புதுமைகள் – 1

-மகாகவி பாரதி

உலக நடப்புகளை ரசமான நடையில் வாசகர்களுக்கு தெரிவிக்க ‘புதுமைகள்’ என்ற தலைப்பில் சில துணுக்குப் பத்திகளை மகாகவி பாரதி எழுதி இருக்கிறார்.அவற்றில் ஒன்று இது...

5 மார்ச் 1921                                       ரெளத்திரி மாசி 22

இல்லாத காலிலே நோவு தெரிதல்

ஐரோப்பிய மஹாயுத்தத்தின் கால் பறி கொடுத்த கூட்டத்தார் ப்ரான்ஸ் தேசத்தில், இதர தேசங்களைப் போலவே ஆயிரக் கணக்கான ஜனங்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நவீன முறையில் மரக் கால்கள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கால்கள் மிகவும் ஸெளகர்யமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதால், இவர்கள் சிறிது காலத்திற்குள் அவற்றை ஸாமான்யக் கால்களாகவே பாவித்து விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனுஷ்யனுடைய மனிதன் விநோத சுபாவங்களைக் கருதுமிடத்தே இஃதோர் ஆச்சரியமில்லை யெனலாம். ஆனால் இதற்கு மேலே மற்றொரு விநோதமான அனுபவத்தைக் குறித்துச் சில தினங்களின் முன்னே “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையில் ப்ரசுரம் செய்யப்பட்டிருந்த குறிப்பொன்றை நோக்குமிடத்தே மிகவும் ஆச்சர்யம் விளைகிறது. பாரிஸ் பட்டிணத்தில் அநேக ப்ரபல வைத்யர்கள் இஃதுண்மை யென்று ஒருமைப்பாடு தெரிவித்திருக்கிறார்களாம். அதாவது, மேற்படி மரக்கால்களின் பாதத்தில் நோவு தெரிவதாக எத்தனையோ மரக்கால் மனிதர் வந்து வைத்தியர்களிடம் சிகிச்சை கேட்கிறார்களாம்!

“இஃதென்ன பைத்தியம்! தொடைமுதல் தாள் வரை நல்ல மரக்கட்டையோ அது போன்ற வேறு ஜட ஸாமானோ! அதன் மரத்தாளில் நோயிருப்பதாம்! அதனைத் தொடைக்கு மேலுள்ள சரீரம் உணர்வதாம்! இஃதென்னே பேதைமை!” என்று பலர் வியப்புறலாம். ஒருவர் இருவர் சொன்னால் அவர்களைப் பித்தரென்று கூறித் திரஸ்காரம் புரிந்துவிடலாம். ஒரே மாதிரியாக அநேகர் வந்து சொல்லும் போது, பின்னும் அது பேதைமை தானென்பதை நாம் உணர்வோமெனினும் அதைக் குறித்து சாஸ்த்ர ஆராய்ச்சி யேற்பட இடமுண்டாயிற்று. மனுஷ்யனுடைய மனதில் எத்தனை விதமாக மூடக் கொள்கைகள் ஜனிக்கின்றன! எத்தனை மயக்கங்கள், எத்தனை மோஹங்கள், எத்தனை மறதிகள்! நாகரிகமடைந்த, பயிற்சி பெற்ற அறிவுகளிலும் ஆயிரம் வகை விசித்திரமான மூட பக்திகளும் மஹாமூட பயங்களும் குடி புகுந்திருக்கின்றன! இஃது சாஸ்த்ர ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

ஐர்லாந்துக்குக் கார்டினல் போர்ன் சொல்லும் புத்தி

“கார்டினல்” என்பது ரோமன் கத்தோலிக்க குருக்களின் சிரேணியில் மிக உன்னத ஸ்தானத்தைக் குறிப்பிடுவது. கார்டினல் போர்ன் என்பவர் ஐரிஷ் பாதிரி வர்க்கத்தைச் சேர்ந்தவர். இவர் ஐர்லாந்து வாஸிகளுக்கு விடுத்திருக்கும் ஸ்ரீமுகமொன்றில், ஸ்வதேசத்தின் மீதுள்ள ப்ரேமை மிகுதியால், தம் வசமின்றிச் சிலர் கடவுளின் விதிகளுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் விரோதமான ஸபைகளில் ஸம்பந்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறதென்று சொல்லி அதனைக் கண்டனம் பண்ணியிருக்கிறார். 1867-ஆம் வருஷத்தில் (f) பீனியன் பழிச் செயல்கள் லண்டனில் ஐர்லாந்தியரால் நடத்தப்பட்டபோது கார்டினல் மானிங் கொடுத்த எச்சரிக்கையைத் தாம் இப்போது மீட்டும் கொடுப்பதாக அவர் தெரிவிக்கிறார். அதாவது இப்போது ஸின் பீனர்கள் ஆங்கிலேயருக்கு விரோதமாக, ஐர்லாந்தில் ஏராளமாகவும் இங்கிலாந்திலே சொற்பமும் நடத்தி வரும் கொலைச் செயல்கள் முதலியன கிறிஸ்தவ மதத்துக்கும் கடவுளுடைய விதிகளுக்கும் விரோதமென்பது இவருடைய கருத்து. மனிதர் பரஸ்பரம் பகைக்கவாயினும் கொல்லவாயினும் கூடாதென்றும், ஸஹோதரரைப் போல் நேசிக்க வேண்டு மென்றும் யேசு கிறிஸ்து நாதர் கட்டளையிட்டிருப்பதை உத்தேசித்து, அவருடைய சிலுவைக்கு ஐரிஷ் ப்ரதிநிதியாகிய கார்டினல் போர்ன் இங்ஙனம் ஸ்ரீமுகம் பிறப்பித்தமை முற்றிலும் பொருத்த முடைய செய்கையேயாம்.

பகைவர்கள் நம்மைத் துன்புறுத்தும் போதும் நாம் அவர்கள் மகிழ்ச்சி யடையும்படி துன்பத்துக்குள்ளாகி நிற்க வேண்டுமேயன்றி, அவர்களைத் துன்புறுத்தலாகாதென்பது கிறிஸ்தவ தர்மம். ஆனால் ஐரோப்பிய மஹா யுத்ததில் யேசு கிறிஸ்துவின் பக்தர்கள் பரஸ்பரம் லக்ஷக் கணக்காக பீரங்கிகளாலும், எறி குண்டுகளாலும், விஷக் காற்றாலும் கொன்ற ஸமயத்தில் இந்தப் பாதிரிகள் எங்கே போயிருந்தார்கள்? ரோமாபுரியில் போபானவர் மாத்திரம் இடைக்கிடையே யுத்தத்தை நிறுத்தி ஸமாதானந் தேடினால் நல்லதென்று யுத்தத்தின் பிற்பகுதிக் காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தந்த தேசத்து குருக்கள் போரைக் கண்டித்து ஏதேனும் சொன்னார்களா? மூலைக்கொரு பக்ஷமாகத் தத்தம் கக்ஷியே நியாயமென்றும், தத்தம் கக்ஷிக்கே வெற்றியும் எதிரிகளுக்குத் தோல்வியும் கொடுக்க வேண்டுமென்றும் யேசு கிறிஸ்துவையே பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்!

இப்போதும் ஆங்கிலேயர் சட்டமின்றி ஐர்லாந்தில் செய்து வரும் பலாத்காரக் கொடுஞ் செயல்களைக் கண்டிக்காமல் ஸீன்பீனரை மாத்திரம் கண்டிப்பதில் பயனில்லை. பயிற்சியற்ற, தொகை குறைந்த, திறமை மிகுந்த படையை வைத்துக்கொண்டு ஸின்பீனர் எவ்விதக் கார்யங்கள் செய்கிறார்களோ அதே விதமான செயல்கள்  பயிற்சி வாய்ந்த தொகையேறிய திறமை குன்றிய படையைக் கொண்டு ஆங்கிலேயராலே செய்யப்படுகின்றன. 

இங்கிலாந்திலேகூட மிஸ்டர் ஆஸ்க்வித் முதல் லண்டன் “டைம்ஸ்” பத்திராதிபர் வரை பல திறப்பட்ட ராஜ தந்திரிகளும் ஐர்லாந்தில் இப்போதுள்ள பரிதாபகரமான நிலைமைக்கு ஸீன்பீன் படையையும் ஆங்கிலப் படையையும் ஒருங்கே பொறுப்பாக்கிக் கண்டித்துப் பேசுகிறார்கள். “யதா ராஜா, ததா ப்ராஜா”. ராஜாங்கமே சட்டத்தை மீறி திருஷ்டாந்தங் காட்டினால் பிறகு ஜனங்கள் சட்டத்தை மீறி நடக்கும்போது அவர்களைக் குற்றங்கூற வாய் ஏது?

பாதிக் கல்யாணம்

“ராஜாவின் மகளை விவாகம் பண்ணிக்கொள்ள எனக்கு ஸம்மதம். அந்தப் பக்கத்து ஸம்மதந் தெரிய வேண்டியதுதான் குறைவு. எனவே பாதிக் கல்யாணம் ஆய்விட்டது” என்று ஒரு விகடகவி சொன்னானாம். அதுபோல் எமீர் (f) பெய்ஸூல் மெஸபொடேமியாவுக்கு ராஜாவாக இருக்கத் தாம் ஸம்மதப்படுவதாகத் தெரிவிக்கிறார். இவரும் இவருடைய பிதாவும், வேலிக்குள்ளிருந்த பாம்பைப் பிடித்துக் காதுக்குள் விட்டுக்கொள்வது போல, ஆங்கிலேயர்களையும் ப்ரெஞ்சு ஜனங்களையும் மத்ய ஆசியாவுக்கு நல்வரவேற்று உபசரித்த மஹான்கள்; தற்கால ஸெளகர்யமொன்றைக் கருதி நீண்ட காலயோசனையை இழந்து நடந்து கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எமீர் பெய்ஸூல், ஏற்கெனவே, தம்மை ஸிரியாவுக்கு ராஜாவாகச் செய்வார்களென்று எதிர்பார்த்து இறுதியில் ப்ரான்ஸ் தேசத்தார் அதை விழுங்கிச் செல்லத் தாம் ஏமாறிப் போன பிரபு. இப்போது இவர் லண்டன் நகரத்தில் போய்ப் பத்திராதிபர்களுக்குக் குழையடித்துக் கொண்டிருக்கிறார்.

மெஸபொடேமியாவில் ஆங்கிலேயர்கள் வீணாக ஆட்களையும், செல்வத்தையும் பலி கொடுத்து வருவதில் ஆக்ஷேபம் செலுத்துவோரிடையே தம்மையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று இவர் “டெய்லி டெலிக்ராப்” பத்திரிகைக் கார்யஸ்தரிடம் தெரிவித்திருக்கிறார். ப்ரிடிஷ் மந்த்ராலோசனையையும் உதவியையும் கொண்டு மெஸபொடேமியாவை ஆளக்கூடிய ராஜாங்க மொன்றை அராபியர் ஸ்தாபனம் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்களாம். பிரிடிஷாருடைய ராஜரீக திரவிய உரிமைகளுக்குப் பங்கம் நேராதபடி அரப் கவர்ன்மெண்டார் உறுதி மொழி கொடுப்பார்களாம். தேசத்தின் இயற்கைப் பொருள்களைக் காட்டி ஏராளமான கடன் வாங்க முடியுமாம்… ஐயோ, பாவம்! எமீர் பெய்ஸூல் பகற்கனவு காண்கிறார். இவர் ஹிந்துதேச சரித்திரம் வாசித்திருப்பாரானால், தம்முடைய தேச ஆட்சியாகிய கரும்புத் தோட்டத்தைப் பிறர் ஆளாமல் தாம் ஆளச் செய்யும்படி இங்கிலிஷ் யானையை உதவிக்கழைத்திருக்க மாட்டார். இனி கால சக்ரத்தின் சுழற்சியால் மெஸபொடேமியாவில் அரப் ஆட்சி ஏற்பட்டாலும், அதில் எமீர் பெய்ஸுலுக்கு யாதொரு ஆதிக்கமும் இராதென்பது திண்ணம்.

  • சுதேசமித்திரன் (05.03.1921)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s