-சேக்கிழான்

பசுவதை தடைச் சட்டம் அவசியம் என்ற குரல் இரு நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய இக்குரல், இன்றும் ஒலிக்கிறது. ஆனால், மதச்சாயம் பூசப்பட்ட இந்தக் கோரிக்கை, மதச்சார்பற்ற இந்தியாவில் கேலிக்குரியதாக மாற்றப்பட்டுவிட்டது.
அண்மையில் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வென்றவுடன், அந்த வெற்றியை பசுவின் கழுத்தறுத்துக் கொண்டாடி இருக்கிறார்கள் சிறுபான்மை சமயத்தினர் சிலர். அந்த அளவிற்கு சூழல் மதவெறி நஞ்சூட்டப்பட்டிருக்கிறது. இதைப் பெயரளவிற்கும் கூட அரசியல் தலைவர்களோ, ஊடகங்களோ கண்டிக்கவில்லை. அதாவது, பசுவைக் கொல்வது செக்யூலர் இந்தியாவில் மதச்சார்பின்மையாகி விட்டது.
ஆனால், சரித்திரத்தில் பசுவதைக்கு எதிரான குரல்தான் உண்மையில் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பசுவைக் கொல்வது தங்கள் பூர்விக உரிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களும் அறியாத உண்மை இது. இந்த உண்மையையே ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ நூல் பேசுகிறது.
இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.
ஆங்கிலேயர்களால் இந்தியா ஆளப்பட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் நிகழ்ந்த பசுக்கொலைகளையும், அதன் பின்னணியையும், லண்டனிலுள்ள இந்தியா ஆஃபீஸ் நூலக ஆவணக் காப்பகத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்து நூலாகப் படைத்திருக்கிறார் காந்திய அறிஞரும் சரித்திர நூலாசிரியருமான தரம்பால். அவருடன் சென்னையைச் சார்ந்த ஆய்வாளர் டி.எம்.முகுந்தனும் (சென்டர் ஃபார் பாலிஸி ஸ்டடிஸ்) தரவுகளைத் தொகுத்திருக்கிறார்.
இந்தியாவின் பெரும் பகுதியில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஆண்ட தருணங்களிலும், முதல் இந்திய சுதந்திரப் போரின்போதும், ஹிந்துக்களின் நன்மதிப்பைப் பெற முயன்ற இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பசுக்களைக் கொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது.
சமூக நல்லிணக்கத்திற்காக பசுவதையைக் கைவிட முஸ்லிம்கள் தயாராகவே இருந்தனர். பிரிட்டிஷாரின் உணவுப் பழக்கமே பசுக்கொலை நீடிக்க காரணமானது. (மாட்டிறைச்சியின் விலை மலிவு காரணமாக இஸ்லாமியரிடையேயும் இந்த உணவுப் பழக்கம் பின்னாளில் வெகுவாகப் பரவியது). இந்த வரலாற்று உண்மையை தனது மேற்கோள் ஆதாரங்களால் நிறுவுகிறார் தரம்பால்.
பசுவை வெறும் மாமிச உடலாகக் காணாமல், கிராமப் பொருளாதார சக்தியாகக் காணும் எவரும், அதன் மீது ஏற்றப்பட்ட புனிதத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்க மாட்டார். ஹிந்து சமயத்தில் பசுவுக்கு அளிக்கப்பட்ட பிரதான முக்கியத்துவத்தால் அதன் சமய மதிப்பு மிகுவது குறித்து தனியாக விளக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மை ஹிந்துக்களின் மதவாதத்தை (?) எதிர்கொள்வதாகக் கூறும் சிறுபான்மையினரும் இடதுசாரிகளும் பசுக்கறி விருந்துகளை நடத்தி மகிழ்வது, கீழ்த்தரமான வக்கிரமே ஒழிய, பகுத்தறிவின் பாற்பட்டதல்ல.
இந்தியாவில் அந்நிய ஆதிக்கம் பொ.யு. ஆயிரம் ஆண்டுகளில் தொடங்குகிறது. அதன் பிறகு சுமார் 700 ஆண்டுகள் நாடு முழுவதிலும் ஆங்காங்கே இஸ்லாமிய ஆட்சி நிலவி இருக்கிறது. அக்காலகட்டத்தில் வாள்முனையில் முஸ்லிம்களாக்கப்பட்ட ஹிந்துக்களை தீவிர விசுவாசிகளாக்கவும், தனித்தன்மையைப் பேணவும், மத்த் தலைவர்கள் மேற்கொண்ட வழிமுறையே பசுவதை. அதுவரை அவர்கள் புனிதமாகக் கருதிய பசுவை புனிதமற்றது என்று நிரூபிக்க அவற்றைக் கொல்லுமாறு இஸ்லாமில் சேர்ந்தவர்கள் மதத் தலைவர்களால் நிர்பந்திக்கப்பட்டனர்.
அப்போதும் கூட, பசுவதை பெருகிவிடவில்லை. 1757-இல் தொடங்கிய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குப் பிறகே, பசுவதை ஒரு முறையான தொழிலாக மாற்றப்பட்டது என்பதை அறிஞர் தரம்பால் அரிதின் முயன்று கண்டறிது, இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த ஆங்கிலேய அதிகாரிகள், அவர்களின் குடும்பங்களுக்கு உணவளிக்கவே மாடுகளும் பசுக்களும் பெருமளவில் கொல்லப்பட்டன. அப்போது, மக்களைப் பிரித்தாளும் அரசுக்கு அன்றைய ஹிந்து – முஸ்லிம் மக்களிடையே நிலவிய பரஸ்பர நம்பிக்கையின்மை மிகப் பெரிய சாதனமானது. அவர்கள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு பசுவதைத் தொழிற்கூடங்களை அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தனர். அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்துவந்த பசுக் கொலைகள் தொழில்முறையாக மாறியதே, பசுக்களின் எண்ணிக்கை குறையக் காரணமானது.
08.12.1893-இல் வைஸ்ராய் லேண்ட்ஸ்டவுனுக்கு விக்டோரியா மகாராணி எழுதிய கடிதத்தில் “பசுக்கொலைக்கு எதிரான ஹிந்துக்களின் போராட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அது நமக்கு எதிரானது. முகமதியர்களை விட நாம் தான் மிக அதிக அளவில் பசுக்களைக் கொல்கிறோம்” என்று குறிப்பிட்டிருப்பதை முக்கியமான ஆதாரமாக்கி இருக்கும் தரம்பாலின் ஆய்வுத்திறன், பிரச்னையின் ஆணிவேரைக் காட்டுகிறது.
1880 – 1894 காலகட்டத்தில் மேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப், மத்திய இந்தியா, ஐக்கிய மாகாணம், பிகார் ஆகிய பகுதிகளில் இயங்கிய கோரக்ஷணி சபைகள் மக்களிடையே செலுத்திய செல்வாக்கு, பசுக்கொலைக்குக் காரணமான ஆங்கிலேயரின் உணவுப்பழக்கம், சமூக நல்லிணக்கத்துக்காக இஸ்லாமியர்களும் பசுக்கொலையை எதிர்த்தது, பசுவதை காரணமாக நிகழ்ந்த ஹிந்து – முஸ்லிம் கலவரங்கள், பசுப் பாதுகாப்புப் போராட்டம் தேசிய இயக்கமாக மாறுவது என பல்வேறு காட்சிகளை இந்நூல் முன்வைக்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில், பசுவதைக்கு எதிரான சிந்தனை ஒரு தார்மிகக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டே வந்திருக்கிறது. மகாத்மா காந்தியும் அதையே தொடர்ந்தார். ஆனால், இன்றும்கூட, பசுவதைக்கு எதிராக யாராவது பேசினால், அவரை ‘சங்கி’ என்றும் ‘ஹிந்து மத வெறியர்’ என்றும் முத்திரை குத்தும் வகையிலேயே நமது ஊடகங்கள் இயங்குகின்றன. அந்த அளவிற்கு அவை மூளை மழுங்கிப் போயிருக்கின்றன.
இந்த நேரத்தில், ஆங்கிலேயர் லண்டனில் வைத்திருக்கும் இந்தியா தொடர்பான ஆவணங்களையே ஆதாரமாகக் கொண்டு, நமது மன்சாட்சியைத் தட்டி எழுப்பும் வகையில் அறிஞர் தரம்பால் எழுதி இருக்கும் இந்நூல் கவனம் பெறுகிறது. மூளை மழுங்கியவர்களின் கண்களை இந்நூல் திறக்க வேண்டும்.
இந்நூலை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் பாராட்டிற்குரியது. மொழிபெயர்ப்பாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் பணி போற்றுதலுக்குரியது. இந்நூல் நாட்டுநலன் விரும்பும் ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் இருக்க வேண்டியதாகும்.
நூல் குறித்த விவரங்கள்: பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் -தரம்பால், டி.எம்.முகுந்தன் தமிழில்: பி.ஆர்.மகாதேவன் 120 பக்கங்கள்; விலை: ரூ. 150- கிழக்கு பதிப்பகம், சென்னை, தொலைபேசி எண்: 044- 4200 9603
$$$