தராசு கட்டுரைகள்- 4

-மகாகவி பாரதி

4. சுதேசமித்திரன் 22.01.1916

இன்று காலை நம்முடைய கடைக்கு ஒரு கவிராயர் வந்து சேர்ந்தார். வந்து, “வங்க தேசத்தின் மகாகவியென்று புகழ் பெற்றிருக்கும் ரவீந்திரநாத் டாகூர் செய்த ’கீதாஞ்சலி’ என்ற நூலில் சிறிய பாட்டொன்றைத் தமிழில் வசனமாக மொழிபெயர்த்திருக்கிறேன். சரிதானா என்று பார்க்க வேண்டும்” என்றார்.

“வாசித்துக் காட்டும்” என்றேன்.

“எங்கே மனதில் அச்சமில்லை; தலை நிமிர்ந்து நிற்கிறது; எங்கே அறிவுக்குக் கட்டில்லை;

எங்கே மனிதவுலகம் சிறிய வீட்டுச் சுவர்களால் துண்டு துண்டாகப் பிரிவுபடாதிருக்கின்றது;

எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து சொற்கள் நேரே புறப்படுகின்றன;

எங்கே ஓய்வில்லாத முயற்சி பரிபூரணத் தன்மையை நோக்கிக் கைநீட்டுகிறது;

எங்கே மதியாகிய தெளிந்த வாய்க்கால் செத்த வழக்கம் என்ற கொடிய பாலையின் மணலிலே மடியாது நீங்குகிறது;

எங்கே மேன்மேலும் விரிகின்ற கருத்திலும் செய்கையிலும் அறிவு மூண்டு செல்லும்படி நீ நடத்துகிறாய்;

அமரஸ்தானமாகிய அந்த ஸ்வதந்த்ர நிலையில், ஹே பிதா, எனது தேசம் கண்விழித்திடுக.”

(குறிப்பு:- அமரஸ்தானம்-தேவலோகம் ஸ்வதந்த்ரம்-விடுதலை; பிதா-கடவுள்.)

“மொழி பெயர்ப்பிலே பிழையில்லை. ஆனாலும், இன்னும் சிறிது சுலபமான நடையில் இருக்கலாம்“ என்று தராசு சொல்லிற்று.

* *

“பூசனிக்காய் சங்கதி சொல்லட்டுமா?” என்று நண்பர் செட்டியார் கேட்டார்.

“அதென்னையா?” என்று எல்லாரும் வியப்புடன் செட்டியாரைக் கேட்டார்கள்.

செட்டியார் சொல்லுகிறார்:- “சில தினங்களின் முன்பு சென்னைப் பட்டணத்தில் பொருட்காட்சி பார்க்க பத்திரிகையின் மனிதரொருவர் போயிருந்தார். அங்கே சாமான்யமாகக் கிடைக்கக்கூடிய மிகவும் பெரிய பூசனிக்காயைக் காட்டிலும் அதிகப் பெரிதாகிய ஒரு பூசனிக்காய் இருந்தது. ‘சாஸ்திர எருப் போட்டதனால் இந்தப் பயன் உண்டாயிற்றென்று தெரிகிறது. ஒரு புல் முளைக்கிற இடத்தில் இரண்டு புல் முளைக்கும்படி செய்பவன் தேசத்துக்குப் பெரிய உபகாரி’ என்று இங்கிலிஷ்காரர் சொல்வதுண்டு. ‘தொகைக்குள்ளது அளவுக்கும் உண்டு’ என்று அந்தப் பத்திரிகைக்காரர் சொல்லுகிறார். அதாவது, சிறிய இலை தரும் வாழையைப் பெரிய இலையைத் தரும்படி செய்பவனும் தேசத்துக்குப் பெரிய உபகாரியாவான். ‘பெரிய பூசனிக்காயை மற்ற பூசனிக்காய்கள் பார்த்துக் கொஞ்சம் வெட்கப்பட்டது போல விழித்தன. ஆனால் நமது பூர்வீகர்களிருந்த அளவு நமக்கும் போது என்ற ஒருவித வைதீகத் தோற்றமும் அந்தப் பூசனிக்காய்களின் முகத்திலே தென்பட்டது’ என்று அந்தப் பத்திரிகைக்காரர் எழுதியிருக்கிறார்.

இவ்வாறு செட்டியார் சொல்லிக்கொண்டு போகையில், நான் அவரை நோக்கி:- ஆமாங்கானும், அதற்கென்ன இப்போது? ஆலோசனைக்கு என்ன விஷயம் கொண்டு வந்திருக்கிறீர்? என்று கேட்டேன்.

தராசு:- சரி மேலே வியாபாரம் நடக்கட்டும் என்றது.

‘உங்க ஹிந்துக்களுடைய நாலு வேதத்துக்கும் பெயரென்ன?’ என்று ஜிந்தாமியான் சேட் கேட்டார்.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்றேன். எதுக்குக் கேட்கிறீர்? என்று செட்டியார் கேட்டார். அதற்கு ஜிந்தாமியான் சேட் சொல்வதானார்:- கேள்விப்பட்டேன், நேற்றுப் பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார். அவர் ‘ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழைமையானது. அதிலும் நம்ம குரானைப் போலவே அல்லாவைத் தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதுக்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதிலே ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்’. இன்னும் அந்த சாமியார் ஏதெல்லாமோ சொன்னார். அதிலிருந்து ஞபாகம் உண்டாயிற்று.

“வேதம் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்களோ?” என்று மற்றொருவர் கேட்டார்.

“இல்லை” என்றேன்.

“என்ன காரணம்? என்றார் கவிராயர்.

“அதற்குத் தகுந்த திறமையுடைய பண்டிதர்கள் இல்லை. ஒரு வேளை இருந்தாலும், அவர்கள் தொழில் செய்யவில்லை.”

“ஆமாம் வேதத்துக்குப் பலவிதமாக அர்த்தஞ் சொல்லுகிறார்களாமே? என்ன காரணம்?” என்று செட்டியார் கேட்டார்.

“மற்றொரு முறை அந்த விஷயம் பேசுவோம். வேறேதேனும் வியாபாரமுண்டோ?” என்றேன்.

* *

சயன்ஸ் என்பதென்ன?

ஐரோப்பிய இயற்கை நூலுக்கு இங்கிலீஷ் பாஷையில் சயன்ஸ் என்று பெயர்.

“ஐரோப்பிய இயற்கை நூல்” என்று தனியாக ஒரு சாஸ்திரமுண்டா?

அப்படியில்லை. அந்த சாஸ்திரத்திலே நம்மைக் காட்டிலும் அவர்கள் அதிகத் தேர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

அதிலே என்ன பயன் உண்டாகிறது,

புதிய விழி உண்டாகிறது.

புதிய விழி என்பதென்ன?

பூமண்டலத்தையும் சர்வத்தையும் பற்றிய புதிய அறிவு.

நமது பூர்வீகங்களுக்கு இல்லாத அறிவு இப்போது சாத்தியப்படுமா?

அதைப் பற்றிய பேச்சில்லை.

நமக்கு இதுவரை இல்லாத அறிவு இப்போது சாத்தியப்படுமோ?

“முற்படுக; எழுக!” என்றது தராசு.

  • சுதேசமித்திரன் (22.01.1916)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s