-எஸ்.ஆர்.சேகர்
திரு. எஸ்.ஆர்.சேகர், கோவையில் வசிக்கும் தொழிலதிபர்; அரசியல், இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர்; சட்டம் பயின்றவர்; பாரதீய ஜனதா கட்சியின் தமிழகப் பொருளாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்து 2013-இல் இவர் எழுதிய கட்டுரை இங்கே…

“ஐநூறு ஆண்களால், 50 ஆண்டுகளில் இந்தியாவை மாற்ற முடியுமென்றால், அதே அளவு பெண்களால், அதே மாற்றத்தை ஒரு சில வாரங்களிலேயே நடத்திக் காட்ட முடியும்” ”மேற்கத்திய நாடுகள் பெண்களை மனைவியாகப் பார்க்கின்றன… இந்தியா பெண்களைத் தாயாக வணங்குகிறது” ”ஆண்களும் பெண்களும் சேர்ந்தே சமூக மாற்றத்தை உண்டாக்க முடியும். ஒரு பறவை ஒற்றைச்சிறகால் எப்படிப் பறக்க முடியாதோ, அதுபோல பெண்களில்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை”
– இவையெல்லாம் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள். இதற்குமேல் பெண்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுக்க முடியும்?
அதுவும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், முகலாயப் படையெடுப்பால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பின்னர், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட காலத்தில், பெண்கள் உரிமைகள் ஏதும் இல்லாமல், வெறும் ‘பிள்ளை பெறும் இயந்திரமாக’ வைக்கப்பட்டிருந்த காலத்தில், விவேகானந்தரின் கருத்துக்கள் இவ்வாறு இருந்தது பெரும் புரட்சிகரமானது அல்லவா?
குழந்தைத் திருமணம் மட்டுமே நடந்த காலம். பெண்ணுக்கு எதற்கு கல்வி எனக் கேட்ட காலம். விதவைகள் மறுமணம் என்றால் என்ன என்று தெரியாத காலம். கணவன் இறந்தால் கணவனுடன் மனைவியும் உடன்கட்டை ஏறும் ‘சதி’ சதிராட்டம் போட்ட நேரம். இப்படி எல்லாத் தரப்பு எதிர்ப்புக்களையும் மீறி பெண்ணின் பெருமையை விவேகானந்தர் போற்றியது பெரும் ஆச்சரியம் அல்லவா?
டில்லி கற்பழிப்புக் கொலை நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்ததியதும், அதன் வெளிப்பாடாக பெண்களைப் பாதுகாக்க, பெரும் விவாதம் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் இன்றைய (*2013) நிகழ்வு..
இந்த விவாதம் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட பிறகு, உலகமே ஒரு சிறு கிராமமாக மாறிவிட்ட பிறகு, ஆணுக்குப் பெண் சமம் என உடையிலும், நடையிலும், தேறிவிட்ட பிறகும், நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால், விஞ்ஞானம் வளராத காலத்தில், பழமையும், மூட நம்பிக்கைகளும், ஆட்சி பீடத்தில் இருந்த நேரத்தில், ஒரு இளம் துறவி, பெண்களின் மீதிருந்த சமூக அவலங்களுக்கு எதிர்க்குரல், போர்க்குரல் எழுப்பியது மட்டுமல்ல, யாரும் சொல்லாத, சொல்ல நடுங்குகின்ற, செய்திகளைச் சொல்லி இருக்கிறார் என்றால், அது எப்படி சாத்தியமாயிற்று? மற்றவர்களிடமிருந்து அவரால் மட்டும் எப்படி மாறுபட்டு இருக்க முடிந்தது?
இந்திய வரலாற்றில் எத்தனையோ சாமியார்கள், துறவிகள், மடாதிபதிகள், ஆன்மிகத் தலைவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கின்றனர். ஆதிசங்கரர், மத்துவாச்சாரியார், ராமானுஜர், புத்தர், மகாவீரர், என பல ஆயிரம் வருட சரித்திரம் கொண்ட ஆன்மிக குருக்கள் பேசப்பட்டாலும், அவர்களது உபதேசங்கள் கீழ்த்தட்டு சாமானிய மக்கள் வரை சென்றடையவில்லை.
ஆதிசங்கரரின் அறிவோடும், புத்தரின் கனிவோடும், ராமானுஜரின் மனமாச்சரியங்களைக் கடந்த இதயத்தோடும், ஏசு பிரானின் வசீகரத்தோடும், முகமது நபிகளின் ஈர்ப்போடும், ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆசிகளோடும், உலகெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரிக்கும் ஆற்றல் பெற்றமையால், சுவாமி விவேகாந்தர் 150 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் (*2023) போற்றப்படுகிறார்.
இந்து சமயம் எத்தனையோ ஜாம்பவான்களின் திறமைகளைக் கண்ட விளையாட்டு மைதானம். பேரும் புகழும், சீரும் சிறப்பும், திறமையும் ஆற்றலும் கொண்ட பெரியோரின் உபதேசங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இங்கு ரசிக்கப்படுகின்றன..
அதில் விவேகானந்தரின் கருத்துக்கள், இன்றைய உலகக்கோப்பை கால்பந்து போல, 20 – 20 கிரிக்கெட் போல, விறுவிறுப்புடனும் வேகத்துடனும் இன்னும் ரசிக்கப்படுகின்றன; படிக்கப்படுகின்றன. இதன் ரகசியம் என்ன?
1863-ஆம் ஆண்டு, ஜனவரி 12 -ஆம் நாள் மகர சங்கராந்தி அன்று, கல்கத்தாவில் நடுத்தரமான ஒரு காயஸ்தர் குடும்பத்தில் அவதரித்த இந்த மகான், மற்ற எல்லா ஆன்மிக குருக்களைப் போலவும் தன் வாழ்க்கையைத் தொடங்கவில்லை.
கல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் காலேஜில் தன் பட்டப் படிப்பை முடித்த பின், மேற்கத்திய சிந்தனையாளர்கள், டேவிட் ஹ்யூம், ஹெகல், அகஸ்ட் கோம்பு, ஹெர்பர்ட் ஸ்பென்சர், ஜே.சி.மில், சார்லஸ் டார்வின் போன்றோரின் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தார்.
இளம் வயதில் அம்மாவிடமிருந்து புராணக் கதைகளைக் கேட்டாலும், இறைவன் இருக்கிறான் என்பதை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளவில்லை அவர். அதேசமயம், இன்றைக்கு இருக்கும் நாத்திகவாதிகள் போல், வீட்டுக்குள் கடவுளை வழிபட்டு வெளியில் வேஷம் போடவும் இல்லை.
சோதிடர்கள் ஆலோசனையின் பேரில், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மட்டும், பரிகாரம் செய்து பலன்பெற, கோயில் கோயிலாக ஏறி இறங்கும் சுயநல ஆன்மிகவாதியாகவும் அவர் இருக்க வில்லை.
‘இறைவன் இருக்கிறான் என்றால், அவன் எங்கிருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான்? எனக்கு அவனைக் காட்டு’ என்ற கோரிக்கைகளோடு தான் அவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்துசேர்ந்தார்.
தான் கண்டதை, கேட்டதை, படித்ததை, உணர்ந்ததை அனுபவித்த பின்பே, மக்களுக்குச் சொன்னதால், விவேகானந்தரின் உபதேசங்கள் இன்றும் வீரியமுள்ளதாக, ஜீவனுள்ளதாக இருக்கின்றன. அவை இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன.
துறவிகளுள் ஒரு புரட்சியாளர்…
ஆன்மிக குருக்கள் பலவகைப்படுகிறார்கள். ஒருசிலர் பிறவியிலேயே ஞானம் பெற்று துறவறம் பூண்டவர்கள்; வேறு சிலர் தாங்கள் சார்ந்துள்ள மடங்களால் பயிற்றுவிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவர்கள்; மற்றும் சிலர் தவமியற்றி, ஞானம் பெற்றவர்கள். இவர்களிலிருந்து முற்றும் மாறுபட்டவர் சுவாமி விவேகானந்தர்.
அவர் எந்த குருகுலத்திலும் பயிற்றுவிக்கப்படவில்லை; இளமையிலேயே திடீர் ஞனமும் பெற்றுவிடவில்லை. காடுகளில் அலைந்து திரிந்து தவமியற்றவுமில்லை.
தன் மனதுக்குள் எழுந்த கேள்விகளுக்கு விடை காண அவர் புறப்பட்டார்; சந்திப்பவர்களிடமெல்லாம் பதில் தேடினார்; அக்காலத்தில் எந்த ஆன்மிகவாதியும் செய்யாத புரட்சியைச் செய்தார்; உலகம் சுற்றும் வாலிபனாக உலககெங்கும் வலம் வந்தார்.
போக்குவரத்து வசதியில்லாத 19-ஆம் நூற்றாண்டில், வெளிநாடுகளுக்கு கப்பல் பயணத்தையே நம்பியிருந்த அக்காலத்தில், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா தவிர உலகம் முழுதும் சென்றுவந்த துறவி என்னும் பெருமை விவேகானந்தருக்கு மட்டுமே உண்டு.
இந்தப் பயணங்களில் உலக சரித்திரத்தைக் கரைத்துக் குடித்தார். நாடுகளின் பூகோளம் அவருக்கு அத்துப்படி ஆயிற்று. ஆன்மிகவாதிகளை மட்டும் சந்திக்காமல், சினிமா மற்றும் நாடக நடிகர்கள் முதல் பாப் – பாடகர்கள் வரையிலும், கோடீஸ்வரர்கள் முதல் எழுத்தாளர்கள் வரையிலும், சிந்தனையாளர்கள் முதல் சாமானிய மதவாதிகள் வரையிலும் சந்தித்தார்.
இதனால் தான் அவரது சிகாகோ உலக மத பாராளுமன்ற உரையிலே சீற்றம் இருந்தது; வீரமும், வீரியமும், விவேகமும் அணிவகுத்து நின்றது. “அமெரிக்காவின் சகோதரிகளே, சகோதரர்களே…” என்ற அவரது வாக்கியம், 7000 உலக மாநாட்டுப் பிரதிநிதிகளை எழுந்துநின்று இரண்டு நிமிடம் தொடர்ந்து கரவொலி எழுப்ப வைத்தது.
முதலில் அந்த மாநாட்டில் விவேகானந்தருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவர் எந்த அதிகாரப்பூர்வ மடத்தின் பிரதிநிதியாகவும் அங்கு தன்னை பதிவு செய்யவில்லை. அதற்கு முன்பு சுவாமி அமெரிக்காவின் ஹார்ட்வர்ட் பலகலைக்கழகத்தில் உரை நிகழ்த்தியிருந்தார். அதன் தலைவர் ஜான் ஹென்றி ரைட் சுவாமிஜியின் உரையில் மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். சுவாமிஜியின் பங்கேற்புக்கு ஏற்பட்ட தடைக்கு கொதித்துப் போயிருந்த ஹென்றி, விவேகானந்தரைப் பற்றி “சூரியன் சொர்க்கத்தில் உதிப்பதற்கு யார் அனுமதி கேட்க வேண்டும்?” என காட்டமாகச் சாடினார்.
விவேகானந்தர் உலகம் சுற்றியதோடு நிற்கவில்லை. நம் தாய்நாட்டின் அனைத்து முக்கிய ஊர்களுக்கும் யாத்திரை செய்தார். வாரணாசி, அயோத்தியா, ஆக்ரா, அலகாபாத் போன்ற வடபகுதிகளுக்கும், கிர்னார், கட்ச், போர்பந்தர் போனற மேற்குப் பகுதிகளுக்கும், ராமேஸ்வரம், மதுரை, சென்னை, பாண்டிச்சேரி, கொச்சி, கொடுங்கலூர், மைசூர் போன்ற தென்பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.
தவமியற்றும் நோக்கோடு இமாலயத்திற்கும், குமரிமுனையில், இன்று அவர் நினைவாக கட்டப்பட்டிருக்கும் பாறைக்கும் அவர் விஜயம் செய்திருக்கிறார்.
செயல்களில் கம்பீரம் வர வேண்டுமானால், நம் சிந்தனையிலும் கம்பீரம் வர வேண்டுமென விவேகானந்தர் நினைத்தார். குழலூதும் கண்ணனை வணங்குவதை விட, போர்க்களத்தில் சங்கநாதமிடும் கிருஷ்ணனை வணங்கு என்றார்.
‘விதி மற்றும் இறைவன் மீது பழிபோடும் சோம்பேறிகள் இந்நாட்டிற்கு சுமைகள். வெறியாய் வேலை செய். சந்தோஷத்தோடு பணியாற்று. அதுதான் உனக்கு சொர்க்கம் தரும்’ என்றார். வித்தியாசமான, ஆனால் வெற்றி தரும் நடைமுறை, சிந்தனையை விவேகானந்தர் உருவாக்கினார்.
புழுதி வீசும் தெருக்களில் சிறை போன்ற அறையில் கந்தல் துணியைக் கட்டிக்கொண்டு, ஆண்டுதோறும் இனவிருத்தி செய்து ஏழைகளையும் பிச்சைக்கரர்களையும் உருவாக்குபவனுக்கு எங்கே சொர்க்கம் கிடைக்கும் என வறுமையையும் சோம்பேறித்தனத்தையும் சுவாமிகள் கடுமையாகச் சாடினார்.
வங்கத்தில் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடிய போது, பசுக்களைக் காக்க நிதி கேட்டு வந்தவரிடம், “என் சக மனிதன் பட்டினியால் சாகும்போது அவனைக் காப்பாற்றாமல் பசுக்களைக் காக்க என் தர்மத்தில் இடமில்லை” என்று – பொதுவுடமைக் கட்சி தோன்றுவதற்கு முன்பே – கூறிய காவியுடை தரித்த இந்த சன்னியாசி, மதக் கட்டுப்பாடுகள், மத நம்பிக்கைகளை மீறி மனிதனை நேசித்தார்.
பெண்மையைப் போற்றிய விவேகானந்தரிடம் அன்னை சாரதாதேவிக்கு இருந்த பாசத்திற்கு ஒரு சம்பவம்…
ஸ்ரீ ராமகிருஷ்னர் உணவு விஷயத்தில் சீடர்கள் மீது மிகுந்த கட்டுப்பாடுகள் விதித்திருந்தார். விவேகானந்தர் உட்பட யாராயினும் இரண்டு சப்பாத்திகள் தான்.
‘ஜிம்’ பயிற்சி செய்யும் நரேந்திரனுக்கு இது போதாதல்லவா? அன்னை சாரதா ஆறு சப்பாத்திகளை இரண்டு குண்டு சப்பாத்திகளாக்கி நரேந்திரனுக்கு வழங்கினார்.
பரமஹம்சரின் கட்டளையும் காப்பாற்றப்பட்டது; தாய்ப்பாசமும் கரைபுரண்டது.
பெண்களின் மீது விவேகானந்தருக்கு இருந்த பாசத்திற்கு ஒரு சம்பவம்…
பேலூர் மடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. மடத்திற்கு அருகில் வசித்த விலைமாதர்கள் கலந்துகொள்ள வந்தனர். ஆனால் மடத்தினர் அனுமதிக்கவில்லை. அதைக் கண்ட விவேகானந்தர் தலையிட்டு, எந்தப் பெண்ணும் எனக்குத் தாய் தான். விலைமாதர் என்பதால் அனுமதி மறுப்பை ஏற்க மாட்டேன்’ என்று கூறி அவர்களை அனுமதித்தார்.
மூதாட்டியின் மீது பாசம் – ஒரு சம்பவம்…
சென்னை வந்த விவேகானந்தருக்கு ரயில் நிலையத்தில் ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தூரத்திலிருந்து ஒரு வயதான பாட்டி சுவாமிகளைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு இருந்தார். இதைக் கவனித்த விவேகானந்தர் அம்மூதாட்டியை அருகில் அழைத்தார். மூதாட்டியும், விவேகானந்தரைப் பார்த்து, ‘திருஞானசம்பந்தர் மாதிரி இருக்கியே’ என கைகளைப் பற்றிக்கொண்டார்.
அமெரிக்கத் தாய் – ஒரு சம்பவம்…
அமெரிக்காவில் விவேகானந்தரின் வசீகரத் தோற்றம், மின்னெலெனத் தெறிக்கும் பேச்சு – இவற்றால் ஈர்க்கப்பட்ட பெண், இவர் மூலமாக ஒரு குழந்தை வேண்டுமென்றாள்.
அதற்கு உடனடியாக விவேகானந்தர், ”இவ்வளவு அழகான தாயைப் பெற இந்த மகன் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்? என்னை உன் குழந்தையாக ஏற்றுக்கொள்” என்றார்.
பெண்களை உயர்த்திய பெரியார்…
தாய்க்குலத்தின் மீது விவேகானந்தருக்கு இருந்த மதிப்பு காரணமாகவே, ஸ்ரீ ராமகிருஷ்ணருக்குப் பிறகு அன்னை சாரதாதேவி பெயரில் ஒரு ஆசிரமம் நிறுவினார். அயர்லாந்துப் பெண்மணியான மார்கரெட் என்பவரை தனது சீடராக்கி ‘சகோதரி நிவேதிதை’ எனப் பெயர் சூட்டி, பெண்கள் மேம்பாட்டிற்கான தனது தூதராக்கி நாடு முழுதும் பிரசாரம் செய்ய அனுப்பினார்.
விவேகானந்தரின் பெண் விடுதலை, பெண்கள் மேம்பாடு, பெண்ணிய மாண்பு என்பதெல்லாம் இக்காலத்தவரோடு கூட ஒப்பிடவே முடியாது. இன்றைக்கு இருக்கும் கல்வியும் சிந்தனையும் அன்றில்லை. பெண்களை ஒரு பொருட்டாகவே கருதாத காலத்தில், அத்தனை எதிர்ப்புக்களையும் மீறி, பெண்களின் உயர்வுக்கு சிம்ம கர்ஜனை செய்த துணிவு, விவேகானந்தரை எக்காலத்திலும் உயர்ந்தவராகவே காட்டும்.

விவேகானந்தரின் சொற்பொழிவுகளில் பரந்த கருத்துக்களைக் கண்ட பாதிரியார்களும் கூட மிகவும் வியந்தனர்; அவர் நண்பர்களுடன் சாதாரணமாக பேசிச் சிரிப்பதைக் கண்டு மலைத்துப்போயினர். ‘குரு என்பவன் குழந்தையாக இருப்பது குற்றமல்ல’ என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியவர் விவேகானந்தர்.
துறவி என்பவர் ஆசிரமத்தோடு அடங்கி விடுபவர் அல்ல என்பதும், எல்லாத் துறையிலும் புதுமை செய்கின்ற புதிய துறவிகளை உருவாக்க வேண்டும் என்பதும் விவேகானந்தரின் ஆசையாக இருந்தது. இந்தச் சிந்தனைகள் இந்தக் காலத்துத் துறவிகளுக்கும் பொருந்துவதாக உள்ளது.
“இரும்பினால் செய்யப்பட்ட தசை, எஃகினால் செய்த தசை நார்கள், இடி எதனால் செய்யப்பட்டதோ அதனால் செய்த எதற்கும் கலங்கா மனம் கொண்ட ஆயிரம் இளைஞர்களை என்னிடம் தாருங்கள். நான் என் தாய்நாட்டை உலகின் குருவாக மாற்றிக் காட்டுகிறேன்” என்றார் சுவாமிகள்.
“எழுந்திருங்கள்…விழித்திருங்கள்…இலக்கை அடையும் வரை பயணத்தை, பணியை நிறுத்தாதீர்கள்” என அவர் நமது இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்
சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் ஆண்டு இந்த ஆண்டு (*2013). இதைப் பயன்படுத்தி, அவரது சிந்தனைகளை உலகெங்கும் பரப்புவோம். பாரதத்தை உலகின் குருவாக்க உழைப்போம்.
$$$
நல்ல பொருள் நிறைந்த கட்டுரை. எனக்கு தெரியாத பல அரிய தகவல்கள் பதிவு செய்யபட்டுள்ளது. இந்த கட்டுரையை இக்குழுவில் பகிர்ந்தமைக்கு நன்றி
LikeLike