திராவிட இயக்க வரலாறு: பகுதி -9

-தஞ்சை வெ.கோபாலன்

தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி,  பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்  தந்திருக்கிறார் அமரர் தஞ்சை வெ.கோபாலன். இது பகுதி- 9…

9. தி.மு.க. ஆட்சிக் கால நிகழ்வுகள்

1967-இல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-இல் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.என்.அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை  ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தது); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இருமொழித் திட்டத்தை அறிவித்தது;  சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார். சி.என்.அண்ணாதுரை மறைந்த பின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதுவரையிலும் தலைவர் பதவி ஈ.வே.ரா.வுக்காகக் காலியாக வைக்கப்பட்டிருந்தது.

சி.என்.ஏ. காலத்திற்குப் பிறகு

சி.என்.அண்ணாதுரை ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் நோயுற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவர் உடல்நலம் மோசமாகி இறந்தார். அவர் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டு சமாதியொன்று உருவானது.

அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சராக இருந்த நாவலர்  இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஈவெரா தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் (இதன் பின்னணியில் அன்றைய பிரபல நடிகரும் திமுக பிரசாரகருமான எம்.ஜி.ஆர். இருந்தார்). நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1969- ஜூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், நாவலர் நெடுஞ்செழியன் கட்சியின் பொதுச்செயலாளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

1971இல் தி.மு.க. ஆட்சி ஒருசில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த வெற்றியை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.  மு.கருணாநிதி,  இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார்.

தி.மு.க.வில் நடிகர்கள் பலர் உறுப்பினராக இருந்தனர். கே.ஆர்.ராமசாமி, எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன் முதலியோர். அதில் சிவாஜி திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழவே அவர் கட்சியை விட்டு நீங்கினார். பின்னர் எம்.ஜி.ஆர். முடிசூடா மன்னனாக கட்சியில் கூட்டம் சேர்க்கும் சக்தியாக விளங்கினார். கட்சியில் பொருளாளராக இருந்த அவருக்கும் தலைமைக்கும் இடையே பிளவு ஏற்பட்டு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். 1972 அக்டோபர் 14இல் அவர் புதிதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.

1975 ஜூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல் சட்டம், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும்  ஆகியவை முக்கியமானவை.

1976 அவசரநிலை காலத்தில் தி.மு.கவினர் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைத் தணிக்கை கடுமையாக இருந்தது. சில பத்திரிகைகள் தணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்பு வண்ணம் பூசி வெறும் பக்கத்தை வெளியிட்டன. நெருக்கடி நிலை காலத்தில் நாடு முழுவதும் ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் உட்பட பல பெரிய தலைவர்கள் சிறை சென்றார்கள்.  நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பிறகு நடந்த இந்திய பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து பல மாற்றங்களைச் செய்தது. எனினும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மாறி மாறி பிரதமர்கள் வந்தார்கள்.

மூன்றாண்டு காலத்திற்குள் மீண்டுமொரு பொதுத் தேர்தல் 1980இல் இந்திரா மறுபடி வென்றார். சென்னைக்கு வந்த இந்திரா நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது.

1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. 1984-இல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. ஹிந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-இல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1987 டிசம்பர் 24-இல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 ஜனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-இல் மத்தியில் இருந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த போது பதவி நீக்கம் செய்யப்பட்டது.

1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசச் சென்றபோது ஒரு இலங்கைப் போராளியால் வெடி வைத்து இறந்தார். அந்த சோக நிகழ்ச்சி நடந்த பிறகு நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. அவர் மதிமுக கட்சியை உருவாக்கினார்.

மாநில மாநாடுகள்

திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை:

முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13, 14, 15, 16ஆம் நாள்களில் சென்னை, எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில்  சி.என். அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி ஸ்டேடியம் இருக்கும் இடத்தில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது

பத்தாவது மாநில மாநாடு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15, 16 ஆம் நாள்களில் திருச்சியில் பிராட்டியூர் அருகே நடைபெற்றது

தொடக்கத்தில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. 1957இல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநில மாநாட்டில் கட்சி தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற ஓட்டெடுப்பு நடந்து, போட்டியிடலாம் என்று மக்கள் தீர்ப்பு கிடைத்ததால் போட்டியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் ஹிந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. காங்கிரஸ் எதிர்ப்பு, தேசிய எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு ஆகியவையே முக்கிய கொள்கைகளாக விளங்கின. இவற்றின் விளைவாக திமுக பெற்ற செல்வாக்கு, 1967 ஆம் ஆண்டில் காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சிபீடம் ஏற அவர்களுக்கு உதவியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது.

அண்ணா துரைக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.அவர் தமிழகத்தில் 6 முறை முதலமைச்சர் பதவி வகித்தார். 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெவ்வேறு ஊர்களில் வெற்றி பெற்றவர்.

இந்தக் கட்சியில் சினிமா நடிகர்கள் அதிகம் ஆதிக்கம் செய்தனர். அவர்களில் எம்.ஜி.ராமசந்திரன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற கதாநாயகர்களும் உண்டு. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமசந்திரனுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும், மாநாடுகள், கூட்டங்களில் இவரைக் கண்டதும் மக்கள் ஆரவாரமிடுவதும் இதர கட்சித் தலைவர்களுக்குக் குறிப்பாக மு.கருணாநிதிக்கு எரிச்சலை உண்டாக்கியது.

மேலும் இந்த கட்சியில் ஆதரவு காட்டிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன்,  கருணாநிதி எழுதிய பராசக்தி மூலம் தான் பிரபலமானார். அவர் ஒரு முறை திருப்பதி சென்று வந்ததைப் பிரச்சனையாக்கி அவரை ஒதுக்கத் தொடங்கிய பின், அவர் காமராஜ் அவர்கள் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சிக்குச் சென்று விட்டார்.

பின் எம்.ஜி.ஆர். ஒரு மக்கள் தலைவராக பாராட்டப்பட்டதால் அரசியலில் அவர் கை ஓங்கிவிடுமென்று அவரையும் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள். அப்படி நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆர்வம் காரணமாக அவர் ஒரு புதிய கட்சியைத் தோற்றுவித்து அதற்கு  ‘அண்ணா தி.மு.க.’ என்று பெயரிட்டனர். பிறகு அதை அகில இந்திய கட்சியாக அறிமுகம் செய்ய வேண்டி அதன் பெயரை அகில இந்திய அண்ணா தி.மு.க.என்று மாற்றினார். அவருடன் பல தி.மு.க. தலைவர்களும் அவர் கட்சிக்குச் சென்றுவிட்டனர்.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply