பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்: நூல் மதிப்புரை

-ஜெயராமன் மகாதேவன்

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கர் எழுதிய வரலாற்று நூல் இது. இந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு (தமிழில்: பத்மன்) பத்திரிகையாளர் மாலன், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் முறையே அணிந்துரையும், அறிமுகவுரையும் எழுதியுள்ளனர்.

இந்தப் புத்தகம் கொரோனா ஊரடங்கிற்குப் பின் நான் நேரடியாக பங்கேற்று உரையாற்றிய முதல் நிகழ்ச்சியில் எனக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை பற்றி வித்யாபாரதி அமைப்பு நடத்திய பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சி அது. சென்ற வாரம் இந்தப் புதகத்தை படித்து முடித்தேன். அதே சூட்டில் நூல் பற்றி என் அவதானிப்புகளுடன் கூடிய நூல் அறிமுகம் இது.

ஆறு பொற்காலங்கள்

இந்த நூல் விளக்கும் ஆறு பொற்காலங்கள்:

1. இந்தியப் பேரசை நிறுவிய – சந்த்ரகுப்தர் – சாணக்கியர்

2. யவனர்களை அழித்த புஷ்யமித்திரர்

3. சக-குஷாணர்களின் அச்சுறுத்தலை அழித்த விக்கிரமாதித்தர்

4. ஹூணர்களின் அராஜகத்துக்கு முடிவுகட்டிய யசோதர்மர்

5. மராட்டிய வீரத்தின் உச்சக்கட்டம்

6. விரட்டியடிக்கப்பட்ட பிரிட்டிஷ் ஆதிக்கம்.

நூல் கனிந்த காலம்

சாவர்க்கர் தனது எண்பதாம் வயதில் இந்தப் புத்தகத்தை எழுதி நிறைவு செய்ததாக அவரே இந்த நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த நூல் அவரது நெடிய வலிமிகுந்த சுதந்திரப் போராட்ட அனுபவத்தின் சாரம் எனலாம்.

கிட்டத்தட்ட இந்த நூலையும் சேர்த்து எட்டாயிரம் பக்கங்கள் பல்வேறு நூல்களாக வீர சாவர்க்கர் எழுதியுள்ளார். இடைவிடாத தேசப்பணிக்கிடையே இந்த அசாத்தியமான எழுத்துப்பணி திகைக்க வைக்கிறது. இதிலும் அவர் எழுதிய  ‘சீக்கியர்கள் வரலாறு’ எனும் புத்தகம் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நூல் அவரது கடைசிக் காலத்தில் வெளியானது என்பதனால், ஆங்காங்கே பொருத்தமான தனது இதர நூல்களையும் பற்றி அவர் குறிப்பிடுகிறார். இதனால் சாவர்க்கரின் பிற படைப்புகள், அவற்றின் குறிக்கோள் ஆகியவை பற்றி அவர் வாயிலாகவே அறிய இந்த நூலைப் படிப்பது உதவுகிறது. உதாரணமாக – அவரது சுயசரிதை, 1857ஆம் ஆண்டின் இந்திய விடுதலைப் போர், ஹிந்து பத பாதஷாஹி ஆகிய நூல்களைக் கூறலாம்.

நூலின் குறிக்கோள்

மேற்கத்திய, மார்க்சீய தாக்கத்துடன் சரித்திரத்தைப் பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் திரிக்கும், மறைக்கும் வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது இந்த நூலின் தலையாய குறிக்கோள். முக்கியமாக – பாரதத்தின் /ஹிந்துக்களின் வரலாறு தோல்வியின் வரலாறு, பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வரலாறு என்ற தவறான கண்ணோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பாரத/ஹிந்து வரலாறு இடைவிடாத போராட்டத்தின் வரலாறு. நம் நாட்டின் அரசர்கள், மக்கள், வீரர்கள், தலைவர்கள், போராடி இன்றும் வெற்றி பெற்ற நாகரீகமாக வேத, ஹிந்து, பாரத நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும் திகழச்செய்துள்ளார்கள் எனும் கருத்தை நூலாசிரியர் ஒவ்வொரு கட்டத்திலும் ஆழமாக பதியவைக்கிறார்.

ஆறு பொற்காலங்கள் பற்றி…

பாரத வரலாற்றில் வேத, இதிஹாஸ காலத்து அரசுகள், மக்கள், வீரர்கள் தான் முதலில் வர்ணிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் முதல் பொற்காலமாக சாணக்கிய-சந்திரகுப்தர்களின் ஆட்சியைக் குறிப்பிடுகிறார் சாவர்க்கர். இவர்களைப் பற்றிய மிகத் தெளிவான வரலாற்றுப்பதிவுகள் இருப்பது இதற்குக் காரணம் என்பது அவர் கருத்து. சாணக்கியர்,சந்திரகுப்தர் பற்றி பொதுவாக நாம் கேட்டிருந்தாலும், அதன் பின் உள்ள பொற்காலங்களில் இடம் பெறும் புஷ்யமித்திரர், விக்கிரமாதித்தர், யசோதர்மர் ஆகியவர்களை நாம் தெளிவாக தெரிந்து கொள்வது இந்த நூலில் தான்.

இந்த நூலில் ஐந்தாம் பொற்காலம் – மராட்டிய வீரத்தின் உச்சகட்டம் – விரிவாக எழுதப்பட்டுள்ளது (பக்கம் 146 – 498). மனதைப் பிழியும் வர்ணனைகளை இங்கு காணலாம். இந்த பக்கங்களைக் கடந்து செல்வது எளிதல்ல. முக்கியமாக முகலாயர்கள் முடிய பல்வேறு முஸ்லிம் படையெடுப்பாளர்கள் ஹிந்துகளுக்கு இழைத்த கொடுமைகளை படித்து நான் நிம்மதி இழந்த நாட்கள் பல.

மேலும் ஹிந்து சமுதாயத்தின் குறைப்பாடுகளான – சத்குணவிக்ருதி (நாசம் விளைவித்த நற்குணங்கள் – அருகதையற்றவர்களுக்கும் கனிவு), உட்பூசல்கள், சாதிய கட்டுப்பாடுகள், காலத்திற்கு ஏற்ப, மாறிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்திகொள்ளாமை – ஆகியவையும் தயக்கமின்றி விவரிக்கப்பட்டுள்ளன.

சிந்து நதிக்கப்பாலிருந்து முஸ்லிம் படையெடுப்புகள் துவங்கின. அதில் முதலில் பௌத்தர்கள் படையெடுப்பளர்களுக்கு எவ்வாறு உதவ விழைந்து பின் அவர்களே துன்பம் அடைந்தார்கள் என்று சாவர்க்கர் கூறுவது கவனிக்கதக்கது.

இந்தப் படையெடுப்பளர்களின் போக்கை அறிந்து தேவலர் (பொ.யு. ஒன்பதாம் – பத்தாம் நூற்றாண்டு) – ஹிந்து மதத்திலிருந்து மதம் மாறிச் சென்றவர்கள், கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்கள் தாய்மதம் திரும்ப வழிவகை செய்யும் ஸ்ம்ருதி நூலை இயற்றியது, அதே குறிக்கோளுடன் மனுஸ்ம்ருதி நூலுக்கு மேதாதிதி (பொயு ஒன்பதாம் – பத்தாம் நூற்றாண்டு) எழுதிய உரை ஆகியவை பற்றி சாவர்க்கரின் அரிய பார்வை இந்தப்பகுதியில் நமக்குப் புலனாகிறது.

பலமுறை சோமநாதர் ஆலயம் தகர்க்கப்பட்டு, மீண்டும் நிர்மாணிக்கப்பட்ட வரலாறு விவரிக்கப்பட்டுள்ளதும் இந்தப் பகுதியில் தான்.

தில்லியின் சுல்தான் ஆனாலும் ஹிந்து அரசனாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்ட நஸீருத்தின், அவனது மகாராணி தேவலா தேவீ ஆகியவர்கள் பற்றி, கண்களுக்குப் புலப்படாத விதத்தில் வரலாற்றின் அடிக்குறிப்புகளில் தங்கிவிட்ட, அரிய வீர உணர்ச்சியூட்டும் உண்மைகளை சாவர்க்கர் உரைக்கிறார்.

இதே போல, விஜயநகர சாம்ராஜ்யத்தின் தோற்றமும், பிரமிக்கத்தக்க வளர்ச்சியும், அதன் சரிவும், அதன் தொடர்ச்சியாக சிவாஜி மகாராஜாவின் தந்தையான ஷஹாஜியின் செயல்பாடுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. அதன் பின் சத்ரபதி சிவாஜி துவங்கி மராட்டியர்களின் வீரவரலாறு வர்ணிக்கப்பட்டுள்ளது. மராட்டிய வரலாற்றின் முத்தாய்ப்பாக ரகுநாத் ராவ் தற்போதைய பாகிஸ்தானின் அட்டக் பகுதிவரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதை பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் சாவர்க்கர்.

ஆறாவது பொற்காலமான ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டமும் அதிலடைந்த வெற்றியும் பற்றி மிகவும் குறைவாகவே இந்த நூலில் சாவர்க்கர் வர்ணித்துள்ளார். (பக்கம் 505-528). அவரது சமகால நிகழ்வுகள் பற்றிய இந்தப் பகுதி விரிவாக இருக்கும் என எனக்கிருந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. ஆனால் இந்தச் சிறிய பகுதியிலும் கூட அவர் – ஆங்கிலேயர்களுக்கெதிரான முதல் சுதந்திரப் போராட்டம் பற்றி புதிய கோணத்தை நல்குகிறார், கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது, பிரிட்டிஷ் ராணி அனைவரையும் சமமாக பாவிப்பதாக உறுதியளித்தது ஆகியவை முதல் சுதந்திரப் போராட்டத்தின் வெற்றியாக அவர் வர்ணிப்பது ஒரு புது கோணம்.

ஆயுதப் புரட்சி வழியில் தனது விடுதலைப் போராட்ட முயற்சிகள், அந்தப் பாதையில் தனது சகாக்கள் ஆகியவை பற்றி அவர் சுருக்கமாகக் கூறியுள்ளார். பாதைகள் மாறுபட்டாலும் காந்திஜியுடனும் நட்பு பாராட்டியதை குறிப்பிடுகிறார் சாவர்க்கர்.

கடைசியில், பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தது கூட – உலக மகா யுத்தம், நேதாஜியின் முயற்சிகள், உள்ளூர் சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்தது, பாரத்தில் ஆங்கிலேய ஆயுதக் கிடங்குகள் அழிக்கபட்டது என பல முனைகளில் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாகத்தான் – என்று விடுதலை அடைந்த விதத்தினைப் பற்றி தன்னுடைய கருத்தைப் பதிவிடுகிறார். தேசப்பிரிவினை பற்றி மிகவும் சுருங்கக் கூறி – பாரதத்தின், ஹிந்துக்களின் வெற்றி வரலாற்றை நிறைவு செய்கிறார்.

இந்த மொழிபெயர்ப்பு…

ஒரு மொழிபெயர்ப்பு நூலைப் படிக்கும் உணர்வு வராத விதத்தில், பத்மன் அவர்களின் தமிழ் நடை அமைந்துள்ளது.

• உணர்ச்சிப்பிழம்பான சாவர்க்கரின் கருத்து வெளிப்பாட்டினை உள்வாங்கிக்கொண்டு அதற்குத் தகுந்த துடிப்பான வாக்கியங்களை அமைத்தல்,

• நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கும் சம்ஸ்க்ருத, இதரமொழி செய்யுள்களுக்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பு,

• தமிழ் அல்லாத பெயர்ச் சொற்களை உகந்த விதத்தில் தமிழ்வரிவடிவப் படுத்துதல் (transliteration)

ஆகியவற்றில் பத்மன் அவர்களின் அனுபவமும், உழைப்பும் மிளிர்கிறது.

சில பரிந்துரைகள்

ஐந்நூறு பக்கங்களுக்கு மேல் உள்ள இந்த நூலினைப் படிக்கத் தூண்டும் விதத்தில் சில பிற்சேர்க்கைகளைக் கொடுத்திருக்கலாம்.

• இந்த நூலில் குறிப்பிடப்படும் முக்கிய வரலாற்று ஆளுமைகள், தலங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு, அவை இந்நூலில் இடம் பெறும் பக்க எண்களைக் கொடுத்திருக்கலாம்.

• இந்த நூலில் சாவர்க்கரே குறிப்பிடும் அவரது பிற நூல்கள் பற்றிய ஒரு பட்டியல், பிரசுர விவரம், அவை இந்த நூலில் எங்கெங்கு குறிப்பிடப்பட்டுள்ளன எனும் பக்க எண் விவரம் ஆகியவற்றைச் சேர்த்திருக்கலாம். மேலும் இது போன்ற பிற முக்கியமான தகவல்களைத் திரட்டி வழங்கியிருக்கலாம். தற்செயலாக இந்த புத்தகத்தைக் கையில் எடுத்தாலும், சில தகவல்களாவது படிப்பவரின் மனதில் உட்புக இவை உதவலாம். இது ஆராய்ச்சிப் பணிக்கும், கட்டுரைகள் எழுத குறிப்பெடுக்க விரும்புபவர்களுக்கும் உதவும்.

• சாவர்க்கரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றையும் நூலின் இறுதியில் சேர்த்திருக்கலாம் . (எ.கா பிறப்பு – 1883….அந்தமான் – தீவாந்தர தண்டனை 1911-1921 என்பது போல). இது வாசகர்களுக்கு நூலாசிரியரின் தியாகமயமான வாழ்வினை அறிமுகப்படுத்தியிருக்கும். அடுத்த பதிப்பில் இந்த மதிப்புக்கூட்டல்கள் இடம் பெறும் என்று எதிர்பார்ப்போம்.

மறுமொழிபெயர்ப்புடன், இந்த நூலின் மறுபதிப்பு செய்த விஜயபாரதம் பிரசுரத்தின் பணி போற்றத்தக்கது.

இந்த நூல் யாருக்குப் பயன்படும்?

தமிழ்நாட்டில் பிரிவினைவாதக் கருத்துக்கள் தலையெடுத்திருக்கும் இந்தச் சூழலில் இந்த நூற் கருத்துக்கள் அவசியம் தமிழ் ஹிந்துக்கள் அனைவராலும் மனதில் இருத்திகொள்ளப்பட வேண்டியவை .

• குறிப்பாக இந்த நூல் மணவாழ்வினை மேற்கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக வழங்கப்பட்டால், ஹிந்து தர்மத்தின் வரலாற்றை தெளிவாக அறிந்துகொண்டு அறிவார்ந்த ஹிந்து குடும்பத்தைத் துவக்கிட உதவிகரமாக இருக்கும்.

• பள்ளிகளில் இன்றளவும் குழந்தைகள் கற்கும் குறைபாடுள்ள வரலாற்றைத் திருத்தி வீட்டில் ஹிந்துப் பெற்றோர் சரியான வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க இந்த நூல் உதவும்.

• பணிநிறைவு பெற்ற பெரியவர்கள் இந்த நூலைப் படித்து, தங்கள் பேரன், பேத்திகள், மற்றும் தங்களிடம் வழிகாட்டுதல் கேட்டு வரும் அடுத்த தலைமுறையினருக்கு நம் தேசம், தர்மம் பற்றி சரியான விஷயங்களை எடுத்துக்கூறமுடியும்.

இவ்விதம் ஹிந்து சமுதாயம் முழுவதுமே படித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் நிறைந்த முக்கிய நூல் வீர சாவர்க்கரின்  ‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’.

$$$

நூல் விவரம்:

பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்

மராட்டி மூலம்: வீர சாவர்க்கர்

ஆங்கிலம் வழி தமிழில்: பத்மன்

விலை: ரூ. 600 – 

விஜயபாரதம் பிரசுரம் வெளியீடு, மார்ச் 2021.

இந்தப் புத்தகத்தை ஆன்லைன் மூலம் இங்கு வாங்கலாம்

டயல் ஃபார் புக்ஸ் (தொலைபேசி எண்கள் 044-49595818, +91 94459 01234, +91 9445 97 97 97) மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s