ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்- நூல் அறிமுகம்

-சேக்கிழான்

விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். வங்கம், ஹிந்தி. சமஸ்கிருதம் மட்டுமின்றி, ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் அவர். புதுவையில் வசித்தபோது அவரது எழுத்தாற்றல் வடிவம் பெற்றது. அவர் எழுதிய கவிதைகள், நாடகங்கள், உரைநடை நூல்கள், காவியங்கள், தத்துவ விளக்கங்கள், கடிதங்கள் போன்றவை அவரது மேதைமையை வெளிப்படுத்துகின்றன.

அரவிந்தர் எழுதிய ‘எரிக்’ என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது.  இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் இதுவென்பது நாடகத்திலிருந்து தெரிய வருகிறது.

இதனை, அழகுத் தமிழில், இனிய யாப்புச் செய்யுள்களில் அரவிந்தரின் மூலத்துக்கு தகுந்த வகையில்,  ‘எரிக்கன்’ என்ற கவிதை நாடகம் ஆக்கி இருக்கிறார் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த சிவ.சூரியநாராயணன். அரவிந்தரின் ஆங்கில நடையில் தனது மனதைப் பறிகொடுத்த எழுத்தாளர், அதனை உள்வாங்கி தமிழுக்கேற்ற செம்மாந்த நடையிலும், நமது பண்பாட்டுக்கேற்ற இன்சொற்களிலும், மூலமா, மொழிபெயர்ப்பா என்று  புலப்படாதவாறு தமிழாக்கி இருக்கிறார்.

சிவ.சூரியநாராயணனின் சொற்களில், நார்வே மன்னன் எரிக் தமிழில் எரிக்கன் ஆகிறான். அவனது எதிரியான ஸ்வேன் தமிழில் சுவேணன் ஆகிறான். ஸ்வேனின் தங்கை ஆஸ்லாக் அசுலாகியாகவும், மனைவி ஹெர்த்தா எர்த்தியாகவும் மாற்றம் பெறுகின்றனர். கதாபாத்திரங்களும் அதிகமில்லை; காட்சிகளும் அதிகமில்லை. உள்ளரங்க நாடகத்துக்கான எளிய வடிவம். உரையாடல்களிலேயே முழுக் கதையும் பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அதில் வரும் வார்த்தை ஜாலங்களும், மின்னல் வீச்சுகளுமே நாடகத்துக்கு மெருகூட்டுகின்றன.

தனது தந்தையைக் கொன்ற எரிக்கனை அழிக்க ஸ்வீடன் தேச மன்னனின் மகன் சுவேணன் ரகசியமாகப் போராட்டுகிறான். சிற்றரசுகளாகச் சிதைந்து கிடந்த நாட்டை ஒன்றுபடுத்தி பேரரரசாக்கும் எரிக்கனை அவனால் வெல்ல முடியவில்லை. அவனைக் கொல்ல தனது மனைவியையும் தங்கையையும் அனுப்புகிறான். அவர்கள் நாட்டிய நங்கைகளாக யாராபுரியில் உள்ள எரிக்கனின் அரண்மனைக்கு வருகிறார்கள்.

வந்த இடத்தில் எரிக்கன் மீது அசுலாகி காதல் வயப்படுகிறாள். அவள் எதிரி என்று தெரிந்தும் மையல் கொள்கிறான் எரிக்கன். அவர்களது காதல் என்ன ஆனது? நார்வே- ஸ்வீடன் மோதல் என்ன ஆனது? மறம் வென்றதா? அதை காதல் வென்றதா? இதுவே மையக் கதை.

இந்தச் சிறிய நாடகத்தில் மானுடப் பேருணர்வுகளை உலவவிட்டு, போரற்ற உலகம் குறித்த உன்னதக் கற்பனையையும், உலகை வெல்லும் அன்பின் வழியையும் காட்டிச் செல்கிறார் அரவிந்தர்.

முனைவர் பிரேமா நந்தகுமார், முனைவர் வ.வே.சு, புலவர் ராமமூர்த்தி ஆகியோரின் அணிந்துரைகளும் அருமை. நூலின் இடது பக்கத்தில் ஆங்கில மூலத்தையும் வலது பக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தையும் கொடுத்திருப்பது நல்ல முயற்சி; அரவிந்தரின் எழுத்துகளையும், அதன் தமிழாக்கத்தையும் ஒருசேர ரசிக்க இனிய வாய்ப்பு. இந்நூல் மொழிபெயர்ப்பாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

உலக மாந்தர் அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் அரவிந்தரின் சிந்தனைப் போக்கை அறிய இந்நூல் மிகச் சிறந்த கையேடு எனில் மிகையில்லை.

$$$

நூல் விவரம்:

ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்:

ஆங்கில மூலம் (ERIC): அரவிந்தர்

தமிழாக்கம்: சிவ சூரியநாராயணன்

272 பக்கங்கள், விலை: ரூ. 250.

எல்கேஎம் பப்ளிகேஷன்,

10, ராமச்சந்திரா தெரு,

தியாகராய நகர், சென்னை-  600 017.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s