-மகாகவி பாரதி
மதுரையிலிருந்து வெளியான ‘விவேகபாநு’ இதழில் 1904-இல் வெளிவந்த மகாகவி பாரதியின் ஆரம்பகாலக் கவிதை இது.

குயிலனாய்! நின்னொடு குலவியின் கலவி
பயில்வதிற் கழித்த பன்னாள் நினைந்து பின்
இன்றெனக் கிடையே எண்ணில் யோசனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைத்தால்
பாவியென் நெஞ்சம் பகீரெனல் அரிதோ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள்! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயலை யென் இயம்புவல் சிவனே!
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?
மதுரை ‘விவேகபாநு’ ஜூலை இதழ் - 1904-ம் வருடம். ஆதாரம்: சித்திர பாரதி
$$$