-திருநின்றவூர் ரவிகுமார்
ஊழியர்களின் பணிநேரம் எவ்வளவு இருக்க வேண்டும்? இதுகுறித்து எந்த பிரதான செய்தித்தாளிலும் செய்தியோ, கட்டுரைகளோ வந்ததாகத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது ‘பொருள் புதிது’ இணையதளம். பாரதீய மஸ்தூர் சங்கத்தில் மாநில நிர்வாகியாக இருந்த திரு. திருநின்றவூர் ரவிகுமார், ஒரு தொழிலாளரின் பார்வையில் இக்கட்டுரையை எழுதி இருக்கிறார்…

கடந்த செப்டம்பர் மாதக் கடைசியில் வங்கி ஊழியர்கள் தேசிய அளவில் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். அ. ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, ஆ. புதிய ஓய்வூதியதிற்குப் பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம், இ. பிஎல்ஐ ( Productivity Linked Incentive) வங்கி கிளைக்கு (அதில் பணிபுரியும் அனைவருக்கும்) தர வேண்டுமேயன்றி தேர்ந்தெடுத்த சில ஊழியர்களுக்கு மட்டுமே என்பது கூடாது, ஈ. வாரத்தில் ஐந்து நாள் வேலை- இரண்டு நாள் ஓய்வு என்பது அவர்களது கோரிக்கைகள்.
ஆனால் பொதுவெளியில் ஊடகங்கள் முன் வைத்தது இரண்டு நாள் ஓய்வை மட்டுமே. அது அவர்களது நீண்ட காலக் கோரிக்கை. மத்திய ரிசர்வ் வங்கியில் இரண்டு நாள் ஓய்வு, மத்திய அரசு அலுவலகங்களில் இரண்டு நாள் ஓய்வு நடைமுறையில் இருக்கிறது. அது மட்டுமன்றி சட்டப்படி வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச வேலை நேரத்தை எட்டுவதற்காக ஐந்து நாளும் ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்யத் தயார் என்பது அவர்களது வாதம். தொழில், குடும்ப வாழ்க்கையே சரியான விதத்தில் இணைத்து ( Work – Life Balance) செல்ல இது உதவும் என்பது அவர்கள் தரப்பு நியாயம்.
சட்டம், உற்பத்தி / செயல்திறன், நவீன இந்தியாவில் வேலை என்றால் என்ன என்பதை சரியாக வரையறை செய்ய வேண்டும் என்ற விஷயங்களைப் பற்றி விவாதத்தை எழுப்புகிறது அந்த வேலை நிறுத்த அறிவிப்பு. கடைசி நேரத்தில் வேலை நிறுத்தத்தை பின்வாங்கிக் கொண்டன தொழிற்சங்கங்கள் என்பது வேறு விஷயம்.
பிரபல எழுத்தாளர் சேதன் பகத், “நான்கு மணி நேரம் சுறுசுறுப்புடனும் கவனமுடனும் வேலை செய்தால் போதும்” என்கிறார். இது பலரின் புருவத்தை உயர்த்தி உள்ளது.
“இந்திய இளைஞர்கள் எழுபது மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும்” என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். அதைக் கேட்டு ஊழியர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் புருவத்தை நெறிக்கிறார்கள்.
எல் அண்ட் டி தலைவர் சுப்பிரமணியம், அதைவிட அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியதுடன் ‘ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டாம் என்பது வருத்தமளிக்கிறது’ என்று சொல்லி எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றினார்.
மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, “எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள் என்பதை விட எவ்வளவு தரமாக வேலை செய்யப்படுகிறது என்பதே முக்கியம்” என்று சொல்லி உள்ளார்.
“40 – 45 மணி நேர வேலை என்று இந்திய சட்டம் சொல்லுவது சரிதான். எவ்வளவு நேரம் வேலை என்பதற்கு மாறாக, அது மனித உழைப்பு, ஊழியர்களின் நலன், அவர்களது தெளிவு மற்றும் முடிவு எடுக்கும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது” என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் பாராட்டியுள்ளார். இதைப் பார்க்கும் போது உள்நாட்டு முதலாளிகளை விட வெளிநாட்டு முதலாளிகள் சற்று நியாயமாக இருப்பது போலத் தெரிகிறது. அதேவேளையில் இந்தியர்களின் செயல் / உற்பத்தித் திறனை நடைமுறையில் மதிப்பீடு செய்யும் போது, முரண்பாடு தெளிவாக வெளிப்படுவதையும் பார்க்க முடிகிறது.
தொழிலையும் குடும்ப வாழ்க்கையும் எப்படி சமப்படுத்திச் செல்வது என்ற கேள்வி கேட்டபோது, “அதை சமப்படுத்தி என்றல்ல நல்லிணக்கத்துடன் இணைத்துச் செல்ல வேண்டும்” என்றார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெல்லா.
அண்மையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் நேர்காணலில், “இங்கே தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையே சமன்படுத்திச் செல்வது என்ற பேச்சை இல்லை. வேலைதான் இருக்கிறது. வேலைதான் வாழ்க்கை” என்று குறிப்பிட்டிருந்தார்.
- வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேர வேலை.
- நாளொன்றுக்கு அதிக பட்சம் ஒன்பது மணி நேர வேலை.
- ஓவர் டைம் செய்தால் இரட்டிப்பு ஊதியம்.
- ஒரு நாளாவது வார விடுமுறை கட்டாயம்
-என்கிறது இந்திய தொழிலக சட்டம் (1948).
‘பொருளாதார முன்னேற்றம் தேவை. அது ஊழியர்களின் உடல் நலனையும் கௌரவத்தையும் பலி கொடுத்து அல்ல’ என்கிறது இந்திய சட்டம். ஆனால் மேற்கண்ட நிபந்தனைகளை மாற்றாமல் பல நெளிவு சுளிவுகளை அனுமதிப்பதாக 2020இல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, வாரத்திற்கு நான்கு நாள் மட்டுமே வேலை செய்தால் கூட பிரச்சினை இல்லை, ஆனால் 48 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்கிறது புதிய சட்டம். இது சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. ஏனெனில் நிர்வாகங்கள் 12 மணி நேர வேலையை மட்டும் ஏற்றுக் கொள்கின்றன; மூன்று நாள் ஓய்வு என்பதையும், இரட்டிப்பு ஊதியம் என்பதையும் ஏற்றுக் கொள்வதில்லை.
இந்தியாவில் வேலை நேரம் பற்றி விவாதிக்கும் அதேவேளையில், பிரான்ஸில் வாரம் 35 மணி நேரம்தான். ஜெர்மனியில் 35 லிருந்து 40 மணி நேரம் வார வேலை நேரம் என்று உள்ளது. அவை வளர்ச்சி அடைந்த நாடுகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல ஐரோப்பிய நாடுகளில் வாரம் நாற்பது மணி நேரம் வேலை என்பதைப் பின்பற்றுகின்றன. அங்கு ஊழியர்கள் வேலை நேரத்துக்கு அப்பால் நிறுவனத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளைக் கூட அனுமதிப்பதில்லை. அதனை தொடர்பை துண்டித்துக் கொள்ளும் உரிமை (ரைட் டு டிஸ்கனெக்ட்) என்கிறார்கள்.
வேலைதான் வாழ்க்கை என்று சொல்லும் ஜப்பானில் கூட மாற்றங்கள் வந்துள்ளன. அங்கு ஓவர் டைம் செய்ய எல்லை வகுக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஊழியர்கள் உடல் நலன், மன நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அண்மையில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன் முடிவில், “50 மணி நேர வேலைக்குப் பிறகு உற்பத்தி செயல்திறன் சரிகிறது. 70 மணி நேர வேலையில் கிடைக்கும் உற்பத்தித் திறன் 50 வேலை நேரத்துக்கு இணையாகதான் இருக்கிறது. அதே வேளையில், அடுத்த 20 மணி நேரத்திற்கு செலவினம் அதிகமாகிறது. ஊழியர்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது; உடல் நலனும், மன நலனும் சரிகிறது; பணியிடத்தில் தவறுகள் அதிகம் ஏற்படுகின்றன; புதியதைக் கண்டுபிடிக்கும் திறனும் ஊக்கமும் குறைகிறது” என்று அந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. இது போன்ற ஆய்வை இந்தியாவில் செய்ய பல்கலைக்கழகங்களுக்குத் தோன்றவும் இல்லை. அப்படியே சிந்தித்தாலும் செய்வதற்கு நிதி இல்லை. அதையும் மீறி ஏதாவது செய்தால் அது வெளிவரும் முன்பு நிர்வாகங்களுக்கு ஆதரவாக தணிக்கை செய்யப்படும் என்பதுதான் யதார்த்தம்.
வார வேலை நேரத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும், அதிக வேலை நேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம், இரண்டு நாள் ஓய்வு, வேலை நேரத்துக்குப் பிறகு அலைபேசி அழைப்புக் கூடாது, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தால் மட்டுமே போதாது, அதை நடைமுறைப்படுத்துவதில் கண்காணிப்பு தேவை. இவையெல்லாம் புதிய இந்தியாவின் பணிக் கலாச்சாரத்தை சிறப்பாக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஆனால் அரசு இதை ஏற்குமா என்பது கேள்வி.
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது நீதித்துறை சார்ந்த விழா ஒன்றில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உடன் மேடையில் இருந்தார். அப்போது, “வழக்குகள் அதிகம் தேங்கியுள்ளன. அதைக் குறைக்க நீங்கள் (நீதிபதிகள்) நாள்தோறும் ஒரு மணி நேரம் அதிகமாக வேலை செய்ய முடியுமா?” என்று கோரிக்கை வைத்தார். தலைமை நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு வேலை நேரத்தை அதிகரித்தார் என்று செய்தி பதிவாகியுள்ளது.
‘ஒருநாள் இரவு ஒண்றரை மணிக்கு கணிணிப் பொறியாளருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது பிரதமர் வீட்டில் இருந்து. அவர் போனதும் கணிணி பழுதாகி உள்ளது, உடனே சரி செய்து தர வேண்டும் என்று சொல்லி உள்ளார் பிரதமர். சிறிது நேரம் அவருடனே இருந்திருக்கிறார். பிறகு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டிருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் ஆகும் என்று பதில் வந்ததும், சரி நான் யோகாசனம் செய்ய வேண்டியுள்ளது, அதைச் செய்து விட்டு வருகிறேன், என்று சொல்லி பிரதமர் அறையில் இருந்து வெளியே போனார் . இரண்டு மணி நேரம் கழித்து வந்தார். கணிணி சரியானதைக் கண்டு அந்த ஊழியரைப் பாராட்டினார். தன் கையால் தேநீர் பரிமாறினார்’ என்று அந்த ஊழியர் சொன்னதை செய்தித்தாள்கள் பதிவிட்டன.
உக்ரைன் – ரஷ்யா போர் துவங்கிய காலத்தில் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இரவு இரண்டரை மணிக்கு பிரதமரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அதை எடுத்தவுடன் “தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டேனோ?” என்று பிரதமர் கேட்க, “இல்லை தொலைக்காட்சிகளில் செய்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஜெய்சங்கர் சொன்னார். இதை தமிழ் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டு, “அவர்கள் இரவு பகலாக விழிப்போடு நாட்டிற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார் சாணக்யாவில்.
மோடி ஆதரவாளர்கள் டாக்டர் மேத்தாவின் கூற்றை அவ்வப்போது (எல்லா மொழிகளிலும்) பதிவிட்டு வருகிறார்கள். ‘எனக்கு மோடி குஜராத்தில் இருந்தபோதே பழக்கம். பிரதமரான சில ஆண்டுகள் கழித்து அவரை காந்திநகரில் சந்திக்க நேர்ந்தது. மரியாதை நிமித்தமாக எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன். நன்றாக இருக்கிறேன் என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன் . அதற்கு மாறாக அவர், தான் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது. தினசரி நான்கு மணி நேரம் தூக்கத்தில் போய்விடுகிறது. அதை எப்படி குறைப்பது, அதற்கு யோகாவில் வழி இருக்கிறதா என்று முயன்று வருகிறேன் என்று கூறினார்’. இதை டாக்டர் மேத்தா பதிவிட்டுள்ளார்.
துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடு மத்திய அமைச்சராக இருந்தபோது, “மோடி மிக வேகமாக இருக்கிறார். அவருக்கு இணையாக வேலை செய்வது எனக்கு கடினமாக இருக்கிறது” என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இந்திய தொழிலாளர்களும் ஊழியர்களும் மோடியாக முடியாது. அப்படி ஆவார்களானால் மோடிக்கு மதிப்பிருக்காது.
$$$