துளஸீ பாயி என்ற ரஜ புத்ர கன்னிகையின் சரித்திரம்

-மகாகவி பாரதி

அறிமுகம்: 

மகாகவி பாரதி எழுதிய முதல் குறுங்கதை இது. ‘ஷெல்லிதாஸ்’ என்ற புனைபெயரில் இச் சிறுகதையை பாரதி,  மகளிருக்காக தாம் நடத்திய ‘சக்கரவர்த்தினி’ என்னும் மாத இதழில் எழுதினார்.

சக்ரவர்த்தினியில் 1905 நவம்பர் மாதம் இந்தக் கதையைத் தொடங்கியபோது அவர் இரு இதழ்களிலேயே முடிக்கக் கருதினார் என்பதை 'அடுத்த முறையில் இச் சிறுகதை முடிவு செய்யப்படும்' என்ற குறிப்புடன் முதல் அத்தியாயத்தின் இறுதியிலே எழுதி இருப்பதிலிருந்து உணர்கிறோம். இச் சிறுகதையின் தலைப்பைப் பின்னிட்டு வந்த இதழ்களில்  ‘துளஸீபாயி சரித்திரம்’ என்றே பாரதி சுருக்கித் தந்து விட்டார்.

இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகவும், உடன்கட்டை ஏறும் வழக்கம் அவசியமற்றது என்பதை உணர்த்துடன் காதலின் பெருமையைச் சுட்டிக்காட்டவும், பாரதி பிரசார நோக்கத்துடன் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். அவரது காலத்தில், இஸ்லாமியர்களின் தன்னிச்சையான சுபாவம் காங்கிரஸ் தலைவர்களுக்குப் பிடிக்காத போதும், எவ்வாறேனும் அவர்களையும் விடுதலைப் போராட்டத்தில் ஹிந்துக்களுடன் இணைத்துவிட வேண்டும் என்று பலரும் விரும்பினர். தீவிர தேசபக்தரான பாரதியும் அதனையே இக்கதை மூலமாகச் செய்திருக்கிறார்.

ஹிந்து சமயத்தில் மிகுந்த நாட்டமும், தேர்ச்சியும் உடைய மகாகவி பாரதியின் பாரம்பரியச் சிந்தனை, இக்கதை எழுதுவதைத் தடுக்கவில்லை. ஏனெனில், மகாகவி பாரதி- காளிதாசன் மட்டுமல்ல, ஷெல்லிதாசனும் கூட.

காதலுக்கு முன்பு அனைத்து பேதங்களும் காணாது போய்விடும் என்ற யதார்த்த உண்மையை  “காதல் குலப் பகைமையை அறிய மாட்டாது, காதல் மத விரோதங்களை அறிய மாட்டாது. காதல் ஜாதி பேதத்தை மறந்துவிடும். காம தெய்வத்தின் உபாஸகர்கள் ’அத்வைதி’களே யல்லாமல்  ‘துவைதி’களல்ல” என்ற அற்புதமான வாசகம் மூலமாகப் பதிவு செய்கிறார் மகாகவி பாரதி.

காலத்தை மீறிக் கனவு கண்ட அக்கவிஞன், சமயம் கடந்த சமுதாயம் உருவாக வேண்டுமென்று எண்ணினார். ஹிந்து- முஸ்லிம் இணக்கம் அவற்றுள் ஒன்று. நமது துரதிர்ஷ்டம், அது கனவாகவே இன்றும் தொடர்கிறது. ஏனெனில், இந்த மதப் பிரச்னை இந்தியாவில் மட்டும் இருப்பதல்ல,  உலகு தழுவியது. இன்று பாரதி இருந்திருந்தால் இதே கதையை எப்படி எழுதி இருப்பார்?

$$$

அத்தியாயம் ஒன்று

இந்து தேசத்திற்கு அனேக காலம் தலைநகரமாக இருந்த டில்லி பட்டணத்தில் 300 வருஷங்களுக்கு முன்பாக ஆக்பர் என்ற ஓர் மகமதிய சக்ரவர்த்தி அரசியற்றி வந்தான். வேறு பல துருக்க அரசர்போல இவன் கொடுங்கோன்மையும் மத வைராக்கிய நிஷ்டூரமும் சற்றேனும் இல்லாதவன், தான் மகமது மார்க்கத்தி லிருந்த போதிலும், ஹிந்துக்கள், கிறிஸ்தவர் முதலிய பிற மதஸ்தரை மிகவும் ஆதரித்து வந்தான். அந்தக் காலத்தில் ஹிந்துக்களுள்ளே கணவர்கள் இறந்து போனவுடன் அவர்களோடு மனைவியரையும் சேர்த்தெரிப்பது வழக்கமாக இருந்தது.

அரசு புரிபவர்களாகிய துருக்கர்கள் சாதாரணமாய்க் கொடியோர்களாகவும், காமுகர்களாகவும் இருந்தமையால் கணவர்களில்லாத அநாதைப் பெண்கள் உயிர் துறத்தல் வேண்டு மெனவும், உயிர் துறவாவிடினும் சிர முண்டனம், வெள்ளாடை யுடுத்தல், ஆபரணம் களைதல் முதலிய பல செய்கைகளால் தமது சரீர லாவண்யத்தைப் போக்கடித்துக் கொள்ள வேண்டுமெனவும் நம்மவருள் ஏற்பட்டு விட்டது,

தரும சக்ரவர்த்தியாகிய ஆக்பர் இந்த சக கமனம் (உடன்கட்டை ஏறல்) என்னும் அதி குரூரச் செய்கையை நிறுத்துவதற்கு வேண்டிய முயற்சிகள் செய்தான்.

பெண்களின் சம்மதமில்லாமல் அவர்களை எரிக்க முயலும் பந்து ஜனங்களையும், புரோகிதர்களையும் கொடிய தண்டனைக்குட்படுத்தினான். அதிசுந்தரவதிகளாகிய ரஜபுத்திரிகளோடு சம்பந்தம் செய்துகொள்ளலா மென்றும், அங்ஙனம் சம்பந்தம் செய்துகொள்வது ஹிந்து – மகமதியர்களுக்குள் நேசத்தை யுண்டாக்கி, இராச்சிய சமாதானத்தை விருத்தி செய்யுமாகையால் அவ்வித விவாகங்கள் தனக்குச் சந்தோஷம் விளைக்கு மென்றும் விளம்பரம் செய்தான்.

இந்த ஆக்பர் மன்னன் ஒரு காலத்தில் கூர்ச்சர் நாட்டை எதிர்த்துப் போர் செய்ய நேரிட்டது. அவ்வாறே அந் நாட்டை எதிர்த்து வெற்றி கொள்ளும் சமயத்தில் அவன் சைநியங்களோடு சேரும்பொருட்டு ராஜபுதன் (ரஜபுத்ர ஸ்தான) தேசத்தின் ஓரத்திலுள்ள ஒரு மகமதிய சிற்றரசன் மகனாகிய அப்பஸ்கான் என்பவன் ஓராயிரம் குதிரை வீரருடன் ரோகிணி நதிக்கரை வழியாக கூர்ச்சர் நாட்டிற்குச் சென்று கொண்டிருந்தான்.

அப்போது மேற்றிசை யிரவியின் ஒளியினால் அவரது படைக்கலங்கள் சுவர்ண காந்தி வீசின. அவரது தூள்படாத பொற் சரிகை யாடைகளையும், மலர்ந்த வதனங்களையும், ஆரவாரங்களையும் பார்க்கும்போது அவர்கள் தம் மூரினின்றும் வெளியேறி சிறிது நேரந்தான் கழிந்திருக்கு மென்பது புலப்பட்டது.

அவருட் பலர் அப்போதுதான் முதற் றடவை போர்க்குச் செல்கிறார்கள். அவர்கள் தலைவனாகிய அப்பஸ்கான் வளர்ந்த ஆகிருதி யுடையவனாகவும், அதிரூபவானாகவும் இருந்தான். அவன் முகத்திலோ செளரிய லஷ்மி நடனம் புரிந்தனள்.

இவருடைய படைக்கு 2 மைல் தூரத்துக்கு முன்பாகப் பிறிதொரு சிறுபடை போயிற்று. ஆயின், அஃது இதைப் போன்றதோர் போர்ப் படை யன்று.

ஒரு மூடு பல்லக்கில் ஓர் ரஜபுத்ர கன்னிகையைச் சுமந்து கொண்டு, முன்னும் பின்னுமாகச் சிலர் குதிரைகள் நடாத்திக் கொண்டு போகின்றனர்.

துளஸீபாயி என்ற அந்த ரஜபுத்திரீ ரதத்தை அவர்கள் அவளுக்கு மணஞ் செய்வதாக நிச்சயித்திருந்த ரஜபுத்திரனுடைய ஊருக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே கொண்டுபோய் அவளை மரண பரியந்தம் வெளியேற வொட்டாமல் ஓர் அந்தப்புரத்தில் அடைத்து விடுவார்கள். இப்போது கொண்டுபோகும் பொழுதுகூட, அவள் பல்லக்கினின்றும் வெளியே பார்க்கவேனும், சூழவுமிருக்கின்ற வனத்தின் அழகை அனுபவிக்கவேனும், திரைக்கு வெளியே யுள்ள சுத்த ஆகாயத்தை சுவாசிக்கவேனும் கூடாது.

இவ்வாறு இவள் சிவிகை யூர்ந்து செல்லும்போது, சூரியன் அஸ்தமித்து விட்டான். ரோகிணி நதிக்கரையிலுள்ள தனியான மயான கட்டத்தை இவர்கள் சமீபித்துப் போகுங் காலத்து ஒரு கொள்ளைக் கூட்டக்காரர் சிவிகையை வளைந்து கொண்டார்கள்.

அக் கள்வர்கள் சிவிகையுடன் வந்த குதிரை வீரர்களை எளிதில் துரத்திவிட்டு, சிவிகையைக் கைப்பற்றித் திரையைக் கிழித்து, உள்ளிருக்கும் கன்யாமணியை முரட்டுத்தனமாய் வெளியே இழுத்து, “உன் நகைகளை யெல்லாம் உடனே கழற்றிக் கொடு” என்றனர்.

துளஸீபாயி மிகவும் உள்ளம் பதறி, கைகால் நடுக்குற, அச்சத்தினால் ஒன்றுஞ் செய்ய மாட்டாதவளாய்ப் பிரமித்து நின்றாள். ஏது செய்வாள்? பாவம்! செல்வமிக்க பெற்றோர்களின் ஒரே செல்வ மகளாக வளர்ந்து இதுகாறும் தனக்குப் பிறர் மனச் சஞ்சல மிழைத்த லென்பது இன்னதென் றறியாதிருந்த மடக்கொடி இப்போது பிசாசங்கள் போன்ற வடிவினை யுடைய கருணையற்ற வழிப்பறிக்காரருக்குள் ஏகப்பட்டுத் திகைக்கின்றாள்.

ரூப சௌந்தரியத்தைக் கண்டு காட்டு மிருகங்களும் மயங்கு மென்பார்கள். ஆனால், இந்த இரண்டு காற் பைசாசப் புலிகள் சற்றேனும் அருள் காட்டாது நின்றன. இவ்வளவில் ஓர் பாதகன் அவள் நகைகளை யுரியத் தொடங்கினான். பின்னொருவன் அவளது விலை மதிக்கலாற்றாத உடைகளையுந் தீண்டியிருப்பான். ஆயின், திடீரென அவ்விடத்தில் அப்பஸ்கானும் அவன் படை யாட்களும் வந்து வழிப்பறிக்காரர் கூட்டத்தைத் தாக்கினர். அப் பெரும் படைக்கு முன்னிற்க மாட்டாமல் கொள்ளைக்காரர் பறந்து விட்டனர்.

துளசியோ தன் பசுமை வாடித் தரைமீது விழுந்து கிடக்கின்றாள். அவளை மெல்லெனத் தூக்கிக் கைப்பிடித்துப் போய்ச் சிவிகையிற் சேர்த்தான், அப்பஸ்கான் என்ற வீர சுந்தரன். யுத்த சன்னத்தனாய்ப் போர்க்கோலங் கொண்டு விளங்கிய அம் மகமதிய குமரன் தன்னை வழிப்பறிக்காரரினின்றும் காத்து விட்டா னென்பதை யுணர்ந்த சுந்தரி அவனைத் திரும்பிப் பார்த்து அன்பு மிகுதியோடு புன்னகை புரிந்தாள். அவனது மனோகர வடிவும் இளமையும் அவன் தனக்குச் செய்த நன்றியும், அவள் மனத்தே யூன்றி வேர்க்கொண்டன.

மகமதிய விஜயனோ அவள்மிசை யாங்கே அடங்காக் காதல் கொண்டான்.

“முதற் காட்சியினே மூளாக் காதலோர், எவரே காமத்தியன்றார்” * என்பது அனுபவ சித்தமன்றோ?

அவளது கறையில்லாத முகச் சந்திரன் முன்னர், அப் போர் வீரன் நெஞ்சம் சந்திரகாந்தக் கல்லாயிற்று.

‘என்ன போர்! என்ன கவுரவம்! என்ன வாழ்க்கை ! இந்த ரஜபுத்ர கன்யாமிருதத்தை மணம் புரிந்து அவளுடன் அனவரதம் ரமித்துக் கொண்டு நமது தகப்பன் வீட்டிலேயே இருப்பது நன்று. ஆக்பர் சக்ரவர்த்திக்கு நம்மைப்போ லாயிரம் துணை மன்னருண்டு. நாம் போய் என்ன ஆய்விடும்? அதனால் அவர் நமக்குக் கொடுக்கும் சிறப்பும் சன்மானமும் ஸ்தோத்திர மொழிகளும் என்ன பெறும்? இப்போது அப் போர்ப் பெருமைகளுக்காக நாம் போவோமானால் இனி இவளை எங்கே பார்ப்பது? போரில் நாம் மடியாது பிழைப்பதுதான் என்ன உறுதி?’ என்று பலவாறு யோசித்தான், அப்பஸ்கான்.

‘ஆகா, என்ன யோசிக்கிறோம்; ஆக்பர் பாதுஷாவின் கொடிக்கீழ் நின்று போர் புரிந்து விஜயலஷ்மியுடன் திரும்பி வருவான் மகனென்று கருதி யிருக்கும் நம் தந்தையும், நம் ஊராரும் இடைவழியில் பாதுகாப்பாளரில்லாது வருந்தி நின்ற ஓர் ரஜபுத்ர சிறுமியைத் திருடர்களினின்றும் காப்பவன் போன்று, தான் அபகரித்து வந்துவிட்டான் என்று தெரிந்தால் நம்மை எவ்வளவு இகழ்ச்சி புரிவார்கள்? ஆதலால் இக் கன்னியை அவள் போமிடம் போக்கிவிட்டு நாம் போர்க்குச் செல்வதே தகுதியா’மென மீட்டும் அவனுளம் திரிந்தது. இவ்வாறு பலவகை கருதி கடைசியாய்ப் போர்க்குப் போவதே நன்றென நிச்சயித்துக் கொண்டான்.

அதனுள் வழிப்பறிக்காரரை யஞ்சி ஓடிய ரஜபுத்திரக் குதிரை வீரர்கள் தாம் ஒளிந்து கொண்டிருந்த இடங்களினின்றும் மீண்டு வந்து அப்பாஸுக்கு நன்றி கூறிச் சிவிகையை எடுத்துக் கொண்டு சென்றனர். துருக்க வீரன் தானும் அவ்வழியே போக வேண்டி யிருந்ததால் சிறிது தூரம் சிவிகையுடன் சென்றான். ரஜபுத்திர குலத்தவர் செய்த தவத்தின் விளைவாகிய துளசீபாயி வழிப்பறிக்காரர் திரையிலே கிழித்த துவாரத்தின் வழியாக இவனை நோக்கிக் கொண்டே போயினள்.

சற்று நேரத்தில் அப்பஸ்கான் பிரிந்து செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. ததும்பித் தத்தளித்துத் தடுமாறுகின்ற குரலுடன் “ரஜபுத்ர குலவிளக்கே! யான் போய் வருகின்றேன்” என அப்பஸ்கான் கூறலும், துளசி தனது ஜாதியாசாரத்துக்கு விரோதமாகத் திரையை நீக்கிக் கொண்டு அற்புத ஒளி வீசிய விழிகளுடன் அவனை நோக்கித் தன் விரலிலிருந்த ஓர் வயிரக் கணையாழியை எடுத்து “இதைக் கருணை புரிந்து வாங்கிப் போவீராக” என்றாள்.

அவனும் அதை மிகவும் பத்தியுடன் வாங்கி அதிலே பதித்திருக்கும் மணிகளுடன் தனது உயிரையும் பதிப்பான் போல முத்தமிட்டுத் தன் விரலிலணிந்து கொண்டான்.

இதைப் படிப்பவர்களே! அளவு கடந்த காதலுடைய ஸ்திரீ புருஷர்கள் தாம் இனிமேல் ஒருவரை யொருவர் எப்போதும் பார்க்கப் போவதில்லை யென்ற நிச்சயத்துடன் பிரியுங் காலத்து அவர்கள் கண்ணோடு கண்பொருந்தி நோக்குவதை யான் உங்களுக்கு வருணித்துக் காட்ட வல்லனல்லேன்.

சரீர வீட்டிலிருக்கும் சீவன் தன் வடிவை வெளியே காட்டுவதற்குரிய சன்னல்களென்று கண்களைச் சொல்வார்கள். ஆயின் இப்போது இந்த அப்பஸ்கானும் துளசியும் ஒருவரை யொருவர் நோக்கும்போது அச் சன்னல்களின் வழியாக அவர்களிருவரின் உயிர்களும் கீழே குதித்துவிடத் தெரிந்தன. அவ்வண்ணம் சற்று நேரம் பார்த்திருந்த பின்பு அவர்கள் பிரிந்து விட்டனர்.

அப்பஸ்கான் தன் படைகளுடன் போரின் மாண்புகளைக் கவரும் பொருட் டேகினான். துளசியோ தான் இதுவரை கண்டறியாத ஓர் சிறுவனை மணந்து அவனுக்கு மனைவியாக இருந்து தன் வாழ்நாள் கழிப்பச் சென்றாள். ஆனால், இந்த நாள் அவளது உயிரைக் காத்து நெஞ்சைக் கொள்ளை கொண்ட போர் வீரனை ஒருபோதும் மறக்க மாட்டா ளென்பது திண்ணம். அக் குமரனோ தான் பிறந்தது தொடங்கி முதன் முதற் காதலித்த ரஜபுத்ர ஜோதியைச் சுகத்திலும் துக்கத்திலும் தன் மனக்கோயிலிலிருந்து நீக்க மாட்டான்.

(அடுத்த முறையில் இச் சிறுகதை முடிவு செய்யப்படும்)

$$$

அத்தியாயம் இரண்டு

முதலத்தியாயத்திலே விஸ்தரிக்கப்பட்ட விஷயங்கள் நடந்து ஒரு வருஷத்திற்கு மேலாய் விட்டது. அதே ரோஹிணி நதிக்கரையிலே காட்டின் வழியாக ஓர் மகமதிய இளைஞன் குதிரை யேறி வருகின்றான். சூரிய பகவானே தனக்குள்ள ஏழு குதிரைகளில் முதற் சிறப்புடையதாகிய குதிரை சகிதமாக வானத்தினின்றும் இறங்கி, சீதளத்தின் பொருட்டு இந்த வனத்தின் வழியாக வருகிறானோ என்று கண்டோர் சந்தேகமுறும்படியாக, பேரொளி வீசும் வதனத்தோடு வரும் இக் குமரன் நமது அப்பஸ்கானே யாவன். வரும்போதே பின்வருமாறு ஆலோசனை செய்கிறான் :

‘அடடா! சென்ற வருஷம் இந்த இடத்திற்கு அனேகமாய் சமீபத்திலேதான் அந்த ரஜபுத்திரப் பசுங்கிளியைப் பார்த்தேன். (கையிலே தரித்திருந்த மோதிரத்தை முத்தமிட்டுக் கொள்கிறான்) இந்த அழகிய மோதிரத்தைத் தனது ஞாபகக் குறியாக எனக்குக் கொடுத்தாள் பேதை! அவளது ஞாபகம் எனக்கு எந்நாளும் இருப்பதற்கு ஓர் அடையாளமும் வேண்டுமா? எனது நெஞ்சத்திலே துளஸீரத்தினம் பதிக்கப்பட்டிருக்கிற தென்றும், நான் இறந்தாலொழிய அவளை மறப்பது அசாத்திய மென்றும் அவளுக்குத் தோன்றவில்லை! கண்டநாள் முதலாக இந்த நிமிஷம் வரை அவள் நினைப்பு வராத ஒரு நாளுண்டா? சோலைகளையும் நீரோடைகளையும் பார்க்கும் போதெல்லாம் அவள் ஞாபகம் வரவில்லையா?’

(பாடுகிறான்)

“மந்த மாருதம் வீசுறும் போதினும்
       வானில் மாமதி தேசுறும் போதினும்
கந்த மாமலர் கண்ணுறும் போதினும்
       கான நல்லமு துண்ணுறும் போதினும்
சந்த மார்கவி கற்றிடு போதினும்
       தாவில் வான்புகழ் பெற்றிடு போதினும்
எந்த வாறினு மின்புறு போதெலாம்
       என்ற னெஞ்சகம் ஏந்திழை பாலதே.”

“போர்க்களத்தில்கூட அவளைப் பன்முறை நினைத் திருக்கின்றேன். இனி, இதெல்லாம் என்ன வீணாலோசனை? அவள் இப்போது, ரஜபுத்திரன் மனைவியாகப் பெருமையும் இன்பமுங் கொண்டிருப்பாள். ஏதோ அன்னிய மகமதியன் ஒரு முறை செய்த உதவிக்காக அவனை எப்போதும் நினைத்திருப்பாளா? அதையும் தவிர அன்னியனுடைய பத்தினியாகிய அம் மாதை என் மனதாலே நினைப்பதுகூட தோஷம். அல்லாவே! என் மனதிலிருந்து இந்தப் பாவ எண்ணத்தை நீக்கி அருள் புரிய வேண்டும்…., துளஸீபாயி, துளஸீபாயி, ஆஹா! என்ன இனிமையான பெயர்!”- என இவ்வாறு மகமதியன் தனக்குள்ளேயே பேசிக்கொண்டு வந்த காலத்திலே சிறிது தூரத்திற்கு முன்பாய் “ஐயோ! ஐயோ!” என்ற கூக்குரல் கேட்கப்பட்டது. அந்தப் பக்கமாகப் பார்த்தான்.

ரோஹிணி நதிக்கரை மயானம் – ரஜபுத்திரக் கூட்டம் – சில பிராமணர்கள் – ஓர் பெண் கதறுதல் – அருகே நெருப்பு வளர்த்தல் – ஒரு பாடை – இவை யனைத்தும் காணப்பட்டன. உடனே விஷய மின்னதென்பது மகமதியக் குமாரனுக்குத் தெரிந்துவிட்டது.

‘ஓஹோ ! யாரோ ஒரு ரஜபுத்திரன் இறந்து போயிருக்கிறான், அவனுடைய மனைவியாகிய பெண்ணையும் கூடவைத்து எரித்துவிடப் போகிறார்கள்’ என்று தெரிந்துகொண்டான். பெண்ணுக்குச் சம்மதி யில்லாமல் அவளைக் கணவனுடைய பிணத்துடன் வைத்தெரிப்பது சட்ட விரோதமென்று ஆக்பர் சக்ரவர்த்தி விதி ஏற்படுத்தி யிருந்தார். ஆகவே,  இந்த இடத்திற்குச் சென்று மேற்படி ‘சதி தகனம்’ நடப்பதைத் தடுத்து விடுவோமானால் நமக்கு ஆக்பர் சக்ரவர்த்தியின் மதிப்பும் சன்மானமும் கிடைக்கு மென்று அப்பஸ்கானுக்கு எண்ணமுண்டாயிற்று. “ஆனால் எதிரே ரஜபுத்திரர்கள் 4, 5 பேர் வாள் சகிதமாக இருக்கிறார்கள். பிராமணர்களைப் பற்றி பயம் கிடையாது. அவர்கள் நம்மைக் கண்டவுடனே ஓடிவிடுவார்கள். இந்த ரஜபுத்திரர்கள் வசமிருந்து அப் பெண்ணை மீட்பதுதான் கஷ்டம். எல்லாவற்றிற்கும் அல்லா இருக்கிறார். துணைபுரிவார்”- என்று சொல்லிக் கொண்டே கூட்டத்தை நெருங்கி வந்தான்.

சமீபத்தில் வரும்போதே இவனுக்கு மனப் பதைப்புண்டாயிற்று. அச்சத்தினாலன்று. அப்பஸ்கான் பயமின்னதென் றறியவே மாட்டான். ஆனால், ‘இந்த முகம் எனக்குத் தெரியுமே, இது எனது எனது எனது துளசி யல்லவா? அரே அல்லா மேரீ குலாப்கோ ஜலாவேங்கே! ப-த்! எனது காதல் ரோஜாவையா இப் பாதகர் சாம்பலாக்கப் போகிறார்கள்? இதோ! அவர்க ளத்தனை பேரையும் ஹதம் செய்து விடுகிறேன்’ என்று வெகு கோபத்துடன் கிளம்பினான்.

பிறகு திடீரென்று ஓர் யோசனை உண்டாயிற்று. அதன்பேரில் மிகவும் அமைதியாக மெல்லக் குதிரையை நடத்திக்கொண்டு வந்தான். அந்த யோசனை இன்னதென்பது பின்பு அவனுடைய செய்கைகளால் விளங்கும்.

மகமதிய வாலிபன் பையப் பைய நெருங்கி அந்த ஹிந்துக் கூட்டத்தினிடையே வந்து சேர்ந்தான், இவன் வழியே போய் விடுவானென்று கருதி யிருந்த ரஜபுத்திரர்கள் இவன் தம்மருகே வந்து நின்று கொண்டதைப் பார்த்தவுடனே பெருங் கோபங் கொண்டார்கள். அவர்களின் வீர ரத்தம் பொங்கத் தொடங்கிற்று; விழிகள் சிவந்தன, புரோகிதப் பிராமணர்களோ மனதிற்குள்ளே நடுங்கத் தொடங்கினர். இங்ஙனமாக, ரஜபுத்திரர்களிலே வயதேறிய ஒருவன் அப்பஸ்கானை நோக்கி, “ஏனையா, இங்கு வந்து நிற்கிறீர்? மதக் கிரியைகள் நடக்கும் இடத்தில் தாம் வந்திருப்பது சரியில்லை . தாம் போகலாம்” என்றனன்.

அப்பஸ்கான் மறுமொழி கூறுவதன் முன்பாக மற்றொரு ரஜபுத்திரன் “நீ யாரடா மகமதியன்? இந்தக் கணமே போய்விடும். இல்லாவிடில் உன் தலை இரண்டு துண்டாய் விடும்” என்றான். இதற்குள்ளே அங்கு வந்திருந்த 4, 5 ரஜபுத்திரர்களும் வாள் சகிதமாக அப்பஸ்கானை வந்து சூழ்ந்துகொண்டார்கள். ஒரு ரஜபுத்திரன் வாளைத் தூக்கிவிட்டான். உடனே அப்பஸ்கான் வாளை யோங்கும் ரஜபுத்திர இளைஞனை நோக்கி, “சகோதரா, நான் ஆக்பர் சக்ரவர்த்தியின் படைத் தலைவன் என்பதை அறிவாயாக!” என்றான்.

ரஜபுத்திரர்களுக்குள்ளே முதியவனா யிருந்தவன் மேற்படி சொல்லைக் கேட்டவுடனே அவன் முகத்திலே சிறிது அச்சக்குறி புலப்பட்டது. ஆனால், அதனை உடனே மாற்றிக் கொண்டுவிட்டான். எனினும், மற்ற வாலிப ரஜபுத்திரர்களுக்குக் கோபம் மேலிட்டதே யொழிய வேறொன்றுமில்லை. எனினும் வாளோங்கிய வீரன் தனது கையை இறக்கி விட்டான்.

இனி அப்பஸ்கான் சொல்கிறான் : “எனது கையிலும் ஓர் வாளிருக்கிறது. இதுவும் கொஞ்சம் சண்டை பார்த்திருக்கிறது. நான் குதிரை மேலிருக்கிறேன். நீங்கள் கீழே நிற்கிறீர்கள். கையைத் தூக்க வேண்டாம்! பத்திரம்! நான் சொல்வதை மட்டிலும் அமைதியுடன் கேளுங்கள்” என்று கூறினன்.

ரஜபுத்திரர்கள் “சொல்!” என்றனர்.

அப்பஸ்கான் “பெண்ணுடைய சம்மதி யில்லாமல் சதி தகனம் செய்யக் கூடாதென்பது ஆக்பர் சக்ரவர்த்தியின் ஆக்கினை. அந்த இளங் கன்னியை நீங்கள் எரிக்கப் போகிறீர்கள்! அவள் அழுது கூக்குரலிடுவதைப் பார்த்தால் அவளுக்குச் சம்மதமில்லை யென்று தெரிகிறது. ஆதலால் நீங்கள் இந்தக் குரூரச் செய்கையை நிறுத்தி விடுங்கள். இல்லாவிடில் ராஜ கோபத்திற் குள்ளாவீர்கள்” என்றான்.

வயது முதிர்ந்த ரஜபுத்திரன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள்ளே நமது கோபக்கார ரஜபுத்திர இளைஞன், “சிச்சீ! மிலேச்ச நாயே! ராஜ கோபத்துக்குப் பாத்திரப்படுவோ மென்கிறான்! யாரடா ராஜா? பாரத பூமிக்கு மிலேச்சனாடா அரசன்?” என்று வாளால் ஒரு வீச்சு வீசினான். அந்த வெட்டு தன்மீது விழாதபடி அதிசதுரனாகிய அப்பஸ்கான் திடீரென்று தனது குதிரையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு தனது பெரிய வாளை யோங்கி ஒரு வெட்டு வெட்டினான். ரஜபுத்திரத் தலை யொன்று துண்டாய் விழுந்து விட்டது. உடனே சண்டை வெகு பலமாய் விட்டது.

கீழே நின்ற ரஜபுத்திரர்களும் குதிரைமேலிருந்த மகமதியனும் இங்ஙனம் ஒருவரை யொருவர் கத்திகளால் வெட்டி ரத்தம் பெருகிக் கொண்டிருக்க, நெருப்பிற் கிரையாகும்படி வைக்கப்பட்டிருந்த பெண்மணியின் நிலைமை யாதாயிற் றென்பதைக் கவனிப்போம். பிராமணர்கள் மந்திர கோஷத்தை நிறுத்திவிட்டார்கள். இவர்கள் அங்கிருந்து எழுந்து ஓடவேண்டுமென்ற ஆசை இருந்த போதிலும் அதற்குக்கூட மனோ தைரியமில்லாமல் ஸ்தம்பிதமாக நின்று போயினர்.

அப்பஸ்கான் வருவதன் முன்பாக ‘கோ! கோ!’ வென்று அலறிக்கொண்டிருந்த துளசி, அவன் வந்ததைப் பார்த்தவுடனே தனது அழுகையை நிறுத்திக் கொண்டு விட்டாள். அவனைக் கண்டவுடனேயே அவளுக்கு இனம் தெரிந்துவிட்டது. எப்படியேனும் தனது பிராணனை அந்த ராக்ஷதர்கள் வசத்திலிருந்து காப்பதற்குரிய ஜீவரக்ஷகன் வந்துவிட்டானென்று அவளுக்குப் புலப்பட்டுவிட்டது. எனவே, மகமதியனும் ராஜபுத்திரர்களும் வாய்த் தருக்கம் செய்துகொண்டிருந்த பொழுதெல்லாம் இவள் கூச்ச லில்லாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். அவர்கள் வாள் யுத்தம் தொடங்கிய உடனே மறுபடியும் அலறத் தொடங்கிவிட்டாள்.

இப்பொழுது முன்போல தன்னுயிரின் பொருட்டுக் கதறுகின்றவ ளல்லள். தன்னை முன்னாள் திருடர்கள் வசத்திலிருந்து காத்தவனும், இப்போது கொலையாளிகள் வசமிருந்து காக்க வந்திருப்பவனும் ஆகிய மகமதிய விஜயனுடைய இன்னுயிரின் பொருட்டு அலறுகிறாள், “ஈசா! ஈசா! அவனை வெட்டுகிறார்களே! ஐயோ, எனது ராஜா! பாதகியாகிய என் பொருட்டு நீயும் உயிர் விடவா வந்திருக்கிறாய்? என்னைக் கொல்லப் போகிற பாவிகள் உன்னையும் கொல்லுகிறார்களே! ஐயோ! ஐயோ!” என்று கூக்குரலிட்டாள். முகத்திலேயும் மார்பிலேயும் கைகளால் புடைத்துக்கொண்டாள். தரையிலே விழுந்து புரண்டாள். தனது பரிமள முயர்ந்த, நீண்ட கருங்கூந்தலைப் பிய்த்துக் கொண்டாள், ஐயோ, அந்தப் பசுந் துளசி மான் அன்று பட்ட துன்பங்களை நினைக்கும்போது எமக்கு, மனங் கன்றுகிறது,

இப்படி யிருக்கும்போது ஓர் ரஜபுத்திரன் பின்புறமாக வந்து பாய்ந்து அப்பஸ்கானுடைய பிடரியின்மீது ஓர் பலமான வெட்டு வெட்டியதையும், அதிலிருந்து இரத்தம் சரேலென்று வெளியேறியதையும் பார்த்தாள். உடனே “ஐயோ” என்று வான் கலங்குமாறு கதறி விட்டு மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாள். இதற்குமுன் புரோகிதப் பிராமணர்களுக்கு எப்படியோ தைரியமுண்டாகி ஓடத் தலைப்பட்டு விட்டார்கள். தனியாக மூர்ச்சித்து விழுந்து கிடக்கும் ஸ்திரீ ரத்தினத்துக்கு உதவிபுரிய வேண்டுமே யென்பதுகூட அந்தப் புரோஹிதப் பேடிகளுக்குத் தோன்றவில்லை.

இடுகாட்டிலே மூர்ச்சித்து விழுந்த துளஸீதேவி அதற்கப்பால் நடந்த விஷயங்க ளெவற்றையு மறிய மாட்டாள். மறுநாள் இவளுக்குச் சித்த சுயாதீனம் சிறிதேற்பட்டு கண்விழித்துப் பார்க்கும்போது தான் ஒரு மாடத்திலே யிருப்பதாகக் கண்டாள். தன்னைச் சுற்றி மகமதியச் சேடிப் பெண்கள் விசிறியிட்டு வீசுதல் முதலிய உபசரணைகள் செய்து கொண்டிருக்கக் கண்டாள். இவள் கண் விழித்ததைப் பார்த்தவுடனே மகமதிய ஸ்திரி யொருத்தி இவளுக்குப் பலமுண்டாகும்படியாக ஏதோ ஒரு மருந்தையோ அல்லது உணவையோ கொண்டுவந்து வாய்க்குள்ளே அருள முயன்றாள்.

துளஸீதேவி அந்த உணவைத் தனக்கு வேண்டாமென்று கையால் விலக்கி விட்டாள். பிறகு திடீரென்று ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலகத்தே சென்ற உயிர் திகைப்பதுபோலத் திகைப்பாளாகி, “அம்மா! நான் எங்கே யிருக்கிறேன்?” என்று கேட்டாள்.

“தேவி! தாம் சிறிதேனும் பயமடைய வேண்டாம். தமக்கு இங்கே எவரும் எவ்விதமான இடையூறும் செய்யப் போவதில்லை. எங்கள் எஜமான் உங்களை எங்கேயோ மரணத்திலிருந்து சம்ரக்ஷணை புரிந்து இங்கே கொணர்ந்து வைத்ததாக எம்மிடம் கூறினார். அவர் இன்னும் சிறிது நேரத்திற் கெல்லாம் இங்கே வருவார்” என்று ஒரு மகமதியப் பெண் கூறினாள். துளஸிக்கு எல்லாம் கனவைப்போலவே யிருந்தது. இன்ன இடத்திலிருக்கிறோ மென்பது அவளுக்கு நன்கு விளங்கவில்லை. எனினும் மிகுந்த சிரமத்துடன் “அம்மா, உங்கள் எஜமான் யாவர்?” என்று கேட்டாள்.

“எங்கள் எஜமான் பெயர் அப்பஸ்கான்” என்று சேடி யொருத்தி மறுமொழி கூறினாள்.

உடனே சென்ற காலத்தின் விஷயங்களனைத்தும் துளஸியின் கருத்துக்குத் தெளிவெனத் தெரிந்து விட்டது. இவள் மனத்திலே ஒருவிதமான பயம் ஜனிக்கத் தொடங்கிவிட்டது. அப்பஸ்கானிடம் தனக்கிருந்த காதலைக்கூட மறந்துவிட்டாள். ‘மகமதியனுடைய வீட்டில் நாம் சிறைப்பட்டிருக்கிறோமே. இதனால் என்ன நேருமோ? என்ற பயம் மாத்திரம் இருந்தது.

ரஜபுத்திர கன்னிகை யாதலால், மனத்திலிருந்த பயம் சற்று நேரத்திற்கெல்லாம் நீங்கிப் போய்க் கோபமுண்டாகி விட்டது. உடனே இவளுக்கிருந்த களைப்பெல்லாம் போய்ப் பலங் கொண்டவளாகித் தன்னைச் சுற்றியிருந்த மகமதியப் பெண்களை நோக்கி, “சகோதரிகளே, நான் ஹிந்து வாதலால் உங்கள் ஜாதியாரைத் தொடுவது எனது குல தர்மத்திற்கு விரோதமான விஷயம். தாங்கள் தயவுசெய்து எட்டி நிற்க வேண்டுமே” என்று சொல்லி மஞ்சத்திலிருந்து இறங்கிக் கீழே சென்று உட்கார்ந்து கொண்டாள்.

மகமதியப் பெண்கள் ஆச்சரியத்தையும் கோபத்தையும் அடைந்தவர்களாகி, ஏதோ மறுமொழி சொல்ல விரும்பிய போதிலும், தங்கள் எஜமான் கட்டளையை எண்ணி வாயை மூடிக்கொண்டிருந்து விட்டார்கள். எனினும் இவள் ஏதோ மிகப் பிரமாதமான நடிப்பு நடிக்கிறாளென்று குறிப்புத் தோன்றுமாறு தமக்குள்ளே கண் சமிக்கினை செய்து கொண்டார்கள். இதைக் கண்ட துளஸிக்கு மிகுந்த உக்கிரமுண்டான போதிலும், அதனை மனதிலே யடக்கிக் கொண்டு சும்மா இருந்து விட்டாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அப்பஸ்கான் வந்து சேர்ந்தான். சேடிகள் தாமே விலகிவிட்டனர்.

இன்னும் மூர்ச்சை மயக்கம் தெளிந்திருக்க மாட்டா ளென்று யெண்ணி வந்த அப்பஸ்கான் எதிரே மிகுந்த சோர்வும் சிறிது கோபமும் துலங்கிய முகத்தினளாகி உட்கார்ந்து கொண்டிருக்கும் துளஸிதேவியைப் பார்த்தவுடனே ஒருவிதமான ஆச்சரியம் எய்தினான்.

தனது குலாசாரப்படி தூர இருந்து ஸலாம் செய்துவிட்டு அருகே போய் “அம்மே, இன்னம் யாதொரு சிரம பரிகாரமும் செய்து கொள்ளவில்லைபோல் தோன்றுகிறதே!” என்றான்.

உடனே மிகுதியான கோபம் மேலிட்டவளாகி ஆக்கிரகம் ததும்புகின்ற குரலுடன், “ஏ, மகமதியா, நான் ராஜபுத்திர கன்னிகை யென்று அறியக் கடவாயாக! அவமானம் அடைவதற்கு முன்பு உயிரைத் துறந்து கொள்வதில் எங்கள் ஜாதிப் பெண்கள் என்றும் பெயர் வாங்கியவர்கள். வழியிலே பார்க்கப்பட்ட கன்னிகையை மரணத்திலிருந்து சம்ரட்சிப்பவன்போல் பாவனை செய்துவிட்டு முறைப்படி யெனது தந்தை தாயாரிடம் கொண்டு சேர்க்காமல், மகமதிய அந்தப்புரத்துக்குக் கொண்டுவந்து விட்ட உனது கண்முன்பாக இதோ இன்னம் சிறிது நேரத்துக்கெல்லாம் உயிரை விட்டு விடுகிறேன், பார்” என்று சொல்லி, மாடத்தின் மீதிருந்து கீழே குதித்து இறந்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்து சென்றாள்.

உடனே மிகுந்த சோகத்தையும் மனப் பதற்றத்தையும் அடைந்தவனாகிய மகமதிய குமாரன், “அல்லாவின் மேலாணையிட்டுச் சொல்கிறேன், உனது கருத்துக்கு விரோதமாக உன்னை எவ்விதமான தீங்குக்கேனும் உட்படுத்தவேண்டு மென்ற ஞாபகம் எனக்குக் கனவிலேகூடக் கிடையாது. காமப் பிசாசு பற்றிய அநேக மகமதிய மூட வாலிபர்களைப்போல நீ என்னையும் நினைத்து விடவேண்டாம். உன் தந்தையின் வீட்டுக்கு உன்னைக் கொண்டு செல்ல வேண்டுமென்று சொல்லுகிறாயே. உனது தந்தை யின்னார் என்பதைப் பற்றியாவது இன்ன ஊரைச் சேர்ந்தவர் என்பதைப் பற்றியாவது, எனக்கு யாதொன்றும் தெரியாது என்பதைச் சிறிதேனும் ஆலோசிக்கவில்லை அல்லவா? உன்னைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலா மென்றால் நீ மூர்ச்சை நிலையி லல்லவா யிருந்தாய்!

மேலும் அந்த ஸ்திதியில் உன்னை அருகிலுள்ள ஏதாவது ராஜபுத்திரக் கிராமங்களுக்குக் கொண்டு சென்றால் என்னையும் கொலை புரிந்து உன்னையும் எரித்திருப்பார்கள் அல்லவா? என் மனத்திலிருந்த காதலை யெல்லாம் அடக்கிக்கொண்டு, மெய்ம்மறந்திருக்கும் பெண்ணைக் கையாலே தொடுவதுகூட நியாயமில்லை யென்று எண்ணி, உன்னை என் ஆயுதங்களினால் எடுத்து, குதிரை மீது வைத்துக் கொண்டு வந்திருக்கும் என்மீது நீ தப்பிதமான எண்ணங்கள் கொள்ளுதல் உனக்கு நியாயமாகுமா?” என்று விம்மிக் கூறினன்.

இதை யெல்லாம் கேட்டவுடனே, “மகமதிய இளவரசே, என்னை க்ஷமித்து அருளுவீராக!” என்று கூறி, துளஸி கண்ணீர் ததும்பி விட்டாள்.

“எனக்கு எத்தனையோ முறை கைம்மா றளிக்கக்கூடாத பெரு நன்மைகள் செய்திருக்கும் தமது மீது பெண்புத்தியினால் தப்பிதம் எண்ணி விட்டேன். மேலும் – மேலும் …. ” என்று ஏதோ கூற வந்தவள் வாய் குழறிப்போய், கைகளால் முகத்தை மூடிக் கொண்டு தேம்பத் தொடங்கி விட்டாள்.

அதைப் பார்த்து மனஞ் சகியாதவனாகிய மகமதிய வீரன், “அம்மே, உன் மனநிலை இப்போது நேரில்லை. நான் சிறிது நேரத்திற்கப்பால் வருகிறேன். அதற்கிடையே ஓர் ஹிந்து ஸ்திரீயின் மூலமாக உண்டு, சிரம பரிஹாரத்துக்குரிய சாமான்க ளனுப்புகிறேன். அவற்றை உபயோகித்துக்கொண்டு சிறிது நித்திரை புரிந்தெழுவாயாக! ஸலாம்!”  என்று சொல்லி மாடத்தினின்றும் கீழே இறங்கி வந்துவிட்டான்.

மறுநாட் காலை துளஸீபாயி அரண்மனை மாடத்திலே ஒரு நேர்த்தியான அறையில் ஒரு ஸோபாவின்மீது சாய்ந்து கொண்டிருந்தாள். இவள் முகத்திலே ஒரு புதிய தெளிவும் அற்புதமான சவுந்தரியமும் விளங்கி நின்றன. இவளது கண்கள் மலர்ச்சி பெற்றிருந்தன. ஏதோ ஆச்சரியமான மாறுபாடுகள் இவள் மனதிலே ஏற்பட்டிருக்கின்றன வென்பது முகத்தைப் பார்த்த வுடனேயே விளங்கிற்று. இம் மாறுபாடுகள் யாவை யென்பதை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

முதலாவது, ராஜபுத்திர ஸ்திரீயாகிய துளஸிக்கு மகமதிய குலத்தார் மீதிருந்த இயற்கை விரோதமானது நீங்கிப் போய் விட்டது.

ஆரம்பத்திலே வயிரக் கணையாழி மாற்றிய காலத்தில் மகமதிய சுந்தரன்மீது ஒருவிதமான காதல் நெஞ்சிலே வேரூன்றிய போதிலும் பின்னிட்டு நெடுநாள் அது மறைந்தே கிடந்ததல்லவா? அதிலும் இதற்கு முந்தின நாள் மாலையில் தான் கன்னி விரதத்திலேயே நாள் கழிக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் எப்படியேனும் தற்கொலை செய்து உயிர் துறந்து கொள்ள வேண்டுமென்றும் நிச்சயித்துக் கொண்டா ளல்லவா? இந்த நிச்சய மெல்லாம் சிதறுண்டு போய்விட்டது. விரித்து விரித்தெழுதி பிரயோஜன மென்ன?

மகமதிய வீரன் மீது மறுபடியும் அடங்காத காதல் பெற்றவளாகி அவனை மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ண மேற்பட்டால் எத்தனை மாறுபாடுகள் தோன்றுமோ அத்தனை மாறுபாடுகளும் அவளிடத்தே தோன்றிவிட்டன.

இந்தச் சிறுகதையைப் படிப்போர்களுக்கு இது சிறிது ஆச்சரியமாகத் தோன்றக்கூடும்.

பரம்பரையாக மகமதிய துவேஷிகளான மஹாவீரர்களின் குலத்திலே ஜனித்த துளஸி தேவிக்கு அவளது ரத்தத்திலேயே மகமதிய வெறுப்பு கலந்திருந்தது. உறக்கத்திலேகூட மகமதிய னொருவனைக் கொலை புரிவதாகக் கனவு காணக்கூடிய ஜாதியிலே பிறந்த இந்த வீர கன்னிகை மகமதியனை விவாகம் செய்து கொள்ளலாமென்று நிச்சயிப்பது அசம்பாவிதமென்று நினைக்கக்கூடும்.

ஆனால், அப்படி நினைப்பவர்கள் காதலின் இயற்கையை அறியாதவர்கள். காதல் குலப் பகைமையை அறிய மாட்டாது, காதல் மத விரோதங்களை அறிய மாட்டாது. காதல் ஜாதி பேதத்தை மறந்துவிடும். காம தெய்வத்தின் உபாஸகர்கள் “அத்வைதி”களே யல்லாமல் “துவைதி”களல்ல.

தன்னை ஒருமுறை கொள்ளைக்காரர்களிடமிருந்தும், மற்றொரு முறை கொலைகாரர்களிடமிருந்தும் காப்பாற்றி அதற்கப்பாலும்கூடத் தன்னைப் பலவந்தமாக அபஹரித்துக் கொள்ளவேண்டு மென்ற நோக்கம் சிறிதேனுமற்று விளங்குபவனாகிய மகமதிய குமாரனது வாலிபத்தையும், வீரத் தன்மையையும், லாவணியத்தையும் பெருந்தன்மையையும் நினைக்க நினைக்க அவளது மனம் உருகிப் போய்விட்டது. ஜாதியாசாரம், மத துவேஷம் – என்பவை யெல்லாம் அழிந்து போய்விட்டன.

மேலும் டெல்லி நகரத்தில் ஆக்பர் சக்ரவர்த்திக்கும் அவரது முக்கியப் படைத்தலைவர்களுக்கும் அனேக ராஜபுத்திர முடிமன்னர்கள் தமது பெண்களை விவாகம் செய்து கொடுத்திருக்கிறார்க ளென்ற வதந்திகள் அவள் காதிலே விழுந்திருக்கின்றன. அதெல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

சமயத்திற்குத் தக்கபடி அனுகூலமான காரியங்களும், அனுகூலமான விவகாரங்களும் நினைப்பிற்கு வருவது ஸஹஜந்தா னல்லவா?

**

பலவித ஆலோசனைகளுக்கிடையே முழுகி, இடையிடையே பெருமூச்செறிந்துகொண்டும், புன்னகை புரிந்துகொண்டும் சாய்ந்திருந்தவளாகிய துளஸிதேவி சிறிது நேரத்திற்கப்பால் திடுக்கென்று எழுந்து நின்றாள்.

எதிரே மகமதிய வீரன் வந்தான். மஹா சவுந்தரியம் திகழுமாறு பால்போலப் பரந்து விளங்கும் வதனமும், அதிவிசாலத்துடன் வீரலக்ஷ்மியின் வாசஸ்தானமென்று தோன்றிய மார்பும், தேவஸ்திரீகளும் கண்டு அறிவு கலங்குமாறு ஒளிவீசிய கண்களும், பரந்த நெற்றியும் உடையோனாகிய அப்பஸ்கான் வருவதைக் கண்டவுடனே துளஸியின் உடலில் ஒருவிதமான ரோமாங்கிதமும், அவள் முகத்திலே ஒருவிதமான நாணக் குறியும் தோன்றின.

அப்பஸ்கான் : ஸலாம் பாயீஜீ!

துளஸி : ராம் ராம்!

அப்பஸ்கான் : தமது ஊரும், தந்தை தாய்களின் பேரும் தெரிவிக்கும் பக்ஷத்தில் அவர்களுடன் தாம் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் இப்பொழுதே செய்கின்றேன்.

துளஸி : எனது தாய் – தந்தையர்கள் நான் ஒரு மகமதியருடன் ஊருக்கு வந்தால், என்னை அங்கீகாரம் செய்து கொள்வார்களோ, என்னவோ தெரியாது. ஆதலால் அவர்களையே இங்கே தருவித்து விடலாமென்று நினைக்கிறேன். ஆனால், ஒருவேளை அதுவரை நான் இங்கே யிருப்பது தமக்குக் கஷ்டமா யிருக்கக்கூடும். அப்படியானால் –

அப்பஸ்கான் : பிரிய ஸுந்தரீ! நான் இங்கு வரும்போது இதுமுதல் உன்னைச் சகோதரியாகவே பாவிக்க வேண்டுமென்று என் மனதைக் கல்லாக்கித் தயார் செய்து கொண்டு வந்தேன். ஆனால், இப்போது உன் முக ஜ்யோதியின் முன்பு என் நெஞ்சம் பனி கரைவதுபோலே கரைகின்றது. உனது கண்கள் என் மனதில் பலவிதமான நம்பிக்கைகளை உண்டுபண்ணுகின்றன. ஏழையாகிய என்னை இன்னுமொரு முறை ரக்ஷிப்பது போல் பாவனை செய்துவிட்டு, மறுபடியும் வெறுப்புக் காட்டினால் அதை என்னால் சகிக்க முடியாது. திருவுளத்தை இப்போதே நன்கு தெரிவித்து விடவேண்டும்.”

அதன்பின்பு தம்மை யறியாமலே ஏதோ ஒருவிதமான சக்தியின் செய்கையால் இவ் வாலிபனும் கன்யா ரத்னமும் ஒரே மஞ்சத்தின்மீது வீற்றிருக்குமாறு நேர்ந்துவிட்டது.

துளஸியமுது தலைகுனிந்து புன்னகை பூத்து நின்றனள்.

அடிக்குறிப்பு:

* முதலில் பார்த்த வுடனே காதல் கொள்ளாமல் யாவர்தாம் பிறகு காதலுட்பட்டார்? என்பது பொருள், ‘Whoever loved that loved not at first sight? – Shakespeare,

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s