-கருவாபுரிச் சிறுவன்
ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தத்தமது இஷ்ட தெய்வங்களில் ஊன்றி நிற்க வேண்டும் என்கிறார், எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன். தெய்வம் உண்டென்றிரு... தெய்வம் ஒன்றென்றிரு! என்கிறார் இவர்...

நவராத்திரி பத்தாவது நாளில் திருக்கோயில்களில் இருக்கும் உற்ஸவ மூர்த்தியானவர் ஊருக்கு வடக்கே இருக்கும் வன்னிமடத்திற்கு சென்று அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்திய பின் குதிரை வாகனம் மீதேறி பத்து திக்கிலும் அம்பு விடுவார். அது பத்து திசைகளில் இருந்து வரும் வெற்றியைக் குறிக்கும். இந்நிகழ்வு சகல சிவ, விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும்.
நமக்கும் பத்து திசைகளில் இருந்து வெற்றி பெற வேண்டுமென்றால் அருளாளர் உபதேசிக்கும் செய்திகளை சிந்திப்போமாக.
அகண்ட பாரதமாகிய இத்தேசத்தின் முதன்மை நூலாகக் கருதப்படுபவை ரிக் முதலான நான்கு வேதங்கள். இருபத்தெட்டு ஆகமங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாஸ்திரங்கள் மற்றும் இவற்றை அடியொற்றி வந்த நூல்கள். இவை யாவும் இந்த உலகத்தைப் படைத்து, காத்து, அழித்து, அருள் செய்து, மறைத்தும் நின்று தொழில் புரிவது ஏக இறைவன் ஒருவனைப் பற்றியே … அவனே சிவனாகவும், விஷ்ணுவாகவும், முருகனாகவும், சாஸ்தாவாகவும், பராசக்தியாகவும், மகாலட்சுமியாகவும், சரஸ்வதியாகவும், காளியாகவும் திருநாமம் சொல்லி வழிபாடு செய்கிறோம் என்பது வழிவழியான கோட்பாடு.
சித்தாந்த ஆசிரியர்களில் ஒருவரான அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள் அருளிச் செய்த சிவஞான சித்தியாரில்,
யாதொரு தெய்வம் கொண்டீர் அங்கே மாதொரு பாகனார் வருவார். மற்ற தெய்வங்கள் பிறக்கும் இறக்கும் மேல் வினையும் செய்யும்
-என்று அருளிச் செய்தார். அந்த ஏக பரம்பொருளை நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பொழுதாயினும் ஒருவாறு நினைத்து வணங்கி வந்தோம் என்றால், நாம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வெற்றி தான்.
யாம் அறிந்த மட்டில் அருள் நூல்கள் எவ்வாறு ஏக இறைவனை வர்ணிக்கிறது என்று பார்ப்போமாக.
ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி: - ரிக் வேதம்
(trouth is one, the wise call it by many names)
ஏகோ ருத்ரோ ந த் விதீயாய தஸ்து: - யஜூர் வேதம்
(there one superme being )
இந்த வேதத்தின் சாராம்சக் கருத்துக்களை எல்லாம் திருமூல தேவ நாயனார் அழகாக தமிழ்ப்படுத்தி திருமந்திரமாகத் தந்துள்ளார். அதில் அண்ட சாராசங்களில் அதிபதி இறைவன் ஒருவனே என்று முதல் பாடலில் முழங்குகிறார்.
‛ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்’ என்றும், ‘நன்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்காள்’ என்று ஆன்மாக்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் ஒரே பரம்பொருளை வழிபாடு செய்யுங்கள், நினைத்ததை அடைவீர்கள் என்கிறார் திருமூலர்.
துறவிக்கு துறவியே துணை என்ற அடிப்படையில் பட்டினத்து சுவாமிகளும், ‘ஒன்றென்று இரு தெய்வம் உண்டென்றிரு’ என்கிறார்.
இவ்வரிகளை நாம் மனதில் அசைபோட்டு சிந்திக்க வேண்டும்.
சமூகப் புரட்சிகள் பல செய்த மகானாகிய அப்பரடிகள் துறவியர்கள் சொன்ன வாக்கிற்கு ஒரு படி மேலே சென்று ‘உங்களுக்கு எந்தக் குறையும் வராது’ என்று சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் வைத்துச் சொல்கிறார் என்றால் அது சிவவாக்காகத் தானே இருக்க முடியும்?
அவர்களைப் போல இனி யாரும் புரட்சி செய்யப்போவதில்லை. அப்படி ஒரு புரட்சியை யாராவது செய்தால் அது அப்பர் சுவாமிகளின் புரட்சியை அடியொற்றியே இருக்கும் இதோ அவருடைய அருள் வரிகள்….
‘ஒன்றே நினைந்து இருமின்காள் உந்தமக்கு ஊனமில்லை.’
அந்த ஒன்று தான் எல்லாச் சமயக்கடவுள்கள் வடிவிலும் நின்று அடியார்களுக்கு அருள் செய்கிறது என்கிறார் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.
அறு சமயக் கடவுள் வேறு வேறின்று யான் ஒருவனே அங்கங்கிருந்து அன்பர்க்கு முத்தி தரு வித்தென் றியாவர்க்கும் அறிவித்த வதன மணியே!
அது சரி அந்த பல சமயத்தின் மூல தெய்வமாக இருக்கக் கூடிய தெய்வம் எப்படி இருக்கும்? என்ற கேள்வியானது நம் மனதில் எழுகிறதே… அதற்கு தான் விடை சொல்கிறார் நம் சுந்தர மூர்த்தி சுவாமிகள்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைந்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே மன்னனே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னனே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
-என்று வழிபடும் சிவ வடிவத்தைக் காட்டுகிறார்.
அந்த சிவனை வழிபடும் அடியார்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இலக்கணம் கூற வந்த சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணத்தில், “பூதம் ஐந்து நிலையில் கலங்கினும் மாதொரு பாகர் தாள் மலர்த்தாள் மறப்பிலர்” என்று புகழாரம் சூட்டுகிறார். பாருங்களேன் பஞ்ச பூதங்கள் தன் நிலையில் இருந்து விலகினாலும் தன் கொண்ட கொள்கையில் இருந்து அடியார்கள் விலக மாட்டார்கள் என்பது கூற்று.
இதனை இன்னும் விரிவாக தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், திருவாசகம் தந்த மாணிக் வாசகப் பெருமானிடம் தான் செல்ல வேண்டும். அவர் தன் திருச்சதகம் பாடல் ஒன்றில்…
கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடி கெடினும் நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் எள்ளேன் திருவருளால் இருக்கப்பெறின் இறைவா! உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே.
மேலான இந்திர பிரம்ம விஷ்ணு பதவிகள் கிடைத்தாலும் அது அடியேனுக்கு வேண்டாம். எள்ளளவு நிலையிலும் உனது திருவருளால் வாழ்கிறேன். உன்னைத் தவிர பிற தெய்வத்தை நினைத்து விடுவேனோ என்று மேற்கண்ட பாடல்களும் கட்டியம் கூறுகிறார் திருவாதவூர்க்காரர்.
திருவாதவூரர் பாடலுக்கு இணையாக ஒரு ஆசிரியர் வாழ்ந்தார் என்றால் அது அவர் காலத்திலேயே வாழ்ந்த நம்ம நம்மாழ்வாருக்கே அந்த பெருமை உரியது. வேறு தெய்வத்தை உள்ளத்தில் பொருத்துவேனோ என்று பாடிய மாணிக்கவாசகரைப் போலவே, திருவனந்தபுரத்தில் வாழும் மாந்தர்கள் அரங்கனைத் தவிர வேறு தெய்வத்தை மறந்தும் கூட நினைக்க மாட்டார்களாம். எங்கே அந்த பாசுரம்… முழுமையாக ஒரு தரம் பாடி விடுவோமா…
கெடும் இடராயின் எல்லாம் கேசவன் தன் அடியாரைக் தொடும் இடத்தானும் தொடாவே தோள் அவன் தன் துணைமலர்க்கண் சுடும் இடத்தானும் சுடாவே சூழல் ந நரகமும் நலியா புறந்தும் மறந்தொழ மாந்தர்கள் பூம்பொழில் அனந்தபுரமே.
பன்னிரு ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவர் நம்மாழ்வார். அவர் வைணவத்தின் திருமுகம் என்று போற்றப்படுபவர். அந்த குருவின் திருவருளால் சகல ஞானமும் நிரம்பப் பெற்றவர் திருமிழிசையாழ்வார்.
தனது நான்முகன் திருவந்தாதியில் இதே கருத்தினை வேறு விதமாகச் சொல்கிறார்.
தன்னுடைய வழிபடும் தெய்வத்தைத் தவிர வேறு தெய்வத்தை நினைக்காத அடியார்களை எப்படி அழைத்து வர வேண்டும் என தனது தூதுவர்களின் காதில் எம தர்மன் சொல்வது திருமிழிசையாழ்வாருக்கு கேட்டு விட்டது.
‘ஐயா தங்கள் சிவபக்தர், தாங்கள் விஷ்ணு பக்தர் தங்களது ஆயுள் காலம் முடிந்து விட்டது என்பது தாங்களுக்கே தெரியும் . அப்படி இருக்கையில் இந்த சடலத்தில் தங்கி இருப்பது வீண். எனவே எங்களுடன் வாருங்கள்’ என வேண்டி விரும்பி பணிவோடு அந்த ஆத்மாக்களை அழைத்து வாருங்கள் என்று எமதர்மன் கூறினாராம். இதோ அத்திருப்பாசுரம்…
திறன் பேண்மின் கண்டீர் திருவடி தன் நாமம் மறந்தும் புறம் தொழ மாந்தர் - இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன் துாதுவரைக் கூவி செவிக்கு.
சிவபெருமானுடைய குமரன் முருகன். திருமாலுடைய மருமகன் முருகன். அப்படியானால் சிவவிஷ்ணு அடியார்களின் கருத்துக்களை முருகனடியார்களும் எடுத்து தன் பக்தர்களும் சொல்வார்கள் தானே?
நக்கீரர் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படைக்கு பாயிரம் எழுதியவர் பாடும் பாடல் இதோ… பொருள் வெளிப்படை.
உன்னை யொழிய ஒருவரையும் நம்பிகிலேன். பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் - பன்னிருகை கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே.
பெரிய இலக்கியங்கள் சொல்லும் கருத்துக்களை எல்லாம் சிற்றிலக்கியங்களும் சொல்லும்.
அந்த வகையில் கரிவலம் வந்த நல்லுாரை ஆட்சி செய்தவர் வரதுங்க ராம பாண்டியன். அவரின் ஞானக்கருவூலமாக திகழக்கூடியது திருக்கருவையந்தாதிகள். இது பால்வண்ண நாதரின் திருவடியை நித்தம் அலங்காரம் செய்யும் பேற்றினைப் பெற்றது.
இவருக்கு முன்னே தோன்றி அருளாளர்கள் பாடிய கருத்துக்களையெல்லாம் இவ்வரசனுடைய பாக்களிலும் பிரதிபலிக்கிறது.பாருங்களேன். என்னே இவரின் கவிப்புலமை!
சுடரே வலிய தடுத்தாண்ட துணையே பிறவித்
தொடு குழி வீழ்
இடரே அகலக் களா நீழல் இருந்த கோவே
எம்பெருமான்
உடலே ஓம்பித் திரியும் என்னை உன்னை
நினைக்க பணித்த அருட்
கடலே உன்னையன்றொரு தெய்வம் காண
வழுத்தக் கடவேனோ!
அபிராமி பட்டரைப் போல இனியொருவர் இப்பூவுகில் பிறப்பது கடினம். அவரே நினைத்து மீண்டும் இம்மண்ணுலக மக்களுக்கு போதனை செய்ய வேண்டும் என வந்து மனம் இரங்கினால் மட்டுமே அது சாத்தியம்.
மகானுபானுவான அவர் வேத உபநிடதக் கருத்துக்களையெல்லாம் தாம் பாடிய அந்தாதியில் வைத்து அபிராமி அன்னையை போற்றி பணிகிறார். குறிப்பாக அந்தாதிக்குள் அந்தாதியை பொதித்து வைத்து பாடியவரும் அவரே. அவர் பாடிய பாடலில் வரதுங்க ராம பாண்டியரின் கருத்தும் மிளிர்வதை பார்க்கலாம். படிக்கலாம்.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்களுக்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.
இப்பாடலின் ஈற்று அடியில் உள்ள கருத்தைதான் மற்றொரு பாடலில் ‘மாத்தவளே உன்னை யன்றி மற்றொரு தெய்வம் வந்திப்பதே’ என்று இறைஞ்சுகிறார் அபிராமி பட்டர்.
தாயே உன் திருவடியைத் தொழுத பின் வேறு யாரிடம் சென்று பணிவேன் என்று பக்குவமாகச் சொல்லும் அபிராமி பட்டரின் அடியொற்றியே, ஊற்றுமலை சமஸ்தானத்தின் வழிபடு தெய்வமான கோமதியின் மீது அந்தாதி பாடுகிறார் சென்னிகுளம் அண்ணாமலைக் கவிராயர்.
45 பாடல்களைக் கொண்ட இந்நூலின் மீதி பாடல்கள் இன்னும் கிடைத்தில. இந்நூலில் கவிராயர் அழகு, செல்வம், அறிவு மேன்மை எல்லவற்றையும் தன் பக்தர்களுக்குத் தர வல்லவள், அப்படிப்பட்டவள் எட்டுத்திசைகளையும் ஆடையாக அணிந்துள்ளாள். அவளே, பிரணவத்தை கரும்புச் சாறாக்கி முருகனுக்கு தந்தவள், அவளிடம் அன்பைப் பெருக்க வேண்டுமே தவிர சுருக்க வேண்டியதில்லை. எனது அறிவுக்குள் அவளை நிலை நிறுத்திக் கொண்டேன். இனி வேறு எந்த தெய்வத்தையும் நாடுவதற்கு நான் துணிய மாட்டேன் என்கிறார் இதோ அப்பாடல்…
திருக்கோமதிக்கு வரராசை வாழும் திகம்பரிக்கு ஈசருக்கு ஓம் அது இக்கு ரசமெனச் சொற்றவன் தந்த வட்டுச் குருக்கோமதி குளிர் ஆணைத் தாட்டு அன்பு கூர்வது அல்லால் சுருக்கோம் மதிக்குள் மற்றோர் தெய்வம் நாடத் துணிந்திலமே.
நிறைவாக,
வேத ரிஷிகள், திருமூல தேவ நாயனார், பட்டினத்து சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், அபியுக்தர், வரதுங்கர், அபிராமி பட்டர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், அண்ணாமலைக் கவிராயர் போன்றோர் சொன்ன கருத்துக்களையெல்லாம் நம் வள்ளல் பெருமகனார் தனது திருவருட்பாவில் எடுத்த எடுப்பிலே ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்’ என்கிறார்:
பொங்கு பல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்கு கரை காணாத கடலே எங்கும்
கண்ணாக காண்கின்ற கதியே அன்பர்
தங்க நிழல் பரப்பி மயில் சோடை யெல்லாம்
தணிக்கின்ற தருவே, பூந்தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்ய வல்ல கடவுளே தேவ தேவே.
#
ஒன்றானவன் உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்,
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்,
பன்னிரு கை வேலவனைp பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்,
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்,
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்,
அவையொன்று தானென்று சொன்னானவன்,
தான் பாதி உமை பாதி கொண்டானவன்
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்,
காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்,
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்,
அன்பில் ஒளியாகி நின்றானவன்.
திருச்சிற்றம்பலம்
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
$$$