-திருநின்றவூர் ரவிகுமார்

அத்தியாயம்- 11
பாண்டிசேரி பயணம்
அரவிந்தர் சந்திர நாகூரில் ஆறு வார காலம் தங்கியிருந்தார். முதலில் மோதிலால் வீட்டில். பிறகு போலீஸ், உளவாளிகளின் கவனத்தைக் கவராமல் இருக்க பல்வேறு இடங்களில் மாறி மாறி இருந்தார். அவருக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மோதிலால் செய்திருந்தார். அவர் சந்திர நாகூரில் இருந்த போது அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி அரசுக்கு ஒன்றுமே தெரியாது. எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டே இருந்தார்கள்.
அரவிந்தர் சந்திரநாகூரில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது முழுமையான தீவிர தியானத்தில் இருந்தார். எல்லா விதமான நடவடிக்கைகளும் முழுவதுமாக நின்றுவிட்டன என்பதைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியவில்லை. மோதிலால் பின்னர் எழுதிய நினைவு நூலில் கூட சொற்பமான தகவல்களே உள்ளன. அது அரவிந்தரின் தீவிர யோக சாதனைக் காலம் என்றே கூறலாம். அவர் பேசும்போது வேறு யாரோ அவர் மூலம் பேசுவது போன்றே இருந்தது. சாப்பிடும்போதும் கூட ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அவர் முன்பு இருந்த உணவைக் கூட அவர் எந்திரத்தனமாக மிகக் குறைவாகவே சாப்பிட்டார். கண் திறந்தபடியே தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது அவருக்கு பல்வேறு வடிவங்களும் காட்சிகளும் தோன்றின. இலா, மஹி (பாரதி) , சரஸ்வதி என்ற மூன்று தெய்வ உருக்ககள் அவர் முன்பு தோன்றின. அவை வேதகால தெய்வங்கள் என்பதை அவர் பின்னர் தெரிந்து கொண்டார். மோதிலாலும் யோகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அரவிந்தர் அவருக்கு “எல்லாவற்றையும் இறைவனிடம் சமர்ப்பணம் செய்து விடு” என்று நற்சொல் கூறி வழிகாட்டினார்.
கல்கத்தாவுக்கு மிக அருகில் சந்திர நாகூர் இருந்தது. அங்கு இருப்பது அபாயகரமானதென்று வேறு பல இடங்களுக்குப் போவது பற்றி பல்வேறு ஆலோசனைகள் அரவிந்தருக்கு வழங்கப்பட்டன. அவர் மீண்டும் அந்த குரலைக் கேட்டார். ‘பாண்டிச்சேரிக்குப் போ’ என்றது அது. மீண்டும் எந்தவிதமான கேள்வியோ தயக்கமோ இன்றி அரவிந்தர் அந்தக் கட்டளையை ஏற்றார். இறைவனைச் சரணடைந்தால் இவ்வாறு தான் அவன் காக்கிறான், வழிகாட்டுகிறான். இதைத்தான், ‘மாமேகம் சரணம் விரஜா’ என்று பகவத்கீதை கூறுகிறது #.



போலீஸ் கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் பாண்டிச்சேரிக்குச் செல்லும் திட்டம் மிக ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பயணம் இரண்டு கட்டங்களைக் கொண்டது. முதலில் கல்கத்தா செல்ல வேண்டும். அது குறுகிய பயணக் கட்டம். மோதிலாலிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை அரவிந்தர் செய்தார். இதற்கு உதவுமாறு உத்தரபாராவில் இருந்த இளம் புரட்சியாளரான அமர் சாட்டர்ஜிக்கு தகவல் அனுப்பினார். இவரைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். பயணத்தின் இரண்டாவது பகுதி நீண்டதும் சிக்கலானதும் கூட. அதற்காக தனது மாமன் (கிருஷ்ணகுமார் மித்ரா) மகன் சுகுமார் மித்ராவுக்கு எழுதினார். அதில் பிஜோய் நாக் என்ற இளைஞர் தன்னுடன் பாண்டிச்சேரி செல்வார் என்றும் அதற்காக விரிவாக திட்டமிடும்படி இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதே நேரத்தில் பாண்டிச்சேரி புறப்படத் தயாராக இருக்கும்படி (மோனிக்கு) சுரேஷ் சக்கரவர்த்திக்கு செய்தி அனுப்பினார்.
அந்தப் பயணம், அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்ட சிலர் பின்னாளில் தங்கள் நினைவுகளை எழுதியுள்ளனர். அதில் சில முன்னுக்குப் பின்னான தகவல்கள் இருந்தாலும், அதில் பொதுவான விஷயங்களை தொகுத்தால் நமக்கு முழுமையான சித்திரம் கிடைக்கும்.
சுரேஷ் சக்கரவர்த்தி எழுதுகிறார்:
“நான் குரோச் சந்தில் இருந்த உணவகத்தில் தங்கி இருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு துண்டுச் சீட்டு வந்தது. அதில் அரவிந்தரின் கையெழுத்தில் மூன்று, நான்கு வரிகளில் ஒரு செய்தி இருந்தது. அது என்னை பாண்டிச்சேரி சென்று அவர் தங்க ஒரு வீட்டை ஏற்பாடு செய்யும்படி கூறியது. அந்தச் சீட்டை என்னிடம் கொடுத்த என்னுடைய நண்பர், பாண்டிச்சேரி பயணத்திற்கு சுகுமார் வெளிப்படையாக உதவிகள் செய்வார் என்றும், அரவிந்தரின் மனைவியின் சகோதரர் சௌரின் போஸ் மறைமுகமாக உதவுவார் என்றும் சொன்னார். நான் ஹவுரா என்று அங்கிருந்து மெட்ராஸ் மெயில் ரயில் மூலம் செல்ல வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. நான் மார்ச் 28ஆம் தேதி பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டேன். பொதுவாக பகலில் நான் வெளியே செல்வதில்லை. சூரியன் மறைந்த பிறகு செல்வேன். ஆனால் அன்று காலை நான் வெளியே சென்று முடி திருத்திக் கொண்டேன். சில புதிய ஆடைகளை வாங்கிக் கொண்டேன். உணவகத்தில் இருந்த அனைவரிடமும் என் குடும்பத் திருமணம் ஒன்றிற்காக டார்ஜிலிங் மெயில் வண்டி மூலம் சொந்த ஊரான பாப்னாவுக்குப் போவதாகச் சொன்னேன்”.
சுரேஷ் அழகிய தோற்றம் உடையவர். போலீஸ் சந்தேகப்படாமல் இருக்க ஐரோப்பிய பாணியிலான கோட் சூட்டை வாங்கி அணிந்து கொண்டார்.
“மெட்ராஸ் மெயில் மாலை நேரத்தில் தான் ஹவுராவிலிருந்து புறப்படும். அன்று மதியம் நான் கோட் சூட் அணிந்து கொண்டு கையில் பெட்டி ஏதும் இல்லாமல் கிளம்பினேன். புதிதாக ஒரு மணிபர்ஸ் வாங்கி இருந்தேன். அதில் மூன்று பத்து ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லறையும், பாண்டிச்சேரி நண்பர்களுக்கு அரவிந்தர் அளித்த அறிமுகக் கடிதமும் இருந்தன. நான் ஹவுரா ரயில் நிலையம் சென்ற போது ரயில் தயாராக இருந்தது. பயணிகளின் இரைச்சலும் பரபரப்புமாக இருந்தது. நான் மிகவும் தேடி பின்பு சௌரீனைக் கண்டுபிடித்தேன். அவர் எனக்காக ஒரு பெட்டியும் சிறிய படுக்கைச் சுருளையும் வைத்துக்கொண்டு இரண்டாம் வகுப்புப் பெட்டி அருகே காத்திருந்தார். நான் அதை வாங்கிக் கொண்டேன். இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டையும் (போலீஸ் கண்ணிலிருந்து தப்ப மூன்றாம் வகுப்புக்குப் பதிலாக இரண்டாம் வகுப்பு பயணம்) வண்ண அட்டை போட்ட கே பூத் எழுதிய ‘காதல் வெளிப்பட்டது’ என்ற அண்மையில் வெளியான நாவலை ஆறாணவுக்கு வாங்கி அதையும் என்னிடம் கொடுத்தார்….”
-என்று அவர் எழுதியுள்ளார்.
இப்படித்தான் பதினெட்டு வயதான இளம் சுரேஷ் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார். அவர் மிகவும் இளைஞர். ஆனால் அரவிந்தருக்கு நெருக்கமானவர்களில் போலீஸ் கண்காணிப்பில் இல்லாத சிலரில் இவரும் ஒருவர். அதனால்தான் அவரை தன் தூதராக பாண்டிச்சேரி அனுப்பினார். அவரும் மெட்ராஸ் (சென்னை) போய் அங்கிருந்து வேறொரு ரயிலில் மார்ச் 31ஆம் தேதி பாண்டிச்சேரி போய்ச் சேர்ந்தார்.
சுகுமார் மித்ராவின் நினைவைத் தொடர்வோம்:
“1910 மார்ச் இறுதியில் திடீரென்று சந்திர நாகூரில் உள்ள மோதிலால் ராயிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. அது அரோ தா (தா என்றால் அண்ணன்) சந்திர நாகூரை விட்டு பாண்டிச்சேரி போக விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் படியும் எனக்குச் சொல்லியது. அதே வேளையில் இதை ரகசியமாக வைத்திருக்கும் படியும் சொல்லியது. எனவே நான் எந்தச் சூழ்நிலையிலும் எச்சரிக்கையாகவும், ஒவ்வொரு அடியையும் கவனமாகவும் வைத்தேன். என் வீட்டுக்கு அருகே இருந்த தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் சாதாரண உடையில் ஐந்தாறு ரகசிய போலீசார் இருந்தனர். நான் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் என்னை அவர்கள் பின்தொடர்வார்கள். எனவே நான் எதையும் நேரடியாகச் செய்யாமல் நம்பிக்கைக்குரிய இருவர் மூலம் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய முடிவெடுத்தேன். அந்த இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலும் ஒருவர் செய்வது மற்றொருவருக்குத் தெரியாமலும் இருக்கும்படி செயல்பட்டேன். ரயிலில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்று கருதினேன். ஏனெனில் அது நீண்ட பயணம். வழியில் ஏதாவது நிலையத்தில் உள்ள ரகசிய போலீசார் இவரைப் பார்த்து விட்டால் ஆபத்து. எனவே அரவிந்தரை ரயில் மூலம் பாண்டிச்சேரிக்கு அனுப்பாமல் பிரெஞ்ச் கப்பல் மூலம் அனுப்ப முடிவெடுத்தேன்…
“அப்போது ‘மெஸெஜிரிஸ் மாரிடைம்ஸ்’ என்ற பிரெஞ்ச் கம்பெனி கல்கத்தாவில் இருந்து கப்பல்களை இயக்கிக் கொண்டிருந்தது. மற்ற கம்பெனி கப்பல்களும் கல்கத்தாவில் இருந்து கொழும்பு போயின. ஆனால் அவை பாண்டிச்சேரியில் நிற்காது. அது மட்டுமின்றி பிரெஞ்ச் கப்பலில் பயணிப்பது அரசியல் ரீதியாக அனுகூலமானது. கப்பல் பிரிட்டிஷ் இந்தியா கடல் பரப்பையை கடந்து விட்டால் அதில் உள்ள பயணிகள் அனைவரும் பிரெஞ்சு சட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அரவிந்தர் கல்கத்தாவில் இருந்து எண்பது மைல் கடந்து விட்டால் பாண்டிச்சேரி போவது சுலபமாகிவிடும்”.
நாகேந்திர குமார் குஹரே, சுரேந்திர குமார் சக்கரவர்த்தி என்ற இருவர் தான் சுகுமார் தனக்கு உதவிட தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். இருவரும் நவகாளியைச் சேர்ந்த சுதேசித் தொண்டர்கள்; நம்பகமானவர்கள். பிற்காலத்தில் நாகேந்திர குமார் தனது நினைவுக் குறிப்பு நூலில் ‘தெய்வத்தை வழியனுப்பினோம்’ என்ற தலைப்பில் அந்த அனுபவம் பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதியது:
“மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள் சுகுமார் தா அவர் வீட்டில் (சஞ்சீவினி பத்திரிகை அலுவலகம்) இரண்டு ஸ்டீல் ட்ரங்க் பெட்டிகளைக் காட்டி இதை எடுத்துக்கொண்டு போய் நான் தங்கி இருந்த உணவு விடுதியில் என் பொறுப்பில் வைத்திருக்கும்படி சொன்னார். அந்தப் பெட்டிகளை தூக்கும் போது அவை கனமாக இருந்தன. ‘இதற்குள் வெடிகுண்டுகளும் கைதுப்பாக்கிகளும் இருக்கா?’ என்று கிண்டலாக்க் கேட்டேன். சுகுமார் தா புன்முறுவல் பூத்தார். ‘அது எதுவாக இருந்தால் என்ன, பத்திரமாக உன் பொறுப்பில் வைத்திரு’ என்றார். மறுநாள் என்னைச் சந்திக்கும்படி கூறினார். நான் அதை எடுத்துக்கொண்டு கல்லூரி தெருவில் இருந்த என் தங்கும் இடத்திற்குக் கொண்டு சென்றேன்…
“அடுத்த நாள் சுகுமார் தா சொன்ன நேரத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் இரண்டு பெயர்களையும் விலாசத்தையும் தேவையான பணத்தையும் கொடுத்து கொழும்புக்குப் போகும் கப்பலில் இரண்டாம் வகுப்பில் இரண்டு பயணச்சீட்டை வாங்கும்படி கூறினார். கொழும்புக்கு சீட்டு வாங்கினேனா, பாண்டிச்சேரிக்கு வாங்கினேனா என்று எனக்கு ஞாபகம் இல்லை. எனக்கு அந்தக் கப்பல் கம்பெனியின் பெயர் நினைவில் இல்லை. ஆனால் சுகுமார் தா அதை இன்னும் நினைவில் கொண்டுள்ளார். அது மெஸென்ஜெரீஸ் மாரிடைம்ஸ் (கம்பெனி). ஆனால் எங்கள் தெய்வத்தை வழி அனுப்பிய கப்பலின் பெயரை நான் மறக்கவில்லை. டூப்ளெக்ஸ் என்ற அந்தக் கப்பல் கல்கத்தா ஈடன் தோட்டத்தில் சந்த்பால் துறையில் மிதந்து கொண்டிருந்தது என் கண்ணில் இன்னமும் உள்ளது..
“இரண்டு பயணிகளுக்கான ஓர் அறையைப் பதிவு செய்யும்படி சுகுமார் தா சொன்னார். நானும் அப்படியே பதிவு செய்தேன். நான் சஞ்சீவினி அலுவலகத்துக்குத் திரும்பி வந்து அந்த பயணச் சீட்டுகளை அவரிடம் தந்தேன். அதை வாங்கி அவர் கவனமுடன் சோதித்தார். பிறகு அதை என்னிடமே திருப்பிக் கொடுத்து, ‘இப்போதைக்கு உன்னிடமே பத்திரமாக இருக்கட்டும். நான் இதை பின்னர் வாங்கிக் கொள்கிறேன்’ என்றார்”.
(கொழும்புக்கு தான் சீட்டு வாங்கினேன் என்று சுகுமார் தா பின்னர் நினைவு கூர்ந்தார். பின்னாளில் போலீஸ் விசாரணை வந்தால் அவர்கள் கவனத்தை பாண்டிச்சேரி பக்கம் திருப்பாமல் முதலில் கொழும்பு பக்கம் திசை திருப்புவதற்காக கொழும்புக்கு சீட்டு எடுத்ததாகவும் அவர் கூறினார்).

சுகுமாரின் அறிவுறுத்தலின்படி நாகேந்திரகுமார் ரங்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்கிங் சந்திரன் பௌமிக், கல்கத்தாவுக்கு அருகில் உள்ள உல்லுபெரியாவைச் சேர்ந்த ஜிதேந்திரநாத் மித்தர் என்ற பெயரில் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டு பெயர்களில் அரவிந்தரும் பிஜோயும் பயணம் செய்தனர். அந்தப் பெயர்களும் விலாசமும் கற்பனையானவை அல்ல. சுகுமாரனின் தந்தை ஆரம்பித்த ‘சஞ்சீவினி’ என்ற தேசிய பத்திரிககையில் சந்தாதாரர்கள் அவர்கள். பின்னாளில் போலீஸ் விசாரணை வந்தால் அவர்களை தவறாக திசை திருப்பிவிட இது பயன்படுமென திட்டமிட்டுச் செய்யப்பட்டது.
டூப்ளெக்ஸ் கப்பல் ஏப்ரல் ஒன்றாம் தேதி அதிகாலை கல்கத்தா சந்த்பால் துறையில் இருந்து புறப்படும். அதில் அரவிந்தர் கல்கத்தாவில் இருந்து பாண்டிச்சேரி செல்வதற்கான பயண ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.
அதன் பிறகு சுகுமாரின் கவனம், போலீஸ் கண்ணில் படாமல் அரவிந்தரை சந்திரநாகூரில் இருந்து கல்கத்தாவுக்கு அழைத்து வருவது பற்றி திரும்பியது. அவர் அந்த விஷயத்திற்கு அதிக கவனம் கொடுத்தார். சந்திர நாகூரில் இருந்து நேரடியாக வந்தால் படகோட்டிக்குத் தெரிந்து விடும் என்பதால், அதுவும் தெரியாமல் இருக்க பயணத்தை பல கட்டங்களாகத் திட்டமிட்டார். சந்திரநாகூர் கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழே 35 கி.மீ. தூரத்தில் கிழக்குக் கரையில் கல்கத்தா அமைந்துள்ளது. அரவிந்தர் தன் பயணத்தின் முதல் கட்டமாக சந்திரநாகூரில் கிளம்பி கல்கத்தாவுக்குப் பாதி வழியில் கிழக்கு கரையில் உள்ள அகர்பாராவுக்குச் செல்ல வேண்டும். அமர் சாட்டர்ஜி உத்தரபாராவிலிருந்து ஒரு படகில் அங்கு சென்று அதில் அரவிந்தரை ஏற்றிக்கொண்டு மீண்டும் நதியின் எதிர்த் திசையில் மேற்குக் கரையில் உள்ள உத்தரபாராவுக்கு சற்றுத் தள்ளி உள்ள இன்னொரு துறையில் இருக்க வேண்டும்.
இதனிடையே பிஜோய் நாக்-கை அழைத்துக்கொண்டு நாகேனும் சுரேனும் கல்கத்தாவில் இருந்து ஒரு படகில் எதிர் நீரோட்டத்தில் உத்தரபாராவுக்கு அருகில் உள்ள அந்த துமூர் தோலா துறைக்குச் செல்ல வேண்டும். இருவரும் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டால் அமர், அரவிந்தர் உள்ள படகு சந்தேகம் ஏற்படாமல் இருக்க நதியின் நடுப்பகுதிக்குச் சென்றுவிட வேண்டும். அடையாளத்துக்காக இரண்டு படகுகளிலும் ஒரே மாதிரியான கொடி கட்டப்பட்டிருக்கும். இரண்டு படகுகளும் சந்தித்த பிறகு கல்கத்தாவில் இருந்து கிளம்பி வந்த நாகேனின் படகுக்கு அரவிந்தர் மாறிவிடுவார். பிறகு அந்தப் படகு டூப்ளெக்ஸ் கப்பல் நிற்கும் சந்த்பால் துறைக்கு வரும். துறையிலிருந்து மரப்பலகை வழியாக கப்பலில் ஏறுவதற்குப் பதிலாக நதியில் உள்ள படகிலிருந்து நூல் ஏணி வழியாக இருவரும் கப்பலில் ஏறுவார்கள். அதற்கு கப்பலின் கேப்டனிடம் முன்அனுமதி பெற்றதுடன் அவர்களது பெட்டிகளும் பதிவு செய்யப்பட்ட கேபினில் வைக்கவும் ஏற்பாடானது.
அது மிக விரிவாகத் திட்டமிட்ட பயணம்; குறுக்கும்மறுக்குமான பயணம் போலீசை திசை திருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டது. அது மட்டுமன்றி போலீஸ் துறை கப்பலில் ஏறுபவர்களைக் கண்காணிக்கும். அதைத் தவிர்க்க நதியில் படகிலிருந்து கப்பலில் ஏறத் திட்டமிடப்பட்டது.
டூப்ளெக்ஸ் கப்பல் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது மார்ச் 31ஆம் தேதி, மோதிலால் ராய் சந்திர நாகூரில் இருந்து அரவிந்தரை படகில் ஏற்றி வழியனுப்பினார். அவர் உடன் வரவில்லை. மாறாக நம்பிக்கைகுரிய இருவரை அரவிந்தருடன் அனுப்பினார். ஏற்கனவே திட்டமிட்டபடி படகு நதியோட்டத்துடன் சென்று நதியை குறுக்கே கடந்து கிழக்குக் கரையில் இருந்த அகர்பாராவை அடைந்தது. அமர் சாட்டர்ஜி தனது வலதுகரமான மன்மத பிஸ்வாஸுடன் உத்தரபாராவில் இருந்து அகார்பாரா வந்தார். அரவிந்தரைக் கண்டார். எந்த பிரச்னையும் இல்லாமல் இந்தக் கட்டம் முடிந்தது.
அதே மார்ச் 31ஆம் தேதி காலை சுகுமார் செய்தி அனுப்பி நாகேனை வரவழைத்தார். இனி சுகுமாரின் நூலில் இருந்து:
“நான் நாகேந்திராவை அழைத்து அரவிந்தரின் இரண்டு ஸ்டீல் பெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் டுப்ளெக்ஸ் கப்பலில் கேப்டனிடம் பயணச்சீட்டு காட்டி பதிவு செய்யப்பட்ட அறையில் வைத்து பூட்டிவிட்டு வரும்படி கூறினேன். நாகேந்திரா சொன்னபடி செய்துவிட்டு, செய்து முடித்த விஷயத்தையும் என்னிடம் சொன்னார். பிறகு நான் சுரேந்திரநாத் சக்கரவர்த்தியை அழைத்து மதியத்திற்கு முன்னதாக ஒரு படகை அமர்த்திக் கொண்டு வட திசையில் செல்லவும், படகில் கட்ட ஒரு கொடியையும் கொடுத்தேன். வடக்கில் பயணித்து அகார்பாராவுக்குச் செல்ல வேண்டுமெனவும் அப்பொழுது அதேபோல கொடி கட்டிவரும் படகுகளில் உள்ள பயணிகளை அவரது படகில் ஏற்றிக்கொண்டு சந்த்பால் துறையில் நிற்கும் டூப்ளெக்ஸ் கப்பலில் அவர்களை ஏற்றிவிட வேண்டும் எனவும், கூறினேன். சுரேந்திர குமார் எந்தக் கேள்வியும் கேட்காமல் சொன்னபடி பணியை செய்யப் புறப்பட்டார்”.
பிறகு சுகுமார் நாகேந்திரனை அழைத்து படகுப் பயணத்தை பற்றிச் சொல்லி சுரேந்திரன் உடன் செல்லுமாறு பணித்தார். அதுபற்றி நாகேன் தன் நூலில், “சுகுமார் தா-விடம் அந்தப் படகில் வருபவர்களை நான் எப்படி அடையாளம் தெரிந்து கொள்வேன் என்று கேட்டேன். அதற்கு அவர் எல்லாவற்றையும் சுரேனிடம் கூறியுள்ளேன் என்றார். சுகுமார் தா இப்படிச் சொன்னதும் என் மனதில் திடீரென்று உதயமானது ‘அரவிந்த் தா தானே படகில் வருகிறார், இல்லையா?’ என்று கேட்டேன். ஆச்சரியமடைந்த அவர் ’நீ ரொம்ப புத்திசாலியாகிவிட்டாய், இல்லையா? எப்படிக் கண்டுபிடித்தாய்?’ என்றார். எனக்கு திடீரென்று தோன்றியது என்றேன். ‘நீ யூகித்தது சரிதான். ஆனால் ஜாக்கிரதை, மற்ற யாருக்கும் விஷயம் தெரியக் கூடாது’ என்றார்”.
மதிய வாக்கில் நாகேனும் சுரேனும் படகில் புறப்பட்டனர். மற்றொரு படகில் வரும் அரவிந்தர், அமர், மன்மதனைச் சந்திப்பது அவர்கள் நோக்கம். அதுவரை எல்லாம் சரிதான். ஆனால் அங்கு தான் கண்ணுக்குத் தெரியாத விதியின் கரங்கள் குறுக்கிட்டன. இரண்டு படகுகளும் குறிப்பிட்ட துறையிலோ ஆற்றின் நடுப்பகுதியிலோ சந்திக்கவில்லை. கல்கத்தாவில் இருந்து காலதாமதமாக படகு கிளம்பி இருக்கலாம் அல்லது இரண்டு படகிலும் இருந்த கொடியை எவரும் கவனிக்காமல் போனதாக இருக்கலாம். ஏதோ காரணத்தால் இரண்டு படகுகளுக்கு இடையே தொடர்பு ஏற்படாமல் போனது. சிக்கல் ஏற்பட்டது.
அமருக்கு டூப்ளெக்ஸ் கப்பலில் ஏற்ற வேண்டும் என்பது தெரியாது. அவரிடம் பயணச்சீட்டும் இல்லை. பயணச்சீட்டை வைத்திருக்கும் நாகேனோ மற்றொரு படகைச் சந்திக்கவில்லை. கச்சிதமாகப் போட்ட திட்டம் தலைகீழானது.
நாகேனைச் சந்திக்க முடியாததால் கவலை அடைந்த அமர் படகை கல்கத்தாவுக்கு விடும்படி சொன்னார். என்ன தவறு ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள சுகுமார் தா-வைச் சந்திப்பதென்று அவர் சரியான முடிவெடுத்தார். அதேபோல நாகேனும் சுரேனும் எவ்வளவு தேடியும் அரவிந்தரைக் காணாததால் கவலையில் குழம்பிப் போயினர். இனி நாகேன் நூலில் இருந்து:
”நாங்கள் சுகுமார் தா வீட்டிற்குச் சென்றோம். நடந்ததென்னவென்று சொன்னோம். அவர் என்னிடம் உடனே கப்பலுக்கு சென்று அந்த அறையில் இருந்து பெட்டிகளை எடுத்து வரும்படி சொன்னார். அப்பொழுது மாலை ஆறுமணி. நான் உடனே கப்பலுக்கு விரைந்தேன். கப்பலுக்குப் போனால் அங்குள்ள மருத்துவர் எல்லா பயணிகளையும் சோதித்து விட்டு தன் வீட்டுக்கு சென்று விட்டார் என்று தெரிந்தது. அதைக் கேட்டதும் என் இதயம் நொறுங்கியது. அன்று எனக்கு ஏற்பட்ட வெறுப்புக்கு அளவே இல்லை. நம்முடைய எல்லாத் திட்டங்களும் முயற்சிகளும் வீணாய் போனதென்று நினைத்தேன்”.
இப்படி எழுதி இருந்தாலும் நாகேன் புத்திசாலித்தனமாக கப்பல் கேப்டனைப் பார்த்து மருத்துவரின் (அவர் ஐரோப்பியர்) விலாசத்தை பெற்றுக் கொண்டார். அத்துடன் பத்து பதினோரு மணிவாக்கில் அந்த இரு பயணிகளை மருத்துவச் சான்றிதழடன் வந்தால் கப்பலில் ஏற்றுக் கொள்ளவும் அவருடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு தான் அதிர்ஷ்டம் தொடங்கியது. நாகேன் எழுகிறார்:
“கப்பலின் அறையில் இருந்த பெட்டிகளை கூலியாள் இறக்கி தன்னுடைய குதிரை வண்டியில் வைத்தான். தனக்கு மருத்துவரின் வீடு தெரியும் என்றும் அங்கு பணிபுரியும் ஒரு வேலையாள் தனக்கு பழக்கம் என்றும் எல்லாவற்றையும் தான் ஏற்பாடு செய்வதாகவும் ஆனால் தன்னையும் அந்த வேலையாளையும் நன்கு ‘கவனிக்க’ வேண்டும் என்றும் சொன்னான். அந்தக் கூலியாள் வங்காளி; கல்கத்தாக்காரன்; புத்திசாலி. அவன் வார்த்தைகளையும் செய்கையும் பார்த்ததும் இவன் காரியத்தைச் சாதித்து விடுவான் என்று எனக்குப் பட்டது. ஆனால் கவலை மேகங்கள் முற்றிலும் களையவில்லை. ஏனெனில் அந்த இரு பயணிகளும் எங்கிருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கண்ணாமூச்சி விளையாட்டுக்கு முடிவு வரவில்லையே”.

இதனிடையே திட்டமிட்டபடி சந்திப்பு நிகழாததால் அமர், மன்மத ஜோடி அரவிந்தருடன் த டூப்ளெக்ஸ் கப்பல் நிறுத்தப்பட்ட சந்த்பால் துறைக்கு வந்தார்கள். அங்கு ஒரு குதிரை வண்டிக்கு உள்ளே அரவிந்தரை உட்கார வைத்து அவரை மறைக்கும் விதமாக தாங்கள் அமர்ந்துகொண்டு சுகுமாரின் வீட்டிற்குச் சென்றார்கள். வீடு இருக்கும் கல்லூரி சதுக்கத்திற்கு சற்று தொலைவில் வண்டியை நிறுத்திவிட்டு விசாரித்து வரும்படி மன்மதனை மட்டும் சுகுமார் வீட்டுக்கு அனுப்பினார்கள். சூழ்நிலை அபாயகரமாக இருந்தது. அந்தப் பகுதி முழுக்கவும் சாதாரண உடையில் போலீஸ்காரர்களும் உளவாளிகளும் இருந்தனர். அரவிந்தரின் முகமோ அனைவருக்கும் தெரியும்; மிகவும் பிரபலமானது. யாராவது பார்த்துவிட்டு எதையாவது சொன்னால் அவ்வளவுதான். உடனே எல்லோரும் கைது தான். சிக்கலை மேலும் மோசமாக்கியது மன்மதன் சொன்னது. சுகுமார் வீட்டில் இல்லை. அனேகமான காணாமல் போனவர்களைத் தேடிப் போய் இருக்கலாம் என்று மன்மதன் சொன்னார். காத்திருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அப்போது நடந்தவை பற்றி அமர் எழுதுகிறார்:
“நான் அரவிந்தருடன் அமர்ந்திருந்த போதிலும் என் மனம் அமைதியற்று இருந்தது. மற்றவர்கள் எங்கே போனார்கள் என்று கவலையாக இருந்தது. ஆனால் யாருடைய பாதுகாப்புக் குறித்து என் மனம் சஞ்சலமும் கவலையும் கொண்டிருந்ததோ அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல், பதற்றமும் இல்லாமல், உயிரற்ற கற்சிலை போல அசையாமல் உட்கார்ந்து இருந்தார்”.
சிறிது நேரம் கழித்து மன்மதன் மீண்டும் முயற்சித்தார். இந்த முறை அவர் சுகுமாரைச் சந்தித்தார். அரவிந்தர் ஆபத்தான இடத்தில் காத்திருப்பதை அறிந்த சுகுமார் திகிலடைந்தார். உடனே அவர்களை அங்கிருந்து சந்த்பால் துறைக்குச் செல்லுமாறும், அங்கு நாகேனை பயணச் சீட்டுடன் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அடுத்தடுத்த விஷயங்களை நாகேனின் நூலில் இருந்து பார்ப்போம்:
“இரண்டு ட்ரங்க் பெட்டிகளுடன் நான் உணவகத்துக்குச் சென்றபோது மாலைப் பொழுது கழிந்திருந்தது. கூலியாளை கப்பல் துறையில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு நான் சுகுமார் தா வீட்டுக்குச் சென்றேன். அவர் வெளி அறையிலேயே எனக்காகக் காத்திருந்தார். நான் கப்பலில் இருந்து பெட்டிகளை எடுத்து விட்டேன் என்று சொன்னேன். ஆனால் நான் மற்ற விவரங்களைச் சொல்வதற்கு முன் அவர், பெட்டிகளையும் பயணச் சீட்டுகளையும் எடுத்துக்கொண்டு உடனடியாக மீண்டும் துறைக்குப் போகும்படியும், அங்கு அமர் பாபு குதிரை வண்டியில் அரவிந்தரையும் பிஜோய் நாக்-கையும் உட்கார வைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார். நான் மருத்துவர் சான்றிதழுக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதைச் சொன்னேன். அதற்கு பணம் வேண்டும் என்றேன். அவர் உடனே உள்ளே சென்று பணத்துடன் வந்தார். என்னிடம் தந்தார்”…
“நான் மீண்டும் உணவகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளையும் ஒரு குதிரை வண்டியில் ஏற்றிக்கொண்டு பயணச்சீட்டுகளையும் எடுத்துக்கொண்டு சந்த்பால் துறைக்கு விரைந்தேன். அங்கு அரவிந்தரின் குதிரை வண்டி சாலையோரத்தில் நிற்பதைக் கண்டேன். அந்தக் கூலியாள் அந்த வண்டிக்கருகில் உட்கார்ந்து இருந்தான். என்னைப் பார்த்ததும் உடனே ஓடி வந்து, ‘உங்கள் பாபுகள் வந்துவிட்டார்கள். நான் அவர்களிடம் நமது ஏற்பாடு பற்றிச் சொல்லியுள்ளேன். ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது. நீங்கள் இன்னமும் காலம் கடத்த வேண்டாம். டாக்டர் தூங்கப் போய்விடுவார்’என்றான்…
“என்னுடைய குதிரை வண்டியை அனுப்பிவிட்டேன். அந்தக் கூலியாள் இரு பெட்டிகளையும் அரவிந்தர் இருந்த வண்டியின் கூரை மீது வைத்து கட்டினான். நான் வண்டியில் ஏறி அமர் தா-வுடன் அமர்ந்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் பின்னால் அரவிந்தரும் பிஜோய் நாக்-கும் அமர்ந்திருந்தனர். கூலியாள் வண்டிக்காரன் பக்கத்தில் உட்கார்ந்தான். டாக்டர் இருந்தது எந்தத் தெருவில் என்று இப்பொழுது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அது சௌரங்கிக்கு அந்தப் பக்கம் இருந்த ஐரோப்பியக் குடியிருப்பு என்பது மட்டும் நினைவில் இருக்கிறது…
“நாங்கள் டாக்டர் வீட்டிற்குச் சென்றதும் நால்வரும் வராண்டாவில் காத்திருந்தோம். கூலியாள் டாக்டரின் வேலையாளை அழைத்துப் பேசினான். டாக்டர் அரவிந்தரையும் பிஜோய் நாக்-கையும் பரிசோதனைக்கு அழைக்கும் முன்பு அவர்களிடம் பயணச்சீட்டைக் கொடுத்து அவர்களது உண்மையான பெயருக்கு பதிலாக அதில் எந்தப் பெயர், விலாசம் பதியப்பட்டுள்ளது என்பதையும் சொன்னேன். டாக்டருக்கு பரிசோதனைக் கட்டணத்தையும் -எவ்வளவு என்று சரியாக நினைவில்லை அனேகமாக முப்பத்தி இரண்டு ரூபாய் இருக்கலாம் – அரவிந்தரிடம் கொடுத்தேன்…
“நாங்கள் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தோம். அப்பொழுது அந்தக் கூலியாள் ஆச்சரியப்படும்படியான ஒரு விஷயத்தைச் செய்தான். எங்களுக்கு அது சுவாரஸ்யமாக இருந்தது. அவன் என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தான், ‘உங்களோடு வந்த அந்த பாபு ரொம்ப பயந்துவிட்டார் போலிருக்கிறது. அவர் இதற்கு முன் வெள்ளைக்காரரின் அருகில் போனதில்லை போலிருக்கிறது. டாக்டர் சாகிப் நல்லவர்தான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று அவரிடம் சொல்லுங்கள்’ என்றான். அவன் நாங்கள் மூவரும் அவ்வப்போது பேசிக் கொள்வதையும் ஆனால் அரவிந்தர் மிகவும் அமைதியாக இருப்பதையும் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவராக இருப்பதையும் கண்டு அவனாகவே முடிவுக்கு வந்து விட்டான் போலிருக்கிறது. அடுத்த நொடி அவனே அரவிந்தரிடம் போய், ‘பாபு, பயப்படாதீர்கள். இந்த சாகிப் ரொம்ப நல்ல மனுஷன் தான். நீங்கள் பயப்பட வேண்டாம்’ என்றான். இதைச் சொல்லும் போது அவன் அரவிந்தரின் கையைப் பிடித்து விழிப்படைய செய்வது போல உலுக்கினான். அதைப் பார்த்து நாங்கள் மூவரும் கண்ணடித்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டோம். அரவிந்தரும் மென்மையாகப் புன்னகைத்தார். அந்தக் காட்சி இன்றும் என் மனதில் சினிமா காட்சி போல் இருக்கிறது.’
“சற்று நேரத்துக்குள் வேலையாள் வந்து டாக்டர் அழைப்பதாகக் கூறினான். அரவிந்தரையும் பிஜோய் நாக்-கையும் அவன் டாக்டரின் அறைக்குள் அழைத்துச் சென்றான். பத்து பதினைந்து நிமிடத்திற்குள் அவர்கள் மருத்துவர் சான்றிதழ் உடன் வந்தார்கள். பின்னர் பிஜோய் நாக்-கிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன், சாகிப் இரண்டொரு நிமிட பேச்சிலேயே அரவிந்தர் இங்கிலாந்தில் படித்தவர் என்பதைத் தெரிந்து கொண்டார். அதுபற்றி டாக்டர் கேட்டதற்கு ‘ஆம்’ என்று மட்டும் அரவிந்தர் கூறியுள்ளார்…
“நாங்கள் மீண்டும் குதிரை வண்டியில் ஏறி சந்த்பால் துறைக்கு விரைந்தோம். அரவிந்தரின் முகத்தில் பரபரப்பின் சுவடே இல்லை. பின்னர் இதுபற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது அமர் – தா மிகச் சரியாகச் சொன்னார்: நாம் எந்த ஒருவரைப் பற்றி கவலையோடு இருந்தோமோ அவர் மிக அமைதியாக சமாதி நிலையில் இருப்பவர் போல இருந்தார். அரவிந்தர் கவலை, பயத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர், பயமற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை பார்த்ததில்லை. அன்றுதான் நேரில் கண்டேன்…
“வண்டி கப்பல் துறையை அடைந்தபோது இரவு பதினோரு மணி ஆகிவிட்டது. கூலியாள் தலையில் பெட்டிகளை வைத்து நாங்கள் நால்வரும் டூப்லௌக்ஸ் கப்பலில் ஏறி முன் பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்குச் சென்றோம். கூலியாள் பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டுப் போய்விட்டான். பிஜோய் நாக் அரவிந்தரின் படுக்கையைத் தயார் செய்தார். அமர்- தா வும் நானும் கதவருகில் நின்று அரவிந்தரைப் பார்த்தோம். அமர் தா தன் சட்டைப் பையில் இருந்து கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அரவிந்தரிடம் கொடுத்தார். அதனை உத்தரபாரா ஜமீன்தார் மிச்சீர் பாபு கொடுத்ததாகக் சொன்னார். ஒரு வார்த்தையும் பேசாமல் அரவிந்தர் அதை வாங்கிக் கொண்டார். பிறகு அமர் தா தன் இரு கரங்களையும் கூப்பி நெற்றியில் வைத்து அரவிந்தரை வணங்கினார். நான் அரவிந்தரின் காலடியில் என் நெற்றியை பதித்து அந்த தெய்வப்பிறவியை மதிப்புடன் தொட்டேன். மன நிறைவு பெற்றேன்”.
அடுத்த நாள் அதிகாலை, ஏப்ரல் ஒன்றாம் தேதி, டூப்ளெக்ஸ் கப்பல் கல்கத்தாவை விட்டு கிளம்பி பாதுகாப்பாக அரவிந்தரை கடல் பரப்புக்குக் கொண்டு சென்றது. 1910 ஏப்ரல் நான்காம் தேதி அவர் பிரிட்டிஷ் அதிகார எல்லைக்கு அப்பால் இருந்த பாண்டிச்சேரிக்குச் சென்று சேர்ந்தார். அத்துடன் அவரது சொந்த மாநிலத்துடனான உடல் ரீதியான தொடர்பு அறுந்து போனது. அதன் பிறகு இறுதிவரை அவர் வங்க மண்ணுக்குத் திரும்பி வரவேயில்லை.

தெய்வீக சக்தி தன்னை சரண் அடைந்தவர்களை எப்படி எல்லாம் பாதுகாக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது! மார்ச் 31 ஆம் தேதி மதியம் அரவிந்தரின் பாதுகாப்பே கேள்விக்குள்ளாகி இருந்தது. கச்சிதமாகத் திட்டமிட்டதெல்லாம் தூளாய்ப் போயின. ஆனால் இப்போது அந்த நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கையில் அந்த இரண்டு பயணிகளும் திட்டமிட்டபடி கப்பலில் ஏறாதது மறைமுகமான வரமாகவே தெரிகிறது. திட்டமிட்டபடி அரவிந்தர் கப்பலில் ஏறி மருத்துவரை அங்கே சந்தித்திருந்தால் பெரும் ஆபத்தாகப் போயிருக்கும். வழக்கம்போல கல்கத்தா போலீசார் துறைமுகத்தில் மருத்துவப் பரிசோதனையின் போது திட்டமிட்டு உடனிருந்தனர். அதை பயண ஏற்பாட்டாளர்கள் திட்டமிடும்போது கவனத்தில் கொள்ளவில்லை. அரவிந்தரை எளிதில் அடையாளம் கண்டிருப்பார்கள்; விபரீதம் விளைந்திருக்கும்.
போலீஸ் ஆவணங்களின்படி பயணம் செய்ய வேண்டிய இரண்டு வங்காளிகள் மருத்துவப் பரிசோதனைக்கு கப்பலுக்குள் வரவில்லை. எனவே பயணம் செய்யவில்லை. ஏப்ரல் நான்காம் தேதிக்குப் பிறகு தான் போலீசாரின் விசாரணையில் அந்தப் பயணிகள் கடைசி நேரத்தில் கப்பலில் ஏறி மறுநாள் அதிகாலை பயணித்து விட்டது தெரிந்தது. அரவிந்தர் கடைசி மணி நேரத்தில் தான் கப்பலில் ஏறினார். அதற்குள் கப்பல் பயணத்திற்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டதால் போலீஸார் கிளம்பிச் சென்று விட்டனர். அரவிந்தர் வந்தபோது அங்கு யாரும் இல்லை. வாஸ்தவத்தில் அரவிந்தர் சந்திரநாகூரில் இருந்து புறப்பட்டு கப்பலில் ஏறும் வரை ஒவ்வொரு கட்டத்தையும் அவரது நண்பரும் ஆசானுமாகிய தெய்வீக சக்தியே நிகழ்த்தியது.
தெய்வீக ஆணையைப் பற்றி அரவிந்தர் கூறியிருப்பது, அது பற்றிய ஒரு அழகான விளக்கமாகும்:
“தெய்வீக செய்தியைப் பற்றி மக்கள் பொதுவாகவே தெளிவற்றிருக்கிறார்கள். தெய்வீகக் கட்டளையை நாம் வேறுபடுத்தித் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் நம்மிடம் பல வழிகளில் பலவிதமாக பேசுகிறார். அதெல்லாம் தெய்வீக கட்டளை அல்ல. அது வரும்போது மிகத் தெளிவாகவும் மறுக்க முடியாததாகவும் இருக்கும். அது உங்கள் அறிவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் மனம் அதை ஏற்று கீழ்படிந்தேயாக வேண்டும். அப்படிப்பட்டதொரு தெய்வீக கட்டளை கிடைத்துதான் நான் பாண்டிச்சேரிக்கு சென்றேன்”.
லௌகீக வாதமும் அவநம்பிக்கையும் நிரம்பி இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் கடவுள் இருக்கிறார், நமக்கு அருகிலேயே இருக்கிறார், நம்மிடையே இருக்கிறார், தன்னை சரண் அடைந்தவர்களுக்கு வழி காட்டுகிறார் என்பதை மறுக்க முடியுமா?
அரவிந்தர் பாண்டிச்சேரிக்குப் போன பின்பு அரசியல் தொடர்பை முற்றிலும் விட்டுவிட்டார். இந்திய அரசியல் களத்தில் குழப்பம் மிக்க காலகட்டத்தில் அரவிந்தர் குறுகிய நான்கு ஆண்டுகளில் (அதில் ஓர் ஆண்டு சிறையில் கழிந்தது) ஆற்றிய பங்கு அளப்பரியது. பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமை மனப்பான்மையில் ஆழ்ந்து, செயலற்றுக் கிடந்த தேசத்தை அவர் விழிப்புறச் செய்தார். அது முதல் சாதனை. காந்தமெனக் கவர்ந்த அவரது ஆளுமையும் ‘வந்தே மாதரத்தில்’ அவர் எழுதிய எழுச்சிமிகு கட்டுரைகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்தான் முதன்முதலில் முழுமையான சுதந்திரம் வேண்டுமென தெளிவாக வெளிப்படையாகக் கேட்டவர்.
அவரது இரண்டாவது சாதனை, அரசியலை ஆன்மிகப்படுத்தியது. தேசிய இயக்கத்தின் தலைமை பீடத்தில் இறைவனை அவரே வைத்தார். ’அவனே அதன் வலிமை, ஏற்றமிகு சக்தி, வல்லமை மிக்க தலைவன்’ என்றார். அவர் தேசத்தை அரசியல் செயல்பாடாகவோ புவியியல் பரப்பாகவோ பார்க்காமல் தெய்வீக அன்னையின் வடிவாக்க் கண்டார். அவளையே தேசிய எழுச்சியின் ஊற்றுக்கண்ணாக வைத்தார்.
நிறைவாக, விடுதலைப் போராட்டத்திற்கான வழிமுறையாக சாத்வீக எதிர்ப்பு என்ற கருத்தையும் அதற்கான செயல் திட்டத்தையும் முன்வைத்தார். அவர் காலத்தில் அது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் அதன் தாக்கம் பின்னாளில் வந்த ஒத்துழையாமை இயக்கம் போன்ற அரசியல் செயல்பாடுகளுக்கு களம் அமைத்தது. அதன் பலன்கள் நீண்ட கால நோக்கில் வெற்றியைத் தேடித் தந்தன.
அரவிந்தர் திடீரென பாண்டிச்சேரிக்குச் சென்றதும் அரசியல் செயல்பாடுகளை அறவே நிறுத்தி விட்டதும் அரசியல் களத்தில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார் அவர் அரசியலில் இருந்து விலகி விட்டார் என்பதை நம்பவில்லை. மாறாக புரட்சியை ஏற்படுத்த ரகசியமாகத் திட்டமிட்டு வருவதாகவே சந்தேகித்தனர். அதற்கு நேர்மாறாக அன்றாடம் அரசியல் களத்தில் களமாடிய செயல் வீரர்கள், அரசியலில் இருந்து அவர் விலகிச் சென்றதைச் சாடினர். அவரை இந்தியாவையும் உலகத்தையும் மறந்து விட்டு தன்னுடைய தனிப்பட்ட ஆன்மிக விடுதலையில் மட்டும் நாட்டம் கொண்டவராகக் கருதினர். எனவே அவரை கடமையிலிருந்து தப்பியோடியவர் என்றனர். இன்றும்கூட அவரது முடிவு குறித்து சரியான புரிதல் இல்லை. ஆனால் அது பற்றி அரவிந்தர் கூறியுள்ளது எந்த விதமான சந்தேகத்துக்கும் புரிதலின்மைக்கும் இடமில்லாதபடி தெளிவாக உள்ளது.
அவர் தன் சீடர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகிறார்:
“நான் அரசியலை விட்டு விலகியதற்குக் காரணம் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தினால் அல்ல. அதுபோன்ற எண்ணம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. நான் விலகியதற்குக் காரணம் என்னுடைய யோக தவத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், அதுபற்றி எனக்குக் கிடைத்த இறை ஆணையின் காரணத்தால் மட்டுமே. என்னுடைய அரசியல் தொடர்புகளை நான் முற்றிலும் துண்டித்துக் கொண்டேன். ஆனால் நான் எந்த நோக்கத்திற்காக அரசியல் பணியைச் செய்யத் தொடங்கினேனோ, அந்தப் பணி நான் இல்லாவிட்டாலும் மற்றவர்களால் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் வெற்றி பெறும் என்று உறுதியாக எனக்குத் தெரியும். பயத்தினாலோ அவநம்பிக்கையாலோ நான் விலகவில்லை”.
விடுதலைப் போராளியாக, சிந்தனையிலும் செயலிலும் புரட்சியாளராக, தீவிர தேசியவாதியாக, இறை நம்பிக்கையாளராக, தேசியவாத இயக்கத்தின் தலைவராக, இந்திய பண்பாட்டை முழுமையாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் அரசியல் களமாடியவராக, ஆங்கில அரசு அச்சத்துடன் பார்த்த புரட்சியாளர் அரவிந்தர் பாண்டிச்சேரியை தன் தவக்குகையாகக் கொண்டு யோக தவத்தில் ஈடுபட்டார்.
இந்தியாவும் உலகமும் அவரை வேதகால ரிஷி பரம்பரையின் தொடர்ச்சியாகக் கண்டது; ‘மகரிஷி அரவிந்தர்’ எனப் போற்றி கொண்டாடுகிறது; வாழ்த்தி வணங்குகிறது.
***
அடிக்குறிப்பு:
# சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும் சுலோகம் இது:
‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:
ஸ்ரீ கீதாசார்யனான கண்ணனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரம் இது. இதன் பொருள், “ நீ செய்யும் தர்மங்களே மோக்ஷ உபாயம் என்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் பற்றிக்கொள், நான் உன்னை அனைத்து பாபங்களில் இருந்து விடுவிக்கிறேன்” என்பதாகும்.
$$$
(விடுதலைப் போரில் அரவிந்தரின் வரலாறு இத்துடன் நிறைவு பெறுகிறது. பாண்டிசேரி சென்ற பின்னரான மகரிஷி அரவிந்தரின் வரலாறு தனியாக பின்னர் வெளியாகும்).
$$$