-நீதிபதி கே.கண்ணன்
முன்னாள் நீதிபதி கே. கண்ணன் அவர்கள் இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, ஓர் அடிப்படைக் கேள்வியை முன்னிறுத்துகிறது: நிர்வாக ரீதியான அல்லது நிறுவன ரீதியான விருப்பங்களைக் காரணம் காட்டி, அரசு அதிகாரிகள் ஒரு நீதிமன்ற உத்தரவை தங்களுக்குத் தேவையானபடி தேர்ந்தெடுத்துச் செயல்படுத்த முடியுமா?
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த உத்தரவாதம், உச்சநீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் கோயில் அறங்காவலர் குழுவின் தீர்மானம் ஆகியவற்றை நாம் ஒருசேர ஆராய வேண்டும்.
வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்படுவதற்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமா என்பது இங்கு கேள்வியல்ல. நிச்சயமாக அதற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள ஒரு தனிப்பட்ட ஏற்பாட்டை முறியடிப்பதற்காக, அந்தப் பாரம்பரிய வழக்கத்தை ஒரு காரணமாகப் பயன்படுத்த முடியுமா என்பதே இங்குள்ள முக்கியக் கேள்வி.
மதுரைக் கிளையில் அளிக்கப்பட்ட உத்தரவாதம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு ரிட் மனுக்களின் விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியர் தனது தனிப்பட்ட மத விருப்பங்களை வெளிப்படுத்தும் ஒரு சாதாரண நபராக ஆஜராகவில்லை. மாறாக, மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், உச்சநீதி மன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தும் பொறுப்பளிக்கப்பட்ட அரசின் பிரதிநிதியாகவுமே அவர் ஆஜரானார். அவர் அளித்த உத்தரவாதம் என்பது ஒரு நிறுவன ரீதியான பொறுப்பைக் கொண்டது. எனவே, அதன்பிறகு அவர் நடந்துகொண்ட விதமானது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் உயர்நீதிமன்றத்தில் அவர் அளித்த உத்தரவாதம் ஆகிய இரண்டின் அடிப்படையிலுமே மதிப்பிடப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு நிலுவையில் உள்ளது என்ற காரணத்தை மட்டுமே காட்டி, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்க முடியாது என்பதை மதுரைக் கிளை முந்தைய நீதித்துறைத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டித் தெளிவுபடுத்தியது.
அறங்காவலர் குழு என்ன தீர்மானித்தது?
உயர்நீதிமன்றம் மாலை 4 மணிக்குத் தனது உத்தரவைப் பிறப்பித்த பிறகு, தீபம் ஏற்றுவதற்கான நேரமான மாலை 6 மணி வந்தது; கடந்து சென்றது. அன்று இரவு தாமதமாக மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த முதல்கட்ட நிலை அறிக்கையில், பார்வையாளர்கள், நிர்வாக நடுவர்கள், இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழு, வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளையும் செய்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இரவு 7.32 மணி வரை தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் தமக்கு கிடைக்கவில்லை என்றும், அதன்பிறகு கோயில் செயல் அலுவலர் (EO) அளித்த அறிக்கையில், “வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே மாலை 6 மணிக்குத் தீபம் ஏற்றுவது என அறங்காவலர் குழு தீர்மானித்துள்ளதாக” தெரிவித்ததாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
தேவஸ்தானமே அனுமதிக்காத பட்சத்தில், தீபம் ஏற்றுவதற்கு அனுமதியளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று செயல் அலுவலர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததாலேயே தம்மால் உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முடியாமல் போனதாக ஆட்சியர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், வேறொரு இடத்தில் தீபம் ஏற்றலாமா என்பதைத் தீர்மானிக்கவோ, அல்லது கூடுதலாக ஓர் இடத்தில் தீபம் ஏற்றுவது குறித்த நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணிக்கவோ ஆட்சியருக்கோ, இந்து சமய அறநிலையத் துறைக்கோ, ஏன் தேவஸ்தானத்திற்கோ கூட எந்த அதிகாரமும் இல்லை.
அறங்காவலர்கள் மதப் பழக்க வழக்கங்களைப் பாதுகாக்கலாமே தவிர, ஒரு தீர்மானத்தின் மூலம் அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவை மீற முடியாது. ஒரு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும், கூடுதலாக மற்றொரு நிகழ்வைத் தடுப்பதும் வெவ்வேறான விஷயங்கள்.
உச்சநீதிமன்றம் காட்டிய வேறுபாடு
நவம்பர் 20, 2026 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நவம்பர் 24-ஆம் தேதி ஒருமுறை மட்டும் இடைக்கால ஏற்பாடாக, உரிய பாதுகாப்புகளுடன், அந்த இடத்தில் எந்தவொரு பாரம்பரிய, மத அல்லது உரிமை கோரல்களையும் அங்கீகரிக்காமல் ‘தீபத்தூணில்’ தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த உத்தரவின் பத்தி 14(vi) மிகவும் முக்கியமானது. “வழக்கமான இடங்களில் நடைபெறும் தற்போதைய மத வழிபாடுகள் எவ்வித இடையூறுமின்றித் தொடர வேண்டும்” என்று அது தெளிவாகக் கூறுகிறது.
அறங்காவலர் குழு தனது தீர்மானத்திற்கு எதை முன்னுரிமை அளித்தது என்பதை இது விளக்கக்கூடும்; ஆனால், நீதிமன்றம் கூறிய தனிப்பட்ட ஏற்பாட்டைச் செயல்படுத்தத் தவறியதை இது ஒருபோதும் நியாயப்படுத்தாது.
வழக்கமான வழிபாடுகளைப் பாதுகாத்த அதே வேளையில், தீபத்தூணில் தனிப்பட்ட முறையில் தீபம் ஏற்றவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதில் ஒன்று மற்றொன்றை மாற்றவில்லை. உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே வழக்கமாக ஏற்றப்படும் தீபத்தை அணைக்கக் கூடாது; அதேபோல, அந்த வழக்கமான தீபம் என்பது கூடுதலாக ஏற்றப்பட வேண்டிய தீபத்திற்கு மாற்றாகவும் ஆகாது.
உத்தரவின் பத்தி 13-இல் தீபம் ஏற்ற வேண்டிய இடமாக அந்தக் கல்தூண் அடையாளம் காட்டப்பட்டுள்ளது, பத்தி 14-இல் அதற்கான ஏற்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
பத்தி 14(ii)-ன் கீழ், இதனை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் முதன்மை அதிகாரியாக (Nodal Officer) மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டார்.
இரண்டு இடங்களிலும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் நீதிமன்ற உத்தரவின் நோக்கமே தவிர, இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதல்ல.
அறங்காவலர் தீர்மானம் ஆட்சியருக்குப் புகலிடமாகாது
ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கூட, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செல்லாததாக்கும் அதிகாரத்தை அறங்காவலர்களுக்கு வழங்காது.
அதேபோல, ஆட்சியரும் தனது பொறுப்பை அவர்கள் மீது சுமத்தி தட்டிக் கழிக்க முடியாது. முதன்மை அதிகாரி என்ற முறையில், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து அங்கீகரிக்கப்பட்ட குழுவை அவரே இறுதி செய்திருக்க வேண்டும்.
இதில் அறங்காவலர்களுக்கு எந்தவொரு மேலதிக அதிகாரமும் வழங்கப்படவில்லை. ஆட்சியருக்கு இதில் தனிப்பட்ட மத உரிமையோ அல்லது சொத்துரிமையோ கிடையாது. ஒரு பொதுக் கடமையை ஆற்றுவதற்காக அரசின் சார்பாகவே அவர் செயல்படுகிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், நாட்டின் அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்சநீதிமன்றத்திற்குத் துணையாகச் செயல்பட வேண்டும்.
உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருந்திருந்தால், அவர் நீதிமன்றத்தை அணுகி உரிய வழிகாட்டுதல்களைப் பெற்றிருக்க வேண்டுமே தவிர, அவரே ஒரு மேல்முறையீட்டு அதிகாரியைப் போலச் செயல்பட்டிருக்கக் கூடாது.
அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதா?
நவம்பர் 24-ஆம் தேதி நடந்த நிகழ்வுகள், சிவில் நீதிமன்ற அவமதிப்பு குறித்த தீவிரமான கேள்வியை எழுப்புகின்றன. தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது; அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது; மதுரை கிளையும் அதனைச் செயல்படுத்த வேண்டிய கடமையை வலியுறுத்தியது. ஆயினும், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தீபத்தூண் இருளிலேயே விடப்பட்டது.
1971-ஆம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் பிரிவு 2(b)-ன் படி, ஒரு நீதி மன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறுவது சிவில் நீதிமன்ற அவமதிப்பாகும்.
அதிகாரிகள் வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டார்களா என்பதை, அவர்களது விளக்கங்கள், அறங்காவலர் குழுவின் தீர்மானம் மற்றும் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகே நீதிமன்றம் முடிவு செய்யும்.
திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள் உத்தரவைச் செயல்படுத்தியது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரவு தாமதமாகத் தாக்கல் செய்யப்பட்ட முதல்கட்ட அறிக்கை என்பது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கையின் முன்னோட்டமாக இருக்குமானால், அது மிகவும் பலவீனமான விளக்கமாகவே அமையும்.
தீபம் ஏற்றுவதற்கு தேவஸ்தானம் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றாலும், திருவண்ணாமலையிலிருந்து வந்திருந்த மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு இருந்தார்கள். பக்தர்களுக்கும் அங்கு பஞ்சமில்லை. ஒட்டுமொத்த துணைக் குழுவும் தயாராக இருந்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை முறியடிக்கும் அதிகாரம் அறங்காவலர்களுக்கு இல்லை; அதேபோல, ஆட்சியரும் கையறு நிலையில் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருக்க முடியாது. “தீபம் ஏற்றப்பட்டுவிட்டது” என்று அரசால் பதிலளிக்க முடியாது.
உச்சநீதிமன்றம் அடையாளம் காட்டிய இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதா என்பதே இங்குள்ள கேள்வி.
பாரம்பரியம், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் நிலுவையில் உள்ள சீராய்வு மனு ஆகியவற்றைக் காரணம் காட்டி, நடைமுறையில் உள்ள ஒரு நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
அரசிற்கு இந்த உத்தரவில் உடன்பாடு இல்லையென்றால், அதற்கான தீர்வை நீதிமன்றத்தில்தான் தேடியிருக்க வேண்டுமே தவிர, தாங்களாகவே ஒரு மாற்று ஏற்பாட்டைச் செய்துகொள்ளக் கூடாது.
ஒரு தீபம் ஏற்றப்பட்டது உண்மைதான்; ஆனால் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய இடம் இருளிலேயே இருந்தது. இந்த அரசியலமைப்புச் சட்டக் கேள்விக்கு அரசு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும்.
- நன்றி: தி நியூ இந்திய எக்ஸ்பிரஸ் (26.11.2026)- Karthigai Deepam | A Lamp Lit, a Court Defied: The Thiruparankundram Question
- குறிப்பு: திரு. கண்ணன் அவர்கள், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி.
- தமிழில்: டி.கே.எல்.ஸ்ரீராம்
$$$