திமுகவின் நூலக ஊழல்

-பேரா. ப.கனகசபாபதி

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இது தொடர்பாக, பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அண்மையில் கோவை மாநகரில் முதலமைச்சர் விஜய் அவர்கள் திமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். தற்போது அது பற்றித் திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டுள்ளன. அங்குள்ள நூலகத்துக்கு வாங்கப்பட்டுள்ள புத்தகங்கங்களில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியானவை என எழுத்தாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் புத்தகங்கள் அனைத்தும் சென்ற திமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ளன.

அவற்றில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஒரே பதிப்பகம் வெளியிட்டுள்ள 1800 தலைப்பிலான புத்தகங்களும் அடங்கியுள்ளன. மிகக் குறுகிய காலத்தில் ஒரு புதிய பதிப்பகம் அவ்வளவு அதிகமான புத்தகங்களை வெளியிட இயலாது. அதனுடைய விலாசம் கூடப் போலியானது எனச் சொல்லப்படுகிறது. மேலும் அதை எழுதியாகச் சொல்லப்படும் எழுத்தாளர்கள் எழுத்துலகம் அறியப்படாதவர்களாக உள்ளனர்.

மேலும் புத்தகங்களில் எழுத்துப் பிழைகள் மட்டுமன்றி, விசயங்களே அடிப்படையில் தவறாக உள்ளன. உதாரணமாக நாலடிகளைக் கொண்டு விளங்கும் நாலடியார் நூலை எழுதியவர் பெயர் வரலாற்றில் இல்லை. எனவே நமக்குத் தெரியாது.  ஆனால் அங்குள்ள புத்தகம் நாலடியாரை (நூலை) ஒரு கவிஞர் மற்றும் தத்துவ ஞானி என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

புத்தகங்களின் விலைகள் பல மடங்கு அதிகமாக உள்ளன. முன்னூறு பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் 1500 ரூபாய் விலை கொண்டவையாக உள்ளன. புத்தகங்களின் தலைப்புகளும் கூட வித்தியாசமாக உள்ளன. எனவே இதற்குப் பின்னால் ஒரு பெரிய ஊழல் நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

கடந்த நாற்பது வருடங்களாகவே அரசு நூலகங்களில் தொடர்ந்து பல தவறுகள் நடந்து வந்துள்ளன. மேலும் அங்கு வாங்கப்படும் புத்தகங்கள் திராவிடக் கருத்துக்களைக் கொண்டவையாகவும், திராவிட அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கட்சியினர் எழுதியவையாகவுமே அதிகம் இருக்கும். எனவே நூலகங்கள் திராவிட பிரசாரங்களுக்கான மையமாகவும், ஊழலுக்கான இன்னொரு இடமாகவும் மாற்றப்பட்டு விட்டன.

கோவையில் ஏற்கெனவே ஒரு மத்திய நூலகமும், குடிமைப் பணி பயிற்சி மாணவர்களுக்கான நூலகமும், துணை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன. முன்னூறு கோடி ரூபாய் செலவு செய்து நகரின் மத்தியில் சுமார் ஏழு ஏக்கர் அளவு நிலத்தில் மக்களின் வரிப் பணத்தில் இந்த அறிவுலகம் கட்டப்பட்டுள்ளது.

பக்கத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் நெரிசல் நிறைந்து கழிவறை வசதிகள் கூட இல்லாத நிலையில் உள்ளது. எனவே திமுக அரசு அந்த இடத்தை மக்கள் தொகை பெருகி வரும் கோவையின் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி பொது மக்களின் சிரமத்தைப் போக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

அரசு நூலகத்தை மேம்படுத்த எண்ணியிருந்தால், மத்திய நூலகத்தை தரம் உயர்த்தி, மாவட்டத்திலுள்ள துணை நூலகங்களுக்கு வசதிகள் செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் திமுக ஆட்சியாளர்களின் நோக்கம் ஊழல் செய்வதும், வெற்று விளம்பரம் மூலம் அறிவுலகத்தை உருவாக்கி விட்டோம் எனத் தம்பட்டம் அடிப்பது தான் எனத் தெரிகிறது.

எனவே தவெக அரசு நூல்களின் பெயரில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளை அடித்த திமுக அரசின் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அனைவர் மேலும் நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்க வேண்டும். மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் பலன் பெறும் வகையில் நூலகங்கள் அமைய வேண்டும். அவற்றில் ஆன்மிகம், தேசியம், நீதி நெறிகள் , பண்பாடு, கலாசாரம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் பல் துறைகள் சார்ந்த புத்தகங்கள் இடம் பெற வேண்டும்.

$$$

Leave a Reply