தமிழகத் தேர்தல்: வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்ன?

-வ.மு.முரளி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக 84.29 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. (இது நேற்றைய மாலை 6.00 மணி நிலவரம். துல்லியமான புள்ளி விவரம் இன்று மாலை கிடைக்கும். அது இன்னும் கூடுதலாக இருக்கும்).

இந்த அதிகபட்ச வாக்குப்பதிவுக்கு காரணமாக 4 காரணிகளைச் சொல்லலாம்.

அவை:

SIR,

TVK, CFV, AIW.

1. 2021 தேர்தலின்போது 6.28 கோடி மொத்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) காரணமாக இந்த எண்ணிக்கை 5.73 கோடியாகக் குறைந்தது. அதாவது, பட்டியலில் இருந்த 54.80 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதனால் தான் சென்ற தேர்தலை விட 20.73 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பதிவான போதும், வாக்குப்பதிவு விகிதம் 84.29 % ஆகப் பதிவாகியுள்ளது. எனவே SIR தான் வாக்குப்பதிவு அதிகரிக்க முதன்மைக் காரணம்.

இனி சென்ற தேர்தலை விட 20.73 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களிக்க காரணம் என்ன என்று பார்க்கலாம். இவையும் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க இரண்டாம் நிலைக் காரணிகள்:

2. நடிகர் ஜோசப் விஜயின் (TVK) தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரவேசம் இளம் வாக்காளர்களை அதிக அளவில் வாக்களிக்கத் தூண்டியிருப்பது நிஜம். அதன் காரணமாக புதிய வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்திருப்பது வாக்குப்பதிவு அதிகரிக்க முதல் காரணம்.

3. தேர்தலில் வெல்ல பரிசுப் பொருட்களையும் பணத்தையும் வாரி வழங்குவது தமிழகத்தில் ஒரு நடைமுறையாகி விட்டது. (CFV – Cash For Vote) ‘திருமங்கலம் ஃபார்முலா’ திமுக தொடங்கிவைத்த பேரவலம். அதை திமுக, அதிமுக மட்டுமல்லாது, பாஜக, கம்யூனிஸ்டு கட்சிகளும் தொடரும் நிலை தமிழகத்தின் தார்மிக வீழ்ச்சிக்கு அடையாளம். இந்த முறை பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் கட்சியினரால் ஒரு ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ. 5,000 வரை விநியோகிக்கப்பட்டிருப்பதாகத் தகவல். கோவை தெற்கு, கரூர் தொகுதிகளில் அரை கிராம் தங்கக் காசு (சுமார் ரூ. 7,000 மதிப்பு) தேர்தல் நாளில் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பணம் வாங்கிய வாக்காளர் பெருமக்கள் நன்றிக்கடனாக வாக்குச்சாவடிகளுக்குப் படையெடுத்து வாக்களித்ததும் வாக்குப்பதிவு அதிகரிக்க இரண்டாம் காரணம்.

4. ஆட்சி மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி அலை (AIW – Anti Incumbency Wave) இருந்தால் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என்பது ஒரு தேர்தல் சூத்திரம். நல்லாட்சி நடக்கும்போது வாக்களிக்க மக்கள் சுணங்குவர்; ஆட்சி மாற்றம் தேவை என்ற எண்ணம் பெருகினால் மட்டுமே வாக்குச்சாவடிக்குப் படையெடுப்பர் என்பதே இதன் விளக்கம். அந்த அடிப்படையில், அதிகமான வாக்காளர்கள் வாக்களித்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் தமிழகத்தில் ஆண்ட திமுக மீது நீறுபூத்த நெருப்பாக அதிருப்தி இருந்தது உண்மை. திமுகவுக்கு சேவகம் செய்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இதனை மூடி மறைத்த போதும் அதிருப்தி அலை பரவியிருந்தது. இதுவும் கூடுதல் வாக்குப்பதிவுக்கு மூன்றாம் காரணம். இவற்றில் இரண்டாம் காரணி, மூன்றாம் காரணியை சமன் செய்யக் கூடும்.

இந்த மூன்று காரணிகளும் வாக்குப்பதிவு அதிகரிக்க காரணங்கள். வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க SIR காரணம். ஆக இந்த நான்கும் தான் 84.29 % வாக்குப்பதிவு சதவிகிதத்தை எட்ட உதவி இருக்கின்றன.

234 தொகுதிகளில் 20.73 லட்சம் கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் சராசரி 8,700 மட்டுமே. எனவே தேர்தலில் தலைகீழ் மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது.

அதேசமயம், தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றும் முடிவுகளை மக்கள் எடுப்பது வழக்கமாக உள்ளது. 2016 தேர்தல் மட்டும் விதிவிலக்கு. அதற்கு காரணம் புதிதாகக் களமிறங்கிய மக்கள் நலக் கூட்டணி. அதேபோல, இத்தேர்தலில் கருப்புக் குதிரையாக உருவெடுத்த TVK தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துமா? மே 4 வரை நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.

$$$

Leave a comment