-மகாகவி பாரதி

பக்திப் பாடல்கள்
27. பேதை நெஞ்சே
இன்னுமொரு முறைசொல்வேன், பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோமில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்தில் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங்கில்லை, நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்! 1
நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்த பயன் காண்பதவள் செய்கை யன்றோ?
மனமார உண்மையினைப் புரட்ட லாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி, வீரர் தேவி
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத்தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே! 2
சக்தியென்று புகழ்ந்திடுவோம், முருகன் என்போம்,
சங்கர னென்றுரைத்திடுவோம், கண்ணன் என்போம்,
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி,
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளிலாமற் காக்கச் சொல்லி,
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய் நெஞ்சே! 3
செல்வங்கள் கேட்டால் நீ கொடுக்க வேண்டும்;
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினை நீ தொடுக்க வேண்டும்;
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்;
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்;
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்;
நமோ நமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 4
பாட்டினிலே சொல்வதும் அவள்சொல் லாகும்!
பயனின்றி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டது நீ பெற்றிடுவாய், ஐய மில்லை,
கேடில்லை, தெய்வமுண்டு வெற்றியுண்டு,
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதி சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி,
நாட்டினிலே சனகனைப்போல் நமையும் செய்தாள்,
‘நமோ நமஓம் சக்தி’ யென நவிலாய் நெஞ்சே! 5
$$$
28. மஹாசக்தி
சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்,
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். 1
பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். 2
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்,
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். 3
$$$
29. நவராத்திரிப் பாட்டு
(உஜ்ஜயினி)
உஜ்ஜயினீ! நித்ய கல்யாணி!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
(உஜ்ஜயினீ)
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா.
(உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம்.
(உஜ்ஜயினீ)
சத்ய யுகத்தை அகத்தி லிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி.
(உஜ்ஜயினீ)
$$$