-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்
18. சீகாழிக் கோவை இயற்றி அரங்கேற்றல்
சீகாழிக்கு வந்தது
பிள்ளையவர்கள் திரிசிரபுரத்தில் இங்ஙனம் இருந்து வருகையில் சென்னையிலிருந்த விநாயக முதலியார் முதலிய பிரபுக்களும் வித்துவான்களும் அடுத்தடுத்துக் கடிதம் எழுதி மயிலைப்புராணம் பூர்த்தியாயிற்றா வென்பதை விசாரித்து வந்தார்கள். அக்காலத்துப் பலவகையான செலவுகளால் இவருக்கு ஆயிரக்கணக்கான கடன் உண்டாயிற்று. அதனைத் தீர்த்தற்கு நினைந்து நகரப் படலம் இறுதியாகப் பாடி வைத்திருந்த திருமயிலைப் புராணத்தை எடுத்துக்கொண்டு சென்னை சென்று பூர்த்திசெய்து அரங்கேற்றினால் கடனைத் தீர்ப்பதற்கு வேண்டிய தொகையும் பிற செளகரியங்களும் பெறலாமென்று எண்ணி, சில மாணாக்கருடன் சென்னைக்குப் பிரயாணமாகிச் சீகாழிக்கு வந்தனர். அப்பொழுது இவருடைய பிராயம் நாற்பத்தைந்து.
அக்காலத்திற் *1 சீகாழியில் வேதநாயகம் பிள்ளை முன்ஸீபாக இருந்தார். அவர் இவரைச் சீகாழிக்கு வந்து சிலநாள் தம்முடன் இருக்க வேண்டுமென்று விரும்பிப் பலமுறை இவருக்கு முன்னமே கடிதம் எழுதியிருந்ததுண்டு. அதனால் இவர் சென்று அவ்வூரில் அவர் வீட்டில் தங்கினார். அக்காலத்தில் அவர் *2 நீதிநூலைச் செய்து முடித்து வைத்திருந்தமையின் இவர் வரவை நல்வரவாக நினைந்து சில காலம் இருக்கும்படி செய்து, தாம் இயற்றிய அந்நூலை முற்றும் படித்துக்காட்டி வேண்டிய திருத்தங்களைச் செய்து கொண்டார். அப்பொழுது அவருடைய தம்பியும் தமிழபிமானியுமாகிய ஞானப்பிரகாசம் பிள்ளை யென்பவர், “நீதி நூலுக்கு நீங்கள் சிறப்புப்பாயிரம் அளிக்க வேண்டும்; பிறரிடத்திலிருந்தும் வாங்கிக்கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவர் விருப்பத்தின்படியே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இவராற் செய்யப்பெற்றன.
சீகாழிக்கோவை இயற்றியது
அச் செய்யுட்களைப் பலர் முன்னிலையிற் படித்துக் காட்டிக் கொண்டிருக்கையில்,
“நூலியற்றி யீதலொன்றே யுன்னதெனக் கோடலைபன் னூலு மோர்நம்
மாலியற்றிக் கொடுத்திடுமைந் திணைக்கோவை யேற்றனையா லளவி லாத
சேலியற்று புனற்குளத்தூர் வேதநா யகமகிபா சிறப்பச் செய்யுட்
பாலியற்ற லேற்றலிவை யிரண்டினு நீ யெப்போதும் பயிலு வாயே”
என்ற செய்யுளால் வேதநாயகம் பிள்ளை மேல் இவர் ஒரு கோவை செய்திருத்தல் அவ்வூராருக்கு வெளியாயிற்று. ஆகவே அக் கோவையிலிருந்து சில பாடல்கள் சொல்லிக் காட்டவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அதிலுள்ள சில அருமையான செய்யுட்களை இவர் சொல்லிக் காட்டினர். கேட்ட சைவச்செல்வர்கள் அவற்றின் நயத்தையும் பொருளமைதியையும் அறிந்து இன்புற்று, “ஐயா! இத்தலத்துக் கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீ பிரமபுரேசர் மீது தாங்கள் ஒரு கோவை இயற்றித் தந்தால் எங்களுக்குப் பரமதிருப்தியாக இருக்கும்” என்று தெரிவித்தனர். இவர், “சென்னை சென்று திருமயிலைப் புராணத்தை அரங்கேற்றி வருவதாகப் புறப்பட்டுவிட்டேன். பொருள் முட்டுப்பாட்டினால் விரைவில் அவ்வாறு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது. நான் சென்று திரும்பும் பொழுது இங்கே வந்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என்றார். அதனைக் கேட்டவர்கள் பின்னும் வற்புறுத்தி வேதநாயகம் பிள்ளையிடமும் தெரிவித்துக்கொண்டார்கள். கேட்ட அவர் பிள்ளையவர்களைப் பார்த்து, “நீங்கள் இவர்கள் சொல்லியபடி செய்தால் எனக்கு எவ்வளவோ பயனுண்டாகும். உங்களோடு உடன் இருந்து வருவதைவிட வேறு சந்தோஷம் ஒன்றுமில்லையென்பது உங்களுக்குத் தெரியாததன்று. நானும் அவர்களைப்போலவே, தாங்கள் இங்கிருந்து அக்கோவையை இயற்றி அரங்கேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்” என்றார். கேட்ட இவர் அவ்விடத்திலேயே இருப்பாராயினர். உடனே வேண்டிய விடுதியும் பிற செளகரியங்களும் அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த *3 கனவான்களால் அமைக்கப்பட்டன.
அப்பால் நூல் இயற்றத் தொடங்கி ஒவ்வொரு தினத்தும் பத்து அல்லது பதினைந்து செய்யுட்களாக ஆராய்ந்து ஆராய்ந்து செய்து உடன் இருப்பவர்களுக்கு அப்போதப்போது படிப்பித்துக் காட்டி நூல்நயங்களைப் புலப்படுத்திக் கொண்டுவந்தார். சில மாதங்களில் அக்கோவை பூர்த்தியாயிற்று.
உடன் இருந்த இருவர் செயல்
சீகாழிக் கோவை இயற்றி வருகையில் இடையிடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் வேதநாயகம் பிள்ளையின் வேண்டுகோளின்படி அவர் வீடு சென்று தாம் இயற்றிக்கொண்டு வரும் அந்நூலில் ஆனவற்றை இவர் படிப்பித்துப் பொருள் கூறி மகிழ்விப்பது வழக்கம்; தம்மோடுகூட இருப்பவர்களிற் சிலரை உடனழைத்துச் செல்வார். ஒருநாள் கோவைச் செய்யுட்களிற் சிலவற்றைப் படிப்பித்துக் கேட்டு வேதநாயகம் பிள்ளை மிக்க மகிழ்ச்சியோடு இருக்கையில் இவர் ஏதோ ஒரு காரியார்த்தமாக வீட்டின் புறம்பே சென்றனர். அப்பொழுது வேதநாயகம் பிள்ளை இவருடன் வந்து அங்கே இருந்த இருவரை நோக்கி, “இந்தக் கோவைச் செய்யுட்கள் எவ்வளவு நயமாக இருக்கின்றன பார்த்தீர்களா?” என்று கேட்டனர். உடனே அவ்விருவருள் ஒருவர், “இத்தலத்திற்கு வேறொரு பெரியவர் முன்பு ஒரு பிரபந்தம் செய்திருக்கிறார். அதிலுள்ள செய்யுட்கள் நிரம்பச் சுவையுள்ளனவாக இருக்கும். அவற்றை நீங்கள் கேட்டதில்லை போலும்” என்றார். அதனைக் கேட்ட வேதநாயகம் பிள்ளை அவரை ஏற இறங்கப் பார்த்து, “இவர் அழுக்காறுடையவராகத் தோற்றுகிறார்” என்றெண்ணி அக்கருத்தை வெளிப்படுத்தாமல் மனத்தில் அடக்கிக்கொண்டு அவரை நோக்கி, “அந்நூலிலிருந்து ஒரு செய்யுளைச் சொல்லும்” என்றார். அவர் ஒரு செய்யுளைச் சொன்னார்; அதில், “சமையவிசேடமாச்சுது” என்றுள்ள பகுதியைக் கேட்ட உடனே வேதநாயகம் பிள்ளை சட்டென நிறுத்தும்படி குறிப்பித்து, “பன்மை எழுவாய்க்கு ஒருமைப் பயனிலை வந்திருத்தலும் ஆயிற்றென்றது ஆச்சுதென்று வந்திருத்தலும் பிழையல்லவோ? மற்றைச் செய்யுட்களும் இப்படித் தானே இருக்கும்? இந்தப்பிழை மலிந்த செய்யுட்களையா சிறந்த செய்யுட்களென் றெண்ணுகிறீர்கள்?” என்று சினக்குறிப்போடு சொல்லிவிட்டு மேலும் கடிந்து, “பிள்ளையவர்களுடைய செய்யுளைப் பற்றி நான் பாராட்டிச் சொல்லுகையில் அதைச் சிறியதேனும் காதில் வாங்கிக்கொள்ளாமல் திடீரென்று வேறு ஏதோ ஒன்றைச் சொல்ல ஆரம்பித்துவிட்டீரே. உம்மை உபசரித்துத் தம்முடன் ஆகாரம் அளித்துக்கொண்டிருக்கிற அவர்களுக்கு அவமதிப்பை உண்டாக்க முயலுகின்றீரே. அவர்களிடம் வேண்டியவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கே கேடு நினைக்கின்ற நீர் மற்றவர்கள் விஷயத்தில் என்ன தான் செய்யத் துணிய மாட்டீர்? அவர்களிடத்திற் பிரீதியுள்ளவனும் அதிகாரியுமாகிய என்னிடத்திலேயே இப்படிச் சொல்லுவீராயின் வெளியில் எவ்வளவுதான் சொல்ல மாட்டீர்?” என்று சொன்னார்.
புறம்பே சென்றிருந்த இவர் வந்தனர். அங்கிருந்த இருவரும் வேதநாயகம் பிள்ளையினுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் தோன்றாமல் விழித்துக் கொண்டிருப்பதையும் அவர் மேலும் கண்டிப்பதையும் கண்டு இவர் சமாதானமாகச் சில வார்த்தைகள் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது வேதநாயகம் பிள்ளை, “நல்ல ஸ்வபாவமுடையவர்களைக் கூட வைத்துக்கொள்ள வேண்டுமேயன்றி இத்தகையவர்களைச் சேர்த்துக் கொள்ளலாகாது. உங்களுக்குச் சாதகர்களாக இருக்கிறார்களென்று எண்ணியே நான் இவர்களை உள்ளே அழைத்துக் கேட்கச் சொன்னேன். இவர்களுடைய தீயகுணம் எனக்கு இதற்கு முன்பு தெரியவில்லை. உங்களுடைய அருமையான பாடல்களில் எனக்கு அவமதிப்பு வர வேண்டுமென்று சங்கற்பித்துக்கொண்டு ஏதோ சில வார்த்தைகளை நீங்கள் இல்லாத சமயம் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்களே” என்றார். இவர், “தக்கவர்கள் எங்கே கிடைக்கிறார்கள்? கிடைத்தவர்களைக் கொண்டுதான் நாம் ஸந்தோஷத்தையடைய வேண்டியிருக்கிறது. இவர்கள் மிகவும் நல்லவர்களே. தம்மை அறியாமல் ஏதோ தவறு செய்துவிட்டார் போலும்! இனி ஒருபொழுதும் அவ்வண்ணம் செய்ய மாட்டார். பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி அவருடைய கோபத்தை ஆற்றுவித்தார். பின்பு அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு இவர் தம்முடைய விடுதி வந்து சேர்ந்தனர்.
சீகாழிக் கோவையை அரங்கேற்றியது
பின்பு சீகாழிக் கோவையை அரங்கேற்றுவித்தற்கு நிச்சயித்து ஒரு நல்ல தினம் குறிப்பிட்டு, சீகாழியிலிருந்த பிரபுக்களும் வித்துவான்களும் அயலூரிலுள்ள பிரபுக்களுக்கும் வித்துவான்களுக்கும் சொல்லியனுப்பினார்கள். கேட்க விருப்பமுற்ற ஒவ்வொருவரும் வந்து சீகாழியில் இருப்பாராயினர். ஸ்ரீ பிரமபுரேசர் திருக்கோயிலின் தெற்குப் பிராகாரத்திலுள்ள வலம்புரி மண்டபம் அரங்கேற்றுதற்குரிய இடமாகப் பலராலும் நிச்சயம் செய்யப்பெற்றது. அம்மண்டபத்தில் இருந்து இவர் அரங்கேற்றத் தொடங்கினார். அப்பொழுது மூலத்தைப் படித்தவர் சாமிநாத கவிராயர். மூன்று காப்புச் செய்யுட்களும் முடிந்தன. நூலில் இரண்டு செய்யுட்கள் நிறைவேறின. இவர், செய்யுளின் நயத்தையும் பல நூல்களிலிருந்து அருமையான செய்யுட்களை மேற்கோளாகக் கூறி யாவருக்கும் விளங்கும்படி பொருள் உரைக்கும் அழகையுங் கேட்டுக்கேட்டு யாவரும் ஆனந்தக்கடலில் ஆழ்ந்தனர்; ‘இந்த வித்துவானைக் காண்டற்கும் இவர் கூறும் இனிய அரிய மொழிகளைக் கேட்பதற்கும் நாம் என்ன புண்ணியம் செய்தோம்!’ என்று ஒவ்வொருவரும் தம்மிற் கூறி வியந்தனர்.
கேட்பதற்கு வந்திருந்த வித்துவான்களுள் குருசாமி பிள்ளை யென்பவர் ஒருவர். அவர், திருவாசகத்திற்கு உரையெழுதிய இராசாத்துரைப் பிள்ளையின் குமாரர். பிற்காலத்திற் பிள்ளையவர்களுடைய சம்பந்தியாகவும் ஆயினர்.
“நாமகண் மாமகள் சேர்காழி நாதர் நகுமிமயக்
கோமகள் பாகர் விடைப்பாகர் தென்கழுக் குன்றத்தொப்பி
லாமகள் கோதைநம் போல்வா டலினிமை யாடலிற்றாள்
பூமகள் சூடலி னையமின் றாலிவள் பூமகளே!” [3]
என்னும் செய்யுள் படிக்கப்பட்டது. அதற்குரிய அவதாரிகையைச் சொல்லிவிட்டு இவர் அதற்குப் பொருள் கூறி முடித்தனர். அப்பொழுது ஒருவர் அழுக்காறுடைய சிலரால் மந்தணமாக ஏவப் பெற்று, “வித்துவானாகிய நாம் மற்றவர்களைப்போலே இந்தச் சமயத்திற் பாராட்டிக் கொண்டேயிருந்தால் நம்முடைய கல்விப் பெருமைக்குப் பயனென்ன? நாளை யாரேனும் நம்மை மதிப்பார்களா? இந் நூல் முடிந்துவிட்டால் இவர் ஊர்போய் விடுவார். நாமல்லவோ இங்கிருந்து ஊராருடைய மதிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? எப்போதும்போலே இனிச் சும்மா இருக்கலாகாது. சமயம் வந்தபொழுதல்லவோ நம்முடைய யோக்கியதையையும் கௌரவத்தையும் பிரகாசப்படுத்த வேண்டும்?” என்று நூலை அரங்கேற்றத் தொடங்கும் முன்னரே யோசித்துச் சமயம் பார்த்துக்கொண்டு இருந்தவராதலின், “இந்தப் பாட்டில் ஓராட்சேபம் இருக்கிறது” என்று சிலரோடு பேசிக்கொண்டு கேள்வி கேட்கத் துணிவுற்றார். பிள்ளையவர்கள் அவர் இரகசியமாகப் பிறருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “என்ன விசேடம்?” என்றனர். அவர், “சீகாழிக்குக் கோவை பாடவந்த நீங்கள் இச்செய்யுளில் திருக்கழுக்குன்றத்தைக் கூறியதற்கு நியாயமென்ன? சொல்ல வேண்டும்” என்று கூசாமல் நிர்ப்பயமாகக் கேட்டனர். இவர் அவருடைய மாறுபாடான எண்ணத்தை அறிந்து கொள்ளவில்லை. ‘இக்கருத்தைப் பலரும் அறிந்து கொள்ளும் பொருட்டே அன்புடன் வினாவுகின்றனர். இவருக்கு விடை கூறுவது போலவே கூறிப் பலருக்கும் விஷயத்தைப் புலப்படுத்த வேண்டும்’ என்றெண்ணிச் சொல்வாராயினர்.
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”
என்பது பொய்யா மொழியன்றோ?
“சிவபெருமான் எங்கும் வியாபகர், எல்லாமுடையவர்; ஆதலின், மற்றத் தலங்களும் அவருடையனவே யென்பதை அறிவித்தற்கு இங்ஙனம் கூறுவது மரபு. திருச்சிற்றம்பலக் கோவையார் முதலிய கோவைகளில் இதைப்போன்ற பிரயோகங்கள் வந்துள்ளன. *4 ‘விண்ணிறந்தார்’ என்னும் செய்யுளில், ‘தில்லையம் பலத்தார் கழுக்குன்றினின்று, தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்’ எனவும், *5 ‘உருகுதலைச் சென்ற’ என்னும் செய்யுளில், ‘பெருந்துறைப் பிள்ளை கள்ளார், முருகு தலைச் சென்ற கூழைமுடியா’ எனவும், *6 ‘வேலன் புகுந்து’ என்னும் செய்யுளில், ‘எழிற்றில்லைநின்ற, மேலன் புகுந்தென்க ணின்றா னிருந்தவெண் காடனைய, பாலன்’ எனவும் வேறு தலங்கள் கூறப்பட்டிருத்தல் காண்க” என்று சொல்லிவிட்டு வேறு கோவைகளிலிருந்தும் உதாரணங்களைச் சொல்லத் தொடங்கினார்.
கேள்வி கேட்டவர் இவர் கூறிய ஒன்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றும் பேச இயலாமல் மேலே என்ன கேட்கலாமென அறியாராய் மயங்கியிருக்கையில், இவர் திருச்சிற்றம்பலக் கோவையாரென்றதனால் அவருக்கு ஒரு நினைவு வந்தது. தாம் கேட்பதற்கும் அந்தச் சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமில்லையென்பதையும் விபரீதமாகுமென்பதையும் அறியாதவராகி, “ஐயா, திருச்சிற்றம்பலக்கோவையார் தான் கோவை; மற்றக் கோவைகளெல்லாம் கள்ளிமேற்படர்ந்த கோவைகளென்கிறார்களே; அதற்கு என்ன விடை சொல்லுவீர்கள்?” என்று தைரியமாகக் கேட்டார்.
சபையிலிருந்தவர்கள் யாவரும் அவருடைய வரம்பு கடந்த செயலையறிந்து வருத்தமடைவாராயினர். இவர், ‘அவர் ஆட்சேபம் செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்; என்ன சமாதானம் கூறினாலும் அவர் அங்கீகரிக்க மாட்டார்’ என நினைந்து மௌனமாக இருந்தார். சபைத் தலைவராக வீற்றிருந்த வேதநாயகம் பிள்ளைக்கு அப்போது வந்த கோபத்திற்கு அளவில்லை; “இந்த மனுஷ்யரை அங்கீகரிக்க வேண்டாம்; உடன் வைத்துக்கொள்ள வேண்டாம்; உங்களிடத்துச் சிறிதும் அன்பில்லாதவரென்று முன்பு இவரைப்பற்றியும் இவரைப் போன்ற சிலரைப்பற்றியும் நான் சொன்னதுண்டு. நீங்கள் அதைக் கவனிக்கவில்லை. இனி நான் சும்மா இருத்தல் அழகன்று” என்று சொல்லிவிட்டு அங்கே நின்ற சேவகர்களை நோக்கி, “இவரை உபசாரமாக வெளியே அழைத்துப்போய் விட்டுவிட்டு வாருங்கள்” என்று சொல்லவே சேவகர்கள் அவ்வாறே செய்ய வந்தனர்.
அப்பொழுது அவர் தமக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு வேறு வழியின்மையையும் தமக்கு அனுகூலம் செய்பவர் ஒருவரும் அங்கில்லாமையையும் அறிந்து பிள்ளையவர்களைப் பார்த்து, ‘எனக்கு நேர்ந்துள்ள இந்த அவமானத்தை எப்படியாவது இச்சமயத்திற் பரிகரிக்க வேண்டும்’ என்பதைத் தம்முடைய விநயமான பார்வையாற் புலப்படுத்தினர். அப்பார்வையின் குறிப்பையறிந்த இவர், *7 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந், தகுதியால் வென்று விடும் உயரிய குணத்தினராதலின் சேவகர்களை நோக்கிக் கையமர்த்திவிட்டு, வேதநாயகம் பிள்ளை முதலியவர்களைப் பார்த்து, “ஆட்சேபிப்பதும் சமாதானம் கூறுவதும் எங்களுக்கு வழக்கம்; ஆதலின் நாங்கள் பேசிக்கொள்வதைக் குற்றமாக எண்ண வேண்டாம்” என்று சொல்லி அவர் கோபத்தைத் தணிப்பித்து, ஆட்சேபித்தவரை அங்கே வந்து இருக்கச்செய்துவிட்டு நூலின் மேற்பாகத்தைப் படிப்பிக்கச் செய்து பிரசங்கம் செய்வாராயினர்.
அரங்கேற்றுதல் பெருஞ்சிறப்புடன் நடைபெற்றது. வந்து கேட்போர்களும் நாளுக்கு நாள் மிகுதியுற்றார்கள். மரியாதை யறியாத யாரேனும் வந்து வெறுப்புண்டாகும்படி நடந்து இக்கவிஞர்பிரானுடைய அருமையை யறியாமல் இடையூறு செய்வார்களோவென்று நினைந்து வேதநாயகம் பிள்ளை, அக்கோயில் விசாரணைக்காரரிடம், “தினந்தோறும் நான் வந்த பின்பே தொடங்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் வந்திருந்து கேட்டின்புற்றார். அப்பொழுது ஒவ்வொருநாளும் அரங்கேற்றுதல் முடிந்தவுடன் அந்நூலையும் இவரையும் சிறப்பித்து ஒவ்வொரு செய்யுள் பாடினார். அவற்றுள் *8 இருபது செய்யுட்களே இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றுட் சில வருமாறு:
“குற்றமில்சீர் மீனாட்சி சுந்தரவா ரியநின்னாக் கோயிலின் மேவ
நற்றவமென் செய்தனணா மகடமிழ்செய் தவமெவனீ நவிலு மேன்மை
உற்றதிருக் கோவைபெறப் புகலிசெய்பாக் கியமெவனவ் வுயர்நூல் கேட்கப்
பெற்றவென்போ லியர்புரிந்த மாதவமென் னோதுறுவாய் பெருமை மிக்கோய்”
“இன்பாவிற் கோவைசொன்ன மீனாட்சி சுந்தரப்பே ரிறைவ யானும்
உன்பாவிற் கவிசொல்வே னென்கவிபார்ப் போரிதைமீண் டோரா தான்றோர்
முன்பாச்சொ னூல்களையே துதிப்பருன்பா வுணர்வோர்கண் முன்னோர் நூலைப்
பின்பாகச் சொலிவெறுப்பர் நல்லவனீ யோயானோ பேசு வாயே”
“விதியெதிரி லரிமுதலோர் புகல்புகலி யீசரே விண்ணோர் மண்ணோர்
துதிபொதிபல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சி சுந்த ரப்பேர்
மதிமுதியன் கோவையைப்போற் பெற்றீர்கொ லிக்காழி வைப்பி னீதி
அதிபதிநா மெனவறிவீர் நம்முன்னஞ் சத்தியமா வறைகு வீரே.”
“நல்லார்க்கு நல்லவனா மீனாட்சி சுந்தரவே ணவின்ற கோவை
இல்லார்க்கு நிதிதுறவா வில்லார்க்கு விதிபுவிவாழ் வெல்லா நீத்த
வல்லார்க்குத் திதிஞானங் கல்லார்க்கு மதிவேலை வைய கத்திற்
பல்லார்க்குக் கதிபுகலிப் பதியார்க்குத் து தியதன்சீர் பகர்வோர் யாரே.”
இவ்வாறே கேட்கும் வித்துவான்கள் பலரும் சிறப்புக் கவிகளை இயற்றித் தங்கள் தங்கள் நன்மதிப்பை வெளியிட்டார்கள். அவர்கள் கூறிய கவிகள் இப்பொழுது கிடைக்கவில்லை.
வேதநாயகம் பிள்ளை சொல்லிய சிறப்புக் கவிகளை யெல்லாம் கேட்ட இவர் அவருடைய அன்புடைமையைப் பாராட்டி,
“நாட்டுக்கு நல்லகுளத் தூர்வேத நாயகநன் னாம மாலே
வீட்டுக்கு வாயிலெனுங் காழிக்கோர் கோவையெனை விளம்பச் செய்தே
ஏட்டுக்கு மடங்காத துதிகவிகள் சொற்றனைநின் னியற்பாட் டுள்ளோர்
பாட்டுக்கு நான்செய்த தொன்றோபல் செய்தாலும் பற்றா வன்றே”
என்ற ஒரு செய்யுளைச் சொன்னார்.
அக்கோவை அரங்கேற்றப்பட்ட பின்னர் மேலே சொல்லிய கனவான்களும் பிறரும் தலைக்கு ரூ. 50 முதல் ரூ. 300 வரை ஸம்மானம் செய்தார்கள். சிலர் பொன்னாடை முதலியன தந்தார்கள்; சிலர் பூஷணம் தந்தனர்; தருமபுர ஆதீனத் தலைவர் ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் தக்க பரிசுகளை அனுப்பிக் கெளரவித்தார். இவ்வாறு பலர் இவருக்கு ஸம்மானம் செய்து ஆதரித்ததனால் மகிழ்வுற்ற வேதநாயகம் பிள்ளை,
“தேமாரி பொழிபொதும்பர்த் திருக்காழி யிறைமுன்
திகழாண்டு சித்தார்த்தி திங்கள்பாத் திரத்தில்
பூமாரி சுரர்பொழியச் செல்வர் பலர் கூடிப்
பொன்மாரி மிகப் பொழியப் புலவர் குழாந் துதித்துப்
பாமாரி நனிபொழியப் பல்லியங்கண் முழங்கப்
பலம்புரிய நலம் புரியும் வலம்புரிமண்டபத்துத்
தூமாரி யெனப்புகலிக் கோவையைமீனாட்சி
சுந்தரப்பேர் மதிவல்லோ னரங்கேற்றி னானே”
என்ற செய்யுளைக் கூறினார். இதனால் சித்தார்த்தி வருடம் (1861) புரட்டாசி மாதம் அந்நூல் அரங்கேற்றப் பெற்றதென்பது தெரியவருகின்றது.
சீகாழிக்கோவை 534 – செய்யுட்களை உடையது. இத்தல சரித்திரங்களும், ஏனைய சிவதல சரித்திரங்களும், நாயன்மார்களுடைய அருஞ் செயல்களும், சைவ சாஸ்திரக் கருத்துக்களும் இந் நூலுள் அங்கங்கே சந்தர்ப்பத்திற்கேற்ற வண்ணம் செவ்வனே அமைக்கப்பெற்றுள்ளன. மற்றக் கோவைகளிற் காணப்படாத பல துறைகள் இதிற் காணப்படும். அவை இலக்கண விளக்கத்தின் விதியைத் தழுவி அமைக்கப்பட்டவை. இதில் உவமைகளாகக் காட்டப்படுவனவற்றுட் பெரும்பாலன சைவ சம்பந்தமாகவே உள்ளமையால் இந்நூல் சிவநேசச் செல்வர்களாற் படித்து இன்புறற்பாலது.
இந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
ஐயம் “வெள்ளாம்ப லான்கொல்செந் தாமரை யான்கொலொண் மேனிகருங் கள்ளாங் குவளையன் னான்கொனங் காழிக் கடவுள்வெற்பில் உள்ளா மிவரடி தோய்தவ முன்ன ருஞற்றுலக நள்ளாங் குடிகொண் டரசா டவஞ்செய் நலத்தினனே” (2) இடையூறு கிளத்தல் “ஞாலம் பொலியப் பொலிகாழி நாதர் நறுமலர்க்கைச் சூலம் பொலியக்கொள் வார்பவர் வேணிச் சுடர்மதிபோற் பாலம் பொலியநிற் பீர்மிசை யேயன்றிப் பாணியுள்ளால் நீலம் பொலியவைத் தீர்தகு மோவென் னிலைகண்டுமே” (15) பிரியேனென்றல் “வரியேன் மதர்விழிச் சங்கிலி காண மகிழடியிற் பிரியேனென் றோதிப் பிரிந்துவன் றொண்டர்முன் பெற்றதையான் தெரியே னலேன்வண் புகலியன் னீர்நுமைத் தீர்ந்துமுயிர் தரியேன் பிரியே னெனச்சட்டை நாதர்முன் சாற்றுவனே” (30) பாங்கனை உண்மகிழ்ந் துரைத்தல் “ஒருகா னடந்தென் வருத்தந் தணித்த வொருவன்முனம் இருகா னடந்துதன் றோழன் வருத்த மிரித்தபெருங் குருகான் மலர்ப்பொய்கைக் கொச்சைப் பிரானிற் குலவுநல்லோன் அருகா லவனட் பெழுமையு மோங்க வளியனுக்கே” (78) இறைவன்றனக்குக் குறைநேர் பாங்கி இறைவிக்கு அவன் குறை உணர்த்தல் “அருவ ருருவ ரருவுரு வாள ரவிர் புகலித் திருவ ரிருவ ருணரார் வரைநஞ் செழும்புனத்தே வருவ ரொருவ ரரியர் பிரியர் வயமுருகே பொருவர் தருவர் தழையவர்க் கென்ன புரிதுமின்னே” (156) தலைவி தலைமகனூர்க்குச் செல்ல ஒருப்படுதல் “தாரூர் தடம்புயத் தோணிப் பிரானரு டாங்கியன்பர் சேரூ ரடையத் தடையெவ னோமுன் சிறந்தவரைப் பாரூர் புகழ்மிகு நும்மூ ரெதுவெனப் பன்னிரண்டு பேரூரென் றாரெங்கு நாந்தேடிச் செல்வது பெண்ணணங்கே.” (258)
சென்னைப் பிரயாணத்தை நிறுத்திக்கொண்டது
சீகாழிக்கோவை அரங்கேற்றி முடிந்த பின்பு, இவர் வேதநாயகம்பிள்ளை விருப்பத்தின்படியே பின்னும் சில மாதங்கள் சீகாழியில் இருந்துவந்தார். அக்காலத்துத் தம்மை நாடிவந்த *9 மாணாக்கர்களுக்கு வேண்டிய பாடங்களைச் சொல்லிவந்தார். சென்னைக்குச் செல்ல வேண்டுமென்னும் கருத்து, பொருள் முட்டுப்பாட்டால் உண்டாயிற்றாதலின் சீகாழியிற் போதிய பொருள் கிடைத்தமையாலும் சென்னை போய் வருவதில் சிரமம் மிக உண்டாகுமென்று தோற்றினமையாலும் அப்பிரயாணத்தை நிறுத்திக்கொண்டார். சென்னையிலுள்ள நண்பர்களுக்குச் சில அசெளகரியங்களால் வரக்கூடவில்லையென்றும் இறைவன் திருவருளிருப்பின், புராணத்தை முடித்துக்கொண்டே வருவதாகவும் கடிதங்கள் எழுதிவிட்டார். திருமயிலைப் புராணத்தின் எஞ்சிய பகுதி பின்பு பாடப்பெறவேயில்லை; பாடியிருந்த பகுதியும் கைதவறிப் போயிற்று.
திருத்தில்லையமக அந்தாதி
சீகாழியிலிருந்த காலத்தில் இவர் ஸ்ரீ நடராச தரிசனத்தைக் கருதி அடிக்கடி சிதம்பரம் சென்று வருவதுண்டு. அப்படிச் சென்றிருந்த ஒரு சமயம் வாமதேவ முருகபட்டாரகர் முதலிய தமிழ் வித்துவான்களுடைய விருப்பப்படி திருத்தில்லை யமக அந்தாதியை இயற்ற ஆரம்பித்துச் சில தினங்களிற் பூர்த்திசெய்தார். இவ்வந்தாதி அருமையான அமைப்பையுடையது. இதனைப் போன்று நயமும் உயர்ந்த யமகவிசித்திரமும் உடைய நூல் இக் காலத்தில் வேறொன்றும் இல்லை. அம்பலவா வம்பலவா, கருமங் கருமங் கணம்பரமா, கனியக் கனிய மனம், அருத்த மருத்த மென்றே, வருந்த வருந்த, சிவசிவசங்கர என்பவைகளும், இன்னம் பரம்பரனே, நந்தாதரத் தகரவித்தை, கடுகத்தனை யன்பு, தேவாரமா திருவாசகமா, மதியாதவனங்கி, சிற்றம்பலங்கண்டு, தமனியமன்ற, பேரம்பலம்பல, பொன்னம்பலவன், பதஞ்சலியாதவனே, பரமானந்தத்தை, பாடகந்தண்டை, மாதங்க மடங்கல், மூவாயிரவரும், மாணிக்கவாசக ரென்பவைகளும் இவ்வந்தாதியில் யமகத்தில் அமைந்தவை.
அயலூர்களிலிருந்த பிரபுக்கள் இவரைச் சீகாழியிலிருந்து தங்கள் தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று இவருக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து சில நாட்கள் வைத்திருந்து அனுப்பி வருவதுண்டு.
மகாலிங்கம்பிள்ளை உபசரித்தது
அவர்களுள் இவருடைய நண்பரும் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்த அடியவரும் ஆகிய தில்லைவிடங்கன் மகாலிங்கம்பிள்ளை யென்பவர் ஒருநாள் பல நண்பர்களோடும் இவரைச் சீகாழியிலிருந்து அழைத்துச் சென்று தம்முடைய வீட்டில் உபசாரத்தோடு ஒரு நல் விருந்தளித்தனர். அது யாரும் வியக்கத்தக்கதாக இருந்ததன்றி அவருடைய பேரன்பையும் புலப்படுத்தியது. விருந்துண்டபின் இவர் திண்ணையில் வந்து அமர்ந்து சந்தனம் பூசிக்கொண்டு தாம்பூலம் தரித்துக்கொள்ளுகையில் மனங் கனிந்து ஒரு பாட்டைச் சொல்லி ஒரு மாணவரைக் கொண்டு அதை எழுதுவித்து எல்லோரும் கேட்குமாறு படித்துக் காட்டச் செய்தனர். அப்பாட்டு வருமாறு:
“மாமேவு நந்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய சாமி
பூமேவு மலரடிக்கன் புடையமகா லிங்ககுண புருட மேரு
தேமேவு சுவையமுத நவையறப்பன் முகமனொடு சிறப்ப வூட்டித்
தாமேவு தாயிலா னடியவருக் கென்றுமொரு தாயா னானே.”
இதனைக் கேட்டவர்கள் இவருடைய அன்புடைமையையும் புலமையையும் அறிந்து வியந்து இவரைநோக்கி, “தமக்கு உணவு அளித்தவர்களிடத்து நன்றி பாராட்டி ஒளவையாரும் கம்பரும் பாடினார்களென்று சில செய்யுட்களைக் கூறுவார்கள். இதுகாறும் அதனை நம்பாமல் இருந்தோம். இப்போது தங்களுடைய செயலால் அச்செய்திகளை உண்மையென்று நம்புகிறோம்” என்று சொன்னார்கள். உடனே மகாலிங்கம்பிள்ளை விம்மிதமுற்றுத் திருவாவடுதுறைக் குருபூசையில் தமக்குக் கிடைத்த அழகிய வஸ்திர ஜோடியை கற்கண்டு பழம் புஷ்பம் தாம்பூலங்களுடன் வைத்து வணங்கி, “சிறியேனாகிய என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, இவ்வளவு தூரம் எழுந்தருளியதற்கு அடியேன் என்ன கைம்மாறு செய்யவல்லேன்! தங்களால் புகழப்படுவதற்கு நான் எவ்வளவினேன்! என்னபாக்கியஞ் செய்தேனோ! இனிமேல் எனக்கு யாதொரு குறையுமில்லை. தங்களுக்கு எளியேனுடைய அன்பின் அறிகுறியாகச் சமர்ப்பிக்கப்படும் இந்தச் சிறுகாணிக்கையை அங்கீகரித்துக் கொண்டருளவேண்டும். இது ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் பிரசாதமே” என்று விநயத்தோடு வேண்டினர். இவர் புன்னகையோடும் அவருடைய அன்பிற்கு மகிழ்ந்து அதனை ஏற்றுக்கொண்டார். வரிசைப்பற்றென்னும் ஊரிலிருந்த கனவானாகிய லிங்கப்ப நாயகரென்பவர் ஒருமுறை இவரை வருவித்துத் தாம் அவ்வூரில் அமைத்திருந்த சத்திரத்தில் தங்கச் செய்து உபசரித்துச் சில நாள் இருக்கச்செய்து அனுப்பினார். அப்பொழுது இவர் அச்சத்திரத்தைச் சிறப்பித்து,
“குலவுபுகழ்ச் சுந்தரர்க்குக் கட்டமுது கொடுத்ததிருக் குருகா வூரர்
நிலவும் திக்காலஞ் செய்திலரா லசத்தரலர் நிகழ்த்தக் கேண்மோ
வலவுசித நயசுகுண லிங்கப்ப மகிபால வள்ளல் தானும்
உலவுமறு சுவையமுது பலர்க்குமகிழ்ந் தூட்டுவதாக லுவந்து மாதோ”
என்னும் செய்யுளைப்பாடி அங்குள்ளாரை மகிழ்வித்தனர். இவ் வண்ணமே அங்கங்கே சென்ற காலங்களில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மனமகிழ்ந்து பாடிய பாடல்கள் பலவென்பர்.
திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்
ஆச்சாபுரம் என்று வழங்குகிற பெருமண நல்லூரிலிருந்த சிவலோகத் தியாக முதலியாரென்னும் சைவச் செல்வர் ஒருவர் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் அறிந்து இவரைத் தம் ஊருக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். பின்பு அத்தலத்து எழுந்தருளியுள்ள திருவெண்ணீற்றுமையம்மையின் மீது பிள்ளைத்தமிழ் ஒன்று இயற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார். அங்ஙனமே இவரால் ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றி அரங்கேற்றப் பெற்றது. அந்நூல் மணவைப் பிள்ளைத்தமிழென வழங்கும். அது பிற்காலத்தில் (விக்கிரம வருடம் தை மாதம்) சி.தியாகராச செட்டியாரால் அச்சிடப்பெற்றது.
இத் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானது திருநாமம் சிவலோகத் தியாகரென்பது. அது காப்புப்பருவத்தில்,
“நாடுதிரி யக்கரரு ளாளர்மண வைக்கிறைவர்
நாதர்சிவ லோகத்தி யாகரைப் போற்றுவம்”
எனச் சந்தச் செய்யுள் ஒன்றில் அமைக்கப்பெற்றுள்ளது. அங்கே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமணம் நடைபெற்ற காலத்தில் அம்பிகை அங்கே உள்ள ஸ்ரீ பஞ்சாக்கர தீர்த்தத்தின் கரையில் நின்று அடியார்களுக்கு வெண்ணீறளித்தருளினமையின் திருவெண்ணீற்றுமையென்னும் திருநாமங்கொண்டனள். இவ்வரலாறு இந்நூலில் அம்புலிப் பருவத்தில்,
“வையமுழு துய்யவொரு வாவியங் கரைநின்று வாய்மலர்ந் தழுதபிள்ளை
மதுரமிகு செவ்வாய்க் கருங்குழற் காதலியை மாமணஞ் செய்தஞான்று செய்யமலர் மீதனந் துஞ்சுபஞ் சாக்கரத் தீர்த்தக் கரைக்கணின்று
சேர்ந்தார் களங்கமுற் றொழியவெண் ணீறுதன் செங்கரத் தாலளித்தாள் உய்யவிவள் வாவென் றுரைத்தபடி யேவிரைந் தொருவனீ வந்துசேரின்
உன்களங் கந்தவிர வெண்ணீறு நல்காள்கொ லோவிதனை யுணராததென்
ஐயமன மோவித் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே” (8)
என்னும் செய்யுளிற் கூறப்படுகிறது.
மேற்கூறியுள்ள பஞ்சாக்கரத் தீர்த்தத்துடன் அத்தலத்துள்ள கங்கை என்னும் தீர்த்தமும்,
“உலகுபுகழ் பஞ்சாக் கரப்பெருந் தீர்த்தமென் றொன்றுண்டு மூழ்கி னோருக் கொழியாத பிணிமுழு தொழிப்பததன் மான்மிய முரைக்கரிது முகம னன்றால் இலகுமிஃ தன்றியுங் கூபவடி வாய்க்கங்கை யென்பதொன் றுண்ட தன்சீர் எம்மனோர் பேசுதற் கரியதரி யதுபெரிய தித்தலப் பெருமை கண்டாய்” (அம்புலிப். 6)
-எனப் பாராட்டப் பெறுகின்றது.
அத்தலப் பெயர் பெருமணம், நல்லூர், பெருமணநல்லூர், நல்லூர்ப் பெருமணம் என நான்கு வகையாக வழங்கும். அதனை நினைந்து, வாயென்றும் காலென்றும் கால்வாயென்றும் வாய்க்காலென்றும் வழங்கப்படும் வாய்க்கால்கள் பல அத்தலத்திற்கும் தமக்குமுள்ள ஒப்புமைகருதி, அறிஞர் வலஞ்செய்தல் போல இத்தலத்தைச் சூழ்ந்திருக்கின்றன வென்பது பின்னுள்ள செய்யுளிற் கூறப்பட்டிருக்கிறது:
“வண்கா லென்ன வாயென்ன வாய்க்கா லெனக்கால் வாயெனப்பேர் மருவி மாறா வனங்கொணமை மான நல்லூர் பெருமணம்வான் எண்கா நல்லூர்ப் பெருமணமே ரேய்பெ ருமண நல்லூரென் றிலகு பெயர்பூண் டுறுவனமேய்ந் தென்றும் விளங்கு மிந்நகரைத் தண்கா லறிஞர் பலர்குழுமித் தவாது சூழ்ந்து மருவுதலாற் றாவா நாமு மெஞ்ஞான்றும் தவாது சூழ்த றகுதியென ஒண்கால் பலசூழ் சிவலோகத் துறைவாய் தாலோ தாலேலோ உலக முவக்குந் திருவெண்ணீற் றுமையே தாலோ தாலேலோ.” (தாலப். 2)
பெண்மகவைப் பெறுதல் சிறப்பன்றெனக் கருதுவோர்களும், ஆண்மகவைப் பெறுகவென்று ஆசி கூறுவோர்களும், பிறவாறு உரைப்போர்களும் நாணும்படி, அம்பிகை இமவானுக்குப் புதல்வியாகிப் பெண் பிறப்பைச் சிறப்புறச் செய்தாளென்னும் கருத்தமைய இப்புலவர்பிரான் செங்கீரைப்பருவத்தில்,
*10 “பேசுபுகழ் சால்பெரும் புவனத்தி லாண்மகப் பெறல்சிறப் பென்று மற்றைப்
பெண்மகப் பெறலத் துணைச்சிறப் பன்றுதுயர் பெற்றதொப் பாகுமென்றும்
மாசுபடு துன்பமே பெண்ணுருவ மாயெந்த வைப்பினும் வருமதென்றும்
மதிக்கினொரு மகவுமக வாவென்று மிங்ஙனம் வகுத்துரைப் பார்க்களோடு
கூசுத லிலாதக மலர்ந்தாண் மகப்பெறுதி குறைவுதப வென்றாசிமுற்
கூறுநரு முள்ளநாண் கொள்ளவெள் ளப்படாக் குவடுவா னணவவோங்கும்
தேசுமலி பனிமலைக் கொருபுதல்வி யாயவுமை செங்கீரை யாடியருளே
திருப்பெரு மணத்தம ரருட்பெரு மணச்செல்வி செங்கீரை யாடியருளே” (2)
-என்று பாடியுள்ளார். முத்தப்பருவத்தில் உமையம்மையின் திருவாய் முத்தத்தைப்போல ஏனைய முத்தங்கள் சிறவாவென்றும் அவை இன்ன இன்ன காரணத்தாற் குறைபாடுடையனவென்றும் எடுத்துக் காட்டுவர் :
“மதிமுத்தம் வீரன்வயி ரக்கழற் காறேய்க்க மண்ணிடைத் தேய்ந்ததுயர்வேய்
வருமுத்த மதிலெழுந் தழலால் வெதுப்புண்டு மாமைகரு கியதுசெஞ்சொற்
பொதிமுத்தம் வன்பகடு காலுழக் கப்பிளவு பூண்டதால் இப்பிவளைமீன்
பொலிமுத்தம் வெய்யபுல வொழியாது நாறும்..............
........................................ இக்குச்
சுடர்முத்தம் ஆலையி னெரிந்ததிவை வேண்டேந் தொடுத்தபற் பலவுயிர்க்கும்
பதிமுத்த மேற்றுமகிழ் நிதிமுத்த மன்னசெம் பவளமுத் தந்தருகவே
பல்லூர் விரும்புமெயி னல்லூ ரரும்புமயில் பவளமுத் தந்தருகவே.” (6)
நீராடற் பருவத்தில் உள்ள,
“நள்ளாறு பழையாறு கஞ்சாறு கோட்டாறு நல்லாறு தருமையாறு
நாவலா றொழுகுவட மேருமுற் பலதேம் நயந்தவர் சடைக்குமஞ்சா
வெள்ளா றெனப்பரவு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே” (2)
-என்பதில் சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ள தலங்களில் ஆறென்னும் முடிவுடைய தலங்களை இடத்துக்கேற்ப அமைத்துள்ளனர்.
சூரனுடைய பெரிய வீடு, பெரும்பறைமுழக்கம், பெருந் தேரோட்டமென்பவை கெட முறையே சிற்றிலழித்தும் சிறுபறை முழக்கியும் சிறுதேருருட்டியும் விளையாடிய முருகக்கடவுளைப் பெற்றாயென்று அம்பிகையைப் பாராட்டுவர்.
“வலியவர னாலமரர் வானகங் கூட்டுண்டு மகிழ்முரட் சூரனிளவல் மக்களொடு வாழ்கின்ற பேரிலழி யச்சிற்றில் மறுகூடு லாயழித்தும் கலியவவன் வாய்தற் பெரும்பறை முழக்கறக் காமர்சிறு பறைமுழக்கம் கண்டுமவ னூருமிந் திரஞால மென்றுரை கதிர்ப்பொலந் தேருருளுறா தொலியசிறு தேரினி துருட்டியும் விளையாடும் ஒண்சதங் கைச்சிறியதாள் ஒருகுழவி யைத்தனி யுவந்தெடுத் துப்புல்லி ஒண்மணித் தொட்டிலேற்றிப் பொலியவினி தாட்டுந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூசலாடியருளே பொருவின்மந் திரசொரூ பத்தனி விமானத்தில் பொன்னூச லாடியருளே.” (ஊசற்.8.)
திருக்குருகாவூர் சென்றது
திருக்குருகாவூரென்னும் ஸ்தலத்தில் இருந்த ஓரன்பர் தம் வீட்டில் திதியொன்று நடக்கப்போவதால் அத்தினத்தில் மாணவர்களுடன் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்று இவரிடம் கேட்டுக் கொண்டனர். அவ்வாறே இவர் பல மாணவர்களுடன் சீகாழியிலிருந்து சென்றிருந்தார். இவருடைய வரவை நினைந்து அவர் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். அதனால் சமையலாதற்கு மிக்க நேரம் ஆகிவிட்டது.
இவருக்கும் மாணாக்கர்களுக்கும் பசி அதிகமாயிற்று. மாணாக்கர்கள் பசிக்கொடுமையைத் தம்முள் மந்தணமாகப் பேசிக் கொண்டு வருந்துவாராயினர். அப்பொழுது இப்புலவர் தலைவர் அதனையறிந்து அவர்களுடைய ஞாபகத்தை வேறொரு விதத்தில் திருப்ப நினைந்து அவர்களுள் திட்டைச் சிதம்பரம் பிள்ளை யென்னும் ஒருவரை அழைத்து, “இங்கே பசியோடிருத்தலை அமைத்து ஒரு செய்யுள் சொல்லும்” என்று சொன்னார். அவர் சிறிது நேரம் யோசித்து ஒரு செய்யுளைப் பூர்த்தி செய்து சொன்னார். எல்லோரும் அதுவரையில் அவர் என்ன சொல்லப்போகிறாரென்று எதிர்பார்த்த வண்ணமாக இருந்தமையின் அவர்களுக்குப் பசி தோன்றவில்லை. அப்போது அவர் பாடிய செய்யுள் வருமாறு :
“தருகா முறுபொழில் சூழ்நாவ லூரந் தணர்முதலோர்க்
குருகார்வத் தோடு பசிநீங்க வுண்டி யுதவியநீ
குருகா புரத்துறை வெள்விடை யீச குறைந்தடைந்து
பருகார்வத் தேமுக் கஃதின் றுதவாப் பரிசென்னையே.”
அதன் பின்பு அங்கே எல்லாம் ஆயத்தமாய்விட்டபடியால் அழைக்கப்பெற்று யாவரும் உண்டு உவந்தனர்.
பல பிரபுக்கள் இவரைத் தங்கள் தங்கள் ஊருக்கு அழைத்து உபசரிப்பதையும் அதனால் அவர்கள் புகழப் பெறுவதையும் அறிந்து, ஒரு கிராமத்திலிருந்த பிரபு ஒருவர், கெளரவம் பெறுவதொன்றையே நோக்கமாகக் கொண்டு ஒருநாள் இவரை அழைத்தார். இவர் மாணவர்களோடு சென்று அவரால் செய்விக்கப்பெற்ற விருந்தை உண்டனர். பின்பு, ஓரிடத்தில் வந்து இருந்தபொழுது உடனிருந்த நண்பர்களிற் சிலர் சீகாழிக் கோவையின் சிறப்பைப் பற்றிப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். உபசரித்த பிரபு தாமும் அந்தச் சம்பாஷணையிற் கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிப் பிள்ளையவர்களைப் பார்த்து, “அந்தக் கோவை ஸ்வாமியின்மேற் செய்யப்பட்டதா? அம்மன் மேற் செய்யப்பட்டதா?” என்று கேட்டார். அவருடைய அறியாமையை அறிந்து, யாவரும் இரங்கினர். இவர் அவ்விரக்கத்தைப் புலப்படுத்திக்கொள்ளாமல், “சுவாமி மேலேதான்” என்று விடை கூறிச் சும்மா இருந்து விட்டார்.
ஒரு சமயம் திருநகரியென்னும் ஊரிலிருந்து தமிழ்ப் பயிற்சியுடையவராகிய வேங்கடராமையர் என்னும் அந்தணர் ஒருவர் இவரிடம் வந்து, தாம் வீடு கட்ட வேண்டியிருத்தலின் அதற்கு வேண்டிய மரம், செங்கல் முதலியன கொடுத்து உதவும்படி ஒரு செல்வரிடம் சொல்ல வேண்டும் என்று வேண்டினர். உடனே இவர் அவரிடம்,
“வளமருவு திருநகரி வாழும்வேங் கடராம மறையோய் கேண்மோ
களமருவும் வரிசைப்பற் றினில்விளங்கும் லிங்கப்பக் கனவான் பாற்செல்
உளமருவு நின்மனைக்குச் செங்கல்புக லூரரன்போ லுதவு மொண்பூந்
தளமருவுந் தருவேண்டிற் கண்ணன்போ லைந்தருவுந் தருவன் மெய்யே”
என்னும் பாடலை எழுதிக் கொடுத்து *11 வரிசைப்பற்று லிங்கப்ப நாயகர்பால் அனுப்பினார். அவர் அதனைக் கண்டு மகிழ்ந்து அவ் வந்தணர் வீடு கட்டுதற்கு எவ்வெப்பொருள்கள் வேண்டுமோ அவற்றையெல்லாம் உடனே கொடுத்துதவினார்.
இவர் தமக்குச் சீகாழியிலும் பிற இடங்களிலும் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியைக்கொண்டு தம்முடைய மாணவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்தும் அவருள் முத்துக்குமார பிள்ளை என்பவருக்கு மணம் செய்வித்தும் வீடு கட்டிக் கொடுத்தும் செலவு செய்துவிட்டு எஞ்சிய தொகையைத் திரிசிரபுரத்திற் செலுத்தவேண்டிய கடனுக்காக அனுப்பி விட்டார்.
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
1. வேதநாயகம் பிள்ளை சீகாழிக்கு வந்த காலம் 1858-ஆம் என்று வேதநாயக விற்பன்னர் சரித்திரத்தால் தெரியவருகிறது.
2. இந்நூல் காளயுக்தி வருடம் தை மாதம் (1859) அச்சிற் பதிப்பிக்கப் பெற்றது.
3. அப்பொழுது இவரை ஆதரித்த கனவான்கள்: சீகாழிச் சிந்நய முதலியார், கருப்பையா முதலியார், குப்பையம் திருவேங்கடம் பிள்ளை, வரிசைப்பற்று லிங்கப்ப நாயக்கர், நெய்ப்பற்றூர்ச் சாமி ஐயர், கடைவாசல் ராமதுரை ஐயர், ஆச்சாபுரம் சிவலோகத்தியாக முதலியார் முதலியவர்கள்.
4. சிற். 107.
5. ௸ 104.
6. ௸ 286.
7. திருக்குறள், 158.
8. இவற்றைப் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டிற் காணலாம்.
9. அக்காலத்தில் வந்து பாடங்கேட்டவர்கள்: முத்தைய வாத்தியார் குமாரர் சிதம்பர வாத்தியார், சீயாலம் சிவசிதம்பரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர்ச் சிவசிதம்பர முதலியார், சிதம்பரம் வாமதேவ முருகபட்டாரகர், வல்லம் கந்தசாமி பிள்ளை, மாயூரம் நடராச பிள்ளை, தில்லை விடங்கன் முத்துக்குமாரபிள்ளை, திட்டைச் சோமசுந்தரம்பிள்ளை.
10. பெரியநாயகி யம்மை கட்டளைக்கலித்துறையிலுள்ள,“கற்றா ரறிகுவர் மக்கடம் பேறெனக் கட்டுரைத்த
சொற்றா னொருபெண் ணொழித்ததென் பாரொடு தொல்லுலகில்
நற்றாண் மகப்பேறு கென்றாசி சொல்பவர் நாணவுனைப்
பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே” (12)என்னும் செய்யுளின் கருத்தை இச் செய்யுள் ஒருபுடை தழுவியது.
11. வரிசைப் பற்று – சீகாழித் தாலுகாவில் உள்ள ஒரூர்.
$$$