-ஜடாயு

கடந்த ஆண்டு, ஆதீனங்களையும், மடங்களையும், புராணங்களையும் காட்டமாகச் சாடும் இந்து விரோதப் பதிவு ஒன்றில் கீழ்க்கண்ட பாரதியார் பாடலை முகநூலில் பதிவர் ஒருவர் கொடுத்திருந்தார்.
உண்மையின் பேர்தெய்வம் என்போம்- அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம் உண்மைகள் வேதங்கள் என்போம்- பிறிது உள்ள மறைகள் கதையெனக் கண்டோம். கடலினைத்தாவும் குரங்கும் வெங் கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும் வடமலை தாழ்ந்ததனாலே தெற்கே வந்து சமன்செய் குட்டைமுனியும் நதியினுள்ளே மூழ்கிப் போய் அந்த நாகர் உலகில் ஒரு பாம்பின் மகளை விதியுறவே மணம் செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம். ஒன்று மற்றொன்றைப் பழிக்கும் ஒன்று உன்மையொன்றோதி மற்றொன்று பொய்யென்னும் நன்று புராணங்கள் செய்தார் அதில் நல்ல கவிதைகள் பலபல தந்தார். கவிதை மிகநல்ல தேனும்-அக் கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்; புவிதனில் வாழ்நெறி காட்டி- நன்மை போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
இந்த வரிகளுக்குக் கீழ் ‘பெரும்பாவலன் பாரதி (குயில் பாட்டு)’ என்று மேற்கண்ட முகநூல் பதிவர் குறிப்பிடுகிறார். பாரதி படைப்புகளின் சாதாரண வாசகருக்குக் கூட இது குயில்பாட்டு இல்லை என்று உடனடியாகத் தெரிந்து விடும். அந்த அளவில் இருக்கிறது அவரது ‘புலமை’.
மேற்கண்ட வரிகள் ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’ என்ற தலைப்புடன் பாரதியார் கவிதைகள் புத்தகங்களில் ‘புதிய பாடல்கள்’ என்ற பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (வானவில் பிரசுரம் 1982 பதிப்பில் இப்பாடல் உள்ள இடம், பக். 677- 681).
- காண்க: உயிர் பெற்ற தமிழர் பாட்டு
மெய்ஞானியும், யோகியும், கவிஞனும் ஆன பாரதியின் கவிதைகளைக் கற்கும் போது அவற்றின் ஆழ்ந்த உட்பொருளைக் கருத வேண்டுமே அல்லாது, மேம்போக்காகப் படித்தால் அர்த்தத்திற்குப் பதில் அனர்த்தம் தான் கிடைக்கும்.
இந்தப் பாடலையே எடுத்துக் கொள்வோம்.
“கனலிடைப் பிறந்த செவ்விதழ்ப் பெண்ணும்” – இது யாகத்தீயிலிருந்து தோன்றிய பாஞ்சாலி என்ற திரௌபதியைக் குறிக்கிறது. பாரதக் கதையும் பாஞ்சாலியும் முழுப் பொய் என்று பாரதி உண்மையிலேயே கருதியிருந்தால், ஏன் நூற்றுக் கணக்கான பாடல்களில் பாஞ்சாலி சபதம் என்ற காவியத்தை எழுத வேண்டும்? அதன் கடவுள் வாழ்த்திலேயே “ஐவர் பூவை திரௌபதி புகழ்க் கதையை” என்று கூற வேண்டும்? பராசக்தியையும், தேச விடுதலையையும் தரிசிக்க ஏன் இந்த அற்புதமான சரிதத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?
“விதியுறவே மணம் செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்”
இந்த வீமனையும், அவன் சகோதரன் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக பாரதி காண்கிறார் –
“விளையும் மாண்பு யாவையும் பார்த்தன் போல் விழியினால் விளக்குவாய் வா வா வா” (பாடல் - ஒளி படைத்த கண்ணினாய்)
“முன்னைப் பார்த்தன் கண்ணன் இவன் நேரா – என்னை உய்யக் கொண்டருளல் வேண்டும்” (பாடல் – தேடிச் சோறு நிதம் தின்று)
“பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும் இராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர் வானக நாடுறும்” (பாடல் – சிவாஜி தன் சைனியத்திற்குக் கூறியது)
“கடலினைத் தாவும் குரங்கும்” என்பது அனுமன் என்னும் மகோன்னத தெய்வீக புருஷரை மறுதலிக்கிறது என்றால், பின்பு ஸ்ரீராமரின் அவதார வைபவத்தை பாரத தேவியின் பெருமையாக அறிவித்து பாரதியார் கீழ்க்கண்டவாறு பாடியிருப்பாரா என்ன?
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்”.
எனவே பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் பாடல் ஒரு அலாதியான, தத்துவரீதியான நிராகரிப்பு மனப்பான்மையில் பாரதியார் பாடியது. யோக மொழியில் “நிவ்ருத்தி” என்று அதைக் குறிப்பிடுவார்கள்.
ஒப்புமைக்காக, ஆதிசங்கரரின் ‘தச சுலோகீ’ என்ற புகழ்பெற்ற பாடலில் உள்ள சில வரிகளை எடுத்துக் கொள்வோம்.
ந மாதா பிதா வா ந தே³வா ந லோகா,
ந வேதா³ ந யஜ்ஞா ந தீர்த²ம்ʼ ப்³ருவந்தி …
ந ஸாங்க்²யம்ʼ ந ஶைவம்ʼ ந தத்பாஞ்சராத்ரம்ʼ
ந ஜைனம்ʼ ந மீமாம்ʼஸகாதே³ர்மதம்ʼ வா ..
ந ஶாஸ்தா ந ஶாஸ்த்ரம்ʼ ந ஶிஷ்யோ ந ஶிக்ஷா …
தாயில்லை, தந்தையில்லை, தெய்வங்கள் இல்லை, லோகங்கள் இல்லை,
வேதங்கள் இல்லை, வேள்விகளில்லை, புனித தீர்த்தங்களுமில்லை…
சாங்கியம், சைவம், பாஞ்சராத்ரம் (வைஷ்ணவம்),
ஜைனம், மீமாம்சம் முதலான மதங்களுமில்லை..
கற்பிப்பவர் இல்லை, சாஸ்திரம் இல்லை, சிக்ஷையும் இல்லை..
இந்த வரிகளை மட்டும் தனியாகக் காட்டி சங்கரர் வேதங்களையும் வேள்விகளையும், சிவ விஷ்ணு வழிபாடுகளையும் எதிர்த்தவர் என்று கூறலாமா? அப்படிக் கூறுவது முற்றிலும் தவறாக இருக்கும். ஏனென்றால், வேத நெறியையும், அதன் தத்துவ சிகரமான வேதாந்தத்தையும் நிலைநிறுத்தியவர் சங்கரர். ஷண்மதம் எனப்படும் சைவம், வைணவம் முதலான ஆறு வைதிக சமயங்களையும் தழைக்கச் செய்தவர். இவற்றோடு கூட இறுதி உண்மையாக, அருவமான, குணங்களைக் கடந்த அத்வைதப் பரம்பொருளையும் உணர்த்தியவர் என்பதுதான் வரலாறு. அதே பாடலில் இறுதியில்,
ந ச த்வம்ʼ ந சாஹம்ʼ ந சாயம்ʼ ப்ரபஞ்ச꞉ ததே³கோ(அ)வஶிஷ்ட꞉ ஶிவ꞉ கேவலோ(அ)ஹம் ..
நீ என்பது இல்லை, நான் என்பதும் இல்லை, இந்த பிரபஞ்சமும் இல்லை
ஒன்று மாத்திரமாக எஞ்சியிருக்கும் சிவம், அதுவே யான்.
என்று கூறுகிறார்.
பாரதியின் மேற்கண்ட பாடலுக்கும் இதுவே பொருந்தும். அதன் பிற்பகுதியில்
எல்லையில்லாப் பொருள் ஒன்று - தான்
இயல்பறிவாகி இருப்பதுண் டென்றே.
சொல்லுவர் உண்மை தெளிந்தார் - இதைத்
தூவெளியென்று தொழுவர் பெரியோர்
என்ற வரிகளும் உள்ளன.
பாரதியாரின் தரிசனங்களை முழுமையான கருத்தாக்கங்களாக நாம் பார்க்க வேண்டுமே அல்லாது ஏதோ ஒரு கவிதையில் இருந்து ஒன்றிரண்டு வரிகளை மேற்கோள் காட்டி அவர் “நாத்திகர்” என்றெல்லாம் பேசுவது பகுத்தறிவின்மையையே காட்டுகிறது. குறிப்பாக எதையுமே உருப்படியாகவும், ஆழமாகவும் ஆராயாமல் கருத்துக் கூறும் திராவிட இயக்க அறியாமையை.
இதிகாச புராணங்கள், சாத்திரங்கள் முதலான இந்துமத புனித நூல்களின் மேன்மையை பாரதியார் புகழ்ந்துரைக்கும் இரண்டு பாடல்களை இங்கே தருகிறேன். இதே விஷயத்தை தனது பல கவிதை, கட்டுரைகளிலும் அவர் எடுத்தாண்டுள்ளார் என்பதை பாரதியை ஓரளவாவது கற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.
பாடல் 1: வீரர் முப்பத்திரண்டு கோடி” எனத் தொடங்கும் “பாரத மாதா நவரத்தின மாலை”யிலிருந்து.
அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம் ஆணிமுத்துப் போன்றமணிமொழிக ளாலே பன்னி நீ வேதங்கள், உபநிடதங்கள் பரவுபுகழ்ப் புராணங்கள், இதிகாசங்கள் இன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம் என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்? மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே. [அவனி – உலகம்; பன்னி – உரைத்து; காலங் கொன்ற – காலத்தைக் கடந்து நிற்கின்ற]
இப்பாடலில் பாரத ரிஷிகளின் ஞான ஒளி காலத்தை வென்று நிற்கிறது என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி.
பாடல் 2: “மண்ணுலகின் மீதினிலே” என்று தொடங்கும் ஹிந்து மதாபிமான சங்கத்தார் மீது வாழ்த்துப் பாக்கள்
எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில் வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர் தப்பாதே இவ்வுலகில் அமரநிலை பெற்றிடுவார்; சதுர்வேதங்கள் மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால் இவ்வுண்மை விளங்கக் கூறும் துப்பான மதத்தினையே ஹிந்துமத மெனப்புவியோர் சொல்லு வாரே. [அமரநிலை – அழியாத நிலை; சதுர்வேதங்கள் – நான்கு வேதங்கள்; மெய்ப்பான – சத்தியமான; துப்பான – தூய்மையான]
எனவே, பாரதி யோக, ஆன்மிக உயர்நிலையில் நின்று கூறுமிடத்தில் மட்டுமே புராணம், சாத்திரம் எல்லாம் கதைகளே என்று கூறுகிறார், மற்றபடி வேத புராணங்களையும் சாத்திரங்களையும் மிகவும் புகழ்ந்து கூறுகிறார் என்பது தெளிவு. இதை முற்றிலும் அபத்தமாகப் புரிந்துகொண்டு, ஈவேரா, கருணாநிதி மற்றும் தான் கூறுவது போன்றே பாரதியும் கூறுகிறார் என்று பிதற்றுவது எப்படியிருக்கிறது?
சுவாமி விவேகானந்தர் சொல்லுகிறார்-
“பல சமயங்களில் மிக ஆழ்ந்த மூடத்தனத்தில் இருப்பவர்கள், சில புறத்தோற்றங்களைக் கண்டு தாங்கள் ஆன்மிக உயர்நிலை அடைந்து விட்டதாகக் கருதிக் கொண்டு மனம் பிறழ்வார்கள். மாமன்னரின் மகனான புத்தர் சகல செல்வங்களையும் துறந்து ஓர் இரவில் வீட்டை விட்டுச் செல்கிறார். அடுத்த வேளை உணவுக்கு அல்லாடும் பிச்சைக் காரன் ஒருவன் “புத்தர் தான் செய்யக் கூடுமா? நான் எல்லாவற்றையும் துறக்கிறேன்” என்று சொல்வானானால் அது எவ்வளவு முட்டாள் தனம்! இழப்பதற்கு என்ன இருக்கிறது இவனிடம்?”
அப்படித் தான் இருக்கிறது.
- நன்றி: தமிழ் ஹிந்து
$$$