அமராவதிக்கு ஆரத்தி: துறவிகளின் முன்னெடுப்பில் ஒரு மக்கள் இயக்கம்

-சேக்கிழான்


தமிழகத்தின் ஜீவநதியான காவிரியின் துணையாறு அமராவதி. இந்த நதிக்கு தீப ஆரத்தி திருவிழாவை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சிறப்புற நடத்தி வருகிறது. ஆறுகளைப் பாதுகாக்கும் மக்கள் இயக்கத்திற்கான முதல்படியாகவே, இந்த ஆரத்தி விழாக்களை துறவிகள் முன்னெடுத்து, மக்களை பக்தியால் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

அமராவதியின் சிறப்பு:

கேரளத்தின் எல்லையில், மேற்கு தொடர்ச்சி மலையில், ஆனைமலைத் தொடருக்கும் பழனிமலை தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு, 282 கி.மீ. தொலைவுக்குப் பயணித்து, கரூர் அருகே திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் சங்கமமாகிறது.

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவில் பாசன வசதி அளித்து வரும் இந்த ஆறு, உடுமலை, தாராபுரம், கரூர் வட்டார மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

சங்க இலக்கியமான புறநானூறு (36ஆம் பாடல்) இந்த நதியை ‘ஆன்பொருநை’ என்று குறிப்பிடுகிறது. பசுக்கள் கூட்டம் நிறைந்த ஆறு என்பதே இதன் பொருள். ‘ஆம்ரவதி’ என்ற பெயரே அமராவதி என்று திரிந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மகாபாரத கதையுடன் தொடர்புடைய நதியாக அமராவதி கருதப்படுகிறது. தாராபுரமே விராடபுரம் (பாண்டவர்கள் அஞ்சாதவாசம் இருந்த நகரம்) என்று சொல்லப்படுவதுண்டு. அமராவதி ஆற்றங்கரையில் கடத்தூரில் உள்ள அர்ஜுனேஸ்வரர் கோயிலில் அர்ஜுனன் வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. தாராபுரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ல சிவலிங்கம் அகத்திய மாமுனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.

பாம்பாறு, சின்னாறு, தேனாறு, குதிரையாறு, சண்முக நதி, உப்பாறு, குடகனாறு போன்ற சிற்றாறுகள் அமராவதியில் இணைகின்றன. அமராவதி ஆற்றின் தொடக்கப் பகுதியில் அமராவதி அணை 1957-இல் காமராஜர் ஆட்சியின் போது கட்டப்பட்டது. 90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 4 மெ.வா. மின்சாரம் உற்பத்தி ஆகிறது.

இத்தகைய சிறப்பு மிகுந்த அமராவதி ஆற்றுக்கு தீப ஆரத்தி நடத்தும் பெருவிழாவை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் நடத்தி வருகிறது.

தீப ஆரத்தி எதற்காக?

புனிதத்தலமான காசியில், கங்கை நதிக்கரையில் தினந்தோறும் நடந்துவரும் கங்கா மாதா மகாதீப ஆரத்தி உலகப் புகழ் பெற்றது. நதியைத் தாயாக வணங்கும் பாரதப் பாரம்பரியத்தின் அடையாளமாக இந்த வழிபாடு பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது. அதனை அடியொற்றி, தமிழகத்தில் உள்ள முக்கியமான ஆறுகளில் புஷ்கரம், தீப ஆரத்தி விழாக்களை அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

நதிகள் புனிதமானவை என்ற எண்ணத்தை மக்களின் நெஞ்சங்களில் மீண்டும் நிலைநிறுத்தவும், ஆறுகளைப் பாதுகாக்கவும் இந்த நிகழ்ச்சிகளை சன்யாசிகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் காவிரி, தாமிரபரணி, பவானி, நொய்யல் நதிகளில் இந்த வழிபாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து சமுதாயத்தை வழிப்படுத்திய சன்யாசிகள் சங்கம், இந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அமராவதி அணையில் தீப ஆரத்தி விழாவை நடத்தி வருகிறது.

இதன் முதல் நிகழ்ச்சி, அமராவதி அணைப் பகுதியில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில், தத்துவஞான சபை நிறுவனர் வேதாந்தானந்த சுவாமிகள், அகில பாரதிய சன்யாசிகள் சங்கத்தின் தலைவர் தவத்திரு. இராமானந்த மஹராஜ் சுவாமிகள், ஆர்ஷ வித்யாபீடத்தின் சுவாமி ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் இரண்டாம் கட்டமாக, கொழுமம் கொண்டானில் அமராவதி ஆரத்தி விழா நடைபெற்றது. இரு நாட்கள் நடந்த விழாவில் வருண ஜபமும் இடம் பெற்றது. இந்நிகழ்வுகளில் சரவணம்பட்டி, சிரவை ஆதீனம் குமரகுருபர ராமானந்த சுவாமிகள், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் தவத்திரு ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், திருமூர்த்திமலை ஸ்ரீ பரஞ்சோதியார் உள்பட பல்வேறு மடங்களைச் சார்ந்த சாதுக்கள், சந்யாசிகள்  உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.  

மூன்றாம் கட்டமாக, தாராபுரத்தில், செப்டம்பர் 6, 7, 8 தேதிகளில் அமராவதி தீப ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக மூன்று நாள் விழாவாக நடந்தேறியது. வரும் செப்டம்பர் 29, 30 தேதிகளில் கரூரில் நான்காம் கட்டமாக அமராவதி ஆரத்தி நிறைவுவிழா நடைபெற உள்ளது.

14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தாராபுரத்தில் நடைபெற்ற  ‘அமராவதி ஆரத்தி திருவிழா’வின் துறவியர் மாநாட்டில், அகில பாரதிய சன்யாசிகள் சங்கம் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. தமிழகத்தில்  ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கவும், சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள் மீது, வழக்குப் பதியவும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களின் வாடகைகளை, தற்போதைய நிலவரப்படி உயர்த்தி வசூலிக்க வேண்டும்; நிலங்களுக்கு உரிமையான இறைவன் பெயரில், கட்டணமில்லா  கல்லூரிகள் அமைக்க வேண்டும்.

3. கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாற்று மதம் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள், கோயில் மீது நம்பிக்கை தொடர்பாக, கோயில் பதிவேட்டில் கையொப்பமிடுவதைக் காட்சிப்படுத்த வேண்டும். 

4. சமீப காலமாக அதிகரித்து வரும் மதமாற்றத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. திருக்கோயில் கும்பாபிஷேகங்களின் போது, அப்பகுதியில் உள்ள மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள், துறவிகள், சன்னியாசிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

6. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.  

7. மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் 11 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது சரியல்ல. பக்தர்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தை தரிசிக்க அரசு ஏற்பாடு செய்வதோடு, மக்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

8. வேலூரில் துறவி ஒருவர் காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காவலரை, உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

9. கோயில்களில் செல்போன் வைக்கும் இடத்தில், பக்தர்களிடம் அரசு, கட்டணம் பெறக் கூடாது. கோயில், சுற்றுலாத்தலம் அல்ல.

10. அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் வர இருக்கின்ற  2028 கும்பகோணம் மகாமகத்தை  ‘தென்பாரத கும்ப மேளா’வாக அகில உலக அளவில் நடத்த இருக்கிறோம் ஆதீன குருமா சன்னிதானங்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள், மகா மண்டலேஷ்வரர்கள் அனைத்து சம்பிரதாயங்களைச் சேர்ந்த மடாதிபதிகள், துறவியர் பெருமக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து 18 நாட்கள் 18 கருத்தரங்குகளாக நடத்த இருக்கிறோம்.

11. மேலும் மகாமக தீர்த்தம் ஆடுவதற்கு 30 நாட்களும் ஏற்பாடுகள் செய்வதென அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

12. அமராவதியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும் பராமரிப்பதற்கும், மணல் கொள்ளையைத் தடுப்பதற்கும் என்று தனியாக ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த ஒரு மனதாகத் தீர்மானிக்கப்படுகிறது. 

13.  ‘தென் பாரத கும்பமேளா’ – கும்பகோணம் மகாமகத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதற்காக அனைத்துத் துறவிகளும் ஒருங்கிணைந்து முயற்சி செய்வதாகவும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

14.நதிகள் அனைத்தும் நவீன இயந்திரங்களின் உதவியோடு தூர்வாரப்படவேண்டும். 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும்;  நிலத்தடி நீர் ஆதாரத்தை உயர்த்த வேண்டும்.

தாராபுரத்தில் சிறப்பான நிகழ்வுகள்:

தாராபுரத்தில் விவசாயிகள் மாநாடு, 108 யாககுண்ட வேள்வி, பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள், ஜோதிடக் கருத்தரங்கு, துறவிகள் மாநாடு, சத்சங்கம், அன்னதானம்  ஆகிய நிகழ்வுகளுடன் மூன்று நாளும் அமராவதி தீப ஆரத்தி சிறப்பாக நடத்தப்பட்டது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

முதல் நாள் நிகழ்வை பேரூராதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கி தொடங்கி வைத்தார். காலையில் நடைபெற்ற விவசாய கருத்தரங்கில், தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் செ.நல்லசாமி, கொடிவேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி. தளபதி, அமராவதி பிரதான வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் எம்.பார்த்தசாரதி உள்பட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், பாசன வாய்க்கால் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மாலையில், நெல்லை உமையொருபாக ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ உமாமகேஸ்வரன் சுவாமிகள், கோவை, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் சிறப்புரையாற்றினார். முன்னதாக 108 யாக வேள்வி நடைபெற்றது. அதனை தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகள் நடத்தி வைத்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வில், பிருகு பிரபாகரன் தலைமையில்,  ‘ஆன்மிகமும் ஜோதிடமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாலையில், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சிவ வாத்தியம் முழங்க  ஈஷா யோக மையத்தின் குழுவினர் ஆரத்தி நடத்தினர். விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் பாலாஜி உரையாற்றினார்.

மூன்றாம் நாள் நிகழ்வாக, அகில பாரதிய சன்யாசிகள் சங்க தலைவர் ராமானந்த மஹராஜ் சுவாமிகள் தலைமையில், தீப ஆரத்தி திருவிழா ஒருங்கிணைப்பாளர்  ஸ்ரீமத் விஸ்வலிங்க  தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் துறவியர் மாநாடு நடைபெற்றது. 14 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. (தீர்மானங்கள் தனியே உள்ளன).

இந்த மாநாட்டில், சன்யாசிகள் சங்கத்தின் செயலாளர் தவத்திரு. வேதாந்தானந்தா சுவாமிகள், நன்னிலம் தாண்டவராயன் சுவாமிகள் மடத்தின் கோரக்கர் சுவாமிகள், கரூர் கற்பக மாதாஜி, கோவை மூர்த்திலிங்க தம்பிரான் சுவாமிகள், கோவை சின்மயா மிஷன் துறவி சுவாமி அஜித் சைதன்யா, கருமாரியம்மன் சக்திபீடத்தின் செந்தில்குமார அடிகள், மதுரை ஆதீனத்தைச் சார்ந்த ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான் சுவாமிகள் உள்பட திரளான சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள், துறவிகள் பங்கேற்றனர்.

முன்னாள் எம்.பி. கார்வேந்தன்,  பாஜக மாநில துணைத் தலைவர் பேராசிரியர் ப.கனகசபாபதி, இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத், விஸ்வ ஹிந்து பரிஷ மாநில நிர்வாகி சு.வெ.ராமன் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.

இந்த மூன்று நாட்களும் மாலையில் அமராவதி ஆரத்தி நிகழ்ச்சியும் அன்னதானமும் நடைபெற்றன. தாராபுரம் வட்டார மக்கள் பெருந்திரளாக இந்த ஆரத்தி விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

ஆறுகளைக் காக்க ஆறு அம்சத் திட்டம்

அமராவதி ஆரத்தி விழாவில் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன் பேசியதிலிருந்து…

“நிலமெல்லாம் காசி, நீரெல்லாம் கங்கை” என்ற சொல்வழக்கு நம்மிடையே உண்டு. இந்த பாவனைகள் தான் நிலத்தையும் நீரையும் தூய்மையாக வைக்குமாறு பல்லாயிரம், ஆண்டுகளாக நம்மைப் பழக்கி வந்துள்ளன. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளில் நாம் இந்த புனிதத் தன்மையை மறந்ததனால், நதிகள் பாழ்பட்டு வருகின்றன.

இந்நாட்டிலுள்ள பலகோடி மக்களின் உயிராதாரம் நதிகள் தான். இந்த நதிகள் வழங்கும் தண்ணீர் தான் நமது குடிநீராகவும் அன்றாடப் பயன்பாட்டிற்கும் உதவுகிறது. ஆனால், நமது பாரம்பரியத்தை மறந்ததால், இன்று நாம் நதிகளுக்கு துரோகம் செய்கிறோம். ஊரின் குப்பை அனைத்தையும் கொட்டுமிடமாக நதிக்கரையை மாற்றி இருக்கிறோம். நமது சாக்கடைகளின் வடிகாலாக நதிகளை மாற்றி, அவற்றையும் சாக்கடையாக்கி வருகிறோம்.

நமது ஆறுகளில் தொழிற்சாலைக் கழிவுகளையும் மனிதக் கழிவுகளையும் கலக்கிறோம். அதே ஆற்றில் தான் மக்களுக்கு குடிநீர் எடுக்கும் கிணறுகளையும் அமைக்கிறோம். நம்மை வாழவைத்த நதிகளே இன்று நோய் பரப்பும் மையங்களாகி இருப்பதை உணர்ந்திருக்கிறோமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கூவம் நதி ஓடுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஆற்றில் குளித்து சிரார்த்தம் போன்ற சடங்குகளைச் செய்திருக்கிறார்கள். இன்றைய கூவத்தில் யாராவது குளிக்க முடியுமா? அப்படிக் குளித்தால், அவருக்குத் தான் சிரார்த்தம் செய்ய வேண்டி இருக்கும். கூவம் இன்று சென்னை மாநகரின் மாபெரும் சாக்கடையாகி விட்டது. நதிக்கும் ஆன்மா உண்டு என்பதை நாம் மறந்ததன் வினை இது.

நமது நதிகள் மெல்ல இறந்து கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது நமது எதிர்காலத்திற்காகத் தான். நாம் எத்தனை சொத்துகள் சேர்த்தாலும், தண்ணீர் இல்லையேல் எந்தப் பயனும் இல்லை. எனவே, ஆறுகளைக் காக்கும் இயக்கத்தை நாம் அமராவதியில் இருந்து தொடங்குவோம். அதற்கு நாம் செய்ய வேண்டிய ஆறு அம்சத் திட்டம்:

1. நாம் ஒவ்வொருவரும் நதிகளில் குப்பை போடுவதைத் தவிர்ப்போம்.

2. ஆறுகளை தனிப்பட்ட வகையில் அசுத்தப்படுத்தாமல் பராமரிப்போம்.

3. ஆறுகளில் மணல் அள்ளக் கூடாது. இதனை அரசு கண்டிப்புடன் தடுக்க வேண்டும்.

4. நமது வீடுகளின் கழிவுநீர் ஆறுகளில் கலப்பதைத் தவிர்ப்போம். உள்ளாட்சி அமைப்புகள், வீடுகளின் கழிவுநீரை மறுசுழற்சி (Recycling) செய்து சுத்தப்படுத்திய பிறகே ஆற்றில் விட வேண்டும். இதனை மக்கள் பிரதிநிதிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

5. தொழிற்சாலைக் கழிவுகள், சாயஆலைக் கழிவுகளை ஆற்றில் கலக்க விடுவதைத் தடுப்போம். இதை அரசு நிர்வாகம் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

6. நதியை வெறும் நீராகக் கருதாமல் தாயாகவும் புனிதமாகவும் கருதினால், அதனை நாம் இழிவுபடுத்த மாட்டோம்.

மேற்கண்டவற்றைச் செய்வதற்கு நமக்கு மனஉறுதி தேவை. அந்த மனஉறுதியை  அமராவதி ஆரத்தி வழிபாடு நமக்கு அளிக்க வேண்டும் என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்திய விழா:

அமராவதி ஆரத்தி விழா, இந்த வட்டார மக்களிடையே நதியைப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் பங்கேற்ற துறவிகள், அரசியல் தலைவர்கள், ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரின் கருத்தும், ஆறுகளைக் காக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

ஆறுகளைப் பாதுகாப்பதில் அரசின் பொறுப்பும் குடிமக்களின் பொறுப்பும் சரிசமமாக உள்ளதாக மாநாட்டில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். தமிழக நதிகளைப் பாதுகாக்க, தனியொரு அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்றும்கூட ஒரு கோரிக்கை எழுப்பப்பட்டது. “தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நவீன இயந்திரங்களைக் கொண்டு தூர் வாரி, 10 கி.மீ. இடைவெளிகளில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்” என்று துறவியர் மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

(தாராபுரம் பழ.நீலமேகம் உதவியுடன்)

$$$

Leave a comment