புதுமைகள் – 2

-மகாகவி பாரதி

உலக நடப்புகளை ரசமான நடையில் வாசகர்களுக்கு தெரிவிக்க ‘புதுமைகள்’ என்ர தலைப்பிலெ சில துணுக்குப் பத்திகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.அவற்றில் மற்றொன்று இது...

2 மார்ச் 1921                                                               ரெளத்திரி மாசி 19



ஸோவியட் ருஷ்யாவில் பணம் தொலைந்தது!


லாரின் என்பவருடைய அறிக்கையின்மீது ஸோவியட் கவர்ன்மெண்டார் (ருஷியக் குடியரசு ராஜாங்கத்தார்) ஓர் தீர்மானம் பிறப்பித்திருக்கிறார்கள். அதன்படி அரசிறையாட்சித் தலைவர் தகுந்த உத்யோகஸ்தர்களுடனே கலந்துகொண்டு இன்னும் ஒரு மாஸ காலத்துக்குள்ளே ஒரு ‘நகல்’ சட்டம் தயார் செய்து பிரதிநிதி ஸபையாருக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தச் சட்டத்தின் கருத்து யாதென்றால், தொழிலாளருக்கும், வேலையாட்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் உளவிலாகாவில் கொடுக்கப்பட்ட, முதல், இரண்டாந் தரத்து ஆஹாரச் சீட்டுகளுக்குத் தரப்படுவன உட்பட்ட எல்லா சாமான்களுக்கும் பணம் கொடுக்கும் முறையை ஒழித்துவிட வேண்டும் என்பது. ராஜாங்கத்துக்குரிய அல்லது நகர ஸபைகளுக்குரிய வீடுகளில் குடியிருக்கும் தொழிலாளர், வேலையாட்கள், அவர்களுடைய குடும்பத்தார்களிடமிருந்து பண வாடகை வாங்குவதை நிறுத்திவிடுவதும் அந்தச் சட்டத்தின் நோக்கம். இங்ஙனமே, தொழிலாளருக்கும் வேலையாட்களுக்கும் ஸங்க ஸ்தாபனங்களுக்கும் முடிய ௸ இலாகாவால் கொடுக்கப்படும் அடுப்புக்கரி வகைகளனைத்திற்கும் பணக் கிரயம் கொடுக்க வேண்டியதில்லை யென்றும், வாயு, மின்ஸாரம், டெலிபோன், நீர், சாக்கடை முதலியவற்றுக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை யென்றும் அச்சட்டம் நியமிக்கும்.

ராஜாங்கப் “பணத் தொலைத்தல்” கமிஷன்


இதனிடையே ருஷிய ராஜாங்கத்தார் ஒரு விசேஷ ஸமிதி யேற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஸமிதியில் ஒரு மாஸ காலத்திற்குள்ளே பணக்கிரயங்கள் என்ற ஏற்பாட்டையே அழித்து விடுதற்குரிய விஸ்தாரமான திட்டமொன்று சமைத்துக் கொடுக்கும்படி உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றுள், பாங்க் கணக்கு, ஸோவியட் தொழிற் சாலைகளினிடையேயும் ஸோவியட் ஸங்கங்களினிடையேயும் பரஸ்பரம் செய்யப்படும் கொடுக்கல் வாங்கல் முதலியனவும் அடங்கும். இந்த ஏற்பாடுகளெல்லாம் விரைவாக அநுஷ்டானத்திற்கு வந்து விடுமென்று மேலே கூறிய ஸ்ரீமான் லாரின் என்பவரே அமெரிக்கப் பத்திரிகை யொன்றில் எழுதியிருக்கிறார். இதே காலத்தில் ஸ்ரீமான் லாரினால் சொல்லப்பட்ட மற்றொரு யோசனையும் நிறைவேற்றப்பட்டு மென்று தெரிகிறது. இந்த யோசனையை ஏற்கெனவே ராஜாங்கத்தார் அங்கீகாரம் புரிந்துவிட்டனர். அதாவது, ரயில் பாதை வழியாகப் போகும் ஸாமான்களுக்குத் தீர்வைப் பணம் வசூல் செய்யாமை, ஏறக்குறைய பெரும்பான்மை ரயில்வே யாத்திரைக் கட்டணங்கள் வாங்குவதை நிறுத்திவிடுதல் முதலியவற்றைக் குறித்தது.

ஆரம்பங்கள்

1918ம் வருஷத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற “ஸோஷலிஸ்ட்” ஸமாஜத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கும் ஆஹாரம் முதலியவற்றுக்கும் தொழிலாளருக்குக் கொடுக்கும் ஆஹாரம், துணி, வாஸஸ்தலம் முதலியவற்றுக்கும் பணம் வாங்கக் கூடாதென்ற யோசனை ஸ்ரீமான் லாரினாலே சொல்லப்பட்டது. அதை ஸமாஜத்தார் ஒரு மனதுடன் அங்கீகாரம் செய்து கொண்டனர். அவ்வருஷ ஏப்ரல் மாஸத்தில் குழந்தைகளுக்கெல்லாம் ருஷியாவில் இனாம் ஆஹாரம் போடுவதாக ராஜாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குழந்தைகளின் வயதளவு 14-ஆக வைத்திருந்து பின்பு 16-ஆக உயர்த்தப்பட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு, வேலையாட்களுக்கெல்லாம் இனாமாகத் துணி கொடுக்கப்பட்டது. அப்பால் சவர்க்காரம் எல்லாத் தொழிலாளருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. அப்பால் சாதாரணக் கடிதங்களுக்குத் தபாற் கிரயமாகப் பணம் செய்லுத்தும் வழக்கம் நிறுத்தப்பட்டது. அப்பால் வேளையாட்களின் கூலிக்கு பணம் கொடுப்பதனிடத்தில் ஸாமான் கொடுப்பதென்றேற்பட்டது. இப்போது மேற்கூறியவற்றை யெல்லாந்திரட்டி, ஒரேயடியாக ஸர்வ விஷயங்களிலும் பணமில்லாதபடி செய்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள்.

உண்மையான புதுமை

மனுஷ்ய நாகரிகத்தின் ஆரம்பகாலந் தொட்டே பணப் பழக்கமிருந்து வருகிறது. இதனால் விளைந்த துன்பங்கள் எண்ணற்றன. அந்தப் பழக்கத்தை இப்போது மனித ஜாதியில் பத்திலொரு பங்கு ஜனத் தொகையை ஆளும் ராஜாங்கத்தார் திடீரென்று நிறுத்த உத்தேசித்திருக்கிறார்கள். இதனால் புதிய ஸெளகர்யங்களேற் படுவதுடனே, பணப் பழக்கத்தால் இயன்று வரும் பழைய ஸெளகர்யங்களுக்கு இடையூறில்லாமல் செய்து விடக் கூடுமானால், ருஷியாவை இவ்விஷயத்தில் உலகத்தார் பின்பற்ற முயல்வார்களென்பதில் ஸந்தேஹமில்லை.

ஸென்ட் நிஹல்ஸிங் சொல்வது

ஸ்ரீமான் ஸென்ட்- நிஹல்ஸிங் “பால் மால்” கெஜட்டின் தலையங்கப் பக்கத்தில் எழுதியிருக்கும் வ்யாஸ மொன்றில் நம் எதிர்கால வைஸ்ராயாகிய லார்டு ரீடிங்குக்குச் சில புத்தி வசனங்கள் சொல்லியிருக்கிறார். ப்ரிடிஷார் மீட்டு மீட்டும் வாக்குறுதிகள் செய்து அவற்றை உடைப்பதினின்றும் இந்தியாவில் அமைதி ஏற்படாதென்று ஸ்ரீமான் ஸிங் எச்சரிக்கிறார். இந்தியச் சட்டப் புஸ்தகத்திலுள்ள அடக்குமுறைச் சட்டங்களையும் உத்தரவுகளையும் அறவே ஒழித்து விடுவதாக லார்ட் ரீடிங் இந்தியாவில் இறங்கியவுடனே உறுதிமொழி கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீமான் ஸிங் விரும்புகிறார். அவ்வுறுதி மொழியை விரைவில் நிறைவேற்றவும் வேண்டுமென்கிறார். ரெளலட் சட்டத்தையும், இந்தியாவில் பேச்சு ஸ்வதந்த்ரத்தையும் பத்திரிகை ஸ்வதந்த்ரத்தையும் சுருக்கக்கூடிய மற்றச் சட்டங்களையும் அழிக்கும்படி சிபாரிசு செய்கிறார். இந்தியர்களின் ஸம்மதத்தின்மீது இந்தியாவை ஆளுவதாக ப்ரிடிஷார் ஒருபுறம் கதை சொல்லிக் கொண்டு மற்றொரு பக்கத்தில் அடக்கு முறைகளை நடத்திக் கொண்டிருந்தால், ப்ரிடிஷ் வாக்குறுதிகளை இந்தியர் நம்புதல் ஸாத்யப்படாமற் போகுமென்பதைக் குறிப்பிடுகிறார். இவ்விஷயம் ராய்ட்டர் தந்தி மூலமாக இந்தியாவுக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்ரீமான் ஸிங் சொல்வதை இங்கிலாந்திலுள்ள சிலர் ஆதரிக்கக் கூடுமெனினும், இங்குள்ள அதிகாரிகள் அவர் விருப்பத்தைத் தாமும் ஆதரிக்கமாட்டார்கள்; லார்ட்- ரீடிங் ஆதரிக்க இடம் கொடுக்கவும் மாட்டார்களென்று தோன்றுகிறது. இங்குள்ள அதிகாரி வர்க்கத்தார் பாக்ய ஹீனராகிய (ப்ரான்ஸ் தேசத்து) பூர் போன் ராஜ குடும்பத்தாரைப் போலவே எதனையும் புதிதாகத் தெரிந்துகொள்வதுமில்லை. எதனையும் மறப்பதுமில்லை என்று “ஹிந்து” பத்திராதிபர் எடுத்துக் காட்டியிருப்பது மெய்யேயாம். இவர்களைச் சீர்திருத்து முன்பு இந்தியாவுக்கு ப்ரிடன் மேறென்ன சீர்திருத்தங் கொடுத்த போதிலும் இந்தியாவில் அமைதியேற்படாதென்பது திண்ணம். பரிபூர்ண ஸ்வராஜ்யங் கொடுப்பதே இந்தியா, ப்ரிடன் இரண்டு தேசங்களுக்கும் ஹிதமான வழி; அதுதான் சரியான சீர்திருத்தம். மற்ற எவ்விதமான சீர்திருத்தங்களையும் இங்குள்ள அதிகாரிகள் குட்டிச்சுவராக்கிவிடுவார்கள்.

  • சுதேசமித்திரன் (02.03.1921)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s