-பேரா.ப.கனகசபாபதி
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அதிரடி திருப்பம் கண்டிருக்கிறது. இன்று (நவ. 28) மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் பிரகாசிக்க உள்ளது. ஆனால், நாம் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினை வேறு என்று எச்சரிக்கிறார், பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி.

பாரத தேசத்தின் பல பகுதிகளிலும் முருக வழிபாடு இருந்து வந்தாலும், தமிழ்ப் பண்பாட்டில் முதன்மைக் கடவுளாக சிறப்பிடம் வகித்து வருபவர் முருகப் பெருமான். அதனால் தான் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அவரை தமிழ் கடவுளாகவே போற்றி வணங்கி வருகிறார்கள். நமது முருக வரலாறு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இந்து தர்மத்தில் ‘கௌமாரம்’ என்பது முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டாடும் தனித்தன்மை வாய்ந்த பாரம்பரியம்.
முருகர் சங்க காலந்தொட்டு அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட பல இலக்கியங்களில் பாடப்பட்டு வந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முருகனை தலைவனாகக் கொண்டு திருமுருகாற்றுப்படை எழுதப்பட்டுள்ளது. பொது யுகம் பதினான்காம் நூற்றாண்டில் பத்தாயிரம் செய்யுள்களுக்கு மேற்கொண்டு எழுதப்பட்ட கந்த புராணம், முருகனின் வரலாறு மற்றும் பெருமைகளைக் கொண்ட நூல்.
திருப்பரங்குன்றம் மலை முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானது. திருமுருகாற்றுப்படை தொடங்கி தொடர்ந்து பல நூல்களில் பாடப்பட்டு வரும் பெருமைக்குரியது. கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் மக்கள் ஒன்று கூடி தீபம் ஏற்றி வழிபடுவது மரபாக இருந்து வருகின்றது.
முகமது பின் துக்ளக் பொது யுகம் 1325இல் தில்லியில் சுல்தானாக அரியணை ஏறுகிறார். பின்னர் மதுரையை உள்ளடக்கிய அப்போதைய மலபார் பகுதியைப் பிடிக்கிறார். தில்லி சுல்தானின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்த ஜலாலுதீன் ஷா, தனியாகப் பிரிந்து 1335ஆம் வருடம் மதுரை சுல்தான்கள் ஆட்சியைத் தொடங்குகிறார்.
பின் வந்த காலத்தில் மதுரை வரலாறு காணாத கொடுமைகளைச் சந்தித்தது. பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் – ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலரும் கொல்லப்பட்டனர்; கோயில்கள் சிதைக்கப்பட்டு, செல்வங்கள் சூறையாடப்பட்டன. பொருளாதார நிலைமை மிக மோசமாகி, சமூக வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அந்தச் சமயத்தில் மதுரை வந்திருந்த மொரோக்கோ நாட்டு ஆய்வாளர் இபான் பதூதா மக்கள் பட்ட சொல்லொணாக் கொடுமைகளை நேரில் பார்த்து எழுதியுள்ளார். மதுரை சுல்தான்கள் வரிசையில் சிக்கந்தர் ஷா ஆட்சி செய்து வந்தபோது, விஜயநகரப் பேரரசை புக்க ராயர் ஆண்டு வந்தார். தனது வாரிசான குமார கம்பண்ணாவை மதுரைக்கு அனுப்பினார். அங்கு நடந்த போரில் சிக்கந்தர் உயிரிழந்து கம்பண்ணா வெற்றி பெற்றார்.
அதனால் சுல்தான்கள் ஆட்சி 1378 ஆம் ஆண்டில் முடிவுற்றது. அவர்கள் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும் தமிழகமே எப்போதும் கண்டிராத உயிரிழப்புகளையும், கொடுமைகளையும் மதுரை எதிர் கொண்டது. பின்னர் விஜயநகரப் பேரரசு கோயில்களை மீட்டுப் புனரமைத்தும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தியும் மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்குத் திருப்பியது.
திருப்பரங்குன்ற மலை மேல் சிக்கந்தர் பெயரில் தர்கா உள்ளது. அது பதினான்காம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆதாரம் எதுவும் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இளையான்குடி ராவுத்தர் அதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்வதிலிருந்து தான் வரலாறு தெரிகிறது. தற்போது சிக்கந்தரின் நினைவு நாளன்று அங்கு சந்தனக்கூடு விழா நடக்கிறது. மேலும் ரம்ஜான் மற்றும் ஈத் நாட்களன்று விதிமுறைகளின் படி வழிபாட்டினை நடத்திக் கொள்ள தர்கா நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற மலை கோயிலுக்குச் சொந்தமானதென 1920 ஆம் வருட நீதிபதி ஆணை மற்றும் 1931 ஆம் வருட பிரிவி கவுன்சில் தீர்ப்பு ஆகியவை தெளிவுபடுத்தியுள்ளன. பின்னர் 2025 ஆம் வருட சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு தர்காவுக்குச் சொந்தமான நெல்லித்தோப்பு பகுதியிலுள்ள 33 சென்ட் நிலத்தைத் தவிர மொத்த மலையும் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் மலையை சிக்கந்தர் மலை எனக் குறிப்பிடக் கூடாதென்றும், அங்கு அனுமதியின்றி பலி கொடுப்பதும், அசைவ உணவு பரிமாறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.
தீபத்தூணில் எப்போது தீபம் ஏற்றும் வழக்கம் தடைபட்டது என்பது தெரியவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, 1994ஆம் ஆண்டிலிருது உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆயினும், தொன்றுதொட்டு நமது முன்னோர்கள் ஏற்றி வந்த தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. மலை முழுவதுமே கோயிலுக்குச் சொந்தம் என்னும்போது, தீபத் தூணுக்குச் செல்வதை மற்றவர்கள் ஆட்சேபிக்க உரிமை இல்லை.
ஆனாலும் சென்ற வருட திமுக ஆட்சியிலும், இந்த வருட தவெக ஆட்சியிலும் நீதிமன்றங்களின் அனுமதி பெற்ற பின்னரும், மாநில அரசுகள் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிக்கவில்லை. அதனால் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் தான் தீபம் ஏற்றப்பட்டது. எனவே திமுகவைப் போலவே தவெக அரசுக்கும் தீபத்தூணில் தீபமேற்ற விருப்பமில்லை. அதனால் தான் உச்சநீதி மன்ற ஆணையைக் கூட நடைமுறைப்படுத்த மறுத்து விட்டது.
அதனால் உலககெங்கும் வாழும் கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உரிமை மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தில் தமது உரிமைக்காக நீதி கேட்டுத் தீர்ப்பு வரும் வரையில் பக்தர்கள் அமைதியாகக் காத்திருந்து, ஆணை வந்த பின்னரும் ஓர் அரசு அதை நிறைவேற்றத் தவறியுள்ளது என்றால் அது என்ன மதச்சார்பின்மை? அதே சமயம் ஒரு கோயில் நிலத்தில் சட்ட விரோதமாக நிறுவப்பட்டுள்ள ஈவேரா சிலையை அகற்றச் சொல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்த பின்னர், அதை எதிர்த்து இதே தவெக அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.
ஒரு பக்கம் நீதிமன்ற உத்தரவைக் காட்டிப் பல கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மறு பக்கம் சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு தவெக அரசு அனுமதி கொடுக்கிறது. மேலும் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பில் உள்ள பிற மதச் சொத்துக்களின் மேல் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சிக்கந்தர் என்பவர் யார்? வெளியில் எங்கிருந்தோ வந்த நபர். மேலும் இந்துக்களைக் கொன்று குவித்து, கோயில்களைச் சீரழித்து ஆட்சி செய்த மதுரை சுல்தான்கள் வரிசையில் கடைசி நபர். அப்படிப்பட்ட ஒருவருக்கு சிறப்பளிக்க வேண்டுமா? அதுவும் புனிதமான கோயிலுக்கு மேலே விழா எடுப்பது சரியாகுமா?
இந்து மதம் சார்ந்த விஷயங்களில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியாக நிற்கின்றன. அவற்றுக்குத் துணையாக திராவிட, இடதுசாரி மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் விஷயத்திலேயே பாஜக, புதிய தமிழகம் கட்சிகளைத் தவிர்த்து பிற கட்சிகள் – தவெக, காங்கிரஸ், திமுக மட்டுமன்றி பிற கட்சிகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்க வேண்டியதில்லை என்கின்ற தொனியிலேயே ஒரே மாதிரி பேசின.
கார்த்திகை தீபத்துக்கு முன்னதாக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிக் கூட்டணியினர் மத அடிப்படைவாத அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்து ஒரே விதமாகப் பேசி வந்தனர். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் எனவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனவும் ஆர்ப்பரித்தனர். சம்பந்தமே இல்லாத நபர்கள் ஆகம விதிகளைக் குறிப்பிட்டனர். தீபத் தூணுக்கு ஆதரவாகப் பேசிய பக்தர்களையும் அமைதிக்கு விரோதிகளாகச் சித்தரித்தனர்.
எனவே தமிழக அரசியலின் தற்போதைய போக்கு மாநிலத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. மாறாக ஆபத்தானது. இந்த நிலை இத்தோடு நின்று விடாது. உச்ச நீதிமன்ற ஆணையைக்கூட மீறி பெரும்பான்மை மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமையை மறுக்கக் கூடிய அளவு வாக்கு வங்கி அரசியல் சென்று விட்டது. ஆகையால் மாநிலத்தின் எதிர்காலம் கருதித் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய காலம் வந்து விட்டது.
$$$