அடங்கி நட

-ரவீந்திரநாத் தாகூர்

தமிழில்: மகாகவி பாரதி

வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகளை (பஞ்ச வியாசங்கள்), மகாகவி பாரதி தமிழில் வழங்கி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. வங்க பாஷையில் தாகூரால் எழுதப்பெற்று,  அவரது சகோதரர் சுரேந்திரநாத் தாகூரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மாடர்ன் ரிவியூ’ பத்திரிகையில் வெளியான கட்டுரை (Modern Review – 1917 September - Thau Shalt Obey), பின்னர் மகாகவி பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பெ.தூரன் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகள்’ என்ற நூலில் (இன்ப நிலையம், மயிலாப்பூர் வெளியீடு- 1962) இடம் பெற்றிருக்கிறது.

தாகூரின் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், சுய பகடிகள் நிறைந்த, கவித்துவம் மிகுந்த நடையை, இயன்ற வரை அக்காலத் தமிழில் வழங்கி இருக்கிறார் பாரதி. சமஸ்கிருத வார்த்தைகள் மிகுதியாக இருப்பது அக்கால வழக்காகும். சில இடங்களில் ஒரு தடவைக்கு இரு தடவை படிக்க வேண்டி இருக்கும். தாகூரின் சிந்தனை வீச்சு அடிமைத்தனத்தை எதிர்ப்பதாக இருப்பதையும், அதேசமயம், பிரிட்டிஷ் ஆட்சி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதையும் ஒருங்கே காணலாம்.

 “ஏதேனும் ஒரு பெரிய ஜாதியாருக்குப் பெரிய அனுபூதி உண்டாயின், அது பிறர்க்கும் கொடுக்கத்தக்கது. லோபத்தினால் தனக்கே நஷ்டம் உண்டாகும். ஸயன்ஸும் மனுஷ்ய உரிமைகளும் ஐரோப்பாவின் அனுபவப் பயன். இந்தச் செல்வத்தை நமக்குக் கொடுக்கும் பொருட்டாகத் தெய்வம் இங்கிலாந்தை நம்முடைய கரைகளில் கொண்டு வந்து சேர்த்தது. இந்த கடமையை நிறைவேற்றும்படி அவர்களை வற்புறுத்துவது நம்முடைய கடமை. ஒருபாலார் தம்முடைய கடமையைச் செய்யாவிட்டால், இருபாலாருக்கும் மறதியும் வீழ்ச்சியும் உண்டாகும்” – இது இக்கட்டுரையின் ஒரு பகுதி. இதுவே இக்கட்டுரையின் அடிப்படை நாதம்.

மழை கொஞ்சம் தூற ஆரம்பித்தால், எங்கள் சந்திலும், அதுபோய்ச் சேரும் சித்பூர் ரஸ்தாவிலும் நீர் வெள்ளமாய்விடுகிறது. நான் தலை நரைத்த கிழவனாய்விட்டேன். சிறு பிராய முதல் இதுவரை, ஒருமுறை கூடத் தவறாமல், வருஷந்தோறும் இப்படி நடப்பதைப் பார்க்கும்போது, இவ்வுலக வாழ்க்கையில் நீரில் பாதி, நிலத்தில் பாதி குடியிருக்கும் ஜந்துக்களுக்குள்ள யோக்யதைதான் நமக்கும் இருக்கிறது என்ற எண்ணம் என் மனத்தில் அடிக்கடி உதிப்பது உண்டு. 

இங்ஙனம் அறுபது வருஷங்கள் ஆய்விட்டன. இதற்கிடையே உலகத்தில் நடந்த மாறுதல்கள் பல. கலியுகத்தின் குதிரையாக இருந்த நீராவியை இப்போது மின்சார சக்தி கண்டு நகைக்கிறது. கண்ணுக்கு எட்டாதிருந்தது பரமாணு. இப்போது மனத்துக்கு எட்டாதிருந்த சித்தாந்தம் உண்டாயிருக்கிறது. சாகப்போகிற எறும்பைப்போல் மனிதன் சிறகு முளைத்துப் பறக்கிறான். ‘வானத்தில் இடம், உனக்கா எனக்கா?’ என்று நீதிஸ்தலத்திற்கு வியாஜ்யங்கள் விரைவாக வரக்கூடிய காலத்தை வக்கீல்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே நாள் இரவில் சீனர் எல்லோரும் ‘பன்றிக் குடுமி’யை நறுக்கி எறிந்தனர். ஐந்தாறு வருஷத் தாவுதலை ஜப்பான் ஐம்பது வருஷத்தில் தாவிவிட்டது. ஆனால், இந்தச் சித்பூர் ரஸ்தாவில் மழை பெய்தால் சேறு உண்டாகாமற் செய்ய வழியில்லை. அதன் ஸ்திதிக்கு மாறுதல் இல்லை. காங்கிரஸ் என்ற பெயர் உண்டாவதற்கு முன்பு நமது ஜாதிப்பாட்டு எத்தனை சோகமாயிருந்ததோ, அத்தனை சோகமாகத்தான் இப்போது ஸ்வராஜ்யம் நெருங்கிவரும் தருணத்திலும் இருக்கிறது.

குழந்தைப் பிராயமுதலாகவே நாம் பழகிவிட்டபடியால், இதெல்லாம் நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஆகவே, கவலை ஏற்படவில்லை. தண்ணீர் தங்கி, ஓயாமல் செப்பனிட்ட ட்ராம் தண்டவாளத்தில் என்னுடைய வண்டிச் சக்கரம் போகும்போது, எனக்கு மறதி தெளிந்து, ஜனங்களின் போக்குக்கும் நீரோட்டத்துக்கும் சண்டை உண்டாய் அதிலிருந்து அழுக்குத் தண்ணீர் என்மேல் வந்து தெறிக்கும் செய்தியிலே புத்தி சொல்லுகிறது. ‘இதை நாம் ஏன் பொறுக்கிறோம்?’ என்று சிறிது காலமாக எனக்கு ஒரு யோசனை உண்டாய் வருகிறது.

இதைப் பொறுக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. பொறுக்கக் கூடாதென்று தீர்மானிப்பதால் அனுகூலமுண்டு. அதற்கு ஐரோப்பியர்கள் வாஸம் செய்கிற ‘செளரிங்கி’ ரஸ்தா சாக்ஷி. அந்த ரஸ்தாவில் முக்கால் பங்குக்குமேலே ட்ராம் தண்டவாளத்தைப் போட்டு, அதில் முடிவில்லாமல் ‘யானை நடை’யில், செப்பனிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீதியார் ட்ராம்வே அதிகாரிகளுக்கு ஊணுறக்கம் இல்லாதபடி செய்துவிடுவார்கள். நாமோ, கீழ்ப்படிதலாகிய குணமே வடிவெடுத்து வந்திருப்பதால், எதையும் திருத்த முடியும் என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. இதனால் நமது கன்னத்தில் கண்ணீர்ப் பெருக்கும் நமது வீதியில் ஜல தாரைப் பெருக்கும் தீர இடமில்லை. இது ஸாமான்ய விஷயமன்று. எதிலுமே ‘நமக்கு நாம் நாயகர்’ என்ற எண்ணம் நமக்கு ஏற்படவில்லை.

கண்ணாடி மூடிக்குள்ளே தண்ணீர் விட்டு அதில் வளர்க்கப்பட்ட பொன்னிற மீன்கள், கண்ணாடியைத் தண்ணீர் என்று நினைத்து அதில் வந்து மோதிக் கொள்ளுமாம்; பிறகு பெரிய தொட்டியில் கொண்டு போட்டாலும் தண்ணீரைக் கண்ணாடி என்று நினைத்துப் பயந்து பழைய எல்லைக்குள்ளே சுற்றுமாம். ‘அது போலத் தலை உடைந்துபோமோ’ என்கிற பயம் நம்முடைய எலும்புக்குள் ஊறிக் கிடக்கிறது. 

மஹாபாரதத்தில்,  அபிமன்யு பகைவரின் வ்யூகத்துக்குள் நுழையக் கற்று மீளுவதைக் கற்காமல் மாண்டதுபோலே, நாமும் பிறவி முதல் கட்டுப்படக் கற்று அவிழ்க்கக் கல்லாமல், நமக்கு நேரிடும் சகல விபரீதங்களுக்கும் தலை குனிகிறோம்.

மனிதருக்கும், நூல்களுக்கும், திசைகளுக்கும், எல்லைகளுக்கும், கற்பனைத் தடைகளுக்கும் தலை குனிந்து பல தலைமுறையாய் வழக்கமாய் விட்டபடியால், எந்தத் துறையிலும் ‘நாமாக ஒன்று செய்ய முடியும்’ என்கிற உண்மை நம் முகத்தின் முன்னே நின்றாலும், கண்ணுக்குத் தெரியாமல் போகிறது. ஐரோப்பிய மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டாலும் நமக்குத் தெளிவு உண்டாகவில்லை. 

தனக்குத் தானே நாயகனாயிருக்கும் உரிமை எல்லா மனித உரிமைகளிலும் பெரிது. ஆனால் இந்நாட்டிலே இவ்வுரிமை நூல் வசனங்களாலும், பழமொழிகளாலும், கிரியை சடங்குகளாலும் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேசத்தில் மனிதனுடைய புத்தி வழிதவறிப் போகாமலிருக்க, கிரியைகளாலும் சாஸ்திரங்களாலும் கையையும் காலையும் கட்டிப் போட்டிருக்கிறார்கள். அடிகோணாமற் காக்குமாறு, பாதைகளை அழித்துவிட்டார்கள். தெய்வத்தின் பெயர் சொல்லி மனிதனை மனிதன் கீழ்ப்படுத்தி அவமதிக்கும் படி செய்துவிட்டார்கள். இப்படிப்பட்ட தேசம் அடிமைகளைச் செய்வதற்கு நல்ல தொழிற்சாலையாயிற்று. 

ஸர்க்கார் அதிகாரிகளும் அப்படியே சொல்லுகிறார்கள்: “நீங்கள் பிழை செய்யக்கூடும். ஆதலால் சுயசிந்தனையும், சுயகாரியமும் உங்களுக்குத் தகாது” என்கிறார்கள். இங்ஙனம், மனுபராசராதிகளுடைய பல்லவியை இங்கிலீஷ்காரர் பாடும்போது நமக்குச் செவி கூசுகிறது. இங்கிலீஷ்காரரிடம் அவர்களுடைய கொள்கைக்கிணங்கப் பின்வரும் மறுமொழி சொல்லுகிறோம்: “பிழை செய்தால் பெரிய ஆபத்தில்லை. தனக்குத் தானே நாயகனாயில்லாதிருத்தல் பெரிய ஆபத்து. நம் இஷ்டப்படி இடறி நடந்து பழகினாலொழிய நாம் உண்மைக்கு வந்து நிலைபெற முடியாது” என்கிறோம். பின்னும் சொல்லுகிறோம்: நம்மை ஆளுவோர் இப்போது ‘ஜனாதிகாரம்’ என்ற மோட்டார் வண்டியில் ஏறிப் போகிறார்கள். ஆனால் இவர்களுடைய பழைய பார்லிமெண்ட் சபையாகிய வண்டி இரவில் பயணந் தொடங்கிய காலத்தில் ஒரு வழக்கத்திலிருந்து மற்றொரு வழக்கத்திற்கு மாறினபோது அதன் இரைச்சல் வெற்றித் தேர்போலே கேட்கவில்லை. ஒரு வேளை ராஜாவின் சார்பு; பின்பு கோயிற்கக்ஷி; பின் ஜமீந்தார் கக்ஷி; பிறகு சாராயம் வடிப்போர் கக்ஷி; இங்ஙனம் கக்ஷி பேதமும், லஞ்சம் வாங்குதலும், கூச்சலும் சக்திஹீனமும் உடையதாய், அந்த வண்டி பக்கத்துக்குப் பக்கம் சரிந்து சரிந்து நடந்தது. ஒரு காலத்தில் அந்தச் சபை ‘மெம்பர்கள்’ கூட்டத்திற்கு வராவிட்டால் தண்டனை உண்டென்று பயமுறுத்தி அழைக்க நேரிட்டதன்றோ? பிழைகளைக் குறித்துப் பேசுமிடத்தில், ‘பார்லிமெண்ட் சபைகளின் தாய்’ என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் பார்லிமெண்ட் சபை முன்பு அமெரிக்காவிலும், ஐர்லாந்திலும் செய்த பிழைகள் முதலாக, நேற்று ‘டார்டனெல்ஸ்’, ‘மெஸொபொட்டேமியா’ விஷயமாக எத்தனையோ பிழைகள் செய்யவில்லையா? இந்தியாவில் செய்திருக்கும் பிழைகள் கொஞ்சமா? மேலும் அமெரிக்கா ராஜ்யத்தில் பொருளாளிகள் நுழைந்து செய்யும் அக்கிரமங்கள் கொஞ்சமில்லை. ‘த்ரெய்புஸ்’ என்றவர்மேல் ஏற்பட்ட விசாரணையிலே பிரான்ஸ் தேசத்து ராணுவ ஊழல்கள் வெளிப்பட்டன. ஆயினும், ‘ஸ்வராஜ்யமென்கிற ஜீவ நதியானது எந்த வேகத்தால் பிழையாகிற குழியிற் போய் விழுகிறதோ, அதே வேகத்தால் அங்கிருந்து கிளம்பித் தனக்கு ஏற்படும் இடறுகளைத் தானே நீக்கிக்கொள்ளும்’ என்ற விஷயத்திலும் அத்தேசங்களிலேயுள்ள ஜனங்கள் சந்தேகப்படவில்லை.”

நாம் வற்புறுத்தி மேலும் சொல்லத்தக்கதொன்று உண்டு; “ஸ்வராஜ்யத்திலிருந்து ஸாமர்த்தியமும், பாரபுத்தியும் உண்டாவதுடன் உயிருக்கே அதிக பலம் உண்டாகும். ஒரு கிராமம் அல்லது வகுப்பின் எல்லைக்குள் புத்தியைக் கட்டுப்படுத்தியிருப்போர் அங்ஙனம் இல்லாமல் பெரிய ராஜ்ய சிந்தனையும் அதற்குத்தக்க செய்கையும் பெறுவாரானால், மானுஷிகத்தைப் பற்றி அவர்களுக்கு விரிந்த உணர்ச்சி உண்டாகிறது. இந்த ஸெளகரியம் இல்லாமையால் இந்நாட்டில் ஒவ்வொருவனும் அரை மனிதனாகவே இருக்கிறான். அவனுடைய யோசனைகளும், சக்திகளும், ஆசைகளும், முயற்சிகளும் அற்பமாகவே இருக்கின்றன. இங்ஙனம் வலிய வந்திருக்கும் உள்ளச் சிறுமை உயிர்ச்சேதத்திலும் பெரிய கேடாகும். ஆதலால், தவறுதல் நேரிடக்கூடும் என்பதைப் பொருட்டாக்காமல் நாம் சுயராஜ்யம் பெறக் கடவோம். பாதையில் இடறுதல்களை மாத்திரம் கருதி, எங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாகாது. இதுவே உண்மையான உத்தரம்.”

இந்த மறுமொழியை ஒருவன் அதிகாரிகளிடம் சோர்வில்லாமல், மீட்டுமீட்டும் சொல்லித் தொல்லைப்படுத்தினால், அவனை அதிகாரிகள் ‘பந்தோபஸ்தி’ பண்ணி வைக்கிறார்கள். ஆனால், அவனுக்கு ஸ்வதேசத்தாரின் மதிப்பு உண்டாகிறது. ஆயின் இதேமாதிரி ஜவாப்பை ஜாதிப் புரோஹிதரிடம் சொல்லப்போய், “ஐயரே, இது கலியுகமென்றும், மனிதனுடைய எளிய புத்தியை சுயேச்சைப்படிவிட்டால் கெட்டுப்போகும் என்றும் ஆதலால் மூளையை உழைப்பதிலும் தலையைச் சாஸ்திரங்களுக்கு வணங்குதலே சிறந்ததென்றும் சொல்லுகிறீர். இந்த அவமான வார்த்தைக்கு நாங்கள் அடங்க மாட்டோம்” என்று சொன்னால், அவர்களுடைய கண் சிவந்துபோய் உடனே ஜாதியை விட்டுத் தள்ளும்படி உத்திரவு போடுகிறார்கள். ராஜாங்க விஷயமானால் வானத்தில் பறக்கும்படியாகவும் ஜாதி ஆசாரமானால் கட்டையில் காலைக்கட்டிப் போடும்படியாகவும் இவர்கள் விரும்புகிறார்கள். வலப்புறம் திருப்பவும் இடப்புறம் திருப்பவும் தோணியிலே சுக்கான் ஒன்றுதான் உண்டு. அதுபோலே, மனிதன் ராஜ்ய விஷயத்திலும் ஜாதியாசார விஷயத்திலும் – இரண்டிலும் உண்மை நிலைபெற வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. இந்த விதியின் அனுசரணையிலேதான் சித்பூர் ரஸ்தாவுக்கும் செளரிங்கி ரஸ்தாவிற்கும் உள்ள பேதம் தோன்றுகிறது. “எல்லாம் அதிகாரி கையில் இருக்கிறது. நம்முடைய கையைக் கட்டிக்கொண்டு நடப்பதே சரி” என்கிறது சித்பூர் ரஸ்தா. செளரிங்கி ரஸ்தாவோ, ’எமது கைக்குள் காரியங்கள் அடங்கி நடக்காவிட்டால், நமக்கு கையிருந்து பயன் என்ன?’ என்று கேட்கிறது. தனது கைக்கும் தெய்வத்தின் கைக்கும் சம்பந்தம் உண்டென்று தெரிந்து கொண்டபடியால், ‘செளரிங்கி’ உலக முழுதையும் வசப்படுத்திக்கொண்டது. இந்த நம்பிக்கையை இழந்துவிட்டபடியால், ‘சித்பூர்’ உலகத்தை இழந்துவிட்டது; அரைக் கண் மூடி மவுனியாய், நிஷ்டையின்பங்களை நாடுகிறது. 

கண்ணை மூடிக்கொண்டால் ஒழிய, நம்முடைய அற்புதமான ஆசாரங்களைத் தவறாமல் அனுசரிப்பது ஸாத்யமில்லை. கண்ணைத் திறந்தாலோ, உலக முழுதையும் ஆளுகிற பொதுவான லோகவிதி நமக்குத் தென்படாமல் இராது. ஒரு கூட்டத்தாரேனும், ஒரு மனிதனேனும், இந்தப் பெருவிதியை வசப்படுத்தினால், அதிலிருந்து அதிகாரம், செல்வம், விடுதலை என்ற பரிசுகள் கிடைக்கும். இந்த விதியை உறுதியான அஸ்திவாரமாகக் கொண்டு ஐரோப்பிய நவீன நாகரிகம் நிலை பெற்றிருக்கிறது. இதில் நம்பிக்கை இருப்பதனால், அது பெரிய விடுதலை பெற்று நிற்கிறது. நாமோ கையைப் பிழைந்துகொண்டு, யஜமான ஆக்கினைக்குக் காத்திருக்கிறோம். வீட்டிலே மூத்தவன், போலீஸ், தலையாரி, கோயில் குருக்கள் முதலியவர்களில் ஏதேனும் ஒன்றைப் பூஜைபண்ணி நம்முடைய சொந்த யோசனையையும்   சொந்தச் செய்கையின் திறமையையும் ஆயிரம் தூளாக உடைத்து நான்கு பக்கத்துக் காற்றிலும் வீசி எறிந்து விடுகிறோம். 

இதற்கு ஒரு காலேஜ் மாணாக்கன், “நாங்கள் இந்தக் கதையை எல்லாம் நம்புவது கிடையாது. வைசூரிக்குப் பால் குத்திக்கொள்ளுகிறோம். பேதிக்கு உப்புக் கொடுக்கிறோம். விஷ ஜ்வரம், கொசு வாயில் சுமந்து வரும் கண்ணுக்குத் தெரியாத பூச்சியால் உண்டாவதை அறிவோம். இவற்றை எல்லாம் தெய்வங்களின் கூட்டத்திற் சேர்க்கவில்லை” என்று சொல்லக்கூடும். கொள்கை மாறக்கூடும். ஆனால் நாம் நமக்கு நாயகராகாமல், புறத்தே ஓரதிகாரத்தை எப்போதும் குருட்டுத்தனமாக நம்பித் தொங்கும் குணம் நம்முடைய ஊக்கத்தை வேரறுக்கிறது. இப்படி எங்கும் சூழ்ந்த பயமானது நம் அறிவையும் உள்ளத்தையும் வசப்படுத்தியிருப்பதால், நமது மனம் கோழைப்பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவென்றால், உலக முழுதும் தழுவிய மாற்றொணாத ஸர்வவிதியை நாம் நம்புவதில்லை. ஐயப்படுதலும், ‘எது வந்துவிடுமோ, நாம் எப்படி ஒன்றைத் துணிவாகச் செய்யலாம்’ என்று திகைப்பதும் பயத்தின் குணங்களாகும். நமது ராஜாங்கத்தாரிடத்திலே கூட இந்தக் குணம் சில சமயங்களில் காணப்படுகிறது. ராஜாங்க யந்திரத்திலே எப்போதேனும் ஓட்டை உண்டாகி, அதன் வழியே பயம் நுழைந்து அதனால் அவர்கள் தமக்கு இனியவாகிய ஸ்வதர்மங்களை மறந்து தம் ஆட்சியை உறுதியாகத் தாங்கும் வேர்க் கொள்கையைக் கோடாரியால் வெட்டுகிறார்கள். அப்போது தர்மமும் நீதியும் ஒதுங்கிப்போய், கெளரவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் முன்னே நிற்கிறது. ‘தெய்வ விதியை மீறி, அழுகைக் கண்ணீரை அந்தமான் தீவில் மறைத்துவிட்டால் கசப்பு இனிப்பாய்விடும்’ என்று நினைக்கிறார்கள். ‘ஸகல ரோக நிவாரணி’ என்று தன் ஒரு மருந்தைப் பாவனை செய்துகொண்டு, உலகப் பொதுவிதியைச் சிலர் உல்லங்கனம் செய்வதற்கு இஃதொரு திருஷ்டாந்தம். இதற்கெல்லாம் உட்காரணம் அற்புத்தனமான பயமும் தன்னலம் வேண்டலும்; அல்லது, அற்பத்தனமான சூதினால் நேர்வழியை விட்டு விலக முயலுதல். இங்ஙனம் நாம் எண்ணத் தொலையாத அதிகாரிகளுக்குப் பூஜை நைவேத்தியம் பண்ணிக் குருட்டு அச்சத்தால், மானுஷிக உரிமைகளைப் புறக்கணிக்கிறோம். பெளதிக சாஸ்திரத்திலும், ராஜ்ய சாஸ்திரத்திலும் நாம் எத்தனை உயர்வாகப்  பரீக்ஷை தேறிய போதிலும், பிறர் உத்திரவுக்குக் காத்திருப்பதாகிய ஊறின வழக்கத்தை நம்மால் விட முடியவில்லை. தற்கால வழியை அனுசரித்து நாம் ஜனாதிகார சபைகள் ஏற்படுத்தினால், அவற்றிலும் எவனாவது ஒருவன் நாயகமாகி மற்றவர்களை மேய்க்கும் தன்மை உண்டாகிறது. இதன் காரணம் யாதெனில், பொது ஜனங்கள் தன்னை மறந்திருத்தல், தூங்குதல், உண்ணுதல், குடித்தல், கலியாணம் பண்ணுதல், பாடையேறுதல் முதலிய ஸகல காரியங்களையும் பிறருடைய ஆணைப்படியே செய்து வழக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிராமணன் ஒருவன் குடத்தில் கொண்டுவரும் ஜலம் அழுக்காக இருப்பதால் குடிக்கத் தகாதென்றும், சண்டாளன் ஒருவன் சுத்தமாகக் காய்ச்சி வடிக்கட்டிக் கொண்டுவந்த நீர் சுத்தமாக இருப்பதால் குடிக்கத் தகும் என்றும் நான் சொன்னால் வெறுமே குயுக்தி பேசுகிறான் என்று சொல்லி என்னைக் கண்டிப்பார்கள். ஏனெனில், எனது கொள்கை ‘யஜமான் உத்தர’வுடன் ஒட்டவில்லை.

‘ஒட்டாவிட்டால் என்ன குடி கெட்டுப் போயிற்று?’ என்று நான் கேட்டால் உடனே என்னை ஜாதியிலிருந்து தள்ளிவிடுவார்கள். என்னை விருந்துக்குக் கூப்பிட மாட்டார்கள். நான் செத்துப்போனால் சாவுக் கிரியைகளுக்குக் கூட வர மாட்டார்கள். 

இப்படி உலக வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் குரூரமான கொடுங்கோன்மை நடப்பதனால் ஜனங்களுக்கு நன்மையென்று நம்புவோர் ராஜாங்கத்தில் கூசாமல் பரிபூர்ண விடுதலை கேட்பது மிகுந்த வியப்புக்கு இடமாகிறது.

முன்பு, நமது தேசத்திலே, உபநிஷத்துக்காரர் தெய்வத்தின் விதியைக் குறித்துப் பேசும்போது சொல்லுகிறார்: ‘தெய்வத்தின் விதியை மாற்ற முடியாது. அது எங்கும் எப்போதும் இசையும்’ என்று. இதை நமது முன்னோர் கண்டிருந்தனர். அந்த விதி நித்யமானது, க்ஷணிகம் அன்று. ஆதலால் அதை நாம் அறிந்துகொண்டு செய்கையில் பயன்படுத்தவில்லை. எத்தனைக்கு எத்தனை அவ்விதியை நாம் ஸ்வீகரிக்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை நமது பாதையில் உள்ள தடைகள் விலகும். இந்த விதியின் ஞானமே இயற்கை நூல் (ஸயின்ஸ்) என்று சொல்லப்படும். இந்த ‘ஸயின்ஸ்’ வலிமையாலன்றோ ஐரோப்பா தற்காலத்தில், “பூமியில் விஷக்காய்ச்சல் இல்லாமல் செய்துவிடுவேன். மனிதரின் வீடுகளில் சோற்றுப் பஞ்சமும் கல்விப் பஞ்சமும் இல்லாமல் செய்துவிடுவேன். ராஜ்யத்தின் பொது நன்மைக்கும் மனுஷ்யனுடைய ஸ்வதந்திரத்திற்கும் முரண்படாமல் செய்வேன்” என்று துணிவுடன் கூறுகிறது. 

’அறியாமையால் கட்டும், அறிவினால் விடுதலையும் கைகூடும்’ என்பதை முன்னோர் அறிவார். பொய் எது? தன்னை ஸர்வத்திலிருந்து பிரிவாகக் காணுதல். உலகமும் தானும் ஒன்றெனக் காண்பதே உண்மையறிவு. இத்தனை பெரிய உண்மையை அக்காலத்தில் எப்படிக்  கண்டுபிடித்தார்கள் என்பதை இப்போது நினைக்க வியப்பு உண்டாகிறது. பிறகு ஆரண்ய ரிஷிகளின் காலம் மாறி, பெளத்த சந்நியாசிகளின் காலம் வந்தது. மேற்கூறிய மகத்தான ஞானத்தை உலகத்திலிருந்து பிரித்து ‘உலகத்தைத் துறப்பதே முக்தி’ என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இங்ஙனம் உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பந்தம் உண்டாய் இடையே பாகச்சுவர் போடப்பட்டது. ஆகவே இக்காலத்தில் ஜாதியாசாரங்களில் எத்தனை திருகுதலும் அநாகரிகமும் மடமையும் இருந்தபோதிலும், உண்மை கண்டவரின் சார்பிலிருந்து யாதோர் ஆட்சேபமும் பிறக்கவில்லை. உண்மைப் பக்கத்தார் இதற்கெல்லாம் இடங்கொடுத்தே பேசுகிறார்கள். மரத்தின்கீழ் இருந்து சந்நியாசி சொல்லுகிறான்: ‘தன்னிடம் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் காண்பவனே உண்மை காண்பான்’ என்று. அது கேட்ட சம்சாரி தன்னிடம் உள்ள சிறந்த வஸ்துக்களைச் சந்நியாசியின் திருவீட்டுக்குள்ளே போட்டுவிடுகிறான். ஆனால், தெய்வத்தின் பொது விதிக்கு அடங்கி நடப்போருடைய வீட்டிற்கு வண்ணான் அம்பட்டன் போகக் கூடாதென்று சம்சாரி விதி போடும்போது, சந்நியாசி அதனை முகமலர்ச்சியுடன் ஏற்றுத் தனது த்ருஷ்டி மண் சாத்தி ஆசீர்வதிக்கிறான். இப்படித்தான் நமது ஜாதி வழக்கே கெட்டுப்போயிற்று. உண்மைக்குப் பரிந்து பேசுவோர் யாரும் இல்லாமலே போய்விட்டது. இதனால் பல நூற்றாண்டு நேர்ந்த அவமானத்தையெல்லாம் நாம் பொறுத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கும்படி நேரிட்டது. 

ஐரோப்பாவில் அப்படி இல்லை. அங்கே உண்மையை மனதிற்குள் மறைக்காமல் வழக்கத்திற் காட்டுகிறார்கள். ஜனக்கட்டிலும் ராஜ்யத்திலும் ஏதேனும் குற்றம் வெளிப்பட்டால், அதைப் பொது ஜனங்கள் உண்மை வழக்கால் சோதித்துத் திருத்த வழியுண்டு. இதனால் கிடைக்கும் சக்தியும் விடுதலையும் எல்லாருக்கும் பயன்பட்டு நம்பிக்கையையும் தைரியத்தையும் உண்டாக்குகின்றன. இந்த உண்மை மாயமந்திர இருளில் மறைந்து கிடக்கவில்லை. திறந்த வெளியில், எல்லாரும் காணும்படி தானும் வளர்ந்து பிறரும் வளரும்படி செய்கிறது. 

பல நூற்றாண்டு நாம் வாயை மூடிக்கொண்டு அவமானப்பட்டதெல்லாம் ஒன்று சேர்ந்து கடைசியில் அந்நிய ராஜ்யமாகப் பரிணமித்தது. கை எப்போதும் உடம்பில் நோயுள்ள இடத்தைப் போய்த் தீண்டுவது போலவே நம்முடைய கருத்து முழுதும் நம்மை ஆளும் மேற்குத் திசையாருடைய ராஜ்ய நெறியில் செல்லுகிறது. மற்றதை எல்லாம் மறந்து, ‘எங்களுடைய இஷ்டத்தைச் சற்றே கவனித்து எங்கள் ஆட்சி நடக்கவிட வேண்டும். வேண்டினாலும் வேண்டாவிடினும், புறத்திலிருந்து விதிநியமங்கள் எங்கள் தலைமேல் பொழியாது இருக்க வேண்டும். ராஜ்ய பாரம் முழுதும் எங்களுக்குச் சுமையாகாதபடி, சக்கரங்கள் போட்ட யந்திரமாக்கி அதை உங்களுடன் நாங்களும் சேர்ந்து தள்ள இடம் கொடுக்க வேண்டும். பொறுப்பில்லாத அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலைபெற வேண்டும்’ என்று பிரார்த்தனை இப்போதும் உலகத்தில் எல்லாத் திசைகளிலும் எழுகிறது. கால சக்தியின் தூண்டுதலால், இந்தப் பிரார்த்தனையில் நம்முடைய வாக்கையும் சேர்த்தது நன்றாயிற்று. அப்படியன்றி இப்போதும் வழக்கம்போல ‘யஜமானன் உத்தரவை’ ஒப்புக்கொண்டு நடந்தால் அது நமக்குத் தீராத அவமானமாக முடிந்திருக்கும். இதனால் நம்முள் உண்மையின் ஒரு கிரணம் நுழையக்கூடிய துணை இன்னும் ஏதோ மிஞ்சி இருப்பதாகத் தெரிகிறது. நாம் பார்த்தது உண்மையின் கிரணம். ஆனபடியாலேதான், நம்மை அசையாதபடி பலிமிருகம் போலே கட்டிப் போட்டிருந்த வீண் தற்புகழ்ச்சியை நான் நம்பிக்கையுடன் பழிக்கின்றேன். ராஜாங்கத்தாரை நோக்கி, ‘ஸாம்ராஜ்ய சபைகளில் எங்களுக்கு ஸ்தானம் வேண்டும்’ என்று கேட்பதும், ஜனங்களை நோக்கி, ‘ஜாதியாசாரங்களிலும் சொந்தக் காரியங்களிலுங் கூட எஜமான் போட்ட கோட்டைமீறி நடக்காதே’ என்றூ சொல்வதும் ஒரே வித கர்வத்தால் உண்டாவது விநோதமன்றோ? 

இதற்குப் பெயர் ‘ஸநாதன தர்ம புனர் உத்தாரணம்’ என்கிறோம். ஸநாதனக் கக்ஷித் தலைவர் நாம் ஒரு கண்ணால் உறங்கி மற்றொரு கண்ணால் விழித்திருக்கும் படி அஸாத்ய உத்தரவு போடுகிறார்கள்.

கடவுளுடைய கோபமாகிய கழி நம் முதுகின்மேல் அடிக்கும்போதும், தேசாபிமானத்தால் மனம் புண்ணாகி, “மூங்கிற் காடுகளை எல்லாம் வெட்டிப் போடுவோம்” என்று கூவலானோம். நாம் எத்தனை வெட்டினாலும் மூங்கிற்காடு உலகத்தில் மிஞ்சி இருக்கத்தான் செய்யும். காடு என்ன செய்யும்? குற்றம் நமது. அது யாதெனில்: ‘நாம் உண்மையை விட அதிகாரம் மேல்’ என்று மதிக்கிறோம். ‘கண்ணைக் காட்டிலும் தோல் முகப்படாம் மேல்’ என்று நினைக்கிறோம். நாம் இந்தக் குணத்தை நீக்கும்வரை ஏதேனும் ஒரு காட்டில் நம்மை அடிக்க யாதேனும் ஒரு கழி மிஞ்சி இருக்கத்தான் செய்யும். ஐரோப்பாவிலும் முன் ஒரு காலத்தில் எல்லா விவகாரங்களிலும் பாதிரிகளுடைய அதிகாரம் மூர்த்தன்யமாய் நடந்தது. எங்கும் வீசி இருந்த பாதிரி வலையை அறுத்த பிறகுதான், ஐரோப்பிய ஜனங்கள் ஸ்வராஜ்யப் பாதையிலே கால்வைக்க இடம் உண்டாயிற்று. இங்கிலாந்து மாத்திரம் தீவானபடியாலும் கோயிலின் ராஜதானியாகிய ரோமாபுரியிலிருந்து மிகத் தூரம் ஆனபடியாலும் பிழைத்தது. இங்கிலாந்திலும் கோயில் (சர்ச்) அதிகாரம் முற்றிலும் நசித்துவிடவில்லை. ‘இங்கிலீஷ் கோயில்’ பாட்டியைப்போல் முன் நடத்திய ஸர்வாதிகாரம் நீங்கி, இப்போது இரக்கத்தால் அதுவும் இருந்து போகட்டும் என்று விடப்பட்டிருக்கிறது.

இங்ஙனம் ‘மாமூல் கிழவி’யை இங்கிலாந்து தேசத்தார் அசைத்தது போலவே, ஸ்பெயின் தேசத்தார் செய்யக் கூடவில்லை. முன்னொரு காலத்தில் ஸ்பெயின் தேசத்தார் பாடு மிகக் கொண்டாட்டமாக இருந்தது. அந்த அநுகூலத்தை அவர்கள் ஏன் இழந்தார்? ‘மாமூல் கிழவி’க்கு மணியம் கொடுத்தமையாலேதான்.

ஸ்பெயின் தேசத்து பிலிப் ராஜா இங்கிலாந்தின் மீது சண்டை தொடுத்த காலத்தில், ஸ்பெயின் தேசத்துக் கப்பற்படை விவகாரங்களும் கோயில் விவகாரங்களைப்போலே வலிய தளைகளுக்கு உட்பட்டிருந்தமை வெளியாயிற்று. இங்கிலீஷ் கப்பற்படையோ மிகச்சிறந்த சேனாதிபதிகளின் கீழே, தான் மிதக்கும் கடலலைகள் எப்படி விடுதலைகொண்டு வீசும் காற்றுக்கு ஒத்துச் செல்லுமோ அதுபோலத் தானும் சென்றது. ஸ்பானியக் கப்பற்படையில் ஜாதிமரபுப்படி அதிகாரம் வகுத்திருந்தது. அது அசையாத மாமூலின் இரும்புப்பிடியினின்று விலக வழியில்லாமல் போயிற்று. இங்ஙனம் ஐரோப்பாவில் கோயிற்கட்டுக்குக் குருட்டுத்தனமாகக் கீழ்ப்பட்டிருந்த தளையை வெட்டித் தன் மதிப்பைக் காக்கக் கற்ற ஜாதியாரே தலை தூக்குவது இயல்பாயிற்று. ருஷ்யாவில் அவ்வாறு செய்யாதபடியால், அங்கே உத்தியோகஸ்தர் காடாகப் பரந்து, ஜனங்கள் மிகச் சிறிய சர்க்கார் அதிகாரிக்கும் மிகவும் அற்பமான பழஞ் சாஸ்திரக் கட்டளைக்கும் முழந்தாள் படியிட்டு ஆண்மை இழந்து போகின்றன. 

ஸமயம் (மதம்) வேறு; குருக்கள் கட்டுப்பாடு வேறு என்பதை மறக்கலாகாது. அவை ஒன்றுக்கு தீயும் சாம்பரும் போலாம். மதத்தை மீறிக் கட்டுப்பாடு செல்லும்போது நதியை மணல் மூடுவது போல் ஆகிறது. அங்கு நீர் கெட்டுப் பாலைவனம் போல் தோன்றும். ‘இந்த நிலையைக் கண்டு மகிழ்ச்சி அடைவோர் மிகக் கேடு கெட்டவர்கள்’ என்பது வெளிப்படை.

ஒருவன் மற்றொருவனைக் கஷ்டப்படுத்தினால், இருவருக்கும் கெடுதி என்று (சமயம்) மதம் சொல்லுகிறது. 

மகள் விதவையாகிப் பட்டினி கிடக்கும்போது, ‘இன்ன திதியில் அவளுக்குத் தாகத்துக்கு ஜலம் கொடுத்தால் பெற்றோர்களுக்குப் பாவம்’ என்று கருக்களின் கட்டுப்பாடு சொல்லுகிறது. ‘பச்சாதாபத்தாலும் ஒருவன் பாபத்தைக் கழுவலாம்’ என்று ஸமயம் சொல்லுகிறது ‘கிரணத்தன்று ஒருவன் இன்ன நீரில் முழுகினால் தான் பாவம் தீர்வதுடன் பதினான்கு தலைமுறை பிதிர்கள் செய்த பாவமும் தீரும்’ என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. ‘மலைகளையும் கடல்களையும் கடந்து போய், இவ்வழகிய உலகத்தின் வியப்புகளைக் கண்டு களிக்க வேண்டும்’ என்று ஸமயம் சொல்லுகிறது. ‘கடலைக் கடந்தவன் மண்ணிற் புரண்டு பிராயச்சித்தம் பண்ண வேண்டும்’ என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. ‘எக்குடிப் பிறந்தாலும், உண்மையுடையவன் தொழத்தக்கவன்’ என்று ஸமயம் சொல்லுகிறது. ‘பிராமணனாகப் பிறந்தவன் அயோக்கியவனாக இருந்தபோதிலும் அவன் பாததூளைப் பிறர் சிரத்தில் தரிக்கலாம்’ என்று கட்டுப்பாடு சொல்லுகிறது. சுருக்கிச் சொன்னால், ஸமயம் விடுதலை போதிக்கிறது; குருக்கள் கட்டுப்பாடு அடிமை நிலையைப் புகழ்ந்து கீர்த்தனம் பாடுகிறது.

பக்தி குருட்டுபக்தியாக இருந்தாலும் அதிலொரு வெளியழகுண்டு. இவ்வழகை நமது நாட்டில் யாத்திரை செய்யும் அன்னியர் சிலர் கண்டு மெச்சுகிறார்கள்; சித்திரந்நிகாரன் ஒருவன் இடிந்த வீட்டின் புராதன அழகுகளைப் பார்த்து மயங்கி, ‘அதில் குடி இருக்க யோக்கியதை இல்லை’ என்பதை மறந்துவிடுவது போலே, கங்காஸ்நானத்துக்குத் திருவிழாக்காலத்தில் பாரிஸால் நகரத்திலிருந்து ஆயிரக்கணக்கான யாத்திரைக்காரர் – பெரும்பகுதி ஸ்திரீகள் – வருவதைப் பார்த்திருக்கிறேன். அடடா! புகைத் தோணியிலிருந்து புகை வண்டிக்கும் புகை வண்டியிலிருந்து புகைத் தோணிக்கும் மாறுகிற கூட்டங்களில் எல்லாம் அவர்கள் படும் கஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் ஓய்வில்லை. அவர்களுடைய பரிதாபத்துக்கிடமான பொறுமையிலும் ஒருவித அழகு இருக்கத்தான் செய்கிறது. அவர்களுடைய துயரங்கள் எப்போதும் அழகு பெறுகின்றன. வீண் கிரியை சடங்குகளுக்கு இடையே அவர்கள் வளர்க்கும் பிள்ளைகள் இவ்வுலக இன்பங்களுக்குப் பல்லைக்காட்டியிருந்து பரலோக நிழல்களைக் கண்டு நடுங்குகிறார்கள். தாம் நடக்கும் பாதையில் வளைவுதோறும் தாமே தடைகள் கட்டுவது அவர்களுடைய வாழ்க்கையின் ஒரே தொழிலாகக் காணப்படுகிறது. அத்தடை உயர்வதையே அபிவிருத்தி என்று கருதுகிறார்கள்.

இப்படி அவர்கள் தண்டனை அடையும் காரணம் யாதெனில்: ஈசனால் மனிதனுக்குக் கிடைத்த பேறுகளில் சிறந்த பேறாகிய தியாக சக்தியை இவர்கள் துர்விநியோகம் செய்கிறார்கள். கணக்குக் காட்டும் காலம் வரும்போது இவர்களால் நஷ்டக் கணக்குத் தான் காட்டமுடியும். இன்னும் ஓர் இடத்தில் லக்ஷக் கணக்கான ஜனங்கள் ஆணும் பெண்ணுமாக ஸ்தல தரிசனம் செய்து புண்ணியம் தேடப் போயினர். பாதையோரத்தில் ஒருவன் சாகக் கிடந்தான். அவனுடைய ஜாதி இன்னதென்று தெரியாத காரணத்தால், அவனுக்கு யாரும் தாகத்துக்கு ஜலம் கொடுப்பாரில்லை. பெருஞ் செலவு செய்து புண்ணியம் தேடப்போகும் இவர்களுடைய குருட்டு பக்தி எத்தனை அழகாகத் தோன்றிய போதிலும் இவர்களுடைய காருண்யம் எத்தனை பயங்கரமானது பார்த்தீர்களா? ஒரு தண்ணீரில் அனைவரும் சேர்ந்து விழும்படி தூண்டுகிற குருட்டுத் தன்மைதான் இனம் தெரியாத மனிதர் கஷ்டப்படும்போதும் இரக்கமுண்டாகாமல் செய்துவிடுகிறது. தான் கொடுத்த சிறந்த வரத்தை இவர்கள் இங்ஙனம் துர்விநியோகம் செய்வதில் ஈசனுக்குத் திருப்தியில்லை.

படிப்பு, பக்தி, ஒழுக்கம் மூன்றும் இல்லாத கோயிற் குருக்களுடைய காலில், ஸ்திரீகள் பணத்தைக் கொட்டுவதை நான் பார்த்திருக்கிறேன், இங்ஙனம் செய்யும் வன்மையால் இவர்கள் உண்மைக்கும் கருணைக்கும் அருகே ஓர் அடியளவேனும் நெருங்கி வந்தனரா? இல்லை.

இங்கு ஓராக்ஷேபம் சொல்லலாம்: “குரு புண்ணிய ஆத்மா என்று நம்பித்தானே பணம் கொடுத்தார்கள்? இந்த நம்பிக்கை அவர்களுக்கு இல்லாவிட்டால் ௸ பணத்தைச் செலவின்றி வைத்திருப்பார்கள். அல்லது சொந்தச் செலவுக்குச் செலவிட்டிருப்பார்கள். குருவின் கையில் கொடுத்தது விசேஷந்தானே?” என்று கேட்கலாம். தனக்காகச் செலவிட்டால் பணத்தின் பயனாவது கண்டிருப்பார்கள். தெய்வ பக்தியினால் செய்தோமென்ற பொய் மயக்கத்துக்கு அடிமைப்பட்டிருக்க மாட்டார்கள்.

வெளியே ஒரு நாயகனுடைய ஆக்கினைக்கு அஞ்சித் தன் உயிரை இழக்கத் துணிபவன் தனக்குத் தானே நாயகனாகும்போது, தர்மத்துக்காக உயிர் கொடுக்காமல் போகிறான்.

இங்ஙனம் நமது கிராமங்களில், ஆரோக்கியம், கல்வி, உயிரின்பம் – யாவும் வற்றிப் போய்விட்டன. ‘கிராமத்தார் தம்முடைய சக்திகளைத் தாம் அறியும்படி செய்தாலொழிய அவர்களைக் காப்பாற்ற வேறு வழி இல்லை’ என்று கருதி நான் ஒரு கிராமத்தில் பிரயத்தனம் செய்தேன். அந்தக் கிராமத்தில் ஒரு பக்கத்துக்கு ஜலம் ஒரு துளிகூடக் கிடையாது. தீப்பிடித் தெரிந்தது. தழல் வீசி எரிகையிலே, கிராமத்தார் கூடியழுவதை யொழிய வேறென்றும் செய்ய மாட்டாமற் போயினர். நான் அவர்களிடம் சொன்னேன்: “நீங்கள் பிரயாசை கொண்டு கிணறு தோண்ட இணங்கினால் கல் சுண்ணாம்புக்கிரயம் நான் கொடுக்கிறேன்” என்றேன். கஷ்டத்தில் பாதி அவர்களுடையதாகவும் புண்ணியம் முழுவதையும் நான் கொள்ளையிட விரும்பிய தந்திரத்தை மெச்சித் தங்களால் முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அந்தக் கிணறு இன்னும் தோண்டியாகவில்லை. தண்ணீர்ப் பஞ்சம் அங்கே தீராமலேதான் இருக்கிறது. அக்நி உத்ஸவம் அடிக்கடி நடந்துவருகிறது.

ஆகவே நமது கிராமக் கஷ்டங்கள் தீராமல் இருப்பதன் காரணம் யாதெனில், ஒரு காரியம் செய்வதற்கு மோக்ஷ புண்ணியத்தை விரும்பிச் செய்தாலொழிய வேறு வழியில்லை. ஆகவே, ஒவ்வொரு குறையும் தெய்வம் தானே வந்து தீர்க்க வேண்டும்; அல்லது மோக்ஷத்தை வேண்டி யாராவது செய்தாலுண்டு. மற்றப்படி தாகத்துக்கு ஜலம் இல்லாமல் செத்தாலும் சாவார்களேயன்றி, கிராமத்தார் தாமாக ஒரு கிணறு தோண்டிக் கொள்ள மாட்டார்கள். இதற்குக் கிராமத்தாரைக் குறை கூறுவதிற் பயனில்லை. ‘மாமூல் கிழவி’ அபினி கொடுத்து அவர்களைப் பாதி தூக்கத்தில் வைத்திருக்கிறாள். ஆனால், படித்த பிள்ளைகள் அந்தக் கிழவியின் ஸ்துதியைப் பாடக் கேட்கும்போது, எனக்கு ஆச்சர்ய மிகுதியால் பேச முடியாமல் போகிறது. “ஆஹா! இந்தக் கிழவி எத்தனை நல்ல மருத்துவச்சி! இவள் கைக்குள் நமது தேசம் இருப்பது மஹிமை யன்றோ! இவள் மடியிலிருந்தபடியே நமக்கு ஸ்வராஜ்யச் செங்கோலும் கிடைத்துவிட்டால், எத்தனை நன்றாக இருக்கும்!” என்கிறார்கள். 

பட்டினி, தொத்து வியாதி, பஞ்சம், இவை தலைதூக்கி ஆடுகின்றன. நம்மைப் புலியும் திருடரும் அடிக்காமற் காத்துத் துப்பாக்கி வைத்துக்கொள்ளும்படி ராஜாங்கத்தார் அனுமதி கொடுக்காமல் இருப்பது போலவே, மேற்கூறிய துன்பங்களைத் தடுப்பதற்குரிய உபாயங்களைத் தேடவொட்டாமல் ஜாதியாசாரத் தலைவர் தடுக்கிறார்கள். ஆனால் இவர்கள் நம்மிடம், “தற்காப்புக்கு நீங்கள் கருவிகள் தேடலாமே. நீங்கள் ஸயின்ஸ் படித்து அதைத் தற்காப்புக்கு உபயோகப்படுத்தக் கூடாதென்று யாவரும் தடுப்பாரில்லையே” என்று கூறலாம். உண்மைதான்.

‘தற்காப்புக்குரிய ஆயுதங்கள் நமக்குக் கிடைக்கவொட்டாமல் செய்து விட்டார்கள்’ எனில் அதிசயோக்தியாகும். ஆனால் அவற்றில் பயிற்சி பெற இடமில்லாமல் செய்வதற்கு வேண்டிய  முன் ஜாக்ரதை எத்தனை உண்டோ அத்தனையும் பண்ணி வைத்திருக்கிறார்கள். நமது தேசத்தார் ஒரு பக்கம், ராஜாங்கத்தார் ஒரு பக்கமாக, நம்மைச்சூழ ஏற்படுத்தி இருக்கும் எண்ணற்ற விதிகளைக் கடக்கக் கூடாதென்ற பயத்தினால் நாம் சக்தி இழந்து, நம்மிடம் துப்பாக்கி இருந்தால், திருடரால் ஏற்படும் விபத்தைக் காட்டிலும் துப்பாக்கியால் அதிக விபத்து நமக்கே உண்டாகும்போல் இருக்கிறது.

இந்தக் கஷ்ட தடையில் நாம் இருப்பதற்கு அந்நியர் அரசாட்சியே காரணம் என்று சொல்லும் கக்ஷியை இப்போது ஆராய்ச்சி செய்வோம். பிரிட்டிஷ் ராஜ்யத்தின் வேர்க்கொள்கை யாதெனில், ‘ஜனங்கள் ஆட்சியில் கலக்க வேண்டும்’ என்பதேயாம். அந்நியர் யாரும் பொறுப்பின்றி அரசு செய்யும் முறைமையை அக்கொள்கை கண்டிக்கிறது. நம்மிடம் இந்த விஷயத்தை அவர்கள் மறைக்கவில்லை. ஸர்க்கார் பள்ளிக்கூடங்களில் இதை நமக்குப் பஹிரங்கமாகக் கற்றுக் கொடுக்கிறார்கள். இதைப் பரீக்ஷைக்கு உருப் போடுகிறோம். இந்த அறிவை இனி நம்மிடமிருந்து பறிக்க இடமில்லை. நம்முடைய காங்கிரஸ் சபைகளும் சங்கங்களும் இந்தக் கொள்கையை ஆதாரமாக உடையன. ஐரோப்பிய ஸயின்ஸ் தன் இயற்கையாலேயே எல்லோருக்கும் கிடைக்கத்தக்கதாக இருப்பதுபோல், மேற்படி பிரிட்டிஷ் ராஜ்யக் கொள்கையும் தன் இயற்கையாலேயே பாரத தேசத்து ஜனங்களின் அங்கீகாரத்தை வேண்டுகிறது. ஹிந்து தேசத்துப் பிள்ளைகளுக்கு ஐரோப்பிய ஸயின்ஸ் கற்றுக் கொடுக்கக் கூடாதென்று சொல்லும் ஆங்கிலேயர், ஒன்று, அல்லது பத்து, அலல்து ஐந்நூறு பேர் இருக்கக்கூடும். ஆனால், அந்த ஸயின்ஸ் (சாஸ்திரமோ) பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும் வந்து தன்னைப் படித்துப் பயன் பெறும்படி கூவியழைத்து அவ்வாங்கிலேயரை அவமானப்படுத்தும். அதுபோல், ஐந்தாறு அல்லது ஐயாயிரம் ஆங்கிலேயர் பிரசங்கங்களிலும் பத்திரிகைகளிலும் ஹிந்து தேசத்தார் ஸ்வராஜ்யம் பெறுவதைத் தடுக்க வேண்டுமென்று உபந்நியஸித்தாலும், பிரிட்டிஷ் ராஜ்யக் கொள்கையானது பிறப்பிடத்தையும் நிறத்தையும் பொருட்டாக்காமல் எல்லோரும் தன்பக்கம் சேரும்படி கூவி அவ்வாயிரக் கணக்கான ஆங்கிலேயர் சொல்லும் வார்த்தையை இகழ்ச்சிக்கு இடமாக்குகிறது. ‘பிரிட்டிஷ் கொள்கைகள் நம் போல்வார்க்குத் தகுதியில்லை’ என்ற அநாகரிகமான மறுமொழி சொல்லக்கூடும். பிரம்ம ஞானமும் விரிந்த வாழ்வும் சூத்திரனுக்குக் கிடையாதென்று முன்பு பிராமணர் விதிபோட்டது போலேதான்.

ஆனால் பிராமணன் தனது ஸ்தானத்தை முன் ஜாக்கிரதையாலே கெட்டுப்படுத்திக் கொண்டான். புறத்தை ஒடுக்கு முன்பு ஜனங்களின் அறிவை ஒடுக்கிவிட்டான். அறிவின் வேர்களைச் சூத்திரனிடமிருந்து பறித்துவிட்டபடியால் இவன் ஸ்வதந்தர கார்யம் செய்ய ஸாத்யப்படவில்லை. பிறகு சூத்திரனுடைய தலை பிராமணனுடைய பாத தூளியிலே ஈடுபட்டிருப்பதை ஸாவதானமாகக் காக்க வேறு சிரமம் வேண்டியதில்லை ஆயிற்று. ஆனால் நம்முடைய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் விடுதலைக்கு வழி காட்டும் அறிவுக் கதவை முற்றிலும் அடைத்துவிடவில்லை. அதிகாரிகளுக்குப் பச்சாதாபம் உண்டாய், இங்கொரு கதவை அங்கொரு கதவை அடைப்பதாகிய முயற்சியை மிகத் தாமஸமாகக் கைக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், ‘சுகத்தை உத்தேசித்துத் தர்மத்தைக் கைவிடுதல் ஆத்ம சக்திக்கு வழியில்லை’ என்பதை அவர்களாலே கூட மறக்கலாவதில்லை.

பிரிட்டிஷாருடைய உட்குணத்தில் நம் ஸ்வதந்திரங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த ஸந்தோஷகரமான உண்மையை நமது முழுவலிமையுடன் புத்தியில் நிறுத்திக் கொண்டோமானால், அது நிறைவேறுவதற்காக, நாம் கஷ்ட நஷ்டங்களுக்கு உட்படுதல் எளிதாகும். பழைய சாஸ்திரப்படி  ‘அடங்கி நடப்பதை’க் கைப்பிடித்தோமானால், நமக்கு மகத்தான ஆசாபங்கம் நேரிடும். இரண்டு வகைகளில் ஏற்கனவே இது வெளிப்பட்டு நிற்கிறது. ரஹஸ்யக் கூட்டத்தாரின் கொடுஞ் செயல்கள் ஒருவகை, நம்முடைய கூட்டத்து ராஜ தந்திரிகள் தர்க்கம் பண்ணுகிற வியர்த்தம் மற்றொரு வகை. “இந்த வைஸ்ராய் நல்லவரா! அந்த வைஸ்ராய் நல்லவரா? ‘மார்லி’ வந்தால் நமக்கு நிறையச் சீர்திருத்தம் கிடைக்குமா, கிடைக்காதா? வீட்டுப் பூனை காட்டுக்குப் போனால், காட்டுப் பூனை போலே காட்டுத்தனமாய்விடுமா, ஆய்விடாதா?” 

இருந்த போதினும், நாம் மனுஷ்ய ஜாதியினிடம் அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. பிரிட்டிஷ் ராஜ்யத்தில் அதன் வலிமை ஒன்று மாத்திரமே பெரிதன்று. அதன் அஸ்திவாரக் கொள்கைகள் அதனிலும் பெரியன என்பதை நாம் மனதார ஒப்புக்கொள்ளுகிறோம். அடிக்கடி இதற்கு விரோதமாக நடக்கக்கூடும். ‘லோபம், அதிகார விருப்பம், கோபம், பயம், கர்வம் இவை எல்லாம் தொழில் செய்வதை நாம் பார்க்கலாம்’ என்பது மெய்தான். மஹிமையும், தீரமும், விரதமும், பக்தி விசுவாசங்களும் உடையவராகிய ராஜ ஜாதியாரிடத்தில் உள்ள நல்ல அமிசங்களுடன் நாம் ஒட்டலாம். அங்கே சத்துருக்கள் நம்மை எங்ஙனம் தாக்கியபோதிலும், நாம் வெற்றி பெறுவோம். நினைத்த பொழுதெல்லாம், புற வெற்றி கிடைக்காவிடினும், அகவெற்றி நிச்சயம். நாம் அற்பர்களாய்ப் பயம் கொண்டிருந்தால், நம்மை ஆளுவோரின் பெரிய கொள்கைகளையெல்லாம் நமது மட்டம் ஆக்கிவிடுவோம். அவர்களுடைய கெட்ட குணங்களே தலைதூக்க இடங்கொடுப்போம். பிராமணன் தன்னைக் கீழ் ஜாதி என்றதை சூத்திரன் எப்போழுது ஒப்புக் கொண்டானோ, அப்போதே பிராமணனுக்குப் பள்ளம் தோண்டியாய் விட்டது. எளியவன் வலியவனுக்குச் செய்யும் தீமை வலியவன் எளியவனுக்குச் செய்யும் பகைமைக்கு நிகராகக்கூடும்.

ஒருமுறை ஒரு உயர்ந்த ஸ்ர்க்கார் உத்தியோகஸ்தர் என்னிடம், “போலீஸ் கொடுமையைப்பற்றி எப்போதும் முறையிடுகிறீர். என் மட்டில், நீங்கள் சொல்வதை நம்பக்கூடாதென்ற எண்ணமில்லை ஆனால், பெயர்வழி, விஷயம், எல்லாம் கொண்டுவந்து ருஜுப்படுத்தும்” என்றார். உண்மைதான். எல்லா அநியாயங்களையும் பஹிரங்கமாகத் தூற்றி, உலகறிய மீட்டும் மீட்டும் முறையிடத்தக்க தைரியவான்கள் சிலரேனும் நமது தேசத்துக்கு வேண்டும். ஆனால் அற்ப போலீஸ் சேவகனாக இருந்தபோதிலும் அவன் பின்னே பூதாகரமான ராஜ்யாதிகாரம் ஒன்று இருக்கிறது. அவன்மேல் குற்றஞ் சாராதபடி காப்பாற்றுவதற்காகப் பொதுப் பணத்திலிருந்து ஆயிரக் கணக்காகச் செலவு செய்யக் கூடுமென்ற பீதியை மறுக்க முடியாது. நம்மை நசுக்கினால் பொறுத்துக் கொண்டிருப்பதே நம் உடம்புக்கு நல்லதென்று சில அதிகாரிகள் சொல்லுவது நல்ல மாதிரிதானே? இல்லாவிட்டால் அதிகாரிகளுடைய  ‘பிரெஸ்டிஜ்’ (கெளரவம்) குறைந்துபோகாதோ? ‘பிரெஸ்டிஜ்’ நம்மைப் பயமுறுத்தின பழம் பூச்சாண்டி; எப்போதும் நம்முடைய செவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாயகன்; பேஹிலா காவியத்திற்குரிய மாநஸா; கவி சங்கனுடைய சண்டி; அதன் பூசைக்குப் போகையில் தர்ம நியாங்களை அவமதித்து இடறிக்கொண்டு போக வேண்டும்; இல்லாவிட்டால் அது நம்மை இடறும். எனவே,  ‘ப்ரெஸ்டிஜ்’ தேவதைக்கு நமஸ்காரம் போடு. 

யா தேவீ ராஜ்யசாஸனே
‘ப்ரெஸ்டிஜ்’ ரூபேண ஸ்ம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம:

ஆனால்  இது வெறும் அவித்தை; மாயை தவிர வேறொன்றும் இல்லை. நம்முடைய புறக்கண்ணுக்குத் தோன்றிய போதிலும் நாம் அதை நம்பக்கூடாது. உண்மை அதன் பின்னே நிற்கிறது. அது யாதெனில், “நம்முடைய ஆட்சி, நம்முடைய விவகாரம்.” இந்த உண்மையிலேதான் பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு வலிமை உண்டாகிறது. இதுவே நமக்குப் பலம். பிரிட்டிஷ் கொள்கைகளை நாம் தைரியமாக நம்பாவிட்டால், போலீஸ் நம்மை நசுக்கிக்கொண்டேதான் இருக்கும். மாஜிஸ்ட்ரேட்டால் நம்மைக் காக்கவும் முடியாது;  ‘ரெஸ்டிஜ்’ தேவதை மனுஷ்ய பலி கேட்டுக்கொண்டே இருக்கும். இங்குச் சிலர்: “பலத்தைக் காட்டிலும் தர்மம் பெரிதன்று; பாரமார்த்திகமாகப் பேசலாமே யொழிய, நடையில் வெளியிட்டால் ஆபத்து வரும்” என்று கூறி அக்ஷேபிக்கலாம். ஸங்கடம் வரக்கூடும். இருந்தாலும், நாம் நம்பிக்கைப்படி செய்ய வேண்டும். ‘ஸ்வதேசத்தாரே லஞ்சம் வாங்கிக் கொண்டும் பயந்தும் உமக்கு விரோதமாக ஸாக்ஷி சொல்வார்களே!’ என்று சொல்லக்கூடும். இருந்தாலும், உண்மை என்று கண்டுகொண்டதை வெளியிட்டுச் சொல்ல வேண்டும். ‘ஸ்வதேசத்தாரே உம்மை மறந்து நின்று தலையில் அடிப்பார்களே.’ லஞ்சத்தையும் ஸ்துதியையும் வேண்டிச் செய்யலாம்; எனினும், நாம் உண்மையை நம்பவேண்டும். “அவ்வளவு தூரம் நம்பலாமா?” சரியாக, அவ்வளவும் நம்பியாக வேண்டும்; துளி குறைந்தாலும் போதாது. 

ராஜாங்கத்தாரிடம் பெரிய விஷயங்கள் கேட்கிறோம். ஜனங்களுக்குப் பெரிய வரங்கள் தரவேண்டும். இல்லாவிட்டால் ராஜாங்கத்தாரிடம் செய்யும் பிரார்த்தனை பயன்படாது. 

‘எல்லோருமே வீரர் அல்லர்; பயந்தவர்கள் உலகத்தில் உண்டு’ என்பதை நான் அறிவேன். இருந்தாலும், எல்லாத் தேசங்களிலும், எல்லாக் காலங்களிலும் சிலர் தமது ஜாதியின் இயற்கைப் பிரதிநிதிகளாகப் பிறந்து, தேசத்தின் கஷ்டங்களைத் தாம் பொறுக்கிறார்கள். எதிர்ப்பை எல்லாம் வெட்டிப் பாதை போட்டு மற்றவர் பின்வருவதை எளிதாக்குகிறார்கள்; மனுஷ்ய ஜாதிகளின் வெளி நடைகளில் எத்தனை விபரீதங்கள் இருப்பினும், அவற்றைப் பொருட்டாக்காமல் அதனிடம் நம்பிக்கை செலுத்துகிறார்கள்; நிஜாந்தகாரத்தினிடையே கண் விழித்து உதயம் வருமென்று காத்திருக்கிறார்கள். கோழைகளின் பயத்தை நகைத்து, 

ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய
த்ராயதே மஹதோ பயாத்

அதாவது, ‘இந்தத் தர்மத்தில் சிறிதளவு பெரிய பயத்தினின்றும் காப்பாற்றுகிறது’ என்ற வாக்யத்தை உரைக்கிறார்கள். ராஜ்யத்தில் உண்மை அம்சம் உண்டானால் அதை வணங்குவோம்; பாபத்தை வணங்கோம், பயத்தை வணங்கோம்.

ஒருவனுடைய குழந்தைக்கு உடம்பு சொஸ்தமில்லை; ஐரோப்பிய டாக்டருக்குப் பெரிய தொகை கொடுத்து வரவழைத்தான்; டாக்டரும் நாட்டு மந்திரவாதியைப்போல உச்சாடனங்கள் செய்யத் தொடங்கினான்; “சிகிச்சை செய்யும்; இந்தக் காரியத்துக்கு உம்மை அழைக்கவில்லை” என்று இவன் சொன்னான்; டாக்டர் கோபத்துடன், ‘உனக்கென்ன தெரியும்? நான் வைத்தியன்; நான் எது செய்தாலும் அதுவே வைத்தியம்’ என்றான். அப்போது இவன், ‘உன்னைக்காட்டிலும் உன் தொழிலே பெரிது; நான் பணம் கொடுத்தது தொழிலைக் கருதி’ என்கிறான். டாக்டர் இவனை அடித்துக் கீழே தள்ளிப் பணத்தை இடுப்பில் செருகிக்கொண்டு போவதாகப் பாவனை செய்துகொள்வோம். அவன் வண்டி ஸவாரி செய்துகொண்டு வீட்டுக்குப் போகையில் அவன் மனமே அவனைச் சீயென்று சொல்லாதா? அதுபோல, இப்போது பிரிட்டிஷ் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்படாமல், பிரிட்டிஷ் ஜாதியின் ராஜ்யக் கொள்கைகளை நான் அங்கீகாரம் செய்வதை உத்தேசித்து, ஒருவேளை இன்று என்னை அதிகாரிகள் கஷ்டப்படுத்தலாம்; ஆனாலும், எனக்கு நாளை வெற்றியுண்டாகும்.

நூற்றைம்பது வருஷம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த பிறகு, இன்று சென்னை மாகாணத்தாரின் கஷ்டங்களுக்கு வங்காளத்தார் இரக்கப்படக் கூடாதென்று கட்டளை போடுகிறார்கள். பிரிட்டிஷ் ராஜ்யத்தின் முதலாவது நன்மை என்னவென்றால், ‘அதனால் பம்பாயும், சென்னைப்பட்டணமும், வங்காளமும், பஞ்சாபும் ஐக்கியப்பட்டு வருகின்றன’ என்று சொல்லக் கேள்வியுண்டு. மேற்குக் கண்டத்தில் பிரிட்டிஷார் பெல்ஜியத்துக்காகவும் பிரான்ஸுக்காகவும் இரத்தத்தைச் சிந்தி யமனை எதிரிக்கிறார்கள் என்றும் வதந்தி. அதே மூச்சிலே, சென்னைப்பட்டணத்தாரின் சுகதுக்கங்களை வங்காளத்தார் கவனிக்கக் கூடாதென்று சொல்லலாமா? அதை எத்தனை உரக்கக் கூறிய போதிலும், மனதிற்குள்ளே வெட்கம் உண்டாகாதோ? 

அதிகாரிகளின் ரஹஸ்ய லஜ்ஜைக்கும் நம்முடைய பஹிரங்க உல்லங்கனத்துக்கும் இடையே ஒரு பாலம் போடவேண்டும். இங்கிலீஷ்காரர் இந்தியாவிற்குக் கொடுத்த வாக்கினால் கட்டுப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பிய நாகரிகத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து இந்தியாவிற்கு வந்தது. பிரதிநிதியாகிய இங்கிலாந்து கொடுத்த வாக்குறுதியே மேற்படி ஐரோப்பிய நாகரிகத்தின் ஞான மந்திரம். இதுவே அவர்களுடைய ராஜ்யத்துக்குப் பலம். இதை மஹிமைப்படுத்துவோம். ‘இந்தியாவை நசுக்கும்பொருட்டு ஆங்கிலேயர் இங்கு வரவில்லை’ என்பதை அவர்கள் மறக்க நாம் இடம் கொடுக்க மாட்டோம்.

ஏதேனும் ஒரு பெரிய ஜாதியாருக்குப் பெரிய அனுபூதி உண்டாயின், அது பிறர்க்கும் கொடுக்கத்தக்கது. லோபத்தினால் தனக்கே நஷ்டம் உண்டாகும். ஸயன்ஸும் மனுஷ்ய உரிமைகளும் ஐரோப்பாவின் அனுபவப் பயன். இந்தச் செல்வத்தை நமக்குக் கொடுக்கும் பொருட்டாகத் தெய்வம் இங்கிலாந்தை நம்முடைய கரைகளில் கொண்டு வந்து சேர்த்தது. இந்த கடமையை நிறைவேற்றும்படி அவர்களை வற்புறுத்துவது நம்முடைய கடமை. ஒருபாலார் தம்முடைய கடமையைச் செய்யாவிட்டால், இருபாலாருக்கும் மறதியும் வீழ்ச்சியும் உண்டாகும்.

இங்கிலீஷ்காரர் தம்முடைய தேச சரித்திரத்தைத் திருஷ்டாந்தமாகக் காட்டி, “நாங்கள் நெடுங்காலம் போராடி உழைத்ததன் பயனாக மிகவும் தாமஸமாகவே எங்களுக்கு ஸ்வராஜ்யம் கிடைத்தது” என்று சொல்லக்கூடும். இருக்கலாம்! வழிகாட்டுகிற ஜாதிக்குக் கஷ்டம். பின்னே வருகிற ஜாதிக்குச் சுலபம். திருஷ்டாந்தமாக, அமெரிக்காவில் வங்காளி மாணாக்கர்கள் தாமே யந்திரங்கள் செய்கிறார்கள். இதற்காக ஆதிகாலத்தில் அடுப்புச் சட்டியிலிருந்து நீராவிக்கருவி தோன்றிய நாள்முதல் இன்று வரையில் படிப்படியாக வந்த நூறு ஆண்டு காலம் இவனும் படித்துக்கொண்டு வரவில்லை. ஐரோப்பாவில் பலகாலம் வளர்த்த பயிரை ஜப்பான் ஒரு க்ஷணத்தில் கொண்டு போய் வைத்து நேரே பயிரிட்டுவருகிறது. ஸாமர்த்தியம் குறைவென்றால், அதற்கு விரைவாகவே ஸ்வராஜ்ய வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். ‘ஒருவனிடம் ஒரு திறமை இல்லை’ என்று நாம் முன்னதாகவே தீர்மானம் செய்தால், அப்படியே இல்லாமல் போகும். அவன் திறமை நம்முடைய கண்ணுக்குத் தெரியாமலே போகும். நம்மவரை நாமே இகழ்ந்து, அவர்களிடம் நன்மை பிறப்பதை நாம் தடுத்து, அவர்களை உலகம் இகழ வைத்தால், அதைவிடப் பெரிய குற்றம் இல்லை.

சரித்திரத்தில் ஸூர்யோதயம் ஆகிறபோது கிழக்கே ஒளி ஊர்ந்தூர்ந்து வராது; பாய்ந்து வரும். எட்டுத் திசையையும் உடனே நிரம்பச் செய்யும். ‘உலகத்து ஜாதியார் அங்குலத்தின்மேல் அங்குலமாக மேன்மைக்கு நகர்ந்துதான் செல்ல வேண்டும்’ என்று விதிபோட்டால் எந்த ஜாதிக்கும் மேன்மை நேரிடாது. தகுதி உண்டான பின்புதான் விடுதலையை விரும்பலாமென்று விதி போட்டால், எந்த ஜாதிக்கும் விடுதலை உண்டாயிராது. 

ஐரோப்பியர் தம்முள் ஜனாதிகாரம் உண்டென்று புகழ்ச்சி சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஐரோப்பியர் அமெரிக்கர் வெளி டம்பத்துக்குள் மறைந்து கிடக்கும் அழுகற் சேற்றைக் கீற விருப்பமில்லை. இவர்களுக்குத் தலை அதிகாரமாக ஒன்றை நாட்டி, மேற்படி சேறு முழுதும் கழுவின பிறகுதான், ஜனாதிகாரம் நடத்தலாமென்று விதி போட்டால், சேறும் நீங்காது; நீங்குமென்ற நம்பிக்கைக்கும் இடம் இராது.

இப்படி நமது ஜாதியாசாரங்களிலும், தனி நாட்டங்களிலும், பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நான் மறைக்க விரும்பினாலும் என்னால் முடியாது. எப்படிக்கும் நம்மை நாமே ஆள வேண்டும். ஒரு விளக்கு மங்கினதைக் குறித்து, மற்றொரு விளக்கை ஏற்றாமல் தவிர்க்க விடலாகாது. மனுஷ்ய ஜாதி மொத்தத்துக்கே பெரிய திருவிழா நடக்கிறது. எல்லா நாட்டு விளக்குகளும் எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஊர்கோலம் முன்னே செல்லுகிறது. நம்முடைய விளக்குச் சற்றே அவிந்தால் இங்கிலாந்தின் விளக்கிலே சற்றுப் பற்றவைத்துக் கொள்ளலாகாதோ? இதற்கு ஏன் கோபம்? இதனால் பிரிட்டிஷ் ஒளி குறையாது. உலகத்தின் ஒளி அதிகப்படும்.

திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது. பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறு பணக்காரர் வந்தால் பூசாரி பல்லைக் காட்டுவான். ஆஸ்திரேலியாவும், கனடாவும் வந்தால் எதிர்கொண்டழைத்து நல்வரவு சொல்வான். திருவிழாக் கடவுளுக்குக் கண் குருடில்லை. இப்படிப்பட்ட வேற்றுமைகளை அவர் பொறுக்க மாட்டார். உள்ளத்திலே பாவம் வெட்கமாக வந்து சுடாவிட்டால், வெளியே தெய்வ கோலமாக வந்து சுடுகின்றன.

பிரிட்டிஷாரும் நாமும் கலந்து இக்காரியம் செய்ய வேண்டும். வங்காளிகளிடம் எனக்கு நம்பிக்கை தான். வாலிபர் கிழவேஷம் போட்டுக்கொண்டு கீழ்ப்பார்வை பார்க்கக் கூடாது. ஆங்கிலேயருக்குள் சில மஹாத்மாக்கள் தோன்றி இங்கிலாந்தின் சரித்திரப்பயனை நாமும் அனுபவிக்கும்படி பேசி சில ஜனங்களிடம் அவமானப்படுகிறார்கள்.

இந்தியாவிலும் பிறர் சினத்தையும் தமர் நகைப்பையுங் கருதாமல், தோல்விக்கு அஞ்சாமல், ஆண்மை காட்டும் ஆண்மக்கள் வேண்டும்.

நமது தேசத்தின் குலதெய்வம், என்றும் விழித்திருக்கும் நித்யதேவன், நம்முடைய ஜீவன் இப்பொழுது வெளியதிகாரிகளுக்குப் பயந்து குருட்டாசாரம் என்ற தளைபூண்டு புழுதியில் கிடப்பதை நீக்கி, அதன் ஸஹஜ நிராகார நித்ய ஜயாமிர்த ரூபமான ஆத்ம ரூபத்தில் சேரும்படி அந்த ஈசன் கூறுகிறான். அடிமேல் அடியடித்து “ஆத்மானம் வித்தி”, “தன்னை அறி” என்கிறான்.

காலத்துக்கு முந்தியே கிழவனாகி, குருட்டு நம்பிக்கை என்ற மூடச்சுமையால் முதுகு வளைந்துபோய், தன்னைத்தான் நம்பாத கோழையே, கேள்!

நமக்குள்ளே சில்லறைச் சண்டை,  அற்பப்பகை, அற்பப் பொறாமைகளுக்கெல்லாம் இதுவன்று காலம். கஞ்சிக்குப் பிச்சைக்காரர் சண்டையிடுவது போலே, சிறு தயவுகளை விரும்பி நமக்குள்ளே சண்டை போடும் காலம் சென்றது. இருட்டு மூலைக்குள் உட்காந்துகொண்டு, நம்மை ‘நாமே மஹான்கள்’ என்று பாவனை செய்வதில் பயனில்லை. உலகத்தாரின் சபைகளில் நம்முடைய கர்வம் சிறுமைப்படுகிறது. சக்தி ஹீனர் போலே நாம் பிறரைக் குற்றங் கூறுதல் கூடாது. பல நூற்றாண்டு செய்த பாவம் பெருஞ்சுமையாய், நமதாண்மையை நசுக்கி நம் அறிவை மயக்கிவிட்டது. அவற்றின் பெருஞ் சுமையைத் தள்ளி எறிய ஒரு பெரிய முயற்சி செய்யக் காலம் இதுவேயாம். நாம் முன்னே போகவொட்டாமல் இந்தச் சுமை பின்னே இழுக்கிறது. சென்றது வருவதை வசியவித்தை போலே கலங்கச் செய்கிறது. சென்ற காலப் புழுதியுஞ் சருகும் புதிய உதயத்தை மறைக்கின்றன. நம்முடைய புதிய இளமைத் தொழிலை அவை மூடுபனி போலே மறைக்கின்றன. நிஷ்பிரயோஜனம் என்ற அவமானத்திலிருந்து தப்ப விரும்பினால், இந்தச் சுமையைக் கூசாமல் வீசி எறிந்துவிட வேண்டும். மனுஷ்ய ஜாதி எப்போதும் முன்னே நோக்கிச் செல்லுகிறது; எப்போதும் விழிப்புடன் புது நிலங்களைத் தேடி மரணத்தை வெல்லுகிறது. ஜகத்தின் பெரிய சிற்பிக்கு வலக்கை போன்றது. உண்மையைக் கெஞ்சி அறிவுச் சுடர் கொளுத்திய வீதிவழியே செல்லும்பொழுது, யுகத்துக்கு யுகம் வெற்றிகொண்டு முன்னேறும்போது, உலகம் முழுவதும் எதிரொலி கேட்கத் தனி ஆரவாரம் உண்டாகிறது. இந்த மனுஷ்ய ஜாதியுடன் நாம் ஸம நடையாகச் செல்ல விரும்பினால், இந்த முதுகுச் சுமையைக் கூச்சப்படாமல் வீசி எறிந்துவிட வேண்டும்.

புறத்திலிருந்து நம்மீது இடைவிடாமல் அவமானமும் கஷ்டமும் பட்டுப்பட்டுத் தீண்டலாயிருப்பதைச் சுத்தி பண்ணித் தீர்க்க வேண்டும். ‘தானாக விரும்பித் தான் உழைத்தல்’ என்னும் ஹோமத்தைச் செய்து, சுத்தி பண்ண வேண்டும். அந்த யாகத் தீயில் நம்முடைய பாவங்கள் வெந்துபோம். அஞ்ஞானப்புகை விலகும். சோம்பற் குணம் சாம்பராகும்.

பெரிய தீ தேவா! நீ தீரன், தேவன்; எம்மிடத்தே மஹத்தாயும், துக்கரஹிதமாயும், நாசரஹிதமாயும், நாயகமாயும், அமரமாயும் உள்ள அம்சத்துக்கு நீ நாதன். 

அதனை உனது ராஜ ஸிம்ஹாஸனத்துக்கு வலக்கையாக அழைக்கிறாய். நம்முடைய சோர்வும், அறியாமையும் பழியுற்று, நமதடிமைக் குணம் தண்டனைப் பட்டு நம்மினின்றும் பிரிந்து செல்க; நன்மை விளைக.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s