தமிழ்த் தாத்தா (7, 8, 9, 10)

-கி.வா.ஜகந்நாதன்

7. திருவாவடுதுறைக் குருபூஜை

தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தியின் குருபூஜை நடைபெறும். அன்று காலை ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையை அடைந்தார். திருவாவடுதுறையில் குருபூஜை பெரிய விழாவாக நடக்கும். பலவகையான மக்கள் வந்து சேருவார்கள். எங்கும் சைவத் திருக்கோலம் விளங்கும். ஒரு பக்கம் இசைக் கச்சேரி நடைபெறும். மறுபக்கம் புலவர்கள் ஒன்றுகூடித் தமக்குள் உரையாடிக் கொண்டிருப்பார்கள். வடமொழிப் புலவர்கள் எல்லாம் தம் ஆராய்ச்சியில் கண்ட நுட்பங்களைத் தமக்குள் உரையாடி இன்புறுவார்கள். மிகச் சிறப்பாக அன்னதானம் நடக்கும். ஆசிரியர் திருவாவடுதுறையில் பிள்ளையவர்களைச் சந்தித்தார். இவரைச் சந்தித்தவுடன் பிள்ளைக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. “குருபூஜை ஆனவுடன் நான் மாயூரத்திற்குப் போவேன். போனவுடன் தொடர்ந்து நீர் பாடம் கேட்கலாம் அல்லவா?” என்று கேட்டார். மாணாக்கருக்குப் பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. பாடம் சொல்ல வேண்டுமென்ற அவா தம் ஆசிரியரிடம் மிகுதியாக இருப்பது கண்டு இவர் வியந்தார்.

குருபூஜை அன்று பிள்ளையவர்களோடு ஆசிரியர் தங்கியிருந்தார். அப்போது ஒரு புலவர் வந்து சுப்பிரமணிய தேசிகரைப் பற்றிப் புகழ்ந்து தமக்கு ஒரு பாட்டு எழுதித் தரும்படி பிள்ளையிடம் கேட்டார். பிள்ளையவர்கள் எழுதித் தந்தார். பின்னர் அதுபோலப் பலர் ஒருவர் பின் ஒருவராக வர, ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார். அவர்கள் அந்தப் பாடல்களைத் தாமே எழுதியதாகத் தேசிகரிடம் போய்ச் சொல்லிப் பரிசு பெற்றார்கள். மறுநாள் தேசிகரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திக்கும்போது, ‘இரவு எல்லாம் பிள்ளையவர்களுக்கு மிகவும் வேலை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது’ என்று தேசிகர் குறிப்பாகச் சொன்னார்.

பிள்ளையவர்கள் மாயூரம் போய்ச் சேர்ந்தபின் ஆசிரியரும் அங்கே சென்றார். அங்கிருந்து மறுபடியும் பிள்ளை திருவாவடுதுறைக்குப் புறப்பட்டபோது ஆசிரியரும் உடன் சென்றார். திருவாவடுதுறைக்கு வண்டியில் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். போகும்போது பிள்ளை அம்பர்ப் புராணத்தை பாட ஆரம்பித்தார். வண்டியின் ஓட்டத்திலேயே கவிதையின் ஓட்டமும் தொடர்ந்து வந்தது. வண்டி போய்க் கொண்டிருக்கையில் ஏட்டுச் சுவடியில் அந்தப் பாடல்களை என் ஆசிரியர் எழுதிக் கொண்டே போனார். அம்பர்ப் புராணத்தில் ‘நந்தன் வழிபடு படலம்’ என்பதில் முன்பு 53 பாடல்களே பாடப்பெற்றிருந்தன. நந்தன் பயணத்தைப் பற்றிய செய்திகளே, இவர்களது வண்டிப்பயணத்தில் பாடப்பெற்று ஆசிரியரால் எழுதப்பெற்றன.

திருவாவடுதுறையில் இரண்டு வகையான பாடங்களை ஆரம்பிக்க ஏற்பாடாயிற்று. முதியவர்களுக்குச் சில நூல்களையும், இளையவர்களுக்குச் சில நூல்களையும் பாடம் சொல்வது எனத் திட்டம் செய்தார்கள். ஆசிரியரை எந்தக் கட்சியில் சேர்ப்பது என்ற எண்ணம் வந்தது. இவரைக் கேட்டபோது இரண்டு வகையான பாடமும் கேட்பதாக இவர் சொன்னார். அவ்வாறே இரண்டு வகுப்புக்கும் என்ன என்ன பாடங்கள் நடந்தனவோ அவற்றையெல்லாம் இவரும் கேட்டு வந்தார். பாடம் நடக்கும்போது பாடல்களை இசையுடன் படிக்கின்ற வேலையை இவர் செய்து வந்தார்.

$$$

8. பிள்ளையவர்களின் அன்பு

ஒரு முறை ஏதோ சிறிய மன வேறுபாட்டால் பிள்ளை, ஆசிரியரிடம் பேசாமல் இருந்தார். ஒரு நாள் இரவு மடத்தில் பந்தி நடந்தது. யாவரும் உண்ணும் அந்தப் பந்தியில் பிள்ளையும் அமர்ந்து இருந்தார். இடையில் யாரும் எழும் பழக்கம் இல்லை. அன்று எல்லோரும் எழுவதற்கு முன் பிள்ளை எழுந்து வெளியில் வந்தார். விளக்கு இல்லாத ஒரு திண்ணையில் படுத்திருந்த ஆசிரியரைப் பார்த்து. “சாமிநாதையரா? ஆகாரம் ஆயிற்றா?” என்று கேட்டார். அதுவரைக்கும் பேசாமல் இருந்த ஆசிரியர் தம்மிடம் அன்புடன் விசாரித்ததைக் கேட்டவுடன் இவருக்கு உணர்ச்சி விஞ்சி நின்றது. மறுநாள் யாவரும் ஆசிரியரைப் பார்த்து, “பிள்ளைக்கு உம்மிடம் இருக்கிற அன்புதான் எத்தனை சிறப்பானது! பந்தியின் நடுவில் எழுந்து வந்து விட்டாரே!” என்று சொல்லி வியந்தார்கள்.

மகாவைத்தியநாதையர் என்னும் இசைப் பெரும் புலவரைத் திருவாவடுதுறையில் தான் ஆசிரியர் முதல் முதலில் சந்தித்தார். அப்போது சந்நிதானத்தின் ஆணைப்படி மகாவைத்தியநாதையர் சில பாடல்களைப் பாடினார். அவர் பாட்டு, தேவகானமாக இருந்தது கண்டு இவர் மிகவும் வியப்பு அடைந்தார். மகா வைத்தியநாதையரின் தமையனார் இராமசாமி ஐயர் பெரிய புராணத்தைக் கீர்த்தனைகளாகப் பாடியிருக்கிறார். அவற்றிலிருந்தும் சில பாடல்களைப் பாடினார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய சில பாடல்களையும் பாடியபோது இவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பிள்ளையினுடைய வாக்கு எத்தனை சிறப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்து இவர் விம்மிதம் அடைந்தார்.

ஒரு சமயம் ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையில் இருந்தபோது பிள்ளை மாயூரத்தில் இருந்தார். திருப்பெருந்துறைச் சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர் அத்தலத்திற்குப் புதிய முறையில் ஒரு புராணம் பாடப்பெற வேண்டுமென்று விரும்பினார். பிள்ளையைக் கொண்டு இயற்றுவிக்க வேண்டுமென்பது அவரது விருப்பம். அதைச் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். உடனே தேசிகர் ஆசிரியப் பெருமானை மாயூரத்திற்கு அனுப்பி, இந்தச் செய்தியைப் பிள்ளையிடம் சொல்லி வரும்படி சொன்னார். அப்படியே ஆசிரியப் பெருமான் மாயூரத்திற்கு நடந்து சென்றார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தைப் பிள்ளையிடம் தெரிவித்தவுடன், அவர் வாக்கிலிருந்து வந்தது திருப்பெருந்துறையிலுள்ள விநாயகர் பேரில்,

நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த
மழகளிற்றை நினைந்து வாழ்வாம்”

என்கிற ஓர் அடிதான். பின்பு பிள்ளையும், ஆசிரியப் பெருமானும் திருவாவடுதுறையை அடைந்தார்கள்.

1872 நவம்பர் மாதம் பெரிய புராணம் பாடம் நடந்து வந்தது. அப்போது ஆசிரியப் பெருமானுக்குத் திடீரென்று கடுமையான வெப்பு நோய் வந்தது. பிறகு அம்மை பூட்டியது.

அதனால் அங்கிருந்து இவருடைய பாட்டனார் இருந்த சூரிய மூலைக்குப் போய்ச் சேர்ந்தார். ஒரு பல்லக்கில் இவரை அந்த ஊருக்கு அனுப்பினார்கள்.

$$$

9. வேலையை மறுத்தல்

1873-ஆம் வருஷம் மகாமகம் நடைபெற்றது. அங்கே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம் பரிவாரங்களோடு சென்றார். அந்த நேரம் தம்மால் அங்கே போக முடியாது போனது பற்றி இவர் மிகவும் வருந்தினார். உடம்பு ஒருவாறு குணம் அடைந்தவுடன் மீண்டும் திருவாவடுதுறையை அடைந்தார். இடையிடையே சில சமயங்களில் கும்பகோணத்திற்குச் சென்று தியாகராச செட்டியாருடன் பொழுது போக்குவது வழக்கம். அப்போது தியாகராச செட்டியார், “கும்பகோணத்தில் அப்பு சாஸ்திரிகள் என்பவர் ஒரு புதிய பள்ளிக் கூடத்தைத் தொடங்கப் போகிறார். அவர் எனக்கு நல்ல பழக்கம் உடையவர். அங்கே தமிழ்ப் புலவர் ஒருவர் வேண்டுமென்று சொல்கிறார். நான் உன்னை அனுப்பலாம் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார். ஆனால் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இவர் இங்கேயே இருக்கட்டும், பின்னால் வேண்டுமானால் உத்தியோகம் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். அதை இறைவன் திருவருள் என்றெண்ணி ஆசிரியப் பெருமான் உவகை அடைந்தார்.

1873-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் கவிஞர் பெருமான் திருப்பெருந்துறையை அடைந்தார். அவருடன் ஆசிரியப் பெருமானும் சவேரிநாத பிள்ளையும் சென்றார்கள். அந்தத் தலத்தின் பெருமையை உணர்ந்து, அங்கே மாணிக்கவாசகருக்கு எல்லா வகையான சிறப்புகளும் நடைபெறுவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

திருப்பெருந்துறைப் புராணம் முழுவதும் அரங்கேற்றத்திற்கு முன்பு இயற்றப்படவில்லை. சில பகுதிகளே இயற்றப் பெற்றிருந்தன. ஆனால் பிள்ளை அவ்வப்போது பாடல்களை எழுதிவைத்து மறுநாள் அரங்கேற்றுவது வழக்கமாக இருந்தது. அதைக் கண்டு ஆசிரியப் பெருமானுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. மீண்டும் அங்கே இவருக்கு அவ்வப்போது நோய் வந்தது. அதனால் பிள்ளையைப் பிரிந்து ஊருக்குச் செல்ல நேர்ந்தது.

$$$

10. புராணப் பிரசங்கம்


1874-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் ஒரு மாத காலம் தம் ஊரில் இருந்து வேண்டிய மருந்துகளை இவர் உண்டு வந்தார். அப்போது குடும்பத்தில் சிறிது கடன் இருந்தது. அதை அடைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசிரியப் பெருமானின் தந்தையார் எண்ணினார். சில ஊர்களுக்குச் சென்று புராணப் பிரசங்கம் செய்து பொருளை ஈட்டி அந்தக் கடனை அடைக்க வேண்டுமென்று அவர் நிச்சயித்தார். அதன்படி ஆசிரியர் செங்கணம் முதலிய இடங்களுக்குச் சென்று திருவிளையாடல் புராணப் பிரசங்கம் செய்து வந்தார். அப்போது பல தமிழன்பர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எனினும் மீண்டும் பிள்ளையிடம் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் மிகுதியாக இருந்தது. அப்போது அம்பர்ப் புராண அரங்கேற்றம் சம்பந்தமாக அம்பர் என்ற ஊருக்குப் பிள்ளை சென்றிருந்தார். அங்கே போய் இவர் தம் குருநாதரைச் சந்தித்தார். அங்கேயே இருந்து சில நூல்களைப் பாடம் கேட்டார்.

காரை என்ற இடத்தில் நடத்திவந்த திருவிளையாடல் புராணப் பிரசங்கத்தை இவர் இடையில் நிறுத்தி வைத்துவிட்டு, அம்பருக்கு வந்திருந்தார். எனவே அங்குச் சென்று அதை நிறைவேற்றினார். அந்தப் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசிரியப் பிரானைத் தொடர்ந்து அங்கே இருந்து பிரசங்கம் செய்து வர வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் ஆசிரியருக்குத் தம் குருநாதரை விட்டுப் பிரிந்து வாழ்வதில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார்.

அங்கே வேதநாயகம் பிள்ளை ஒரு நாள் வந்திருந்தார். அவர் மாயூரத்தில் முன்சீபாக இருந்தவர். அவரும் சுப்பிரமணிய தேசிகரும் உரையாடிப் பழகிய தன்மை இவரைப் பெரிதும் நெகிழச் செய்தது.

(தொடர்கிறது)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s