-சுவாமி கமலாத்மானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. மதுரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இது...

1. கி.மு, கி.பி. போல் விவேகானந்தர்:
சரித்திரத்தில் ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு’ என்பதை கி.மு. என்றும், ‘கிறிஸ்து பிறந்த பின்பு’ என்பதை கி.பி என்றும் சொல்கிறார்கள். அதுபோல சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோவில் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு இருந்த இந்தியா என்பது வேறு; அவர் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தோன்றிய இந்தியா, இந்துமதம் என்பது வேறு.
அதாவது சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தான் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், கல்வி போன்ற அனைத்துத் துறைகளிலும் ஒரு மறுமலர்ச்சி தோன்றியது. இந்த உண்மையை இந்திய வரலாற்றைக் கூர்ந்து கவனிப்பவர்கள் நன்கு தெரிந்துகொள்வார்கள்.
2. இந்தியா என்பது ஒன்றுதான்:
சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியா- தென்னிந்தியா என்றும், பல மாநிலங்களாலும், பல மொழிகளாலும், சைவம் – வைணவம்- சாக்தம் போன்ற பல்வேறு மதப் பிரிவுகளாலும், பல்வேறு பழக்க வழக்கங்களாலும் இந்தியா பல்வேறு பிரிவுகள் கொண்டிருந்தது.
அந்நிலையில், அந்நாளில் இந்திய மக்கள் பாரத நாட்டின் சிறப்பை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் ‘குருடர்கள் கண்ட யானை’ போன்று தான், இந்தியாவைப் பார்த்தார்கள்.
குருடர்கள் யானையின் ஒவ்வோர் உறுப்பையும் தடவிப் பார்த்து, “இது தூண், இது முறம், இது துடைப்பம் என்று கூறினார்கள்” என்று நாம் ஒரு கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதுபோல இந்தியாவை இந்திய மக்கள் பல காரணங்களால் தனித்தனியாக நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், ‘இந்தியா முழுவதும் ஒரு நாடு, இந்தியப் பண்பாடு என்பது ஒன்று தான், இந்துமதம் என்பது ஒன்றுதான்’என்று உறுதியாக உணர்ந்தவர்; நமக்கு உணர்த்தியவர் சுவாமிஜி.
‘இந்தியா என்பது ஒரே நாடு, உலகில் இந்துப் பண்பாடு தான் பெருமைக்கு உரியது’ என்ற ஒரு சிந்தனை உருவாகாத அவர் வாழ்ந்த அன்றைய சூழ்நிலையில், இப்படி ஒரு சிந்தனையை அவர் நினைத்துப் பார்த்தார் என்பதே (Conceive செய்தார் என்பதே) வியப்புக்கு உரியது.
3. நமது பலத்தை நினைவுபடுத்தியவர்:
ராமாயணத்தில் வரும் ஆஞ்சநேயர் எல்லையற்ற வலிமை கொண்டவர். ஆனால் அவர் தன்னுடைய வலிமையை மறந்திருந்தார். அந்நிலையில் ஆஞ்சநேயருக்கு அவரது பலத்தை ஜாம்பவான் நினைவுபடுத்தினார்.
அதே போன்று இந்து மதத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் இந்திய இளைஞர்களுக்கும் தங்களின் பலத்தை நினைவுபடுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.
4. இணைப்புப் பாலம்:
சுவாமி விவேகானந்தர் புதிய இந்தியாவிற்கும், பழைய இந்தியாவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் பண்டைய மெய்ஞ்ஞானத்திற்கும், இன்றைய விஞ்ஞானத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும், இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் மேற்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும், கிழக்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் சமயத் தலைவர்களுக்கும், சமுதாயத் தலைவர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார்.
5. ஓர் ஆன்மிக சூப்பர் மார்க்கெட்:
சுவாமி விவேகானந்தர் ஒரு சூப்பர் மார்க்கெட் போன்றவர். அதாவது, அவர் ஓர் ஆன்மிக சூப்பர் மார்க்கெட்.
அவரிடம் பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம், ராஜயோகம் ஆகியவையும் உண்டு; சாக்தம் கூறும் சக்தி வழிபாடு பற்றிய கருத்துக்களும் உண்டு; சைவம் சார்ந்த கருத்துக்களும் உண்டு; வைணவக் கருத்துக்களும் உண்டு.
சாந்தம், வாத்சல்யம், சக்யம், தாஸ்யம், மதுரபாவம் போன்ற கருத்துக்களும் உண்டு; சமய சமரசம் பற்றிய கருத்துகளும் உண்டு; சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களும் உண்டு. தொண்டு, கலைகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி, ஏழை எளியவர்களை உயர்த்துதல், பொருளாதாரம், தீண்டாமை, மக்களுக்கிடையில் சமத்துவம் போன்ற சமுதாய நலனுக்கு உகந்த கருத்துகளும் உண்டு.
இவ்விதம் சுவாமி விவேகானந்தர் ஓர் ஆன்மிக சூப்பர் மார்க்கெட் போன்று இருந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு பூரண ஞானி; ஆச்சாரியர்; God Man.
பகவத் கீதையில் மனிதன் செயல்புரிய வேண்டிய முறை, மூன்று குணங்கள், உணவு பற்றிய கருத்துகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இவ்விதம் பகவத் கீதையில் பல கருத்துகள் இடம் பெற்றிருந்தாலும், பகவத் கீதை அடிப்படையில் முக்திக்கு வழிகாட்டும் ஒரு மோக்ஷ கிரந்தம்.
அதுபோல சுவாமி விவேகானந்தர் அடிப்படையில் God Man. அவர் மனித குலத்திற்கு முக்திநெறியைக் காட்டுவதற்காக அவதரித்தவர். அது தான் அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சம்; பெரும் பகுதியாகும். அவர் பூரண ஞானி, ஆச்சாரியர் என்ற பெரிய ஒரு வட்டத்தில், தேச முன்னேற்றம் முதலான அவருடைய சமுதாய நலன் பற்றிய அனைத்துக் கருத்துகளும் அடக்கம்.
6. தேசிய எழுச்சியைத் தோற்றுவித்தவர்:
சுவாமி விவேகானந்தர் நேரடியாக அரசியலில் ஈடுபட்டது கிடையாது மறைமுகமாகவும் அவர் அரசியலில் ஈடுபட்டது கிடையாது.
ஆனால் சுவாமி விவேகானந்தரின் தேசபக்திக் கருத்துகள் தான் முதன்முதலில், இந்தியாவில் தேசிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் அந்நாளில், ‘தேசபக்த ஞானி’ (Patriotic Saint of India) என்றும் போற்றப்பட்டார்.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் தேசபக்திக் கருத்துகள் நிறைந்திருக்கின்றன. இந்தச் சொற்பொழிவுகள் அடங்கிய சுவாமி விவேகானந்தரின் நூல், இந்திய விடுதலைப்போர் நடைபெற்றபோது ‘இந்திய தேசியத்திற்கு பைபிள்’ என்று அழைக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரால் இந்தியாவில் முதன்முதலில் வங்காளத்தில் தேசிய எழுச்சி தோன்றியது. பிறகு அது விரைவில் இந்தியா முழுவதும் பரவியது. பின்னர் அது மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நல்ல ஒரு வடிவம் பெற்றது.
* சுவாமி விவேகானந்தரின் தேசபக்திக் கருத்துகள், இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தன. இதைப் பற்றி மகாகவி பாரதியார், “விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்” என்று கூறியிருக்கிறார்.
* காந்திஜி, “சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, எனக்கு என் தாய்நாட்டின் மீதிருந்த தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று” என்று கூறியிருக்கிறார்.
* “உண்மையில் இன்றைய இந்தியா சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது” என்று நேதாஜி கூறியிருக்கிறார்.
* ஜவஹர்லால் நேரு, “என்னுடைய கருத்தின்படி, இந்திய விடுதலைப் போருக்கு உரிய தேசியப் போராட்டத்தைத் துவக்கிய மாமனிதர்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர். அதோடு, அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தை விவேகானந்தருக்குப் பிறகு நாடு முழுவதும் பரப்பிய பலரும் அதற்கு உரிய வலிமையையும் வேகத்தையும் சுவாமி விவேகானந்தரிடம் இருந்து தான் பெற்றார்கள். பெரும்பாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும், இன்றைய இந்தியா சுவாமி விவேகானந்தரால் தான் உருவாக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.
* ராஜாஜி, “இந்தியாவையும் இந்து மதத்தையும் காப்பாற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவர் இல்லையென்றால், நாம் நமது இந்துமதத்தை இழந்திருப்போம்; இந்தியா விடுதலையும் பெற்றிருக்காது. ஆதலால் நாம் எல்லாவற்றுக்கும் சுவாமி விவேகானந்தருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.
* தமிழ்த்தென்றல் திரு.வி.க, “லட்சம் பேர் சிறை சென்று எழுப்பும் தேசபக்தியை, விவேகானந்தரின் ஒரு பேச்சு எழுப்பிவிடும்” என்று கூறியிருக்கிறார்.
7. இந்தியாவின் மீது நல்லெண்ணம்:
ஒவ்வொரு வருடமும், ‘இந்தியக் கலாச்சார குழுவினர்’ என்று, பலரை இந்திய அரசு தன்னுடைய செலவில் மேலைநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இத்தகைய இந்தியக் கலாச்சார குழுவினர், இந்தியாவின் மீது ஓரளவு நல்லெண்ணத்தை மற்ற நாடுகளில் ஏற்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான்.
ஆனால், இதுபோன்று இந்தியாவிலிருந்து சென்ற எந்த இந்தியக் கலாச்சார குழுவும் செய்யாத அளவுக்கு, அந்நிய நாட்டவருக்கு இந்தியாவின் மீது நல்லெண்ணம் ஏற்படச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் மீது மற்ற நாடுகளில் ஏற்படுத்திய நல்லெண்ணம், இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
8. இந்தியா உலகத்தை வெல்வது எப்படி?
“இந்தியா உலகை வெல்ல வேண்டும்…இந்தியா உலகின் ஆன்மிக குருவாக விளங்க வேண்டும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
சுவாமி விவேகானந்தர் கூறிய, “இந்தியா உலகை வெல்ல வேண்டும்” என்பது, ஆங்கிலேயர் செய்தது போன்று ஆயுத பலத்தாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அல்ல.
‘உலகிற்கு அமைதி தரும் கருத்துகளாலும், இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகளாலும் இந்தியா உலகை வெல்ல வேண்டும்’ என்று சுவாமி விவேகானந்தர் கருதினார்.
இதை அவர், “ஓ இந்தியாவே விழித்தெழு! உன்னுடைய ஆன்மிகத்தால் உலகை வெற்றிகொள்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
9. சுவாமி விவேகானந்தர் என்ற ஒரு கொடியின் கீழ்:

இந்தியாவில், இந்து மதத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. “இவர்கள் அனைவரையும் ஒரு குடையின் (கொடியின்) கீழ்க் கொண்டுவர முடியுமா?” என்றால், “முடியாது” என்று தான் சொல்ல வேண்டும்.
யாரேனும் ஒரே ஓர் ஆன்மிகத் தலைவரின் கீழ் இந்தியர்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்துவது என்பது, இயலவே இயலாத காரியம்.
இந்த நிலையில் if at all யாரேனும் ஓர் ஆன்மிகத் தலைவரின் கீழ் இந்துக்களையும் இந்தியர்களையும் ஒன்றுபடுத்துவதற்கு முயற்சி செய்தால் பெரும்பாலான இந்துக்களால் (அனைவராலும் அல்ல) ஏற்றுக்கொள்ளக் கூடியவராக சுவாமி விவேகானந்தர் இருப்பார் என்று சொல்லலாம்.
‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பித்தவர் ஜி.சுப்ரமணிய ஐயர். அவர், “ஐரோப்பாவில் சில காலம், அதிகார பூர்வமான போப்பாண்டவரை எதிர்த்து இரண்டாம் போப்பாண்டவரை நியமித்தார்கள். அதுபோல, இந்தியாவிலும் சுவாமி விவேகானந்தர் அல்லது அவரைப் போன்ற ஓர் ஆன்மிக வீரரை ‘சீர்திருத்த சங்கராச்சார்யார்’ என்று நியமிப்பதற்கு சமூக சீர்திருத்தவாதிகள் முன்வருவார்களா?” என்று கூறியிருக்கிறார்.
10. அவரது கடைசி உபதேசம்:
சுவாமி விவேகானந்தர் உலகிலிருந்து மறைவதற்கு முன் உலகிற்கு வழங்கிய கடைசி உபதேசம் இது:
“இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி. உலக வரலாற்றில் சில நாடுகள் சில சமயங்களில் எழுச்சி பெற்றிருக்கும்; உலக வரலாற்றில் சில சமயங்களில் சில நாடுகள் வீழ்ச்சி பெற்றிருக்கும். ஆனால் இந்தியா அமரத்துவம் வாய்ந்த பூமி. இறைவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றும் வாழும். ஆனால் அரசியலையும், சமூகச் சச்சரவுகளையும் தேடிப் போனால் இந்தியா செத்துவிடும்”.
$$$