கண்ணன் பாட்டு – (10-14)

-மகாகவி பாரதி

10. கண்ணன் – என் காதலன்
செஞ்சுருட்டி – திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

தூண்டிற் புழுவினைப்போல் – வெளியே
      சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக – எனது
      நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
      கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் – மனது
      வெறுத்து விட்டதடீ! .       1

பாயின் மிசை நானும் – தனியே
      படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் – சகியே!
      சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் – சகியே!
      வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; – சகியே!
      நுங்க ளுறவை யெல் லாம்.       2

உணவு செல்லவில்லை; – சகியே!
      உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; – சகியே!
      மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; – எதிலும்
      குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே – சுகமே
      காணக் கிடைத்ததில்லை.       3

பாலுங் கசந்தடீ தடீ! – சகியே!
      படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் – செவியில்
      குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் – இனிமேல்
      நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் – கிரகம்
      படுத்து மென்று விட்டான்.       4

கனவு கண்டதிலே – ஒருநாள்
      கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை – எவனோ
      என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; – சகியே!
      மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே – புதிதோர்
      மகிழ்ச்சி கண்டதடீ!       5

உச்சி குளிர்ந்ததடீ! – சகியே!
      உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் – முன்னைப்போல்
      மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! – எதிலும்
      இன்பம் விளைந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! – சகியே!
      அழகு வந்ததடீ!       6

எண்ணும் பொழுதி லெல்லாம் – அவன்கை
      இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! – புதிதோர்
      சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; – அவன்தான்
      யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் – அங்ஙனே
      கண்ணின் முன் நின்றதடீ!       7

$$$

11. கண்ணன் – என் காதலன் – 2
(உறக்கமும் விழிப்பும்)
நாதநாமக்கிரியை – ஆதி தாளம்
ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.

நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி – உங்கள்
      நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே – என்ன
      தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! – அன்னை
      ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், – மிகச்
      சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே!       1

நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் – இது
      நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
      கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
      அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
      பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும்,       2

பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
      பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
      நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
      கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
      மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும்,       3

எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
      என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
      தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
      மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
      நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர்.       4

(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)

கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
      கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
      பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
      வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
      கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே?       5

$$$

12. கண்ணன் – என் – காதலன் -3
(காட்டிலே தேடுதல்)

ஹிந்துஸ்தானி தோடி – ஆதி தாளம்
ரசங்கள்: பயாநகம், அற்புதம்.

திக்குத் தெரியாத காட்டில் – உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

1.
மிக்க நலமுடைய மரங்கள், – பல
விந்தைச் சுவையுடைய கனிகள், – எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள், – அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள், – ஒரு       (திக்குத்)

2.
நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், – எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள் – மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள், – முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள், – ஒரு       (திக்குத்)

3.
ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம்
அஞ்சக் குரல்பழகும் புலிகள், – நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை, – அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு, – ஒரு       (திக்குத்)

4.
தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் – அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை அதன்
முன்னின் றோடுமிள மான்கள் – இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை – ஒரு       (திக்குத்)

5.
கால்கை சோர்ந்துவிழ லானேன் – இரு
கண்ணும் துயில்படர லானேன் – ஒரு
வேல்கைக் கொண்டுகொலைவேடன் – உள்ளம்
வெட்கம் கொண்டொழிய விழித்தான் – ஒரு       (திக்குத்)

6.
”பெண்ணே உனதழகைக் கண்டு – மனம்
பித்தங்கொள்ளு” தென்று நகைத்தான் – ”அடி
கண்ணே, எனதிருகண் மணியே – உனைக்
கட்டித் தழுவமனம் கொண்டேன்.

7.
சோர்ந்தே படுத்திருக்க லாமோ? – நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம் – சுவை
தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் – நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.”

8.
என்றே கொடியவிழி வேடன் – உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான் – தனி
நின்றே இருகரமுங் குவித்து – அந்த
நீசன் முன்னர் இவை சொல்வேன்:

9.
”அண்ணா உனதடியில் வீழ்வேன் – எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா – பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை – உன்றன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?”

10.
”ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: – நின
தின்பம் வேண்டுமடி, கனியே, – நின்றன்
மோடி கிறுக்குதடி தலையை, – நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போலே”

11.
காதா லிந்தவுரை கேட்டேன் – ‘அட
கண்ணா!’ வென்றலறி வீழ்ந்தேன் – மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே – என்றன்
போதந் தெளியநினைக் கண்டேன்.

12.
கண்ணா! வேடனெங்கு போனான்? – உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ? – மணி
வண்ணா! என தபயக் குரலில் -எனை
வாழ்விக்க வந்தஅருள் வாழி!

$$$

13. கண்ணன் – என் காதலன் -4
(பாங்கியைத் தூது விடுத்தல்)

தங்கப்பாட்டு மெட்டு
ரசங்கள்: சிருங்காரம், ரௌத்ரம்.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
            (அடி தங்கமே தங்கம்)
      கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
      ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்.     1

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் – நாங்கள்
      காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் – என்னும்
      அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்.       2

சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே – எங்கும்
      தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான்? – அவை
      யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ!      3

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் – தலை
      மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே – கிழப்
      பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.       4

ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் – எனை
      அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
      சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.       5

சோர மிழைத்திடையர் பெண்களுடனே – அவன்
      சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
      வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!       6

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் – மிகப்
      பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
      பற்றி மறக்கு தில்லை பஞ்சை யுள்ளமே.       7

நேர முழுவதிலுமப் பாவி தன்னையே – உள்ளம்
      நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்,
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் – பின்பு
      தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம்!       8

$$$

14. கண்ணன் – என் காதலன் – 5
(பிரிவாற்றாமை)

ராகம் – பிலஹரி

ஆசை முகமறந்து போச்சே – இதை
      ஆரிடம் செல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
      நினைவு முகமறக்க லாமோ?       1

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
      கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
      நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.       2

ஓய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
      உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்ப துண்டு கண்டாய் – அந்த
      மாயன் புகழினையெப் போதும்.       3

கண்கள் புரிந்துவிட்ட பாவம் – உயிர்க்
      கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினிடத்திலிது போலே – ஒரு
      பேதையை முன்புகண்ட துண்டோ ?       4

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
      சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
      வைய முழுதுமில்லை தோழி!       5

கண்ணன் முகம்மறந்து போனால் – இந்தக்
      கண்க ளிருந்து பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
      வாழும் வழியென்னடி தோழி?       6

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s