மகாவித்துவான் சரித்திரம்- 1(21-அ)

-உ.வே.சாமிநாதையர்

21. பல நூல்கள் இயற்றல் – அ

திருவிடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழ்

ரௌத்திரி வருஷம், திருவிடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழை இவர் இயற்றினார். அதனை ஆக்குவித்தோர் அந்த ஸ்தலத்திலிருந்த கார்காத்த வேளாளப் பிரபுவாகிய சுப்பராய பிள்ளை யென்பவர். அந்தப் பிள்ளைத் தமிழை அரங்கேற்றத் தொடங்கியபொழுது ஒருவர் அப்பிரபுவினிடம் எதனையோ காதோடு முணுமுணுத்துவிட்டு வந்து இவர்க்கு முன்னம் அமர்ந்து செய்யுள் நிரம்ப நன்றாயிருக்கிறதென்று தலையசைத்துச் சந்தோஷித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சபையில் இருந்தவர்களில் ஒருவராகிய சிங்கவனம் சுப்பு பாரதியார், “அவர் சொல்லியது என்ன?” என்று கேட்டார். சுப்பராய பிள்ளை, “இச்செய்யுளின் முதற்சீர் பொருத்தம் இல்லாதது; ஏதேனும் கடுமையான தீங்கு உங்களுக்கு விளைந்தாலும் விளையலாமென்று அவர் சொன்னார்” என்று மெல்லச் சொன்னார். அதனைக் கேட்ட பாரதியார் குற்றம் கூறியவரை விசாரிக்க வேண்டுமென்று நினைந்து பார்க்கையில் அயலிலிருந்த அவர் காணப்படவில்லை; எங்கேயோ போய்விட்டார். உடனே பிள்ளையவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர். இவர், “குற்றம் கூறியவரை அழைத்து வரும்படி2ச் செய்தால் உள்ள குற்றத்தை விசாரித்தறிந்து சமாதானம் சொல்லுகிறேன்” என்றார்.

சுப்பராய பிள்ளையினுடைய ஏவலினால் சிலர் சென்று பலவிடத்தில் தேடிக் கண்டுபிடித்து அவரை அழைத்துவந்து சபையில் நிறுத்தினார்கள். அவர் உடம்பு நடுங்கியது; ‘ஏன் தெரியாமல் இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டோம்?’ என்று அவர் நினைத்தார். அப்பொழுது சுப்பு பாரதியார், “ஐயா, இச்செய்யுளின் முதற் சீரிலிருக்கும் பொருத்தக் குறைவு யாது?” என்று அவரைக் கேட்டனர். அவர் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். பாரதியார், “பொருத்த இலக்கணத்தைச் சொல்லும் நூல்களுள் எதையேனும் படித்திருக்கிறீரா?” என்றார். “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று அவர் விடையளித்தார். சுப்பு பாரதியார், “அவ்வாறிருக்க நீர் ஏன் இப்படி இரகசியமாகக் குற்றம் கூற வேண்டும்?” என்றார். அவர் சரியான விடை கூறுதற்கு இயலாதவராகி விழித்தார். இவற்றைக்கண்ட இக்கவிஞர் பெருமான் அவருடைய அறியாமைக்கு இரங்கி அவ் விசாரணையை நிறுத்தச் செய்தார். அப்பால் அரங்கேற்றுதல் முறையாக நடந்து நிறைவேறியது.

இத்தலத்தின் பெயர் விடைக்கழி யெனவும் இடைக்கழி யெனவும் வழங்கும். இத்தலத்தில் முருகக்கடவுள் குரா மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்; இவை,

“குலவிடைக் கழியின் *1 மகிழ்வனத்திலொரு
குரவடிக்கணமர் நீபமாலைப்புய வேளைப்புரக்கவே.” (காப்பு. 2)
“தேமலர் மேய குராநிழல் வாழ்பவ செங்கோ செங்கீரை”(செங்கீரைப். 10)

என்பவற்றால் விளங்கும்.

இத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் திருநாமம் பாவநாசப் பெருமானென்பது; இது,

“வழுவில் பத்திமைய ரிருதயத்தளியின் மணிவிளக்கினமர்
பாவநாசப்பெரு மானைப்பழிச்சுதும்”

எனச் சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்திற் பூசித்துப் பேறுபெற்றோர் இன்னாரின்னா ரென்பது,

“பொருள்சால் பொகுட்டிதழ் மணத்தவிசி னான்முகப் புத்தேண் முதற்புலவரும்
பொறிபுல னடக்கியொரு நெறியுறு வசிட்டன்முற் புண்ணியத் திருமுனிவரும்
வெருள்சான் முனைத்தலைய வேற்கைமுசு குந்தனொடு வேந்தன்முற் பலவரசரும்
மேவிப் பணிந்துளத் தெண்ணிய தடைந்தவிம் மேதகு தலம்” (அம்புலிப். 9)

என்னும் பகுதியால் அறியப்படும்.

இந்நூலுள் தன்மை நவிற்சி, தற்குறிப்பேற்றம் முதலிய அணிகள் அமைந்த பாடல்கள் பல உள்ளன.

இந்திரனும் திருமாலும் இந்திரன் உபேந்திரனெனப் பொருந்திய முறைமைக்கேற்ப அவ்விருவருடைய மகளிராகிய தெய்வயானையம்மையையும் வள்ளி நாயகியையும் முறையே முருகக்கடவுள் மணஞ் செய்துகொண்டனரென்ற கருத்தை,

“தார்கொண்ட விந்திர னுபேந்திர னெனப்புரந் தரன்வளைக் கரன்மரீஇய
தன்மைக் கிணங்கமுன் றெய்வயா னைக்குவண் டார்புனைந் திறவுளர்குலத்
தேர்கொண்ட கோதைக்கொர் கோதைபின் சூட்டியுல கின்புற்று மகிழமேவும்
இறைநிறை பொழிற்றிரு விடைக்கழிக் குமரேச னின்றமிழ்க் கவிதழையவே”

                              (விநாயக வணக்கம்)               

என்னும் செய்யுளில் அமைத்துள்ளார்.

முருகக் கடவுள் ஆறு சமயங்களுக்கும் ஆறாதாரங்களுக்கும் ஆறு அத்துவாக்களுக்கும் தாமே முதல்வரென்பதைத் தெரிவிக்க ஆறு திருமுகங்களோடு விளங்குகின்றாரென்னும் கருத்து,

“ஆட்டுஞ் சமய மாறினுக்கு மாதா ரங்க ளாறினுக்கும்
அத்து வாவோ ராறினுக்கு மமையுந் தானே முதலென்று
தீட்டும் படியா வருந்தெளியத் தெளித்தாங் காறு முகந்திகழச்
செல்வ மலியு மிடைக்கழிவாழ் சேயைப் பரிந்து காக்கவே”

என்னும் காப்புப்பருவச் செய்யுளொன்றி லமைந்துள்ளது.

சிற்றிற் பருவத்தில், மகளிர் முருகக்கடவுளை நோக்கி, “தேவரீரை நினைந்து உருகும் அடியார்களுடைய வினை முதலியவற்றைச் சிதைத்தருள்க; எம்முடைய சிற்றிலைச் சிதையாதீர்” என்றும், “தேவரீர் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருந்த காலத்து உமாதேவியார் அங்கு வந்து ஒரே திருவுருவமாகச் செய்தபொழுது ஆறு திருமுகங்களமைத்ததற்கேற்பப் பன்னிருகைகள் செய்தது போலப் பன்னிரண்டு கால்களும் அமையாமல் விட்டது நாங்கள் முற்பிறப்பிற் செய்த நல்வினையே” என்றும் கூறுவதாக உள்ள செய்யுட்கள் படித்தின்புறற் பாலன:

“கண்ணீர் பெருக வுருகியுளங் கசிநின் னடியார் மலமாயா
    கன்ம முழுதுஞ் சிதையவர்முற் கடிய வினையைச் சிதையவர்தம்
எண்ணீர் பிறவிக் கணக்கெழுது மேட்டைச் சிதைநீ யேபரமென்
   றெண்ணா திழுதை யுறுமுனக ரெண்ணஞ் சிதைமற் றிவைதவிர்ந்து
புண்ணீர் கவரும் வடிவேற்கைப் புலவா புலவர் போரேறே
   பொறியி லேஞ்சிற் றிலஞ்சிதைத்தல் புகழோ வலது புண்ணியமோ
தெண்ணீர் வளங்கூர் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
   சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.” (6)

“நையா நின்ற சிறுமருங்கு னங்கை யுமையாள் பரமனொடும்
   நறுநீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் நண்ணி முகமா றினுக்கேற்பக்
கையா றிரண்டு புரிந்ததுபோற் காலா றிரண்டு செய்யாது
   கருதி யிரண்டே செய்தனண்முற் கடையேஞ் செய்த நல்வினையால்
மெய்யா விரண்டா யிருந்துமவை விளைக்குங் குறும்பு பொறுக்கரிதா
   விளைந்த தினியாஞ் செயலென்னே வீடு தோறும் விடாதமர்ந்து
செய்யாண் மகிழும் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
   சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.” (9)

சிவபெருமான் திருக்கரத்திலுள்ள தமருகத்தைப் பறையென்று நினைந்து அதனை அடிப்பதற்குக் குணில் தேடிய முருகக் கடவுள், தம்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த விநாயகக் கடவுளுடைய கையிலுள்ள கொம்பைப் பிடித்து இழுக்க, விநாயகரும் எதிரே இழுக்க, அதனால் உண்டான கலகத்தை யறிந்த உமாதேவியார் அவ்விருவர்க்கும் இடையே புகுந்து அக்கலகத்தைத் தவிர்த்துச் சிவபெருமான் சடையிலுள்ள பிறையைக் கொடுப்ப அதற்கு முருகக்கடவுள் மனமகிழ்ந்தன ரென்னும் கற்பனையொன்று சிறுதேர்ப் பருவத்தில்,

“ஆக்கும் பெருந்தொழில மைந்தவொரு தமருக மவாவுபறை யென்றுளங்கொண்
    டன்னதை யடித்திடக் கைக்கொளுங் குணிறேடி யருகுவிளை யாடிநின்ற
தாக்குந் திறற்களிற் றொருகர தலக்கோடு தனையுறப் பற்றியீர்க்கத்
    தவாவலிகொ ளக்களிறு மெதிர்பற்றி யீர்க்கத் தழைந்திடு கலாமுணர்ந்து
வாக்குஞ் சுவைத்தேன் மாலைக்குழற்றாய் வயங்குற நடுப்புகுந்து
    மறையோதி மந்தேடு வேணிப் பிறைக்குணில் வயங்கக் கொடுக்கவுவகை
தேக்குந் திறற்குக விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே
    திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.” (4)

என்னும் செய்யுளில் அமைந்துள்ளது.

திருவிடைக்கழிக் குறவஞ்சி

திருவிடைக்கழியில் அந்தப் பிள்ளைத் தமிழை அரங்கேற்றிக் கொண்டிருந்தபொழுது உடனிருந்த சிங்கவனம் சுப்பு பாரதியார் இவரிடம் குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லிக் காட்டினார். இவரும் உடனிருந்தவர்களும் கேட்டு ஆனந்தித்தனர். அப்பொழுது முற்கூறிய சுப்பராய பிள்ளை, “இந்த ஸ்தலத்திற்கும் ஒரு குறவஞ்சி இயற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஒரு நூல் இவராற் செய்து அரங்கேற்றப் பெற்றது. அரங்கேற்றுகையில் அதனைப் படித்தவர் இசைப்பயிற்சியுள்ளவராகிய வல்லம் கந்தசாமிபிள்ளை யென்பவர். அந்த நூல் திருவிடைக்கழிக் குறவஞ்சியென வழங்கும். இப்பொழுது அது கிடைக்கவில்லை.

ஆற்றூர்ப் புராணம் முதலியன

ரெளத்திரி வருஷத்திலேயே ஆற்றூர்ப் புராணமும் விளத்தொட்டிப் புராணமும் திருவாளொளிபுற்றூர்ப் புராணமும் இவரால் இயற்றப்பெற்றன. ஆற்றூர்ப் புராணத்தைச் செய்வித்தவர் கலியாணசோழபுரம் கணபதி பிள்ளையின் குமாரர் சிதம்பரம் பிள்ளை யென்பவர். விளத்தொட்டிப் புராணம் செய்வித்தவர்கள் அவ்வூரிலிருந்த சைவ வேளாளர்கள். திருவாளொளி புற்றூர்ப் புராணம் செய்வித்தவர்கள் அத்தலத்துச் சைவ வேளாளர்களே.
இவற்றை முறையே அவ்வப் புராணங்களிலுள்ள,

“தழைதருநல் லாற்றூர்மான் மியமுழுது மொழிபெயர்த்துத் தமிழிற் பாடி
விழைதருமா தருகவெனக் கலியாண சோழபுரம் விரும்பி வாழ்வோன்
உழைதருகைப் பெருமானா ருவந்துறையத் தலப்பணிமுற் றொருங்கு செய்தே
இழைதருபொன் னாலியன்ற கும்பாபி டேகமுஞ்செய் தின்பந் துய்ப்போன்”

“தில்லைநட ராசருக்குச் சொன்னவிமா னமுங்கலனுஞ் செய்து நல்கி
வல்லையவர் குஞ்சிதத்தா மரைக்கொருதா மரைசூட்டி மகிழு மேலோன்
எல்லையிலாப் புகழ்படைத்த சிதம்பரமால் கேட்கவுவந் தேற்று மாறாத்
தொல்லைவினை முழுதொழிப்பான் ஞானமிலா யான்பாடத் துணிந்தேன் மன்னோ”

                            (ஆற்றூர்ப்புராணம், பாயிரம், 22 - 3.)

“தண்ணியவா னவர்புகழும் பெருமானார் விளத்தொட்டித் தலப்பு ராணம்
நண்ணியவான் புகழ்மிகுமந் நகர்ச்சைவ வேளாளர் நயந்து கேட்பக்
கண்ணியவான் றமிழாற்செய் தான்றிரிசி ராமலையிற் களித்து வாழும்
புண்ணியவான் மீனாட்சி சுந்தரநா வலவனியற் புலவ ரேறே”

                          (விளத்தொட்டிப் புராணம், சிறப்புப்பாயிரம்)

“ஈகைமேற் கொண்ட நல்லா ரீசனுக் கன்பு சான்றார்
ஓகைசால் புகழின் மிக்கா ரொலிகெழு வேளாண் மாந்தர்
பாகைநேர் தமிழாற் பாடித் தருகெனப் பரிந்து கேட்க
*2 வாகையா ரணிய நாதன் மான்மியம் பாட லுற்றேன்”

                           (திருவாளொளிபுற்றூர்ப் புராணம், பாயிரம், 21)

என வரும் செய்யுட்களால் அறியலாகும்.

ஆற்றூர்ப் புராணம்

*3 ஆற்றூரென்னும் ஸ்தலத்தில் எழுந்தருளிய விநாயகர், சிவபெருமான், அம்பிகை யென்னும் மூவருடைய திருநாமங்கள் முறையே மந்தாரவன விநாயகர், சொன்னயான நிரோதன நாதர், அஞ்சனாட்சியம்மை என்பனவாகும். இத்தலத்திற்குச் சொன்னயான நிரோதனபுரம், நதிபுரம், நடனபுரமென வேறு பெயர்களும் வழங்கும்.

சோழநாட்டை ஆண்டுவந்த சோழேந்திரனென்னும் ஓரரசன் தன் நாட்டெல்லையைப் பார்ப்பதற்காக யானைமேலிவர்ந்து நாடுகளையெல்லாம் கண்டு பின்பு காட்டின் வளங்களைக் கண்டு களிக்கச் சென்றனன். யானைக்குக் காட்டினுட் செல்ல முடியவில்லை. அதனையறிந்த அரசன் மயனை அழைத்துப் பொன் விமானம் ஒன்றை இயற்றுவித்து அதில் தன் மந்திரிமார் முதலியவரோடு ஏறிச் சென்றனன். அதுவும் அங்கே ஒரு மந்தார மரத்தின் நேரே தடைப்பட்டு நின்றது. அதன் காரணத்தை அறிய விரும்பிய அரசன் விமானத்தினின்றும் இறங்கி அம்மரத்தினடியிற் சென்று பார்த்தபொழுது ஒரு புற்றையும், அதனை அகழ்ந்த பின்பு சுயம்புருவாக எழுந்தருளிய சிவலிங்கப் பெருமானையும் கண்டனன். இந்தக் காரணத்தால் இவ்வூருக்குச் சொன்னயான நிரோதனபுரமென்றும், சிவபெருமானுக்குச் சொன்னயான நிரோதனரென்றும் திருநாமங்கள் உண்டாயின. அச்சோழன் இவ்வூரின் தென்கிழக்கில் மாளிகையொன்றமைத்து விரும்பியவர்க்குக் கலியாணம் செய்வித்து அளித்தான். அக்காரணத்தால் கலியாண சோழபுரமென்னும் பெயரும் இதற்கு அமைந்தது. இவை,

“சொன்ன யானந் தடுத்தாண்ட தோலா வருளா லிறையவர்க்குச்
சொன்ன யான *4 நிரோதரெனத் துதிக்கு மொருநா மஞ்சூட்டிச்
சொன்ன யான நிரோதபுர மென்று நகர்க்கும் பெயர்சூட்டிச்
சொன்ன யான முன்னூர்ந்த சோழேந் திரனுண் மகிழுவான்”

“மன்னு மனைய நகர்த்தென்கீழ் வளமா ளிகையொன் றமைத்தமர்ந்து
மின்னு மளவாக் கலியாணம் வேட்டோர்க் களித்தான் கலியாணந்
துன்னுந் திறத்தாற் கலியாண சோழ புரமா கியதவ்வூர்
இன்னு மறிஞர் காரணப்பே ரென்னப் பொலியு மந்நகரே”

                       (சொன்னயான நிரோதனபுரப் படலம், 48, 50)

எனவரும் பாடல்களால் அறியலாகும்.

தன் விமானம் தடைப்பட்டபொழுது சோழன் தன் மந்திரிமாரை நோக்கிக் கூறுவதாக உள்ள,

“பொன்செய்த விவ்வி மானம் புட்பக விமான மன்று
மின்செய்த மலரித் தாரு வெள்ளியங் கைலை யன்று
கொன்செய்த மதியீர் யானுங் கொடியவா ளரக்க னல்லன்
தென்செய்த மான நின்ற காரணம் தெரியே னென்பான்” 

                (மேற்படி. 15)

என்னும் செய்யுள் சோழனுடைய அன்பைப் புலப்படுத்துகின்றது.

தவஞ்செய்வோர்க்குத் தோன்றாத பெருமான், சன்மார்க்கமென்பதைச் சிறிதும் அறியாத அடியேனுக்கு வெளிப்பட்டுப் பித்தனென்னுந் திருநாமத்தைப் புதுப்பித்தானென்னும் கருத்தமைந்த,

“அகன்றிடு கடும்பி னோரா யடவிபுக் கருந்த வஞ்செய்
துகன்றிடு மவர்க்குச் சற்றுந் தோன்றிலான் றொழுஞ்சன் மார்க்கத்
திகன்றிடு மெனக்குத் தோற்ற மெய்தினான் பித்த னென்று
புகன்றிடு மொருநா மத்தைப் புதுக்கினான் கொல்லோ வென்பான்” 

               (மேற்படி. 25) (செய்து கன்றிடுமென்க.)

என்பது போன்ற பல அருமைச் செய்யுட்களை இந்நூலின் கண்ணே காணலாம்.

கயற்கண்ணி என்னுமோ ரந்தணப்பெண் தன்னை மணஞ்செய்து கொண்டருள்கவென்று சிவபெருமானை நோக்கிக் கூறுவனவாகவுள்ள பாடல்கள் தேவாரச் சந்தத்தையொத்த சந்தத்திலமைந்து அழகுபெற விளங்குகின்றன:

“ஓங்குமந் தார வனத்து மேவு முத்தம னேயிஃ தொன்று கேணீ
வாங்கு மதிலுயர்ந் தோங்கு கூடன் மன்னன் மகளை மணம்புரிந்தாய்
ஈங்கொரு பூசுரன் பெற்ற பெண்யான் என்பது நீயறி யாத தன்றே
பாங்கு மலியவென் றோளின் மாலை சூட்டியென் பையு ளகற்று வாயே.”

“திருந்துமந் தாரவ னத்து மேவுஞ் சிவபெரு மானிஃ தொன்று கேணீ
பொருந்து *5 கலவர் குலத்துதித்த பூவை யையுமண மாலை யிட்டாய்
அருந்தவர் சங்கர னென்ப ருன்னை அன்ன பெயர்ப்பொருண் மாறு றாமே
வருந்துமென் றோளணி மாலை சூட்டி மருவிய பையு ளகற்று வாயே.”

“நாடுமந் தாரவ னத்து மேவு நாயக னேயிஃ தொன்று கேணீ
மாடு மிசையு முகிலு லாவும் மலைக்கு மகளை மணம்பு ரிந்தாய்
ஆடுநின் றாளென்றும் போற்றி செய்வேன் அன்புக் கிரங்கி யெழுந்தருளிச்
சூடுநின் மாலையென் றோளிற் சூட்டித் தொக்கவென் பையு ளகற்று வாயே.”

                       (கயற்கண்ணி திருமணப். 51 - 3)

தலவிசேடந் தேவிக்குணர்த்திய படலத்தில், சிவபெருமான் தாம் எழுந்தருளிய தலங்களுள், ஊர், குடி, வாயில், பள்ளி, ஈச்சரம், காடு, துறை, குன்றம், புரமென்னும் சொற்களை ஈற்றிலுடையவற்றை முறையே சொல்லிச் செல்லுவதாக அமைத்துள்ள பகுதி இவ்வாசிரியருக்குத் தலங்களைப் பற்றியுள்ள ஞாபக விசேடத்தைப் புலப்படுத்துகின்றது.

இந்நூலிலுள்ள படலங்கள், 17; செய்யுட்டொகை, 525.

விளத்தொட்டிப் புராணம்

*6 விளத்தொட்டியில் எழுந்தருளிய ஈசன் திருநாமம், பிரமபுரீசரென்பது; அம்பிகையின் திருநாமம் கரும்பிரதநாயகி. இத் தலத்தின் பெயர் வில்வாரணியமெனவும் வழங்கும். இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றோர், வயிரவர், வேணுகோபாலர், பிரமதேவர், திக்குப்பாலக ரெண்மர் முதலியோர் ஆவர்.

இத்தலத்து விருட்சம் கூவிளம் (வில்வம்) ஆதலாலும் இத் தலத்திற் கரும்பிரத நாயகியம்மை முருகக்கடவுளைத் தொட்டிலிட்டு வளர்த்தமையாலும், இத்தலம் இப்பெயர் பெறும். இப்பொழுதும் இவ்வூரிலுள்ளார் தம் குழந்தைகளைத் தொட்டிலில் வளர்த்துவதில்லை யென்பர். இவை இப் புராணத்துள்ள,

“அன்றுமுத *7 றொட்டிகடை யடுத்தேகூ விளமுதறீர்ந்
தென்றும்விளத் தொட்டியென வெய்தியதந் நகர்நாமம்
நன்றுமணித் தொட்டியின்மே னாடோறு மினிதமர்ந்து
தொன்றுமுரு கன்பால சுப்பிரம ணியனானான்”

“தொட்டியமர்ந் தொருபால சுப்பிரம ணியச்செம்பொற்
கட்டியினி தென்றுமுறுங் காரணத்தா லனையவிளத்
தொட்டிநகர் வாழ்வார்தஞ் சூழ்மனையின் மழத்தொட்டி
கட்டியறி யார்வேறு கட்டிவளர்த் தோங்குவார்”

                     (விளத்தொட்டிப் படலம், 20, 22)

என்னும் செய்யுட்களால் உணரப்படும்.

இந்நூலிலுள்ள படலங்கள், 17; செய்யுட்கள், 352.

வாளொளி புற்றூர்ப் புராணம்

வாளொளி புற்றூரென்னுந்தலம் அரதனபுரமெனவும் வழங்கும்; தேவாரம் பெற்றது. இத்தலத்து ஸ்வாமியின் திருநாமம் மாணிக்கலிங்கரென்பது; அம்பிகையின் திருநாமம் வண்டுவார்குழல் நாயகி யென்பது. இத்தல விருட்சம் வாகை. குசகேதுவென்னும் ஒரு சோழவரசன் பொருட்டு அரதனப்பாறையிலிருந்து சிவபெருமான் சிவலிங்க வடிவாகத் தோற்றினமையால் இத்தலம் அரதனபுரமெனப் பெயர்பெற்றது. வாசுகி யென்னும் மகாநாகம் இத்தலத்தையடைந்து சிவபெருமானை வழிபட்டு ஆபரணமாகும் பேறு பெற்றது. அப்பாம்பு ஒரு புற்றிலுறைந்தமையால் புற்றூரென்று முதலில் ஒரு பெயருண்டாயிற்று.

தீர்த்தயாத்திரை செய்துவந்த அருச்சுனன் இத்தலத்தையடைந்தபொழுது மிக்க நீர்வேட்கையால் வருந்தினான். அப்பொழுது சிவபெருமான் ஒரு வயோதிகப் பிராமணராக அவன் முன் தோன்றி ஒரு தண்டைக் கொடுத்து, “இதனை ஊன்றுமிடத்துத் தண்ணீர் தோன்றும்; அதனைப் பருகிச் சோகம் தீர்வாய்” என்று அருளிச்செய்தனர். அருச்சுனன் தன்னுடைய வாளை அவர் முன்னேவைத்து, “யான் நீர் பருகித் திரும்புமளவும் வேறொருவர் இதனைக் கவர்ந்து கொள்ளாதபடி பார்த்துக்கொண்டிரும்” என்று சொல்லித் தடாகத்திற்குச் சென்றனன். இறைவர் அவ்வாளை முன் கூறிய புற்றில் ஒளித்துத் திருவுருக்கரந்தனர். இதனால் வாளொளிபுற்றூரென இத்தலத்திற்கு ஒரு பெயருண்டாயிற்று. கோடையை வருணிக்கும் பகுதியில்,

*8 தாலமெலாம் வறண்டதெனத் தவாமலிரட் டுறமொழிய
ஞாலமெலா மெவ்வுயிர்க்கு நாவிடத்தும் புனலில்லை
சீலமெலாந் திரியாது சேரவவை நனைப்பதனுக்
கோலமெலாம் பொலிகடன்மண் ணுலகிடத்தும் புனலில்லை”

“புவியகத்து வாழ்வார்கள் புளிந்தயிரும் புளிஞ்சோறும்
குவியகத்த புளிங்கறியு மல்லாது கூட்டுண்ணார்
சவியகத்த பெருங்குடிஞைத் தலனடைந்து வசிப்பவரும்
செவியகத்துப் புகுமாறு வினவுவதீம் புனல்வளமே”

                        (வாளொளி புற்றூர்ப் படலம், 15, 17.)

என வரும் செய்யுட்களும், தன்னுடைய வாள் ஒளிக்கப்பெற்றமையால் அருச்சுனன் அதனைத் தேடிக் காணாமற் சிவபிரானிடம் வந்து,

“மறங்கொண்ட விராவணற்கு வாள்கொடுத்தாய் முன்னடியேன்
நிறங்கொண்ட வாள்கவர்த னிலவுகரு ணைக்கழகோ
அறங்கொண்ட மலர்வாகை யரதநமா நகர்மேவும்
நிறங்கொண்ட மாணிக்க நின்மலநா யகவென்றான்” 

                        (மேற்படி. 47)

என்று முறையிடுவதாகவுள்ள செய்யுளும் பிறவும் படித்தறிந்து மகிழ்தற்குரியன.

இந்நூற் படலத்தொகை, 20; செய்யுட்டொகை, 527.

இம் மூன்று புராணங்களையும் அப்பொழுதப்பொழுது எழுதி உபகரித்தவர் மதுரை இராமசாமி பிள்ளையென்பவர்.

*9 அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் 

இம்மூன்று புராணங்களும் இயற்றிய பின்பு திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் மீது பிள்ளைத்தமிழொன்று இவராற் செய்யப்பட்டது. அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழென்று அது வழங்கும். கற்பனை நயமும் சைவ சாஸ்திரக் கருத்துக்களும் திருவாவடுதுறை யாதீன சம்பிரதாயப் பகுதிகளும் அதில் அங்கங்கே அமைந்துள்ளன. பிள்ளையவர்கள் அதனை அரங்கேற்ற வேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டபொழுது, அம்பலவாண தேசிகர் ஆதீனத்துத் தம்பிரான்கள் பலரையும் வித்துவான்கள் பிரபுக்கள் பலரையும் ஒருங்கு சேர்த்து ஒரு சபை கூட்டி  சுப்பிரமணிய தேசிகருடன் தாம் வீற்றிருந்து அப்பிள்ளைத் தமிழ்ச் செய்யுட்களைக் கேட்டு அவற்றிலுள்ள நயங்களை அப்பொழுதப்பொழுது தெரிந்து மகிழ்ந்தும் எடுத்துப் பாராட்டி மகிழ்வித்தும் வருவாராயினர். அக்காலத்தில் முத்தப் பருவத்திலுள்ள,

“ஒளிவார் திருப்பனந் தாளின்முன் னாளிலுள் ளுருகிநி னடிப்பூசையாற்
    றொருமாது சூட்டுபூ மாலையை விரும்பிநின் னுருவமிக வுங்குனிந்தாய்
அளிவார் மனத்தினெம் பாமாலை வேண்டுமே லவ்வளவு குனியல்வேண்டா
    ஐயசற் றேகுனிந் தெண்ணியதை யன்புட னளித்தருள வேண்டுமின்னும்
வளிவார் பெரும்புவி தெரிக்கவவ் வணநிற்கின் மாண்புடைக் கலயனாரை
    மற்றெங்கு யாஞ்சென்று தேடுவே மாதலால் வளமிக்க கழகந்தொறும்
தெளிவார் குழாங்குழுமி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே
    சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே”

என்னும் பாடலை இவர் வாசித்துப் பிரசங்கம் புரிகையில் அம்பலவாண தேசிகர் மகிழ்வுற்றவராய்த் தாம் சேமத்தில் வைத்திருந்த கல்லிழைத்த ஏறுமுக ருத்திராட்ச கண்டியொன்றை வருவித்து இவரை அருகில் அழைத்து, “நாம் குனிகின்றோம்; நீங்களும் இப்பொழுது சற்றே குனிய வேண்டும்” என்று சொல்லி அதனை இவர் கழுத்திற் புனைந்தாரென்பர்.

அம்பலவாண தேசிகர் சுப்பிரமணிய தேசிகரை அருகிலிருத்தி அவருடைய குணவிசேடங்களைப் பாராட்டி அடிக்கடி அவர் முதுகு தைவருதலை இவர் நேரில் பார்த்தவராதலின் அதனையும் பின்னும் அவர்பால் வைத்துள்ள கருணைமிகுதியையும் பின்வருஞ் செய்யுட்களில் எடுத்துப் பாராட்டி இருக்கின்றனர்:

“பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்த முனைப்
    பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல
உருவாய் மையுநல் லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனும்
    உண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று
திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய
    தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால்
குருவாய் மாடக் *10 கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
    குரவர் சிகாமணி யம்பல வாண கொட்டுக சப்பாணி” 

                          (சப்பாணிப். 9)

வேறு

“போற்றுநாம் வருகென் றழைத்தபொழு தெய்திலான் புகலிவ னெனத்திருக்கண்
    போதச் சிவந்துழிக் குரவற் பிழைத்ததன் புகரெண்ணி யிருவினைகளும்
காற்றுதிரு முன்னர்வர வஞ்சினா னென்றருகு கவினமே வுற்றவனையான்
    கண்மணியை யனையசுப் பிரமணிய தேவனக் கண்சிவப் பாற்றுவித்தான்.”

                              (அம்புலிப். 7) 

“வானாடு மேவும் புறத்தொண்டர் சொற்றபடி வையமு நடாத்தினாயிம்
    மண்ணாடு மேவிய வகத்தொண்ட ரேம்யாம் வகுத்தபடி கேளாமையென்
கானாடு மதுசொற்ற படிநடத் தோமெனிற் கைகுவித் தெய்திநினது
    கண்மணியை யனையசுப் பிரமணிய தேவன்முன் கரைவோங் கரைந்தபொழுதே
பானாடு மனையனின் பால்வந் துரைக்கினெப் படிமறுத் திடுவையனைய
    பக்கநீ தவிர்வதே யிலையாத லால்யாம் பகர்ந்தபடி கேட்டல்வேண்டும்
தேனாடு பூம்பொழிற் சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே
    செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.”

இப்பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் வேறு பிள்ளைத் தமிழ்களைப்போலத் திருமால் முதலியவர்களைக் காப்பாகக் கூறுதலைத் தவிர்த்துத் திருவாவடுதுறையாதீனத்துக் குரு பரம்பரையினர்களைக் கூறுகின்றார். அவ்வகையில், திருநந்தி தேவர், சனற்குமார முனிவர், சத்திய ஞானதரிசனிகள், பரஞ்சோதி முனிவர், மெய்கண்ட சிவாசாரியர், அருணந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்த சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர், அருணமச்சிவாயர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய மூர்த்திகள் முதலியவர்களைக் காப்பாகக் கூறும் பதினொரு செய்யுட்கள் காப்புப் பருவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்ஙனம் ஒரு புதிய அமைப்பை மேற்கொண்டதற்குக் காரணம்,

“வழிபடுதே வுளுங்கொலைதீர் தெய்வதங்காப் புரைக்கவென வகுத்த வான்றோர்
மொழியுணர்ந்து மவ்வழிச்சென் றிலர்முன்னோ ரிரும்புகழ்க்கோ முத்தி யெங்கள்
பொழிகருணைச் சின்மயனம் பலவாண தேசிகன்மேற் புகலப் புக்க
கழிமகிழ்யா மவ்வழிச்சென் றனஞ்சிறக்கு மிப்பிள்ளைக் கவியுந் தானே”

என்று இவர் இயற்றிய செய்யுளாற் புலப்படும்.

மடத்தைப்பற்றிய செய்திகளாகிய காவித்துவசமமைத்தல், பரிகலசேடத்தை அடியாருக்கு அளித்தல், அவர்களுக்கு நெற்றியில் திருநீறணிதல் முதலியன இந்நூலுள் உரிய இடங்களிற் பாராட்டிக் கூறப்படுகின்றன:-

“ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதனன்
உயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி
வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல்
வேந்தன் சுதன்மை கிழித்தெழுந்து மேவ”

“கூருங் கருணை நின் காவிக்கொடி” (தாலப். 3 - 4)

வேறு

“நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு
    நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து
நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியும்
    நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியும்
ஓடிய விந்தி டவுண்கல சேடம துதவு திருக் *11 கையினால்
    உறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபம்
கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
    குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி.” 
  
                   (சப்பாணிப். 8)

“செய்யநங் குருநாத னினையாட வாவென்று திருவாய் மலர்ந்தபொழுதே
திருந்தக் குடந்தமுற் றடியனேன் வந்தனென் திருவுள மெவன்கொ லென்று
நையவுளம் விரையவந் தான்றதிரு வடிபணியி னகுகருணை பூத்துநீறு
நளினத் திருக்கரத் தள்ளியுன் னுதலிடுவ னாடுமப் பெரிய பேற்றால்
வெய்யநின் கயரோக மும்பழியு மாறியுயர் மேன்மையும் பெறுவை.” 

                  (அம்புலிப், 6)

சிவஞான முனிவரிடத்தும், கச்சியப்ப முனிவரிடத்தும் தமக்குள்ள பேரன்பை,

*12  "நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனாம்
நெடியசிவ ஞானமுனி யாலுணர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே
அன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற்
கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ” 

                            (சப்பாணிப்.3)

என்னும் செய்யுட் பகுதியில் வெளியிட்டுள்ளார்.

இந் நூலிலுள்ள வேறு நயமுள்ள பாடல்கள் சில:-

“ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே
    உற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால்
வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே
    மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப்
புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே
    பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில்
அள்ளிய வாவிய கோகழி நாயக னாடுக செங்கீரை
    அறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை.” 

                          (செங்கீரைப். 8)

“பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதுவியே
    பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே
விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே
    மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே
வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான்
    மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே
அரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை
    அறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை.” 

                                 (மேற்படி. 6)

(இதில் ஆசிரியரை ஐந்து பூதங்களாக உருவகித்து முறையே கூறி இருத்தல் காண்க.)

வேறு

“அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி
    அடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக்
கொழிக்குங் கரிய காஞ்சிகளுங் கொடியால் வளைந்த பலகரும்பும்
    கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும்
விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளும்
    மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி
செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
    சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ.” 

                            (தாலப். 5)

வேறு 

“உரைசெயெப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்க டக்கவேலை
    ஒன்றினி தியற்றுதற் கெண் ணுவ ரதன்றியு முரைக்குமுன் செயவும் வல்லார்
கரைசெய்து நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழற மருகம்
    காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்று மென்னின்
விரைசெய்மலர் செற்றுபொழில் சுற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டி யங்கம்
    வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநவில வேண்டுமென் போமென்செய்வாய்
தரைசெய்பய னெனவந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டி யருளே
    தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டி யருளே.” 

                          (சப்பாணிப்.1.)

இந் நூல் ருதிரோத்காரி வருடம் (1863) சி. தியாகராச செட்டியாராற் பதிப்பிக்கப்பெற்றது. ஆறுமுக நாவலர் நூற்பதிப்புக்களுக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.

மதுரை இராமசாமி பிள்ளை இவரிடத்தில் படிக்கும்பொழுதே அடிக்கடி சிதம்பரம் சென்று ஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களைப் பார்த்துச் சம்பாஷணை செய்து வருவார். அதனால் இராமசாமி பிள்ளைக்கும் நாவலருக்கும் நல்ல பழக்கம் உண்டாயிற்று. இராமசாமி பிள்ளை இராமநாதபுரத்தினர்; பொன்னுசாமித் தேவருக்கு உசாத்துணைவராக இருந்தவர். நாவலருடைய சில பதிப்புக்களைக் கண்ட அவர், பொன்னுசாமித் தேவருக்குப் பழைய தமிழ் நூல்களை வெளியிடும் விருப்பம் இருப்பதையும் நாவலர் தக்க பொருளுதவி இல்லாமல் இருப்பதையும் அறிந்து தேவரிடம் சொல்லி நாவலரால் திருக்கோவையாருரை திருக்குறட் பரிமேலழகருரை முதலியவற்றைப் பதிப்பிக்கச் செய்யவேண்டு மென்றெண்ணினார். அவ்வாறே முயலுகையில், தம்மையும் பதிப்பிப்போரையும் புகழ்ந்துள்ள சிறப்புப் பாயிரங்களைப் பெற்றால்தான், பாட்டுக்களிற் பிரியமுடைய தேவர் மகிழ்ந்து உதவி செய்தலை மேற்கொள்வாரென்றறிந்தார்.

ஆதலின், சென்னையிலிருந்த வித்துவான்களிடமிருந்து சிறப்புப் பாயிரங்கள் வாங்கி அனுப்பும்படி நாவலருக்கு எழுதினார். சென்னையில் இருந்தவர்களோடு அளவளாவி நாவலர் அக்காலத்துப் பழகவில்லை. அதனால் அவர்களிடம் சிறப்புப்பாயிரம் பெறுதற்கு இயலவில்லை; “இங்கே உள்ள சபாபதி முதலியார் முதலியவர்கள்பால் எனக்கு நல்ல பழக்கமில்லை. ஆதலின் அங்கே திருவாவடுதுறையாதீன மகா வித்துவானாக விளங்கும் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடமிருந்தும் அவர்களுடைய மாணாக்கர்களிடமிருந்தும் சிறப்புப் பாயிரங்கள் வாங்கி உதவி செய்ய வேண்டும் என்று அவர் இராமசாமி பிள்ளைக்கெழுதினார். அதனால், இராமசாமி பிள்ளை திருவாவடுதுறைக்கு வந்து இரண்டு தலைவர்களிடமும், பொன்னுசாமித் தேவர் உதவியால் நாவலரவர்கள் திருக்கோவையார் திருக்குறள் முதலியவற்றைப் பதிப்பிக்க எண்ணியிருக்கின்றார்கள். அதற்குச் சிறப்புப் பாயிரங்கள் பிள்ளையவர்களைக் கொண்டும் அவர்களுடைய மாணாக்கர்களைக் கொண்டும் பெற நாவலரவர்கள் விரும்புகிறார்கள். பிரபு அவர்களும் அவற்றைக் கண்டால் திருப்தியுற்று உதவி செய்வதற்கு முன்வருவார்கள்” என்று சொன்னதன்றிப் பிள்ளையவர்களிடத்தும் இதனைத் தெரிவித்தார். மடத்திற்குப் பொன்னுசாமித் தேவர் வேண்டியவராகையினால் தலைவர்கள் பிள்ளையவர்களை அவ்வாறே செய்யும்படி சொன்னார்கள். இவரும் பாடிக் கொடுத்தார். இவர் கட்டளையின்படி தியாகராச செட்டியார் முதலியவர்களும் சிறப்புப்பாயிரம் கொடுத்தார்கள். அவற்றைக் கண்ட பொன்னுசாமித் தேவர் மிகவும் மகிழ்ந்ததன்றிப் பிள்ளையவர்களுடைய பாடலின் நயத்தில் ஈடுபட்டார்.

அயலூரிலிருந்து வேறு யாராவது வந்து தம்மீது பாடல் சொல்லத் தொடங்கினால், “அது கிடக்கட்டும்; அதென்ன மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடலா? அவர்கள் பாடலல்லவா பாடல்! அந்தப் பாட்டைக் கேட்ட காதில் இந்தப் பாடல் ஏறவில்லை. பின்பு வாருங்கள்” என்று தேவர் சொல்வது வழக்கமென்றும், “தங்களை அழைத்து உபசரிக்க வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்களாகிப் பிரபு அவர்கள் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் “பதினெண் புராணங்களுள் இதுகாறும் தமிழிற் செய்யப்படாதவற்றைத் தங்களைக்கொண்டு இயற்றுவிக்க எண்ணியிருக்கிறார்கள்” என்றும் இராமசாமி பிள்ளை இவருக்கு எழுதி வந்ததன்றித் தியாகராச செட்டியார் முதலியோருக்கும் ஏற்றவண்ணம் எழுதி ஊக்கம் உண்டாக்கிவந்தார். பொன்னுசாமித் தேவர் தமிழ்ப்பயிற்சி உடையவரென்றும் தமிழ் வித்துவான்களை ஆதரிப்பவரென்றும் செய்யுள் நயங்களையறிந்து வியப்பவரென்றும் அறிந்த இவர், இராமசாமி பிள்ளையின் வேண்டுகோளின்மேல் நாவலர் பதிப்பிக்கத் தொடங்கிய ‘தருக்கசங்கிரகம்’ முதலிய நூல்களுக்கும் சிறப்புப்பாயிரம் கொடுத்து வந்தார். ஒன்றை விட ஒன்று சிறந்ததாகவே இருந்தது. உண்மையில் பொன்னுசாமித் தேவர் செய்யுட்களின் சுவையை அறிபவராயினும், இராமசாமி பிள்ளை இவருக்கும் தியாகராச செட்டியார் முதலியவர்களுக்கும் எழுதுவன மிகையே; சிறப்பான பாடல்களைப் பெற வேண்டுமென்னும் நோக்கத்தினாலே அங்ஙனம் எழுதிவந்தார்.

இச்செயலைப்  பற்றிப் பின்பு ஒருகால் இராமசாமி பிள்ளை திருவாவடுதுறைக்கு வந்திருந்தபொழுது தியாகராச செட்டியார் என்னிடம், “இந்த மனுஷர் பொய்யும் புளுகும் எழுதி எங்களை ஏமாற்றிவிட்டார். எங்களையெல்லாம் வரவழைத்து, உபசாரம் செய்யக் கருதியிருப்பதாக ஒரு சமயமும், எந்தவிதமான மரியாதை செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருக்கிறார்களென்று ஒரு சமயமும் எழுதினார். எல்லாம் முழுப்பொய். காரியத்தை மட்டும் சாதித்துக்கொண்டு விட்டார்” என்று சொன்னார். உடனே இராமசாமி பிள்ளை நகைத்துக்கொண்டே, “ஆம் ஐயா, நான் இவ்வாறெல்லாம் எழுதாவிட்டால் நீங்கள் நன்றாகச் சிறப்புப்பாயிரம் பாடித் தருவீர்களா?” என்று செட்டியாரிடம் சொல்லிவிட்டு என்னை நோக்கி, “நான் அப்படி எழுதுவேன். இவர்கள் அதிக உழைப்பெடுத்துக்கொண்டு பாடுவார்கள்” என்றார்.

இவ்வாறு நாவலருக்குக் கொடுத்த சிறப்புப் பாயிரங்கள் பல. அவற்றுட் சில பதிப்பிக்கப்பட்டன. ‘இறையனாரகப்பொருள்’ முதலிய சில நூற்பதிப்புக்களே நிறைவேறாமையின் சிறப்புப் பாயிரங்கள் வெளிவர வழியில்லை. அவை தியாகராச செட்டியாரிடத்தும் சதாசிவ பிள்ளையிடத்தும் இருந்தன. பிற்காலத்தில் அவற்றைப் பெறுவதற்கு எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

1. மகிழ்வனம் – மகிழ மரக்காடு; திருவிடைக்கழியில் இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம்; “இலஞ்சியங்கான நோக்கி” என்றார் கந்த புராணமுடையாரும்.
2. வாகையாரணியம் – திருவாளொளிபுற்றூர்.
3. இத்தலத்தின் திருநாமம் மந்தார வனமென்றும் வழங்குமாதலின், “வக்கரை மந்தாரம் வாரணாசி” என்ற க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகப் பகுதியில் வந்துள்ள மந்தாரமென்ற வைப்புஸ்தலமாக இது கருதப்படுகின்றது.
4. நிரோதம் – தடை.
5. கலவர் – கப்பலையுடையவர்; இங்கே வலைஞர்.
6. இது தேவார வைப்புஸ்தலங்களுள் ஒன்று; “வெண்ணி விளத் தொட்டி வேள்விக்குடி” திருநா. தே.
7. தொட்டில் தொட்டியென வழங்கலாயிற்று.
8. தாலம் – உலகம், நா.
9. ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 835 – 937.
10. திருவாவடுதுறை.
11. கையினாற் கொட்டுக வென்க.
12. சிவஞான முனிவரியற்றிய சிவஞான போதச் சிற்றுரை முதலியவற்றையும் கச்சியப்ப முனிவரியற்றிய பஞ்சாக்கர தேசிகரந்தாதியையும் நினைந்து இச்செய்யுளியற்றப் பெற்றதென்று தெரிகின்றது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s