எனது தேர்வு

-பானு கோம்ஸ்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது வாக்கு யாருக்கு என்று வழிகாட்டுகிறார் ஊடகவியலாளர் திருமதி பானு கோம்ஸ்.

நடைமுறையில் இருக்கும் ஜனநாயகத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை நெறிமுறைப் படுத்தாமல் ஜனநாயகம் என்று சொல்வதிலேயே பெருமையடைந்து,   அதை வைத்து  மிக அதிகமாக glorify செய்துகொண்டே இருக்கிறோம் என்பதே என் பார்வை. 

இருப்பினும்..

ஒரு வாக்காளராக, அதிலும் ஒரு பெண் வாக்காளராக, நான் எதன் அடிப்படையில்  வாக்களிக்கிறேன்?

1. வார்டு, வட்டம், தொகுதி,மாவட்டம், மாநிலம், நாடு… இவை அனைத்தும் ஒரு சேர முக்கியமானவை. தனித்தனியாக பிரித்துப் பார்ப்பதில்லை. ஏனெனில், இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று மிக வலுவாக இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால்  ‘ஒன்றிய அரசு’ போன்ற அரசியல்தனமான narratives உடன் வரும் கட்சிகளுக்கு / கூட்டணிக்கு ..என் வாக்கு கிடையாது. எப்போதும் கிடையாது.

2. மக்களால் கொடுக்கப்படுகின்ற  ‘வார்டு முதல் நாடு வரை’யிலான   5 வருட ஆட்சி அதிகாரம் என்கிற, 8 கோடி மக்களின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கிற அதி முக்கியமான  பணி வாய்ப்புக்கு, அது குறித்து ஓரளவிற்கேனும் தெரிந்த உழைப்பாளிகள் தான் தேவை. அதனால் புதிதாக வருபவர்களின் அறிவுத்திறனும், உழைப்புத்திறனும் ஒவ்வொரு படிநிலையாக உழைத்து மேலேறிவரும்போது  தான் தெரியவரும் என்பதால், புத்தம் புதிதுக்கும் என் வாக்கு கிடையாது. 

ஒரு கட்சி இன்னொரு கட்சியோடு சண்டை போடுகிறது/ பகைமை பாராட்டுகிறது  என்பதெல்லாம் அந்தந்தக் கட்சியின் தனிப்பட்ட இருப்பு பிரச்சினை. அதற்கும் பொது மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! மத்திய அரசோடு இணைந்து பணியாற்றி மாநிலத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் கூட்டணிக்கே.. இந்தத் தேர்தலில் என் வாக்கு. [உதாரணத்திற்கு சந்திரபாபு நாயுடுவின் ஆந்திராவைப் பாருங்கள்].

இதையெல்லாம் கூறினாலும், அடிப்படையில்  வாக்காளர்களாகிய நம்முடைய வாக்குகள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு யார் வரவேண்டுமென்று தீர்மானிக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

வாக்காளர்களின் தேர்வு தெளிவானதாக இருந்தால்… அடுத்த 5 வருட இறுதியில் அடுத்த தேர்தலின் போது…. பெண்கள் பாதுகாப்பு, கஞ்சா, கள்ள சாராய சாவுகள், ஊழல், கனிம வள கொள்ளை , மணல் கொள்ளை , திருப்பரங்குன்றம், அண்ணா பல்கலை. மாணவி, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, தோற்கடிக்கப்பட்ட 33 % மகளிர் திருத்த மசோதா & தொகுதி மறுவரையறை  மசோதா,  கருத்து சுதந்திரமின்மை என்று கதறிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

$$$

Leave a comment