போரும் அமைதியும் அரவிந்தரும் 

– அரவிந்தன் நீலகண்டன் 

ஸ்ரீ அரவிந்தர் போருக்கான உளவியல் காரணங்களைப் பற்றி எழுதி உள்ளவை இப்போது நடக்கும் ரஷ்ய – உக்ரைன் யுத்தம் பற்றி நமக்கு சரியான புரிதலை அளிக்குமா? 

மனித குலம் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அது அற்பக் காரணங்களுக்காக தன் இனத்தைச் சேர்ந்த சகமனிதனைக் கொல்லக் கூடியது; அதுவும் திறன்வாய்ந்த நிறுவன அமைப்பின் உதவியுடன் கொல்லும். எரி பந்தங்களில் தொடங்கி இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என நாம் மிகவும் முன்னேறி உள்ளோம். இரண்டு சிறிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் செலவில் ஆப்பிரிக்கா கண்டம் முழுக்கவும் மின்சாரத்தைத் தந்துவிடலாம்.

இது அலங்காரப் பேச்சு அல்ல, மனித இனம் என்ற முறையில் நம்முடைய முன்னுரிமை எதற்கு என்பதைக் காட்டுகிறது. நம்முடைய சிறந்த மூளைகளை, அரிய வளங்களை நம் சொந்த இனமாகிய மனித இனத்தைச் சேர்ந்த சக மனிதர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்துகிறோம். இதிலிருந்து வெளியேற வழி இருக்கிறதா? அது என்ன?

அமைதி வழி என்று உடனடியாகப் பதில் சொல்லலாம். ஆனால் ஒரு தேசம் தெரிந்தோ தெரியாமலோ அமைதி வழியை மேற்கொண்டால் அது மற்றொரு நாட்டின் ஆக்கிரமிப்புக்கு அல்லது அதனால் அழிவுக்கு உள்ளாகும். இன்று இதுதான் யதார்த்தமாக உள்ளது.

பனிப்போர்க் காலத்தில் அமெரிக்காவில் எழுச்சி பெற்ற அமைதிக்கான இயக்கத்தை / அந்த அமைதிக் காலகட்டத்தைப் பயன்படுத்திய சோவியத் ரஷ்யா தன் ராணுவத் துறையை வலுப்படுத்திக் கொண்டது. சோவியத் ரஷ்யாவின் சிதறலுக்கு / வீழ்ச்சிக்குப் பிறகு மதவெறி கொண்ட சர்வாதிகாரிகளின் கையில் பேரழிவு ஆயுதங்கள் சிக்கியுள்ளன எனக் கூறி இராக் மீதான யுத்தத்தை அமெரிக்கா நியாயப்படுத்தியது. அதைப் பயன்படுத்தி எண்ணெய் வர்த்தகத் துறையில் பல ஒப்பந்தங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

எனவே இதற்கான உண்மையான பதில் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின்  இயல்பை / இயற்கையைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது.

பூமி என்ற கோளின் பரிணாம வரலாற்றுப் பின்புலத்தில் மனித வரலாற்றைக் கண்ட தீர்க்கதரிசி ஸ்ரீ அரவிந்தர். சமூகப் பரிணாமம் பற்றிப் பேசும் டார்வின் அல்லது மார்க்ஸின் கொள்கைகளின் அடிப்படையில் பரிணாம தத்துவத்தை முன்வைத்த பல தத்துவவாதிகள் மேற்கத்திய நாடுகளில் தோன்றியுள்ளனர். என்றபோதிலும் (விழிப்பு) உணர்வு என்ற ரீதியில் பரிணாம வளர்ச்சியை அணுகியவர்  ஸ்ரீ அரவிந்தர்.

பூமி என்ற கோள் சுய விழிப்புணர்வு (Self Conscious) என்பதில் தொடங்கி  மீமன விழிப்புணர்வை (Supramental Conscious) நோக்கி மனித இனத்தின் மூலமாக மலர்வதாக ஸ்ரீ அரவிந்தர் காண்கிறார். அவரது கண்ணோட்டத்தில் மனித வளர்ச்சி என்பதே மற்றவர்களின் பரிணாமக் கொள்கைகளிலிருந்து தன்மை ரீதியாக வேறுபட்டது. அவரது வாதத்தின் முக்கிய விஷயமே மனித இனம் மாறக்கூடியது. அது உயர்வானதொரு பரிணாமத்திற்கான தாவல் நிலை என்பதுதான். ஆனால் தாவி மேலெழாமல் ஆழத்திலும் விழுந்து விடலாம்.

ஏறத்தாழ தற்கொலைக்கு ஒப்பான மனநிலையுடன் மனித இனம் போரை அணுகுவதைப் பார்க்கும்போது மனித இனம் தன்னுணர்வற்ற நிலையில் மாற்றத்தை நோக்கி, அதேவேளையில் எந்த மாற்றம் என்ற இலக்கும் இல்லாமல் பயணிப்பதாக விளக்க முடியும். இதற்குக் காரணம் தனிமனித விழிப்புணர்வு என்பது வந்த பிறகு ஒட்டுமொத்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதில் தன்மை சார்ந்த அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ அரவிந்தரின் தீர்க்கதரிசனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றையும் பல நூற்றாண்டு கால எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டது என்றாலும் அவரது தனி மனித வாழ்க்கை பல முக்கியமான, தீர்க்கமான நிகழ்வுகளை – இந்திய சுதந்திரப் போராட்டம், மங்கலாக புரட்சிகரச் செயல்பாடுகள், இரண்டு உலகப் போர்கள், தேச விடுதலை, பிரிவினை ஆகியவற்றை – கொண்டது. பிரபஞ்ச விதிகளைக் கண்ட வேத ரிஷிகளின் தோற்றம் முதல் இரண்டாம் உலகப் போரின் கொடுமைகள், பிரிவினையால் ஏற்பட்ட தொடரும் தீராத வலி என மனித இனத்தின் போராட்டத்தை தன் சொந்த வாழ்விலேயே கண்டார் ஸ்ரீ அரவிந்தர்.

எனவே மேற்சொன்ன உலக நிகழ்வுகளை எல்லாம் உள்ளடக்கிய அவரது பரிணாம வளர்ச்சி தரிசனத்தை நாம் புரிந்துகொண்டால் இப்போது நம் மனித இனத்தில் நடப்பதை –  உக்ரேனிலோ ஆப்கானிஸ்தானிலோ நடப்பதை – புரிந்துகொள்ள முடியும். 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு சர்வதேச நிகழ்வு நடந்தது.

1904 – 1905இல் ஜப்பான் ரஷ்யாவைத் தோற்கடித்தது. ஒரு ஆசியத் தீவு வல்லமை பொருந்திய ஒரு ஐரோப்பியப் பேரரசைத் தோற்கடித்தது. இந்திய தேசியவாதிகள் ஜப்பானின் வெற்றியைக் கொண்டாடினர். காரணம் ஆசியர்களை விட வெள்ளை நிற ஐரோப்பியர்கள் உயர்ந்தவர்கள் என்ற வாதத்தின் சாரமற்ற தன்மையை அது அம்பலப்படுத்தியது தான். ஜப்பானின் வெற்றிக்கு ஆழமானதொரு காரணம் இருந்தது என ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ளார்:

இந்த எழுச்சிக்கு எல்லாத் தரப்பிலும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் இந்த வலிமையான விழிப்புக்கு, வற்றாத ஆற்றலின் ஊற்றுக்கான காரணம் இதுதான் என்று ஜப்பானிய அறிஞர்கள் இப்பொழுது கூறத் தொடங்கியுள்ளனர். அது மதத்திலிருந்து பெற்றது. ஓயோமி சமயப் பிரிவின் (இந்திய) வேதாந்த போதனைகள், ஷிண்டோயிசத்தின் மீள்எழுச்சி, அதனுடன் இணைந்து எழுந்த ஜப்பானிய தேசியசக்தி வழிபாடு, அதன் அடையாளமாக இருந்த மிக்காடோ வம்ச மன்னர் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு தான் காரணம். இந்த ஒருங்கிணைந்த சக்திதான் மேற்கத்திய அறிவு, அறிவியலின் பிரம்மாண்டமான ஆயுத சக்தியை எதிரிகளை எளிதில் வீழ்த்தும் வெற்றிக்குரிய அர்ஜுனனின் காண்டீபம் போல் தாக்கி வீழ்த்தியது.

இவை, பவானி மந்திரில் உள்ள வாசகங்கள்.

இங்கு கவனிக்கத்தக்கது தேசிய அரசு தன்னுடைய தேசிய நலன்களை ஆன்மிக ஊற்றுடன் இணைத்து சக்தியுடன் எழுச்சி பெறுவதை ஸ்ரீ அரவிந்தர் சுட்டிக்காட்டுகிறார். அவர் தன் யோக சாதனைகளைத் துவக்குவதற்கு முன் வல்லமையுடன் எழுந்த தேசிய சக்தி வெறிபிடித்துச் சீரழிந்ததையும் கண்டார்.

1907இல் ஜப்பான் கொரியா மீது படையெடுத்தது. அதுபற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதுகிறார்: 

ஜப்பானியர்களின் ஆட்சியை கொரியர்களால் அமைதியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் சதிச் செயலில் ஈடுபட்டார்கள். ஐரோப்பா, இப்போதுள்ள நிலையில், தம் மக்களைத் தவிர பிறர் எவருடைய சுதந்திரத்துக்கும் கடுமையான எதிரியாக உள்ளது. ஐரோப்பா எப்போதும் வெற்றியை வழிபடுவதாக உள்ளது. ஐரோப்பாவின் இந்த அம்சத்தை - மற்ற நாடுகளின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயத்தை - கிழக்கத்திய சக்தி பின்பற்றுவதைக் கண்டு அது மகிழாது என்பதை புரிந்துகொள்ள முடியும். (22 ஜூலை 1907 )

மேற்கண்ட இரண்டு பத்திகளில் இருந்து ஒரு தரிசனம் விரிவடைவதை நாம் காண முடியும். தேசிய உயிர்ப்பின் ஆழ்ந்த உளவியல் ஊற்றையும், அது எப்படி தவறாக போகலாம் என்பதையும் அவர் காட்டுகிறார்.

அதேவேளையில் அப்போதைய ஆசிய சக்திகளான சீனாவும் ஜப்பானும் ஒன்றாகச் சேர்ந்து பிரிட்டிஷ் இந்தியாவுக்கு எதிராக நிற்குமானால் அதைச் சமாளிக்க இந்தியா வலிமை பெற்றதாக இருக்க வேண்டும் என ஸ்ரீ அரவிந்தர் விரும்புகிறார். இங்கு சீனாவும் ஜப்பானும் ‘இந்தியாவை விடுவிப்பவர்கள்’ என்ற போலியான சிந்தனையை அவர் ஏற்கவில்லை.

ஆனால் வலிமையான இந்திய தேசிய அரசியல் நிறுவனத்தை இந்தியர்கள் உருவாக்குவார்களானால் அப்படிப்பட்ட சூழ்நிலையை – சீனா, ஜப்பான் × பிரிட்டிஷ் – தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதினார். 

‘எதிரியின் எதிரி எனக்கு நண்பன்’ என்ற எளிய கோட்பாட்டை ஸ் ரீஅரவிந்தர் ஏற்கவில்லை.

உலகப் போர்களின் போது ஸ்ரீ அரவிந்தர் யோக சாதனையில் ஆழ்ந்து ஈடுபட்டு வந்தார். இருந்தாலும் யுத்தச் செய்திகளை கூர்ந்து கவனித்து வந்தார். போரின்  உளவியலில் கருத்தைச் செலுத்தினார். 1916 ஆகஸ்ட் முதல் 1918 ஜூலை மாதம் வரை ‘ஆர்யா’ பத்திரிகையில் ‘சமூக வளர்ச்சியின் உளவியல்’ என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். அவற்றை மேலும் விரிவுபடுத்தி ‘மனித சுழற்சி’ (Human Cycle) என்ற நூலாக 1949 இல் அவர் வெளியிட்டார். அந்த நூல் இரண்டு உலகப் போர்களைக் கண்டது.

தேசத்தின் ஒட்டுமொத்த உளவியல் கட்டமைப்பு வெறும் பௌதீக வல்லமையை மட்டும் வளர்த்தால் அது அடுத்ததொரு போருக்கும் பேரழிவுக்குமே வழிவகுக்கும் என்பதை  ஸ்ரீ அரவிந்தர் சுட்டிக்காட்டுகிறார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுதுகிறார்:

இப்போது போரின் உளவியல் முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. அது எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்பதும் தெரிகிறது. போர் ஒரு ஆபத்தான ஆசிரியர். போரின் பௌதிக வெற்றி பெரும்பாலும் தார்மிகத் தோல்வியைக் கொடுக்கின்றது. போரில் தோற்ற ஜெர்மனி போருக்குப் பின் வென்றது. போருக்குப் பின் அதன் கோட்பாடு உறுதியாகவும் வெறி கொண்டும் எழுந்து ஐரோப்பாவை அச்சுறுத்தியது.

விரைவில் ஜெர்மனி நாஜி சர்வாதிகாரத்துடன் வந்து பேரழிவை ஏற்படுத்தியது. நாஜிக்களின் தோல்விக்குப் பிறகு, நாஜிக்களின் தோல்வியை ஸ்ரீ அரவிந்தர் தயக்கமின்றி ஆதரித்தார், உலகில் கம்யூனிஸ்டுகளின் சர்வாதிகாரம் அதன்பிறகு மேற்கத்தியர்களால் வந்த பனிப்போர், ஆயுத குவிப்பு போட்டி, மனித துயரங்கள் மேலும் துயரங்கள் என்று தொடர்ந்து வந்தன.

இப்போது பனிப்போர் முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த வழிமுறை திரும்பவும் தொடர்கிறது. இந்நிலையில் ஸ்ரீ அரவிந்தரின் கருத்துச் சட்டகத்தை ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தில் பொருத்திப் பார்ப்போம்.

1991 ல் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி என்பது ரஷ்யாவை மையமாகக்கொண்ட சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல. மார்க்சியக் கொள்கை ஏற்படுத்திய கற்பனை மனக்கோட்டையும் சரிந்து விழுந்தது. உண்மையில், முழுமையான சமத்துவம் நடைமுறைக்கு வரும்போது ஆன்மிக சுதந்திரம் அல்லது உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்று மார்க்சியம் உறுதி கூறியது. சமூக, பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களிடம் அவர்கள் ‘முதலாளித்துவ வார்ப்பி’ல் வாழ்வதாகக் கூறி தொடர்ந்து இழிவு படுத்தியது.

மார்க்சியம் தருவதாகச் சொன்ன ஆன்மிக விடுதலையைத் தராதது மட்டுமல்ல, ஏற்கனவே இருந்த தனிமனித சுதந்திரத்தையும்  அழித்துவிட்டது. அது கொள்கை  வெறியிலும் ஐரோப்பிய மைய சிந்தனையிலும் தளைப்பட்டது; பொருளும் உணர்வும் ஒன்றையொன்று நிறைவு செய்யக் கூடியவை என்பதை ஏற்க மறுத்தது. முற்று முடிவாக, இறுக மூடிய அந்த மார்க்சிய முறை எல்லா சுதந்திரத்தையும் பறித்துக் கொண்ட மனிதத்தன்மையற்ற சர்வாதிகார அரசாக உருவெடுத்தது. இது தவிர்க்க முடியாத நிகழ்வு. ‘மார்க்சிய சோஷலிசம்’ என்பது ஒரு குறுகல் குழுவாக ‘பகலில் இருளை’ நோக்கிச் சென்றது.

மேற்குலகும் தார்மிக ரீதியில்  சோவியத் ரஷ்யாவை விட உயர்ந்தது அல்ல. அது எம் கே -அல்ட்ரா, டஸ்கிகி ஆய்வுகளை செய்தது.

(எம் கே- அல்ட்ரா என்பது போதைப் பொருள்களை கொண்டு எதிரிகளை கொடுமைப்படுத்துவது பற்றி அமெரிக்க சிஐஏ மேற்கொண்ட சட்டத்துக்கு புறம்பான ஆராய்ச்சி. டஸ்கிகி என்பது ஆரோக்கியமான ஆப்பிரிக்க கருப்பின ஆண்கள் மீது பாலியல் நோயான சிபிலிஸ்ஸின் கிருமிகளைச் செலுத்தி விளைவுகளை ஆராய்வது).

அது ஹோண்டுராசில் மட்டுமன்றி சிறிய தென்அமெரிக்க நாடுகளில் எல்லாம் சர்வாதிகாரிகளை ஆதரித்து எண்ணற்ற அப்பாவிகளையும் பெண்களையும் குழந்தைகளையும் வதைத்தது; துயரத்தை ஏற்படுத்தியது. அதற்கு அது சொன்ன காரணம் ‘தீய கம்யூனிஸ்டு’களுக்கு எதிராகப் போராடுவது என்பது.

இறுதியில் சோவியத் சர்வாதிகாரத்தையும் மேற்கத்திய கொள்ளையடிக்கும் நுகர்வையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சோவியத் சர்வாதிகாரம் எண்ணிக்கையில் அதிகமாகவும், மேற்கத்தியது அதற்கு இணையான கொடுமை  செய்தது மட்டுமன்றி அதைத் தொடர்ந்து செய்து வருவதைக் காண்கிறோம்.

சோவியத்தின் தோல்வி மார்க்சிய உள்முரண்களால் ஏற்பட்டதே அன்றி, மேற்குலகின் தார்மிக உயர்வால் ஏற்பட்டதன்று.

மீண்டும் ரஷ்யா இப்பொழுது ஒரு குறுங்குழுவின் ஆட்சியில் எழுகிறது. இது பௌதீகத் துடிப்புள்ள ரஷ்யா. கட்டுக்கடங்காத வன்முறையுடன் வருகிறது. உக்ரைன் நேட்டோவின் கைப்பாவையாக இருக்கிறது. துரதிஷ்டமாக, நாஜிக்கள் மற்றும் சோவியத்திலிருந்து ரஷ்யா பாடம் கற்கவில்லை.

அதற்கு ஆன்மிக அறிவு இருக்கிறது. விரிந்துகொண்டே வரும் மேற்கத்திய நாகரீகத்தை தடுத்து நிறுத்தி, அதை உள் நோக்கியதாக மாற்றி, நன்மை செய்யக் கூடியதாக  உருமாற்றும் சக்தி ரஷ்யாவுக்கு உண்டு. ரஷ்யாவும் உக்ரைனும் பொதுவானதொரு ஆன்மிகப் பண்பாட்டை உடையவை. ஆனால் அந்த பொதுவான ஆன்மிகப் பண்பாடு சோவியத் ஆட்சியில் பலவீனமடைந்துள்ளது.

சோவியத் ஆட்சியில் 1932 – 33 இல் நடந்த ஹோலோடிமோர்  கசப்பான அனுபவங்களை உக்ரேன் மறக்கவில்லை. (ஸ்டாலின் தனது ஆட்சியில் ஆயிரக்கணக்கான உக்ரைன்  மக்களை செயற்கையான பஞ்சத்தால் சாகடித்தார்).

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யா உக்ரைனுடன் ஆன்மிகப் பாலம் அமைத்து மன ஆறுதல் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதைச் செய்யாமல் ரஷ்யாவிடமிருந்து மேலும் மேலும் விலகி மேற்கத்திய நாடுகளின் கையில் அது விழும்படி விட்டுவிட்டது. உக்ரைனும் நேட்டோவின்  வலிமையினாலும் நுகர்வு பண்பாட்டினாலும் கவரப்பட்டு அதை நோக்கிச் சென்றது. ரஷ்யா – உக்ரைன் இரண்டுக்கும் வரலாற்றுரீதியான முறைபாடுகள் / குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால் உக்ரைன் மேற்குலகை நோக்கி நகரத் துவங்கியது. ரஷ்யா ஆக்கிரமிப்பும் அழிவும் கொண்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

முதல் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பா எப்படி ஜெர்மனியக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஜெர்மனியின் தார்மிக வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை ஸ்ரீ அரவிந்தர் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். அதுபோலவே சோவியத்தின் யுக்திகளையும் பண்புகளையும் மேற்குலகு உள்வாங்கிக் கொண்டு உள்ளது. ‘நியூயார்க் டைம்ஸ்’ , ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகைகளின்  மொழிப் பிரயோகத்தை காணும்போது அது தெளிவாக தெரிகிறது.

ரஷ்ய – உக்ரைன் போரில் நிகழ்வது பௌதிக உயிர்த்துடிப்பின் புத்தாக்கம். இதில் ஆன்மிகம் ஏதுமில்லை; இது ஆபத்தானது; மனிதத் துயரத்தை மட்டுமே கொண்டுவரும். இந்த நிலையிலும் ரஷ்யா அதன் ஆன்மாவின் குரலைக் கேட்க வைக்க முடியுமென்றால் உக்ரைனை அதன் ஆத்மாவின் குரலைக் கேட்கும்படிச் செய்தால் விடிவுக்கான வழி பிறக்கும்.

ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்: 

(தேசத்தின் உண்மையான தனித்துவம்) அதன் பொருளாதார, பௌதிக, கலாச்சார வாழ்வில் கூட இல்லை. இவை வெறும் பாதைகள். மாற்றிக்கொள்ளக் கூடிய, சரி செய்து கொள்ளக் கூடியவை. அது இவற்றை விட ஆழமான தன் முனைப்பிலும் (Ego) இல்லை.  அது மற்றவர்களை விட நன்மையில் முன்னேறி இருப்பதில், மற்றவர்களை ஆக்கிரமிப்பதிலோ நசுக்குவதிலோ இல்லாமல் சமமாக பாவிப்பதில், ஏனைய உலக நாடுகளுக்கு நன்மை செய்வதில் இருக்கிறது.

இந்த சுயத்தை (Self) கருத்தில் கொண்டு நம்முடைய பிராந்திய, வர்த்தக, அரசியல், கலாச்சார, சமய, ராஜதந்திர நடவடிக்கைகள் அமையுமானால் தற்கொலைக்கு ஒப்பான போரில் இருந்தும் அதன் வலியில் இருந்தும் மாறி புதிய மனிதத்துவத்தை உருவாக்க முடியும்.

(நன்றி: ஸ்வராஜ்யா) 31 மார்ச் 2022 ல் சமர்ப்பிக்கப்பட்ட உரை.

தமிழாக்கம்: திருநின்றவூர் ரவிகுமார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s