திராவிட இயக்க வரலாறு: பகுதி -10

-தஞ்சை வெ.கோபாலன்

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 10 நிறைவுப் பகுதி)…

10. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

மிக விரைவிலேயே அண்ணாதுரை காலமானார். தலைமைப் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், கட்சிப் பொருளாளராக இருந்த முன்னணி நடிகரான எம்.ஜி. ராமசந்திரனுக்கும் (எம். ஜி. ஆர்) ஏற்பட்ட பிணக்கினால் கட்சி உடைந்து இரண்டானது. எம்.ஜி. ஆர்.  தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்னும் அரசியல் கட்சி உருவானது. அடுத்து நடந்த தேர்தலிலேயே அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இதன் பின்னர், மாறிமாறி ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தைச் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

 தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்திய பாராளுமன்றத்தில் முக்கியமான கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. ராமசந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. ராமசந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். 2017 முதல் 2021 வரை  ௭டப்பாடி கே. பழனிசாமி  முதல்வராக இருந்தார்.

அதிமுக வரலாறு

சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் ராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.  இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1977-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத்  தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு  பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.  நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது.

எம்.ஜி.ஆரைப் போலவே என்.டி. ராமராவும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதிமுகவின் தொடக்க காலக் கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பும் இருந்தது. மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் எம்.ஜி.ஆர். அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்  தாமரை படமிட்ட கொடியை கட்சிக் கொடியாக தங்கள் வீடுகளிலும் குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினைத் தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்த பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆர். மறைவும் ஜெயலலிதா வரவும்.

தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. ராமசந்திரன் டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமசந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.

புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில் சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமசந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.

ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாகக் காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்  11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது. பின்பு ஜெயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டமன்றத் தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது    5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலை 1 மணிவாக்கில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது . அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.

5 பிப்ரவரி 2017 அன்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.

7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர்  பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார்.

இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.

பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார். அவர் 2021 வரை முதல்வராக இருந்தார்.

அடுத்து நடந்த தேர்தலில் திமுக வென்று மு.க.ஸ்டாலின் முதல்வரானார். அவர் 2026 தேர்த்லில் தோல்வியுற்று ஆட்சியை இழந்தார்.

மறுமலர்ச்சி தி.மு.க.

1993 காலகட்டத்தில் திமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. அன்று தலைவராக இருந்த மு.கருணாநிதிக்குப் பின் கட்சியின் தலைமைக்கான போட்டியில் அன்று நாடாளுமன்ற உறுப்பினராகவும், நல்ல பேச்சாளராகவும் இருந்த திமுகவின் பலம் பொருந்திய திராவிடத் தலைவராக விளங்கிய வை.கோபால்சாமி தலைமையைக் கைப்பற்றி விடுவார் என்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தலைவர் கருணாநிதியின் உயிருக்கு அவரால் ஆபத்து என்று ஒரு காரணமும் கூறப்பட்டதால் அவர் வெளியேற்றப்பட்டார்.

அதன் காரணமாக, அவருடன் திமுகவிலிருந்து வெளியேறிய வை.கோபால்சாமியின் ஆதரவாளர்களால்  ‘மறுமலர்ச்சி திமுக’ என்ற தனிக் கட்சி உருவானது. முதலில் சில பிரபலங்கள் அவருடன் போனாலும், நாளடைவில் அவருடைய போக்கு சரியில்லை என்று பலரும் திரும்பவும் தி.மு.க.வுக்கே திரும்பிவிட்டனர். அவர் இப்போதும் கட்சி நடத்திக் கொண்டிருப்பதோடு, யாரை எதிர்த்து தி.மு.க.வை விட்டு வெளியேறினாரோ அந்த தி.மு.க.வுக்கு ஆதரவாக வலிமை மிக்க பேச்சாளராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

வைகோ அனுபவமிக்க தலைவர் என்பதாலும், உலக வரலாறு நன்கு தெரிந்தவர் என்பதாலும், தமிழக அரசியலில் பலருடனும் நன்கு பழகி பல அனுபவங்களைப் பெற்றவர் என்ற முறையிலும் அவரிடம் பல ஆக்க பூர்வமான செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் இன்றும் கூட இத்துணை அனுபவத்துக்குப் பின்னரும் கூட உணர்ச்சிவசப்பட்டு அரசியல் நடத்துவதாலோ அல்லது நிலையான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்காததாலோ அவர் மிக உயர்ந்த நிலையை தமிழக அரசியலில் பெற முடியவில்லை.

இவர் தவிர, நடிகர் டி.ராஜேந்தர், நடிகர் பாக்யராஜ் போன்றவர்களும் புது கட்சி தொடங்கி முடங்கிப் போய்விட்டார்கள்.  நடிகர்  விஜயகாந்த்  ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ தொடங்கி ஓரளவு மக்கள் செல்வாக்கிப் பெற்றாலும், அவரது மறைவால் அக்கட்சியும் சோபிக்கவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமண எதிர்ப்புக்காக உருவான ‘பிராமணரல்லாதோர் இயக்கம்’  பல உருமாறி நீதிக் கட்சி, திராவிடர் கட்சி, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.  இன்னபல பெயர்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய வரலாறு.

எந்தவொரு இயக்கமும்   ஒரு காரியத்தை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்த முனைந்தால் அது நன்மையில் முடியும். எதிர்ப்பு அரசியலும், வெறுப்பு அரசியலும், வெறுப்புப் பேச்சுகளும் அதிகம் பயன் அளித்ததாக வரலாறு இல்லை.

நூற்றாண்டு கடந்த காங்கிரஸ் பேரியக்கம், தாதாபாய் நெளரோஜி, லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரி, டி.பிரகாசம் போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் இன்று ஆக்கபூர்வமாகச் செயல்படுவதை விட்டு, தரத்தில் வீழ்ச்சி கண்டதுதான் அந்த இமாலயக் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. இதை சரித்திரத்தில் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்.

அன்பும், அரவணைப்பும், மக்கள் நலனும், ஆக்க பூர்வமான செயல்பாடுகளும் தான் வெற்றிகளை ஈட்டித் தரும். வெறுப்புணர்வு, கோபம், தவறான சொற்களால் வசை பாடுதல் இவை தோல்வியைத் தவிர வேறெதையும் தராது என்பதை இன்றல்ல ஆதிநாள் தொட்டு வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.

வாழ்க பாரதம்! வாழ்க மக்கள் ஒற்றுமை!! வாழ்க ஆக்கபூர்வமான அரசியல்!!!

(நிறைவு)

$$$

Leave a Reply