தராசு கட்டுரைகள்- 1

-மகாகவி பாரதி

அறிமுகம்: 

நாளிதழ்கள், பருவ இதழ்களில் பத்தி (Column Writing) எழுதுவது இப்போது பிரபலமாக இருக்கிறது.  எழுத்தாளரின் எண்ணத்தை பாதித்த /சமூகம் பயன்பெறும் எந்த விஷயம் குறித்தும் தொடர்ந்து ஒரே பகுதியில், ஒரே தலைப்பில் (இதனை மகுடம் என்கிறார் இதழாளர் பாரதி) எழுதுவது தான் பத்தி எழுத்தாகும். தமிழில் இதற்கு பிள்ளையார் சுழி இட்டவரும் மகாகவி பாரதியே. 1915இல் சுதேசமித்திரன் நாளிதழில் பாரதி எழுதத் துவங்கிய ‘தராசு’ பத்தி, தொடர்ச்சியாக அல்லாமல், இடையிடையே நின்று, வெளிவந்திருக்கிறது. நமக்குக் கிடைத்த கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

$$$

1. சுதேச மித்திரன் 25.11.1915

இவ்வுலகமே ஈசனுடைய ‘விளையாட்டு’. உலகத்தை அறிய வேண்டுமானால் விளையாட்டுப் பழக்கமும் வேண்டும்… எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனையுண்டாயிற்று. பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடுமாதலால் ‘பலசரக்குக் கடை‘ என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது அதிக விளையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டியாருக்கும் சினேகம்; அவரைப்போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன்.

….”தராசு” என்று பொதுப்படையாகப் பெயர் வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும் எல்லாச் செட்டியார்க்கும் இதனால் உதவியுண்டு. எந்தச் செட்டியாரும் நம்மிடம் மனஸ்தாபங் கொள்ள இடமிராது.

$$$

ஐரோப்பிய வைத்தியம் சிறந்ததா? நாட்டு வைத்தியம் சிறந்ததா?

ஐரோப்பிய வைத்தியத்தின் சார்பாக இருப்போர் சொல்லுகிறார்கள்:- “எங்கள் வைத்தியம் சயன்ஸ்படி நடத்தப்படுகிறது. (சயன்ஸ் என்பது தற்காலத்து ஐரோப்பிய இயற்கை சாஸ்திரம்). ‘உடலுக்குள் என்னென்ன கருவிகள் உண்டு? அவை எப்படி வேலை செய்கின்றன?’ என்ற விஷயம் நாட்டு வைத்தியருக்குத் தெரியாது. தொற்று வியாதிகளுக்கு ஆதாரமான, கண்ணுக்குத் தெரியாத துளிப்பூச்சிகளின் செய்தியெல்லாம் நாட்டு வைத்தியர் படித்ததில்லை. மருந்துகளின் தொழில் மர்மங்களெல்லாம் நன்றாகத் தெரியவேண்டுமானால் ரசாயன சாஸ்திரம் கற்றிருக்க வேண்டும். நாட்டு வைத்தியருக்கு அந்த சாஸ்திரம் தெரியாது. நாட்டு வைத்தியத்தால் ஜனங்கள் பிழைப்பது ஒரு ஆச்சரியமேயன்றி வேறில்லை.

நாட்டு வைத்தியத்தின் கட்சியார் சொல்லுகிறார்கள்:- அந்த ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் ராஜாங்கத்தார் எளிய தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவார்களானால் நாங்கள் படித்துக் கொள்ளுவதில் ஆட்சேபமில்லை. ஆனால் வைத்தியனுக்கு முக்கியமாக வேண்டியது நோய் தீர்த்துவிடுதலே. இதில், இந்த தேசம் சம்பந்தப்பட்டவரை, ஐரோப்பிய வைத்தியரைக் காட்டிலும் எங்களுக்கு அதிகத் திறமையுண்டு. எங்களுடைய பூர்வீக மருந்துகளே இந்த தேசத்து சரீர நிலைக்கு அனுகுணமாகும்; இதை வேண்டுமானால் சோதனை செய்து பார்க்கலாம்.

எனது நண்பர் ஒரு யோகீச்வர் இருக்கிறார். அவரிடம் இந்த இரண்டு கட்சிகளையும் சொன்னேன். அவர் சொல்லுகிறார்:- ஒருவனுக்கு வியாதிகள் வராதபடி தடுத்துக் கொள்வது நலம். தன்னை மீறி வந்தால்- நல்ல காற்று, நல்ல நீர், நல்ல வெளிச்சம், சுத்தமான உணவு, இயன்றவரை சரீர உழைப்பு, மனோதைரியம், சந்தோஷம் இவற்றால் பெரும்பான்மையான நோய்கள் இயற்கையிலேயே சொஸ்தமாய் விடும். வைத்தியர் அவசியமென்ற ஸ்திதிக்கு வந்துவிட்டால் பிறகு தெய்வ பலமுள்ளவர்கள் நிச்சயமாகப் பிழைப்பார்கள். சாகத்தான் வேண்டுமென்று தீர்ந்தால், அயல்நாட்டு மருந்தினால் சாவதைக் காட்டிலும், நாட்டு முறைப்படி சாவது நல்லது.

“நாட்டு வைத்தியம்” என்ற பேச்செடுத்ததிலிருந்து எனக்கு வேறொரு செய்தி யோசனைக்கு வருகிறது.

நமது ஜனங்களுடைய உடம்பைப் பற்றிய வியாதிகளுக்கு மருந்து கொடுப்பதைப் பற்றிப் பேசினோமா? அதிலிருந்து, நம்மவர்களின் ஆத்மாவைப் பற்றிய வியாதிகளுக்கு மருந்து கொடுக்கும் பெரிய வைத்தியத்தின் விஷயம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

‘இந்த உலகத்து மேன்மைகளெல்லாம் அநித்யம். ஆகையால் நமக்கு வேண்டியதில்லை. செல்வத்தையும் கீர்த்தியையும் தேடி முயற்சி செய்பவன் அஞ்ஞானத்தில் அழுந்திக் கிடக்கிறான். நாம் ஆத்மலாபத்தை விரும்பி இவ்வுலகத்தை வெறுத்துத் தள்ளி விடவேண்டும்” என்பது ஒருமுறை.

மடங்களிலேயும், காலசேபங்களிலும், பஜனைக் கூட்டங்களிலும் புராண படனங்களிலும் மதப் பிரசங்களிலும், பிச்சைக்காரர் கூட்டத்திலும், வயது முதிர்ந்தோர் சம்பாஷணைகளிலும்- எங்கே திரும்பினாலும், நமது நாட்டில் இந்த “வாய் வேதாந்தம்” மலிந்து கிடக்கிறது.

“உலகம் பொய்; அது மாயை; அது பந்தம்; அது துன்பம்; அது விபத்து; அதை விட்டுத் தீரவேண்டும்” இந்த வார்த்தை தான் எங்கே பார்த்தாலும் அடிபடுகிறது. ஒரு தேசத்திலே படித்தவர்கள், அறிவுடையோர், சாஸ்திரக்கார் எல்லோரும் ஒரே மொத்தமாக இப்படிக் கூச்சலிட்டால், அங்கே லௌகிக காரியங்கள் வளர்ந்தேறுமா? மனம்போல வாழ்க்கையன்றோ?

பூர்வமதாச்சார்யர் ‘பாரமார்த்திக’ மாகச் சொல்லிப்போன வார்த்தைகளை நாம் ஓயாமல் லௌகிகத்திலே சொல்லிக் கொண்டிருப்பது சரியா? வெகு ஜனவாக்கு நமது தேசத்தில் பலித்துப் போய் விடாதோ? இகலோகம் துன்பமென்றும் நம்பினால், அது துன்பமாகத் தான் முடியும். இந்த உலகம் இன்பம். இதிலுள்ள தொழில். வியாபாரம், படிப்பு, கேள்வி, வீடு, மனைவி மக்கள், எல்லாவற்றிலும் ஈசன் அளவிறந்த இன்பத்தைக் கொட்டி வைத்திருக்கிறான். விதிப்படி நடப்போர் இந்த சுகங்களை நன்றாக அனுபவிக்கிறார்கள். ஈசனுடைய விதி தவறும் கூட்டத்தார் துன்பமடைகிறார்கள்.

* *

“வேதாந்தம்” மற்றொரு சமயத்திலே பார்த்துக் கொள்வோம். “சட்டசபை” சங்கதியொன்று பேசலாம். சேலத்து ஸ்ரீ நரசிம்மையர். சிறு பிள்ளைகள் சுருட்டுக் குடிப்பதைக் குறைக்க வேண்டுமென்று சென்னைப் பட்டணம் சட்டசபையில் பேசப் போவதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தை மேற்படி வழக்கமுடைய ஒரு சிறு பிள்ளையிடம் நான் சொன்னேன். என்ன சட்டந்தான் கொண்டு வரட்டும். நான் சுருட்டுப் பிடிப்பதை அவர்களாலே தடுக்க முடியாது என்று அந்தப் பிள்ளை சொல்லுகிறான். புகையிலை ஆகாரத்தைக் குறைத்து விடுமென்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. அப்படியிருந்தும், அதை வழக்கமாகக் கொண்டவர்கள் விட மனமில்லாமலிருக்கிறார்கள். ஆனாலும், புகையை நம்பி உணவை வெறுக்கும் மனிதர்களை இந்த ஒரு விஷயத்தில் தானா பார்க்கிறோம்?

  • சுதேசமித்திரன் (25.11.1915)

$$$

தராசு – தனித்துவமான ஓர் ஆவணம்

-மாலன்

பாரதியின் படைப்புகளில் தனித்துவமானது தராசு. வாசிப்பதற்கு சுவையாகவும் யோசிப்பதற்கு பொறி கொடுப்பதுமான இந்தப் பத்திகள் எழுதப்பட்டு இன்றோடு நூறாண்டுகள் ஆகின்றன. 25.11.1915 அன்று சுதேசமித்ரனில் தராசின் முதல் பத்தி பிரசுரமானது.

நூறாண்டுகளுக்குப் பிறகும் அர்த்தமுள்ளவையாக இருப்பது மட்டுமல்ல அதன் சிறப்பு. அதன் முக்கியத்துவத்துக்கு மற்றும் சில காரணங்களும் உண்டு. அவை:

அரசியல்ரீதியாக பாரதியின் மன எழுச்சிக்குக் காரணமாக இருந்த சுதேசி இயக்கம் 1911-12-ல் ஒடுக்கப்பட்டுவிட்டது. 1910 மார்ச் 12-ம் தேதியோடு இந்தியா நிறுத்தப்பட்டுவிட்டது. மற்ற பத்திரிகைகளும் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட, தனக்கென பத்திரிகைகள் ஏதும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

1911 அக்டோபர் 11 அன்று அவரது இரு நூல்கள் (கனவு, ஆறில் ஒருபங்கு) அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆஷ் கொலைக்கு உடந்தையாக இருந்தாக அரசாங்கம் அவரைச் சந்தேகிக்கிறது. அரசியல் மீது விமர்சனங்கள் கொண்ட ஓர் எழுத்தாளனை மனரீதியாக முடக்க இவற்றைவிட வேறென்னெ வேண்டும்?

முதலாம் உலக யுத்தம் உச்சத்தில் இருந்த நாட்களும் அவைதான். ஊடகங்கள் அரசின் கழுகுக் கண்களால் உற்றுக் கவனிக்கப்பட்டுவந்த காலம். அந்தச் சூழ்நிலையில், ‘அரசியல் எழுதக் கூடாது’ என்ற நிபந்தனையின்பேரில், 1915-ல் மீண்டும் சுதேசமித்ரனில் பத்தி எழுதும் வாய்ப்புக் கிடைக்கிறது. அப்போது, 1915-17 காலகட்டத்தில், எழுதப்பட்ட கட்டுரைகள்தான் தராசு.

செய்திக் கட்டுரைகளுக்கும் பத்திகளுக்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு. செய்திக் கட்டுரைகளில் எழுதுபவர் ஒரு நிலை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், பத்திகளிலோ எழுதுபவரின் நிலைப்பாடு முக்கியம். அரசியல் குறித்து எழுத முடியாத சூழலில் பாரதி என்னதான் எழுதினார் என்பதற்கான ஆவணம் இந்தத் தராசு கட்டுரைகள். அவை அன்று நிகழ்ந்த பல சம்பவங்களுக்கு இன்றும் ஒரு துணை ஆவணமாக, நேரடிச் சாட்சியமாக நிற்கின்றன என்பதால் ஆய்வாளர்களின் கவனத்துக்குரியவை….

பாரதியும் பாரதிதாசனும்

தமிழகத்தின் இருபெரும் கவிஞர்கள் பாரதியும் பாரதிதாசனும். பாரதியைச் சந்தித்த பின்பு பாரதிதாசன் எழுத்தில் மாற்றம் நேர்ந்தது என பாரதிதாசனே பல இடங்களில் சொல்கிறார்: பக்திப் பாடல்களையும் கடவுள்கள் மீது துதிகளையும் எழுதிக்கொண்டிருந்த பாரதிதாசனுக்குச் சமூகம் பற்றிய விழிப்புணர்வைக் கொடுத்தவர் பாரதிதான். “பாரதியாருடைய தொடர்பு என்னுடைய பா நெறியில் ஒரு புதிய போக்கை ஏற்படுத் தியது. இவ்வவகையில் பாரதியாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் (கவிஞர் பேசுகிறார் தொகுப்பு -1947) என்று ஒரு உரையில் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

ஆனால், பாரதியை பாரதிதாசன் முதன்முறையாக எப்போது சந்தித்தார் என்பதில் பாரதிதாசன் ஆய்வாளர்களுக்கும், பாரதி ஆய்வாளர்களுக்கும் இடையே கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன.

பாரதிதாசன் 1908-ல் தனது உடற்பயிற்சி ஆசிரியர் வேணு நாயக்கர் திருமண நிகழ்ச்சியில் சந்தித்தாக பாரதிதாசன் கவிதைகள் நூலின் முதற்பதிப்பில் (1938) உள்ள ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடப் படுகிறது.

பாரதியின் ஹொக்கு

மகாகவி பாரதியார் வரலாறு என்று பாரதியைப் பற்றி ஓர் திரைப்படம் தயாரிக்க எண்ணி, அதற்கான திரைக்கதையையும் பாரதிதாசனே எழுதினார். அதில் ‘கரடிகூட வாத்தியார்’ வேணு திருமணத்தில், அந்த நிகழ்ச்சிக்கு பாரதியார் வந்திருப்பது தெரியாமலேயே, வீர சுதந்திரம் என்ற பாரதியாரின் பாடலை பாரதிதாசன் பாடியதாகவும், அதன் பின் பாரதிதாசனை பாரதிக்கு வேணு அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், பாரதி அவரைத் தனது வீட்டுக்கு அழைத்துவரும்படி சொன்னதாகவும் காட்சி 130 அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த 131-வது காட்சியில், பாரதியின் வீட்டில் பாரதியும் பாரதிதாசனும் ஜப்பானிய ஹைக்கூவையும் திருக்குறளையும் ஒப்பிட்டு விவாதிப்பதாகவும் காட்சிகள் எழுதப்பட்டுள்ளன.

ஹைக்கூ (பாரதி அதை ஹொக்கு என்று எழுதுகிறார்) பற்றிய பாரதியின் கட்டுரை (ஜப்பானியக் கவிதை) 18.10.1916 அன்று சுதேசமித்ரனில் வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டால், 1908-ல் நடந்த வேணு கல்யாணத்தில் பாரதி பாரதிதாசனின் முதல் சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நிகழ்ச்சியில் பாரதிக்கு அறிமுகம் செய்துவைக்கும் ஒருவரை 8 ஆண்டுகள் கழித்தா வேணு பாரதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்? அதுவும் பாரதியே அவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லியிருக்கும்போது!

“ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ‘ஹொக்கு’ என்ற பாட்டு தனிக் காவியமாக நிற்கும்” என்று பாரதி தெளிவாக எழுதியிருக்கிறார். பாரதிதாசன் தன் திரைக்கதையிலும், பின்னர் 1962-ல் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையிலும், ஹொக்கு என்பது அயிரிய (Irish) மொழியில் வேர்ஹேரன் எழுதிய பாட்டு என்கிறார்.(“அயர்லாந்து கவிஞரான வேர்ஹேரன் என்பவர் அயிரிய மொழியில் எழுதிவந்த ஹொக்கு பாட்டைத்தான் பாரதி புகழ்ந்தார். வெர்ஹேரன் சில சொற்களை வைத்து ஒரு காப்பியத்தை முடிப்பவர். அப்படிச் சுருக்கப்பட்ட பாட்டுக்கே ஹொக்குப் பாட்டு என்று பெயர்”)

பாரதி மார்டன் ரிவ்யூ என்ற கொல்கத்தா பத்திரிகையில் என்று தெளிவாகத் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால், பாரதிதாசன் அயர்லாந்து பத்திரிகை என்கிறார்(“அவர் (வெர்ஹேரன்) எழுதும் பாட்டுகள் அயர்லாந்துக் கிழமை இதழ் ஒன்றில் வெளிவரும். அது பாரதியாருக்கு அனுப்பப்படும்..”)

வெர்ஹேரனைக் காணவில்லை

பாரதியார் தனது ஜப்பானியக் கவிதை என்ற கட்டுரையில், உபயநே நோகுச்சி, மிஸ்.ரீஸ், வாஷோ மத்ஸுவோ என்ற கவிஞர்களைக் குறிப்பிடுகிறார். ஆனால், அதில் வெர்ஹேரன் என்ற பெயரே காணப்படவில்லை. பாரதிதாசனின் குறிப்புகள் காலக் கணக்கைக் கொண்டு பார்த்தால் குழம்பிக் கிடக்கின்றன. பாரதியாரோடு 12 ஆண்டுகள் பழகியதாக பாரதிதாசன் குறிப்பிடுகிறார். ஆனால், பாரதிதாசனைப் பற்றி பாரதி எங்குமே குறிப்பிடவில்லை, இரண்டே இரண்டு இடங்களைத் தவிர.

புதுச்சேரியில் வீசிய புயலைப் பற்றி 30.11.1916 அன்று சுதேசமித்திரனில் பிரசுரமான, “ஆலங்குப்பத்து வாத்தியார் புயற்காற்றை அனுபவித்த கதை” என்ற அவரது செய்திக் கட்டுரையில், பாரதிதாசன், சுப்புரத்ந முதலியார் என்றும் ஆலங்குப்பத்து வாத்தியார் என்றும் குறிப்பிடப்படுகிறார். மற்றொன்று 27.10.1916 வெளியான தராசுக் கட்டுரை. அதில் பாரதிதாசனுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அதில் இடம்பெற்றுள்ள கவிதை பாரதிதாசனுடையது என்பதால் அதில் குறிப்பிடப்படும் புலவர் அவர்தான் எனக் கருதலாம்.

பாரதி – பாரதிதாசனின் முதல் சந்திப்பைக் குறித்து பாரதியாரின் வார்த்தைகளிலேயே நமக்குக் கிடைத்துள்ள நம்பிக்கைக்குரிய ஆவணம் தராசுக் கட்டுரைதான்.

பாரதிதாசனின் முதற் சந்திப்பை மட்டுமல்ல, காந்தி சென்னையில் நடத்திய சொற்பொழிவு, அன்னி பெசன்ட் ஒரு மலை நகரில் சிறை வைக்கப்பட்டிருந்தது, நாவலாசிரியர் மாதவையா சுதேசமித்திரனுக்கு எழுதிய கடிதம் இவற்றுக்கெல்லாம் சாட்சியும் கூறுவதும் தராசுதான்.

பத்திரிகையாளன் வம்பளக்கலாம். ஆனால், அந்த வம்பும் வரலாறாக வேண்டும். சான்று, நூறாண்டு காணும் தராசு!

  • நன்றி: இந்து தமிழ் திசை

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s