லோகோபகாரம்

-மகாகவி பாரதி

(22 செப்டம்பர் 1916)

ஏற்கெனவே, ‘சக்திதர்மம்’ என்ற மகுடத்தின் கீழ் ஒரிரண்டு விஷயங்கள் எழுதியிருக்கிறேன்.

‘லோகோபகாரம்’ என்றாலும் அதே அர்த்தந்தான். லோகோபகாரமாவது லோகத்துக்கு உபகரணம் அல்லது கருவியாக நடத்தல்.

லோகத்துக்கு உபகாரத்தை அதாவது இனிய செய்கையைச் செய்தல் லோகத்துக்கு இனியது செய்வோன், லோகசக்திக்கு ஒரு கருவியாகவே தொழில் செய்கிறான். சக்தியின் கருவியாக இருந்து தொழில் செய்வதையே சக்தி தர்மம் என்றும் சொல்லுகிறோம். பிறருக்கு நாம் செய்தல் இஃதேயாம்.

லோகத்துக்கு இனியது செய்வோன் தன் உள்ளத்தில் பயம் வைத்துக் கொண்டிருக்கலாகாது. பயம் தீர்வதற்கு வழியென்ன? பகைதீர்ந்தால் பயந்தீரும். பகை தீர்க்கும் வழியென்ன? நம்முடைய மனத்தில் பிறர் மீது பகை யெண்ணம் தோன்றாமலிருக்க வேண்டும். பாம்பினிடத்திலே நாம் விரோத புத்தி கொள்ளாவிட்டால் அது நம்மைக் கடிக்காது. இந்த வார்த்தையைப் பரிஹாசம் பண்ணுதல் எளிது; யாரும் செய்யலாம். ஆனால் அது உண்மை. பாம்பைப் பழக்கிவைக்கும் திறமை அன்புக்குண்டு; பாம்பினிடத்தில் கருணை செய்யும் ஞானியைப் பாம்பு கடிக்காது. லோகோபகாரத்தைக் கருதி அந்த ஞானி மனதிலே அன்புடன் அந்தப் பாம்பைக் கோபித்தால் அது அவ்விடம் விட்டு ஒடிப் போய் விடும்.

எல்லா ஜீவராசிகளிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே புத்தன் சொல்லிய தர்மம். மஹான்களெல்லாம் காட்டிய வழி இதுதான். தற்காலத்தில் மனித ஜாதி கூடிய வரை நாகரிகப் பட்டிருப்பதால், மிருகங்கள், பக்ஷிகள், பூச்சி, புழு இவற்றால் மனிதனுக்குள்ள பயம் அநேகமாகத் தீர்ந்து போய் விட்டது.

இப்போது மனிதர் ஒருவருக் கொருவர் பயப்படுவது தான் அதிகம். இதற்கு இதுவரை மனித ஜாதியார் கண்டுபிடித்து அனுசரணையில் வழங்கிவரும் மருந்து உபயோகமில்லை. பயத்தினால் விரோதம், போர் உண்டாகிறது. மனித ஜாதி வீணாக அழிகிறது. எல்லோருக்குமே நஷ்டமுண்டாகிறது. பரஸ்பர பயம் நீங்கவேண்டுமானால் அதற்குப் போர் சரியான மருந்தில்லை. உலகம் தோன்றிய காலமுதல் இன்றுவரை போர்கள் நடந்துதான் வருகின்றன. இது மட்டிலும் மனித ஜாதியிலே ஒருவருக்கொருவர் பயப்படுவது துளிகூடக் குறையவில்லை.

அன்பிருந்தால் பயந் தெளிந்து போகும். ஒரே குடும்பத்திலே ஒருவரையொருவர் கண்டு மரணபயங்கொள்வதில்லை. உலக முழுவதும் ஒரே குடும்பத்தைப் போல் வாழக் கூடாதா? எளியவன் அன்பு தொடங்கி வலியவன் சும்மா இருந்தால் ஒன்றும் நடக்காது. எளியவன் வலிமையை விரும்பி நடக்க வேண்டும். வலியவன் எளியவனிடம் அன்பு செலுத்த வேண்டும்.

யாரிடத்திலும் அன்புடன், யாரிடத்திலும் பயமின்றி நல்லோன் லோகோபகாரஞ் செய்கிறான். பராசக்தியின் கையிலே தன்னை ஒரு கருவியாக ஒப்புவித்துவிட்டு, அவள் சித்தப்படி தொழில் செய்துவருகிறான். உலகத்தை ஆக்குதல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழிலுக்கும் பராசக்தி வெவ்வேறு விதமான கருவிகளை வழங்குகிருள். காற்றும், ஒளியும், வெம்மையும், மண்ணும், நீரும், சித்தமும் உயிரை ஆக்குவதற்குக் கருவிகளாகின்றன.

காற்றும், ஒளியும், வெம்மையும், நீரும், சித்தமும் பிற உயிர்களும் உயிரைக் காப்பதற்குக் கருவிகளாகின்றன.

இவையனைத்தும் காலமும் சேர்ந்து நாசத்திற்குக் கருவிகளாகின்றன. மனித உயிராகிய நான் மற்ற மனிதவுயிர்களைக் காக்கும் கருவியாகத் தொழில் செய்வது நன்றா? அழிக்கும் கருவியாகப் போவது நன்றா? காப்பது நன்று.

மேலும் கர்ம விதியை மறக்கலாகாது. காக்க விரும்புவோன் காக்கப்படுவான்; அழிக்க விரும்புவோன் அழிக்கப் படுவான். நன்மை விரும்பினால் நன்மை விளையும்; இல்லா விட்டால் விளையாது.

ஒருவன் லோகோபகாரத்தை மாத்திரமே விரும்பி நடக்கத் தொடங்கினால் அவனுடைய சொந்த வியாபாரங்களுக்குச் சேதமுண்டாகுமென்று சிலர் நினைக்கிறார்கள். இது பிழை. தனது இன்பத்தை விரும்புவோன் முதலாவது செய்ய வேண்டிய காரியம் லோகோபகாரம்.

“நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி’’ நமக்குத் திரும்பி வந்தே தீரும். அடுத்த ஜன்மத்திலன்று; இந்த ஜன்மத்திலேயே திரும்பி வரும். இது கண்ணாலே கண்ட செய்தி. செல்வம், புகழ், துணை, வினையேற்றம் முதலிய எந்த நலத்தை ஒருவன் விரும்பின போதிலும், பிறர்க்கு நன்மை செய்யாவிட்டால் அது கைகூடாது. அனுபவத்திலே பார்த்துக் கொள்ளலாம். குடும்பத்தைக் காப்பவன் ஊருக்கு நலஞ் செய்வோன் இவர்கள் உண்டு வாழ்ந்திருப்பதனால் உலகத்துக்கு நன்மையன்றோ? நீ பிறரைக் காப்பாற்றினால் தெய்வம் உன்னைக் காப்பாற்றும்.

தெய்வம் உண்டு. ‘’நலஞ் செய்வோன் என்றும் கெட்ட வழி சேரமாட்டான்’’ என்று கீதை சொல்லுகிறது. அவனுக்குக் கெடுதி நேரிடாதபடி அவனுடைய யோக க்ஷேமத்தைத் தான் சுமப்பதாகத் தெய்வம் வாக்களித்திருக்கிறது. ஆனால், ஆரம்பத்திலே சோதனைகள் நேரிடும். மனம் தளராமல் லோகோபகாரம் செய்துகொண்டே போனால் பிறகு சோதனைகள் நின்றுபோய் நன்மை உதயமாகும். லோகோபகாரத்திலே “ஆரம்பத்திலே” மனத் தளர்ச்சி ஏற்படுவது சகஜம்.

“ஏதடா இது! தெய்வத்தை நம்பி தெய்வமே கர்த்தா, நாம் கருவியென்று நிச்சயித்து மற்றவர்களுக்கு நன்மை செய்யப் போன இடத்தில் நமக்குத் தீமையுண்டாகிறதே! கிணறு வெட்டப்போன இடத்தில் பூதம் புறப்படுகிறதே! உலகத்தைக் கிளியென்று நினைத்து அதன் பசி தீரப் பால் வார்க்கும்படி போனால் அது கழுகாக மாறி நம்மைக் கொத்துகிறதே!” என்று திகைத்துப் போய் மனிதன் லோகோபகாரத்தைக் கைவிடக் கருதல் ஸாமான்யம். இது தவறு. தெய்வம் நமக்குத் தகுதியேறும் பொருட்டாக நம்மைச் சோதனை செய்கிறது. உள்ளம் பதறாதிருந்தால் விரைவிலே வானந் தெளியும்.

லோகோபகாரம் எப்போது, எந்த வயதில் தொடங்கலாம்? இப்போது, இந்த நிமிஷத்திலே தொடங்க வேண்டும். யார் தொடங்கலாம்? ஆண், பெண், அலி, வலியவன், எளியவன், கிழவன், குழந்தை, குருடன், நொண்டி எல்லோரும் தொடங்கவேண்டும்.

பிறருக்கு இனியது செய்தலாவது யாது? நோய் தீர்த்தல், உணவு கொடுத்தல், அறிவு கொளுத்துதல் முதலிய செய்கை.

பிறரென்றால் அதற்கெல்லையுண்டா? சக்திக்குத் தக்க படி எல்லை. குடும்பத்தைக் காத்த பிறகு நாட்டைக் காக்க வேணும். பிறகு மனித ஜாதி முழுதையும் காக்க வேணும்.

லோகோபகாரத்தினால் மனிதன் என்ன பயனடைவான்? எப்போது?

லோகோபகாரத்தையே பரிபூரணமாகச் செய்வோன் மனிதநிலை கடந்து அமரநிலை பெறுவான். இவ்வுலகத்தில் இந்தப் பிறவியில் பயன் அடைவான். செய்கையின் வேகத்துக்குத் தக்கபடி பயனின் வேகம்.

சக்தி காக்கும்.

  • சுதேசமித்திரன் (12.09.1916)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s