-எஸ்.வையாபுரிப் பிள்ளை

2. பத்துப்பாட்டும் அவற்றின் காலமுறையும்
பத்துப்பாட்டு என்பது மிகப் பழைய பத்துச்செய்யுட்கள் அடங்கிய ஒரு தொகுதி நூலின் பெயர். இப்பெயர் முதன்முதலில் மயிலைநாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்டு உளது. தொல் காப்பியத்திற்கு உரையிட்ட பேராசிரியர் இத்தொகுதியைப் ‘பாட்டு’ என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80, உரை). இதன் உள்ளுறையான நூல்கள் இன்னவென்பது,
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
என்ற பழஞ்செய்யுளால் விளங்கும். இந்நூல்கள் சங்க காலத்துப் புலவர்களால் இயற்றப்பெற்றுச் சில நூற்றாண்டுகட்குப் பின்னர்த் தொகுக்கப் பட்டன. பத்துப்பாட்டு என்ற பெயரும், தொகுக்கப்பட்ட பின்னரே வழங்கத் தொடங்கியிருத்தல் வேண்டும். இப்பெயர் – வழக்கு நிலைத்துவிட்டபின்னர்ப் பன்னிருபாட்டியலார்,
நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே *1 ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத் தொகுப்பது பத்துப் பாட்டெனப் படுமே (384) அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர் (385)
என்ற இரண்டு சூத்திரங்களை அமைத்தனர். பத்துப்பாட்டுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு; இதன் கண் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரியது மதுரைக் காஞ்சி; இதன் கண் 782 அடிகள் உள்ளன.
இப்பாட்டுகள் பற்றிய விவரங்களனைத்தும் இங்குள்ள பட்டிகையிற் காணலாம்.

இந்நூல்கள் ஒருகாலத்தன்றிப் பல்வேறு காலத்திற் பல்வேறு இடத்தினராகிய பல புலவர்களால் இயற்றப்பட்டனவாம். இதுபற்றி ஐயுறுவாரில்லை; இது குறித்து ஆராய்வதும் வேண்டற்பாலதன்று. எனவே காலம் பற்றி எம்முறையில் இவை தோன்றின என்பதை அறுதியிடுவதே இங்கு மேற்கொண்ட நோக்கம்.
மேற்க்ண்ட பட்டிகையினின்றும் ஒரு சில செய்திகள் புலப்படுகின்றன. பொருநராற்றுப்படையும் பட்டினப்பாலையியற்றிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியருமாவர். எனவே இம்மூன்று நூல்களும் சம காலத்தனவாம்.
மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியன. நெடுநல்வாடையை இயற்றியவர் நக்கீரர்; இப்பெயருடையார் முருகாற்றுப்படையையும் இயற்றியவராகக் கூறப்படுகிறார். மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவன் நன்னன் சேய்நன்னன். இவன்,
தொலையா நல்லிசை யுலகமொடு நிற்ப...
புலவோர்க்குச் சொரியுமவன் ஈகை மாரியும் (70-72)
எனக் குறிக்கப்படுகின்றான். இந் நன்னனே, மதுரைக்காஞ்சியில்,
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாட்
சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு (618-9)
எனக் குறிப்பிடப்பட்டவனாதல் தகும் *2. எனவே இந் நான்கு நூல்களும் சமகாலத்தன என்று கொள்ளலாம். மலைபடுகடாம் இந்நான்கினுள் முற்பட்டதாகலாம்.
குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியரான கபிலரை,
உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை
வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று
செழுஞ்செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு
நடந்தா ளாம்பல் மலரொடு கூட்டி
யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா
நாளிடுஉக் கடந்து வாளமர் உழக்கி
ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி
தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேங்கமழ் புதுமலர் நாறுமிவள் நுதலே' (அகம்.78)
என நக்கீரர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மதுரைக்காஞ்சி முதலிய நான்கு நூல்களுக்கும் குறிஞ்சிப்பாட்டு முற்பட்டதாதல் வேண்டும்.
மேலும், கரிகாற் பெருவளத்தானது தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியுள்ளார் (புறம், 4). இவரது முதுமைக்காலத்து இளைஞராயிருந்தவர். கபிலர் என்பது பதிற்றுப்பத்தில் இவர்கள் பாட்டுக்களின் வைப்புமுறையால் விளங்கும். எனவே, கபிலரது குறிஞ்சிப்பாட்டுக் கரிகாலனது காலத்திலே தோன்றியதெனக் கொள்ளலாம். இங்ஙனம் கொள்ள இயைபு இருத்தலால், பொருநராற்றுப்படை முதலிய மூன்றனோடு குறிஞ்சிப்பாட்டும் சமகாலத்ததாகும். புறம் 53-ல்
யானைக்கட்சேய் மாந்தரஞ சேரலிரும் பொறை 'கபிலன், இன்றுளனாயின் நன்றுமன்'
எனக் கூறுகிறான். இவ் இரும்பொறை தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவன (புறம், 17). நெடுஞ்செழியனுக்குரிய மதுரைக்காஞ்சி கபிலரது குறிஞ்சிப் பாட்டுக்குப் பிற்பட்டது என்பது இதனாலும் வற்புறுத்தப்படுகிறது.
முல்லைப்பாட்டின் காலமுறையைத் தெரிதற்கு மேற்குறித்தன போன்ற சான்றுகள் இல்லை. ஆனால், முல்லைப்பாட்டு என்ற பெயர், குறிஞ்சிப்பாட்டு என்பதனைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பெயரமைப்பு முல்லைப் பாட்டுப் பிற்பட்டதென்பதனை யுணர்த்துகின்றது. அன்றியும் அதன்கண் சில அரிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனைமா ணல்லிற்
றிருமணி விளக்கங் காட்டித் திண்ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
உடம்பி னுரைக்கு முரையா நாவிற்
படம்புகு மிலேச்ச ருழையராக (60-66)
என்பது முல்லைப்பாட்டுப் பகுதி. இங்கே யவனரது கைத்தொழிற் சிறப்பு ஒன்றும், மிலேச்சரது செய்தியொன்றும் உணர்த்தப்படுகின்றன. நெடுநல்வாடையிலும் யவனரது பிறிதொருகைத்தொழிற் சிறப்பும் மிலேச்சரது பிறிதொரு செய்தியும் காணப்படுகின்றன.
பாடலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்து
இருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர (31-5)
என்பதும்,
யவனர் இயற்றிய வினைமான் பாவை (101)
என்பதும் நெடுநல்வாடைப் பகுதிகள். முற்பகுதியுள் மாக்கள் ஆவார் மிலேச்சர் என்று உரை கூறப்பட்டுளது. யவனர், மிலேச்சர் முதலினோரது தொடர்பு அருகியல்லது பண்டைத் தமிழகச் சரித்திரத்திற் காணப்பெறாத தொன்றாம். சங்க இலக்கியங்களில் இவர்களைப் பற்றிய குறிப்புக் கிடைப்பது மிக அருமை. இவ்வகைக் குறிப்புக்கள் காணும் நூல்கள் கால முறையில் அடுத்தடுத்துத் தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமே. எனவே. நெடுநல்வாடையை அடுத்து முல்லைப்பாட்டுத் தோன்றி யிருத்தல் கூடும்.
இவ்வூகம் வேறுசில காரணங்களாலும் உறுதி யடைகின்றது. இரண்டு நூல்களிலும் ஒத்த கருத்துக்களும் தொடர்களும் காணப்படுகின்றன.
... ... நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவி ழலரி தூஉய்க் கைதொழுது (8-10)
என்ற முல்லைப்பாட்டு
நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது (43)
என்ற நெடுநல்வாடைக் கருத்தோடு ஒத்தமைந்தது.
இன்னே வருகுவர்
என்ற தொடர் ஈரிடத்தும் (முல்லை. 16, நெடுநல். 155) வருகின்றது.
முல்லைப்பாட்டு இங்ஙனமாக, சிறுபாணாற்றுப்படை,
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திற லணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும், கரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரியும், கறங்குமணி
வாலுளைப் புரவியொடு வையக மருள
ஈர நன்மொழி இரவலர்க் கீந்த
அழல்திகழ்ந் திமைக்கும் அஞ்சுவரு நெடுவேற்
கழல்தொடித் தடக்கைக் காரியும், நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆரவ நன்மொழி ஆயும், மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக் கீந்த
உரவுச்சினங் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடற் றானை அதிகனும், கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கொட்டு
நளிமலை நாடன் நள்ளியும், நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் எனவாங்கு
எழுசமங் கடந்த எழுவுறழ் திணிதோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் (84-112)
என்ற அடிகளிற் கடையெழு வள்ளல்களின் வரலாற்றை இறந்த காலச்செய்தியாக உரைக்கின்றது. ஆகவே, இவ்வள்ளல்களின் காலத்திற்குப் பின்னர் இந்நூல் இயற்றப் பெற்றதாதல் வேண்டும். பரணர், கபிலர், முடமோசியார், ஔவையார், வன்பரணா முதலியவர்கள் வள்ளல்களின் சமகாலத்தவராய் வாழ்ந்து அவர்களைப் பாடியிருக்கின்றார்கள். இவர்கள் காலத்திற்குப் பின்பு தோன்றியதெனல் வேண்டும். இச்சிறுபாணாற்றுப்படையை, இங்ஙனமே கூர்ந்து ஆராயின், பத்துப்பாட்டினுள் ஏனை ஒன்பது ஆசிரியர்களுக்குப்பின் நத்தத்தனார் வாழ்ந்து சிறு பாணாற்றுப்படையை இயற்றினார் என்பதே துணிவாகும்.
மேற்குறித்த காரணங்களாற் பத்துப்பாட்டுக்களும் கீழ்க் காட்டியபடி காலம்பற்றி மூன்று தொகுதிகளாக அமைகின்றன.
I | 1. பொருநராற்றுப்படை 2. பெரும்பாணாற்றுப்படை 3. பட்டினப்பாலை 4. குறிஞ்சிப்பாட்டு |
II. | 5. மலைபடுகடாம் 6. மதுரைக்காஞ்சி 7. நெடுநல்வாடை 7. நெடுநல்வாடை 8. முருகாற்றுப்படை |
III. | 9. முல்லைப்பாட்டு 10. சிறுபாணாற்றுப்படை |
இத்தொகுதிகளுள் இரண்டாவதனைச் சார்ந்த நெடுநல்வாடையின் ஆசிரியர் நக்கீரர். இவர் முதற்றொகுதியில் இரண்டாவதன் பாட்டுடைத் தலைவனான கரிகால்வளவனை அகம் III.ல்,
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற் றனன
நல்லிசை வெறுக்கை
எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் இருவரும் சமகாலத்தினர் என்று கொள்வதற்குரிய சான்று யாதும் இச்செய்யுட் பகுதியிற் காணப்படவில்லை. ஆதலால் நக்கீரர் கரிகால்வளவனுக்குப் பிற்பட்டவர் என்று கொள்ளுதல் தகும். இவராற் பாடப்பட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்குப் பிற்பட்டகாலத்தவன் என்ற முடிவு பெறப்படுகிறது. இம்முடிபு வேறொரு காரணத்தாலும் உறுதியடைகிறது. கரிகாலனைப் பாடிய புலவர்களுள் ஒருவரேனும் நெடுஞ்செழியனைப்பாடவில்லை.
இங்ஙனமாக, முதற்றொகுதிநூல்கள் இரண்டாந்தொகுதி நூல்களுக்குக் காலத்தால் முற்பட்டனவாதல் தெளிவாகின்றது. ஆனால் பின் தொகுதியில் திருமுருகாற்றுப்படையின் காலம் மீண்டும் ஆராய்தற்குரியது. இதனை இயற்றியவர் நக்கீரர் என்ற பெயருடையவரெனினும் நெடுநல்வாடை ஆசிரியரின் வேறாவர் என்றும், பிற்பட்ட காலத்தவர் என்றும் கருதுதற்குரிய சான்றுகள் பல உள்ளன. இவற்றை முருகாற்றுப்படை பற்றி யான் எழுதியுள்ள அடுத்த கட்டுரையில் நன்கு விளக்கியுள்ளேன். ஆதலால் திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டுள் இறுதியில் இயற்றப்பெற்றதெனக் கொள்ளல்வேண்டும்.
எனவே, கீழ்கண்டவாறு கலமுறை யொன்று பெறப்படுகின்றது.
- பொருநராற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- பட்டினப்பாலை
- குறிஞ்சிப்பாட்டு
- மலைபடுகடாம்
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- முல்லைப்பாட்டு
- சிறுபாணாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை
இவற்றுள், சிறுபாணாற்றுப்படை முதல் எட்டு நூல்களுக்கும் 2 அல்லது 3 தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியிருக்கலாம். முருகாற்றுப்படை இவற்றிற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டு இயற்றப் பெற்றதாதல் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இம்முறை பெரிதும் பயன்பட வல்லது.
***
அடிக்குறிப்பு மேற்கோள்கள்:
*1ஆசிரியப்பாட்டின் அளவிற் கெல்லை
ஆயிரம் ஆகும் இழிபு மூன்றடியே
என்றனர் தொல்காப்பியரும். (செய்யுளியல்,150)
*2. இக்கருத்தே பச்செந்தமிழ் 4-ம் தொகுதியில் (பக்கம் 183-193) நன்னன் வேண்மான் என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.
(தொடர்கிறது)
$$$