நிலையை, பாதுகாப்பு அம்சங்களை, நிலை ஆணைகளை, பொறுப்புகளை வரையறுக்கலாம். ஆனால் அவை தொழில்நுட்பத்திற்குப் பின்னால் இருந்து இயக்கும் மனிதனின் முடிவுகளை வரையறுக்க முடியாது. விதிமுறைகளைப் பின்பற்றுவதும் யுக்தி ரீதியான விஷயங்களில் நம்பகத் தன்மையும் ஒன்றல்ல. எனவே ஸ்டார் லிங்க்கின் தொழில்நுட்பம், விலை, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கும் மேலாக, முக்கியமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை எலான் மஸ்கின் கட்டுப்பாட்டில் விடுவது நம்பத் தகுந்த செயலா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

  • நன்றி: தி சண்டே கார்டியன் (11.10.2026) – Elon Musk, not Starlink: The strategic risk India must assess
  • தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
  • கட்டுரையாளர் FuturisIndia அமைப்பின் நிறுவனர்

$$$

Leave a Reply