-டி.எஸ்.தியாகராசன்

செய்வதற்கரிய அருமையுடைய பணிகளை ஆற்றுகின்ற எவரும் பெரியார்களே! என்பதை குறள் ‘செய்தற்கரிய செய்வார் பெரியர்’ என்று பேசும். ஆனால் சங்க இலக்கியப் பனுவல் எத்தகைய பீடு பெற்ற பெரியார் ஆயினும் வியந்து நோக்க வேண்டாம் என்று ‘மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே’ என்று பகரும்; எது எப்படியாகிலும் மனித குலம் தழைக்கவும், சமூக நலன் சிறக்கவும், அல்லன மறைந்து நல்லன பிறக்கவும் உழைக்கும் உத்தமர்களை உலகம் வியந்தே, போற்றி மகிழ்ந்தே கொண்டாடும்.
இவ்வகையில் நமது நாடு பறங்கியரிடம் அடிமை பட்டிருந்த காலத்தில் ‘உச்சி மீது வானிடிந்து வீழினும் அச்சம் இல்லை’ என்று போர்ப் பரணி பாடி பாமரர்களிடம் அரசியல் நிகழ்வுகளை எழுத்தில் காட்டிட ஆங்கிலம், தமிழ் நாளேடுகளைத் தொடங்கிய பெரியார் திருவையாறு ஜி.சுப்பிரமணிய ஐயர். கிறித்துவ மிஷனரிகள் நடத்திய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் படித்து ஆசிரிய பயிற்சி முடித்து கிறித்துவ மிஷனரிகளின் பள்ளியிலேயே ஆசிரியரானார். பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்து திருவல்லிக்கேணியில் தானே ஒரு உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். அப்போது திருவல்லிக் கேணியில் இயங்கி வந்த ‘இலக்கிய அமைப்பில்’ இணைந்து செயல்படத் தொடங்கினார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்முறையாக இந்தியர் ஒருவர் திருவாரூர் சர்.பி.டி.முத்துசாமி ஐயர் பதவி ஏற்றதை அப்போதைய ‘ஏதேனியம்’, ‘மெட்ராஸ் மெயில்’ போன்ற ஆங்கில நாளிதழ்கள் குறைகூறி எழுதின. இதனைக் கண்டு மனம் பெறாத இளைஞர்களான ஜி.சுப்பிரமணிய ஐயர், டி.டி. விஜயராகவாச்சாரியார், டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி.கேசவ ராவ் பந்துலு, என்.சுப்பாராவ் பந்துலு ஆகிய ஆறு இளைஞர்கள் சேர்ந்து இரண்டு ரூபாய்க்கும் குறைந்த தொகையில் 80 அச்சிட்ட தாள்களைத் தயாரித்து, மேற்கூறிய இரண்டு நாளிதழ் செய்திகளுக்கு பதிலடி கொடுத்தனர். பின்னர் 1878-செப்டம்பர் 20 ஆம் நாளில் ‘இந்து’ என்ற பத்திரிகை வாரத்திற்கு மும்முறையாக வெளிவரத் தொடங்கியது. 1889-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தினசரி பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர்தான். இந்து பத்திரிகைச் செய்திகள் இந்தியாவில் காங்கிரஸ் தொடங்கக் காரணமாக இருந்த ஆலன் ஆக்டோவியன் ஹ்யூம் என்ற வெள்ளையரை மனம் கவரவே அவர் இந்தப் பத்திரிகைகளை வாங்கி பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கட்காக லண்டன் அனுப்பினார்.
திருவல்லிக்கேணி இலக்கிய அமைப்பு மூலமாக நாட்டிற்குத் தேவையான பல கோரிக்கைகளை சென்னை மாகாண கவர்னருக்கு அனுப்பினார். சென்னையில் மக்களின் நியாயமான உரிமைகள் மற்றும் வேண்டிய வசதிகள் ஆங்கில அரசிடம் இருந்து அவ்வப்போது கிடைத்திட ‘சென்னை மகாஜன சபை’ என்றதொரு சமூக அமைப்பைத் தொடங்கினார். இதில் பிராமணர், பிராமணர் அல்லாத இதர வகுப்பினர், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் என்று எல்லோரையும் இடம்பெறச் செய்தார். இந்த அமைப்பு மூலமாக ஆங்கில அரசுக்கு பலவற்றை கோரிக்கைகள் வாயிலாக அழுத்தம் கொடுத்தார். சட்டம் இயற்றும் சபைகள், நகராட்சி அமைப்புகள் போன்றவற்றில் தேர்தல் முறையில் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் ஜனநாயக வழிமுறையில் ஏற்படுத்த வேண்டினார். 1883-ல் ரிப்பன் பிரபு கொண்டுவந்த ஸ்தல ஸ்தாபன சுயாட்சித் திட்டத்திற்கு மாநிலம் தழுவிய வரவேற்பு நல்க ‘மகாஜன சபை’ துணை நின்றது.
சுதேசிய இயக்கம் குறித்து “சுதேசியம் என்பது தொழில் துறையில் இந்திய நாட்டின் வளர்ச்சி பின்தங்கி இருப்பதற்கு எதிரான கிளர்ச்சி மட்டுமல்ல, நாடு இன்று இருக்கும் சார்ந்து வாழும் நிலைக்கும், அடிமை நிலைக்கும் எதிரானது ஆகும். அரசியல் சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை தந்து அதனை முதலாவதாகத் தடையின்றிச் செயல்படுத்த வேண்டும். அடுத்த நிலையில் சமூக சீர்திருத்த இயக்கமும் அதனோடு இணைந்து தொழில் மறுமலர்ச்சி இயக்கமும் செயல் பட வேண்டும்” என்றார், பத்திரிகைளின் பிதாமகரான ஐயர்.
தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் விதமாக இல்லம் தோறும் சென்று நிதி திரட்டி நாட்டின், பழமையான கைத்தொழில்களை அழியாமல் காக்கவும் இளைஞர்கள் தற்சார்பு நிலையில் நிற்கவுமாக அவர்கட்கு தொழில்களை கற்றுத் தரவுமாக ‘சென்னை சுதேசிய நிதி தொழிற் சங்கம்’ என்ற அமைப்பினை நிறுவினார். சமூகத்தில் நிலவும் சாதி ஏற்றத் தாழ்வுகள் குறித்து மிகவும் கவலை கொண்ட நேரத்தில் “சாதி என்பது இமயமலையைப் போன்றது. இந்த இமயமலை சரிய வேண்டும். சாதி நம்மை விட்டுப் போகாவிடில் நாம் உலகில் தாழ்ந்து போவோம்”. என்று எவரையும் பகை கொள்ளாது, யாரையும் வெறுக்காது எல்லோருக்குமாக எச்சரிக்கைச் செய்தி விடுத்தார் அந்த சமரசபுருஷ ஐயர். இதற்காகவே சென்னை மாநகரில் ‘சென்னை இந்து சமூக சீர்திருத்த மன்றம்’ என்ற அமைப்பை 1892-ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் எல்லாப் பிரிவு மக்களுக்கும் எல்லா நிலைகளிலும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குழந்தைப் பருவத் திருமணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பவையே.
ராஜாராம் மோகன் ராய், தயானந்த சரசுவதி, 1869-இல் ‘விதவை மறுமணச் சங்கம்’ என்ற அமைப்பில் இணைந்து போராடிய கோவிந்த மகாதேவ ரானடே போன்ற பெரியார்களின் கருத்துக்களை உள் வாங்கியிருந்த ஐயர் தனது மகள் சிவப்பிரியாம்பாள் 13-ஆவது வயதில் விதவையான போது 130 ஆண்டுகட்கு முன்னரே, நாட்டில் நிலவிய வைதீக சம்பிரதாயங்களின் சமூக எதிர்ப்பைப் புறம் தள்ளி மறுமணம் செய்து வித்தார்.
‘இந்து’ ஆங்கில நாளிதழின் எழுச்சிக்குப் பிறகு தமிழக பாமர மக்கள் அனைவரும் தமது தாய்மொழியான தமிழ் மூலம் ஆங்கில அரசின் கொடுங்கோல் சட்டங்கள் பற்றியும் தலைவர்கள் சொல்லொனாத் துன்பங்களுக்கு ஆளாகி வருவதையும் சொல்லி, தேசிய உணர்வை, விடுதலை வேட்கையை ஊக்குவிக்கும் விதமாக தமிழில் ‘சுதேசமித்திரன்’ என்ற பெயரில் 1982-இல் நாளிதழைத் தொடங்கி ஆசிரியர் பொறுப்பேற்றார். மதுரையில் ஆசிரியர் பணியில் இருந்த பாரதியார் சென்னைக்கு வந்து தனது 22-ஆவது வயதில் சுதேசமித்திரன் ஆசிரியர் குழுவில் இணைந்தார். பின்னர் உதவியாசிரியராக உயர்ந்தார். சென்னையில் இருந்த தனது 17 ஆண்டுகால வாசத்தில் சுதேசமித்திரன், இந்தியா போன்ற பத்திரிகைகளில் தனது விடுதலை முழுக்கத்தை அனல் கக்கும் சொற்களை கவிதை நடையில் பாரதியார் எழுதலானார்.
பாரதியாருக்கு தேசிய உணர்வை ஊட்டி, அவரது பணிக்கு உரமும் சேர்த்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் எனில் சற்றும் மிகையல்ல. ஐயரவர்களின் சிந்தனை சமூகத்தின் அவலங்கள். தீண்டாமைக் கொடுமைகள் குறித்து எப்படி இருந்தன என்பதை 1920-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் சுவாமி விவேகானந்தர் சொல்லிய சொற்களை வார்த்தை பிசகாது தனது பத்திரிகையில் பதிவு செய்தது மூலம் நன்கறியலாம்.
“சண்டாளர்களும், பாதகர்களும், அவர்கள் எல்லாரிலும் அதிகமாக அவமானத்தாலும், கஷ்டத்துக்கும் உட்படும் பரம ஏழைகளும், கடவுளின் ரூபங்கள் என்று சொல்லி அவர்களைத் தொழ வேண்டும்”
மேலும் ஜி.சு.ஐயரவர்களின் சிந்தனை, பேச்சு, எழுத்து எல்லாவற்றிலும் சமூகத்தின் நலன் குறித்தே இருக்கும் என்பதற்கு மற்றொரு அம்சத்தைக் குறிப்பிடலாம். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரின் சீடரும், சுவாமி விவேகானந்தரின் சக சந்நியாசியுமான சுவாமி அபேதானந்தர் சென்னைக்கு விஜயம் செய்தபோது மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரியில் ஆற்றிய உரையை தனது பத்திரிகையில் பிரசுரம் செய்தார் என்பதில் இருந்தே இவரின் மேன்மையை அறியலாம். அப்போது மகாகவி பாரதியாரும் சுதேசமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமி அபேதானந்தர் தனது உரையில் கூறியதாவது:
“பிராமணர்கள் வேதங்களைச் சூத்திரர்களிடமிருந்து மறைத்து வைப்பது அர்த்தமற்ற செய்கையாகும். எந்த ஜாதிக்காரனையும் ஞானியாகக் கூடாது என்று வேதங்கள் தடை செய்யவில்லை. ஆத்மா பிராமணனுமல்ல, சூத்திரனுமல்ல, ஆத்மா சர்வ ரூபி, ஞானம் எல்லோர்க்கும் பொதுவானது. எல்லா தானங்களிலும் ‘வித்யா தானம்’ விசேஷமானது. அதை யாதொரு பட்சபாதம் இல்லாமல் அனைவருக்கும் ஒன்று போலவே கொடுக்க வேண்டும். ஜனகன், ஸ்ரீ ராமன், ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய மகான்களெல்லாம் பிராமணர்கள் இல்லை சமஸ்கிருத புஸ்தகங்களையும், வேதாந்த, சாஸ்திரங்களையும் எத்தனையோ ஐரோப்பியர்கள் நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெற்று நல்ல வேதாந்திகளாக இருக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் மயிலாப்பூர் பிராமணர்கள் அணுவளவேனும் விசேஷம் உடையவர்கள் ஆக மாட்டார்கள். சுகப்பிரம்ம ரிஷி என்பவர் பிராமணராக இருந்த போதிலும் அவர் பிராமணர் அல்லாத ஜனகரிடமிருந்தே தத்துவ ஞானம் பெற்றுக் கொண்டதாக நமது புராணாதிகள் கூறுகின்றன. ஞானத்தாலும், ஒழுக்கத்தாலும் பிராமணத்துவம் உண்டாகிறதே அல்லாமல் ‘பிறப்பினால் உண்டாகின்றது’ என்று மூடன் நினைக்கிறான். இந்தியாவின் ஜனத்திரள்களெல்லாம் உண்மை ஞானம் இன்றி அந்தஹாரத்தில் அமிழ்ந்து கிடக்கிறார்கள். அவர்களையெல்லாம் கைதூக்கி விடுவது பிராமணர்களின் கடமையாகும். ஞான சாகரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட அமிருதத்திற்குச் சமமானது, உபநிஷத சாரம், அதைப் பிராமணர்கள் சூத்திர ஜாதியாரிடமிருந்து மறைத்து வைத்துக் கொண்டிருப்பது நீதியாக மாட்டாது. எல்லா ஜாதியாரையும் சேர்த்துக் கொள்ளும் வரை மயிலாப்பூர் சமஸ்கிருத பாடச்சாலை திவலையேனும் பிரயோஜனப் படமாட்டாது”. (சுதேசமித்திரன் - 21.07.1906)
சமூக சமரச நலன் குறித்து ஆழ்ந்த உணர்வு கொண்டு அதற்காக நாளும் உழைத்த இப் பெரியாரை இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்கவில்லை.
யார் பெரியார்? என்று வரலாற்றை பக்கம், பக்கமாக திருப்பி கவனமாக மாச்சர்யங்களுக்கு இடம் கொடாமல் படித்தால் நன்கு உணரலாம் பிறர் மீது வெறுப்புக் கலந்த நச்சுச் சொற்கள் பதயோகம் இன்றி இந்து சமயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கிட தன்னால் இயன்றதனைத்தையும் செய்து நாடு அடிமைத் தளையில் இருந்து விடுதலைபெற உழைத்த உத்தமர் குறித்து மகாகவி பாரதியார் 1916ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் வெளிவந்த சுதேசமித்திரனில் ஐயர் காலமானதையொட்டி எழுதினார்.
“காலஞ்சென்ற ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய ஐயருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தமிழ்நாட்டின் உயர்வுக்கு முக்கிய சாதனங்களாக அவர் என்னென்ன விஷயங்களைக் கருதினார் என்று நன்றாக தெரியும். அவருடைய உள்ளத்திலிருந்து மூல தர்மங்களை எனக்கு ஞாபகமுள்ள வரை இங்கு எழுதுகிறேன். 1) தமிழ்நாட்டார் விசேஷ அவசரங்கள் நேரிட்டாலொழிய மற்றபடி எப்போதும் தமிழே பேசவும், எழுதவும் வேண்டும். 2) ஜாதி பேதங்கள் பாராட்டி நமக்குள்ளே அர்த்தமில்லாத உயர்வு, தாழ்வுகள் கற்பிக்கலாகாது. 3) ஸ்திரிகளைக் கஷ்டப்படுத்தலாகாது. அவர்கட்கு மேலான அறிவு தந்து மேன்மைப்படுத்த வேண்டும். 4) வைஷ்ணவம், சைவம் முதலிய மத பேதங்களாலும், வடகலை, தென் கலை போன்ற உட் பிரிவுகளாலும் நமது ஜனங்களுக்குள் விரோதம் பாராட்டுதல் நியாயமில்லை.நாமெல்லோரும் ஹிந்து ஸ்தானத்தின் குமாரர். அவரவர் கொள்கை அவரவருக்கு, மதப் பிரிவுகள் காரணமாகத் தீராத வியாஜ்யங்கள் செய்வதும், கலகங்கள் நடத்துவதும் அறிவில்லாதோர் செய்கையாகும். 5) உடை, உணவு முதலிய சௌகரியங்களுக்கெல்லாம் நமது நாட்டுப் பொருள் கிடைக்கும் போது அந்நியர் பொருளை வாங்கக் கூடாது. 6) எப்போதும் ஸ்வராஜ்யத்துக்குப் பாடுபட வேண்டும்.
(மேலும் விரிவாக அறிய, சுவாமி கமலாத்மானந்தர் தொகுத்த ‘சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை’ என்ற நூலினையும் பி.தயாளன் எழுதியுள்ள ‘விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்’ என்ற நூலினையும் படித்தால் அறியலாம்_.
இப்படி நாடு, மொழி, ஏற்றத்தாழ்வு அற்ற சமூக சிந்தனையும் கொண்டு, எண்ணியபடி பேசியபடி செயலாற்றிய பெரியாரை தமிழ் மண் போற்றுதும்! நாளிதழ் படிக்கும் பாமரனும் போற்றுதும்!
- நன்றி: தினமணி (10.03.2023)
$$$