நூலக ஊழல்: எழுத்தாளர்கள் கண்டனம் – 2

-மு.வேடியப்பன், ஹரன் பிரசன்னா, துக்ளக் சத்யா, பி.ஆர். மகாதேவன். கே.எஸ்.ராதாகிருஷ்ணன், காலச்சக்கரம் நரசிம்மா, மாலன்

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தின் புத்தகக் கொள்முதலில் நடந்துள்ள மாபெரும் ஊழலால் தமிழக எழுத்துலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மேலும் சிலரது கண்டனங்கள் இங்கே ஆவணப் பதிவாக...

இங்கு நல்ல நூல்கள் கிடைக்காது.

-மு.வேடியப்பன்

கிட்டத்தட்ட ஏழு வருடத்துக்கு முன்பே (2019) தெளிவாகச் சொல்லி உள்ளேன். இது அதன் மீள்பதிவு.

  • இங்கு நல்ல நூல்கள் கிடைக்காது.
  • நல்ல நூல்கள் கிடைக்காது.
  • நூல்கள் கிடைக்காது.

கல்வியானாலும், கலை இலக்கியத் துறையானாலும் நாம் அடிக்கடி கேரளாவையும், மேற்கு வங்கத்தையும் உதாரணம் காட்டுகிறோம். மக்களால் வாங்கப்படும், வாசிக்கப்படும் நூல்களின் அளவினை வைத்தும், நூலகங்களின் பயன்பாட்டைப் பொறுத்தும் அந்தச் சமூகத்தின் அறிவு முதிர்ச்சியை நாம் ஓரளவு எடைபோட்டுப் பார்க்க முடியும். தமிழ்நாட்டையும் அப்படி யாராவது உதாரணம் காட்டுகிறார்களா என்று தெரியாது.

கடந்த பல ஆண்டுகளாகவே, நூலகங்களுக்கு புத்தகங்களைக் கொள்முதல் செய்யாமல் இழுத்தடித்த அரசு, ஒரு கட்டத்தில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குச் சேர்த்துவைத்து பேருக்காக ஒரு நூலகக் கொள்முதல் ஆணையை வெளியிடுகிறது. அதை நம்பி பதிப்பாளர்கள் பலரும் ஒவ்வொரு தலைப்பிற்கும் ரூ. 100 கட்டி, ஒவ்வொரு தலைப்பிலும் எட்டுப் பிரதிகள் என்றவகையில் முறையாக விண்ணப்பிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு பதிப்பகம் 10 புத்தகத்திற்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் 8 புத்தகங்கள் வீதம் 80 புத்தகங்களை திரும்பக் கிடைக்காத உத்தரவாதத்துடன் அனுப்பியாக வேண்டும். இத்துடன், ரூபாய் 100 வீதம் ரூ.1,000 போயே போச்சு. இதெல்லாம். நடைமுறை.

இப்போது என்ன நடக்கிறது?

லஞ்சம் வாங்குவது தவறு என்னும் சுரணையே இல்லாமல், அது நமது படிப்புக்கும் பதவிக்கும் கிடைக்கும் சன்மானம் என்ற அரிய புரிதலோடு மாறிவிட்ட அதிகாரிகள் மட்டம், தக்க தரகரை எண்ணி தவங்கிடக்கையில், சிலர் தரகுவேலை செய்வதற்காக, குளித்து முடித்து, குங்குமம், விபூதியுடன் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். நூலகத் துறை சார்ந்த அதிகாரிகளின் வாசலில் பியூன்போல நிற்கிறார்கள். அதிகாரிகளை அணுகி, எவ்வளவு நூலக ஆர்டர் போட்டால், எத்தனை சதவீதம் லஞ்சமாகக் கிடைக்கும்? என்று கணக்குப்போட்டுச் சொல்லியபடியே அதிகாரிகளுக்கு, வளைந்து வழிந்து மதிய உணவை ஊட்டிவிடுகிறார்கள். கொடுக்க வேண்டிய லஞ்சம், கிடைக்க வேண்டிய கமிஷன் இவற்றை உறுதி செய்துகொண்டபின், வளைந்த உடலை நிமிர்த்திக்கொண்டு, தங்களின் தரகு வேடத்தைக் களைந்துவிட்டு, குழுவாக இணைந்து ஒரு பாரம்பரியம் மிக்க பதிப்பாளரைப் போல வெளியே வந்து ஆளுக்கொரு திசையில் ஆள் பிடிக்கிறார்கள்.

சக பதிப்பாளர்களை (இந்த இடத்தில் சக தரகர்களை என்று படிக்க வேண்டாம்) முறையாக அணுகுகிறார். உங்களால் இத்தனை சதவீதம் லஞ்சம் தரமுடியுமா? என்று கேட்கிறார். எவ்வளவு லஞ்சம் தந்தால் எவ்வளவு நூலக ஆணை கிடைக்கும் என்று தனது லேவாதேவி அறிவையெல்லாம் கொட்டி விளக்குகிறார். முடியாது என்று சொன்னால் அவர் முட்டாள். வட்டிக்கு வாங்கியாவது கொடுக்க முன்வந்தால் அவர் பிழைக்கத் தெரிந்தவர். பொதுவாக, லஞ்சத்தை கையூட்டு என்று சொல்வது வழக்கம். ஆனால் இப்போது ஊக்கத் தொகை என்று சொல்வதாகவும் கேள்வி.

லஞ்சம் கொடுக்க முன்வந்தாலும், இங்குதான் பதிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சினை உருவாகிறது. ஒரு பதிப்பகம் ஓராண்டில் அல்லது ஒருசில ஆண்டில் 10 முதல் 50 தலைப்புகளில் புத்தகங்களைப் புதிதாக பதிப்பித்திருக்கும். இதில் நூலக ஆணை கிடைக்கும் தகுதியுடையவையாக 25 புத்தகங்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால், விற்பனை விலையிலிருந்து தோராயமாக மூன்றில் ஒரு பங்கு விலை வைத்துத்தான் அரசு கொள்முதல் செய்யும். ஒரு பதிப்பகத்திற்கு தோராயமாக பத்து லட்சம் மதிப்பீட்டிற்கு நூலக ஆணை கிடைக்கலாம். நூலக ஆணையின் தொகைக்கேற்ப, அதிலிருந்து 20 சதவீதம் லஞ்சம். பத்து லட்சத்திற்கு 2 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும். இப்போது நூலக விண்ணப்பத்துடன் அனுப்பிய மாதிரி புத்தகத்தில் உள்ளதைப்போன்ற தாள், வடிவமைப்பு, அட்டையின் தரம் என்று வைத்து அச்சடித்தால் மீளமுடியாது. என்ன செய்வது? இருப்பதிலேயே மலிவான தாள், அட்டை என்று அச்சிட்டு அனுப்பினாலும், கொடுத்த லஞ்சம், அச்சு, ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்திற்கும் அனுப்பிவைக்கும் செலவு என்று கணக்கிட்டுப் பார்த்தால், மூன்று வருடம் கழித்து கையில் ரூ. 50 ஆயிரம் நின்றால் பெரிய விஷயம்.

’வெறும் 50 ஆயிரத்திற்கு இந்த ரிஸ்க் எடுக்கணுமா?’ என்று பதிப்பாளர் யோசிக்கிறார். அலைந்து திரிந்து ஆர்டர் பிடித்துவருவதாகச் சொல்லிவிட்டு,  ‘கமிஷன்’ உலகத்தில் மிதக்கும், தரகர் விடுவாரா? மாற்று யோசனையை முன்வைப்பார். அதாவது, ‘வெறும் 10 லட்சத்தில் ஆர்டரை வாங்கினால்தானே இந்தப் சொற்ப ஐம்பதாயிரப் பிரச்சினை? இதுவே, ஒரு கோடிக்கு ஆர்டர் வாங்கினால்?’ என்று கேட்பார். பதிப்பாளர் யோசிப்பார். ஆஹா… ஒரு கோடிக்கு ஆர்டர் வாங்கினால், பத்து லட்சத்திற்கு ரூ. 50 ஆயிரம் என்ற லாபக்கணக்கு, ரூ. 2.5 லட்சமாக மாறிவிடும். ரூ. 2.5 லட்சத்தை 10ஆல் பெருக்கினால் ரூ. 25 லட்சம் லாபமாக நிற்கும். பதிப்பாளர் கணக்குப் போட்டுப் பார்த்து நிம்மதி அடைகிறார். ஆனால் கூடவே இன்னொரு குழப்பம். நமக்கு, ஒரு கோடிக்கு ஆர்டர் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அனுப்புவதற்கு நம்மிடம் புத்தகம் வேண்டுமில்லையா?.

அதெல்லாம் ரொம்ப ஈஸி:

ஓராண்டில் குறைந்த புத்தகங்களையே வெளியிடும் ஒரு பதிப்பாளருக்கு கோடிகளில் நூலக ஆணை கிடைத்தால் அவரால் எப்படி அவ்வளவு புத்தகங்களை அனுப்ப முடியும்? இது நமக்குத்தான் முக்கியமான கேள்வி. ஆனால் நமது தரகர் அநாயசமாக ‘அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கள்’ என்கிறார். (தரகர் என்பவரும் சக பதிப்பாளர்தான் என்பதை இங்கே மீண்டும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்).

நமது தரகர் எப்போதும் கையில் உள்ள பையில் ஒரு டிவிடி-யை தயாராக வைத்திருப்பார். குறைந்த விலைக்கு அந்த டிவிடி-யை பதிப்பாளருக்குக் கொடுத்து உதவுவார். அதில் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வேறு பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களின் முழுமையான வடிவமைப்பு ஆகியவை தயாராக இருக்கும். பதிப்பாளர் செய்ய வேண்டியது.. முன்அட்டை மற்றும் உள்ளே உள்ள முதலிரண்டு பக்கங்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதாவது, புத்தகத்தின் பெயர் சத்ய சோதனை என்று இருந்தால் இவர் அதை  ‘சத்யம், சோதனை’ என்று மாற்றிப்போட்டு அச்சடிக்க வேண்டும். பிறகு அதே புத்தகத்தை ‘காந்தி நீந்திக் கடந்தது சத்யமா? சோதனையா?’ என்று மீண்டும் தலைப்பை மாற்றி குறிப்பிட்ட அளவு பிரதிகளை அச்சடிப்பார். இப்படியே அட்டைகளை மாற்றி மாற்றி ஐந்தாறுமுறை அச்சடித்த பிறகு, கொத்தமல்லி, கருவேப்பிலையைத் தூவி இறக்கினால் நூலக ஆணைக்கான புத்தகங்கள் தயார்.

கடந்த பல வருடங்களாக நூலகத்திற்கு அனுப்பிவைத்த அதே புத்தகத்தை, இந்த பாணியில், தலைப்புகளை மாற்றி மாற்றி அச்சடித்து அனுப்பி வைப்பார்.

எல்லாம் சரிதான். குறிப்பிட்ட பதிப்பகங்கள் மட்டும் கோடிகளில் நூலக ஆணை பெறும்போது மற்ற பதிப்பாளர்களுக்கு சந்தேகம் வராதா? கேள்வி கேட்க மாட்டார்களா? கேட்பார்கள். அதாவது, ஏன் நியாயமாக நடக்கவில்லை என்று நியாயம் கேட்க மாட்டார்கள். அநியாயத்தில் தங்களுக்கான பங்கில்லை என்றால், இதென்ன அநியாயம்? என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். ஆனால் ஒரு கோடிக்கான ஆர்டரையும் ஒரே பெயரில் வாங்காமல், நூலக ஆணை பெறுவதற்காக ஒருவரே ஐந்தாறு லெட்டர் பேடு பதிப்பகங்களைத் தொடங்கி, அதன்பேரில் வாங்கும்போது இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிகிறது.

இந்த மைய நூலக நீரோட்டத்தில், பதிப்பாளர்கள்தான் நூலக ஆணை பெறமுடியும் என்றில்லை. பிரிண்டர்கள், பைண்டர்கள், டிடிபி செய்பவர்கள் என யார் வேண்டுமானாலும் ஆணை பெறலாம். அதிகாரிகளுக்குத் தேவை-  புத்தகங்களின் பட்டியலும், அதற்கு இணையான பணமும்தான். இரண்டும் சமமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. லஞ்சம் வாங்குவதிலும் ஒரு நேர்மையைக் கடைப்பிடிப்பார்கள்.

எதில் அதிக கவனம் தேவை?

அதிகமும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட புத்தகம், அதன் பக்க அளவு கருதியும், படிப்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அதை 3 தொகுதிகளாக வெளியிட்டிருப்போம். அதில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே நூலக ஆணை கிடைக்கும். மூன்றாம் தொகுதிக்கு கிடைக்காது. ஏனென்றால் நீங்கள் கொடுத்த பணத்தின் அளவுக்குள் மூன்றாம் தொகுதி அடங்கி இருக்காது. அதனால், மூன்றாம் தொகுதி கடைசிவரை இடம்பெறாமலே புத்தகங்களை அனுப்ப வேண்டும். நூலகத்தில் முதல் இரண்டு தொகுதிகளைப் படித்த ஒரு வாசகன், மூன்றாம் தொகுதியைத் தேடினால் கடைசி வரை கிடைக்காமல்போக இதுவே முக்கியக் காரணம்.

சரி, லஞ்சம் கொடுத்தோம், நூலக ஆணை கிடைத்தது. சாணித்தாளில் அச்சடித்து சொந்தச் செலவில் ஒவ்வொரு மாவட்டத்தின் நூலகத்திற்கும் அனுப்பியாகிவிட்டது. வேலை முடிந்தது. பணம் வந்துவிடுமா?

சோதனைக்காலம் ஆரம்பம்:

ஒவ்வொரு பதிப்பாளர்களுக்கும் இதுதான் சோதனைக்காலம். எல்லாம் அவன் செயல்தான்.

தமது நூலகத்திற்கு வந்துள்ள நூல்களைப் பிரித்து, தரவுகளை எழுதிக்கொண்டு, கணக்கு முடித்து, பதிப்பாளருக்கு காசோலை அனுப்பி வைக்கவேண்டியது மாவட்ட நூலகரின் கட்டுப்பாட்டில் வருகிறது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காசோலைகள் வந்துசேர 3 முதல் 6 மாதகாலம் ஆகலாம். இது இப்போது இரண்டு மூன்று ஆண்டுகள்வரை ஆகிறது. சில மாவட்டங்களில் கடைசிவரை வராமல் போவதும் உண்டு.

எல்லா நடைமுறை உண்மைகளையும் தெரிந்துவைத்துள்ளதால், மாவட்ட நூலகர், வந்திருக்கும் புத்தகக் கட்டுகளைப் பிரிக்காமல் அப்படியே வைத்திருப்பார். பதிப்பாளர் சென்னையிலுள்ள முதன்மை அலுவலரை அணுகுவார். அவர் உடனடியாக மாவட்ட நூலகருக்குப் பேசுவார். பேசினால் நடந்துவிடுமா? ‘உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?’ மாவட்ட நூலகர் திருப்பிக் கேட்பார்தானே? வேறுவழியில்லை. வாங்கிய பணத்துக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கும். ஓடோடிப்போய் மாவட்ட நூலகரிடம் நிற்பார். சென்னை எலி, தமிழ்நாட்டின் கடை கோடியிலுள்ள ஒரு மாவட்ட நூலகத்தில் வைக்கப்பட்ட பொறியில் மாட்டிக்கொண்டு முழிப்பதை இங்கே நாம் பார்க்கலாம். ஒரே வழிதான். சென்னை அதிகாரியின் உத்தரவுப்படி, மாவட்ட நூலகருக்கு ஒரு 5 % வெட்டியவுடன், பதிப்பாளரின் புத்தகம் புத்தூர் கட்டுபோல மிக லாவகமாக பிரிக்கப்படும். வேலை எளிதாக முடித்துக் கொடுக்கப்படும்.

லஞ்சம் கொடுக்காமல் நூலக ஆணையே கிடைக்காதா?

கிடைக்கும். இப்படி கேள்வி கேட்கும் பதிப்பாளர்களுக்கு அல்லது எந்தெந்த பதிப்பகங்களின் வாய்களை அடைக்க வேண்டுமோ, அவர்களின் வாயை அடைத்து மூடும் அளவுக்கு திருப்திகரமான ஒரு ஆணையைக் கொடுப்பார்கள். அவர்களும் அப்படியே அமைதியாக புத்தகங்களை அச்சடித்து நூலகங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். குறுக்குவழியில் நூலக ஆணைபெற்று தவறான புத்தகங்களை நூலகங்களுக்கு அனுப்பும் சுயநலவாதிகளைக் காட்டிலும், மக்களுக்கானவர்களாக, இலக்கியத்தின் அடையாளமாக தங்களை முன்னிறுத்திக்கொண்டு, பாரம்பரியம் பேசும் பதிப்பாளர்கள், லஞ்சம் கொடுப்பதில்லை என்றாலும், தங்களுக்குக் கிடைத்தால்போதும் என்ற அறம்பிறழ்ந்த போக்குதான் உண்மையான சாபக்கேடு.

எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்?

தங்களின் படைப்புகளில் தவறுதலாக ஒரு எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டால் தமிழையே கொலை செய்துவிட்டதாக அறச்சீற்றம் கொள்ளும் எழுத்தாளர்கள், ஒரு பதிப்பகத்தில் தங்களின் புத்தகம் என்ன மாதியான அட்டைப்படம், எந்தத் தாளில், எப்படி வர வேண்டும் என்றெல்லாம் பாடமெடுக்கும் எழுத்தாளர்கள், தங்களின் அதே படைப்பு சாணித்தாளில் முறைகேடான வழிகளில் அச்சாகிச் சென்று, நூலகங்களில் மூன்றாண்டுக்குள் மக்கிப்போவதுபோன்ற இழிசெயலை எங்கேயேனும் கண்டித்திருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தால் ஏமாற்றமே. ஆனாலும் குறுக்குவழி மேவிய சாணித்தாளச்சுக்கு உரிமைத்தொகை கேட்டு அறச்சீற்றத்தைத் தொடர்வார்கள்.

யாழ் நூலகம் எரிந்தபோது மொழியின் முதுகெலும்பு உடைந்துவிட்டது என்று கதறினோம். ஆனால் இன்றைய தமிழகத்திலுள்ள நூலகச் சூழலைப் பார்க்கும்போது, தமிழை, அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை, எதிர்கால நீட்சிக்கான விதைத் தானியங்களைப்போல சேர்த்துவைக்க வேண்டிய நூலகங்களில் இப்படி குப்பைக் கூளங்களாக சேர்த்து வைத்துவிட்டு பல்லாயிரமாண்டு பாரம்பரியம், ஈராயிரம் ஆண்டுக்கு முந்தைய இலக்கிய வளம் என்றெல்லாம் பேசித் திரிவது வெட்கக்கேடானது.

தமிழகத்தில் வெளியான ஒரு நூல், அதன் தரத்தைப் பொறுத்து, அடுத்த ஒரு மாதத்தில் சிங்கப்பூர் நூலகத்தில் படிக்கக் கிடைக்கிறது. ஏதேனும் ஒரு நூலில் சிறிய அளவில் அச்சு மங்கலாக இருந்தாலோ, முனை மழுங்கி இருந்தாலோ உடனடியாக அதை நிராகரிக்கிறார்கள். அதோடு, தரமற்ற அந்த நூலினை அனுப்பிய நூலகக் கொள்முதல் ஏற்றுமதியாளருக்கு தண்டத் தொகையும் விதிக்கிறார்கள். அதேபோலவே, தமிழகத்தில் வெளியாகும் பெரும்பாலான நூல்களை கனடாவிலுள்ள நூலகத்தில் மூன்று மாதங்களுக்குள் எடுத்துப் படிக்கலாம். உலக நாடுகள் இப்படி தமிழ் நூல்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, இங்கு அதன் வேர்களில் வெந்நீர் ஊற்றுகிறோம் என்பதே வெளிப்படை.

‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்!

இது வெறும் வரிகளல்ல, நாட்டை, மொழியை ஆழ்ந்து நேசித்த ஒரு கவிஞனின் மந்திரச் சொல். அறம் தவறும்போது மந்திரமே சாபமாகும்…

  • குறிப்பு: திரு. மு.வேடியப்பன், எழுத்தாளர், பதிப்பாளர்; சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் உரிமையாளர். இந்தப் பதிவு, 2019இல் எழுதியதன் மீள்பதிவு என்று எழுத்தாளரே குறிப்பிட்டிருக்கிறார்.

$$$

வெளிப்படைத்தன்மை என்பது என்ன?

-ஹரன் பிரசன்னா

நூலக ஆணையில் கடந்த திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டது என்று அனைவரும் அப்போது எழுதினார்கள். அது தவறு என்று நான் அப்போதே சொன்னேன்.  ‘பேசு தமிழா’ யூ டியூப் சானலில் ஒரு பேட்டியில் இது குறித்துத் தெளிவாகச் சொன்னேன்.

இந்த அரசு செய்தது, நூலக ஆணைக்காக நூல்களை அப்ளை செய்வதை ஆன்லைனில் கொண்டு வந்தது. வெளிப்படைத்தன்மை என்பது ப்ராசசை மாற்றுவது அல்ல, யார் யார் என்னென்ன புத்தகங்களைப் பதிப்பித்தார்கள், என்ன என்ன புத்தகங்களை நூலகத்துக்குச் சமர்ப்பித்தார்கள், எந்தெந்த நூல்களுக்கு ஆணை வழங்கப்பட்டது, எந்தெந்த நூல்களுக்கு வழங்கப்படவில்லை என அனைத்தையுமே ஒருவர் தெரிந்து கொள்ளும் சுதந்திரம் இருக்க வேண்டும். அதாவது ஆர்டிஐ  – ரை டு இன்ஃபர்மேஷன் அல்ல, நாமாகவே தெரிந்து கொள்ளும் சுதந்திரம், right to know.

எப்படி ஒரு தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் நிற்கிறார்கள், எத்தனை பேர் ஏற்கப்பட்டார்கள், எத்தனை பேர் நிராகரிக்கப்பட்டார்கள் என்று நாம் யாரிடமும் கேட்காமல் தெரிந்து கொள்கிறோமோ, அதுபோல.‌ இது நிகழாத வரை வெளிப்படைத்தன்மை நூலகப் புத்தக கொள்முதலில் வந்தது என்று சொல்லவே முடியாது.

மாறாக கடந்த திமுக அரசு செய்தது என்னவென்றால், இந்த பிராசஸை எளிமையாக்கியது. அது மிகப்பெரிய முன்னெடுப்பு, அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் அதனாலேயே அதில் ஊழல் நடைபெறாது என்று நம்ப இடமில்லை. இதை நான் எனது பேட்டியிலேயே தெளிவாகச் சொல்லி இருந்தேன். இன்று கண்முன்‌ காண்கிறோம்.

***

“புத்தகங்களைப் பரிந்துரைக்கும் குழுவில் நான் இருந்தேன்” என்று ஆளாளுக்கு வரிசையாகச் சொல்லும் பொழுது, இவர்களைத் தாண்டி எப்படி கம்யூனிசமல்லாத, திராவிடமல்லாத புத்தகங்கள் நூலகங்களுக்குள் வரும் என யோசித்துப் பாருங்கள். இங்கு மாற்றுக் குரலுக்கு இடமே கிடையாது. ஒரே குரல் தான், அது திக, திராவிட, கம்யூனிசக் குரல் மட்டுமே. மாற்றுக் குரல்களும் அவர்கள் மட்டுமே. இப்போது நடக்கும் ஊழல் மற்றும் பிற சண்டைகளும், இந்தக் கருத்துகளுக்குள்ளாகவே. மற்றவர்கள் யாரும் ஒரு பொருட்டே அல்ல.

***

சூட்டோடு சூட்டாக இதற்கும் சேர்த்து ஒரு பதில் கண்டுபிடித்து விடுங்கள்.  ‘தேன் சிட்டு, ஊஞ்சல்’ என்ற இதழ்கள் எல்லாம் எப்போதிருந்து கொண்டுவரப்பட்டன? எந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன? இந்தப் பத்திரிகையை நடத்தியது யார்? ஆசிரியராக இருந்தது யார்? ஆசிரியரை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட்டது? இதில் கட்டுரை எழுதியவர்கள் யார் யார்? அவர்களுக்கு என்ன பணம் தரப்பட்டது? அல்லது மாணவர்களுக்காக ஒரு பைசாவும் வாங்காமல் எழுத்தாளர்கள் எழுதித் தந்தார்களா? எப்படி கட்டுரை எழுத வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? பொதுவில் அறிவித்து யார் வேண்டுமானாலும் கட்டுரை அனுப்பலாம் என்று சொல்லி அந்தக் கட்டுரைகளை தேர்ந்தெடுத்தார்களா? தனியார் பள்ளிகள் இந்த‌ இதழ்களை வாங்கினவா? எத்தனை தனியார் பள்ளிகள் வாங்கின? எத்தனை இதழ்கள் மாதந்தோறும் அச்சிடப்பட்டன? எந்த இடத்தில் அச்சிடப்பப்பட்டது? ஒரு இதழுக்கு எவ்வளவு ரூபாய் செலவானது? அதேபோல லேஅவுட் செய்ய எவ்வளவு பணம் யாருக்கு எப்போது எப்படித் தரப்பட்டது? இந்த இதழ் இப்போதும் வருகிறதா?

இப்படி எல்லாம் பல சந்தேகங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டு விட்டால் நல்லது.

இதில் எனக்கு எதுவுமே தெரியாது. பார்வையாளராக இதெல்லாம் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்ற அர்த்தத்தில் மட்டும் தான் இதை எழுதுகிறேன். மிக நேர்மையாக நடந்து ஊழலே நடைபெற்றிருக்காவிட்டால், அதற்காக அந்த அரசைப் பாராட்டத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றேன். எனது ஆசையை நிறைவேற்றி விடுங்கள்.

***

கோயமுத்தூர் பெரியார் அறிவுலகம் மாட்டிக்கொண்டது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருச்சி, தென்காசி போன்ற ஊர்களில் உள்ள நூலகங்களுக்கும் ஆணை இதே சமயத்தில்தான் வழங்கப்பட்டது. இன்னும் கூடுதலாகச் சில ஊர்கள் இருக்கலாம். அந்த ஊர்களில் உள்ள புத்தங்களையும், நூலக ஆணைகளையும் சோதிக்க வேண்டும்.

பொதுவாகத் தரப்படும் மையப்படுத்தப்பட்ட நூலக ஆணைகளுக்கான சமர்ப்பிப்பு ஆன்லைனில் நடந்தது. அதில் ஓரளவுக்கு நியாயமான நடைமுறை இருந்தது. ஆனால், அங்கேயும் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டனவா என்பதையும் சோதிப்பது நல்லது.

அதாவது இரண்டு வகை செயல்பாடுகள் உள்ளன. நியாயமான புத்தகங்களுக்கு ஆர்டர் தருவது. அது நடந்திருக்கும். கூடவே அநியாயமான புத்தகங்களுக்கும் ஆர்டர் தருவது. அது நடந்திருக்கிறதா என்று முழு சோதனை அவசியம்.

இதை யாராவது தவெக அரசுக்குச் சொல்லுங்கள்.

  • குறிப்பு: திரு. ஹரன் பிரசன்னா, எழுத்தாளர், பதிப்பாளர்; சுவாசம் பதிப்பக உரிமையாளர். இவரது முகநூல் பதிவுகளின் தொகுப்பே இது.

$$$

கற்பனை பதிப்பகங்கள், கற்பனை எழுத்தாளர்கள்…

-துக்ளக் சத்யா

இப்படியெல்லாம் கூட ஊழல் செய்ய முடியுமா என்று அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்தியாவுக்கே வழி காட்டும் ஊழல்.

பதிப்பகங்களும் நூலாசிரியர்களும் உண்மையில் இருந்தால் அவர்களுக்கு பணம் தர வேண்டும் என்பதால், கற்பனையிலேயே உருவாக்கியுள்ளனர்.

குறிப்பிட்ட இரு பதிப்பகங்கள் மட்டும்தான் போலியா? இன்னும் பல போலிகள் உள்ளனவா? என்று இனிமேல்தான் தெரிய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட போலி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் A.I. ஆல் உருவாக்கப்பட்டன என்று தெரிகிறது. அனைத்து புத்தகங்களுக்கும் ஆசிரியர் A.I. என்று குறிப்பிட்டிருந்தால் கொஞ்சம் நேர்மையான ஊழலாக இருந்திருக்கும்.

பதிப்பகங்கள் தேர்வு, புத்தகங்கள் கொள்முதல், பரிந்துரைக்குழு நியமனம் எல்லாம் சென்ற ஆட்சியிலேயே நடந்து முடிந்துள்ளது.

நூலகத்தைத் திறந்து வைத்ததும், பெறப்பட்ட நூல்களில்  ‘சீல்’ வைத்ததும் மட்டுமே இந்த ஆட்சியில் நடந்திருக்கிறது.

நூலகத்தைத் திறந்து வைப்பதில் என்ன பெருமை என்று, முன்னாள் முதல்வர் கேட்டார். ஊழல் செய்வதுதான் பெருமை போலிருக்கிறது.

பரிந்துரைக் குழுவில் இடம் பெற்ற எழுத்தாளர்களுக்கு ஊழல் விவரம் தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ஒரு கௌரவத்திற்காக குழுவில் இடம் பெற சம்மதித்திருக்கலாம்.

ஆனால், ‘ஒரே பதிப்பகத்திடமிருந்து இத்தனை புத்தகங்கள் வாங்குவதா? ஏன் இப்பதிப்பகங்களுக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்?’ என்று அவர்கள் கேட்டிருக்க வேண்டும். எதற்கு வம்பு என்று சும்மா இருந்து விட்டார்களோ என்னவோ?

ஆனால், பெருமாள்முருகன் அவர்களுக்கு அப்போதே கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கலாம். அதனால்தான் முதல் வேலையாக நூலகம் சென்று ஊழலை வெளிப்படுத்தியுள்ளார். பாராட்டுக்குரிய செயல். தமிழக அரசின் விருதுக்கு தகுதியானவர்.

இலக்கியத்துக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஊழல் ஆசாமிதான் இப்புத்தகங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

நாலடியார் என்று ஒரு நபர் இருந்தார் என்பது அவரது கற்பனை. நல்ல வேளை, இவர்தான் நாலடியார் என்று ஃபோட்டோ எதையும் போடவில்லை.

பாரதியார் ஒரு சினிமா வசனகர்த்தா என்று குறிப்பிடவில்லை. மற்ற எல்லா கோமாளித்தனங்களும் அவரது கற்பனையில் உதித்துள்ளன. பொய்களுக்கும் உளறல்களுக்கும் குறைவில்லாத நூல்கள்.

ஊழல் நரகாசுரனை வதம் செய்ய கடவுள் அவதாரம் செய்யும் வரை விமோசனம் இல்லை. அது வரை காத்திருப்போம்.

  • குறிப்பு: பத்திரிகையாளர் திரு. துக்ளக் சத்யா அவர்களின் முகநூல் பதிவு இது.

$$$

கட்டம் கட்டப்படுவோர் மட்டும் குற்றவாளிகள் அல்ல!

-பி.ஆர்.மகாதேவன்

-1-

இதுதான் ஃபர்ஸ்ட்; இதுக்கு முன்னால் நடந்திருந்தாலும்.

என்னவோ கன்னிமாரா உள்ளிட்ட நூலகங்களில் இருக்கும் நூல்கள் எல்லாம் சுத்தமான செக்கில் ஆட்டியதுபோலவும், இந்த எளிய ஜென்ஸி பதிப்பகம் மட்டும் திராவிடத் தற்குறி என்பதுபோலவும் ஒரு தோற்றம் கட்டமைக்கப்படுகிறதா?

குறளி வித்தை காட்டறான்… மயங்கிடாதீங்க மக்களே….

நாலாம் வர்ணத்தினரெல்லாம் வேசி மகன்கள் என்று சொன்னதாகவும்… 2000 ஆண்டுகளாக பிராமணர்கள் யாரையும் படிக்கவிடவில்லை என்றும், ஆரியர்கள் வெளியில் இருந்து வந்து திராவிடர்களை விரட்டினார்கள் என்றும்… பிரிட்டிஷாரின் அரசில் மூன்று சதவிகித பிராமணர் 60 % இடங்களைப் பிடித்தற்கு வேலை கொடுத்த கிறிஸ்தவ முதலாளி அல்ல; வேலை பார்த்த குமஸ்தாவே காரணம் என்றும்… அன்றும் நில உடமை, வணிகம், மாடமாளிகை, அதிகாரம், அந்தஸ்து என எல்லாம் கைவசம் இருந்த மூவர்ணத்தினரெல்லாம் முட்டாள்கள், கோழைகள், ஏழைகள், சுயமரியாதை இல்லாதவர்கள் என்றும்… ஆதி முதல் அரசராகவும் இருந்த அடிமட்ட ஜாதியினர் எல்லாம் அடிமைகளாகவே இருந்தனர் என்றும்… கொள்ளையடிக்க வந்த சர்வாதிகார வெள்ளையனே கல்வியும் மருத்துவமும் ஜனநாயகமும் நாகரிகமும் தந்தான் என்றும்… அரசு மற்றும் அதிகாரவர்க்கத்தைக் கைப்பற்றியபடியே அரசையும் அதிகாரவர்க்கத்தையும் எதிர்த்து காகிதப் புரட்சி செய்வதே கார்ல் மார்ஸின் கொள்கை என்றும்…

எழுதிக் குவித்திருப்பவையெல்லாம் மட்டும் ஏதோ அறிவார்ந்த நூல்கள் போலவும், கீழடியில் காளைமாட்டுச் சிலை கிடைத்திருப்பது மட்டும் பெரிய திருட்டு-வீழ்ச்சி என்றும்…. சொல்வதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

இது அங்கீகாரம் இல்லா முட்டாள்தனம்.

அது அங்கீகாரம் பெற்ற முட்டாள்தனம்.

அந்தப் புத்தகங்களில் கூட ஏகப்பட்ட ஃபிராடு பதிப்பகங்கள், போலி எழுத்தாளர்கள் எல்லாம் உண்டு. அவற்றிலும் இதுபோலவே ஊழல்கள், மலினங்கள், சுரண்டல்கள், சுருட்டுகள் எல்லாம் உண்டு. என்ன… இண்டலெக்சுவல். ஆர்ட்டிஸ்டிக், ஹிஸ்டாரிக், சோஷியோ பொலிடிக்கல், சோஷியல் ஜஸ்டிஸ் என பட்டுக்குஞ்சல ஜார்கன்கள் அந்த வெளக்கமாருகளுக்கு உண்டு.

அதனால், இது ஃபர்ஸ்ட்தான்;  ஆனால் இதற்கு முன்னாலும் நிறைய்ய நடந்திருக்கு மக்களே.

-2-

கோவை ஈ.வெ.ரா. அறிவுலக நூலக ஊழலில் அகல் விளக்கு பதிப்பகத்தை மட்டும் கட்டம் கட்டிக் கண்டிப்பதென்பது, கைக்குக் கிடைத்த அப்பாவி பேரில், தீர்வு தெரியாத கேஸ்களையெல்லாம் எழுதி முடிப்பதற்கு சமமானது.

அந்தப் பதிப்பகம் மொத்தமே 17 லட்சம் ரூபாய்க்குத் தான்  ‘குட்ஸ்’ சப்ளை செய்திருக்கிறார்கள்.

ஈ.வெ.ரா. அறிவுலகம் என்றதும், அதற்குத் தகுந்த வகையில் புத்தகங்கள் ரெடி செய்திருக்கிறார். அதுவும் ஏழே நாளில் டெலிவரி செய்ய வேண்டும் என்றதும், ஓவர் டைம் எல்லாம் பார்த்து, வெட்டி, ஒட்டி, தைத்து ரெடியான  ‘பீஸ்’களை சப்ளை செய்திருக்கிறார்.

இந்த ஈரவெங்காய ஆர்டருக்கு இது போதும் என்று அவர் முடிவு செய்ததில் தவறே இல்லை. அவருக்கு அதிகபட்சம் 20 % லாபம் கிடைத்தால் சுமார் ரூ. 3.4 லட்சம் கிடைக்கும். நூற்றுக்கணக்கான டைட்டில்கள்… ரகத்துக்கு 10-15 ஐட்டம்கள் என பி.ஓ.டி. அடித்து முடித்து விட்டிருக்கிறார்.

முகநூலில் ரெண்டு முறை ஸ்க்ரால் செய்து பார்க்கவே அலுத்துக்கொள்ளும் இந்தத் தலைமுறையில் யார் 300 பக்க புத்தகத்தையெல்லாம்  தொடப்போகிறார்கள், கவரைக் கூடப் பிரிக்கப் போவதில்லை என்ற உத்தரவாதம் தரப்பட்டதையடுத்து, தன்னளவிலானதைக் கரம்பியிருக்கிறார்.

மொத்த  ‘குட்ஸை’யும் டெலிவரி செய்யவில்லை; தேர்தலுக்குப் பின் ஒரு  ‘லாட்’ அனுப்ப வேண்டியிருந்திருக்கிறது போலிருக்கிறது.

புதிய முதல்வருக்குப் பிடிக்குமே என்று சில வசீகரமான பெயரில் சில புத்தகங்கள் தயார்செய்து தந்திருக்கிறார்.

அவர் உண்மையில் ரொம்பவே பாவம். இரண்டாவது இன்டர்வியூவில், பளிச்னு விபூதி துலங்க வந்துவிட்டார். அரேபிய நீதியைப் போல, வர்றவன் போறவன் எல்லாம் கல்லெடுத்து எறிவது தவறு.

ஓரளவுக்கு இப்போது பலரும் திமுகவைக் குறிவைத்துத் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் தவெக அமைச்சர் இறங்கி அடிக்கிறார்.

ஈ.வெ.ரா. நூலகத்துக்கு வேலை மெனெக்கெட்டு வந்து ரெஃபரன்ஸ் தேடிப் படிச்சு எக்ஸாம் எழுதி பாஸாகப் போகும் எளிய மாணவர்கள் பற்றியெல்லாம் சிலிர்த்துக் கொள்கிறார்கள். இந்த நூலகங்கள் எல்லாம் அப்படி ஒன்றும் இணைய வசதியோ, பிற கணினி, மின் வசதிகள் குறைவாக இருக்கும் காட்டுக்குள்ளோ மலைக்குள்ளோ நடக்கவில்லை. எல்லாம் வெல் கனெக்டட், வெல் டெவலப்டு மாவட்டங்கள், தலைமையங்கள் என… கல்யாண விருந்துபோல பால் பாயாசம் சாப்பிட முடிஞ்சவருக்கு பஞ்சாமிர்தம் கொடுப்பது போன்றதுதான்.

இன்றைய டிஜிட்டல் உலகில் யாருமே எந்தப் புத்தகத்திடமிருந்தும் தள்ளியிருக்கவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால், 100 காலி இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் எழுதும் தேர்வுக்குத்தான் இந்த லொடுக்கு நூலகங்கள் அறிவுக் கண் திறந்துவிடப்போகின்றனவா? இளைய தலைமுறையின் எதிர்காலமே போச்சே என்று பிளிறுகிறார்கள்.

தேர்வு எழுதும் லட்சம் பேரில் பாஸாகும் ஆயிரம் பேரில் ஓரிரு வருட சம்பளப் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க முடிந்தவருக்குத்தான் வேலை கிடைக்கப் போகிறது. அதிலும் தலித் பெயரில் க்ரிப்டோக்களுக்குத்தான் அதிகம் போகப்போகிறது. எல்லா ஜாதிகளிலுமே க்ரிப்டோக்களுக்குத்தான் போகப்போகிறது.

எங்களுக்கும் உலக நாடுகளுக்கும் தான்போட்டியே… சும்மா பேருக்கு இந்தியால ஒட்டிக் கொண்டிருக்கிறோம் என்று கொடுக்கப்பட்ட பில்டப்களை, அகல் விளக்கு பதிப்பகம் கில்லி போல சொல்லி வைத்துக் காலி செய்திருக்கிறது.

குறிவைச்சா… இரை விழணும்.

விழுந்திருச்சு.

உண்மையில் தாமரை மணாளர்கள், த்ரிஷா விஜய், ஸ்டாலின் கருணாநிதி என பாரபட்சம் பார்க்காமல் வைத்துச் சொருகியிருக்கிறார்கள்.

அதிலும் திராவிட மாடல் ஆட்சியில் இதைச் செய்துகாட்டி, இந்த லகுடபாண்டிகளை வெகு துல்லியமாக  ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ செய்திருக்கிறார்கள்.

என்னையறியாமலேயே உங்களைப் பிடிச்சுப் போச்சு சார்.

நீங்க தூக்கினது யானையை.. அடிச்சது திருட்டு ராஜாவை… கான்ஃபிடெண்டா காலரைத் தூக்கிவிட்டுக்கோங்க சார்.

  • குறிப்பு: எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் அவர்களின் முகநூல் பதிவுகள் இவை.

$$$

ஆர்டிஃபீஷியல் அறிவு ஜீவிகள்

-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

இன்றைக்கு நூலக ஊழல்கள் வெளிவந்து வைரல் ஆகிக் கொண்டு இருக்கின்றன.  கடந்த ஆட்சியின் போது ஜெயரஞ்சன் திமுகவில் திட்டக் குழுத் தலைவராக இருந்தார்! உயிர்மைப் பத்திரிகை ஆசிரியராக இருந்த மனுஷ்ய புத்திரன் தமிழ்நாடு நூலக ஆணைக் குழுவின் தலைவரானார். அப்பணசாமி, சண்முகம் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின்  உறுப்பினர்களோடு நியமிக்கப்பட்டனர்! அதைத் தயாரித்துத் தரும் பாடநூல் நிறுவன முதலாளி. அதற்கடுத்து திருமாவேலன் கலைஞர் தொலைக்காட்சி தலைமைப் பொறுப்பாளர்!

கவிஞர் நாவலாசிரியர் அழகிய பெரியவன் திமுகவிற்கு முட்டுக் கொடுக்கும் ஆதரவாளர்! தமுஎகச-வைச் சேர்ந்த ஆதவன் தீட்சண்யா இப்பொழுது சிபிஎம் எம்.பி.யாக இருக்கும் சு.வெங்கடேசன்  போன்ற இடதுசாரிகள் திமுகவுக்கு முட்டுக் கொடுத்துவிட்டு இப்போது தவெகவிற்கும் முட்டுக் கொடுக்க முயல்கிறார்கள்!  புதுச்சேரியைச் சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பின நாடாளுமன்றத்திற்கு உள்ளே வந்தவர். அதன் பிறகு ஆழி செந்தில்நாதன்  திமுக மூலம்   நூல்களை அதிகம் வெளியிட்டு வந்தவர்! புத்தகக் கண்காட்சியில் மொழிபெயர்ப்பு அரங்கத்தை உருவாக்கி தமிழருடைய எல்லா புத்தகங்களையும் ஆங்கிலத்தில் வெவ்வேறு மொழியில் மொழிபெயர்க்கப் போவதாக ஒப்பந்தங்கள் போட்டு பேரளவு அரசு பணத்தைப் பயன்படுத்தியவர்!  ஒதுக்கிய பணத்தில் பங்கெடுத்துக் கொண்டு கிழக்கு ஆசியா நாடுகளின் இலக்கிய தொடர்பாளராக வலம் வந்த ரேடியோ துறை ஒலிவண்ணன் போன்றவர்கள் எல்லாம் திமுகவிற்கு முட்டுக்கொடுத்து அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்துவதாகச் சொல்லி சூழலைப் பரபரப்பாகியவர்கள்! இவர்களைப் போல பலரை நியமனம் செய்ய வேண்டாம் என்று அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சொன்னேன். அன்று திமுகவில் இருந்தேன்.

இவர்கள் போல பலர் இந்த நூலக அறிவுத்துறையில் செயல்பட்டவர்கள் இன்றைக்கு  கோவை பெரியார் நூலகத்தில் நடந்த ஊழல்கள் குறித்து ஏன் ஏதும்  பேசாமல் மௌனமாய்  இவ்வளவுக்கு பின்னும் இருக்கிறார்கள்?  இதையெல்லாம் அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? வழக்குத் தொடுக்க மாட்டார்களா? இவர்கள் போல பலர் தானே இதற்கு ஆதாரமாக இருந்தவர்கள்? இவர்கள் அவசியம்  தங்களது கருத்துகளைச் சொல்ல வேண்டுமா இல்லையா?

இந்தக் கூட்டத்தினர் தான் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் திமுகவை கடுமையாகச் சாடி, எழுதிப் பேசியவர்கள்! அவ்வளவில் திமுகவை எதிர்த்துப் பேசியவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தபின் ஏராளமான பதவிகளை  இவர்களுக்குத்தான் திமுக தலைமை அள்ளிக் கொடுத்தது. அதன்மூலம் இவர்கள் பல சகாயங்களைப் பெற்றார்கள். இப்போது  இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள்?

வட்டார வழக்கு  இலக்கியம் படைத்த கி.ராஜநாராயணன் தான் வாழ்ந்த கரிசல் மண்ணின் வழக்காறுகளை வாய்வழிக் கதைகளாக அறிமுகப்படுத்துவதற்கெனக் கொண்டு வந்த  இதழான  ‘கதைசொல்லி’யை அவரது மறைவிற்குப் பின் தொடர்ந்து நான் நடத்தினேன்! இதுவரை 40 இதழ்கள் வந்துள்ளன. 41 வது இதழ் விரைவில் வரப்போகிறது. அது குறித்த எனது ஆதங்கத்தை இறுதியில் சொல்கிறேன்.

எல்லாம்  ‘யோக்கியன் வருகிறான் செம்பை தூக்கி உள்ளே வை’ என்கிற கதையாகத் தான் இருக்கிறது.  திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது உழைத்த  நாங்கள்,  திமுகவில் இவர்களின் நுழைவால் இப்படி அவலங்கள்.

நான் மேலே சொன்ன விஷயத்திற்கு வந்தால் தமிழ் மொழியைக் காப்பதாக, தமிழைக் காப்பதாக நூல்களை நூலகத்திற்கு வாங்கிச் சேர்ப்பதாகச் சொன்ன   இந்த அறிவு ஜீவிதப் பிரகிருதிகள், அப்போது நான் திமுகவில் இருக்கிறேன் என்று தெரிந்தும் கூட,  ‘கதை சொல்லி’ இதழை நூலகத்திற்கு பரிந்துரைக்கவில்லை என்பது தான்  இவர்களின் தேர்வுக் குழு இலட்சணம்! இதற்காக நான் மனுஷ்யபுத்திரனிடம் சமஸிடமும் சண்டை போட்டிருக்கிறேன். ! கி.ரா.வின் ‘கதை சொல்லி’ இதழை தமிழக அரசு நூலகங்களுக்கு அனுப்பும் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது அன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோருக்குத் தெரியும்.

தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதையெல்லாம் தாண்டி, குறிப்பாக திருநெல்வேலி கரிசல்  நில  உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் வரைவுகள் குறித்து எழுதி வந்த பழைய படைப்பாளிகள் ஜீவா முதற் கொண்டு அந்நிலப்பரப்பில் உண்டான இலக்கியம் எல்லாவற்றையும் இணைத்து வாசிப்பில் அறிமுகமாகும் படி நான் பல நூல்கள் கொண்டு வந்தவன் என்பதையெல்லாம் கணக்கில் எடுக்கவில்லை;  இதுவரை பல பதிப்புகள் கண்ட  ‘தலை நிமிரும் நெல்லை’ என்ற எனது இடவியல் சார்ந்த நூலும் கட்டாயம் தமிழக நூலகங்களில் இடம்பெற வேண்டும் என்று நான் உயர் நீதிமன்றத்தில்  2006 இல் வழக்குத் தொடுத்துதான் அரசு நூலகங்களில் இடம் பெற்றது. அந்த நூலை அரசு நூலகத்தில் வைக்க வேண்டும் என உரிமையின் மீது தொடுத்த முதல் வழக்கு ஆகும்.

‘ஆர்டிஃபிஷியல் அறிவுஜீவிகள்’ போல, அரசியலை வைத்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடுகிறார்கள்.  வரும் காலத்தில் மக்கள் இலக்கியம் என்பதைத் தாண்டி வளர்ந்து நிற்கும் இந்த நூலக ஊழலின் பெரும் பகுதி விளைவுகள் வெளிப்படும்போது பலரின் முகத்திரை கிழிக்கப்படும் என்பது உறுதி.

பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதலில் நடைபெற்றுள்ள மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தவர்கள் யார் என்பது ஆதாரப்பூர்வமாக ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தெரியும். அதை இன்னும் பொதுவெளியில் அரசு வெளிப்படுத்தவில்லை. அதுமட்டுமில்லாமல் அந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்து விசாரிக்காமல், அமைச்சர்  லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்துள்ளார்.

அகல் விளக்கு பதிப்பகம், மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்திடம் இருந்து என்னென்ன புத்தகங்களை வாங்குவது என அரசுத் தரப்பில் கொடுத்த ஆணை அரசிடம் இருக்கும். அது எந்தத் தேதியில் கொடுக்கப்பட்டது, எந்த அதிகாரி அதில் கையெழுத்திட்டுள்ளார்  என்பதை ஆளும் அரசால் கண்டுபிடிக்க முடியாதா?

அதற்கான பணம் எந்தத் தேதியில் கொடுக்கப்பட்டது என்பதற்கும் ஆதாரம் அரசிடம் இருக்கும். அந்தப் பணம் எந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதோ அந்த வங்கிக்குச் சென்று விசாரித்தால் அந்தக் கணக்கை தொடங்கியவர் யார் என்ற விவரங்கள் அவரது முகவரிச்சான்று, புகைப்படம் அனைத்தும் கிடைத்துவிடும். இந்நேரம் அந்த நபரை அம்பலப்படுத்தி இருக்கலாம். அந்த நபரை முதலில் கைது செய்திருக்க வேண்டும்.

உள்ளங்கையில் ஆதாரங்கள் இருக்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுப்பது கால தாமத்திற்கு தான் வழி வகுக்கும். இதன் பின்னால் ஏதேனும் காரணம் இருக்குமா என்ற சந்தேகம் வருகிறது.

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். (ஏன் சொல்கிறார்கள் என்ற வரலாறு எனக்குத் தெரியாது). அதேபோல் ஒரு நேர்மையான அரசின் நடவடிக்கையும் சந்தேகத்திற்குரியதாக இருக்கக் கூடாது.

இந்த விஷயத்தில் அரசிடம் ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கும் என்பதால், குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்பதால் வழக்கு போட்டு, FIR பதிவு செய்து, விரைவில் அந்தக் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்.

என் சந்தேகங்கள்:

  • அரசிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கும் போது ஏன் மறைக்கிறார்கள்?
  • அரசிடம் இருக்கும் ஓர் ஆவணத்தை அரசு வெளியிடாமல், தவெக கட்சியின் இணைய அணி ஏன் வெளியிட்டது?
  • அந்த ஆவணமும் முழுமையாக வெளியிடப்படாமல் ஏன் முதல் பக்கம் மட்டும் வெளியிடப்பட்டது?
  • அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ள நூல்களின் பட்டியலை வெளியிடாமல் மறைத்தது ஏன்?
  • அரசு ஆவணம் கட்சியின் இணைய அணிக்கு எப்படிச் சென்றது?
  • அந்த நூல்களில் இருக்கும் பதிப்பகத்தின் முகவரியும், அரசின் கொள்முதல் ஆணையில் இருக்கும் முகவரியும் வேறு வேறாக உள்ளதே? வெளியிடப்பட்ட இரண்டு ஆணைகளிலும் ஒரே ந.க.எண் இருக்கிறதே?

திமுக ஆட்சியாளர்கள் தயவில் இப்படி பல அதிகார துஷ்பிரயோகங்கள்…

Very clear. திமுக தான் இதற்குக் காரணம். அவர்களின் ஆட்சி போகும் என்று நினைக்கவில்லை. 2026 தேர்தலில் வெற்றி பெற்று திரும்ப திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என திமுக இருந்திருந்தால், இது கணக்கில் எழுதப்பட்டு, புத்தகங்கள், இந்த ஊழல் வந்தே இருக்காது. இப்போது தவெக ஆட்சியில் சப்ளை செய்து விட்டார்கள்!

அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே உரிமையாளர், விண்ணப்பிக்கும்போது குடைவாசல் முகவரியும், புத்தகம் வழங்கும் போது மடிப்பாக்கம் முகவரியும் பதிப்பாளர் எப்படி குறிப்பிடுகிறார்? குடைவாசல் முகவரியில் RVR Press இயங்கி வந்தது. அது அகல்விளக்கு உரிமையாளரின் மைத்துனருடையது. அதை அகல்விளக்கு உரிமையாளர் விலைக்கு வாங்கிவிட்டார்!

இதற்கு திமுகவின்/ திமுகவிற்கு முட்டு கொடுக்கும்  ஆர்டிஃபிஷியல் அறிவுஜீவிகள்,  ஊடகங்கள், தினசரிகள்,அனுதாபிகள், இடதுசாரிகளின்  பதில் என்ன?

  • குறிப்பு: திமுகவில் இருந்த மூத்த தலைவரும் இந்நாள் பாஜக தலைவருமான எழுத்தாளர் திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு இது.

$$$

இது பணத்துக்காக மட்டும் அடித்த கொள்ளை அல்ல!

-காலச்சக்கரம் நரசிம்மா

வற்றிப் போன கிணற்றினுள்,
இற்று போன தாம்பினால்,
துளை உள்ள குடத்தைப் பிணைத்து
எட்டுக் குடம் நீர் சேந்தி
வேர் விண்ணை நோக்கும்படி
தலைகீழாக நடப்பட்ட செடிக்கு
நீர் வார்த்து வந்ததால்
பூத்துக் குலுங்கிய செந்தாமரையை
எண்பது வயதில் சமைந்த பாட்டிக்கு
தலையில் சூடி அழகு பார்த்து
மங்கலப் பாட்டு பாடியது போல…
அரங்கேறியுள்ள சென்ற ஆட்சியின்
மாபெரும் AI நூலக ஊழல்
உலக அளவில் சந்தி சிரிக்கிறது.

இது பணத்திற்காக மட்டும் அடிக்கப்பட்ட கொள்ளையாகத் தோன்றவில்லை .

  • 48 BCE இல் ஜூலியஸ் சீசரின் படைகள் அலெக்ஸான்ட்ரியா நகரின் துறைமுகத்திற்கு தீ வைத்து, அந்த தீ அருகில் இருந்த நூலகத்திற்கு பரவி, 50,000 முதல் 70,000 பட்டோலைகள் தீயில் கருகி அந்த நகரின் வரலாற்றை அழித்தன .
  • 1193 CE ல் துருக்கிய தளபதி பக்தியார் கில்ஜி படை எடுத்து வந்து, நாளந்தா பல்கலைக்கழகத்தையும், நூலகத்தையும் அழித்து, பல பொக்கிஷமான சுவடிகளைத் தீயிட்டுக் கொளுத்தினான் . தர்மகஞ்சா என்ற அந்த அடுக்குமாடி நூலகத்தில், சநாதன, புத்தமதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வந்தன .  தர்மகஞ்சாவைத் தவிர, ரத்னசாகரம், ரத்னததி, ரத்னரஞ்சன் என்ற மூன்று நூலகக் கட்டடங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன .
  • நான் தற்போது எழுதி வரும்  ‘சாரதாவின் சூடாமணி’ புதினத்தில் வருவது போல… சிக்கந்தர் ஷா மிர் 1413 இல் சாரதா பீடத்தின் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி, பல அரிய கலைகளைப் பற்றிய சுவடிகளை நாசமாக்கினான். வானசாத்திரம், ஆயுர்வேதம், கணிதம், நாட்டியக் கலை என்று பல சுவடிகள் நாசமாயின.

நமது தமிழக நூலகங்களில் போலிப் புத்தகங்களை ஆயிரக் கணக்கில் அடுக்குவதும், ஒரு நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதற்கு சமம்தான் .

கமலாம்பாள்  கருணாநிதி , கருணாநிதி, ஸ்டாலின் என்கிற பெயரில் எத்தகைய நூல்கள் பெரியார் அறிவுலக நூலகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன?

‘பல தெய்வ வழிபாடுகளால் தான் சாதி பரவுகிறது’ என்று ஒரு அபத்தமான நூலை அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டு அது கன்னிமாரா நூலகத்தில் புழக்கத்தில் உள்ளது.

ஊழல் பணத்தைக் கண்டுபிடிப்பது மட்டும் விஜய் அரசின் வேலை அல்ல.

AI மூலம் தயாரிக்கப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும் இந்த நூல்கள், பாரதத்திற்கு எதிராக, சநாதனத்திற்கு எதிராக, இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக, தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிராக தகவல்களைக் கொண்டிருக்குமேயானால் அதற்கான காரணகர்தாக்களைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் .

படை எடுத்து வந்து அந்நியர்கள் செய்யும்  வேலைகளை, ஒரு நாட்டின் ஆளுங்கட்சியே செய்திருக்கிறது என்பது மன்னிக்க முடியாத குற்றம்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லையில் ஊடுருவல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் மத்திய அரசின் வேலை அல்ல .

மக்களின் சிந்தைக்கு விருந்தளிக்கும் நூலகங்களில் தேச விரோத ஊடுருவலைத் தடுக்கும் பணியும் மத்திய அரசுக்கு உள்ளது.

தமிழகத்தில் நடைபெற்றுள்ள இந்த ஊழல், அகில இந்திய அளவில், ஏன், சர்வதேச அளவில் நம்மை தலைகுனிய வைத்திருக்கிறது. நூலகங்கள் அறிவு சார்ந்த ஆலயங்கள். அங்கும் கூடவா பணத்தாசையில் பீராய வேண்டும்?

‘திரிஷா விஜய் என்று ஒரு ஆசிரியர் இருப்பதால் இது விஜய் ஆட்சி ஊழல்’ என்கிறார் உதயநிதி.

‘ஸ்டாலின், கருணாநிதி’ என்று கூட போலி நூலாசிரியர்கள் எழுதி உள்ளனர் .

தமிழர்களின் அடுத்த தலைமுறையின் மீது சிந்தை ரீதியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் போர் இது.

இந்தப் போலி நூல்களை வைத்து மூளை சலவை செய்து, அடுத்த தலைமுறையினரை , தேசத்திற்கு எதிராகத் திருப்பி விடும் சதியின் ஒரு பகுதியாக கூட இந்த ஊழல் இருக்கலாம் .

இதற்குப் பின் அந்நிய தொடர்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் நல்லது.

நூலகங்களில் அடுக்கப்பட்ட கண்ட கண்ட பிதற்றல்களைப் படித்துவிட்டு, நாளை கரப்பான் பூச்சிகளைப் போல, நம் பிள்ளைகளே நாட்டுக்கு எதிராகப் புறப்படலாம்.

The degree of civilization in a society can be judged only by the books stacked in its libraries. If books displayed are totally fake, what will become of the future society?

இந்த ஊழலை மாநில அரசும், இந்த ஊழலின் பின்பாக உள்ள நோக்கத்தை மத்திய அரசும் உடனடியாகக் கவனிக்க வேண்டும் .

தலைக்கு மேல் வெள்ளம் போனபின், ஐயோ ஐயோ என்று அரற்றுவதில் பயனில்லை.

  • குறிப்பு: மூத்த எழுத்தாளர் திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் முகநூல் பதிவு இது.

$$$

விவாதத்தின் குவியம் எதனை நோக்கி?

-மாலன்

-1-

நூலக ஊழலில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன:

1. லஞ்சம் கொடுத்து நூல்களை விற்க ஆணை பெறுவது.

2. செயற்கை அறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி நூல்கள்.

நூலகத் துறையில் லஞ்சம் நெடுநாளாக இருக்கிறது என்று பலரும் எழுதி வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் உச்சம் பெற்றது (காலச்சுவடு கண்ணன்), காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து தொடரும் அவலம் இருந்தது (சிற்பி பாலசுப்ரமணியம்) என்று நம் மதிப்பிற்குரியவர்கள் எழுதி இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அது பற்றி இன்று பேசுவது இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சீர்கேட்டிலிருந்து கவனத்தைத் திருப்புவதாக அமையும். (நம் மதிப்பிற்குரியவர்களின் நோக்கம் அதுவல்ல என்றாலும்). அன்றும் லஞ்சம் இருந்தது என்பது லஞ்சத்தை நார்மலைஸ் செய்துவிடும். என்பதால், அது ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தைக் குறைத்து விடும். லஞ்சத்தால் ஏற்படும் இழப்பு பொதுப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்ற அறம் பிறழ்ந்த செயலால் ஏற்படும் பொருள் இழப்பு மட்டுமே. பஸ் பயணத்தில் பர்ஸை பிக்பாக்கெட்டிடம் பறிகொடுப்பது போன்ற இழப்பு இது

ஆனால் நாலடியார் தத்துவஞானி, தமிழகத்தின் முதல் முதல்வர் முத்துவேல் சுப்பையா ஐயர் போன்ற பொய்த் தகவல்கள் கொண்ட போலி நூல்கள் –  1. பொய்த் தகவல்களை எதிர்காலத் தலைமுறைக்கு அளித்து அவர்களது பொது அறிவை, அந்தப் பொதுஅறிவு கொண்டு பொதுத் தேர்வுகளின் மூலம் பெறும் வாழ்வைச் சிதைக்கின்றன. 2. வரலாற்றைத் திரிக்கின்றன. 3. ஒரு தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவை மூன்றுமே எதிர்காலத் தலைமுறையோடு தொடர்பு கொண்டவை என்பதால் இது முதலாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் லஞ்சம் என்ற சீர்கேட்டை விட மோசமான சீர்கேடு. இது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடு கட்டுமானக் குறையால் இடிந்து விழுவது போன்றது.

எனவே விவாதங்கள் இதைக் குறித்து நிகழ்வதே இன்றையத் தேவை. இதன் பொருள் லஞ்சம் குறித்துப் பேச வேண்டாம் என்பதல்ல. விவாதத்தின் குவியம் எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது.

இந்தப் போலி நூல்கள் பிரச்சினை அண்மைக்காலத்தியது. அப்படிப்பட்ட நூல்கள் திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டிருக்கின்றன. இதன் பின்னுள்ள காரணங்கள், நபர்கள் கண்டறியப்பட்டு, களையவும் தண்டிக்கப்படவும் வேண்டும்.

அகல்விளக்கு பதிப்பகம் பற்றி முகநூலில் பலரும் எழுதியிருக்கிறார்கள். வரவேற்கத் தக்கது. அதே நேரம் அந்தப் பதிப்பகம் போல வேறு சில அல்லது பல இருக்கலாம். அவையும் கண்டறியப்பட வேண்டும்.

-2-

“த.வெ.க. அரசு அமைந்த பிறகு நூல்கள் வாங்கப்படவில்லை”- நூலகத் துறை

1. நவ.7இல் வெளியாகியள்ள  ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழின் சென்னைப் பதிப்பின் 10ஆம் பக்கத்தில் இந்தத் தலைபின் கீழ் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (இணைப்பில் படம்)

அது “Sources in the library department said there was no procurement of books for any library after TVK came to power” என்று தெரிவிக்கிறது. (TVK ஆட்சிக்கு வந்த பிறகு எந்த நூலகத்திற்கும் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படவில்லை என்று நூலகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன).

அப்படியானால் இப்போது பெரியார் அறிவுலகில் காணப்பட்ட போலி நூல்கள் எந்த ஆட்சியில் வாங்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். முந்தைய திமுக அரசு.

“தேர்வு மற்றும் பரிந்துரைக் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் நூல்கள் வாங்கப்பட்டன. தேர்வுக் குழுவில் முன்னாள் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜே.ஜெயரஞ்சன், விலங்கியல் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், தமிழறிஞர் எம்.கே.அரசேந்திரன், தொல்லியல் ஆய்வாளர் கே.ராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்ததாக நூலகத் துறை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.ஜெயந்தி கூறுகிறார்” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

பேராசிரியர் இஸ்மாயில், தேர்வு செய்யப்பட்ட முறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். குழுவில் உள்ள மற்ற எவரும் இதுவரை வாய் திறக்கவில்லை.

2. நேற்று  ‘புதிய தலைமுறை’யின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன், “பெரியார் உலகத்தில் (sic) நடந்திருப்பது மிகப் பெரிய வருத்தத்திற்குரியது. ஆனால் அங்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நூலகத்திலும் நடந்திருக்கிறது. இதை நான் மீண்டும் கவனப்படுத்த விரும்புகிறேன். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நூலகத்திலும் இது போன்ற போலி நூல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன” என்று கூறினார்.

இது இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறது: 1. ஒவ்வொரு நூலகத்திலும் இருக்கின்றன என்றால் அவை இப்போது அல்ல, முன்னரே வாங்கப்பட்டிருக்கின்றன. அதாவது முந்தைய திமுக ஆட்சிக்காலத்திலேயே வாங்கப்பட்டிருக்கின்றன. 2. இது நெடுங்காலமாக திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் பகல் கொள்ளை.

இந்த இரு செய்திகளையும் இணைத்துப் பார்க்கும் போது தெரியவருவது என்ன?

1. போலி நூல்கள் த.வெ.க. அரசில் வாங்கப்படவில்லை.

2. எல்லா நூலகங்களிலும் ஆயிரக்கணக்கில் போலி நூல்கள் இருக்கின்றன. அவை முந்தைய ஆட்சிக் காலங்களில் வாங்கப்பட்டிருக்கின்றன.

ஆச்சரியம் என்னவெனில், அவற்றை தேர்வு செய்ய அறிஞர்கள் கொண்ட ஒரு குழு இருந்திருக்கிறது. அதன் தலைவர் திமுக ஆட்சிக்கு வரும் முன்னரும், வந்த பின்னும் திமுகவின் ஊதுகுழலாக தொலைக்காட்சிகளில் ஒலித்த திரு.ஜெயரஞ்சன் அவர்கள். அந்தக் குழுவில் இருந்த ஒருவர் தேர்வு முறையை ஆட்சேபிக்கிறார்.

குழுவில் என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் நூல்கள் திமுக ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்டிருக்கின்றன. அவை குழுவிற்குத் தெரிந்து வாங்கப்பட்டனவா? அல்லது குழுவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வாங்கப்பட்டனவா? அல்லது குழுவின் ஒப்புதலோடு வாங்கப்பட்டனவா?

ஏன் உயர்நீதிமன்றமே sumotoவாக ஒரு விசாரணையை மேற்கொள்ளக் கூடாது?

வழக்கறிஞர்கள் ஏன் நீதி மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று விசாரணை கோரக் கூடாது?

இது அறிவுலகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான தாக்குதல். வழக்கறிஞர்களும் அறிவுலகின் பிரஜைகள்தானே?

போலி நூல்கள் பெறப்படும் பொய்யறிவு இளைஞர்களின் எதிர்காலத்தையே பாழ்செய்யும் தாக்கம் கொண்டது. நீதிபதிகளுக்கு இளைஞர்கள் நலனில் அக்கறை இல்லையா?

நீதிபதிகளின் காதுகளை எட்டும்வரை இதைப் பகிருங்கள்.

  • குறிப்பு: மூத்த எழுத்தாளர் திரு. மாலன் அவர்களின் முகநூல் பதிவுகள் இவை.

$$$

Leave a Reply