-ஆசிரியர் குழு

தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மதுரை, திருப்பரங்குன்றத்தில் மலை மீதுள்ள தீபத்தூணில் நாளை, நவ. 28 சனிக்கிழமை, தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் திருநாளில் தீபமேற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என தொடரப்பட்ட 3 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று (நவ. 27) விசாரித்தது.
தமிழக அரசு மற்றும் மனுதாரர்கள் என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், பிற்பகல் 2.30 மணியளவில் உத்தரவுகளைப் பிறப்பித்தது.
கார்த்திகை மாதம் முடிவடைவதற்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் ஒரு முறை தீபம் ஏற்றப்பட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுக்கள் விசாரணைக்குப் பின் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் மனுபாய் பஞ்சோலி தலைமையிலான அமர்வு தெரிவித்ததாவது:
நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது கடும் வேதனையை அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படும்போது, அதனைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இத்தகைய சூழ்நிலைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
இல்லையெனில், அது அரசியலமைப்பு சார்ந்த குழப்பத்துக்கு வழிவகுக்கும். நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, எங்களால் செயலற்று அமர்ந்திருக்க முடியாது. எந்தவோர் அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது.
ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடே உயர்ந்ததாகும். நீதித் துறையை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.
இந்திய ஆட்சிப் பரப்புக்குள் உள்ள அனைத்து சிவில் அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்துக்குத் துணைநின்று செயல்பட வேண்டும். நீதித் துறைக்கு சிவில் அதிகாரிகள் துணை நிற்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 144 உறுதி செய்கிறது.
மதுரையில் நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்துகின்றன.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அதிகாரிகள் மீதான அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தெளிவாகின்றன” –என்றனர்.
மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தாததற்கான பழியை கோயில் நிர்வாகத்தின் மீது மதுரை ஆட்சியர் சுமத்த முயற்சிப்பதாகக் கூறிய நீதிபதிகள், ஆட்சியரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என அவருடைய மனுவை நிராகரித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. மட்டுமின்றி தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத் துறை ஆணையர், மதுரை ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவ. 28) தீபமேற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடரை எடுத்துச் சென்று கல் தூணில் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் மலைக்குச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு கலைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரையில் அறங்காவலர் குழு செயல்படக் கூடாது என்றும் தெரிவித்தது. தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், பி. பார்த்திபன் ஆகியோர் தலைமையில் கோயிலை நிர்வகிக்க குழுவை அறிவித்தது.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபமேற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை, டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- ஆதாரம்: தினமணி.காம்
$$$


இன்றே தீபம் ஏற்றுக!
மதுரை கலெக்டர் அறிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
புதுதில்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இன்று (நவ. 27) சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தமிழக தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், நாளை (நவ. 28) தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும், அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் நீதிபதிகள் அரவிந்த் குமார், பாஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றத்தின் தீபத்தூணில் தீபம் ஏற்றுமாறு நவ. 20ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை மூடி மறைக்கும் நிகழ்வாகும். புதிய இடத்தில் தீபம் ஏற்ற தேவஸ்தானம் ஒத்துழைக்கவில்லை என்று கலெக்டர் குற்றம்சாட்டுகிறார். ஆனால், தீபம் ஏற்றாததற்கும், தேவஸ்தான அதிகாரிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அறங்காவலர் குழுவில் 5 பேர் உள்ளனர். ஹிந்து அல்லாதவரும் அதில் உள்ளார்.
தீபம் ஏற்றுவதற்கு எதிராக போராடியவரும் அறங்காவலர் குழுவில் உள்ளார். அறங்காவலர் குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசியல் காரணத்தினால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை. கிரிமினல் அவமதிப்பு, சிவில் அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கார்த்திகை திருநாள் 11 நாட்கள் நடக்கும் என்பதால், தீபத்தூணில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட வேண்டும் – இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.
மத்திய தொல்லியல் துறையின் வாதம்:
தீபத்தூணில் ஆய்வு செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை. தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத குழு அமைக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக போலீசார் இனி இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது. நாளை கூட தீபம் ஏற்ற இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் -இவ்வாறு வாதிடப்பட்டது.
முதலைக் கண்ணீரா?
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல் செய்ய போலீசார் 5790 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருந்தோம். மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று போலீஸ் கமிஷனர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி அரவிந்த் குமார், ‘இவை எல்லாம் உண்மையான கண்ணீரா, இல்லை முதலைக்கண்ணீரா என்று நாங்கள் பார்க்கிறோம்’ என்று காட்டமாக தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பாஞ்சோலி ஆகியோர் இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளர் ஆஜராக வேண்டும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். கோயில் அறங்காவலர் குழுவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் மேலும் கூறி உள்ளதாவது:
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் கடுமையான மனவருத்தம் ஏற்பட்டு உள்ளது. அமைதியாக இருக்க மாட்டோம். நீதிமன்ற உத்தரவுகளை மென்மையாகக் கையாளுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற தருணங்களை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நிலை வந்துவிட்டது.
கார்த்திகை மாதம் முடிவதற்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கோரி உள்ளனர். நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் விட்டவர்கள் மீது எவ்வித அனுதாபமின்றி உரிய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவைச் செயல்படுத்தாமல் இருப்பது அரசமைப்பை சீர்குலைக்கும் முயற்சி.
நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறிவிட்டு பின்னர் மாநில அரசு அளித்துள்ள அறிக்கை மனசாட்சியை உலுக்குகிறது. மாநில அரசை கட்டுப்படுத்தக்கூடியது நீதிமன்றம். மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது. மதுரை மாவட்ட கலெக்டரின் அறிக்கையை நிராகரிக்கிறோம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறி விட்டனர்; அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்ப்பை மீறி உள்ளனர்: எங்கள் உத்தரவு என்பது மாநில அரசு, அதிகாரிகள், சட்டப்பூர்வ மத நிறுவனங்கள் என அனைவரையும் கட்டுப்படுத்தும்.
எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும், நீதித்துறைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் சகித்துக்கொள்ள முடியாது: தமிழகத்தின் தற்போதைய சூழலைக் கண்டு நாங்கள் சொல்ல விரும்பும் வார்த்தை ‘ஐயோ’ என்பது தான். தீர்ப்புகள் மீறப்படும்போது கண்டு கொள்ளாமல் ஒதுங்கி இருக்க முடியாது.
தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத்துறை ஆணையர், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்பி, திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு கலைக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை அறங்காவலர் குழு செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
நவ. 24ஆம் தேதி தீபம் ஏற்றப்படாத நிலையில் நாளை (நவ. 28) தீபம் ஏற்ற வேண்டும். தர்காவை தாண்டி 50 மீட்டர் சுற்றளவில் அனைத்து பகுதிகளிலும் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதைக் காண்பதற்கு பொதுமக்கள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் சி.ஆர்.பி.எஃப். படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் மலைப்பகுதி முழுக்க சி.ஆர்.பி.எஃப். கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். எந்த வகையிலும் மலையில் உள்ள தர்காவின் செயல்பாட்டில் தடங்கல் இருக்கக் கூடாது. கோயில் மற்றும் தர்காவுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறி வழக்கை டிச.15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
- ஆதாரம்: தினமலர்.காம்
$$$


திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
புதுதில்லி: திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 28-ஆம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்குத் தேவையான நடவடிக்கைகளை சி.ஆர்.பி.எஃப் எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்’ என்ற உச்சநீதிமன்ற உத்தரவு கார்த்திகை தீபத்தன்று (நவ. 24) பின்பற்றப்படாததால் தமிழ்நாடு தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 13 அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நடந்தது என்ன?
கார்த்திகை தீபத்தன்று மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை நவம்பர் 27ஆம் தேதியான இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பன்ஞ்சோலி ஆகியோர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?
வழக்கு விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவோம் என தாம் கூறவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவோம் என மட்டுமே கூறியதாகவும் மதுரை ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீபம் ஏற்றுவது ஆட்சியரின் வேலை அல்ல என்று கூறியதாக ‘லைவ் லா’ செய்தி கூறுகிறது. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சீண்டுவதாக அமைந்தது.
கோயில் நிர்வாகம் கூறியது என்ன?
கோயில் செயல் அலுவலர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அறங்காவலர் குழு எடுத்த முடிவில் கோயில் செயல் அலுவலர் தலையிட முடியாது என விளக்கம் அளித்தார். “அறங்காவலர் குழுவின் கூட்டம் அதன் தலைவர் அறிவுறுத்தலின்படியே நடந்ததாகவும், மத ரீதியாக எடுக்கப்படும் முடிவை கோயில் செயல் அலுவலர் மீற முடியாது என்றும் அவர் மேலும் வாதிட்டார்” என்று லைவ் லா கூறியுள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் வாதம் என்ன?
திருப்பரங்குன்றம் தீபத்தூணை ஆய்வு செய்யச் சென்ற ஏ.எஸ்.ஐ. அதிகாரிகளை, தமிழ்நாடு காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும், மதியம் 3:15 மணியளவில் அங்கு வந்த அதிகாரிகளை அங்கு பணியில் இருந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும் ஏ.எஸ்.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், தீபத்தூணை ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக ஏ.எஸ்.ஐ. குற்றம் சாட்டியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் இந்தச் செயல், நிர்வாகத் துறையின் வரம்பு மீறிய செயல் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்தத் தவறியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உத்தரவைச் செயல்படுத்துவதை உறுதி செய்ய ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் ஏ.எஸ்.ஐ. வலியுறுத்தியது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட, இந்த விவகாரத்தின் எந்தவொரு அம்சத்திலும் தமிழ்நாடு காவல்துறை இனி தலையிடக் கூடாது என்றும், அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு வெளி அமைப்பின் குழு கண்காணிக்க வேண்டும் என்றும் ஏ.எஸ்.ஐ. திட்டவட்டமாகக் கோரியது.

நீதிபதிகளின் உத்தரவு:
1. தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில், “நிர்வாகக் குழப்பம்” நிலவுவதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
2. நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படாமல் இருந்தது கடும் வேதனையைத் தருகிறது என்றும், அதிகாரிகள் தங்கள் அரசியல் தலைவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயல்பட்டதாகத் தெரிகிறது என்றும் நீதிமன்றம் விமர்சித்தது.
3. திருப்பரங்குன்றம் தீபத் தூணில் நவம்பர் 28ஆம் தேதி தீபம் ஏற்ற (மீண்டும்) உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தர்காவிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் பக்தர்கள் தீபம் ஏற்றலாம் எனக் கூறியுள்ளது.
4. பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், தர்காவின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை சி.ஆர்.பி.எஃப் எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. மேலும், முந்தைய உத்தரவைச் செயல்படுத்த தவறியதால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்த நீதிமன்றம், முன்னாள் நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோரை நிர்வாகிகளாக நியமித்துள்ளது.
6. தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 13 அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
7. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறங்காவலர் குழு உடனடியாக இடைநீக்கம்
தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதில்லை என அறங்காவலர்கள் குழு திட்டவட்டமாக முடிவெடித்துள்ளது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் உதவியுடன் உத்தரவை கடுமையாக மீறியுள்ளார்கள் என்றும் தங்களது உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கோயிலின் மரபு என்ன என்று இந்த நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவோம் என அறங்காவலர் குழுவின் அறிக்கை கூறியது அதிர்ச்சி அளித்ததாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அது, கோயிலின் மரபை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை என தேவையின்றி குற்றம்சாட்டும் தொனியில் இருந்ததாகவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தலைமைச் செயலாளர் உள்பட 13 பேர் நேரில் ஆஜராக உத்தரவு
தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகரக் காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தை விளக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நோட்டீஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அடுத்த விசாரணையின் போது அவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தேவஸ்தான நிர்வாகம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதால், அறங்காவலர் குழுவை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட 13 அதிகாரிகள் விவரம்:
- டாக்டர் எம். சாய் குமார் – தமிழ்நாடு தலைமைச் செயலாளர்.
- டாக்டர் மகேஷ்குமார் அகர்வால் – தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்.
- வி. ராஜாராம் – இந்து சமய அறநிலையத் துறை செயலாளர்.
- டி.ஜி. வினய் – இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்.
- நிஷாந்த் கிருஷ்ணா – மதுரை மாவட்ட ஆட்சியர்.
- எல். தேவநாதன் – மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
- ஆர். பொன் சுவாமிநாதன் – மதுரை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்.
- ஜி. செல்வி – சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர்.
- வி. சண்முகசுந்தரம் – கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்.
- சி. ராஜபாண்டியன் – அறங்காவலர்.
- கே. அழகப்பன் – அறங்காவலர்.
- கே. ரெஜினா தேவி – அறங்காவலர்.
- கே. சித்ரா – அறங்காவலர்.
இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் தொடங்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஆதாரம்: பிபிசி.காம்
$$$


திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சனிக்கிழமை (நவ. 28) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
முந்தைய நீதிமன்ற உத்தரவு ‘திட்டுமிட்டு மீறப்பட்டதாக’ என நீதிபதிகள் காட்டம்
புதுதில்லி: திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீகர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் அங்குள்ள தீபத்தூணில் நாளை (நவ.28 – சனிக்கிழமை) தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனுவின் மீதான விசாரணையின் மீது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை நவ. 27இல் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு பின்வருமாறு:
திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீகர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் அங்குள்ள தீபத்தூணில் நாளை (நவ.28) தீபம் ஏற்ற வேண்டும்.
மலை உச்சியில் ஏற்கெனவே ஏற்றப்பட்ட தீபம் எரிந்து கொண்டிருந்தால், அதிலிருக்கும் ஜோதியைக் கொண்டு தீபத்தூண் விளக்கை ஏற்றலாம். மேலும், பக்தர்கள் மலையில் விளக்கேற்ற அனுமதிக்கலாம்.
மலையில் உள்ள தர்காவை ஒட்டிய 50 மீட்டர் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். தர்காவுக்குச் செல்லும் எந்தவொரு பக்தரும் பாதிக்கப்படக் கூடாது. இதற்கான பாதுகாப்புப் பணியில் சிஆர்பிஎஃப் வீரர்களை ஈடுபடுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ்:
மேலும், தமிழக தலைமைச் செயலாளர், தமிழக டிஜிபி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமல்லாது திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில் நிர்வாகம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான நீதிபதி எஸ்.வைத்தியநாதன், எஸ்.பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘திட்டமிட்ட மீறல்’
முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு திட்டமிட்டு மீறியதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துகள் பின்வருமாறு:
’‘உச்ச நீதிமன்றத்தால் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும்போது, யாரும் அதைத் தனித்தனியாகப் பிரித்துப் பொருள் கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய முடியாது என்பதை நீதிமன்றத்தின் உத்தரவு மக்களிடம் உணர்த்த வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதில் அனைத்து அதிகார அமைப்புகளும் உறுதுணையாகவே இருக்க வேண்டும். நீதியை களங்கப்படுத்தும் எந்த முயற்சியும், அது எந்த நபரால் செய்யப்பட்டாலும் பொருத்துக் கொள்ளப்படாது.
இந்த நீதிமன்றத்தின் உத்தரவு என்பது யாரும், எந்த அதிகாரியும் பேரம் பேசுவதற்கானது அல்ல. உச்ச நீதிமன்றத்தின் ஓர் உத்தரவை நீதிமன்றமே மாற்றினால்தான் உண்டு.
திருப்பரங்குன்றம் தீபமேற்றும் வழக்கு சிக்கலான வரலாற்றைக் கொண்டது. இதில், நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவமதிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளனர். தேவஸ்தானம் வாரியம், நவம்பர் 20-ஆம் தேதி உத்தரவுக்கு திரித்துப் பொருள் கொண்டு, நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டுள்ளது. ஆட்சியர், தேவஸ்தானத்தின் தீர்மானத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்” என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலர் நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற வாதங்கள் என்னென்ன?
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று (நவ. 24) ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து கடந்த 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் இருப்பார் எனத் தெரிவித்த நீதிமன்றம், தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது.
ஆனால், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. மேலும் தீப விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நியமிக்கப்பட்ட குழுவுக்கு கோயில் நிர்வாகம் முறையான அனுமதியை வழங்காததே தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்குக் காரணம்,” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மனுதாரர் தரப்பு, மத்திய தொல்லியல் துறை சார்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கப் போவதில்லை என்று ஏற்கெனவே அரசு முடிவு செய்துவிட்டது. அறங்காவலர் குழு அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவது மறைந்து கொள்வதற்கான ஒரு கருவி, புகலிடம்.
தீபத்தூணில் தீபம் ஏற்றக்கூடாது என்று அறங்காவலர் குழு எப்போது தீர்மானம் நிறைவேற்றியது என்பதைக் காட்டுவதற்கு ஆவணங்களில் எதுவும் இல்லை. அதுமட்டுமல்ல, அறங்காவலர் குழு மீது அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆட்சியர் அதை மீறி உத்தரவை செயல்படுத்த முடியும்.
அப்படியிருக்க, உச்ச நீதிமன்றத்தின் நவம்பர் 20-ஆம் தேதி உத்தரவின்படி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு குழு அனுமதிக்கவில்லை என்பதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஆட்சியர் பின்னர் எப்படி கூற முடியும்?’ என்று வினவினர்.
இந்திய தொல்லியல் துறை (ASI) சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தொல்லியல் துறையின் ஒரு குழுவினர் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று விரும்பினர், மற்றொரு குழுவினர் விரும்பவில்லை. நவம்பர் 24-ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட முறையில் அதைச் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.
அனைவருக்கும் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன, மாநில நிர்வாகத்துக்கும் கொடுக்கப்பட்டது. தொல்லியல் துறைக்கும் கொடுக்கப்பட்டது.
ஆனால், தீபம் ஏற்றுவதற்காக ஆட்சியர் மேற்கொண்ட முயற்சிகள் வெறும் கண்துடைப்பு என்று தொல்லியல் துறை தரப்பு அறிக்கைகள் கூறுகின்றன. தொல்லியல் துறை குழு மலை மீது செல்லும்போதே தடுத்து நிறுத்தப்பட்டது. இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு” என்றார்.
- ஆதாரம்: இந்து தமிழ் திசை.காம்
$$$