உயிர் பெற்ற தமிழர் பாட்டு

-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் புரட்சிகரமான கருத்துகள் மிகுந்த இப்பாடல், பெரும்பாலான பாரதியார் கவிதைகள் தொகுப்புகளில் காணப்படுவதில்லை.  “நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்- இந்த நாட்டினில் இல்லை”,  “உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்”,  “சூத்திர னுக்கொரு நீதி- தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி; சாத்திரம் சொல்லிடு மாயின்- அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்”, “தோன்றி அழிவது வாழ்க்கை” - என்பது போன்ற அமரத்துவம் வாய்ந்த வைர வரிகள் மிகுந்த கவிதை இது...

பல்லவி

இனிஒரு தொல்லையும் இல்லை- பிரி
வில்லை,குறையும் கவலையும் இல்லை

(இனி)

ஜாதி

மனிதரில் ஆயிரம் ஜாதி- என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று- அதில்
காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.

பூவில் உதிர்வதும் உண்டு- பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற் கினியதைத் தின்பார்- அதில்
நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார்.

ஒன்றுண்டு மானிட சாதி- பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது நாளை- உயர்ந்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.

நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்- இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும்- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.

இன்பத்திற்கு வழி

ஐந்து புலனை அடக்கி- அரசு
ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து,
நொந்து சலிக்கும் மனதை- மதி
நோக்கத்திற் செல்ல விடும்பகை கண்டோம்.

புராணங்கள்

உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்- பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரவும்- வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே- தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்- அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த- திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்- ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்- அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்- அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி- நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

ஸ்மிருதிகள்

பின்னும்(ஸ்)மிருதிகள் செய்தார்- அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை;
மன்னும் இயல்பின வல்ல- இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.

காலத்திற் கேற்ற வகைகள்- அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை

சூத்திர னுக்கொரு நீதி- தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்- அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

மேற்குலத்தார் எவர்?

வையகம் காப்பவ ரேனும்- சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே- பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

தவமும் யோகமும்

உற்றவர் நாட்டவர் ஊரார் – இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்- இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.

பக்கத் திருப்பவர் துன்பம்- தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்- நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

யோகம்,யாகம்,ஞானம்

ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதி மெய்ஞ் ஞானம்.

பரம்பொருள்

எல்லையில் லாத உலகில்- இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லையில் லாதன வாகும்- இவை
யாவையு மாயிவற் றுள்ளுயி ராகி,

எல்லையில் லாப்பொருள் ஒன்று- தான்
இயல்பறி வாகி இருப்பதுண் டென்றே,
சொல்லுவர் உண்மை தெளிந்தார்- இதைத்
தூவெளி யென்று தொழுவர் பெரியோர்.

நீயும் அதனுடைத் தோற்றம்- இந்த
நீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே,
ஓயுதல் இன்றிச் சுழலும்- ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே,

சக்திகள் யாவும் அதுவே- பல்
சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே
நித்திய மாமிவ் வுலகில்- கடல்
நீரில் சிறுதுளி போலும்இப் பூமி,

இன்பமும் ஓர்கணத் தோற்றம்- இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்;
துன்பமும் ஓர்கணத் தோற்றம்- இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

முக்தி

தோன்றி அழிவது வாழ்க்கை- இதில்
துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும்- களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி. (இனி)

$$$

One thought on “உயிர் பெற்ற தமிழர் பாட்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s