நம்பிக்கை அளித்த மகான்

-சுவாமி சிவானந்தர்

நவீன இந்தியாவின் புகழ்மிக்க தேசப்பற்று கொண்ட இந்தத் துறவி 1863, ஜனவரி மாதம் 12-ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.  அவருக்கு நரேந்திரன் என்று பெயரிடப்பட்டது. அவரது தந்தை ஒரு மிகச் சிறந்த வழக்குரைஞர். அவரது அறிவுக்கூர்மை, பண்பாடு ஆகியவற்றால் அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டவர். அவரது தாய் தேவி புவனேஸ்வரி கடவுள் பக்தி மிக்கவர்; மட்டுமின்றி தனது குழந்தைகளை மிகச் சிறந்தவர்களாக வளர்ப்பதில் திறமையுடையவராகவும் இருந்தார்.

சிறு வயது நரேந்திரன் குறும்புத்தனத்தோடு மனோதிடம் கொண்டவனாகவும் இருந்ததால், அவரைக் கட்டுப்படுத்த தண்ணீர்க் குழாயின் கீழே அடிக்கடி அமர வைக்க வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் அவர் பெருந்தன்மை, அன்பு, பக்தி உடையவராயிருந்தார். அலைந்து திரியும் சாதுக்கள் அவருக்கு தணியாத ஆர்வத்தை ஏற்படுத்தினர். அவரது தாயுடன் இணைந்து ராமரையும், கிருஷ்ணரையும் வழிபடுவதில் மிக்க ஆனந்தமடைவார்.

பள்ளிக் கல்வி முடிந்ததும் கல்லூரிக்குச் சென்ற நரேந்திரன், அங்கு அனைவருடனும் கலந்து பழகினார். அவரை ‘கல்லூரி மாணவர் குழாமின் ஆன்மா’ என்றே கூறலாம். அவர் இல்லாமல் எந்தவொரு கல்லூரி  நடவடிக்கையும் முழுமையடைந்ததில்லை.

ஒருநாள் அவரது அண்டை வீட்டுக்கு தக்ஷிணேஸ்வரிலிருந்து ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்ற சாது எதிர்பாராதவிதமாக வருகை தந்தார். அங்கு பக்திப் பாடல்கள் பாடுவதற்கு நரேந்திரனும் அழைக்கப்பட்டார். மனம் எழுச்சி கொண்டு பேரானந்தத்தில் ராமகிருஷ்ணர் மெய்மறக்கும் வரையில் அவர் பாடல்களை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார். மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த பிறகு நரேந்திரனை அருகில் அழைத்து அமரவைத்த ராமகிருஷ்ணர் அவரைப் பற்றி விசாரித்தார். நாளடைவில் அவர்களிடையே உறவு வலுப்பட்டது.

நரேந்திரனின் தந்தை இறந்ததால் குடும்பத்தைக் காப்பாற்ற வேலை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சோதனையான காலகட்டத்தில் அவருக்கு ஆதாரமாக இருந்தது அவரது குரு ஸ்ரீ ராமகிருஷ்ணர் தான். கடவுளை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நரேந்திரன், அதை அறிந்துகொள்ள தனது குருவை நாடினார்; நாடியதை  குருவால் உணர்ந்தார்.

பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்றழைக்கப்படுவதற்கு முன்னதாகவே நரேந்திரா, தனது குருவின் குறிக்கோளை நிறைவேற்ற (குருவின் மறைவுக்குப் பிறகு) கல்கத்தா அருகில் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். இதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துவக்கப்புள்ளி.

கி.பி.1888 முதல் 1890 வரை விவேகானந்தர் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பரிவ்ராஜகராக பயணம் மேற்கொண்டார். நாடு முழுவதும் யாத்திரை சென்று அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவரது மாபெரும் ஆளுமை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவாமி விவேகானந்தர் சென்றார். மாநாட்டின் துவக்கத்தில் அவர் ஆற்றிய மகத்தான உரை அவருக்கு புகழையும், மிகச் சிறந்த சொற்பொழிவாளர் என்ற பெயரையும் இந்திய ஞானத்தை மிகச் சரியாக விளக்கும் ஆகச் சிறந்த உரையாளர் என்ற பெயரையும் கொடுத்தது. இதையடுத்து அமெரிக்காவில் மிகப் புகழ்மிக்க ஒருவராக மாறினார்.

சுவாமி விவேகானந்தரின் தனித்துவம் மிக்க ஆளுமையும் ஏழைகளுக்கு சேவை செய்ய அவர் விடுத்த அறைகூவலும் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் மட்டுமல்ல, உலகத்தினர் மத்தியிலும் இன்றும் செல்வாக்குடன் திகழ்கிறது.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு வந்தபோது ஒரு பைசா கூட அவரிடம் இல்லை. அவரிடம் இருந்தது கடவுளின் கருணை மீது கொண்ட அளவற்ற நம்பிக்கை மட்டுமே. மாநாடு முடிவடைந்த பிறகு அமெரிக்கா முழுவதும் இருந்து வரவேற்பும் மரியாதையும் அவருக்கு வந்துசேரத் துவங்கின. மிக முக்கியமான இடங்களில் எல்லாம் அவர் பேருரை ஆற்றினார்.

உண்மையான துறவியான அவர் பணத்திற்காக மதத்தையும் அதன் ஞானத்தையும் விற்பதற்கு மறுத்தார். நம்பிக்கை, தூய்மை, உண்மை ஆகியவற்றின் விதைகளை அவர் தனது சொற்பொழிவுகளின் மூலம் பரப்பினார். இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் பின்னர் இங்கிலாந்து,  ஐரோப்பிய நாடுகளில் மூன்று மாதங்கள் இருந்தார்.

இந்தியாவுக்குத் திரும்பியபோது அவருக்குக் கிடைத்த மாபெரும் கைதட்டலும் ஆரவாரமும் ஏழைகளை நோக்கி மதத்தை கொண்டுவரும் அவரது லட்சியத்திலிருந்து அவரது மனத்தை சிறிதும் திசை திருப்பவில்லை. அறியாமையில் மூழ்கி இருந்த மக்களை விழித்தெழுச் செய்வதும், வேதகால மதத்தை உயிர் பெறச் செய்வதும் நூற்றாண்டுகளாக அதை மூடியுள்ள தேவையற்ற அழுக்குகளையும் பழக்கங்களையும் அகற்றுவதுமே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

சுவாமி விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்தார்.

சுவாமி சிவானந்தர்

ஆறு ஆண்டுக் காலம் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் சீடனாக இருந்தது அவரை கடவுளின் ராஜ்ஜியத்துக்குக் கொண்டு சென்றது. ஏழு ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணம் செய்தது வாழ்க்கையைப் பற்றிய அவரது தரிசனத்தையும் சிந்தனையையும் விரிவடையச் செய்தது. அதற்குப் பின் உலக அளவில் பயணிக்கவும் பல்வேறு சேவைகளில் ஈடுபடவும் அவருக்கு ஒன்பது ஆண்டுகளே மீதமிருந்தன. ஆனால் அந்த ஒன்பது ஆண்டுகள் தான் உன்னதமான சேவைகள் நிறைந்தவையாக இருந்தன!

நம்பிக்கை, உறுதி, வலிமை – இதுவே விவேகானந்தர் அளித்த போதனை. நம்பிக்கையின்மைக்கு அவர் ஒருபோதும் அடிபணிந்தது இல்லை. ஏனெனில் இந்தியா வளர்ச்சி பெறத் தேவையான அனைத்து திறமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை அவர் அறிவார்.

நாட்டுக்கு அவர் விடுத்த தெளிவான அழைப்பு இதுதான்- விழுமின், எழுமின், உழைமின்!

 

கட்டுரையாளர் விவரம்: 

பூஜ்யஸ்ரீ  சுவாமி சிவானந்தர் (1887- 1963) ‘இமயஜோதி’ என்று புகழப்படுபவர்; ரிஷிகேஷத்தில் 1936-ல் ‘தெய்வீக வாழ்க்கை சங்கம்’ என்ற ஆன்மிக அமைப்பை நிறுவியவர்.  தமிழகத்தின் பத்தமடையில் பிறந்தவர்;  மகத்தான ஆன்மிக சாதனைகளை  நிகழ்த்தியவர். அவர் தொகுத்த ‘ஆன்மிக அருளாளர்கள்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சுவாமி விவேகானந்தரின் சுருக்கமான சரிதமே மேலே இடம் பெற்றுள்ளது. 

2012-13இல் இயங்கிய  ‘விவேகானந்தம்150.காம்’ என்ற இணையதளத்தில் வெளியான கட்டுரை இது...

தமிழில்: க.ரகுநாதன்

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s