-ஈரோடு ஆ.சரவணன்
திரு. ஈரோடு ஆ.சரவணன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரசார அணியின் தலைவராக இருந்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

ஆயிரக் கணக்கான துறவிகளும், சாது, சன்னியாசிகளும் வாழ்ந்த நாடு, வாழும் நாடு பாரத நாடு. இந்த பாரத தேசத்தில் வாழ்ந்த ஞானிகளும், முனிவர்களும் தங்களின் வாழ்கையின் நோக்கமாகக் கொண்டது மதம் மற்றும் மதம் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமே. ஆனால் இவர்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறவியாக வாழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர்.
சுவாமி விவேகானந்தர், நாடு, கல்வி, மக்கள் என்ற சிந்தனையின் அடிப்படையில் தேசப்பற்று, தெய்வப்பற்று பற்றியும், அதிக அளவில் தனது சிந்தனையைச் செலுத்தினார். தனது லட்சியத்தைக் கூட நாட்டின் லட்சியமாகக் கருதி, எவ்வாறு தனது லட்சியம் அமைய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தவர் சுவாமி விவேகானந்தர்.
துறவிகளுள் மிகவும் வித்தியாசமானவர், கவிஞர், தத்துவவாதி, தீர்க்கதரிசி. இவற்றையெல்லாம் விட தேசபக்தி மிக்கவர். தனது 39-வது வயதில் காலமானாலும், அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியர்களைக் கிளர்ந்தெழச் செய்யும் விதமாகப் பணியாற்றியவர். இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட சுவாமி விவேகானந்தர், பிற துறவிகளிடமிருந்து மாறுப்பட்ட துறவியாகவே இறுதி வரை வாழ்ந்தார். பிற்காலத்தில் வந்த துறவிகள் அனைவருக்கும் அவர் ஒரு புதுப் பாதையை வகுத்துத் தந்தார்..
நாடு அதை நாடு…
நமது நாட்டின் கலாச்சாரத்தையும், நமது பண்பாட்டையும் எள்ளி நகையாடிய அந்நியர்களின் நோக்கத்தை தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர். நம்மைப் பார்த்து அந்நியர்கள் “நீங்கள் வெறும் காட்டுமிராண்டிகள், கனவு காண்கிறவர்களின் இனத்தவர்கள். உங்களது சமயம் வெறும் கட்டுக்கதை தான், உங்களது கடவுளும், ஆத்மாவும், நீங்கள் எதை அடைய விரும்பிப் போராடினீர்களோ அவை எல்லாமே அர்த்தமற்றவை.” என்று பிரசாரம் செய்த போது, சுவாமி விவேகானந்தர் தனது தாய்நாட்டைப் பற்றி தெரிவித்த உணர்ச்சிமிக்க கருத்துக்கள் மிகச் சரியான பதிலடியாக அமைந்தன.
தனது தாய்நாட்டைப் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய வார்த்தைகள் இவை:
“இந்திய இனம் ஒருபோதும் செல்வத்திற்காக வாழ்ந்ததில்லை. பிற எந்த நாடும் குவித்திராத அளவிற்கு ஏராளமான செல்வத்தை ஈட்டிய போதிலும், அது செல்வத்தைப் பெரிதென்று கருதியதில்லை.காலங்காலமாக வீரமும் தீரமும் கொண்ட ஆற்றல் மிகுந்த நாடாக இருந்து வந்த போதிலும், வீரமே பெரிதென்று போற்றியதில்லை; வெற்றி வெறி பிடித்துப் பிற நாடுகளுக்குச் சென்றதில்லை. தன் நாட்டிலேயே, தான் வகுத்ததனது எல்லைக்குள் இருப்பதிலேயே மன நிறைவுகண்டது”. “இந்த உலகத்தில் புண்ணிய பூமி என்று சொல்லத்தக்க ஒரு நாடு இருக்குமானால், தங்கள் வினைப்பயன்களைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வோர் உயிரும் வந்தாக வேண்டிய ஓர் இடம் இருக்கிறது என்றால், கடவுளைத் தேடிச் செல்கின்ற ஒவ்வொரு ஜீவனும் வந்து சேர வேண்டிய கடைசி வீடு ஏதாவது இருக்கிறது என்றால், அந்த நோக்கிலும், ஆன்மிகத்திலும் மனித சமுதாயம் உச்சத்தை அடைந்த நாடு ஏதாவது உண்டென்றால் அது பாரதத் திருநாடே”
-என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் சுவாமிஜி. இந்த சிந்தனை இந்து சமயத்தின் மற்ற துறவிகளிடம் இருந்தது என்றாலும், வெளிப்படையாக தீர்க்கமாகக் கூறியவர் சுவாமி விவேகானந்தர் மட்டுமே.
மேலைநாட்டினரின் கருத்துக்களையும், மொழியையும், உணவையும், உடையையும், நடையையும் நாம் கடைபிடித்தால் தான் மேலை நாட்டினரைப் போன்று ஆற்றலும், சக்தியும் உடையவராவோம் என்று மக்கள் எண்ணிக் கொண்டிருந்த சூழ்நிலையில், ”பாரதத்தின் லட்சியம் – முக்தி, அதன்மொழி – வேதம், அதற்கானவழி – துறவு” என்று விவரித்து, ”மேலைநாட்டின் லட்சியம் – தனிமனிதனின் சுதந்திரம், அதன்மொழி – பணம் திரட்டும் கல்வி, அதற்கானவழி– அரசியல்” என்பதையும் சுட்டிக்காட்டி, நமது பாரத தேசத்தைப் பற்றிய உயர்ந்த மதிப்பீட்டை அவரால் விதைக்க முடிந்தது.
இதற்காகவே அவர் பாரத நாட்டினரின் முன்வைத்த சிந்தனை: “தீரனாக இரு -கோழைத்தனத்தை அகல ஓட்டு – நீ ஒரு பாரதவாசி என்பதில் பெருமை கொள். நான் ஒரு பாரதவாசி; ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன் என்ற பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு. மூட பாரதீயனும், பிராமண பாரதீயனும், பறையானாகிய பாரதீயனும் எனது சகோதரன் என்று சொல்” என்பதே. அவரது அன்றைய முழக்கம் எவ்வளவு சிறந்தது என்பது, இன்று சாதியின் பெயரால் இந்து சமுதாயம் பிளவுபட்டு பூசலிடுவதைக் கண்டு பதைக்கும் அனைவரும் அறிந்த விஷயமே..
ஹிந்து என்பதில் பெருமிதம்….
ஹிந்து என்பதற்கு மற்ற துறவிகள் கொடுத்த விளக்கமும், சுவாமி விவேகானந்தர் கொடுத்த விளக்கமும் சற்று வித்தியமானது. மற்றவர்கள் இந்துவின் கடமைகளை மட்டுமே போதித்தார்கள், ஆனால் சுவாமி போதனை நடத்தவில்லை. மாறாக ஹிந்து என்பது வாழ்வியல் முறை என்பதை சுட்டிக்காட்டினார்.
“நாம் ஹிந்துக்களாவோம். ஹிந்து சொல்லை தப்பான அர்த்தத்தில் நான் பயன்படுத்தவில்லை, அல்லது அதற்கு ஏதாவது மோசமான பொருளுண்டு என நினைக்கிறவர்களின் கருத்தை நான் ஏற்கவுமில்லை. இன்று நம்மை வெறுப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குத் தவறான விளக்கம் தரலாம் என்றாலும், பெயரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஹிந்து என்ற சொல் உயர்ந்த லட்சியங்கள் அனைத்தையும், ஆன்மிகத் தொடர்புடைய அனைத்தையும் உள்ளடக்கிய சொல்”
-என்றார் சுவாமி விவேகானந்தர்.
இதற்காகவே ஹிந்து எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அழகாகவும் விளக்கம் கொடுக்கிறார்:
“ஹிந்து என்ற சொல் இழிவான எதையாவது குறிப்பதானால் அது பற்றி கவலைப்பட வேண்டாம். எல்லா மொழிகளிலும் இருக்கக் கூடிய எந்த ஒரு வார்த்தையைக் காட்டிலும் ஹிந்து என்ற சொல்லை உயர்ந்த பொருளுடையதாக ஆக்க, நமது செயல் மூலம் முற்படுவோம்”
-என்றார் சுவாமிஜி.
இதனிடையே மேலும் சில விஷயங்களை தெரிவிக்கிறார். “என்னுடைய முன்னோர்களைக் குறித்து வெட்கப்படாமலிருக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் கொள்கைளில் ஒன்று. நான் எனக்காகப் பெருமைப் படவில்லை. என் மூதாதையரின் காரணமாகவே பெருமை இன்னும் அதிகாரிக்கிறது” என்று மூதாதையர்களைப் பற்றிய கண்ணோட்டத்தை மக்கள் முன் வைக்கிறார்.
“ஒருபுறம் பழைய மூடநம்பிக்கையில் ஆழ்ந்த ஆசாரம், மறுபுறம் உலகாயத வாதம் அல்லது ஐரோப்பிய வாதம். இரு பக்கத்திலுமுள்ள இந்த பயங்கர ராட்சதர்களிடமிருந்து தப்பி நாம் நமது பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு பக்கத்தில் மேல்நாட்டு அறிவு எனும் மதுவை அருந்திவிட்டுத் தனக்கு எல்லாமே தெரியும் என்று எண்ணுகின்ற மனிதன், ரிஷிகளைக் கண்டு சிரிக்கிறான். ஹிந்து சிந்தனையெல்லாம் மட்டரகமான குப்பைக் கூளமாகவும், தத்துவ ஞானமெல்லாம் குழந்தைப் பிதற்றல்களாகவும், சமயமானது முட்டாள்களின் மூடநம்பிக்கையாகவும் அவனுக்குப் படுகிறது. நமது சமயம், நமது தேசிய வாழ்க்கை, நம் ஆன்மிக முறை இவற்றை அழிப்பதில்லை. சமயத்தினுடைய ஒவ்வொரு கொள்கையும் பாதுகாப்பாகவே இருக்கிறது”
-என்று தெளிவாகக் கூறியவர் விவேகானந்தர்.
உயர்த்துவதே மதம்…
“மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயம்அல்லது மதம் எனப்படும். மிருகத்தை மனிதனாகவும், மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதமாகும். மதம் என்பது நூல்களில் இல்லை, கொள்கைகளில் இல்லை, கோட்பாடுகளில் இல்லை, பேச்சில் இல்லை, ஆராய்ச்சியில் கூடஇல்லை, அது வாழ்வதும் வளர்வதும் ஆகும். இந்தியாவைப்பொறுத்த வரை மதம் என்றால் அது அனுபூதியையே குறிக்கும். அதற்குக் குறைந்தது எதுவும் மதமாகாது. இந்தியாவின் ஆன்மிக வானிலிருந்து வருகின்ற ஒரு மகத்தான வார்த்தை அனுபூதி, அதாவது நேரடி அனுபவம் என்பதாகும். கடவுளை நேராகக் காண வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறுபவை நமது சாஸ்திரங்கள் மட்டுமே. அவை உண்மையிலேயே தைரியம் மிக்க வார்த்தைகள். ஆணிவேர் வரை உண்மையானவை. மதம் என்றால் அது அனுபவிப்பதற்கு உரியது, வெறுமனே கேட்பதற்கு மட்டும் அல்ல. கிளிப்பிள்ளையைப் போல் சில கோட்பாடுகளை மனப்பாடம் செய்வது மதம் ஆகாது. அறிவில் உயர்வதும், மதம்அல்ல. அறிவு என்பது வெறும் பூஜ்யம், மதம் என்பது நம்உள்ளே வர வேண்டிய ஒன்றாகும். இறைவன் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு மிகச் சிறந்த நிரூபணம் நம் அறிவு அப்படிச் சொல்கிறது என்பது அல்ல, நம் முன்னேர்களும் இன்றுள்ளவர்களும் இறைவனைக் கண்டார்கள் என்பதே ஆகும். மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை, செயல்முறையில் தான் உள்ளது, நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது இதுதான் மதத்தின் முழுப் பரிமாணம்”.
– இவ்வளவு தீர்க்கமாக மதத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தரைத் தவிர வேறு எந்த ஒரு துறவியும் கூறியதில்லை என்பது உண்மையாகும்.
இளைஞன் ஒருவன் ஒரு நாள் விவேகானந்தரிடம் வந்து தியானம் பற்றிய தமது சந்தேகத்தைக் கேட்டான்.
“நான் நீண்ட நேரம் பூஜை செய்கிறேன்; ஜபம் செய்கிறேன். குரு ஒருவரின் அறிவுரைப்படி தியான வேளையில் மனத்தை வெறுமையாக்க முயல்கிறேன். ஆனால் இத்தனை செய்தும் மனம் அமைதியுறவில்லை; கட்டுப்படவில்லை. இருந்தாலும் அறையின் கதவுகளை எல்லாம் அடைத்துக் கொண்டு தியானத்திற்காக அமர்கிறேன், கண்களை மூடி நீண்ட நேரம் தியானம் செய்கிறேன். ஆயினும் மனதில் என்னவோ அமைதியில்லை” என்றான்.
அவனிடம் சுமாமிஜி கூறிய கருத்து மிகவும் முக்கியமானதாகும். வேறு துறவிகளாக இருந்தால் வேறு விதமான கருத்தை தெரிவித்திருப்பார்கள். சுவாமி விவேகானந்தர் அவருக்கு கூறியது இது தான்…
“என் மகனே என் வார்த்தைகளுக்கு நீ செவி சாய்ப்பதானால், முதலில் உன் அறையின் கதவைத் திற; வெளியில் வா. உன் பார்வையைச் சுற்றிலும் சுழல விடு. உன் வீட்டைச் சுற்றி நூற்றுக் கணக்கான ஏழைகளும், ஆதரவற்றவர்களும், வாடுகிறார்கள். உன்னால் இயன்ற வரைஅவர்களுக்குச் சேவை செய். ஒருவன் நோயுற்றுக் கிடக்கிறான்; அவனைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அவனுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய். அவனுக்கு பணிவிடை செய். பசியில் வாடுகிற அவனுக்கு உணவு கொடு. அறியாமையில் உழல்கிற அவனுக்கு அறிவு கொடு. உன்னைப்போல் நன்றாக படிக்க வை. இதுவே எனது அறிவுரையாகும். உனக்கு மன அமைதி வேண்டுமானால் இயன்ற அளவிற்கு மற்றவர்களுக்கு சேவை செய்”
-என்று அறிவுரை கூறினார். ஆகவே மனிதனுக்கு சேவை செய்வதே இறைவனுக்கு செய்யும் தொண்டு என விவேகானந்தர் நினைத்தார். மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை கொண்டவர் சுவாமிஜி என்பதே இதற்குக் காரணம் ஆகும்.
கவலை அளிக்கும் கல்வி…
கல்வியிலும் சுவாமி விவேகானந்தர் மற்ற துறவிகளிடமிருந்து மாறுபட்டவராகவே தனது கருத்துக்களை மக்களிடம் முன்வைக்கிறார். மெக்காலே கல்வி முறை அமலுக்கு வந்த போது தனது கருத்தை தைரியமாக விவரித்தவர் சுவாமி விவேகானந்தர். மற்ற துறவிகள் அல்லது சந்நியாசிகள் கருத்துக்களை தெரிவிக்கக் கூட தயங்கிய நிலையில் இருந்தார்கள்.
“தற்போதைய கல்வியில் சில நன்மைகள் உள்ளன, ஆனால் அதிக அளவில் தீமைகள் மட்டுமே உள்ளன. மிக அதிகமான தீமைகள் கொஞ்சமான நன்மையைக் கீழே அமுக்குகின்றன. முதலாவதாக அது மனிதனை உருவாக்கின்ற கல்வி அல்ல. அது முழுக்க முழுக்க வெறும் எதிர்மறையான கல்வி. இதற்கான காரண காரியங்களை விளக்கும்போது, முதலில் நம் கல்வி நம் மக்களுக்கு ஆண்மையளிக்கக் கூடியதாக இல்லை. அது முற்றிலும் எதிர்மறைத்தன்மையானதாக உள்ளது. எதிர்மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் கல்வி அல்லது பயிற்சி, மரணத்தை விடக் கொடியதாகும். ஒரு குழந்தை பள்ளிக்குச் சென்றதும், அதன் தகப்பனார் ஒரு முட்டாள் என்று முதற்பாடமாகக் கற்பிக்கப்படுகிறது, இரண்டாவதாக அதன் பாட்டனார் பைத்தியக்காரர் என்றும், மூன்றாவதாக அதன் ஆசிரியர்கள் வெளிவேஷக்காரர்கள் என்றும் கற்பிக்கப்படுகிறது. நான்காவதாக நமது சாஸ்திரங்கள் அனைத்தும் பொய் என்றும் கற்பிக்கப்படுகிறது. இந்தக் கல்வியில் பயிலும் குழந்தை 16 வயதை அடையும் போது எதிர்மறை உணர்ச்சியின் வடிவமாக, உயிரற்ற, எலும்பற்ற வஸ்துவாக ஆகி விடுகிறது”
-என்று துணிவுடனும் மிகுந்த கவலையுடனும் தனது கருத்தை பகிரங்கப்படுத்தினார் சுவாமிஜி.
“நம் நாட்டில் மிக உயர்ந்த மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்ற விபரம் நமக்கும் உணர்த்தப்படுவதேயில்லை, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எதுவும் நமக்குக் கற்பிக்கப்படுவதில்லை. நமது கைகளையும், கால்களையும் எப்படிப் பயன்படுத்துவது என்று கூட நமக்குத் தெரியாது. ஆங்கிலேயர்களின் மூதாதையர்களைப் பற்றிய எல்லா புள்ளிவிவரங்களையும் நாம் தெளிவாக அறிகிறோம். ஆனால் நமது சொந்த மூதாதையர்களைப் பற்றி தெரிந்துகொள்ள அக்கறைப்படாத பரிதாபநிலை உள்ளது. நாம் பலவீனத்தைத் தான் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் தோற்கடிக்கப்பட்ட மக்களினமாதலால், நாம் பலவீனர்கள், நமக்கு எதிலும் சுதந்திரமில்லை என்று நாமே நம்பும் நிலைக்கு இழிந்துவிட்டோம். கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் விஷயங்களைத் திணிப்பதல்ல, அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் ஜீரணமாகாமல் வாழ்நாள் முழுவதும் குழப்பமுண்டாக்கிக் கொண்டிருக்கும். வாழ்க்கையை உருவாக்குகிற, ஆண்மையுண்டாகுகிற, ஒழுக்கமூட்டுகிற கல்வி வேண்டும். ஆகையால் நமது லட்சியம் நம் தேசத்துக் கல்வி, ஞானமனைத்தையும் பெறுவதாக இருக்க வேண்டும். நமது தார்மிக, லௌதீக, ஞானம் அனைத்தும் அடங்கிய அந்தக் கல்வி ஞானத்தை சாத்தியமான வரையில் நமது தேசியவழிகளில் தேசிய அடிப்படைகளில் நாம் கைக்கொள்ள வேண்டும்”
-என்று தீர்க்கமாக எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர். இம்மாதிரியான கருத்துக்களை இதற்கு முன்னர் எவரும் தெரிவித்ததில்லை.
“இக்காலப் பல்கலைக்கழகம் என்பது எழுத்தர் வேலைக்கான ஆட்களை உற்பத்தி செய்யும் எந்திரம். இந்த அளவோடு நின்றிந்தால்கூட பரவாயில்லை. ஆனால், அவை காரணமாக மனிதர்கள் சிரத்தையும், நம்பிக்கையும் அற்றவர்களாக அல்லவா ஆகின்றனர்? கீதை இடைச் செருகல் என்கிறார்கள். வேத மந்திரங்களை நாட்டுப்புறப் பாடல்கள் என்று சொல்லுகிறார்கள். கல்வி பயிலும் மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை. அதே வேளையில் தன்னிடம் உள்ளவற்றையும் இழக்கிறான். சிரத்தை இல்லாமல் போய்விட்டது. சிரத்தை நமது வேத வேதாந்தங்களின் ஆதார சுருதியாகும் என்பதைக் கூட தெரிந்துகொள்ள முயல்வதில்லை. இந்தியாவிற்கு வெளியிலுள்ள எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பவர்கள் தங்கள் முன்னோரின் ஏழு தலைமுறையின் - ஏன் மூன்று தலைமுறையினரின் - பெயர் கூட தெரிந்து வைத்திருப்பதில்லை”
– என்று இன்றைய கல்வி முறையை சாடுகிறார் சுவாமி விவேகானந்தர்.
பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?
விவேகானந்தர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவந்த பின் பாரதப் பெண்கள் பற்றிய தனது கருத்தைத் தெரிவித்த விதம் அவரை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டுக் காட்டுகிறது.
“ஒருவருக்குள்ள அறிவுத் திறமை தான் மிக உயர்ந்த நல்ல குணம் என்பது தவறு. ஒழுக்கமும் நேர்மையும் ஆத்மிக சக்தியும் தான் நாங்கள் அடைய விரும்புகிற குணங்கள். எங்கள் நாட்டுப் பெண்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகள் அல்ல; ஆனால் அதிகமான தூய்மை அவர்களுக்கு உண்டு, எல்லாப் பெண்களும் தமது கணவரைத் தவிர மற்றெல்லாரையும் புதல்வர்களைப் போலவே கருதுவார்கள்”
-என்றார் விவேகானந்தர்.
மேலைநாட்டு ஆண்களுக்கு விவேகானந்தர் கூறிய அறிவுரை மிக அற்புதமானது.
“எல்லா ஆண்களும் தனது மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயைப் போலக் கருதுதல் வேண்டும். பெண் என்கின்ற பால் பாகுபாட்டை ஒதுக்கிவிட்டு பொதுவான மனிதத்துவ உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் பழகக் கற்றுக் கொள்கிற வரையில், உங்கள் பெண்ணினம் வளர்ச்சியடையாது. அதுவரை அவர்கள் விளையாட்டுச் சாமான்களாக இருப்பார்களே ஒழிய, அதைவிட உயர மாட்டார்கள். திருமண முறிவுக்கும் காரணம் இவையெல்லாம் தான்”
-என்றார் அவர்.
பல்வேறு விஷயங்களைப் பற்றியும் கூட சுவாமி விவேகானந்தர் மற்ற துறவிகளிடமிருந்து மாறுபட்ட தன்மையிலேயே தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் எந்த ஒரு விஷயத்திலும் தீர்க்கமாக சிந்திப்பவராகவும், முதல் சிந்தனையாளராகவும் இருந்தார். அதனால் தான் 150 ஆண்டுகள் கடனைத் பின்னும் அவரது வாழ்வும் செய்திகளும் நமக்கு கலங்கரை விளக்கமாக விளங்கி வருகின்றன.
$$$