ஆச்சார்யர் நரேந்திரர்!

-திருநின்றவூர் ரவிகுமார்

திரு.  திருநின்றவூர் கே.ரவிகுமார், சென்னையில் வசிக்கிறார்; அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தர் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கான ‘பிரபுத்த பாரத’ குழுவில் உறுப்பினராக இருந்தவர்; சிறந்த மொழிபெயர்ப்பாளர்; எழுத்தாளர்.  ‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

உலகில் வாழ்ந்துள்ள ஆச்சார்யர்களின் (குருமார்கள்) வாழ்க்கையை ஆராய்ந்துள்ள பலரும் அவற்றில் பொதுவான மூன்று விஷயங்களை அடையாளம் காட்டுகின்றனர். ஆச்சாரியர்களின் பிறப்பு,  கருத்து,  தாக்கம் இவையே அம்மூன்றும்.  அவர்கள் பிறப்பு தெய்வீகப் பிறப்பாக இருக்கும். அவர்கள் புதிய பார்வையை அளிப்பவர்களாக, புதிய விளக்கங்களை அளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் சொல்லும் செயலும் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் அளிப்பதாக இருக்கும். அப்படிப்பட்டவர்களே ஆச்சார்யர்கள்.

யோகாச்சாரியனான கிருஷ்ணன் பிறக்கும்போதே சதுர்புஜனாக சங்கு சங்கர கதா தாரியாக பிறந்ததாகவும், பெற்றோரின் வேண்டுகோளுக்கு இசைந்து வடிவத்தை மாற்றிக்கொண்டதாகவும் பாகவதம் கூறுகிறது. அது இக்காலத்தில் சாத்தியமில்லை. பின் எப்படி அறுதியிடுவது?

சுவாமி சித்பவானந்தர் எழுதியுள்ள ‘நன்மக்களைப் பெறுதல்’ என்ற சிறு நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். “குழந்தைப் பிறப்பு உடல் இச்சையின் விளைவாக இருக்கக் கூடாது. அதற்காக தவம் இருக்க வேண்டும். அப்படி பெற்றெடுக்கும் மக்களே நன்மக்கள்” என்கிறார் அவர். சுவாமி விவேகானந்தர் என்று பின்னாளில் உலகப் புகழ்பெற்ற நரேந்திரர் பிறப்பும் அப்படிப்பட்ட தவப் பிறப்பு.

அவரது தாயார் புவனேஸ்வரி அம்மாள் வாரணாசியில் கோயில் கொண்டுள்ள வீரேஸ்வரிடம் வேண்டி விரதமிருந்து பெற்ற பிள்ளை நரேந்திரன். கல்கத்தாவில் வசித்தாலும் காசியிலுள்ள கோயிலில் வாரந்தோறும் விளக்கேற்ற தன் உறவினர் மூலம் ஏற்பாடு செய்திருந்தார் அவர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் நரேந்திரன் தெய்வீகப் பிறப்பு என்று அறுதியிட்டுள்ளார்.  ‘சப்தரிஷிகளில் ஒருவரே நரேந்திரனாக பிறந்துள்ளார்’ என்று கூறியுள்ளார். பல நேரங்களில் தன் சீடர்களுக்கு தர மறுத்த தூய்மை இல்லாத உணவை நரேந்திரருக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அளித்துள்ளார். ‘நரேந்திரன் கொழுந்து விட்டெரியும் தீ. அவனிடம் அசுத்தம் எதுவும் தங்க முடியாது. அனைத்தையும் அவன் எதிர்த்துவிடுவான்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  தூய்மையானவர் மட்டுமல்ல முழுமையானவர் (Pure & Perfect) என்று நரேந்திரனை அவர் குறிப்பிடுவார்.

சுவாமி விவேகானந்தர் பரிவ்ராஜகராக ஊர் ஊராய்ச் சுற்றிவரும் துறவியாக இந்தியா முழுவதும் சுற்றி வந்தபோது அவரது உயர்வைத் தெரிந்து கொண்டு ஏற்று உபசரித்தவர்கள் பலர். ஏளனத்துடன் உதாசீனம் செய்தவர்களும் உண்டு. ஆனால் 1893 செப்டம்பர் 11-ஆம் நாள் அவர் நிகழ்த்திய உரைக்கு பின்னர் நாடே அவருடைய மேன்மையை உணர்ந்து கொண்டாடியது. அவர் புதிய பார்வையை புதிய பாதையை அமைத்துக் கொடுத்தார்.

சுவாமிஜி கூறுகிறார், ‘இந்துவாகப் பிறந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்தப் பெருமிதம் என் முன்னோர்களால் ஏற்பட்டது. கடந்த காலத்தை நான் ஆழ்ந்து கற்கக் கற்க… அந்தப் பெருமித உணர்வு மேலும் அதிகரிக்கிறது’.

இந்தியாவில் தேசியமே இல்லை. இது வந்தேறிகளின் நாடு என்று அனைவரும் நம்பிவந்தபோது இது இந்துஸ்தானம், இந்துக்களின் தேசம் என்ற புதிய பார்வையை அளித்தார் சுவாமிஜி.

சுவாமிஜி சொன்னார், ‘நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். உங்களுடைய ஆயிரக் கணக்கான தெய்வங்களை ஓரம் தள்ளி வைத்துவிடுங்கள். இனி உங்களின் ஒரே தெய்வமாக பாரதத் தாயை மட்டுமே ஏற்றுக் கொண்டு வழிபடுங்கள்’. தலைவர்களும் மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர். விளைவு நமக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்தது.  சுவாமிஜி சொன்னதை மறந்ததன் விளைவு இன்றைய நிலை;  ஊழலில் மூழ்கியுள்ள சமுதாயம்.

எந்தவொரு நாட்டு மக்களுக்கும் எந்தவொரு செய்தியை அளிக்க வேண்டுமென்றால் அதற்குரிய வழியில் சொல்ல வேண்டும். அமெரிக்காவுக்கு அந்த வழி பொருளாதாரம். ஐரோப்பாவுக்கு அது அரசியல். இந்தியாவுக்கு ஆன்மிகம். இந்தியாவில் எந்தவொரு செய்தியையும் சொல்ல சரியான வழி ஆன்மிகம் மட்டுமே. ஏனெனில் இந்தியா ஆன்மிக நாடு. சுவாமிஜி தனது அமெரிக்க சீடரொருவருக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தியாவை அழித்துவிட்டால் உலகில் ஆன்மிகமே இல்லாமல் போயுவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்தியாவிலோ ஏகப்பட்ட சமயங்களும் அவற்றுக்குள் சண்டைகளும் துவைதம் – அத்வைதம் – விசிஷ்டாத்வைதம் என தத்துவ மோதல்களும் இருந்தன. இவை மூன்றும் ஒரே உண்மையை வெவ்வேறு கோணத்தில் கூறுகின்றன என்ற புதிய பார்வையை சுவாமிஜி அளித்தார். சாதகனின் இயல்புக்கும் தகுதிக்கும் ஏற்ப இவை வேறுபடுகின்றன. மூன்றுக்குள்ளும் முரண்பாடு இல்லை. மனித வாழ்வில் குழந்தை- வாலிபம்- வயோதிகம் எனப் பல நிலைகளைப் போலவே இவையும் என்றார்.

‘நாம் தவறிலிருந்து சரியானதற்கு செல்லவில்லை. மாறாக குறைவான உண்மையிலிருந்து நிறைவான உண்மைக்கு பயணிக்கிறோம். எனவே நமக்குள் சண்டையிட தேவையில்லை’ என்றார் சுவாமிஜி. சண்டைக்கு காரணம் அறியாமை. அறியாமை ஒரு நோய். அந்த நோய்க்குத் தீர்வு நல்லிணக்கம். ஒவ்வோர் உயிரும் தெய்வீகமானதே. அந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே வாழ்வின் நோக்கம். அதற்காக அவர் கூறியவழி செயல்முறை வேதாந்தம்.

‘ஒட்டுமொத்த மனித இனத்தையும் தனது சொந்த ஆன்மாவாகக் கருத வேண்டும். அதைச் செயலில் காட்ட வேண்டுமென்பதே செயல்முறை வேதாந்தம்’ என்று விவேகானந்தர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேதாந்தத்தை செயலில் காட்டுவது எப்படி? பசித்தவனுக்கு கடவுள் உணவு, நோயாளிக்கு மருந்து. அறியாதவனுக்கு அறிவு. எனவே சேவையே அதற்கான வழி என்று சுவாமிஜி கூறுகிறார்.

கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளைநோய் பரவி மக்கள் மடிந்தபோது சுவாமிஜி தன் சக துறவிகளையும் சீடர்களையும் மக்கள் சேவையில் ஈடுபடுத்தினார். அதற்குத் தேவையான பணம் பற்றிக் கேட்டபோது, அப்போது பேலூரில் மடம் கட்டுவதற்காக நிதி சேகரிக்கப்பட்டு வந்தது, மடம் கட்ட வைத்துள்ள நிதியை எடுத்துச் செலவிடுவோம் என்று சுவாமிஜி கூறினார்.

‘ஒரு நாய்க்கு உணவிடுவதற்காக நான் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுமானால் பலமுறை பிறப்பெடுக்கவே விரும்புகிறேன்’ என்று அவர் கூறியது வீறாப்பு அல்ல. அவரது உள்ளார்ந்த உணர்வின் வெளிப்பாடு.

அமெரிக்கா சென்றது ஏன் என்று கேட்டதற்கு,  இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி திரட்டத் தான் என்று ஒருமுறை சுவாமிஜி கூறியுள்ளார்.

ஏழைகளுக்கு வேதாந்தம் தேவையில்லை; உணவு தான் முதல் தேவை என்றார். ஆரோக்கியம் தான் தேவை என்பதை வலியுறுத்தினார். கால் பந்தாட்டத்தின் மூலம் கீதையை சீக்கிரம் கற்றுகொள்ள முடியும் என்றார்.

அவனவன் கர்மபலன்- கஷ்டப்படுகிறான் என்பதை மறுத்து, ஏழைகளை, தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கு முன்னுரிமை அளித்தவர் புரட்சித் துறவி விவேகானந்தர். இன்று நாடு முழுவதும் நடந்துவரும் சேவைப் பணிகள் சுவாமிஜியின் கருத்தைச் செயல்படுத்துபவையே.

அடுத்ததாக அதற்குத் தேவையான கல்வியறிவு. ‘மனிதனுக்குள் உள்ள முழுமையான தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கே கல்வி. தகவல்களை திணிப்பதல்ல கல்வி’ என்று சுவாமிஜி கூறினார். அவ்வாறு வெளிப்படுத்துவதற்கு உள்ள தடைகளை நீக்குவதே ஆசிரியரின் பணி என்று அவர் கூறுவார்.

திருநின்றவூர் கே.ரவிகுமார்

ஐ.நா. சபையின் கல்வி மன்றமும் இப்போது சுவாமி விவேகானந்தர் கூறிய கல்விக் கொள்கையே மிகச் சரியானது என்று ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப தனது கொள்கையை மாற்றி அமைத்தும் உள்ளது. அது மட்டுமன்றி முற்றிலும் மாறுபட்ட, சரியான கல்விக் கொள்கையை அளித்ததற்காக சுவாமி விவேகானந்தரை ஏற்றுப் போற்றும் விதமாக ராமகிருஷ்ண மிஷனுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளது. உலகம் சுவாமி விவேகானந்தரின் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம் இது.

அதே போல் ஆன்மிகப் பயிற்சி. மக்கள் சேவை ஆன்மிகப் பயிற்சி தான் என்றாலும் ஒவ்வொரு தனிநபரும் தனிப்பட்ட ஆன்மிகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்; தியானம் செய்ய வேண்டுமென சுவாமிஜி வற்புறுத்தியுள்ளார். பிறவியிலேயே தியானம் கைவரப்பெற்ற சுவாமிஜி கடைசியாக கூறிய வார்த்தையும் ‘தியானம் செய்’ என்பது தான். இந்தியா தனது அறிவுச் செல்வங்களை இழந்துவிட்டாலும் அவற்றை தியானத்தின் மூலம் மீண்டெடுக்க முடியும். எனவே தியானமும் யோகமும் அவசியம்.

இன்று அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கும் யோகா மற்றும் தியான பயிற்சிப் பள்ளிகள் நல்ல வரவேற்பு பெற்று வருவதை நாம் பார்க்கிறோம். இந்தியாவிலும் இப்போது அதற்கு மவுசு கூடியுள்ளது.

சுவாமிஜியின் தெய்வீகப் பிறப்பும், அவர் நாட்டிற்கும் உலக மக்களுக்கும் அளித்த புதிய சிந்தனைகளும் காட்டிய புதிய பாதையும், அதன் விளைவாக இந்திய சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றமும் ஏற்றமும் உலக சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமும் அவரை ஒரு நவீன குருவாகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

வாழ்க ஆச்சார்யர் நரேந்திரர்!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s