-எஸ்.வையாபுரிப் பிள்ளை

அறிமுகம்:
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, சென்ற நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை; துலாக்கோல் நிலை நின்று, விருப்பச் சார்பின்றி, தமிழ் இலக்கியங்களின் காலம் குறித்த முறையான ஆய்வுகளை வெளியிட்டவர்; தமிழ் இலக்கிய வரலாற்றாய்விலும், பதிப்புப் பணியிலும் முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ்ப் பேரகராதியை உருவாக்கிய மேதை, கல்வியாளர் எனப் பன்முகம் கொண்ட, தமிழன்னையின் தவப்புதல்வர்களுள் ஒருவர்.
- மேலும் காண்க: எஸ்.வையாபுரிப் பிள்ளை (தமிழ் விக்கி)
$$$
வெளியிடுவோர் குறிப்பு
எஸ்.வையாபுரிப் பிள்ளை, பி.ஏ., பி.எல்., சென்னை ஸர்வகலாசாலை தமிழ்லெக்ஸிகன் பதிப்பாசிரியர் 1926-'36 சென்னை ஸர்வகலாசாலை தமிழ்-ஆராய்ச்சித்துறைத் தலைவர் 1936-'46 திருவிதாங்கூர் ஸர்வகலாசாலை தமிழ்ப் பேராசிரியர் 1951- வெளியிடுவோர்: பாரிநிலையம், 59. பிராட்வே-சென்னை 1. முதற்பதிப்பு நவம்பர்: 1952 விலை ரூ.3-0-0 சங்கர் பிரிண்டர்ஸ் 114, பிராட்வே சென்னை-1
பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களின் ஆராய்ச்சியுரைத் தொகுதி ஒன்றை வெளியிடுவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
பேராசிரியர் அவர்களைத் தமிழுலகில் அறியாதார் யார்? அவர்கள் பதிப்பாசிரியராக விளங்கிப் பதிப்பித்து வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஸிகன்) நம் தமிழிற்கு ஒரு செல்வமன்றோ? அகராதி மட்டுமா? அகராதி நிலையில் பண்டை நாளில் உதவிய எத்தனையோ நிகண்டுகளை அவர்கள் பரிசோதித்து வெளியிட்டுள்ளார்கள். அச்சில் வாராத பல தமிழ்- இலக்கிய இலக்கண நூல்களைப் பிழையற அச்சு வாகனமேற்றியும், தமிழன்னைக்குப் பெரும்பணி புரிந்துள்ளார்கள். அவர்களுடைய பதிப்புக்கள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறந்த அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. அந் நூல்களுக்கு அவர்கள் எழுதியுள்ள முன்னுரைகள் ஆராய்ச்சி நலம் சிறந்து விளங்குகின்றன.
இலக்கிய ஆராய்ச்சி, இலக்கண ஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, சமய ஆராய்ச்சி, கவிதை ஆராய்ச்சி என்றிப்படியாகப் பல துறைகளிலும் ஆராய்ந்து,வையாபுரிப் பிள்ளையவர்கள் சிறந்த பொருள்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவற்றுள் இலக்கிய ஆராய்ச்சி பற்றிய பதினாறு கட்டுரைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இக்கட்டுரைகளெல்லாம் தமிழ் மணமும், ஆராய்ச்சி நலமும் செறிந்து கற்பார்க்குப் பெருவிருந்தாய் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் இதுவரைப் பிறரால் அறியப்படாத புதிய முடிபுகள் பல ஆராய்ந்து நிறுவப்பட்டுள்ளன. தமது கொள்கைகளை நிறுவும் பொருட்டு ஆசிரியர் தரும் காரணங்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் முறைப்பட அமைந்து கற்பார் மனத்தைக் கவர்கின்றன.
ஆராய்ச்சிக்குரிய ஒவ்வொரு விஷயத்திலும் கருத்து வேறுபாட்டிற்கு இடமிருத்தல் இயல்பே. பேராசிரியர் அவர்களின் ஆராய்ச்சி முடிபுகள் பற்றியும் அபிப்பிராய பேதம் கொள்வோர் உண்டு. ஆனால், அங்ஙனம் மாறுபட்டுரைப்போர் யாரும் இதுவரை தக்க காரணங்களோ ஆதாரங்களோ காட்டி மறுக்கவில்லை. எந்த விஷயத்தையும் விருப்பு வெறுப்பற்று நடுநிலையில் நின்று ஆராய்ந்து, உண்மையெனத் தாம் நன்கு தெளிந்த பின்பே அதனை வெளியிட முன்வருவது பேராசிரியரவர்களின் இயல்பு. இதன் உண்மையை, மெய்ப்பொருள் காண வேண்டுமென்ற நோக்கோடு இந்நூலைக் கற்பவர் யாரும் நன்கு உணர்வர் என்பது திண்ணம்.
ஆராய்ச்சிகளை மிகத் தெளிந்த நடையில், கருத்துக்களெல்லாமே செவ்விதின் விளங்க எழுதியுள்ளமை மிகவும் போற்றத் தக்கதாம்; கருத்தின் தெளிவு உரைநடையில் நன்கு பிரதி பலிக்கிறது. பேராசிரியர் அவர்களின் தமிழ்-உரை நடையில் தெளிவும் இனிமையும் எங்கும் ததும்புகின்றன.
‘இலக்கிய தீபம்’ இதுவரையில் வெளிவாராத புத்தகம். இதனை முதன்முதல் வெளியிடும் பேற்றை எங்களுக்கு அளித்த பேராசிரியர் அவர்களுக்கு எமது நிலையத்தின் நன்றியும், வணக்கமும் உரியவாகுக. இதுபோன்றே பேராசிரியர் அவர்கள் எழுதியுள்ள இலக்கிய ஆராய்ச்சி, மொழி-ஆராய்ச்சி, சரித ஆராய்ச்சி முதலிய பிற நூல்களையும் அடுத்து ஒவ்வொன்றாக வெளியிட எண்ணியுள்ளோம். தமிழன்பர்களின் ஆதரவு எங்களுக்கு உற்ற துணையாய் உதவும் என்று நம்புகிறோம்.
‘இலக்கிய தீபம்’ தமிழன்னையின் திருக்கோயிலில் நந்தா விளக்காய் நின்று என்றும் ஒளிர்வதாக.
பாரி நிலையத்தார்
முன்னுரை
இலக்கிய தீபம் என்னும் இந்நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்தவை. இவற்றை ஒருசேரத் தொகுத்து இப்போது வெளியிட்டுள்ளேன்.
இலக்கியங்களின் இயல்பையும் வகையையும் குறித்துப் பொதுப்பட முதலாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதனைக் கருதியே ‘இருவகை இலக்கியம்’ என்ற கட்டுரை இந்நூலின் தொடக்கமாக வைக்கப்பட்டுள்ளது.
நமது பண்டை இலக்கியங்களைப் பாட்டும் தொகையும் என்றல் மரபு. பாட்டு என்பது பத்துப்பாட்டுள் அடங்கியவை. இவை இன்ன என்பதை
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறி்ஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
என்ற பழைய வெண்பா உணர்த்துகிறது. இங்ஙனமே, தொகை யென்பது எட்டுத்தொகையெனப் பெயர் சிறந்த தொகுப்பு நூல்களை யாம். இத்தொகை நூல்கள் இன்னவென்பதை
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியேஅகம் புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை
என்ற பழைய வெண்பா உணர்த்துகிறது.
பத்துப்பாட்டில் அடங்கிய பாட்டுக்களின் காலமுறையை ஆராய்வது இரண்டாவது கட்டுரை. இத்தொகுதியில், முதலாவதாக அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை நக்கீரர் இயற்றியது என்பர். இப் பெரும்புலவரே பத்துப்பாட்டில் எட்டாவதாக உள்ள நெடுநல்வாடையையும் இயற்றினர் என்பர். இவ் விருநூல்களின் ஆசிரியர்களும் வேறு வேறாக இருக்க வேண்டுமென்பது எனது துணிபு. இவர்களைப் பற்றியும் இவ்விரு நூல்களைப் பற்றியும் அமைந்தவை அடுத்த இரண்டு கட்டுரைகள்.
பத்துப்பாட்டின் ஈற்றயலில் வைக்கப்பட்டுள்ள பட்டினப்பாலையை அரங்கேற்றியது பற்றி ஒரு சரித்திரச் செய்தி சாசன வாயிலாகத் தெரிய வருகின்றது. இதனை விளக்குவதே ஐந்தாவது கட்டுரை.
இனி, தொகை நூல்களைத் தொகுத்த காலமுறையைப்பற்றி்த் தெரிந்துகொள்வது அவசியம். இதனை ஆராய்ந்து துணிவது அடுத்து வைக்கப்பட்டுள்ள கட்டுரை. தொகை நூல்களுள் இரண்டு நூல்கள் மிகப் பற்பட்டவை என்று கருதுவற்குச் சான்றுகள் உள்ளன. இவை கலித்தொகையும் பரிபாடலுமாம். ஏனையவற்றில் அகத்திணை பற்றியன நான்கு; புறத்திணை பற்றியன இரண்டு. அகத்திணைபற்றிய நூல்களுள் குறுந்தொகை மிகச் சிறந்தது. இக்குறுந்தொகையைப் பொருளாகக் கொண்டு எழுந்ததே ஏழாவது கட்டுரையாகும். இக்குறுந்தொகையில் காணும் ஒரு சரித்திரக் குறிப்பைப் பற்றியது அடுத்து வைக்கப்பட்டுள்ள கட்டுரை. இந்நூலில் வரும் ஒரு செய்யுளின் பொருள் பற்றியது ஒன்பதாவது கட்டுரை.
புறத்திணை பற்றிய நூல் இரண்டனுள், பதிற்றுப்பத்து முழுவதும் சேரர்களுக்கு உரியது. இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இதுவரை அகப்படாத தொன்றாம். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகார உரையிலிருந்து தெரிந்து புலப்படுத்துவது பத்தாவது கட்டுரை. பிறிதொரு புறத்திணை நூலாகிய புறநானூற்றில் சரித்திரச்செய்திகள் பல உள்ளன, சரித்திர ஆராய்ச்சியாளருக்கு இரு கிடைத்தற்கரிய கருவூலம். இந்நூலின் கண்ணிருந்து இரண்டு சரித்திரச் செய்திகளையெடுத்து 11, 12-ம் கட்டுரைகள் வியவகரிக்கின்றன.
சங்கநூல்களால் பண்டைக் காலத்திற் சிறப்புற்று விளங்கிய நகரங்களின் வரலாறுகள் நன்கு புலப்படுகின்றன. இவ்வாறு புலப்படும் இரண்டு நகர வரலாறுகள் 13, 14-ம் கட்டுரைகளில் அமைந்துள்ளன.
சங்கச் செய்யுளென்று இதுவரை பெரும்பாலாரும் கருதிவந்துள்ள நூல்களுள் ‘முத்தொள்ளாயிரம்’ என்பது ஒன்று. இந்நூல் இலக்கியச் சுவையில் சிறந்து மேம்பட்டு விளங்குவது. இந்நூலைக் குறித்தும் இதன் காலத்தைக் குறித்தும் இறுதிக் கட்டுரைகள் இரண்டும் விளக்குகின்றன.
இக்கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி உரித்தாகும்.
கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் என்னோடு ஒத்துழைத்தும், சென்னையிலிருந்து அச்சுத்தாள்களைத் திருத்தியும் பிறவாறும் துணைபுரிந்தவர் சென்னை ஆர்ட்ஸ் காலேஜ் தமிழாசிரியர் திரு.வித்துவான் M.சண்முகம் பிள்ளையாவர். இங்கே திருவனந்தபுரத்தில் எனக்கு உதவிபுரிந்து வந்தவர் திருவனந்தபுரம் யூனிவர் ஸிட்டி காலேஜ் தமிழாசிரியர் திரு. R. வீரபத்திரன் M.A., L.T., ஆவர். இவ்விருவருக்கும் எனது ஆசி.
இந்நூலை அழகிய முறையில் அச்சியற்றி வெளியிட்ட பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி.
நான் எழுதிய பிற கட்டுரைகளும் தொகுதி தொகுதியாக விரைவில் வெளிவரும் என்று நம்புகிறேன். இம்முயற்சிகளில் என்னை ஊக்குவித்துவரும் தமிழ்த் தெய்வத்தை மனமொழி மெய்களால் வணங்குகிறேன்.
-எஸ். வையாபுரிப் பிள்ளை
திருவனந்தபுரம்
ஸர்வகலாசாலை.
25.10.52
$$$
உள்ளுறை
கட்டுரை | பக்கம் |
1. இருவகை இலக்கியம் | 1 |
2. பத்துப் பாட்டும் அவற்றின் காலமுறையும் | 4 |
3. திருமுரு காற்றுப்படை | 13 |
4. நெடுநல்வாடையும் நக்கீரரும் | 43 |
5. பாலையின் அரங்கேற்று மண்டபம் | 67 |
6. தொகைநூல்களின் காலமுறை | 70 |
7. குறுந்தொகை | 84 |
8. குறுந்தொகைச் செய்யுளில் ஒரு சரித்திரக் குறிப்பு | 108 |
9. எருமணம் | 117 |
10. பதிற்றுப் பத்தின் கடவுள் வாழ்த்து | 122 |
11. அதியமான் அஞ்சி | 125 |
12. மௌரியர் தென் இந்தியப் படையெடுப்பு | 131 |
13. காவிரிப்பூம் பட்டினம் | 145 |
14. தொண்டிநகரம் | 164 |
15. முத்தொள்ளாயிரம் | 175 |
16. முத்தொள்ளாயிரத்தின் காலம் | 183 |
இந்நூலின் கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள் முதலியன | 189 |
இந்நூலாசிரியர் பதிப்பித்தவை | 190 |
$$$
இலக்கிய தீபம்
ஆசிரியர்: எஸ். வையாபுரிப்பிள்ளை
1. இருவகை இலக்கியம்
தமிழ் மக்கள் உள்ளத்தில் அகம், புறம் என்ற பொருட் கூறுபாடு வேரூன்றி விட்டது. பண்டைத் தமிழ்- இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இவ் இருவகை இலக்கியங்களைப் பற்றி எழுதியெழுதி, அவ்வகைகளைத் தவிர வேறு பாகுபாடுகளைக் குறித்து எண்ணுவதற்குக்கூட நாக்கு மனவலிமை யில்லாதபடி செய்துவிட்டார்கள். ஆகவே, இருவகை இலக்கியம் என்றால், அகப்பொருள் பற்றிய இலக்கியம், புறப்பொருள் பற்றிய இலக்கியம் என்றுதான் பொதுப்படக் கருதுவோம். முன்னது காதல் துறைகளையும், பின்னது போர், ஈகை முதலியவற்றிற்குரிய துறைகளையும் பொருளாகக் கொண்டவை.
இப் பாகுபாட்டினைக் காட்டிலும் மிக ஆழ்ந்து செல்லும் வேறொரு பாகுபாட்டினையே ‘இருவகை இலக்கியம்’ என்ற தலைப்புத் தொடர் இங்கே கருதுகிறது. இலக்கியம் என்பது ஒரு கலை (art). இது கலைஞன் உள்ளத்தில் தோன்றும் முறை தனிப்பட்டது; இலக்கியமாகப் பரிணமிக்கும் முறையும் தனிப்பட்டது; இதன் நோக்கமும் தனிப்பட்டதே. இதனோடு முற்றும் வேறுபட்டது சாஸ்திரம். இது தோன்றும் முறையும், வெளியாகும் முறையும், இதன் நோக்கமும் கலைக்குரியவற்றினின்றும் பெரிதும் வேறுபட்டவையாகும்.
‘கலை’ என்று கூறப்படுவதற்கு அழகு- உணர்ச்சியும் இன்புறுத்தும் நோக்கமும் இன்றியமையாதவை. ‘சாஸ்திரம்’ என்று கூறப்படுவதற்கு இவ்விரண்டும் இன்றியமையாதனவல்ல. அறிவிற்குரிய விஷயங்களைத் தருதலே முக்கிய நோக்கமாகும். ஒரு மாளிகைக்கு இரண்டு வகையான படங்களை வரைதல் கூடும். ஒன்று ஓவியப் புலவன் தீட்டும் மாளிகைச் சித்திரம்; இன்னொன்று மாளிகையமைக்கும் கொற்றன் (Architect) வரைந்து கொள்ளும் அமைப்புப் படம் (Plan). சித்திரத்திற்கும் அமைப்புப் படத்திற்கும் உள்ள வேறுபாடு கலைக்கும் சாஸ்திரத்திற்கும் உண்டு.
கம்ப ராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கலைக்காவியம். இதிலே, “அழகு-உணர்ச்சி ததும்புகிறதா? காவிய இன்பம் சிறந்தோங்குகிறதா?” என்ற கேள்விகளே எழும். இதனோடு தொல்காப்பியத்தை ஒப்பிடுவோம். இப் பெருநூல் பற்றி, “தமிழ் மொழியின் உண்மையியல்பை இது சரியாகத் தவறினறித் தெரிவிக்கிறதா?” என்ற கேள்வி தான் உண்டாகும். இது ஒரு சாஸ்திரம். உள்ளத்தை உணர்ச்சி வழியில் இயக்குவது கலை என்றும், மக்களுக்கு அறிவுப் பொருள்களைக் கற்பிப்பது சாஸ்திரம் என்றும் ஆசிரியர் டிக்வின்ஸி கூறியுள்ளார். இவர் கூறியுள்ளதன் திரண்ட கருத்து வருமாறு:
இலக்கியம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது (கலை) உள்ளத்தை இயக்கும் ஆற்றல் படைத்துள்ளது. பிற எல்லாம் (சாஸ்திரம்) அறிவுப் பொருள்களைப் பரப்புவது. எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்று பொதுவாகத் தொகுத்து வழங்குகிறோம். இவற்றிலே இரண்டு இயல்புகளைக் காணலாம். அவ்விரண்டு இயல்புகளும் கலந்து தோன்றுதல் காணப்படினும், தனித் தனியாகப் பிரித்து உணர்தற்கும் இவை இடந்தருகின்றன. ஏனென்றால், இவற்றில் ஒன்று மற்றொன்றோடு சிறிதும் இணங்காதபடி அதனைத் தூரத்தே அகற்றி நிறுத்த முயல்கிறது. இவற்றுள் ஒன்றை அறிவிலக்கியம் (Literature of Knowledge) என்றும், மற்றொன்றை ஆற்றல்- இலக்கியம் (Literature of Power) என்றும் வழங்கலாம். அறிவிலக்கியம் அறிவுப் பொருள்களைத் தர முயல்கிறது: ஆற்றல்- இலக்கியம் உள்ளத்தை ஊக்குவிக்க முயல்கிறது. முன்னது புலனறிவை விருத்தி செய்வது; பின்னது, உணர்ச்சியின் மூலமாக, போதத்தைத் துணையாகக் கொண்டு, ஆன்மாவையே இயக்குகிறது.
அறிவிலக்கியத்தை மதிப்பிடுவதற்கு,”அதிற் கூறப்பட்டன சரியா? உண்மையா? தருக்க நெறியோடு பொருந்துமா?” என்று நோக்குதல் வேண்டும். ஆற்றல்- இலக்கியத்தை மதிப்பிடுவதற்கு,”கலை யுணர்ச்சியைத் திருப்தி செய்கிறதா? அழகுணர்ச்சி இருக்கிறதா? இன்பம் விளவிக்கிறதா?” என் நோக்குதல் வேண்டும்.
ஆனால் இருவகை இலக்கிய இயல்புகளும் ஒருசேரக் கலந்து வரும் சிறந்த இலக்கியங்களுமுள்ளன. திருவள்ளுவரது திருக்குறள் இவ்வகைக் கலப்பு இலக்கியங்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாம்.
(தொடர்கிறது)
$$$