டி.ஆர்.சிவராம், நிர்வாக இயக்குநர், கிளாஸிக் போலோ
நேர்காணல்: வ.மு.முரளி
கிளாஸிக் போலோ - இந்திய ஜவுளித் துறையின் முக்கியமான பிராண்ட்களில் ஒன்று. 12 நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்நிறுவனத்தின் ஆயத்த ஆடைகள், இந்தியாவின் வர்த்தக அடையாளமாக பெருமிதம் அளிக்கின்றன. திருப்பூரில் செயல்படும் ராயல் கிளாஸிக் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பல பிராண்ட்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.சிவராம். தனது நிறுவனம் வளர்ந்த கதையையும், தங்கள் சமூகப் பங்களிப்புகளையும் இங்கே நம்மிடம் விவரிக்கிறார்…

எங்கள் அப்பா ராசப்பன், திருப்பூர், கருவம்பாளையத்தில் வேஸ்ட் காட்டன் மில் நடத்தி வந்தார். நாங்கள் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. விதிவசமாக 1984இல் எங்கள் தந்தையார் திடீரென காலமானார். அவரது மரணத்தால் நாங்கள் நிர்கதியானோம். அப்போது எனது மூத்த அண்ணண் கோபாலகிருஷ்ணன் டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் டிப்ளமோ முடித்துவிட்டு பி.காம். படித்துக் கொண்டிருந்தார். இரண்டாவது அண்ணன் மின்னியலில் டிப்ளமோ படித்து விட்டு சென்னையில் ஏ.எம்.ஐ.இ. படித்துக் கொண்டிருந்தார். நான் 9ஆம் வகுப்பும், தங்கை ஆறாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம்.
குடும்பத்தின் தவிப்பான சூழலால், அண்ணன்கள் இருவரும் படிப்பை நிறுத்திவிட்டு திருப்பூர் திரும்பினார்கள். அவர்கள் தந்தையின் மில்லை நடத்த முயன்றார்கள். 3 ஆண்டுகள் போராடியும் மில்லை லாபகரமாக நடத்த முடியவில்லை. பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மில்லை 1987இல் விற்றுவிட்டோம். அண்ணன்கள் இருவரும் உறவினர் ஒருவரின் நிறுவனத்தில் ‘கஷ்டக்கூட்டு’ (ஒர்க்கிங் பார்ட்னர்) ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்ந்தார்கள். நான் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் சிவில் என்ஜினீயரிங்கில் டிப்ளோமா படித்து வந்தேன். 1989இல் நானும் படிப்பு முடித்து அண்ணன்கள் வேலை செய்த நிறுவனத்திலேயே சேர்ந்தேன்.
1991ஆம் ஆண்டு, நாங்கள் மூவரும் வேலையிலிருந்து விலகி, ராயல் கிளாஸிக் மில்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போதைய எங்கள் மொத்த முதலீடு ரூ. 5 லட்சம் மட்டுமே. அந்தப் பணமும் கூட எங்களிடம் இல்லை. நாங்கள் ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தின் முதலாளியே முதல் பணி ஆணையையும் வழங்கி முதலீட்டில் 50 சதவீதமும் வழங்கினார். அது மட்டுமல்ல, எங்கள் குடும்பத்தை நன்கு அறிந்த ஒருவர் 5 லாரி லோடு நூலை அளித்து எங்கள் புதிய தொழில் தொடங்க ஊக்கமளித்தார். இப்படித்தான் எங்கள் புதிய தொழில் பயணம் தொடங்கியது.

நாங்கள் ஆரம்பத்தில் வங்கதேசத்துக்கு நிட்டிங் துணிகளை ஏறுமதி செய்து வந்தோம். 1993 முதல் 1997 வரை தினசரி ஒரு லோடு துணியை ஏற்றுமதி செய்து வந்தோம். அந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதியாளர்களுக்கு பல சலுகைகள் கிடைத்து வந்தன. எனவே லாபம் 25 சதவீதம் வரை கிடைத்து வந்தது. போட்டியும் குறைவு. வேலைக்கும் ஆட்கள் போதிய அளவு கிடைத்தனர். வேலையாட்கள் எவரும் பணி ஆணை முடித்து சரக்கை அனுப்பும் வரை மில்லை விட்டு வெளியே போக மாட்டார்கள். அந்த அளவிற்கு தொழில் பிடிப்பும் குடும்ப உறவும் இருந்தன. 50 பேர் வேலை செய்தாலே அன்று பெரிய கம்பெனியாகக் கருதப்படும்! நாங்கள் அனுப்பிய துணியின் தரத்தால் வங்கதேச நிறுவனம் ஆயத்த ஆடைகளைத் தயாரித்து நல்ல லாபம் ஈட்டி வந்தது. நாங்களும் மனநிறைவுடன் தொழில் செய்து நல்ல லாபம் ஈட்டி வந்தோம்.
ஒய்2கே என்ற சவாலான சூழல் உலக வர்த்தகத்தில் 2000 ஆண்டுகளில் எட்டிப் பார்த்தது. அதாவது, ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளே அவற்றுக்கான துணியையும் தயாரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தது. தவிர, ஒவ்வொரு நாடும் இத்தனை சதவீதம் ஏற்றுமதி செய்யலாம் என்ற கோட்டா முறையும் ரத்தானது. இதனையெல்லாம் 1997லேயே நாங்கள் முன்கூட்டியே யூகித்தோம். ஏனெனில், நாங்கள் வர்த்தகம் செய்த வங்கதேச நிறுவனம் ஆயத்த ஆடைகளை ஜெர்மனி பையருக்கு (வாங்குபவர்) அனுப்பி வந்தாலும், எங்களுக்கு ஜெர்மனி நிறுவனத்துடன் முக்கோணத் தொடர்பு இருந்தது. அவர்கள் வரப்போகும் ஆபத்து குறித்து எங்களை எச்சரித்திருந்தார்கள்.
அதாவது 2000 ஆண்டுக்குப் பிறகு வெறும் நிட்டிங் துணியை ஏற்றுமதி செய்ய முடியாது. ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு கோட்டாவும் (உறுதியான ஆர்டர்கள்) கிடையாது என்பதை உணர்ந்தோம். அதற்கு எங்களைத் தயார்படுத்திக் கொள்ள 1997இல் நாங்களே ஆயத்த ஆடைகளைத் தயாரிப்பது என்று முடிவு செய்தோம். அதற்கு முன்னரே 1991லேயே ஆடைத் தயாரிப்பு யூனிட்டை நாங்கள் தொடங்கி இருந்தாலும் 30 சதவீதம் அளவுக்கு மட்டுமே அங்கு பணிகள் இருந்தன. 70 சதவீதம் துணி ஏற்றுமதி தான் செய்து வந்தோம். இனிமேல் 100 சதவீதம் ஆயத்த ஆடைகளைத் தான் ஏற்றுமதி செய்தாக வேண்டும். ஏற்கனவே தொடர்பில் இருந்த ஜெர்மனி பையருக்கே ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தோம்.
கலாமே எங்கள் முன்மாதிரி
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எங்களுக்கு முன்மாதிரி மட்டுமல்ல, அவரே எங்கள் வழிகாட்டி. அவர் எங்கள் மானசீக குரு. தன்னை முன்னிலைப் படுத்தாமல், பிறரை ஊக்குவிக்கும் தலைமைப் பண்பை அவரிடம் தான் கற்றோம். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரைப் பற்றிய 45 நிமிடங்கள் ஓடக் கூடிய ‘A LITTILE DREAM’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து அவரிடம் வழங்கியதை மறக்க முடியாது.
அவர் எங்கள் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். குடும்ப நலம்- தொழில் நலம்- சமுதாயப் பணி என்ற எங்கள் முக்கூட்டுப் பணிகளில் கலாம் அவர்களின் தாக்கம் மிகுதியாகவே உண்டு. 2015இல் அவரது திடீர் மறைவு எங்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,. அவருக்கு உண்மையான அஞ்சலியாகவே ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தை அவர் இறந்த சில நாட்களில் தொடங்கினோம்.

அப்போதெல்லாம், உலக நாடுகளில் ஏற்றுமதி ஆணைகளைப் பெற சாம்பிள்களுடன் ஒவ்வொரு நாடாகச் சென்று பையர்களைச் சந்தித்து வந்தோம். ஆனால், 2001இல் நிலைமை மாறியது. கோட்டா ரத்திற்குப் பிறகு, வெளிநாட்டு பையர்கள் இந்தியாவை நாடி வர ஆரம்பித்தனர். அவர்கள் இந்தியாவை வளரும் பொருளாதாரச் சக்தியாகவும் உற்பத்தி தேசமாகவும் கண்டுகொண்டனர். இதனையும் ஒரு வாய்ப்பாகக் கருதினோம். இனிமேல் ஏற்றுமதிக்கு பிறநாட்டு பையர்களைச் சார்ந்திருப்பதை விட, அவர்கள் கூறும் பிராண்ட்களின் பெயரில் ஆடைகளைத் தயாரித்து அளிப்பதை விட, நாமே சொந்தமாக ஒரு பிராண்ட் உருவாக்கினால் நல்லது என்று எண்ணினோம். 2001-இல் ‘கிளாஸிக் போலோ’ பிராண்ட் உருவானது.
2003இல் இந்த பிராண்டிற்கு எதிராக அமெரிக்க நிறுவனத்தால் தொழில் தாவா வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2003 முதல் 2016 வரை போராடி அந்த வழக்கில் வென்றோம். இடைப்பட்ட காலத்தில் தரமே எங்கள் தாரக மந்திரமாக இருந்ததால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல பெயரைப் பெற்றுவிட்டோம். உலக நாடுகளுடன் எப்படி போட்டியிடுவது என்ற நுணுக்கத்தையும் தெரிந்துகொண்டோம். எங்கள் பிராண்ட் லோகோவில் பொறித்துள்ள அடிக்குறிப்பு ‘பாரதத்தின் வளர்ச்சி எனது நம்பிக்கை’ என்பது தான்.
இடுவம்பாளையம் அரசு பள்ளியில் சாதனை!
எங்கள் தொழிற்சாலையின் அருகில் உள்ள இடுவம்பாளையம் அரசுப் பள்ளியில் 600 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மரத்தடியில் அமர்ந்து கற்பதைப் பார்த்தோம். அவர்களுக்கு நிலையான கட்டட வசதி செய்துகொடுக்கத் திட்டமிட்டோம். சென்னை சில்க்ஸ் நிறுவனம் அதற்காக 8 ஏக்கர் நிலத்தை வாங்கித் தந்தது. அங்கு ரூ. 2 கோடி செலவில் கட்டடங்களையும் வகுப்புகளையும் அமைத்துத் தந்தோம். 2009இல் அதனை அரசிடம் ஒப்படைத்தோம்.
தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளை இப்பள்ளியில் ஏற்படுத்தினோம். தற்போது இப்பள்ளியில் 3500 மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகியாக நான் இருக்கிறேன். மாதந்தோறும் இப்பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ ஒரு லட்சம் வரை செலவிட்டு வருகிறேன்.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளித்து வருகிறோம். இந்த ஆண்டு இப்பள்ளி மாணவர்கள் 10 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இது எங்களுக்கு பேருவகை அளிக்கிறது.
2001 முதல் 2026 வரையிலான இந்த 25 ஆண்டுகளில் உள்ளூர் வணிகம், ஏற்றுமதி மட்டுமல்லாது, தனிப்பட்ட விற்பனை அரங்குகளையும் அமைத்திருக்கிறோம். இன்று தென்னிந்தியா முழுவதும் 100 கிளாஸிக் போலோ விற்பனை அரங்குகள் உள்ளன. தவிர நாடு முழுவதும் 2,500 ஜவுளி விற்பனையகங்களில் எங்கள் பிராண்ட்கள் விற்கப்படுகின்றன. CP BRO, CP BRO BOYS, Swiss Club ஆகிய பிராண்ட்களையும் உருவாக்கி உள்ளோம். போலோ ஷர்ட்கள், டி-ஷர்ட்கள், வழக்கமான சட்டைகள், டிரவுசர்கள், டெனிம் ஜீன்ஸ், ஜாக்கெட்கள், ஸ்வெட்டர்கள், டிராக் பேன்ட்கள் உள்ளிட்ட பலவகையான ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
வெறும் 5 லட்சத்தில் தொடங்கிய எங்கள் தொழில் பயணம் தற்போது சுமார் ஆயிரம் கோடி விற்றுமுதலை எட்டி இருக்கிறது. இதற்கு எங்களிடம் பணியாற்றிய ஊழியர்களும், எங்களை நம்பி ஆடைகளை வாங்கும் வாடிக்கையாளர்களும் தான் காரணம். இப்போது எங்கள் நிறுவனங்களில் 6,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தவிர மறைமுகமாக சுமார் 6,000 பேர் வேலை பெறுகின்றனர். எங்கள் நிறுவனத்துக்கு 12 இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.
எங்கள் நிறுவனத்தின் தலைவராக மூத்த அண்ணன் கோபாலகிருஷ்ணன் உள்ளார். சின்ன அண்ணன் அண்மையில் இறந்துவிட்டார். நான் நிர்வாக இயக்குநராக இருக்கிறேன். எங்கள் வாரிசுகளும் (சுகேஷ், நிதின்) நிர்வாகத்தின் பொறுப்புகளைச் சுமக்கத் தயாராகி வருகிறார்கள். தரமும் நேர்மையும் தான் எங்கள் அடையாளங்கள். அதுவே எங்களை இந்த அளவிற்கு வளர்த்திருக்கிறது.
ஒவ்வொரு காலத்திலும் தொழிலில் சில சிக்கல்கள், சவால்கள் எழுவது இயற்கையே. ஆனால் நாங்கள் அவற்றை வாய்ப்பாகக் கருதி, விளையாட்டாக அவற்றைக் கடந்து செல்வதால் பெரிய சிரமங்கள் இல்லை.
எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் பல மைல் கற்கள் உண்டு. 1984இல் குடும்பமே வறுமையால் சூழ்ந்திருந்தது. மூன்று வேளை சாப்பிடவே போராடும் சூழல். ஆனால் நம்பிக்கையுடன் நாங்கள் அதைக் கடந்தோம். 1997-98இல் எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தனி வீடு, வாகனங்கள் என்ற தனிமனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். 2000 ஆண்டுக்குப் பிறகு நாங்கள் கேட்டதற்கு மேலாகவே இறைவன் கொடுக்கத் தொடங்கிவிட்டான். எனவே, நம்மை வாழவைக்கும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சகோதரர்கள் மூவருமே நினைத்தோம்.


2000 ஆண்டு முதல் சமூகப் பணிகளில் நாங்கள் கவனம் செலுத்தத் தொடங்கினோம். குறிப்பாக கல்வி, இயற்கை பாதுகாப்பு துறைகளில் எங்கள் பணிகள் இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் ரூ. ஒரு கோடி அளவிற்கு இத்துறைகளில் செலவிடுவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறோம்.
2000இல் கருவம்பாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தொடங்கி மரங்களை நடவு செய்தோம். அதுவே எங்கள் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பயணத்தின் தொடக்கப் புள்ளி. அதையடுத்து ஆண்டிபாளையம் பசுமை மேம்பாட்டு அறக்கட்டளையாக அது பெயர் மாற்றம் பெற்றது. அதன் பிறகு திருப்பூர்- மங்கலம் சாலையில் மரங்களை நட்டோம். அதன் பயனை இப்போது நீங்கள் இச்சாலையில் பயணித்தால் உணரலாம்.
பிரகு ஒத்த சிந்தனையுள்ள தொழிலதிபர்களுடன் இணைந்து வெற்றி அறக்கட்டளை அமைப்பை உருவாக்கினோம். அதன்மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்விப் பணிகளைச் செய்து வருகிறோம். இதற்காக அனைவரும் சேர்ந்து ரூ. 2.5 கோடி வரை செலவு செய்கிறோம்.
2004ஆம் ஆண்டு மாநில அரசின் அனுமதி பெற்று, தூர்ந்துபோன மங்கலம் அணைக்கட்டை மறுகட்டுமானம் செய்தோம். 60 ஏக்கர் பரப்பளவுள்ள ஆண்டிபாளையம் குளத்தை 2005இல் தூர் வாரினோம்., அதற்கு நொய்யலிலிருந்து தண்ணீர் வரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்டு, 5 கிமீ,. தொலைவுக்கு வாய்க்கால் அமைத்தோம். அதன் பயயனாக, 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு 21 ஆண்டுகள் கழித்து 2005இல் அந்தக் குளத்திற்கு தண்ணீர் வந்தது. இக்குளம் நிறைந்திருப்பதால் 5 கி.மீ. சுற்றளவில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. இங்கு வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன.
நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். எங்கள் இயற்கைப் பாதுகாப்பு ஆர்வத்தின் உச்சமாக ‘வனத்துக்குள் திருப்பூர்’ இயக்கத்தைச் சொல்லலாம். வெற்றி அறக்கட்டளை மூலமாக நடத்தப்படும் வனத்துக்குள் திருப்பூர் திட்டம், தொழில் நகரமான திருப்பூரை பசுமை நகரமாக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுகிறது. 2015இல் தொடங்கி இந்த 12 ஆண்டுகளில் 28 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். மரத்தை நடுவதுடன் நாங்கள் நின்று விடுவதில்லை. அவை வளரும் வரை அவற்றுக்கு நீர் ஊற்றுவது, பாதுகாப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்கிறோம். மாதிரித் தோட்டங்களை அமைத்தல், மழைநீர் சேகரிப்பு, வறண்ட ஆழ்துளைக் கிண்றுகளை நீரேற்றம் செய்வது, கழிவுநீர் சுத்திகரித்து மறு சுழற்சிப் பயன்பாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.
நாம் ஒவ்வொருவரும் குடும்பம் தொழில், சமுதாயம் ஆகிய மூன்றிலும் கவனம் கொடுப்பது அவசியம். இறைவன் அருளால் எங்களால் மூன்று அம்சங்களிலும் திருப்தியாகப் பணியாற்ற முடிகிறது. அருள்மிகு விஸ்வேஸ்வரர்- வீரராகவப் பெருமாள் கோயில்களின் திருப்பணிக் குழுவில் இடம்பெற்று கும்பாபிஷேகத்தை நடத்தினோம். இதுவெல்லாம் இறைவன் கொடுத்த வரமென்றே நினைக்கிறேன்.
நாங்கள் மூன்று தலைமுறையைப் பார்த்திருக்கிறோம். அடுத்த தலைமுறையிடம் மனிதநேயம் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது. பணம் மட்டுமே பிரதானம் அல்ல. முதலாளிகள் – தொழிலாளிகள் இருவரிடமுமே விசுவாசம் குறைந்து வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும். தொழில் வளர வேண்டுமானால் நல்ல மனிதர்கள் வேண்டும். தொழில் உறவு, குடும்ப உறவாக இருக்க வேண்டும். தொழிலில் நாம் ஈட்டும் பொருளை சமுதாயத்திற்குப் பயன்படுத்துவதை நமது கடமையாகக் கொள்ள வேண்டும். இதுவே எனது ஆலோசனை.
- நன்றி: விஜயபாரதம் – தீபாவளி மலர்- 2026
$$$