நூல் அறிமுகம்:  The Significance of Sri Aurobindo Ashram

-திருநின்றவூர் ரவிகுமார்

உலகிலுள்ள உயிரினங்கள் அவற்றின்  உள்ளியல்புகளின் வளர்ச்சி காரணமாக இன்னொன்றாக ஆவதுதான் பரிணாமம். சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை  ‘உயிர் பரிணாம வாதம்’ என்று சொல்லப்படுகிறது. அதாவது உயிர்கள் தங்கள் (சூழ்நிலைக்கு ஏற்ப) தகமைவால் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணாமம் கொள்வதை டார்வின் விளக்குகிறார். இந்திய மரபில் ஓர் ஆன்மா தன் செயல்கள் மூலம்  இன்னும் மேலானதாக பரிணாமம் கொண்டு கடைசியில் முழுமை அடைவதைப் பற்றி பேசப்பட்டுள்ளது. உலகில் இன்றுள்ள உயிரினங்களில் உயர்வானவன் மனிதன். ஆனால் பரிணாம வளர்ச்சியில் அவன் இறுதியானவன் அல்ல. அவனைவிட மேம்பட்ட உயர்வான அதிமனிதன் அல்லது சூப்பர் மேன் வருவான் என்கிறார் மகரிஷி அரவிந்தர்.

சுதந்திரப் போராளியான அரவிந்தர் அலிப்பூர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அங்கு அவர் யோக தவத்தை மேற்கொண்டார். அதனால் அவருக்கு இறை தரிசனமும் வழிகாட்டுதல்களும் கிடைத்தன. பின்னர் அவர் பாண்டிச்சேரியை தன் தவச்சாலையாக கொண்டு யோகத்தில் ஆழ்ந்தார்.

“இந்தியா விடுதலை பெற வேண்டும். அதனால் ஆசிய நாடுகளுக்கு விடியல் கிடைக்கும். உலகிற்கு ஆன்மிக வெளிச்சத்தைத் தருவதே இந்தியாவின் பணி. அதற்காக அது விடுதலை அடைய வேண்டும்” என்றார் ஸ்ரீ அரவிந்தர். தேச விடுதலையின் லட்சியத்தின் நீட்சியாக அவர் மானுட பரிணாமத்தை முன்வைத்தார். அந்தக் கருத்தின் ஆய்வகமாக ஆரம்பிக்கப்பட்டது பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம். இன்று ஆரோவில்  ‘உலக நகரம்’ என்ற பெயரில் பயிற்சிக்களமாக விரிவடைந்து நிற்கிறது.

உயர்ந்த தளத்தில் உள்ள இறை சக்தியை மனித மனத்திற்கு  இறக்குவதும் அதன்மூலம் இறை சக்தியின் பரிணாம பணியைத் துரிதப்படுத்துவதும் அவரது யோகக் கருத்தியல். அதற்கான சூழலை உருவாக்குவது ஆசிரமம்.  “இந்த ஆசிரமம் மற்ற ஆசிரமங்களைப் போலல்லாமல் வேறுபட்டதொரு நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டுள்ளது. உலகியலைத் துறப்பதற்காக இல்லாமல் வேறொரு பரிணாம வளர்ச்சிக்காக, வாழ்க்கைக்காக, முயற்சி செய்பவர்களின் பயிற்சி களம் இது”  என்று ரிஷி அரவிந்தர் கூறியுள்ளார்.

“உயர்ந்த நிலையில் உள்ள விழிப்புணர்வை கீழ் இறக்கி இந்த பூமிக்குக் கொண்டுவர ஆன்மிக வாழ்க்கை வாழ்வதற்கான மையம் இது. அந்த சக்தி தனிநபர்  ‘மோக்ஷத்திற்காக’ இல்லாமல் இந்தப் பூவுலக வாழ்க்கையே தெய்வீக வாழ்க்கையாகக் கூடியது” என்று ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படும் ரிஷிகா மிர்ரா அல்பாசா ஆசிரமம் பற்றி சொல்லியுள்ளார். ஒட்டுமொத்த மனித இனத்தையும் உடனடியாக மாற்ற முடியாது. அதற்கு தயாரிப்பு தேவை. அதற்கான ஆய்வகம் தான் ஆசிரமம் என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

“முதலில், தெய்வீக சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். அடுத்ததாக, அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான முனைப்பும் வேண்டும். இதற்கு எதிரான செயல்களையும் சிந்தனைகளையும் விலக்கும் உறுதி வேண்டும். மூன்றாவதாக, ஆனால் மிக முக்கியமாக பரிபூரண சரணாகதி செய்ய வேண்டும்” என்று ரிஷிகா வழிகாட்டி யுள்ளார்.

மகரிஷி அரவிந்தர் இறை சக்தியை தன் உடல் மூலமாக இந்த உலகிற்கு இறக்கிய நாள் 1926  நவம்பர் 24.   அன்றுதான் அரவிந்தர் ஆசிரமம் உதயமானது. அதன் நூற்றாண்டுக் காலம் இது. அதை ஒட்டி மகரிஷி அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் வாழ்க்கையில் தொடங்கி அவர்களது கருத்தியல், அதற்காகத் தொடங்கப்பட்ட ஆசிரமம், ஆரம்பத்தில் அதனுடன் இணைந்தவர்கள், பல்வேறு கட்டங்களாக அதன் வளர்ச்சி, இன்றைய நிலை, ஆசிரமம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்காலத் திட்டங்கள் என 14 அத்தியாயங்களில் முழுமையான வரலாற்றை எழுதி உள்ளார் கிருஷ்ணன்டு தாஸ்பட்நாயக். ஒடிசாவைச் சேர்ந்த இவர் சிறு வயது முதல் ஆசிரமத்துடன் தொடர்புடையவர். இப்போது ஆசிரமவாசி.

***

நூல் விவரம்:

The Significance of Sri Aurobindo Ashram in the Evolution of Humanity 
ஆசிரியர்: கிருஷ்ணன்டு சேகர் தாஸ்பட்நாயக் 

564 பக்கங்கள்; விலை: ரூ. 800 –
வாங்க: 93454 31930 
அமேசானிலும் கிடைக்கிறது.

$$$ 

Leave a comment