அவன் ஒரு தொடர்கதைதான்…

-இசைக்கவி ரமணன்

(மகாகவி பாரதியின் 101வது நினைவுதினம்- நாளை…)

“இந்த மெய்யும் கரணமும் பொறிகளும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்…”

-பாரதியின் இந்தச் சொற்களில்தான் எத்தனை ஆயாசம்! 

பகவான் ரமணருக்குத் தள்ளாமை கண்டுவிட்டதைப் பார்த்து ஓர் அன்பர் அவரிடம் கேட்டாராம். ‘ஐயா என்ன இது? இந்த வயதிலேயே உங்கள் உடம்பு ஆடிப்போய் விட்டதே!’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘நானென்ன செய்வதடா! குடிசைக்குள் யானை புகுந்துவிட்டதே!’ என்றாராம். இது பாரதிக்கும் பொருந்தும்தானே? அவன் முப்பத்தொன்பது வயது வாழ்ந்ததே அதிசயம் என்றுதான் நான் கருதுகிறேன். ஆயிரம் சூரியன்களின் ஆற்றலை அந்தப் பூஞ்சையுடம்பு எப்படி, எத்தனை நாட்கள் தாங்கும்? உணவில் விருப்பமில்லை; உள்ளம் எப்போதும் ஏதோவோர் கற்பனை உலகில் சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கும். பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு இல்லை. போட்ட வைத்த வழியில் போகுமா வெள்ளம்?

ஒரு பக்கம் அவனை ஆன்மிக நாட்டம் விண்ணுக்கு இழுத்தது. ஆனால், நாடு அடிமைப்பட்டுக் கிடந்த நிலை, மக்களின் அடிமையின் மோகம், மூட நம்பிக்கைகள், பெண்ணின் தாழ்வு நிலை, சமூக விழிப்பின்மை இவை அவனை வீதிக்கு இழுத்தன. இவ்விதம், விண்ணுக்கும் வீதிக்குமாய் அவன் இடைவிடாமல் இழுக்கப்பட்டதில் அவன் உள்ளம் பெரும் அழுத்தத்திற்காளானது. ‘மனம்போல் உடம்பு’ என்று அவன் சொன்ன வார்த்தைக்கு அவனே எடுத்துக்காட்டானான். ஒரே பாட்டில் அவன் இந்த இழுபறி நிலையை, பராசக்திக்கும், வாணிக்கும் இடையே இழுக்கப்படுவது போலச் சித்திரித்திருப்பான்:

“நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
   நானிலத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டிலே தனி இன்பத்தை ஊட்டவும்
   பண்ணிலே களி கூட்டவும் வேண்டிநான்
மூட்டும் அன்புக் கனலொடு வாணியை
   முன்னுகின்ற பொழுதிலெலாம், குரல்
காட்டி அன்னை பராசக்தி, ஏழையேன்
   கவிதை யாவும் தனக்கெனக் கேட்கிறாள்..”

அரவிந்தரின் நட்பு அவனை வேத ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. ஆன்மிக ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், நேரடியாக அரசியலில் ஈடுபடுவதே அப்போதைய கடமை என்று அவன் வலிமையாகக் கருதினான்.

“முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
   மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்…”

-என்று நம் மக்களை ஆக்கிவிட்ட ஆங்கிலேயக் கல்வித் திட்டமென்னும் சதியைக் கண்டு கொதித்துப் போனான்.

“காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்!
   கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்” 

என்றும்,

“கற்புநிலை பற்றிப் பேசவந்தார், இரு
   கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” 

என்றும்,

அவன் பாடியபோது, நமது பெண்களின் தாழ்வுநிலை என்பது நாம் அவர்களுக்கு இழைத்த அநியாயம் என்றே அவன் கருதிப் பொங்கியெழுந்தான் என்பது புரிகிறது. செம்மல் சிதம்பரனார் சிறையுண்டதை அவனால் தாங்கவே முடியவில்லை. “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?” என்று வெடித்து அழுகிறான்.

மக்களோ, கொஞ்சமும் உணர்வின்றி, வெள்ளையர்களுக்கு அடிமைகளாகவும், கைக்கூலிகளாகவும், அதுவே தமக்குச் சிறந்ததென்றும் கருதிய அவல நிலை அவனை எப்படித் தாக்கியிருக்கும்!

“கஞ்சி குடிப்பதற்கிலார், அதன்
   காரணங்கள் இவையென்னும் தெளிவுமிலார்”
“நண்ணிய பெருங்கலைகள், பத்து
   நாலாயிரம் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே, இவர்
   பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார், அந்தோ
நெஞ்சு பொறுக்குதிலையே!”

என்று வருந்தி வருந்திப் பாடுவான்.

அவனால் சும்மா இருக்க முடியவில்லையே! கண்டும், காணாதிருக்க இயலவில்லையே! எட்டையபுரத்து சமஸ்தானத்திலேயே ஜமீந்தார் புகழைப் பாடிக்கொண்டு, சம்பளம் வாங்கிக்கொண்டு காலம் கடத்தியிருக்கலாமே! அல்லது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குப் பணிந்து மனுப்போட்டுக்கொண்டு, எந்த ஆபத்துமில்லாமல் வாழ்ந்திருக்கலாமே! இரண்டு பெண்கள், அவனே கதியென்று அகப்பட்டுக்கொண்ட மனைவி, அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்தரவாதமில்லாத வாழ்க்கை, சிறை, பாழான உடம்பு – இவையல்லவா அவன் தனது சமூக உணர்வுக்கும், நாட்டுப் பற்றுக்கும் கொடுத்த விலை?

இத்தனைக்கும் “இந்த தெய்வம் நமக்கு அனுகூலம்” என்று பாடுகிறான். அவன் ஒருபோதும் தெய்வத்தைக் கைவிட்டதில்லை என்றே சொல்லக் தோன்றுகிறது! ஒருபக்கம் பராசக்தி என்பது அவனுக்கு நித்திய நிதர்சனம்தான். இன்னொரு பக்கம், அவன் நாடிய ஆன்மிக நிலையாகிய மரணமிலாப் பெருவாழ்வு என்பது அவனுக்கு இடைவிடாத கண்ணாமூச்சுதான்.

“பிள்ளைப் பருவத்திலே, எனைப்
   பேணவந்தாள் அருள் பூணவந்தாள்” 

-என்ற வரிகளில்தான் எத்தனை ஏக்கம்! குள்ளச்சாமி, கோவிந்தசாமி என்றெல்லாம் அவன் குருமார்களை ஓயாமல் நாடி அவர்களைப் பாடினாலும், ஆன்மிக உலகத்திற்கான திறவுகோலை அவனுக்கு வழங்கத்தக்க குரு அவனுக்கு வாய்க்கவில்லை என்பதே உண்மை. அது பராசக்தி அவனுக்கென்று பிரத்யேகமாக வைத்திருந்த திட்டத்தின் ஒரு பகுதி என்றே கருதுகிறேன்.

அவனுடைய எழுத்திலே இல்லாத சுவை சோகம்தான்! இதைவிட அவனது குணச்சித்திரத்து மேன்மையை எப்படிச் சொல்வது! நானறிந்த வரையில், அவனுடைய ஆன்மிக ஏக்கத்தின் ஆழத்தைக் காட்டுகின்ற பாடல்கள் மூன்றுதான்:

“சொல்லடி சிவசக்தி! நிலச்
   சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ!”
“வெள்ளக் கருணையிலே, இந்நாய் சிறு
   வேட்கை தவிராதோ?”
“மானவன்றன் மனத்தினில் மட்டும்
   வந்து நிற்கும் இருளிதென்னே!”

-என்னும் வரிகளே அவை.

திலகருக்குப் பிறகு, வ.உ.சி.க்கு முன்பு, என்றுதான் அவனுடைய முடிவு திட்டமிடப்பட்டிருந்தது என்று தோன்றுகிறது. திலகர் அவன் உருவாகத் தேவை; வ.உ.சி. எதையும் தாங்கிக்கொண்டு, அவனையும் தாங்கக்கூடிய திருக்கரத்தார். வீதியெல்லாம் கோயில்; மக்களெல்லாம் தெய்வங்கள்.

“இந்த

நாட்டோர் கீர்த்தியெங்கும் ஓங்க, கலி
   சாடும் திறனெனக்குத் தருவாய்! அடி
தாயே நினக்கரியதுண்டோ!”

என்று தனது அடையாளமனைத்தையும் துறந்து தூக்கியெறியும் யோக நிலையிலும் நாட்டின் மேன்மையைப் பற்றியே பராசக்தியிடம் முறையிட்டவன் ஆன்ம ஞானியா? அரசியல் யோகியா? சமூக பக்தனா?

“கண்ணா! நான் நானூறு வருடங்கள் கழித்துப் பிறந்திருக்க வேண்டியவனடா!” என்று குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னான். தவறு பாரதி! நவமியில் இராமனும், அஷ்டமியில் கண்ணனும் பிறந்தது போலத்தான், ஒரு துயரமான காலகட்டத்தில், அதைத் தமிழ்க் கவிதையால் துடைக்கும் அருட்கரமாக, சரியான நேரத்தில்தான் பிறந்தாய் நீ. “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்,” என்பதே உனக்கு விதிக்கப்பட்ட கடமைகள் என்று நீ கருதியதும் சரிதான். நாற்பது கூட ஆவதற்கு முன்னே பறந்துவிட்டாயே என்று நாங்கள் இன்றைக்கும் வருந்தினாலும், நீ மறைந்ததும் சரியான நேரத்தில்தான். அதற்குப் பிறகு நீ வாழ்ந்திருந்தால், தாங்கியிருக்க மாட்டாய். உன் உடம்பும், உயிரின் கெடுவும் அத்தனைக்குத்தான்.

ஆனால், ‘நிலமிசை நீடு வாழ்வார்’ என்று திருவள்ளுவப் பெருமான் சொன்னது உனக்குச் சாலப் பொருத்தமே பாரதி! தமிழ்நாட்டின் சிந்தனைப் போக்கையே மாற்றியவன் நீ. எத்தனையோ புதிய புதிய பாரதிகளைத் தோற்றுவித்தவன் நீ. நிலமிருக்கும் வரை, தமிழ் இருந்தே தீரும். தமிழிருக்கும் வரை, அதன் தலைமகனாக நீ எங்கள் உள்ளங்களில் பாடிக்கொண்டிருப்பாய். உயிர்களை உந்திக்கொண்டிருப்பாய்.

குறிப்பு: 

கலைமாமணி திரு. இசைக்கவி ரமணன், பாரதி புகழ் பரப்பும் கவிஞர்; பத்திரிகையாளர்; சொற்பொழிவாளர்; ‘பாரதி யார்?’ நாடகத்தை உலகெங்கும் நடத்தி வருபவர். 

நன்றி:  ‘இலக்கியப் பீடம்’ மாத இதழ் (செப். 2021).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s