-கவிஞர் குழலேந்தி

யாரும் செல்லா இடங்களுக்கு
புதுவழி காண்பது புரட்சி.
அதற்கு தன்னையே
ஈந்தவர்களால் ஆனது
இந்த ஒற்றையடிப்பாதை…
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையென
கடந்துபோனவர்கள் உருவாக்கியது
இந்த ஒற்றையடிப்பாதை….
தடைகளைத் தாண்டி,
வளைந்து நெளிந்து,
சூழலுக்கு இசைந்து,
பல காயங்கள் அடைந்து,
நடந்து போனவர்கள் அமைத்தது
இந்த ஒற்றையடிப்பாதை….
இந்த ஒற்றையடிப்பாதைகளில்
சிந்திய ரத்தம்
மண்ணில் உயிர்த்துளியாய்
தவமிருக்கும்-
புதுவழி காணும்
புதியவர்களுக்காக.
நாம் வாகனங்களில் விரையும்
ராஜசேகரப் பெருவழியும்
தங்க நாற்கரச் சாலையும்
தேசிய நெடுஞ்சாலையும்
இணைப்புச் சாலைகளும்
வண்டிப்பாதைகளும்
ஒருகாலத்தில்
ஒற்றையடிப்பாதையாக
இருந்தவை தான்.
ஒளியும் புகாக் காடுகளில்
புதியவர்கள் நுழைந்து
அமைத்த ஒற்றையடிப்பாதைகளே
சுற்றுலாத் தலங்கள் ஆகின.
வறண்ட பாலையிலும்
பனிமுகடுகளிலும்
பசுமைக்காடுகளிலும்
ஆற்றங்கரைகளிலும்
இருண்ட பள்ளத்தாக்குகளிலும்
அவர்களின் பாதப் பதிவுகளை
முயன்றால்
உங்களால் காண முடியும்.
அதற்கு நீங்கள்
தயாராக வேண்டும்.
தளரா ஊக்கத்துடன்…
தணியாத வேட்கையுடன்…
தணலான தாகத்துடன்…
தனியே பயணிக்க வேண்டும்.
அதற்கு நீங்கள் தயாரா?
$$$