-சேக்கிழான்

(புதியபார்வையில் புதிய ஆத்திசூடி)
1. தமிழ்த்தாயும் தமிழ்மகளும்…
தமிழகத்தின் தவப்புதல்வரான பாரதி, தமிழ் இலக்கியங்களில் கற்றுத் தோய்ந்தவர். பலமொழிகளை அறிந்திருந்த அவர் தமிழின் சிறப்பில் தன்னை மறந்தவர். அதனால் தான்
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’
-என்று அவரால் பாட முடிந்தது. அதுமட்டுமல்ல,
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை’
-என்றும் பாடி மகிழ்ந்தார் பாரதி. ஒரு பொருளைப் பாராட்ட வேண்டுமானால், பல பொருள்களை அவர் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவரால் அதனை திறமையாக ஒப்பிட முடியும் என்பதை அறிந்தவர்களுக்கு, பாரதியின் விசாலமான ஞானம் புலப்படும். தாய்மொழி மட்டுமல்லாது, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் ஆகிய மொழிகளையும் அறிந்திருந்தவர் பாரதி. ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியிடத்தும், சமஸ்கிருதக் கவிஞன் காளிதாசனிடத்தும் தனது மனதைப் பறிகொடுத்தவர் அவர். தனது பெயரையே ஷெல்லிதாசன் என்றும் காளிதாசன் என்றும் வைத்துக் கொண்டவர் அவர். அதனால்தான், தான் அறிந்த புலவர்களில் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ அடிகள் போல இப்புவியில் வேறு யாரும் இல்லை என்று பெருமிதமாகப் பாட அவரால் இயன்றது.
மகாபாரத இதிகாசம் மீது மிகுந்த காதலுற்றவர் பாரதி. அதனால்தான், ‘பாஞ்சாலி சபதம்’ என்ற தனிக் காவியத்தை அவர் பாடினார். அதுபோலவே, ஔவையின் பாடல்களிலும் தன்னைப் பறிகொடுத்தவர் அவர்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம்! நீதிநெறியில் நின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்!
என்று அவர் பாடுகையில், தமிழ்மகள் என்று ஔவையைக் குறிப்பிடுகையில் (பாரத தேசம்), அவரது இலக்கிய ஞானம் நம்மை வியக்க வைக்கிறது.
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
-என்பது ஔவையின் ‘நல்வழி’ பாடல் (2). இதையே வேறு வரிகளில் பாடும் பாரதியின் திறன் மகிழத் தக்கது.
இதனையே பாரதி, ‘பாப்பாப் பாட்டு’ பாடலில்,
‘சாதிகள் இல்லையடி பாப்பா- குலத் தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி, உயர்ந்த மதி, கல்வி- அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்’
-என்று சொல்லிச் செல்கிறார். அதாவது ஔவையை ஆழ்ந்து கற்றிருந்தாலும், அவரது கருத்தை காலத்துக்கு ஏற்றவகையில் இளம் பருவத்தினருக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் இதில் புலப்படுகிறது.
மழலைப் பருவத்தில் மனதில் விதைக்கும் நற் கருத்துகளே விருட்சமாக வளர்ந்து பின்னாளில் அவர்களை வழிநடத்தும் என்று நமது முன்னோர் அறிந்திருந்தனர். அதனால்தான் முதல் வகுப்பில் ‘ஆத்திசூடி, நல்வழி, மூதுரை, கொன்றைவேந்தன், உலகநீதி’ போன்ற நீதிநூல்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றை சிறுவயதில் கற்று வளர்ந்தவர் மகாகவி பாரதி.
எனினும், அந்த நீதிநூல்களிலும் காலத்துக்கேற்ற மாற்றம் செய்ய வேண்டுமென்ற அவரது சிந்தனை புதிய வடிவம் எடுக்கிறது. அப்படித்தான் ஔவையின் ஆத்திசூடிக்கு இணையாக ‘புதிய ஆத்திசூடி’ என்ற புதிய இலக்கியத்தைப் படைக்க முனைகிறார் பாரதி.
இந்த புதிய ஆத்திசூடியில் ஔவையின் கருத்துகளுடன் சுமார் 90 சதவீதம் ஒத்துப்போகும் பாரதி, சுமார் 10 சதவீதம் கருத்துகளை காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்றவாறு மாற்றுகிறார்.
ஔவையின் காலம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது ஆய்வாளர்தம் கருத்து. தமிழில் பிற்கால நீதிநூல்கள் எழுந்த காலகட்டம் அது. சங்ககால ஔவையார் வேறு; நீதிநூல்கள் பாடிய ஔவையார் வேறு என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. அந்தக்கால நடைமுறைகளுக்கு ஏற்ப ஔவையார் எழுதிய ‘ஆத்திசூடி’யை, தனது காலத்துக்கு (1910) ஏற்ற வகையில், சுதந்திரப் போராட்டக் களத்துக்கு உகந்த வகையில் ’புதிய ஆத்திசூடி’யாக மாற்றி எழுதி இருக்கிறார் பாரதி.
உதாரணமாக, ‘ஆறுவது சினம் என்று ஔவை (ஆத்திசூடி- 2) அறிவுறுத்துகையில், ‘ரௌத்திரம் பழகு’ என்று பாரதி (புதிய ஆத்திசூடி- 96) ஆணையிடுகிறார். இருவரின் உபதேசங்களும் மனித நலனுக்கானவையே. என்றபோதும், காலத்துக்கேற்ற வகையில் நம்மைத் தகவமைத்துக் கொள்வதன் அவசியம் பாரதியிடம் வெளிப்படுகிறது.
சட்டமும் நீதியும் காலத்துக்குத் தகுந்தாற்போல மாறுதல் கொள்பவை. எனவேதான் அவை தொடர்பான இலக்கியங்கள் ‘ஸ்மிருதி’ எனப்படுகின்றன. ‘பராசர ஸ்மிருதி, மனு ஸ்மிருதி’ போன்றவை இதற்கு உதாரணங்கள். காலத்தில் மாறாதது தர்மம். இதை பண்பாடு என்றும் சொல்லலாம். தர்மம் வளர்க்கும் இலக்கியங்கள் ‘ஸ்ருதி’ எனப்படுகின்றன. வேதங்களும், உபநிடதங்களும், இதிகாசங்களும் இவ்வகையைச் சார்ந்தவை.
ஆத்திசூடி ஒரு ஸ்மிருதி நூல். அதனை தனது காலத்தில் வாழும் மக்களுக்காக மாற்றி எழுத வேண்டும் என்று தீர்க்கதரிசனப் புலவர் பாரதி விரும்பியதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்த்தாய் மீது மிகுந்த பற்றும், தமிழ்மகள் ஔவை மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்த மகாகவி பாரதியின் ’புதிய ஆத்திசூடி’ அவ்வகையில் ஒரு பெரும் ஆதர்ஷ இலக்கியமாக நம்முன் உள்ளது.
ஔவையார் 109 வரிகளில் பாடிய ஆத்திசூடியை, 110 வரிகளுடன் புதிய ஆத்திசூடியாகப் பாடுகிறார் பாரதி.
‘ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே’
-என, ஆத்தி மாலை அணிந்த தேவன் சிவனை வணங்கி தனது நீதிநூலைத் துவக்குகிறார் ஔவை. ஏனெனில் தமிழரின் அக்காலத் தெய்வம் சிவன் மட்டுமே.
பாரதியோ, சிவன், மாலவன், அல்லா, யேசு என இக்காலத்திற்கேற்றவாறு பல சமயத் தெய்வங்களை முன்னிறுத்தி, பரம்பொருளை வாழ்த்தி தனது புதிய நூலைத் துவக்குகிறார். எனினும்,
‘ஆத்திசூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்…’
என்று ஆத்திசூடி என்ற சொல்லிலேயே தனது நூலைத் துவங்குகிறார். இதுவே வாழையடி வாழையென வந்துதித்த மரபு. சுமார் மூவாயிரம் ஆண்டுக் காலப் பாரம்பரியம் கொண்ட தமிழ் இலக்கியங்கள் எங்கனும் இத்தகைய சிந்தனை ஒருமைப்பாட்டைக் காணலாம்.
இனிவரும் அத்தியாயங்களில், மகாகவி பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’யை புதிய பார்வையில் நாம் தரிசிக்கலாம்.
$$$
குறிப்பு:

எழுத்தாளர் திரு. சேக்கிழான் எழுதிய ‘வையத் தலைமை கொள்! (புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி)’ என்ற நூல், விஜயபாரதம் பிரசுரம் வாயிலாக, 2019ஆம் ஆண்டு, மகாகவி பாரதி பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.
வண்ண அட்டை+ 32 பக்கங்கள்; விலை: ரூ. 25.
தொடர்புக்கு: 044 & 2642 0870
புதிய ஆத்திசூடியை ஒரு புதிய கோணத்தில் அணுகுகிறது இந்நூல். ‘புதியன விரும்பு’ என்ற பாரதியின் கண்ணோட்டத்திலேயே இந்நூல் அமைந்திருக்கிறது. இந்த நூலின் 7 அத்தியாயங்கள் இங்கு தொடராக வெளியிடப்படுகின்றன.
$$$