கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-1

-சேக்கிழான்

தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட.

அதாவது 2016-இல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது போல தற்போது 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று கூறப்படவில்லை. இது ஒரு வழக்கமான ரூபாய் நோட்டு புத்தாக்க நிகழ்வே (க்ளீன் நோட் பாலிஸி) என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சாமானிய மக்களுக்கு இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை. எனினும், 2000 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்போரை இந்த நடவடிக்கை பாதிக்கவே செய்யும். ஒருவகையில், பணமுதலைகளால் பதுக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் பணத்தை வெளியே கொண்டுவருவதற்கான ரிசர்வ் வங்கியின் முயற்சி இது. அந்த வகையில் கருப்புப் பணத்திற்கு எதிரான மத்திய அரசின் இரண்டாவதுகட்டச் செயல்பாடாகவே இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல அம்சங்கள் கடந்த ஆண்டுகளில் பலிதமாகிவிட்டன. அக்கட்டுரை இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..
காண்டீபம்- தை 2017 இதழ்

2016 நவம்பர் 8– இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை நாள். அன்றுதான், தன் மீதான நாட்டு மக்களின் நல்லெண்ணத்தையும் அன்பையும் மொத்தமாக அடகு வைத்து, அதி தீவிரமான சோதனைக் களத்தில் இறங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டில் புழக்கத்தில் இருந்த சுமார் ரு. 15.44  லட்சம் கோடி மதிப்புள்ள ஆயிரம், ஐநூறு உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் 2017 மார்ச் 31-க்குப் பிறகு செல்லாது என்று அவர்  நவ. 8, இரவு 8.15 மணியளவில் அறிவித்தபோது ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது. ஆயினும் அதன் பின்னணியில் பிரதமர் குறிப்பிட்ட காரணங்கள் உண்மையானவை என்பதை உணர்ந்த நாட்டு மக்கள், அவரது அறிவிப்பை ஏகமனதாக ஆதரித்தனர்.

தற்போது இந்த விஷயத்தில் அரசைக் கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் கூட, முதல்நாளில் மோடியின் அறிவிப்புக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பைக் கண்டு,  தாங்களும் அதை ஆதரிப்பதாக அறிவித்தன.

தனது அறிவிப்பின்போது டிச. 30 வரையிலான 50 நாட்களுக்குள் மக்கள் தங்களிடமுள்ள ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கியில் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இதனால் ஏற்படும் அசௌகரியங்களை நாட்டுநலன் கருதி மக்கள் தாங்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். நாட்டில் உள்ள கருப்புப் பணம், வெளிநாட்டினர் புழக்கத்தில் விட்டுள்ள கள்ளப்பணம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தவிர, புழக்கத்திலிருந்து ஒழிக்கப்படும் 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய 2000 ரூபாயும் அறிமுகம் செய்யப்பட்டது. மக்கள் தங்கள் தேவைக்கு பழைய நோட்டுகளை வங்கியில் அளித்து, ஆதார் எண்ணைக் காண்பித்து, புதிய நோட்டுகளைப் பெறலாம் என்று அறிவித்த பிரதமர், அதற்கும் கட்டுப்பாடுகளை விதித்தார்.

வங்கியில் இருக்கும் பணம் குடிமகனுடையது. அதை அவர் பெற வரையறை விதிக்க அதீதத் துணிவு வேண்டும். நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்து இந்தக் கண்டிப்பான உத்தரவை அமல்படுத்தினார் பிரதமர். அதன் நோக்கம், கருப்புப்பணம் பதுக்கியவர்கள் புழக்கடை வாயிலாக தாங்கள் குவித்த பணத்தை வெள்ளையாக்கிவிடக் கூடாது என்பதே. அதை மக்கள் உணர்ந்தார்கள். எனவேதான், தங்கள் பணத்தை வங்கியில் செலுத்தவும்,. புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறவும் சிரமம் பாராமல் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள்.

மோடியின் திடீர் அறிவிப்பால் ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாத நிலைமை. புதிய நோட்டுக்கு ஏற்றபடி அவற்றைச் சரிப்படுத்தவே 2 வாரங்கள் ஆகின. அவை சரியானபோதும் ஒரு நாளுக்கு ரூ. 2000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது. பல வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் போதிய வரத்து இல்லாததால் பல ஏ.டி.எம்.கள் செயல்படாமலேயே இருந்தன. ஜனவரி முதல் வாரம் வரையிலும் ஏ.டி.எம்.கள் முழுமையாக இயங்கவில்லை.

ஆயினும் மக்கள் சிறு புலம்பலோடு அதைக் கடந்தார்கள். இத்தனைக்கும் அவர்களைத் தூண்டிவிட்டு அரசுக்கு எதிராகப் போராடச் செய்ய பல வகைகளில் முயற்சிகள் நடைபெற்றன. சிற்சில இடங்கள் தவிர, மோடி எதிர்ப்பாளர்களின் சதிவலையில் பொதுமக்கள் விழவில்லை. ஏனெனில் அவர்கள்,  மோடி மேற்கொண்டிருப்பது கருப்புப் பணத்துக்கு எதிரான தேசத்தின் யுத்தம் என்று உணர்ந்திருந்தார்கள்.

அப்படித்தான் மோடி அறிவித்த 50 நாட்களும் கடந்து போயின. அதன் நிறைவாக 2016 டிச. 31-இல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி,  “கருப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிராக அரசுடன் ஒருங்கிணைந்து மக்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். அது முற்றிலும் உண்மையே. ஏனெனில் இந்தப் போராட்டம் மக்களின் பங்களிப்பில்லாமல் நிறைவேறி இருக்குமா என்பது சந்தேகமே.

மோடி இருக்கும் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார் என்பது மட்டுமல்ல, அவருக்குக் கிடைத்த ஆதரவு யாருக்கும் கிடைத்திருக்காது என்பதும் நிதர்சனம். தனக்கென வாழாத பிரதமர் மோடி என்பதை மக்கள் நம்பிய காரணத்தால்தான், அவரது கசப்பு மருந்தை அவர்கள் கஷ்டப்பட்டு விழுங்கினர்.

இந்த யாகத்தில் எத்தனையோ இடையூறுகள். பல கஷ்டங்கள். பணம் எடுக்க வரிசையில் நின்றபோது இறந்தவர்கள் பலர். அதற்கு அவர்களது உடல்நலக் குறை காரணமாக இருப்பினும், ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தால்தான் அவர்கள் வரிசையில் நிற்க நேர்ந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், நாட்டில் புழங்கும் கள்ள நோட்டுகளால் உள்நாட்டில் ஏற்படும் கலவரங்கள், கொலைகள், பயங்கரவாதச் செயல்களை ஒப்பிடுகையில் இந்த மரணங்கள் இயல்பானவை என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். எனவேதான், எவ்வளவு வெறியூட்டப்பட்டபோதும், அவர்கள் நிலை பிறழவில்லை.

மொத்தத்தில் இது தேசத்தின் யுத்தம் – ஊழலுக்கு எதிராக, கருப்புப் பணத்துக்கு எதிராக, கள்ள நோட்டுகளுக்கு எதிராக. அவர்கள் இதற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தார்கள். அதற்கான வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கினார் என்பதுதான் உண்மை. தினசரிக் கூலியும் கோடீஸ்வரனும் ஒரே நாளில் ஒரே அந்தஸ்துக்கு தற்காலிகமாகவேனும் வந்ததை அவர்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். அரசை ஏமாற்றும் வரி ஏய்ப்பர்களை அடையாளம் காட்ட இந்த நடவடிக்கை உதவும் என்பதைப் புரிந்துகொண்டதால் மக்களை திசைதிருப்ப எதிர்க்கட்சிகளால் முடியவில்லை.

எனவேதான்,  “எந்த அரசுமே செய்யத் துணியாத கடினமான முடிவு இது. மக்களின் ஆதரவில்லாமல் இத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. ஆனால்,  உலக நாடுகள் எதிலுமே காணாத முன்னுதாரணமாக இந்தியாவில் இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருந்து வருகிறது. உலகிற்கே நாம் அரிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது ஒளிமயமான தேசத்தின் புதிய விடியலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் மோடி (தினமணி- 1.1.2017).

ஆக, 2016  நவ. 8-இல் துவங்கிய தேசத்தின் யுத்தம் அதன் முதல் கட்டத்தை டிச. 30-இல் நிறைவு செய்துவிட்டது. பினாமிகள் ஒழிப்பு, கருப்புப் பணம் பதுக்கியவர்கள் மீது தீவிர நடவடிக்கை எனப் பல அதிரடிகள் தொடர உள்ளதாக ஏற்கனவே மோடி அறிவித்திருக்கிறார். அவற்றால் சாமானியனுக்கு எந்தச் சிரமமும் இல்லை. கொழுத்த பணமுதலைகள் மீதான அரசின் நடவடிக்கையை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

உயர் மதிப்பு ரூபாய்களின் அபாயம்:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை அரசாங்கங்கள் செல்லாது என்று அறிவிப்பதன் காரணம், பொருளாதாரத்தில் அவற்றின் பங்களிப்பு வீக்கமாக மாறிவருவதை அரசு உணர்வது தான்.

பிரபல பொருளாதார வல்லுநர் அஜித் வடேகர்,  “உயர் மதிப்பு நோட்டுகள் சாதாரணப் புழக்கத்துக்கு உதவுவதில்லை; அவை சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கே பயன்படுகின்றன” என்கிறார் (ஆதாரம்: லிவ் மின்ட்).  அதாவது அரசுக்குத் தெரியாமல் செல்வத்தைப் பதுக்கவே அவை பெருமளவில் பயன்படுகின்றன.

ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த 2016 மார்ச்சில், உயர் மதிப்பு கொண்ட 500 யூரோ நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்துவதாக அறிவித்தது. அமெரிக்காவிலும் 100 டாலர் பெறுமான உயர்மதிப்பு நோட்டுகளை அச்சிடுவதைக் குறைக்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் லாரன்ஸ் சம்மர்ஸ் (வாஷிங்டன் போஸ்ட் -2016) அரசை அறிவுறுத்தினார்.

நமது நாட்டிலும் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே ரிசர்வ் வங்கி ரூ. 1000, ரூ. 500 நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு யோசனை கூறியது. இதை அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமே ஒரு நேர்காணலில் தெரியப்படுத்தினார் (தினமணி – 9.11.2016). ஆனால், அதைச் செயல்படுத்தும் துணிவும் நேர்மையும் அந்த அரசுக்கு இருக்கவில்லை.

தவிர, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான், 2005 முதல் 2015 வரையிலான பத்தாண்டுகளில் உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியது. உயர் மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை 2004-ஆம் ஆண்டில் 34 சதவீதமாக இருந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் இது 79 சதவீதமாக உயர்ந்து, 2014-ஆம் ஆண்டில் 86 சதவீதமாக அதிகரித்தது என்கிறார் பொருளாதார நிபுணர் எஸ்.குருமூர்த்தி (தினமணி 25.12.2016).

“2004-ஆம் ஆண்டில் இருந்தே நமது நாட்டுப் பொருளாதாரத்தில், வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் சொத்துகளின் (நிலம், தங்கம், பங்குச் சந்தை) மதிப்பில் போலியான வளர்ச்சி காட்டப்பட்டு வந்தது. நமது உண்மையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு பெருமளவிலான பணம் புழக்கத்தில் இருந்தது.  இதனால் பல்வேறு சொத்துகளின் விலை செயற்கையாக உச்சத்தைத் தொட்டது. அதிகாரபூர்வமற்ற பணத்தின் புழக்கம் அதிகரித்ததே இதற்குக் காரணம். இது உண்மையான வளர்ச்சி இல்லை. நாட்டில் கணக்கில் வராத பணம் அதிக அளவில் தொடர்ந்து புழங்குவது நீண்ட காலத்தில் பொருளாதாரச் சீரழிவுக்கு வழி வகுக்கும்”  என்கிறார் எஸ்.குருமூர்த்தி.

எனவேதான் பணவீக்கத்தையும் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளின் பதுக்கலையும் முறியடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. உதாரணமாக, 2004-05-இல் ரூ. 1000 நோட்டுகளின் மதிப்பு ரு. 42 ஆயிரம் கோடியாகவும், ரூ. 500 நோட்டுகளின் மதிப்பு ரூ.  ரூ. 1.53 லட்சம் கோடியாகவும் இருந்தது. (மொத்தம் ரூ. 1.95 கோடி)  அப்போது ஒட்டுமொத்த ரொக்கப் பணத்தின் மதிப்பு ரூ. 3.68 லட்சம் கோடி மட்டுமே. இதில் உயர் மதிப்பு நோட்டுகளின் சதவீதம் 53 %. அதுவே 2015-16-இல் ஒட்டுமொத்த ரொக்கத்தின் மதிப்பு ரூ. 16.42 கோடியாகவும், அதில் உயர் மதிப்பு நோட்டுகளின் (ரூ. 500- 7.85 லட்சம் கோடி, ரூ. 1000- ரூ. 6.33 லட்சம் கோடி) மதிப்பு ரூ. 14.18 லட்சம் கோடியாகவும் மாறியது. இதன் சதவீதம் 86%. இது 2016 மார்ச் நிலவரம். அதன்பிறகு புழக்கத்தில் விடப்பட்ட உயர்மதிப்பு நோட்டுகளின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் ஒரு கணக்கின்படி, ரூ. 15.44 லட்சம் கோடி உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் இருப்பதாகத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் ரூபாய் நோட்டுகள் எவ்வாறு புழக்கத்தில் இருக்கின்றன என்பதை, அவை வங்கிகளுக்குத் திரும்ப வருவதைக் கொண்டு ஆய்வு செய்வது வழக்கம். அவ்வாறு வங்கியில் இருந்து வெளியான ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி வங்கிக்குள் மீண்டும் வராமலேயே புழக்கத்தில் இருந்ததை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. அதாவது அவை சிலரது கருவூலத்தில் மூட்டை மூட்டையாகச் சேர்ந்துவிட்டன. அது கணக்கில் வராத பணமாகி விடுவதால் அதனால் அரசுக்கு வரியும் கிடைக்காது. தவிர உள்நாட்டில் பணவீக்கத்துக்கும் சட்டவிரோதமான செயல்பாடுகளுக்கும் காரணமாகிறது. அவற்றை வங்கிச் சுழற்சிக்குக் கொண்டுவர ஒரே வழி, அவற்றை மதிப்பிழக்கச் செய்வதுதான். அதையே அரசு தற்போது வெற்றிகரமாகச் செய்துள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நாயகர்கள்:

பிரதமர் மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்புலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்சித் படேல், மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் இருந்தனர்.

இதனை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமும் தகுந்த நேரத்தில் கூறி அனுமதி பெற்றிருக்கிறார் மோடி.

இவ்வாறு மிக குறிப்பிடத் தகுந்த சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் திட்டமிட்டு இதனை அரங்கேற்றியது பிரதமர் மோடியின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு.

முந்தைய ஆளுநர் ரகுராம் ராஜன் இருந்தபோதே  பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஆறு மாதங்கள் முன்னரே திட்டமிட்டது.

ஆயினும், அவர் அரசின் விமர்சகராக எதிர்க்கட்சித் தலைவர் போல நடந்து கொண்டதால், புதிய ஆளுநர் பொறுப்பேற்ற பிறகே இதனை அமல்படுத்தி இருக்கிறார் மோடி.

அரசு நடவடிக்கை தோல்வியா?

இப்போது ஒட்டுமொத்தமான ரூ. 15.44 லட்சம் கோடியில் சுமார் ரூ. 14 லட்சம் கோடி (91 %) வங்கிக் கணக்குகளுக்கு வந்துவிட்டது. எனவே, அரசுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை என்று சில புத்திசாலிகள் மதிப்பிடுகின்றனர். அரசின் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் கருத்து தவறு   என்பதை கீழ்க்காணும் புள்ளிவிவரங்களைப் பரிசீலித்தாலே உணரலாம்.

2016 நவ. 8 முதல் டிச. 27-க்குள் வங்கிக் கணக்குகளுக்கு, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் வாயிலாக சுமார் ரூ. 14 லட்சம் கோடி வந்துள்ளது. இதன்மூலமாக, ஆங்காங்கே ஒளிந்திருந்த பல லட்சம் கோடி பணம் வெளிப்படையாகியுள்ளது. இப்போது ஒவ்வொருவர் கணக்கிலும் உள்ள பணத்தைக் கொண்டு தோராயமாகவேனும் அவர்களது ரொக்க இருப்பைக் கணக்கிட முடிகிறது.

அரசு ஏற்கனவே அறிவித்தபடி, வங்கிக் கணக்கில் ரு. 2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்பட்ட பணத்துக்கு கணக்கு கேட்கப்பட்டு, அதற்கு 45 % வருமான வரி விதிக்கப்படும். அதன்மூலமாக அரசுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கோடி முதல் ரூ. 6 லட்சம் கோடி வரை வரி வருவாய் கிடைக்கக் கூடும்.

இதற்கு முன் வருமான வரி செலுத்தியவர்களின் (ரூ. 2.5 லட்சம் வருமானத்துக்கு அதிகமானவர்கள்) எண்ணிக்கை ஒரு கோடி மட்டுமே. தற்போது வங்கிகளில் வரவு வைத்த பணத்தின் மூலமாக வரி ஏய்ப்பர்கள் கண்டறியப்பட்டு வரி வசூல் கூடுதலாகும். அநேகமாக 20 கோடி பேர் வருமான வரி செலுத்தும் வாய்ப்பு உள்ளது. இது அடுத்துவரும் ஆண்டுகளிலும் தொடரும் என்பதால் அரசுக்கு ஆண்டுதோறும் வரி வருவாய் அதிகரிக்கும்.

பணத்தை மாற்ற வங்கி முன்பு காத்திருந்த பொதுமக்கள்.

அரசு தானாக முன்வந்து வருமானத்தை அறிவிக்குமாறு ஒரு திட்டத்தை அறிவித்தது (ஐ.டி.எஸ்.). 1.6.2016 முதல் 30.9.2016 வரையிலான காலகட்டத்தில், இதுவரை மறைக்கப்பட்ட வருவாயை அரசுக்கு வெளிப்படுத்தி 45 % வரியுடன் அரசின் நடவடிக்கையிலிருந்து தப்பலாம் என்று பிரதமர் அறிவித்திருந்தார். செப். 30-க்குப் பிறகு கருப்புப் பணமாக (கணக்கில் வராத பணம்) வைத்திருப்போருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அதன்படி சுமார் 64,275 வருமான வரி தாக்கல்கள் செய்யப்பட்டு ரூ. 65,250 கோடி வருமானம் வெளிப்படுத்தப்பட்டது. அதனால் அரசுக்கு வரியும் கிடைத்தது. ஆனால், அரசு எதிர்பார்த்த அளவுக்கு (ரூ. 5 லட்சம் கோடி) அது இல்லை. எனவே, தற்போதைய வங்கிக் கணக்குகளில் உள்ள ரொக்க இருப்பை ஆராயும்போது வரி ஏய்ப்பர்கள் அனைவரும் வரி வசூல் வட்டத்துக்குள் வருவர். அதையடுத்து, வருமான வரி வரம்பை அதிகரிக்கவும், அதன் சதவீதத்தைக் குறைக்கவும் அரசு திட்டமிட இயலும்.

ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோரின் எண்ணிக்கை 24 லட்சம் மட்டுமே என வருமான வரித் துறையில் உள்ள புள்ளிவிவரம் கூறுவதை பிரதமர் மோடி தனது டிச. 31 உரையில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் புள்ளிவிவரம் எவ்வளவு மோசடியானது என்பதை அனைவருமே அறிவோம். அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கார்களும் கோடிக் கணக்கில் பெருகிவரும் நாட்டில், உண்மையான வருமானத்தை வெளிப்படுத்தத் தயங்கும் நடுத்தரவர்க்க மனநிலையே ஊழலுக்குக் காரணமாகிறது. மேல்தட்டு மக்களும் சொத்துகளைக் குவிப்பதில் காட்டும் அக்கறையை வரி செலுத்துவதில் காட்டுவதில்லை. இந்த மோசடிக்கு தற்போதைய வங்கிக் கணக்கு புள்ளிவிவரங்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன.

மார்ச் 31 வரை கெடு கொடுத்தும் வங்கிக் கணக்கிற்கு வராதுபோகும் சுமார் 1.5 லட்சம் கோடி பணம் அரசுக்கு இயல்பாகவே சொந்தமாகிவிடும். அந்தப் பணத்தை ஒவ்வொரு வீடாகச் சென்று அரசு பறிமுதல் செய்ய வேண்டியதில்லை. மாறாக திரும்ப வராத பணத்தை அரசு அச்சிட்டு தனது கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

பணம் எடுக்க ஏ.டி.எம். முன்பு வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

தவிர, உயர் மதிப்பு நோட்டுகளில் 90 சதவீதம் வங்கிக்கு திரும்பி இருப்பதேகூட நாட்டு மக்கள் இன்னமும் சீர்கெட்டுவிடவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு நடவடிக்கைக்கு அஞ்சி சில இடங்களில் ரூபாய் நோட்டுகள் எரிக்கப்பட்டதை செய்தியாகக் கண்டாலும் அதன் அளவு மிகவும் சொற்பம். இதில் செல்வந்தர்கள் தங்கள் ஊழியர்கள் அல்லது கூலியாட்கள் மூலமாக தங்கள் பணத்தை வேறு பெயர்களில் (பினாமி) செலுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனினும், அதுவும் வங்கிக் கணக்கில் வந்திருப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதே.

வங்கிகளில் இருந்து கிடைத்த தகவலின் படி, சுமார் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் மட்டும் ரூ. 7 லட்சம் கோடி பணம் இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலமாக அரசுக்கு வரி கிடைப்பது உறுதி. இனிமேல் அவர்கள் அரசை வரி ஏய்க்க முடியாது.

பூஜ்ஜிய இருப்பு வங்கிக் கணக்காக ஏழைகளுக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட 25.6 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் இப்போது தானாகவே பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது. தவிர, பணம் படைத்தவர்கள் ஏழைகளின் கணக்குகளில் பணத்தைச் செலுத்தி தப்ப முயன்றதும் தெரிய வந்திருக்கிறது. சுமார் 4.86 லட்சம் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ. 87 ஆயிரம் கோடி முதலீடாகியுள்ளது. இவை குறித்து அரசு கண்காணித்து, ஆராயத் துவங்கி உள்ளது. “ஜன்தன் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும், அதை யார் செலுத்தி இருந்தாலும் அது கணக்கை வைத்துள்ள ஏழைக்கே சொந்தம்” என்று கூறி இருக்கிறார் மோடி. அதற்கான சட்ட நடவடிக்கைகளும் துவங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் வருமான வரித் துறை இலக்கில்லாமல் இருளில் அம்பெய்து கொண்டிருந்தது. தற்போது வங்கிப் பண இருப்பு, வரி செலுத்துவோரை அடையாளம் காட்டியுள்ளது. தவிர, வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு உயர்ந்துள்ளதால் கடனளிப்பு அதிகரிக்கவும், வட்டிவிகிதம் குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது ஜனவரி 2-ஆம் தேதியே நடைமுறைக்கும் வந்துவிட்டது.

உள்நாட்டு உற்பத்தி எண்ணும் ரொக்கம் அச்சிடலும்

ஒரு நாட்டில் எவ்வளவு ரொக்கப் பணத்தை அச்சிடுவது என்பதற்கு வரையறை உள்ளது. அது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைச் சார்ந்தது. இதற்கென மொத்த உள்நாட்டு உற்பத்தி எண் (Gross Domestic Product -GDP) கணக்கிடப்படுகிறது.  ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி  செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்கள், அளிக்கப்படும் சேவைகளின் ஒட்டுமொத்த சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும். இந்த ஜி.டி.பி.யில் 10 சதவீதத்துக்கு மிகாமல் ரொக்கமாக அச்சிடுவது நல்லது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் எம்.ஆர்.சிவராமன், “ரொக்கம் – ஜி.டி.பி. விகிதமானது 7 சதவீதமாக இருப்பது நல்லது’’ என்கிறார்  (ஆதாரம்: இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்).

நமது நாட்டின் ஜி.டி.பி. மதிப்பு 2014-15-இல் 126.54 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே 2015-16-இல் 134.19 கோடியாக உயர்ந்தது. 2016-17-இல் இது 7.3 சதவீதம் வளர்ச்சி (ரூ. 144 லட்சம் கோடி) காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குத் தகுந்த வகையில் மட்டுமே ரொக்கம் புழக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால், நவ. 8-க்கு முந்தைய நிலையில், நமது நாட்டில் ரொக்கப் பணப் புழக்கத்தின் மதிப்பு ரூ. 17.77 லட்சம் கோடி (13%). இதற்கு அடிப்படைக் காரணம், உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையே. அதுவே பதுக்கலுக்கு காரணம்.

எனவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு தற்போதைய அரசு, நீக்கப்பட்ட நோட்டுகள் அனைத்துக்கும் நிகரான புதிய நோட்டுகளை அச்சிடப் போவதில்லை. இதை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். அரசின் இலக்கு ரூ. 10 லட்சம் கோடி முதல் 12 லட்சம் கோடி வரை இருக்கக் கூடும் (7%- 10%).

(தொடர்கிறது)

$$$

One thought on “கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s