சமயம் என்ன சொல்கிறது?

-சுவாமி அபிராமானந்தர் 

அமரர் பூஜ்யஸ்ரீ  சுவாமி அபிராமானந்தர், ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அகில இந்திய உதவி பொதுச்செயலாளராக இருந்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது…

மனித மனதில் தேடுதல் என்ற வேட்கை இருக்கும் வரையில் இந்த உலகிலிருந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் தலைவர்கள் தங்கள் நாட்டிலிருந்து மதத்தை ஒழித்துவிடத் தீர்மானித்தார்கள். மதம் மனிதர்களை போதைப்பொருள் போல அடிமையாக்கி விடுகிறது என்ற காரல்மார்க்ஸின் வாக்கியம் தான் இவ்வாறு மதத்தை அழிக்க ஆதாரமாக இருந்தது.

ஆனால் பல வருடங்களுக்குப் பின் தங்கள் மக்கள் இறைவனை நம்புவதையும், வழிபடுவதையும் விடாததால், ரஷ்யா Let alone and let be அதாவது மதம் இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டும், எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது என்ற புதிய கொள்கைக்கு மாறினார்கள்.

உலகில் பல நாடுகளும் இவ்வாறே மதங்களைச் சகித்துக்கொண்டு வாழ்கின்றன. ஆனால் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் பேசியபோது இதற்கு நேர்மாறாக,  ‘பிற மதங்களை நாங்கள் சகித்துக் கொள்வது மட்டுமல்லாமல் அவை யாவும் உண்மை என ஏற்கவும் செய்கிறோம்’ என்று குறிப்பிட்டார்.

மதம் – Religion என்ற சொல் re மற்றும் legree ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு. ஒவ்வொருவரின் இதயத்தையும் பிறருடனும் இறைவனுடனும் இணைத்தல் என்று பொருள்.

வடமொழியில் மதத்தை ‘தர்மம்’ என்பர். மகாபாரதத்தில் இதன் பொருள் கூறப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பது என்பது தான் தர்மம் அல்லது மதத்தின் பொருள்.

சமீபத்தில் அமெரிக்காவில் நீதிமன்றத் தீர்ப்பில் அமெரிக்கப் பள்ளிகளில் யோகாசனங்களைக் கற்றுக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர். யோகம் என்பது ‘யுஜ்’ என்ற பதத்திலிருந்து வந்தது. இறைவனுடன் இணைவது என்பது இதன் பொருள்.

இஸ்லாம் எனும் வார்த்தை ‘ஸலீமா’ என்ற பதத்திலிருந்து உருவாகியுள்ளது. இதன் பொருள் அமைதி, தூய்மை மற்றும் இறைவனின் சட்டங்களுக்கு முழுமையாக கீழ்ப்படிதல் என்பதாகும்.

கிறிஸ்தவம் என்றால் பிறரிடம் அன்பு,  மனிதாபிமானத்துடன் வாழ்தல் எனப்படும். கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் கத்தோலிக்கர்கள். ‘கத்தோலிக்’ என்றால் பரந்த மனப்பான்மை என்று பொருள்.

ஆகையால் எந்த மதத்தின் மூலம் பார்த்தாலும், மதம் என்பது மனித குலத்தை அன்பு மற்றும் அமைதியின் மூலமாக ஒருங்கிணைக்க வேண்டுமேயன்றிப் பிரிக்கக் கூடாது.

எப்படி ஒரு வீட்டில் உள்ள ஒரே முதியவரை அவரது மகன் தந்தை என்றும், தம்பி,  அண்ணா என்றும், அவரது மனைவி கணவர் என்றும் வெவ்வேறு பெயர்களில் கூப்பிடுகிறார்களோ, எவ்வாறு அத்தனை பெயர்களும் அந்த ஒருவருக்கே சரியாகப் பொருந்துமோ, அவ்வாறே ஒரே இறைவனுக்குப் பல நாமங்களும் பொருந்தும்.

“உலகில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ, அத்தனை மதங்கள் இருக்கட்டும். சிந்தனைகளின் வேற்றுமையே வாழ்வின் உயிர்நாடி. அவ்வாறு இல்லாவிட்டால் நாம் எகிப்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சவக்கூடுகளுக்குச் சமமாகி விடுவோம்”  என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

நான்கு பேர் நான்கு திசைகளிலிருந்து ஒரே இடத்திற்குச் செல்கின்றனர். வடக்கில் உள்ளவர் தெற்கு நோக்கியும், கிழக்கில் உள்ளவர் மேற்கு நோக்கியும் செல்கிறார். இவர்கள் தமக்குள் திசையைக் குறித்துச் சண்டையிட்டுக் கொள்வது போல் தான் மதச் சச்சரவுகளும்.

சைவமும் வைணவமும் இரண்டு தண்டவாளங்கள் போல. அவை ஒன்றையொன்று சந்திக்காது. ஆயிரக் கணக்கான மைல்கள் நீளமாகச் சென்று கொண்டிருக்கும். ஆனால் அந்த ரயிலில் செல்பவர்கள் ஒரே இடத்திற்குப் போய்ச் சேர்வார்கள்.

சில சமயம் நாம் மலையின் மீது ஏறும்போது இரண்டிற்குப் பதில் 3 தண்டவாளங்களைப் பார்ப்போம். இப்போது நாம் 6 தண்டவாளங்களின் மேல் ஒரு பெரிய ரயில் பெட்டி சென்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்வோம்.

இந்த ஆறு தண்டவாளங்களும் ஒன்றையொன்று சந்திக்காது. ஆயிரக் கணக்கான மைல்கள் அருகருகே சென்று கொண்டிருக்கும். ஆனால் அதன் மேலுள்ள ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் எல்லோரும் ஒரே இடத்திற்குப் போய்ச் சேர்வார்கள்.

அப்படித் தான் நாம் பின்பற்றும் இந்து மதம், பௌத்தம், சீக்கியம், இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் சமண மதங்கள் ஆகும்.

அமெரிக்காவில் இருந்த, ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி பிரபவானந்தர் கூறுவார்:

இன்று ஓர் அறையில் கிறிஸ்து, முகமது, புத்தர், ராமர் மற்றும் கிருஷ்ணரையும் இருக்கச் செய்தால், அவர்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு கடவுளைப் பற்றிப் பேசி மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்கள்.

ஆனால் இவர்களது சீடர்கள் ஒவ்வொருவரையும் ஒரே அறையில் போட்டுப் பூட்டிவிட்டால் அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வார்கள்.

சுவாமி பிரபவானந்தர் மேலும் கூறுவார்:

ஓர் எஜமானர் தினமும் ஒவ்வொரு வித உடை உடுத்துவார். ஒரு நாள் வேட்டி, சட்டை, மறுநாள் பைஜாமா, ஒரு நாள் கோட், சூட் என்று அவர் எந்த உடையில் வந்தாலும் அவரது நாய் அவரை அடையாளம் கண்டுவிடும்.

ஆனால் இறைவன் வெவ்வேறு வேடங்களில் வரும்போது இறைவனை, அந்த எஜமானனை நம்மால் அடையாளம் காண முடியவில்லை.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர், ‘சிவன், ராமரை வணங்குகிறார். ராமர் சிவனை வணங்குகிறார். அவர் களுக்குப் பேதம் இல்லை. ஆனால் ராமனின் வானரங்களும் சிவனின் பூதகணங்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன’ என்று அழகாகக் கூறுவார்.

சுவாமி அபிராமானந்தர்

ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதன் ஓட்டுனர் முதியவர், பலவீனமானவர். பஸ்ஸில் பயணமே செய்யாத ஒருவன் பாமரன் ஏறினான். கட்டுமஸ்தாக இருக்கும் அவன் முதல் இருக்கையில் சென்று அமர்ந்தான். ஓட்டுனர் ஒரு கையால் பஸ்ஸை ஓட்டிக்கொண்டு மறு கையால் கியரை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான் பாமரன்.

ஓட்டுனர் அந்தக் குச்சியைப் (கியரை) பிடுங்க முயற்சிக்கிறார் என்று பாமரன் நினைத்தான்.

பஸ் ஒரு ஹோட்டலுக்கு அருகில் நின்றது. பயணிகள் சாப்பிட இறங்கி
னர். பாமரனோ அந்த கியரை முழு முயற்சியுடன் பிடுங்கி அங்கேயே வைத்தான். சாப்பிட்டு விட்டு ஓட்டுனர் வந்தார். கியரின் நிலையைக் கண்டு திடுக்கிட்டார்.

பாமரன் அவரிடம், ‘உங்களுக்கு உதவி செய்திருக்கிறேன். நீங்கள் அதைப் பிடுங்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். நான் அதை எடுத்துவிட்டேன்’ என்று கர்வத்துடன் கூறினான்.

நம் நிலையும் இன்று அப்படித் தான் உள்ளது. சில மதங்கள் முதல் கியரில் சென்று கொண்டிருக்கின்றன. சில மூன்றாவதில், சில நான்கில் சென்று கொண்டிருக்கின்றன.
நமக்குள் வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும் நாம் எல்லோரும் சேர்ந்து எப்படியோ கடவுளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.

ஆனால் சமுதாயத்தில் உள்ள சில தீய சக்திகள் அந்த கியரையே பிடுங்கி நம்மை மேலேபோக விடாமல் செய்து விடுகின்றன.

குறிப்பு:

கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 2013 ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற மத நல்லிணக்கக் கருத்தரங்கில் சுவாமி அபிராமானந்தர் ஆற்றிய உரையின் சுருக்கமான தொகுப்பு இது.

நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (நவம்பர் 2013)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s