சங்கிகள் நால்வர்-2

-ஆதிசைவன் இரா.இராம்குமார்

திருக்கழுக்குன்றத்தைச் சார்ந்த திரு. ஆதிசைவன் இரா.இராம்குமார், ஆராய்ச்சிகளில் ஈடுபாடும், தமிழ் இலக்கியங்களில் தேடலும் கொண்ட இளைஞர். இவரது பல கட்டுரைகள் 'பொருள் புதிது’ தளத்தில் வெளியாகி இருக்கின்றன. இது இவரது ஆய்வுத் தொடர்…. (பகுதி- 2)
பாரதி இலக்கியம்
"சேதமில்லா ஹிந்துஸ்தானம் - இதை 
  தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

     -மகாகவி பாரதி (பாப்பா பாட்டு).

பாரதியார் 1882-இல் பிறந்து 1921-இல் மறைந்தார்; ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது 1925-இல் தான் பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்டது. எனவே, பாரதியாருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் நேரடியான நிறுவனத் தொடர்புக்கு வாய்ப்பில்லை. ஆனால் இருவருடைய சிந்தனைகளையும் செயல்பாட்டு முறைகளையும் ஒப்பீட்டு ஆய்வுக்கு உட்படுத்தும் போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் அந்த இயக்கமானது தமிழ்நாட்டில் செயல்பாட்டிற்கு வரும் முன்பே பாரதியாரின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மூலமாக தீவிரமாக இயங்கி வந்திருக்கிறது என்பது புலனாகிறது.

பாரதியாரின் புரட்சிகரச் செயல்பாடுகளையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகளையும் ஒப்பிடும்போது, இருவரிடமும் காணப்படும் தேசிய உணர்வு, அமைப்பு சார்ந்த செயல்பாடுகள், இளைஞர்களைத் திரட்டுதல், ஹிந்து ஒற்றுமை, தியாக மனப்பான்மை ஆகிய ஒற்றுமைகளின் அடிப்படையில் இதை நாம் அறியலாம்.

‘தேசமே உனது வழிபடு கடவுளாக இருக்கட்டும்’ என்றும், ‘பயங்கரத்தை வழிபடு’ என்றும் போதித்து தேச விடுதலைப் போராட்டத்திற்கு  வித்திட்டு உரமூட்டியவர் சுவாமி விவேகானந்தர். அவரது வீரமூட்டும் கவிதைகள், விழித்தெழச் செய்யும் ஆழ்ந்த கருத்துக்கள், உணர்வூட்டும் உணர்ச்சிகரமான உரைகள், அவரது சர்வபரித்யாகம் ஆகிய அனைத்தும் பல உன்னத தலைவர்களையும் புரட்சி வீரர்களையும் உருவாக்கி நாட்டுக்காகத் தனது உயிரையும் பலி கொடுக்கும் உத்வேகத்தை அளித்தன.

கூடுதலாக, பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்த மடம்’ நாவலில், விடுதலைக்காகப் போராடிய வீர சன்னியாசிகள் அமைத்த ரகசிய சங்கத்தின் பாணியையும், சத்ரபதி சிவாஜி மகாராஜின் யுக்தியையும் அடிப்படையாகக் கொண்டு அந்தக் காலகட்டத்தில் தீவிரவாத சுதந்திர சிந்தனையாளர்கள் பல ரகசிய சங்கங்கள், இயக்கங்கள் மூலமாக தேச விடுதலைக்கு வித்திட்டனர்.

இத்தகைய புரட்சி நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் கொல்கத்தாவை தனது இருப்பிடமாக அமைத்துக் கொண்ட சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதா தேவி ஆவார். 1905 ஆம் ஆண்டு காசி காங்கிரஸ் மகாநாட்டிற்கு சென்று திரும்பும் வழியில் டம்டம் நகரில் உள்ள சகோதரி நிவேதிதா தேவியின் இல்லத்தில், பாரதியார் அவரைச் சந்தித்து ஆசி பெற்றது, அவரது வாழ்வின் பெரும் திருப்புமுனையாக இருந்தது. அவரை தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்ட பாரதி, அதன் பிறகு விடுதலைக்கான புரட்சி இயக்கத்தில் முன்பிருந்ததை விட மிகத் தீவிரமாகச் செயல்பட்டார்.

அக்காலத்தில் பாரத நாட்டின் சுதந்திரப் போரில் தீவிர தேசியவாதத் தலைவர்களாகிய விளங்கிய  லால்-பால்-பால் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவராகிய வங்கத்தின் விபின் சந்திர பாலரை, 1907 இல் சென்னைக்கு அழைத்து வந்து சென்னைக் கடற்கரையில் பெருங்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்தார் பாரதி. அதில் விபின் சந்திர பாலர் முழங்கிய முழக்கத்தைக் கேட்ட பிறகு சென்னை பிரசங்கி ஒருவர், “இந்தியர்கள் வெடிகுண்டுகளைச் செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, வெடிகுண்டுகளைச் செய்ய கற்றுக் கொண்டு திரும்பிவந்து, ஒவ்வொரு அமாவாசை இரவிலும் 108 வெள்ளாடுகளை அல்ல, வெள்ளை ஆடுகளை (ஆங்கிலேயர்களை) பலி கொடுக்க வேண்டும்” என்று பேசியதாக ‘வந்தே மாதரம்’ பத்திரிகையின் 1907 மே 27 ஆம் தேதி இதழில் ஒரு செய்தி வெளிவந்ததாக M.C.மஜும்தார் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு தீவிர  தேசியவாதியாகவே செயல்பட்டு வந்த பாரதி, பின்னர் வங்கத்தில் தோன்றிய  ‘அனுசீலன் சமிதி’ என்ற ரகசிய சங்கத்துடன் மறைமுகமாக இணைந்து செயல்படலானார். இந்த அனுசீலன் சமிதியானது ஆரம்பத்தில் பிரமதநாத் மித்ரா, அரவிந்த மகரிஷியின் தம்பி பரீந்திர கோஷ், சுவாமி விவேகானந்தரின் தம்பி பூபேந்திரநாத் தத்தா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்புலத்தில் அரவிந்தரும் திலகரும் இருந்து வழிகாட்டி வந்தார்கள். மேலும் ‘யுகாந்தர்’ என்ற புரட்சிகர பத்திரிகையும் நடத்தி வந்தார்கள். பின்பு 1905 இல் டாக்கா அனுசீலன் சமிதி நவம்பர் மாதம் ‘புலின் பிகாரி தாஸ்’ என்பவரால் நிறுவப்பட்டது.

புலின் பிஹாரி தாஸின் ரகசிய இயக்கத்தில் இணைந்து புரட்சிகரப் பணிகளுக்கான பயிற்சி பெறுவதற்காக, 1910-ஆம் ஆண்டு டாக்டர் பி.எஸ். மூஞ்சே (B. S. Moonje) என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், மருத்துவம் படிப்பதற்காகவும் வங்காளப் புரட்சியாளர்களின் செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ளவும் நாகபுரியிலிருந்து கேசவ பலிராம் ஹெட்கேவார்  கல்கத்தாவிற்கு வந்தார். அங்கு நேஷனல் மெடிக்கல் கல்லூரியில் படித்தபோது, அனுசீலன் சமிதியுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். சமிதியின் உள்வட்டக் குழுவில் (Core Group) இணைந்த இவருக்கு ‘கோகன்’ (Koken) என்ற ரகசியப் பெயர் வழங்கப்பட்டது. கல்கத்தாவிற்கும் நாகபுரிக்கும் இடையே புரட்சிகர இலக்கியங்களையும், ஆயுதங்களையும் ரகசியமாகக் கொண்டு சேர்க்கும் பணிகளிலிலும் இவர் ஈடுபட்டார்.

பிரபல வங்காளப் புரட்சியாளர் திரிலோகிநாத் சக்ரவர்த்தி தனது ‘ஜெயிலில் முப்பது வருடங்கள்’ (Jele Trish Bocchor) என்ற நூலில், டாக்டர் ஹெட்கேவார் அனுசீலன் சமிதியின் முழுநேர சத்தியப்பிரமாணம் எடுத்த உறுப்பினராக இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

‘அனுசீலன் சமிதி’ என்ற சொல்லிற்கு அனுதினமும் உடலையும் உள்ளத்தையும் ஒழுங்குபடுத்தும் அமைப்பு என்று பெயர். இவ்வாறு ரகசிய சங்கங்கள் ஆரம்பத்தில் உடற்பயிற்சி கழகங்களாகவே நடத்தப்பட்டு வந்தன.

காரணம், “வலிமையே வீரசுதந்திரத்தைப் பெற்றுத்தரும்; கோழை வாழ்வல்ல” என்பதை திடமாக நம்பினர் தீவிர தேசியவாத தலைவர்கள். ஒருமுறை ரமண மகரிஷியிடம் பக்தர் ஒருவர் இவ்வாறு கேட்டாராம்; “ஆனந்த நல் வாழ்விற்கு வலிமையே அவசியம் என்று ஒரு சாராரும், இல்லை அமைதி ஒன்றே அவசியம் என்று ஒரு சாராரும் சொல்கின்றனர். இதில் எது சரி?” எனக் கேட்ட போது,  “முதலில் தேவை வலிமை; பின்பு அமைதி. வலிமையற்ற இடத்தில் அமைதி பிறக்காது” என்று தீர்க்கமாகக் கூறினாராம் ரமண மகரிஷி.

ஆகவே, கோழைகள் அஹிம்சையைப் பேசுவதற்கும்; வீரர்கள் அஹிம்சையைப் பேசுவதற்கும் இடையே மலையளவு வித்தியாசம் உண்டு.

பண்டாசுரன் எனும் அவுணன் (அரக்கன்), தனது எதிரிப் படையான ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகை ஸ்ரீ மகா திரிபுரசுந்தரியின் சக்தி சேனைகளின் ஒற்றுமையைக் குலைக்க அவர்களிடம், சோம்பல், பலவீனம், கையறுநிலை, உறக்கம், தயக்கம், மயக்கம், பேடித்தனம், முனைப்பின்மை ஆகியவற்றின் அதிதேவதைகளை அனுப்பி அச்சக்தி சேனைகளை செயலற்றுப் போகச் செய்தானாம். பின் அச்சக்தி சேனைகளின் பேச்சும் செயலும் முற்றிலும் மாறிப் போயிற்று. “போதும்… போதும்… மோதலும் நோதலும், வெற்றி தோல்வியால் நமக்கென்ன லாபம், யுத்த போராட்டத்தில் நமக்கு அடி, உதை நேராமல் இருக்க அசுரர்களிடமே அடிமைப்பட்டு விடுவோமே” என்றும்,  “அசுரர்களும் ஒரு உயிர்கள் தானே! அவர்களோடு யுத்தம் செய்து நாம் ஏன் ஜீவ ஹிம்சையில் ஈடுபட வேண்டும். போதும் இந்த ஹிம்சைத்தனம். இனி அஹிம்சை ஒன்றையே அனுசரிப்போம்” என்றும் சக்தி சேனைகள் அசக்தி சேனைகளாகி கொட்டாவி விட்டு நித்திரையில் மூழ்கினார்கள் என்கிறது புராணம்.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்திலும் கூட நமது மக்களிடையே இதே மாதிரியான ஒரு மனநிலை தான் இருந்து வந்தது. காரணம் அவர்களை வழிநடத்தியவர்களும் ‘ஜனத்தலைவ வேஷதாரிகளாகவே’ இருந்து வந்தனர். தங்களை ஆளும் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கிடைத்துவிடாதா? பிரபுக்கள் தங்களை ரக்ஷிக்க மாட்டார்களா? என்று பாரத புவனத்தையே கையேந்தி பவனமாக மாற்றினர்.

இதிலிருந்து மீளவே திலகர், அரவிந்தர் போன்றோர் பல புரட்சிகர சிந்தனையை முன்னெடுத்தனர்.  அவர்கள் ‘சுதந்திர ஆலயத்தில் ஒரு காணிக்கையாக நமது உயிரை அர்ப்பணம் செய்யாமல் ரத்தத்தைச் சிந்தாமல் சுதந்திர தேவியின் வழிபாட்டை நடத்த முடியாது’ எனக் கருதினர்.



ஆகையால் தான் உடற்பயிற்சி கழகங்களை நாடுதோறும் சென்று சேர்ந்தனர். மக்களை, குறிப்பாக இளையோர்களை வலிமை ‌ உடையவர்களாக்கினர். பல புரட்சிகரச் செயல்களை நடத்தி ஆங்கிலேயர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இந்த உடற்பயிற்சி மையங்கள் ரகசிய சங்கத்தின் வெளிவட்டமாகச் செயல்பட்டு வந்தது. இதில் நன்கு பயிற்சி பெற்ற நம்பத்தகுந்தோர் ரகசிய சங்கத்தின் உள்வட்டத்தில் (core group) இருந்து செயல்பட்டனர்.

தமிழகத்தில் உடற்பயிற்சி கழகங்கள் ஏற்படுத்த பாரதியின் பெரும் முயற்சி:

பாரதி தனது ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

“கடந்த இருபது ஆண்டுகளாக அன்னியர்களிடம் கெஞ்சிக் கெஞ்சி நம் தொண்டை வற்றிப்போயிருக்கிறது.  நாம் குனிய குனிய அவர்கள் அதிகமாக வளைத்துக் குதிரையேறுகிறார்களே அல்லாமல், அவர்கள் கருணை காட்டுவதற்குரிய வழிகளைக் காணவில்லை. ஆதலால் நமது காங்கிரஸ் மகாசபை இனி இந்த பிச்சைக்காரத்தனத்தை ஒழித்துவிட வேண்டும். மேலும் ஆயுதப் பயிற்சியும் சரீரப் பயிற்சியும் விருத்தியடையுமாறு செய்ய வேண்டும்”

     (இந்தியா:  13.10.1906).

இன்னொரு கட்டுரையில்…

“இனிமேல் இந்தியாவின் பக்தனென்று சொல்லப்படுவோன் எத்தனையோ விதமான ஹிம்சைகளுக்கு உட்பட்டே தீர வேண்டும். பாரதமாதாவுக்கு தொண்டு புரிவது விளையாட்டான காரியம் அல்ல. சரீர ஹிம்சைகளுக்கும், வேறெந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சுவோர் அப்பெரும் தொண்டில் தகுதியுடையோராக மாட்டார்கள். எந்தவிதப் பெருந்துன்பம் நேரிடினும் மனமஞ்சாத வீரர்களே பாரத மாதாவின் சேவைக்கு உரியவர்கள் ஆவார்கள்”

     (இந்தியா: 23.02.1907).

– என்று எழுதினார்.

“பெண்மையிலாத பெண் எப்படி நிந்தைக்கு உட்படுவாளோ, அதுபோல் ஆண்மையில்லாத ஆணும் அவமதிக்கப்பட வேண்டியவனே. சரீர பலமும் அதனால் ஏற்படக்கூடிய மனோ உற்சாகமும் இல்லாதவன் பாரத பூமிக்கு அவசியமில்லை” என்று ஒரு கூட்டத்தில் பேசினார்.
மேலும்…

“ஆரியக் குமாரர்களே! மூலைக்கு மூலை சரீரப் பயிற்சிக்குரிய பாடசாலைகள் ஸ்தாபித்து தேக பலம் உண்டாக்கிக் கொள்ளுங்கள். நல்ல பேச்சு, இனிய பாட்டு, தேகபலத்துக்குரிய விளையாட்டுகள், முதலியவற்றிலே ஆசை கொள்ளுங்கள். அச்சமில்லாமை, மன உற்சாகம் முதலிய குணங்களை அபிவிருத்தி செய்யுங்கள். நமது 'இந்தியா' பத்திரிகை படிப்போர்களெல்லாம் தத்தம் ஊரிலேயே சரீரப் பயிற்சி பாடசாலை ஸ்தாபித்து, அபிவிருத்திக் கொண்டு வருவார்களானால், நமக்கு அளவற்ற திருப்தி உண்டாகும். இவ்விஷயமாக நமக்கு வரும் கடிதங்களெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் எமது இதழில் பிரசுரம் செய்யப்படும்”

       (இந்தியா: 02.02.1907).

-என்று எழுதினார் பாரதியார்.

பாரதி மேற்கூறிய சரீரப் பயிற்சிக்குரிய பாடசாலையில், நல்ல பேச்சு, இனிய பாட்டு, தேகபலத்துக்குரிய விளையாட்டுகள் ஆகியவை  டாக்டர் ஹெட்கேவார்  உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தினசரி ஷாகாவில் இன்றுவரை நடைமுறையில் உள்ளன. மேலும் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அடிநாதமே இந்த தினசரி ஷாகா தான். முதலில் மனிதர்களை நிர்மாணித்தல், பின்னர், பண்புடைய அம்மனிதர்கள் மூலமாக தேசத்தை நிர்மாணித்தல் என்ற ரீதியில் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு கடந்து செயல்பட்டு வருகிறது.

ஒருமுறை  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாம் தலைவர் குருஜி கோல்வல்கர் அவர்களிடம்,  “ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது எப்படி இவ்வளவு பெரும் காரியங்களை வெற்றிகரமாக செய்து வருகிறது? அதை எப்படி நீங்கள் திட்டமிட்டு செயல்படுத்துகிறீர்கள்?”  என்று கேட்டபோது, அவர் கூறிய பதில் “ஷாகா”.  “திறந்த வெளி மைதானத்தில் தினசரி ஷாகா ஒரு மணிநேரம் நடந்து வருகிறது. அங்கு பயிற்சி பெற்றவர்கள் மூலமாகவே பல நற்காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர வேறொன்றும் நாங்கள் செய்வதில்லை” என்று அவர் கூறினார்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (RSS) வெளியிட்ட சமீபத்திய (அக்டோபர் 2026) தரவுகளின்படி (நவம்பர் 2026 நிலவரப்படி), இந்தியாவில் உள்ள ஷாகா (Shakha) விவரங்கள்:

  • தினசரி சாகாக்கள் (Daily Shakhas): 99,423 (63,208 இடங்களில்)
  • வாராந்திர மிலன்கள் (Weekly Milans): 34,982 (26,826 இடங்களில்)
  • மாதாந்திர மண்டலிகள் (Monthly Mandalis): 14,096 (13,363 இடங்களில்).

இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பு, கொள்கை பரப்புதல் மற்றும் தன்னார்வலர்களை (ஸ்வயம்சேவகர்கள்) உருவாக்குதல் ஆகிய அனைத்தும் ஷாகாவை மையமாக வைத்தே நாடெங்கிலும் இயங்குகின்றன.

பாரதியும் கூட இந்த முக்கியத்துவம் கருதியே, மேற்கூறிய கட்டுரை வெளிவந்த அடுத்த மூன்று வாரங்களிலேயே இன்னொரு கட்டுரையை “சரீர பலப் பயிற்சி” என்ற தலைப்பில் எழுதினார்.

"தமிழர்கள் தேசாபிமானிகளாய் விட்டதாக நினைத்துக் கொண்டு, எத்தனையோ நாள் வாய்ப்பாட்டிலே சுதேசியம் பேசிக் காலம் கழிக்க எண்ணியிருக்கிறார்களோ தெரியவில்லை. சரீர பலப் பயிற்சி சம்பந்தமாக நாம் முன்னொரு தடவை தமிழர்களுக்கு விண்ணப்பம் செய்திருத்ததை அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. ஊருக்கு ஊர் கசரத் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபிக்க முயற்சிகள் செய்ய வேண்டும் என்று நாம் செய்த பிரார்த்தனையை  தமிழ்நாட்டார் மனங்கொண்டார் என்பதற்கு இதுவரை எந்த நிதர்சனத்தையும் காணோம். அது விஷயமாக எவரும் கடிதம் கூட அனுப்பவில்லை. சரீரப் பயிற்சிக்குரிய பாடசாலைகள் ஸ்தாபனம் புரிவது கடினமான விஷயமன்று. இதைப் படித்துச் செல்கின்ற நாம் உண்மையிலேயே பாரதநாடு தழைக்க வேண்டும் என்று கருத்துடையவர்களானால், அவர் உடனே உமது ஊரிலிருக்கும் பயில்வான் ஒருவரை அழைத்து, நாலைந்து பேர் சேர்ந்து அவருக்கு ஒரு சொற்பச் சம்பளமும் ஒரு கொட்டடியும் ஏற்பாடு செய்து கொடுத்து, சம்மதமுள்ள பிள்ளைகளுக்கெல்லாம் இனாமாக, சிலம்பு, கசரத், கர்லா முதலிய தொழில்கள் கற்றுக் கொடுக்கச் செய்வது மஹா சுலபமான வழியல்லவா? உயர்ந்த வகுப்பு வாலிபர்களைக் கெஞ்சிக் கெஞ்சி கசரப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எந்தவிதமான பிள்ளைகள் வந்தாலும் போதும், தோள் வலிமையின் பெருமையையும் முக்கியத் தன்மையையும் நம்மவர்கள் முற்றிலும் மறந்து விடக்கூடாது என்பது நமது நோக்கம். அவ்வூரில் உள்ள பொதுச் சபையார்கள் இவ்விஷயத்தில் ஊக்கம் எடுப்பது பொருந்தும். எந்த ஊர் பொது சபையார் இவ்வித பாடசாலையை முதன் முதலாக ஏற்படுத்தி திருப்திகரமான விவரங்களுடன் நமக்கு தெரிவித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு நமது பத்திரிக்கையை ஒரு வருஷ காலம் சந்தா இல்லாமல் அனுப்ப தயாராய் இருக்கிறோம் இதை அவ்வூரிலுள்ள பொதுச் சபையார் கவனிக்கும்படி வேண்டுகிறோம்.”

    (இந்தியா:- 23/02/1907).

மீண்டும் அடுத்த மூன்று வார காலத்திலேயே “சரீர பயம்” என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையையும் எழுதுகிறார் பாரதி. அதில் கர்ணன் தனது குருவாகிய பரசுராமனின் தலையை மடி மீது தாங்கிக் கொண்டிருந்தபோது தனது தொடையை தொலைத்துக் கொண்டிருந்த வண்டினால் ஏற்பட்ட வேதனையையும் தாங்கிக் கொண்டு தனது குருவின் நித்திரை கலைந்து விடக்கூடாது என்று அசையாமல் இருந்ததாக கூறும் மகாபாரத கதையை கூறிவிட்டு,  “கர்ணன் காலத்திலே மாணாக்கர்கள் அப்படி இருந்தார்கள்…இந்த காலத்தில் இருக்கும் மாணாக்கர்களை பற்றி சில த்ருஷ்டாந்தங்களை சொல்கிறோம், அவற்றை கேளுங்கள்” என்ற பீடிகையோடு பின்வருமாறு எழுதுகிறார் பாரதி…

“சில தினங்களின் முன்பு சென்னை கிறிஸ்தவ காலேஜ் சயின்ஸ் உபாத்தியாயராகிய ஸ்ரீ லட்சுமி நரசு, மாணாக்கர்களுக்கு சயின்ஸ் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் த்ருஷ்டாந்தங்கள் காட்டும் பொருட்டு வைத்திருந்த கருவிப் பொருள்களில் வெடிப்பு உண்டாகி சிறிது நெருப்பு பற்றி விட்டது. இரண்டு க்ஷணங்களிலே இந்நெருப்பு அணைந்து போய்விட்டது. இதற்கிடையே மாணாக்கர்கள் எங்கே என்று பார்க்கும் இடத்து நம் மாணவர்கள் ஜன்னல் வழியாகவும் வாசல் வழியாகவும் ஓட தலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சரீர வேதனை என்றால் இந்த கோழைப் பிள்ளைகளுக்கு என்ன பயம் பார்த்தீர்களா? என்ன அதைரியம்! என்ன அவமானம்!

இது நிற்க, வேறொரு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறோம். சிறிது காலத்திற்கு முன்பு மெடிக்கல் காலேஜ் பிள்ளைகளுக்கும் மற்றொரு கூட்டத்தாருக்கும் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. அப்போது ஒரு ஹிந்து வாலிபனுக்கும் (இவனை ஹிந்து என்று சொல்ல நா கோசுகிறது) ஒரு பரங்கிப் பையனுக்கும் சண்டை உண்டாயிற்று. பரங்கி வாலிபன் ஹிந்துவை அடித்துவிட்டான். இது மாதிரி இரண்டு பையன்களுக்குள்ளே சண்டை ஏற்பட்டுபோது மற்றொருவர் தலையிடுவது வழக்கமில்லை ஆதலால் அவர்கள் சும்மா இருந்து விட்டார்கள். ஹிந்து வாலிபன் ஆறு வயது பெண் குழந்தை போலே கண்ணீர் விட்டு தேம்பித் தேம்பி அழ தொடங்கி விட்டான். பரங்கிப் பிள்ளைகளும் நம்மவர்களுக்கும் உள்ளே மற்றவர்களும் நகைத்து கொண்டு இருந்தார்கள். ஐயோ சரீர வேதனைக்கு இவ்வாறு அஞ்சுவதும் அதைரியமடைவதும் வாலிபர்களுக்கு அழகு ஆகுமா? இதை நாம் நிவர்த்தி செய்து கொள்வது இன்றியமையாத விஷயம் அல்லவா? மனத் துணிவற்ற  ஜாதியார் மண் சுமப்பதற்குக் கூட தகுதியாக மாட்டார்கள். ஊருக்கு ஊர் குஸ்திப் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்துவதே இதற்கெல்லாம் தகுதியான மருந்தாகும். குஸ்தி பள்ளிக்கூடங்களை பற்றி முன்னமே ஒரு முறை எழுதி இருக்கிறோம் இப்போது மீண்டும் ஒருமுறை அதனை நாங்கள் வற்புறுத்துகிறோம்.”

    (இந்தியா: 16.03.1907).

இவ்வாறு அடுத்தடுத்த கட்டுரைகளை பாரதியார்‌ எழுதி வலியுறுத்தியதிலிருந்து, ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு முதல் படியாக இந்நாட்டு இளைஞர்கள் உடல் வலிமையும் ஆண்மையும் பெற வேண்டும் என்று கருதியதே ஆகும்.

மேலும் பாரதி 05.02.1910 தேதியிட்ட  ‘இந்தியா’ இதழில் இவ்வாறு எழுதுகிறார்:

"நமது தேசத்தில் ஜனங்கள் தங்களுடைய பலவீனத்தினாலும் அந்நியர்களின் ஒழுங்குகளைக் கைகொள்வதாலும் மெத்தவும் அதிக பலவீனர்களாய் விடுகின்றார்கள். இந்த மாதிரி நமது வாலிபர்கள் பலவீனர்களாய்ப் போய் தவிக்காமல் இருக்க ஸ்வதேச முயற்சிக்கு அப்புறம் நாட்டில் பல 'அக்கடாக்கள்' ஏற்பட்டன. பல சமிதிகள் தோன்றின. இரண்டு வருஷ காலத்திற்குள்ளேயே இவைகளில் சேர்ந்திருந்த பிள்ளைகள் பலிஸ்டர்களாகி விட்டனர். இம்மாதிரி பலிஸ்டர்களான வாலிபர்களின் சமிதி மிக நல்ல காரியங்கள் செய்து வந்தது. கடைசியாய் பிரிட்டிஷ் கவர்மெண்ட்டார் அவ்விஷயத்தைப் பற்றி விமர்சனம் செய்து அந்த சமிதிகளைக் கலைத்து விட்டார்கள். தேகப் பயிற்சியை இனி அங்கே சிறுவர்கள் அவரவர்கள் வீட்டிற்குள் செய்து கொள்வார்கள். நமது ஸ்வதேச முயற்சியின் ரக்ஷணைக்காக தேச சேவை செய்ய வடநாட்டவரைப் போல் தென்னாட்டிலும் பலர் வேண்டும். ஆங்காங்கு தேகப் பயிற்சி சாலைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அதில் நல்ல கசரத் வேலைகள் நன்றாய் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். தேக பலம் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.”

இதே போன்றதொரு முயற்சியை டாக்டர் ஹெட்கேவாரும் மேற்கொண்டார். புரட்சிக் குழுவிற்கு தம்மால் அனுப்பப்பட்ட பழைய நண்பர்களை இளைஞர்களை  திரும்ப அழைத்து அவர்களை தக்க பணிகளில் ஈடுபட ஏற்பாடு செய்தார். குறிப்பாக தனது நண்பரான ‘கங்கா பிரசாத் பாண்டே’வை அழைத்து ‘ராஷ்ட்ரீய மல்வித்யாசாலை’ என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். மாநிலம் முழுவதிலும் அதன் கிளைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டது. சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கப் பணியில் தொடர்புக்கு வந்த இளைஞர்களை மாலையாகக் கோர்ப்பது மற்றும் புதிய செயல் துடிப்புள்ள இளைஞர்களைத் தேடி இணைப்பது ஆகிய இரு நோக்கங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டது. இந்த வித்யாசாலையில் பஞ்சாபில் இருந்து 10-12 பேர், மத்திய மாகாணத்தில் இருந்து 12-14 இளைஞர்கள் இருந்தனர். பணி புரிவோரைச் சேர்த்து கிட்டத்தட்ட 30 பேர் இருந்தனர். குஸ்தி, மல்கம்பம் பயிற்சியோடு வில் அம்பு பயிற்சியும் அங்கு அளிக்கப்பட்டது.

பின்பு ஒரு கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹெட்கேவார்,  “மகாத்மா காந்தியடிகள் உடைய வழிமுறையை பின்பற்றக்கூடியவர்களிடம் சுயநலமற்ற தியாக உணர்வு எதிர்பார்க்கப்படுகிறது. சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாக இரட்டை வேடம் போடுவோர் காந்தியடிகளுக்குத் தேவையில்லை.  வாயால் மகாத்மா காந்திக்கு ஜே! கோஷமிட்டு கரங்களை உயர்த்தி அவரது பணிக்கு ஆதரவு கொடுத்துவிட்டு, வீடு திரும்பிய பிறகு தனது சுகம், சம்பாத்தியம், ஆகியவற்றில் மூழ்கி காந்திஜி உடைய பணிக்கு விரோதமாக செயல்பட்டால் மகாத்மா ஜி உடைய பணி என்னும் கப்பல் தனது இலக்கினை அடையவே முடியாது. தனது பலவீனத்தை மறைப்பதற்காக அமைதி என்னும் போர்வையை போர்த்திக் கொள்ள வேண்டாம். தேசத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்ற சரீரத்தில் தின்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு அமைதி மொழி பேசினால் அது அழகு சேர்க்கும். மகாத்மாஜி உடைய வழியை பின்பற்றுவோர் அனைத்தையும் தியாகம் செய்து களத்தில் இறங்க வேண்டும்” என்று பேசினார்.

மேலும் நாகபுரியில் அக்காடாக்கள் (உடற்பயிற்சிக் கூடங்கள்) நடத்தி வந்த நிர்வாகிகளுடன் தொடர்பு ஏற்படுத்தினார் டாக்டர்  ஹெட்கேவார். சங்கப் பணியை ஆரம்பிக்கும் போது, நிகழ்ச்சிகள் பற்றி திட்டமிடும்போது அக்காடாக்களில் உடற்பயிற்சி செய்வது தான் டாக்டர்ஜி யின் சிந்தனையில் முதன்மை பெற்றது. எனவே அக்காடாக்களின் நிர்வாகிகளுடன் இருந்த தொடர்பு அவருக்கு மிகுந்த உதவியாக இருந்தது.

டாக்டர்  ஹெட்கேவார் இவ்வாறு உடற்பயிற்சிக்கு  முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம், ஒரு காங்கிரஸ் மாநாட்டில் மேடையில் உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ‘பாம்பு பாம்பு’ என்று கூட்டத்தின் நடுவே சில அன்னிய சக்திகளால் கூச்சல் எழுப்பப்பட்ட பொழுது, தேசத்திற்காக உயிரையும் கொடுப்போம் என்று கூறி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் தறிகெட்டு ஓடினர். இந்த அச்சமுடைய போக்கைக் கண்ட ஹெட்கேவார் சரீர பயம் நீங்கினால் ஒழிய விமோசனம் கிடைக்காது என்று உணர்ந்தார்.

பாரதியின் சீடர்கள்:

வாஞ்சிநாதன்

சென்னை அரசாங்கம் தன்னை கைது செய்ய இருக்கும் தகவல் அறிந்து பாரதி புதுச்சேரிக்கு தப்பித்துச் சென்று விட்ட பின்னர், அங்கு பாரதியுடன் போய்ச் சேர்ந்து அவனுக்கு உதவி வந்த தீவிர தேசியவாத இயக்கத்தை சேர்ந்த இளைஞர்களாகிய கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த சங்கர கிருஷ்ணன், எட்டயபுரத்தைச் சார்ந்த எம். நாகசாமி, பி. சுப்பிரமணியன், ஹரிஹர சர்மா முதலியோர் அங்கு உடற்பயிற்சி செய்வதை தமது நித்திய கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தனர் என்று, எம்.நாகசாமி பின்னாட்களில் கூறியிருக்கிறார்.

இதில் பாரதியின் சீடரான‌ கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கர கிருஷ்ணன் என்பவர், பாரதியின் மனைவி வழி  உறவினர் ஆவார். பாரதி பாண்டிச்சேரி வந்த பின்பு  ‘இந்தியா’ பத்திரிகையை தொடர்ந்து வெளி கொண்டு வருவதில்  சங்கர கிருஷ்ணன் தான் பெருந்துணையாக இருந்து வந்தார். இதே சங்கர கிருஷ்ணன் தான் தமது சகோதரி கணவரான வாஞ்சிநாதன் என்ற இளைஞரை பாரதி, வ.வே.சு ஐயர் மற்றும் நீலகண்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வாஞ்சிநாதன் மணியாச்சியில் ஆஷ் துரையை சுட்டுக் கொல்லச் சென்ற சமயத்தில் வாஞ்சிநாதனோடு துணையாகச் சென்று வாஞ்சிநாதன் ஆஷைக் கொன்று பிறகு தன்னையும் மாய்த்துக்கொண்ட பின் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி பின்னர் பிடிபட்டு நான்கு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரும் இதே சங்கரகிருஷ்ணன் தான். மேலும் ஆஷ் கொலை வழக்கில் 13வது எதிரியாக சேர்க்கப்பட்டிருந்த வந்தே மாதரம் சுப்பிரமணியன் என்ற எட்டயபுரம் சுப்பையாவும் பாரதியின் சீடர்களில் ஒருவரே.

பாரதியோடு புதுவையில் தங்கி இருந்த இளைஞர்களில் ஹரிஹர சர்மா என்பவர் சங்கர கிருஷ்ணனின் சொந்த ஊரான கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் பாரதியாரால் கைத்தொழில் முதலியன கற்றுவரும்படியாக  பரோடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று பாரதியின் மனைவியான செல்லம்மாள் பாரதி கூறுகிறார். ஆனால் இங்கு ‘கைத்தொழில்’ என்பது புரட்சிகர ஆயுதப் பயிற்சி என்றே தோன்றச் செய்கிறது. காரணம் ஹரிஹர சர்மா பரோடாவுக்கு சென்று, அரவிந்தருடன் தொடர்பு கொண்டு புரட்சி வீரரானார் என்று ரா.அ.பத்மநாபன் எழுதுகிறார்.

(தொடரும்)

$$$

Leave a Reply