-அனில் அந்தோணி

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி பதவி ஏற்ற போது இந்தியாவின் தொழில்நுட்பப் பயணம் வித்தியாசமானதொரு இடத்தில் இருந்தது. இணைய வசதி என்பது சமுதாயத்தில் வசதி படைத்த சிறிய வகுப்பினரிடம் மட்டுமே இருந்தது. அலைபேசி விரிவாக்கம் அப்போது ஆரம்ப நிலையில் இருந்தது. இணையவழி பணப் பரிமாற்றம் என்பது பலரின் கற்பனையில் கூட இல்லாத விஷயம். அரசாட்சி செய்வதற்கு தொழில்நுட்பம் ஒரு கருவி என்ற கருத்து அரசியல் அகராதியில் அப்போது இல்லவே இல்லை.
ஆனால், பதவிக்கு வரும் முன்பே தொழில்நுட்பம், தொலைதொடர்பு, எண்மத் தரவுகளை மோடி சிறப்பாகவும் லாவகமாகவும் கையாளுகிறார் என்ற பெயர் கட்சி வட்டாரங்களில் பரவியிருந்தது. தொழில்நுட்பம் என்பது ஏதோ இயந்திரங்கள் சம்பந்தப்பட்டதல்ல என்ற புரிதல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஆரம்ப காலகட்டத்திலேயே அவருக்கு இருந்தது. தகவல்கள், வேகம், இணைப்பு, மக்களை நேரடியாக அணுக உதவக்கூடியது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. கடந்த 25 ஆண்டு பதவிக் காலத்தில் இந்த உள்ளுணர்வு தொடர்ந்து வந்துள்ளது.
தொழில்நுட்பத்திற்கு அவர் கொடுத்த முன்னுரிமை, குஜராத்தில் அரசின் செயல்பாடுகளை மேம்படுத்தியது. மாநிலத் தலைமை மாவட்ட நிர்வாகத்துடன் விடியோ கான்பரன்ஸ் மூலம் தொடர்பு கொள்வது, ‘ஸ்வாகத்’ என்ற குறை தீர்ப்பு இணையதளம், நிர்வாகத்தில் புள்ளி விவரங்களையும் தரவுகளையும் அதிக அளவில் பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் அரசின் செயல்பாடுகள் சிறப்பாகின. தொழில்நுட்பத்தை ஒரு நவீன மோஸ்தராக இல்லாமல், அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதற்கான கருவியாக மோடி பயன்படுத்தினார். பழைய முறை மூலம் பெரிய அளவில் வீச்சை, தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பது இதன் மையக் கருத்து.
2014 இல் இந்த அணுகுமுறை தேசிய அரசியலில் பரிணாமம் பெற்றது. சமூக ஊடகங்கள், நேரடித் தொடர்பு, டிஜிட்டல் தளங்கள் மூலம் அதிகமானோரைச் சென்றடைவது ஆகியவற்றை வழக்கமான அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே மோடி அவற்றை தனது பிரசாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். சமூக ஊடக மேடையைப் பயன்படுத்தி இடைத்தரகர்களை- வாயில் காப்பாளர்களைத் தாண்டி ஆர்வமுள்ள இளம் வாக்காளர்களை அணுகினார். அது ஒருவழிப் பாதையாக இல்லாமல், இருவரும் கலந்து உறவாடும் அரசியல் பயணமாக இருந்தது. தொழில்நுட்பம் வழக்கமான பிரசாரக் கூட்டங்களுக்கு, களமாடும் தொண்டர்களை சந்திப்பதற்கு மாற்றாக இல்லாமல், அதை பன்மடங்கு அதிகரித்தது. எனவே 2014 தேர்தல் அரசியல் மாற்றத்தை மட்டுமன்றி, இந்திய ஜனநாயகம் தன் குடிமக்களுடன் தொடர்பு கொள்ளும் முறையையே முற்றிலுமாக மாற்றி அமைத்தது.
மோடி பிரதமரான பிறகு மாற்றமும் அதன் வேகமும் அதிகரித்தன. தேசத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பையே மாற்றி அமைக்கும் திட்டம் ‘டிஜிட்டல் இந்தியா’. ஆதார், ஜன்தன் வங்கிக் கணக்கு, அலைபேசித் தொடர்பு ஆகியவை நலத்திட்டப் பலன்களை மிகப்பெரிய அளவில் நேரடியாகக் கொண்டு செல்ல அடித்தளம் அமைத்தன. யுபிஐ பயன்படுத்தி அலைபேசி மூலம் பணப் பரிவர்த்தனைகளை இன்று கோடிக்கணக்கானவர்கள் செய்து வருகின்றனர். டிஜி லாக்கர், கோவின் போன்ற பொது எண்ம தளங்கள் வணிகப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி பொது நலனுக்குப் பயனளிக்கக் கூடியதாக தொழில்நுட்பத்தைக் கட்டமைக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. உலகில் தொழில்நுட்ப வசதிகள் முதலில் பிரமிட்டின் உச்சியில் இருப்பவர்களுக்கே கட்டமைக்கப்பட்ட போது, இந்தியா தனது எண்மக் கட்டமைப்பை அடித்தள மக்களுக்கு உதவக்கூடியதாக வடிவமைத்தது.
இதன் விளைவுகள் எதிர்பார்த்ததை விட அதிக பலனளிப்பவையாக உள்ளன. நலத்திட்டங்களில் ஏற்பட்ட கசிவுகளை தொழில்நுட்பம் தடுத்தது. அதிகாரபூர்வமான நிதி முறைமைக்குள் கோடிக்கணக்கானவர்களை இணைத்துள்ளது; அரசின் சேவைகளை விரிவாக்கி உள்ளது. பரிவர்த்தனைகளை விரைவாகவும் மலிவாகவும் மாற்றி உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, முக்கியமான ஆனால் மதிப்பிட அரிதான நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் நிலையில் உள்ள நகரங்களில் சிறுதொழில் முனைவோரும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் உடனடியாக பணத்தைப் பெறுகின்றனர். மாணவர்கள் தங்கள் படிப்பு சம்பந்தமான விஷயங்களை எங்கிருந்தும் பெற முடிகிறது. முன்பு மிகப்பெரிய முதலீடுகள் தேவைப்பட்ட விஷயங்களை இன்று ஒரு இளைஞர் சுலபமாக இணைய வழித் தொடர்புகள் மூலம் செயல்படுத்த முடிகிறது. இந்திய கிராமங்கள் இன்று சந்தையுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கின்றன. ஒரு தலைமுறைக்கு முன் அசாத்தியமானதாக இருந்த வாய்ப்புகளும் தகவல்களும் இன்று வெகு சுலபமாகிவிட்டன.
அதனால்தான் மோடி காலத்து தொழில்நுட்பக் கதையை வெறும் எண்ம மேடைகள், பயன்பாட்டுத் தளங்கள் என்பதாகச் சுருக்கி விட முடியாது. அதன் அடுத்த கட்டம் தேசத்தின் தொழில்நுட்பத் திறனை, மிக சிக்கலான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பது. குறை கடத்திகள் (செமி கண்டக்டர்), செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணக்கீடு, விண்வெளி, பாதுகாப்பு துறை சார்ந்த தொழில்நுட்பம், மிகவும் முன்னேறிய தொழில் தொலைதொடர்பு, பொருளாதார வளமைக்கு ஆதாரமான தூய்மையான எரிசக்தி ஆகியவை தேசப் பாதுகாப்புக்கும் உலக அரசியலில் செல்வாக்கிற்கும் அடித்தளம் ஆகியுள்ளன.
இந்தியாவின் குறை கடத்தி தயாரிப்பு திட்டம், செயற்கை நுண்ணறிவு திட்டம், தேசிய குவாண்டம் திட்டம், விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள், இந்திய பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் முக்கிய யுக்தி சார்ந்த நிறுவனங்களின் விரிவாக்கம் ஆகியவை தேசத்தின் தொழில்நுட்ப வல்லமையை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன.
குறைகடத்தி திட்டம் மிகவும் முக்கியமானது. பல்வேறு நாடுகளில் உள்ள கணிணி சில்லுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பொறியாளர்களை இந்தியா அனுப்பியுள்ளது. ஆனாலும் அந்த உற்பத்தியில் இந்தியா மிகவும் பலவீனமாகவே உள்ளது. இப்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. புதிதாக குறைகடத்தி வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் இணைப்பு நிறுவனங்கள் உருவாக்கும் திட்டம் உள்நாட்டில் சூழ்நிலையை மாற்றி விடும்.
செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் சவால்கள் உள்ளன. எங்கோ செய்யப்பட்டவற்றைப் பயன்படுத்துவது என்பது மாறி உள்நாட்டுத் தேவைக்கு ஏற்பவும், பல்வேறு மொழி, சமூக வேறுபாடுகளைக் கொண்ட சமுதாயத்திற்கு ஏற்பவும், நம்பகமான தரவுகளைக் கொண்டதாக முறைமைகளை உருவாக்குவதும் அதை மிகப்பெரிய மக்கள் தொகையினரிடம் கொண்டு சேர்ப்பதும் தேவையாகிறது. இதே விஷயம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கும் பொருந்தும். இந்தியா இந்தத் துறையில் ஆயுதங்களை வாங்குபவர் என்ற நிலையிலிருந்து உற்பத்தி செய்பவர் என்ற நிலைக்கு- தனக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்பவர் என்ற நிலையிலிருந்து வடிவமைப்பவர் என்ற நிலைக்கு – முன்னேறி வருகிறது.
இந்தியாவில் இன்றுள்ள இளம் தலைமுறைக்கு இவையெல்லாம் கடந்த காலத்தின் தொடர்ச்சியாகத் தெரியலாம். முந்தைய தலைமுறை சார்ந்த திறமையாளர்கள் தொழில்நுட்பம் சார்ந்த முன்னணி நிறுவனங்களில் வேலை தேடி வெளிநாட்டுக்குக் குடிபெயர வேண்டி இருந்தது. காரணம் அங்குதான் முதலீடுகளும் வாய்ப்புகளும் சூழலும் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இப்போதுதான் முதன்முறையாக இளைய தலைமுறை இந்தியாவில் இருந்தபடியே உலக நாடுகளுடன் போட்டியிட முடிகிறது. இந்திய இளைஞர்களின் நாட்டம், விழைவு, எதிர்பார்ப்பின் எல்லைகள் மாறி உள்ளன. ஸ்டார்ட்அப்கள் முதல் நாளிலேயே சர்வதேசச் சந்தையில் இடம் பெற முடிகிறது. இந்தியப் பொறியியலாளர்கள் மென்பொருள் தயாரிப்பில் மட்டுமன்றி, கணிணி சில்லுகள், டிரோன்கள், செயற்கைக் கோள்கள், பாதுகாப்புக் கருவிகள் மற்றும் முறைமைகள், மின்னிட மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் முன்னணி ஆய்வுகளில் பெரிய அளவில் பங்களித்து வருகின்றனர்.
இங்குதான் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ வருகிறது. பெரிய அளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்பான வேலையைத் தேடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது லட்சக் கணக்கில் தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது கலாச்சார மாற்றம் மட்டுமல்ல, பொருளாதார விளைவுகளையும் கொண்டுள்ளது. துணிச்சலுடன் செயலில் ஈடுபடுவது அங்கீகரிக்கப்பட்ட விஷயமாகியுள்ளது. புதிய கண்டுபிடிப்புகளை வெளிக் கொணர்வது இப்போது தேசிய வளர்ச்சிக்கு வித்திடும் வழியாகி உள்ளது.
தொழில் முனைவோர்களை அரசு உருவாக்க முடியாது. ஆனால் அதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும். எண்ம பொதுக் கட்டமைப்பு, தொலைதொடர்பு, சந்தையை எளிதாக அணுகக் கூடிய நிலை ஆகியவற்றை உள்நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கட்டமைப்பு உருவாக்கித் தரும்.
மிகப்பெரிய சவால்களை இந்தியா எதிர்நோக்கி உள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் இந்தியா மேலும் ஆழமாக ஈடுபட வேண்டும். அதற்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். நிறைய காப்புரிமைகளை பதிவு செய்ய வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வருவதற்கான சூழலையும் அதற்கேற்ற விதிமுறைகளையும் கொண்டு வருவதுடன் இவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கவும் வேண்டும்.
தொழில்நுட்ப இறையாண்மை என்பது தனிமைப்பட்டுப் போவதல்ல. இந்தியா மற்ற நாடுகளுடன் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அது வலிமையாக இருக்க வேண்டும் என்றால், நாட்டின் திறமை வலுவாக இருக்க வேண்டும். இன்றுள்ள நிலையில் கணிணி சில்லுகள், தரவுகள், செயற்கை நுண்ணறிவு வடிவங்கள், மாதிரிகள், குறிப்பிட்ட துறையில் சிக்கலான தொழில்நுட்பங்கள் ஆகியவையே உலக அரசியல் சூழ்நிலையைத் தீர்மானிக்கின்றன. முக்கியமான தொழில்நுட்பங்களில் சுயசார்புடன் இருப்பது சொகுசான நிலையில் நம்மை வைத்திருப்பதாகல் கூற முடியாது; ராஜதந்திர ரீதியில் நம்மை பாதுகாப்பது என்று கருத வேண்டும்.
எனவே மோடியின் பொது வாழ்வில் வெள்ளி விழா என்பதை பல்வேறு கோணங்களில் பார்க்க முடியும். ஆனால் தொழில்நுட்பம் அவரை தெளிவாகப் பார்க்க வைக்கிறது. ஆரம்பத்தில் கட்சி அமைப்பில் செயல்பட்ட போதிலிருந்து பின்னர் அரசு அமைப்பில் செயல்பட்ட போதும் டிஜிட்டல் கருவிகளை திறம்படப் பயன்படுத்தினார். சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் தொடர்பை மாற்றியமைத்தார். பின்னர் டிஜிட்டல் பொது கட்டமைப்பை ஏற்படுத்தினார். இப்போது முக்கியமான துறைகளில் சிறிய தொழில்நுட்பத்தை பெரிய அளவில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இதன் மையக் கருத்து இதுதான்: மிகப்பெரிய அளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அது ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.
இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி நாம் மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போகிறோமா என்பதில் இல்லை. மாறாக நாமே எதிர்காலத் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் இருக்கிறது. இந்த வெற்றியை அளவிடும் வழி, அடுத்த தலைமுறையை சேர்ந்த இளம் இந்தியர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தூரத்திலிருந்து பார்க்கப் போகிறார்களா அல்லது நம்பிக்கையுடன் திறமையுடன் வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னணியில் தலைமை ஏற்று நடை போடப் போகிறார்களா என்பதில் இருக்கிறது.
- நன்றி: தி சண்டே கார்டியன் (20.09.2026) Modi@25: Technology as an instrument of seva
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
- குறிப்பு: கட்டுரையாளர் பாஜகவின் தேசிய செயலாளர், செய்தி தொடர்பாளர்; (காங்கிரஸ் அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியின் மகன்).
$$$